"குடி உயர கோன் உயர்ந்தான். எனது மாணவர்கள் உயர நான் உயர்ந்தேன்" என்று கூறும் நவீன ஈழத்து ஓவியர் மாற்கு (1933 - 2000) அவர்களின் ஓவியக் கூடத்திற்கான ஓவியங்களை அளித்து உதவியவர் அவரின் பிரதான மாணவரான லண்டன் வாழ் கே.கே.ராஜா.

மாற்கு மேலும் சொல்கிறார், "மாணவர்களாலேயே நான் மக்களிடம் அறிமுகமானேன். இன்று மக்கள் என்னை அங்கீகரிக்கின்றனர் என்றால் அதற்கு எனது மாணவர்களின் ஓவியக் காட்சிகள் இட்ட பலமான அத்திவாரமே காரணமாகும். என் வயதொத்த சமகால ஓவியர்கள் பலருக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை."

ஓர் ஓவியன் என்ற வகையில், மாற்கு ஒரு தலை சிறந்த படைப்பாளியாக மட்டும் விளங்கவில்லை. 1958-ம் ஆண்டிலிருந்து விடுமுறைக்கால ஓவியப் பள்ளியின் மூலம் ஒரு மாணவர் பரம்பரையையே அவர் உருவாக்கி வந்துள்ளார். ஓவியத்தில் பரிச்சயமுடைய எவரும் இன்று மாற்குவின் பாணியைச் சட்டென இணங்கண்டு கொள்வர். ஒரு வகையில் 'மாற்குவின் கூட்டம்' எனக் கூறத்தக்க வகையில் புலமைசார் ஓவியப் பாணி ஒன்று மாற்குவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முதுசொம் கூடத்தில் 'மாற்குவின் பாணி' ஓவியங்கள் அவரது மாணவர்களின் கைவண்ணத்தில் மேலும் பல மிளிர உள்ளன.

"கலைஞன் சுவாதீனமுள்ளவன் என்ற வகையில் கட்டுப்பாடுகளையும் நியமங்களையும் மீறி தேடலை மேற்கொள்ள வேண்டும். கால வேகத்தின் போக்குக்கு ஏற்ப நவீன ஓவியங்கள் மிகவும் அத்தியாவசியமானதே. எப்படி கவிதை இலக்கியத்தில் புதுக்கவிதை தவிர்க்கப்பட முடியாத அம்சமாகிவிட்டதோ அதே போல் ஓவியக்கலையில் modern art தவிர்க்கப்பட முடியாத அம்சமாகி விட்டது. " என்று சிரித்திரன் செவ்வி ஒன்றில் மாற்கு கூறுகின்றார்.

1970ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 1980-ம் ஆண்டு வரை ரேகைச் சித்திரங்களின் பாணி மாற்குவின் ஓவியங்களில் மேலோங்கி காணப்படுகின்றது. பிரபல இந்திய ஓவியரான ஹுசைனின் செல்வாக்கிற்கு உட்பட்டு ரேகைச் சித்திரங்கள் வரைய முற்பட்டதாக மாற்கு குறிப்பிடுகின்ரார். எனினும் விரைவிலேயே முற்றிலும் தனியானதொரு பாணியை, அதாவது கனபரிமான கோட்டுருவங்கள் என்ற நிலைக்கு மாற்குவின் ஓவிய ஆற்றல் வளர்ச்சியடைந்துவிடுகின்றது.

ஓவியங்களைப் புரிந்து கொள்ள ஓவியப் பரிச்சயம் மிகவும் அவசியம் எனக் கூறும் மாற்கு "ஓவியத்தைப் பார்த்து பழக்கப்பட்ட பரிச்சயம் தமிழ் மக்களுக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. அத்துடன் ஓவியத்தை ஒரு கலை வடிவமாக ஈழத்தமிழர்கள் அங்கீகரிப்பதாகவும் தோன்றவில்லை" என்கிறார்.

ஓவியர் மாற்கு 1933-ம் ஆண்டு ஜூன் 25ம் திகதி யாழ்ப்பாணம் குரு நகரில் பிறந்தார். அவரது தாயின் பெயர் வெரோனிக்கா. தந்தையின் பெயர் ஹேரத் முதியான் சலாக்கே அப்புஹாமி.

ஓவியப் பரிச்சயத்தையும், ஈழத்து ஓவிய பாணியையும் தமிழர்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வண்ணம் தமிழ் முதுசொம் அறக்கட்டளை இவ்வோவியக் காட்சிநயை பெருமையுடன் வெளியிடுகின்றது.

[தகவல்: மாற்குவின் சுவடுகள்: கலைத்துவ வாழ்வின் நினைவுகள், கனடா]

என்னை வரையத் தூண்டுவது மனித நேயமே - மாற்கு


	Courtesy:

Original Photo collection : Mr.K.K.Rajah (London) Coordination: Dr.N.Kannan Digitization, Web gallery design and creation: Subashini Kanagasundaram
HOMEDesigned by: Suba :-Copyright THFFastCounter by bCentral