மருத்துவச் சுவடிகளின் பதிப்பு முறைமை


மரு.முனைவர்.சே.பிரேமா,
துறைத் தலைவர், சித்த மருத்துவத்துறை, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சை.

(அவிழ்தம் செப்டம்பர் 1992. பக். 4-9)



தமிழ்ச் சுவடிகளை வகைப் படுத்தினால் சித்த மருத்துவம் தொடர்பான சுவடிகள் 60 விழுக்காடு தேறும். இச்சுவடிகள் ஒரே பெயரில் பல எண்ணிக்கையிலோ அல்லது பல பெயர்களில் ஒன்றாகவோ அல்லது ஒரே நூல் அதன் பாடல் எண்ணிக்கையில் மாறுபட்டோ காணலாம். உதாரணமாக பிரமமுனி கருக்கடை சூத்திரம் என்னும் சுவடி 360, 380, 403 என பலவிதப் பாடல் எண்ணிக்கையில் இருக்கின்றன. இது தவிர, ஒரு பொருள்பற்றிப் பாடப்பட்ட பல சுவடிகள் பல்வேறுபட்ட வார்த்தைகளைக் கொண்டு பாட வேறுபாடுகளுடன் உள்ளன.

பாட வேறுபாடுகள் என்பது, சுவடிகளைப் படியெடுத்தலின் போது, பாடலின் கருத்தை மாற்றுவதாகவோ அல்லது மாறுபட்ட கருத்தைக் கூறும்படியாக உண்மையாக வரவேண்டிய சொல்லுக்கோ (அ) தொடருக்கோ பதிலாக வேறொரு தவறான சொல் (அ) தொடர் இடம் பெறுவது ஆகும். இது பெரும்பாலும் அந்தக் காலத்தில் சுவடிகளைப் படியெடுக்கும் போது, ஒருவர் கூற மற்றொருவர் அதை எழுதி வருவர். அப்போது ஏறத்தாழ ஒரே ஒலி அமைப்புடைய சொற்கள் மாறிவருதல் ஏற்படும் [எ.கா. ஆக 'மனம்' என்பது 'மணம்' என மாறுதல்] இவை தவிர எழுதப்படும் நூலின் துறையைச் சாராத, அந்நூலறிவு இல்லாத பிறர் எழுதும் போதும் இத்தகைய பாட வேறுபாடுகள் உண்டாகின்றன.

எனவே பாட வேறுபாடுகளைச் சுவடிகளைப் பதிப்பிக்கும் போது கண்டறிந்து, பாடல் இலக்கண வகையாகவும், மருத்துவம் தொடர்பான சரியான சொல்லைச் சேர்த்துக் கொண்டு ஏனையவற்றை ஒதுக்கிவிடுதல் வேண்டும். இதற்கு ஒரு சுவடியை எடுத்துக் கொண்டால் அவற்றில் உள்ள பாடல்களே சரியானவை என எடுத்துக் கொள்ளாது, அதன் தொடர்புடைய சுவடிககள் மற்றும் அச்சு நூல்கள் இவற்றுடன் வரிக்குகு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஒப்பு நோக்கிச் சரியான பாடம் நிர்ணயிக்கப் படவேண்டும். இதனால் தரமான சித்த மருத்துவ நூல்கள் வெளிவர ஏதுவாகும். ஒரே நூல் மீண்டும் மீண்டும் வெளிவராது தவிர்க்கப்படும்.

சித்த மருத்துவர்கள் தமிழ் இலக்கணம் முழுமையாக அறிந்தவர்கள் என்றும் ஓலைச் சுவடிகள் படிக்கத் தெரிந்தவர்கள் என்றும், தமிழ் மட்டும் படித்தவர்களே சித்த மருத்துவ நூல்களை வெளியிடத் தகுந்தவர்கள் எனவும் ஒரு வாதமுண்டு. ஏனைய மருத்துவ முறை நூல்களைத் தமிழில் எழுதும்போது அத்துறை வல்லுநர்கள் மட்டுமே அழைக்கப் படுகின்றனர். ஆனால் சித்த மருத்துவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

நஞ்சும் நஞ்சு முறிவும்
பாடல் - கலிவெண்பா

எட்டிக்கு நாவல் எழில் தோந்றி தான்றிக்காய்
வட்டஇலைத் தாமரைஊ மத்தைக்கு - திட்டமுடன்

ஆவிரையாம் கள்ளிக் (கு) அலரிக் கிடுகடுக்காய்
மேவியநெய் தேனுக்கு வெந்தகரி - பாவையரே
எள்ளோடு சர்க்கரையாம் என்றார் எருக்கிலைக்கு
வெள்சங்கம் பழங்கழுதை வண்டுக்கு - வெள்ளை
நீற்றுக்கு மஞ்சள் நேர்வாளம் நல்வசம்பு
வேற்றுச் சிவதைக்கு வெள்வேலாம் போற்றரிய
நெல்வேரும் சர்க்கரையும் நேரொக்கக் கொண்டார்க்கு
எல்லோரும் சொன்னார் எலுமிச்சசை- நல்லாள்கேள்
நாவிச் சிறுகீரை நன்குன்றி வெண்காரம்
தாவியபா டாணம் தருமிளகு-ஓவியமே
வெற்றிலையோ டெண்ணெய் விரைவிக் குடித்தோர்க்கு
முற்றினதேங் காய்பால் மொழிந்தோமே- இத்தனையும்

நீலிக்குத் தீருமென்று நிச்சயத்தார் மாமுனிவர்
பாலித்த நஞ்சுவகை போம்

மேற்கண்ட பாடலை ஒப்புநோக்கி பாட வேறுபாடுகளை நீக்க தஞ்சை சரஸ்வதி மகால் நூலகச் சுவடிகள் மூன்றும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகச் சுவடி ஒன்றும் தேரையர் வாகடம் எனும் அச்சு நூலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாட வேறுபாடுகள்:

1. சுக்குமரு தோன்றிக்கு
தோன்றி தான்றிக்கு
எழுசுண்டி தாணிக்காய்
எழுத்தாணி தாணிக்காய்

2. வட்டமுலை

3. ஒட்டியே, எட்டியெழு, ஒட்டியதோர்

தஞ்சை சரஸ்வதி மகால் நூல் சுவடி எண் 665-சியில் 3,4ம் வரிகளாக கீழ்க்கண்ட வரிகள் இடம் பெற்றுள்ளன

காட்டி லொருவனுக்குக் கால்படியாம் பச்சரிசி
நீட்டிய யரத்ததை நீயந்த - நாட்டமுடன்

4. கனிகடுக்காய், அவுரியொடுகடுக்காய்

5. பாவலர்காள், தேடியே

6. சொன்னார்

தேரையர் வாகடம் பா.எண் 627ல்
கொள்ளொடு வைக்குங்கழு நீர்பசரி

7. நெஞ்சே, வெள்ளைநல்லோர்கேள்

8. அசங்காமல்

9. போற்றுந் தயிர் நாவலுக்கும் புளியெண்ணெய்

10. காற்றில்லா நெல்வேருங் காடிக்குத் தேற்றமுடன்

11. மதுரமிலா மிச்சம் வகையாக வேகுடிக்கில்
எல்லோர்க்குஞ் சொன்னோம் எலுமிச்சை - நல்லாய்கேள்
சொல்லரிய.

தேரையர் வாகடம் பா.எண் 627ல் கீழ்க்கண்ட வரிகள் உள்ளது

கத்துவிடத் தீர்ந்துவிடும் குணமாகும் ஏற்றுடஞ்
சிறுகுறிஞ்சா மாற்றாகும் தின்பேய்ப்பீர்க் குண்ணில்
உறுதிலா முத்தக்கா சென்பன் - உறுதியாம்
குன்றிக்கு ஆவின்வேர் கொடும்பச்சை நாவிக்கு
வென்றி வெண்காரம் விடந்தீர்க்கும் - பொன்று
சிவதைக்கு வெள்வேல் செழும்பாசா ணத்துக்கு
அவனிதனில் நிருவிடமே யாகும்-பலவிடமும்

12. நீலிக்குப் பண்பாகத் தீரும் - பலமருந்து
நீலிக்கு தீருமிது நிச்சயமென் றேமுனிவன்
நீலிக்குத் தீருமென்று நிச்சயத்தார் மந்திரியும்

தேரையர் வாகடம் பாடல் 627ல்
கெல்லாம் பகரில் மிளகுமிள வெந்நீரி
லீனமறுகாடி யிரண்டதனி லேவேண்டும்
ஊனமுற வேகொள் ளுற்று

13. போதித்த நஞ்சு வகைபோம்.

பாலித்த நஜ்சுவகை பதினெட்டும் போமென்பர்

தஞ்சை பல்கலை கழக சுவடி எண் 942ல்

பாலித்து சொன்னார் பரிந்து

தஞ்சை சரஸ்வதி மகால் நூலக சுவடி எண் 665 (ஏ)

-ஆளத் தவிநயம் முமந்த யெண்ணெயும் வென்னீரிலிட
எந்தநஞ்சு தின்னாலு மில்லைப் போம்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலக சுவடி எண் 665 (டி)

சிவனார் கிழங்கு தின்றார்க்குச் சுண்டியிலை
எந்தநஞ்சு தின்றாலு மில்லை போம்

மேற்கண்ட பாடவேறுபாடுகளை ஆராய்ந்து, பின் சரியான பாடம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அதன்படி


நஞ்சு............................................முறிவு
01. எட்டி.....................................நாவல்
02.கலப்பை கிழங்கு.....................தான்றிக்காய்
03.ஊமத்தை.................................தாமரை இலை
04.கள்ளி.......................................ஆவாரை
05.அலரி.......................................கடுக்காய்
06.நெய், தேன்............................சாம்பல்
07.எருக்கிலை..............................எள், சர்க்கரை
08.கழுதை வண்டு.........................வெள்ளை சங்கம்பழம்
09.சுண்ணாம்பு..............................மஞ்சள்
10.நேர்வாளம்...............................வசம்பு
11.சிவதை....................................வெள்வேல்
12.நெல்வேர், சர்க்கரை................எலுமிச்சை
13.நாபி.........................................சிறுகீரை
14.குன்றிமணி...............................வெங்காரம்
15 பாடாணம்................................மிளகு
16.வெற்றிலை, எண்ணெய்............தேங்காய் பால்
17.அனைத்துவகை நஞ்சுகள்.........அவுரி

ஒப்பீட்டுச் சுவடிகள் மற்றும் நூல்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்

சுவடி 1. நஞ்சுதின்ற பேர்க்கு மாற்று சுவடி எண் 214-டி
சுவடி2..............,,....அகத்தியர் வாகடம்........,,..........665-சி
சுவடி 3............,,....தன்வந்திரி வாகடம்........,,..........665-டி

தஞ்சைப் பல்கலைக் கழகம்

சுவடி4 நஞ்சுமுறிவு நூல் 942 சுவடி
5. தேரையர் வாகடம்: டாக்டர் இரா.தியாகராசன்.
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கொயில்
சித்த மருத்துவ நூல் வெளியீடு, பூம் பிரிண்டர்ஸ்
முதற்பதிப்பு, நவம்பர் 1975, பக். 222.




Courtesy:
Digitization:Dr.N.Kannan
E-Book preparation:Dr.N.Kannan
Special thanks to:Dr (med) S.Prema, HOD, Dept. Siddha Medicine, Tamil University, Tanjore, India
Copyright: 10 April 2002:- Tamil Heritage Foundation.

WARNING :
Contents of this web site are free for personal use and for research and education purposes only.


Designed by: Suba:- Copyright THF