திருக்குறளும் கொங்குநாடும்கொங்குநாடு

'தமிழ் மண்டிலம் ஐந்து' என்று திருமந்திரமும், 'வியன் தமிழ்நாடு ஐந்து' என்று தண்டியலங்காரப் பழைய மேற்கோள் பாடலும் கூறுகின்றன. இதனால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாட்டுடன் கொங்கு நாட்டையும் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்று வழக்கம் முன்பு இருந்தது என அறிகின்றோம். பிறகாலச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் தொடர்ந்து தமிழ்நாடு ஐந்து என்று பல இடங்களில் தொகுத்துக் கூறுகின்றன.

திருக்குறள்

கொங்குநாடு தமிழ்நாட்டின் பிற பகுதிகளைப் போலவே - அவற்றிற்கும் மேலாகவே திருக்குறளையும் திருவள்ளுவரையும் நினைவு கூர்ந்துள்ளது. திருக்குறள் ஏட்டுப்பிரதிகளை எழுதிக் காத்துள்ளது. உரை பல கண்டுள்ளது, நாட்டுப் பகுதிககும், ஆட்களுக்கும் திருவள்ளுவர் பெயரை வைத்துள்ளனர். திருக்குறளைக் கல்வெட்டில் பொறித்துள்ளனர், அவற்றிற்கும் மேலாகக் கொங்குநாட்டுக் குறுநில மன்னர்கள் தாங்கள் திருக்குறள் நெறிப்படி ஆட்சிபுரிந்தோம் என்று கூறி மகிழ்ந்துள்ளனர். நாள்தோறும் செய்யும் செயல்களுக்கும் திருக்குறள் சுவடியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை வரலாற்று ஆவணங்களும், இலக்கியங்களும், ஏடுகளும் கூறுகின்றன.

மனுதர்மம் காத்த மன்னர்கள்

தமிழக அரசர்கள் எவரும் குறள்வழி ஆட்சி செய்தோம் என்று கூறவில்லை. அதற்கு மாறாகச் சாதிக்கு ஒரு நீதி சொல்லும் 'மனுதர்மம்' காட்டும் வழியில் ஆட்சி செய்தோம் என்று பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்! 'மண்முழுதும் களிப்ப மனுநெறி வளர்த்து'
(விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி)
'மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க'
(இரண்டாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)
'தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்தி'
(இராசமகேந்திரன் மெய்க்கீர்த்தி)
'மண்மடந்தை மனமகிழ மனுவின் நெறி தழைத்தோங்க'
(மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)

'விசுவலோகத்தும் விளங்க மனுநெறி நின்று' (இராசாதிராசன் மெய்க்கீர்த்தி) சோழர்கள் ஆட்சிபுரிந்தனர் என அறிகிறோம். 'மனுதுங்கன்' என்று சோழர்கள் தம்மை அழைத்துக் கொண்டனர். 'மனுநூல் புணர்ந்த நெறியொழுகும் பூழிய' என்று பாண்டியனைப் புலவர் பாடினர். மற்ற தமிழக அரசர்களும் இவ்வாறே ஆட்சி செய்தனர்.

குறள்வழி ஆட்சி

கொங்குநாட்டுக் குறுநில மன்னர்கள் மெய்க்கீர்த்திகளில் குறள்வழி அவர்கள் ஆட்சிபுரிந்தமை பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. 1) பூந்துறை நாட்டார் மேலோலை
'அழும் குழவிக்கு அன்புடைத் தாய்போல்
அனைத்துயிர்கட்கும் இனிமையே நல்கி
வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படியே
செங்கோல் நீதி வழுவாமல் நாட்டி
நடத்தி வருகுற நாளில்'

2) காரையூர்ச் செப்பேடு
'இன்சொல்லால் இனிதளித்து
வனசொல்லால் மறம் கடிந்து
வள்ளுவர்உரைத்த முப்பால் மொழியின்படியே
அறமே அறிந்து அல்லவை கடிந்து
ஆறில் ஒன்று கடமை கொண்டு'

3) பல்லடம் செப்பேடு
'ஓதி உணர்ந்து உலகம் முழுதாண்டு
நீதி சாகரம் நினைவுடன் கற்று
மும்மொழி விநோதன் முத்தமிழ் தெரிந்தோன்
வள்ளுவர் மரபுகாத்து முப்பால் மொழியின்படியே
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி'

4) பழனி வீரமுடியாளர் செப்பேடு
'இன்சொல்லால் இனிதளித்து வள்ளுவர் மரபுகாத்து
முப்பால் மொழியின் படிக்கு
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி
கலிமெலியக் குடிதழைக்க
ஆறிலொன்று கடமை கொண்டு
அசையா மணிகட்டி அரசாளும் நாளில்'

என்பன கொங்குநாட்டு ஓலைச் சுவடி, செப்பேட்டுத் தொடர்களாகும்.

ஆனூரில் அமைந்த பள்ளி

பழையகோட்டைப் பட்டக்காரரில் ஒருவர் 200 ஆண்டுகட்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனம் சென்று முத்துப்பிள்ளை என்பவரைக் குடும்பத்துடன் கூட்டிக்கொண்டு வந்து பழையகோட்டை அருகே ஆனூரில் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தினார். அதைப்பற்றி நீண்ட பாடல் ஒன்று ஓலைச் சுவடியில் உள்ளது (முத்துப்பிள்ளையை அளித்தமைக்காகப் பழையகோட்டைப் பட்டக்காரர் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு 28 ஏக்கர் நிலம் கொடையாக அளித்தார். அப்பகுதி 'தம்பிரான் வலசு' என இன்றும் அழைக்கப்படுகிறது. 'எங்கணும் புகழவே காரைஆனூர் வந்தபின்
எட்டு நாட்கு உள்ளாகவே
இருநூறு சிறுவர்கட்கு ஆனபடி யாகஒரு
எழிலான கூறையிட்டு
பொங்கிடும் சமையல்அறை பள்ளியறை இவைகளும்
புனித ஆசிரியருக்காய்
புதிதாக அமைத்தவர்க்கு உணவு உடை இவைகளும்
போதிய படிக்களித்து
சங்கிதப் பண்ணுடன் சொலுகின்ற தமிழ்மறை
சங்க நூல்கள் நிகண்டும்
சாதிமத பேதமில் லாதுநல நீதியாய்
சகலர்க்கும் ஓதிவைத்து
துங்கிதச் சொல்லுடன் தூயவர் இவராலே
துலங்குநற் பள்ளியீது'
என்பது இப்பள்ளியைக் குறிக்கும் பாடல் பகுதியாகும்.

இப்பாடலின் கீழ 'தமிழ்மறையென்றது வள்ளுவன் திருக்குறளை' என்று எழுதப்பட்டுள்ளது.

திருக்குறள் கல்வெட்டு

நாமக்கல் மாவட்டம் பொன்சொரிமலையில் உள்ள சமணக் குகையின் மேல்புறம் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 'தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙன மாளுமருள்'

என்ற திருக்குறள் வெட்டப்பட்டுள்ளது (திருக்குறளைச் சமணர் 'எம் ஒத்து' என்று உரிமை கொண்டாடுவர் - நீலகேசி மொக்கலவாதச் சருக்கம் 60,87 ஆம் பாட்டின் உரை).

திருவள்ளுவர்

நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சியில் உள்ள கபிலமலையில் இருந்த ஒரு ஆதீனத் தலைவர் பெயர் 'திருவள்ளுவர்' என்பதாகும். (மத்தியத் தொல்லியல் துறை கல்வெட்டு ஆண்டறிக்கை, ஆண்டு 1929, எண். 18)

வள்ளுவநாடு

கோயமுத்தூரின் வடமேற்கேயுள்ள ஒரு பகுதிக்கு 'வள்ளுவநாடு' என்று பெயர். இப்பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது.

திருக்குறள் ஏடுகள்

தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட 'திருக்குறள் உரைவளம்' நூலுக்குப் பரிதி, பரிப்பெருமாள், மல்லர், காலிங்கர் ஆகியோர் உரை எழுதிய ஓலைச் சுவடிகளை அளித்த பெரும் சிறப்பு முன்னாள் தமிழகப் புலவர்குழு உறுப்பினர், அறிவனாரின் சங்ககால இசை நூலான 'பஞ்சமரபு' தேடிக் கண்டவர், அமரர் பெரும்புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்களையே சாரும். மொத்தம் 50 ஏடுகளைத் தந்தார் (அமரர் வே.ரா.தெய்வசிகாமணிக்கவுண்டர் இக்கட்டுரையாளரின் ஆசிரியர்). அவ்வுரைகள் திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட திருக்குறள் உரைக் கொத்திலும் அச்சாகியுள்ளது.

கல்வி ஒழுக்கம் கூறும் ஆதி

அவ்வையார் அருளிச் செய்த 'கல்வி ஒழுக்கம்' என்னும் நூல் கொங்கு நாட்டுக்கேயுரியது. அதன் தொடக்கமே 'அஞ்சு வயதில் ஆதியை ஓது
ஆதியை ஓத அறிவுண்டாமே'
என்று தொடங்குகிறது. இது முதற்குறள் கூறும் 'ஆதிபகவன்' தாக்கம் எனலாம்.

அரிய பரிதியார் ஏடு

அண்மையில் சேலத்திலும், ஈரோட்டிலும் இரண்டு திருக்குறள் ஏடுகள் பரிதியார் உரையுடன் கிடைத்துள்ளன. ஈரோட்டு ஓலைச் சுவடியில் ஒவ்வொரு அதிகாரத் தலைப்பில் 'உத்தமம்' 'மத்திமம்' 'அதமம்' 'உத்தமத்தில் மத்திமம்' போன்றவற்றில் ஏதேனும் ஒன்று எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவரை நினைந்து கயிறு போட்டு சுவடியைத் திறந்து செய்யத் தொடங்கும் செயல்களின் பயன்களை அறியலாம். 'உத்தமம்' என்றுள்ள ஏட்டின் பக்கம் வந்தால் நல்லது, 'அதமம்' என்று வந்தால் செயலில் ஈடுபடக் கூடாது. வாழ்க்கை நெறி நூல் திருக்குறளை அன்றாட வாழ்வில் கொங்கு மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

திருவள்ளுவன் குறள்

கம்பராமாயணம், வில்லிபாரதம் போலத் திருக்குறளை 'திருவள்ளுவன் குறள்' என வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.
தொகுப்பு
புலவர். செ.இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,
(முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு தொல்லியல்துறைப் பேராசிரியர், துறைத் தலைவர்),
கொங்கு ஆய்வு மையம்,
3, பி. வெங்கடேசுவராநிவாஸ்,
13/2, வள்ளியம்மை தெரு, நாராயணவலசு,
ஈரோடு - 638011.
தொலைபேசி: 220940

7.10.2001 அன்று தமிழகப் புலவர் குழுவின் கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றபோது வெளியிடப் பெற்ற கட்டுரை.


E-Text Preperation: Ms.Niruthani Siva, Germany
Digital images of Thirukkural palmleaf manuscript: Dr.N.Kannan, Germany
Designed by: Suba :-Copyright THF


Back