சித்தி ஜுனேதா பேகம்

முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்





நேர்காணல்:



1. தாங்கள் எழுதி முதலில் அச்சில் வந்தது சிறுகதையா, கட்டுரையா? அது எப்போது எழுதப்பட்டது? எதில் இடம் பெற்றது?

என் சிறுபருவம் முதல் படிப்பதும் எழுதுவதும்தான் என் தொழில். அரபுத் தமிழிலும், அரபியிலும், தமிழிலும் எழுதிக்கொண்டே இருப்பேன். பன்னிரண்டு வயது முதல் எழுதி கிழித்துக்கொண்டிருப்பேன்! முதன் முதலில் அச்சில் வெளிவந்தது சிறுகதையும் கட்டுரையும்தான். 1929இல் 'தாருல் இஸ்லாமில்' வெளிவந்தது.

2. தங்களின் எழுதுலக நுழைவுக்கு யார் காரணமாக இருந்தார்? ஏதேனும் சம்பவங்கள் அதற்குக் காரணமாக அமைந்ததா?

என் எழுதுலக நுழைவுக்குக் காரணம், முன்னாள் தஞ்சைக் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எனது பாட்டனாரும், ஒரு காசுக்கடை முதலாளியுமான மு.யூ.நவாபு மரைக்காயர் அவர்கள். எந்த நிகழ்ச்சியும் காரணமாக அமையவில்லை.

3. அச்சில் வந்த முதல் எழுதோவியத்திற்கு வரவேற்பு அல்லது அன்றைய நிலையில் ஏதேனும் அதிர்ப்பு இருந்ததா?


அச்சில் வந்த என் முதல் எழுதோவியத்திற்கு பிற ஊர்களில் எப்படியோ? ஆனால், என் சொந்த ஊரில், நாகூரில் எதிர்ப்பு என்றால்..உர்ரே திரண்டு கும்பல் கும்பலாக என்னைப் பார்க்கவந்து கேலி செய்தது!

4. தங்களின் எழுதுலகப் பிரவேசத்திற்கு அக்காலத்திற்கு முந்திய அல்லது சமகாலத்து எழுதாளர் யாரை ஆகிலும் முன்மாதிரியாக தாங்கள் பின்பற்றினீர்களா?

நான் என் எழுதுலக நுழைவிற்கு எனக்கு முன்மாதிரியாக யாரையும் பின்பற்றவில்லை என் இறந்துபட்ட, அஞ்சலகத்தலைவர் என் சகோதரர் ஹீஸைன் பேயும், நானுந்தான் ஒன்றாய் உட்கார்ந்து படிப்போம், எழுதுவோம்.

5. தங்களின் எழுத்துக்களில் குறிப்பாக சிறுகதை, நெடுங்கதை ஆகியவற்றில் எந்த எழுத்தாளரின் எழுத்துநடை-கதை சொல்லும் முறை-தாக்கம் உண்டு என்று நினைக்கிறீர்கள்? அல்லது தனித்த தங்களின் சொந்த எழுத்துநடை, பாணி என்றால் அதனை யாரேனும் அந்த காலத்திலோ அதற்குப் பின்னரோ பின்பற்றினார்கள் என்று நினைக்கிறீர்களா?

எனது சிறுகதை, நவீனம் எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த நடை என்றே நினைக்கிறேன். சிலர் எனது எழுத்து நடையை மென்னடை என்று புகழக் கேட்டுள்ளேன். ஒரு சிலர் கடின நடை என்பர். எனது சகோதரர் ஹுசைன் முனவ்வர் பேயின் நடை அழகு மிகுந்தது, எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அந்த நடையைப் பின் பற்றி என்னால் எழுத முடியாது, எழுதத் தெரியாது.

6. தங்களின் முதல் நெடுங்கதை எழுதப்படுவதற்கு காரணமாக அமைந்த பின்புலம் என்ன ?

நான் முதன் முதலில் எழுதிய நெடுங்கதை "காதலா? கடமையா?" என்பது. இந்த நவீனத்தை நான் எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. நான் எழுத வேண்டும் என்ற எனது சொந்த அவாதான். இந்த எனது சிறு நவீனத்திற்கு "தாருல் இஸ்லாம்" ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோ ம். அவர் எனது தந்தையாரின் நண்பரும் ஆவார். "இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?" என்று ஏளனமாகப் பேசியதாக அக்காவிடம் சென்னையில் கல்லு஡ரியில் படித்துக் கொண்டிருந்த மர்ஹும் என் சகோதரர் ஹுவைன் முனவ்வர் சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ.வே சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்.

7.அந்தக் கதை அச்சில் வந்த காலத்தில் தங்களின் எதிர்பார்ப்பு என்ன?

நான் எந்தப் பள்ளியிலும் படித்ததில்லை. எந்தத் தேர்விலும் கலந்து கொண்டதில்லை, என்றாலும் என் கல்வி அறிவுபற்றி உ.வே சாமிநாதையர் அவர்களே புகழ்ந்தெழுதினார்கள் என்றால் நான் இதைப்பற்றி மகிழ்ச்சியடையத்தான் செய்தேன். மற்றவர்கள் ஆதரவும் வேண்டும் என்றும் விழைந்தேன்.

8. சமுதாயத்தில் அதற்கு ஆதரவு -எதிரப்பு எப்படியிருந்தது?

நமது முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல, நமது தமிழகத்தில்,அண்டை நாடுகளிலும் கூட மிகவும் ஆதரித்தார்கள். ஆங்கில பத்திரிகைகளும் தமிழ் பத்திரிகைகளும் மதிப்புரைகள் வழங்கின. சிங்கையில் பல்வேறு தொழில் அதிபர்கள், தமிழ் முரசு போன்ற தமிழ் பத்திரிகைகள் விரும்பி வரவழைத்தன. ஒரே ஆண்டில் நிறைய புத்தகங்கள் விற்றுவிட்டன. எங்களுக்கே புத்தகங்கள் இல்லாமல் சுதேசமித்திரன் பத்திரிகை நிலையத்தில் நாங்கள் எழுதிக் கேட்டு வாங்கினோம் என்றால் பாருங்கள்.

9. தமிழ் முஸ்லிம்களிடையே எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகமில்லாத அன்றைய நிலையில் அதுவும் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எவருமில்லாத அன்றைய நிலையில், தனித்துத் தலை து஡க்கி நின்ற தங்களின் எழுத்தார்வம் இலட்சியத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் எல்லையா? அது நிறைவேறியதா?

நான் புத்தகம் எழுதிய காலத்தில் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது, எந்தப் பெண்களிலும் நல்ல எழுத்தாளர்கள் அதிகம் இல்லை, எழுத்தாளர் மட்டுமென்ன? ஒரு முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கூடமும் இல்லை. நன்றாக படிக்கத் தெரியாத ஒரு தமிழ் உபாத்தியாயினி ஒருவரும், சரியான முறையில் பறிற்சி பெறாத உர்து உபாத்தியாயினி ஒருவரையும் உடைத்தாயிருந்த ஒரு முஸ்லிம் கோஷா பள்ளிக்கூடம் இருந்தது. இந்து-முஸ்லிம்கள் பெரிதும் ஒற்றமையோடு வாழ்ந்துக் கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே ஒரு முஸ்லிம் சிறுமியை நாகூரில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு பெண் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

10. தங்களின் இளமைப் பருவத்தில் குடும்பத்தில்-பெரியவர்கள் து஡ண்டுதல் செய்து, துணை நின்ற காலகட்டத்தில் எழுதத் துவங்கியுள்ளீர்கள். இப்போது அத்தகைய சூழல் இல்லை அதோடு கூடவே முதுமை நோயின் அலைக்கழிப்பு இவற்றினிடையே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் இதற்கான கிரியா ஊக்கி எது என்று சொல்லுங்கள்?

எந்தப் பெரியவர்களும் என்னை எழுதத் து஡ண்டியதில்லை துணை செய்ததுமில்லை. எப்போதும் எனது சொந்த முயற்சியும் ஆவலுந்தான். இன்று மட்டிலும் என்னை நோய் தொல்லைப்படுத்தவில்லை. நான் என்னை அறிந்த பருவ முதல் நோயில் உழன்று கொண்டுதான் இருந்திருக்கின்றேன். என் நோயினால் என் கல்வி முன்னேற வழியின்றி என் காலம் வீணானதுதான் கண்டபலன்.

11. அந்த நாளில் தங்களின் மனநிலையும் இந்நாளில் தங்களின் மனநிலையும் வளர்ச்சி-முதிர்ச்சி-தளர்ச்சி என்றவாறு வேறு பட்டிருக்கலாம் அவற்றை விளக்கி விரிவாகச் சொல்லுங்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை கல்விபற்றி என் மனோநிலை ஒரே மாதிரிதான். கல்வியின் ஆர்வம் குறைந்ததில்லை. சமயங்களில் நோயின் கடுமையால் நினைவு ஆற்றல் குறைந்திருக்கலாம் அப்போதும் கூட என் படிப்பாற்றல் குறையவில்லை. சான்று நாகையிலுள்ள மனநோய் வைத்திய டாக்டர் சேக்தாவூது அவர்கள் ஒருமுறை கடுமையான அறுவை சிகிச்சையினால் என் மன நலங் கெட்டிருந்தது. மனநோய் அறிஞர் சேக்தாவூது என்னைப் பார்க்க வந்தார். அப்போது நான் டக்டர் வரதராஜனார் எழுதிய "நெஞ்சில் ஒரு முள்" என்ற ஒரு உயர்ந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அவர் குது஡கலத்தோடு என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

12. தங்களின் நெடுங்கதைகளில் முதலில் அச்சில் வெளிவந்த காதலா? கடமையா? தொட்டு தொடர்ந்து அச்சில் வந்த மகிழம்பூ, சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தென்றல் ஆகியவற்றில் பெரும்பாலும் அதாவது மூன்றில் இரண்டு முஸ்லிம் கதை மாந்தர்கள் இல்லை...இதற்கான காரணம் என்ன?

தங்களின் 12வது கேள்விக்குச் சரியான முறையில் பதில் அளிக்க என்னால் முடியவில்லை.

13. தங்களின் எழுத்து தாங்கள் விரும்பிய பயனை விளைவித்ததா? விளைவித்தது எனில் அது எத்தகையது?

நான் எந்தப் பயனையும் கருதி நூல் எழுதவில்லை. பிறர்நலங் கருதாமல் தன்நலத்தையே கருதி செருக்கிலும் அறியாமையிலும் புதைந்து போகுமாறு மக்களை நெருக்கியழுத்தும் சாதி வேற்றுமை, சமய வேற்றுமையைக் களைந்து ஒன்றே குலமும் ஒருவனே தவனும் என்ற அடிப்படையில் மக்கள்
இனம் வாழ வழிவகுக்கும் ஒரு சிறு நூலை உரைநடையில் எழுதவேண்டும் என்ற அவா என்னை நீண்ட நாட்களாகத் தூண்டியது. எழுதினேன், வெளியிட்டேன். ஆனால் நான் விரும்பிய பயன் கிட்டியதா? அதுதான் இல்லை. மொழி வளர்ச்சி பற்றிப் பேசுகிறோம், எழுதுகிறோம். பல்வேறு இலக்கிய மாநாடுகள் கூட்டுகிறோம். பயன்? திருக்குறள், நாலடியார் முதலியவைகளிலிருந்து தமிழரின் தத்துவஞானத்தைப் பற்றியும், நல்லொழுக்கத்தைப் பற்றியும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவைகளிலிருந்து தமிழரின் நாகரிகத்தைப் பற்றியும் ஒருவாறு நாம் தெரிந்து கொள்கிறோம். ஆடம்பத்திற்காக செலவு செய்யும் இந்த ஆயிரக்கணக்கான தொகைகள் எந்தப் பயனைத் தந்தன? என்றால் அதற்கு ஏற்ற பதில் கிடைக்குமா?

14. சமுதாயத்தினர் குறிப்பாக இலக்கிய வட்டத்தினர் தங்களுக்கு வழங்கிய சிறப்புகள் யாவை?

எனக்குச் சிறப்பாக இலக்கியக் குழுவினர் வழங்கிய சிறப்புகள் வருமாறு: புதுக்கோட்டையில் இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாடு வழங்கிய பாராட்டுச் சான்றிதழ். கீழக்கரை அல்ஹாஜ் டாக்டர் ஷெங்கு நூர்தீன் அவர்களின் சார்பில் பொற்கிழி வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் சிறப்புச் செய்தார்கள்.

புதுக்கோட்டை, வெண்மணிப் பதிப்பகத்தார் ஒர் இலக்கிய வுருதும் தனிச் சிறப்புப் பாராட்டுப் பத்திரமும் 30.6.96இல் வழங்கினார்கள். காரைக்கால் சிற்றிலயக்கிய மாநாட்டின் சார்பாக ஒரு சால்வை போர்த்தினார்கள். சமீபத்தில் புதுக்கல்லூரியில் நிகழ்ந்த ஒரு இலக்கிய மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளின் சார்பாக மேஜர் மு.ஜெய்லானி அவர்கள் மூலம் ஒரு இலக்கிய விருது அளித்தார்கள். அது நன்றாக அழகிய முறையில் இருந்தது.

15. தங்களின் இலக்கியப்பணிக்குச் சமுதாயம் வழங்கிய சிறப்புகள் அனைத்தும் சமுதாயத்தினர் செலுத்திய நன்றிக்கடன்கள் என்றே நம்புகிறோம். தாங்கள் இலக்கிய வட்டத்தினர்-இதழாளர்-யாருக்கேனும் நன்றி செலுத்த வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

எனக்கு இலக்கிய வட்டத்தினர் செய்த நன்றிக்குப் பகரமாக யாருக்கும் நான் நன்றி செலுத்தவேண்டுமென்று நினைத்ததில்லை. ஆனால் என்னைக் கௌரவிக்கவேண்டுமென்று ஆசையுள்ள கலைமாமணி டாக்டர் கவி.கா.மு.ஷரிப் அவர்கட்கும், கீழக்கரை அல்ஹாஜ் டாக்டர் ஷெங்கு நூர்தீன் அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றிக் கடனைச் செலுத்துகிறேன்.

16. தங்களின் குடும்பத்தில் பலர் எழுத்தாற்றல்-பேச்சாற்றல்-கவித்திறந்கொண்டவர்களாக மிளிர்கின்றனர். அது பெருமைக்குரியது. அதற்கான தங்களின் பங்களிப்பு எத்தகையது?

களஞ்சியத்தின் குடும்பத்தினர் என்று சொல்லிக் கொள்வார்கள் எங்களை, வண்ணக்களஞ்சியப் புலவர் பெருமானி குடும்பந்தான் எங்களது எங்கள் குடும்பத்தில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவித்திறமை எல்லாம் உண்டு. ஆனால், சுட்டுப் போட்டாலும் எனக்குக் கவி இயற்றத்தெரியாது.

17. இன்றைய நிலையில் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் எழுத்தாளர்கள்-பெண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இதழ்களும் தமிழ் முஸ்லிம் பெண் ஆசிரியர்களாக பொறுப்பேற்று பணியாற்றும் இதழ் உட்பட-பல இதழ்கள் உள்ளன. எழுத்தாளர்களில் யார் உங்களைக் கவர்ந்தவர்? எந்த இதழ் தாங்கள் விரும்பிப்படிக்கும் இதழ்?

இன்றைய நிலையில் முஸ்லிம் எழுத்தாளர் பலர் உண்டு. பெண் எழுத்தாளர்களுந்தான். ஆனால் என் சிறுவயது முதல் நான் மாநாடுகளில் அதிகம் கலந்து கொண்டதில்லை. நல்ல பேச்சாளர் எவர் என்றும் எனக்குச் சரியாகத் தெரிவதில்லை. தனெக்கென வாழாப் பிறர்க்குரியவரான ஒரு சில பேச்சாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களையும் நான் நேரில் சந்தித்துள்ளேன் என்று கூற முடியாது. குன்றங்குடி அடிகளார் மகரிஷி சுத்தானந்த பாரதியார் இவர்களைப்பற்றியும் கேள்வியுறுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை.

18. இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களும்-வளரும் எழுத்தாளர்களுக்கும், தாங்கள் கூறவிரும்பும் செய்தி என்ன?

இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களும், வளரும் எழுத்தாளர்களும் என் ஆலோசனையைக் கேட்க விரும்பினால் நான் கூற விரும்புவது இதுதான்; நீங்கள் உங்களுக்குக்காக மட்டும் வாழ விரும்ப்பாதீர்கள். உங்கள் நாட்டிற்காக-உங்கள் இனத்திற்காக-உங்கள் சமுதாயத்திற்காக-உங்கள் மக்க்ட்காக வாழுங்கள். பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனெக்கென வாழாப் பிறர்க்குரியவராகத்திகழுங்கள்.

(முஸ்லிம் முரசு - பொன்விழா மலர் 1999 324-326)

'சொல்லரசு' மு.ஜாபர் முஹையித்தீன்
நாகூர், தமிழ்நாடு.



காதலா, கடமையா? - சித்தி ஜுனைதா பேகம் (குறுநாவல்) To read this novel click here

Back

தட்டச்சு: நா.கண்ணன், ஜெர்மனி; சடையன் சாபு, துபாய்.
வலைவடிவு: சுபாஷினி கனகசுந்தரம்





Designed by: Suba :-Copyright THF