தீயுமிழ் பாலையிலே
தேனருவிச் சோலையிலே


மகிழம்பூ

சித்திஜுனைதா பேகம்







அணிந்துரை

கே .எம் . காதர் மொகிதீன்

சித்தீ ஜுனைதா பேகம் நாடறிந்த எழுத்தாளர். 'நாகூர் புரட்சிப் பெண்' என்று இளமையிலே பேர்பெற்று எழுத்துலகில் - குறிப்பாக. கதை இலக்கியத் துறையிலே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு உள்ளவர் !

ஜுனைதாவின் எழுத்தில் பெண்மையின் ஆழம் வருணிக்கப்படுகிறது ! பொறுமையின் எல்லை வரைந்து காட்டப்படுகிறது ! தாய்மையின் தனிப்பெருமை நிலை நிறுத்தப்படுகிறது !

ஒரு வித்தியாசமான எழுத்தாளர் ஆதலின், இவரின் எழுத்தோவியங்களும் வித்தியாசமானவையே !

விரச உணர்ச்சிகளுக்கு வருணம் பூசி, வார்த்தை ஜாலப் போர்வைகள் போர்த்தி, தீமைகளை வணிகப் பொருளாக்கி வரும் எழுத்துச் சந்தையில், ஜுனைதாவின் கதைகளுக்கு இடமில்லை ! இலக்கியத்தில் நிரந்தரமான இடம் பெறும் தனிச்சிறப்புண்டு.

பெண், வெறும் போகப்பொருள் அல்ல ! பூமியில் பயிர் விளைச்சல் நடை பெறுவது போல, பெண்மையில் உயிர் விளைச்சல் நடைபெறுகிறது ! உயிரினும் சிறந்த செம்பொருள் ஏதேனுமுண்டோ ? பெண்மையினும் சிறந்த பொறுமையுண்டா? தாய்மையினும் சிறந்த தனிப் பெருமையுண்டோ ?---இப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டல்கள் ஜுனைதாவின் எழுத்தில் பின்னிப் பிணைந்துள்ளன !

"மகிழம்பூ" வில் பெண்மையின் பொற்குணம் மட்டும் மணக்கவில்லை! ஆசிரியையின் இலட்சியப் பெருநோக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது! ஆசிரியையின் எண்ண ஓட்டங்களின் வேகமும் விரைவும் கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகின்றது ! பாத்திரப்படைப்பிலும், இயற்கை வருணனையிலும், உரையாடலிலும் 'நயத்தக்க நாகரிக' நடையழகு பேணப்பட்டு, எழுத்து இழைக்கப்பட்டுள்ளது?

ஆசிரியையின் முதல் கதை 'ஹலீமா அல்லது கற்பின் மாண்பு' என்பதுதான். இக்கதை அவரை ஒரு புரட்சிப் பெண் ஆக்கியது ! பின்னர் அவர் வௌதயிட்டுள்ள 'வனஜா அல்லது கணவனின் கொடுமை' , 'காதலா? கடமையா?' 'சண்பகவல்லி அல்லது தென்னாடு போர்ந்த அப்பாஸிய குலத்தோன்றல்' 'பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம்' போன்ற புதினங்களுடன் 'திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு' என்னும் வரலாற்று எழுத்தோவியமும் எழுதியுள்ளார். அதோடு, எண்ணற்ற கட்டுரைகள் - சிறுகதைகள் பல ஏடுகளில் வௌதயாகியுள்ளன.

ஜுனைதாவின் எழுத்தில் இலட்சிய வெறி, மீறி நிற்பதைக் காண முடியும். சமுதாயச் சீர்திருத்த நோக்கு புரட்சிப் போக்கு, தூரநோக்கு இவற்றுடன் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கின்ற மடமைகள், மூடப்பழக்கங்கள், சாரற்ற சடங்குகள், சத்தற்ற சம்பிரதாயங்கள் தேவையற்ற குறுக்கீடுகள், ஆகிவற்றை நொறுக்கி விட்டு புதிய பொலிவுள்ள பொன்னார்ந்த சமுதாயத்தைப் படைக்கும், வேணவா அவரின் எழுத்தில் தொடர்ந்து இடம் பெற்றுவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னே ஆசிரியை அவர்களை நான் நேரில் சந்தித்தேன்.!

இப்போழுது இந்தக் கதை மூலமாகச் சந்திக்கிறேன் ! நேரில் சந்தித்த ஆசிரியையின் கருத்தும், கருத்தின் வேகமும், கருத்தின் போக்கும், இக் கதையிலும் இப்பொழுது பார்க்கும் போது, இலட்சிய பிடிப்பு என்பது ஆசிரியையின் இணைபிரியாத உணர்ச்சி என்பது விளங்க முடிகிறது.

இலட்சியங்களுக்கு இறவாமை உண்டு ! அதே போல் இலட்சியங்களைத் தாங்கிவரும் இலக்கியங்களுக்கும் இறவாமையுண்டு. எழுத்துலகில் இத்தகைய இலட்சியக் கருத்தோவியங்களை உருவாக்கியோருக்கும் இறவாமையுண்டு !

ஜுனைதா பேகத்தின் 'மகிழம்பூ' இறவா இலக்கியத்தில் ஒன்றாக அமைந்துள்ளது.

பெண் அலங்காரமானவள்! அழகானவள் மட்டுமல்ல ; மிகமிக அழமான உணர்வுடைவளும் ஆவாள் என்பதை கருப் பொருளாகக் கொண்டுள்ள இக்கதை எளிய இனிய அழகிய தமிழில் எழுதப் பட்டுள்ளது.

யாவரும் விரும்பிப் படிக்கும் வகையில் விறு விறுப்போடு கதை செல்கிறது ! அனைவரையும் படிக்கத் தூண்டும் அருங்கதை. ஆசிரியைக்கு என் பாராட்டுக்கள், படிப்போர்க்கு என் வாழ்த்துக்கள்!

அன்பன்
கே .எம் . காதர் மொகிதீன்
தாருல்குர் ஆன்
காஜாநகர், திருச்சி-20


முகவுரை


எண்ணத்தைச் செயல்படுத்தும் இறைவனின் பேரருளால் !

இச்சிறு நூலுக்கு முகவுரை தேவையில்லையெனக் கூறலாம். என்றாலும். 'எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க" என்பது இலக்கணம். இதனால், எந்நூற்கும் முகவுரை இன்றியமையாத தென்பது வௌ஢ளிடை. நூலை இனிது விளங்கிக் கொள்ளுதற்கும். எழுதும் ஆசிரியரின் கருத்தை உணர்ந்து கொள்ளுதற்கும் முகவுரை இன்றியமையாதது.

மதுரை ம.கா.மு. காதிர் முஹிய்யிதீன் மரைக்கார் அவர்களைப் பற்றி முஸ்லிம் உலகம் நன்கறியும், உயர்ந்த எழுத்தாளர் ; சிறந்த பேச்சாளர். பன்மொழிப் புலவர். அவர்கள் எந்தையாரின் நண்பர், என்பால் மிக்க அன்புடையவர்கள். "பிள்ளை ஜுனைதாவுக்கு " என்றுதான் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். என் தந்தையார்க்கு ஐந்து., ஆறு ஆண்டுகட்கு மூத்தவர். கவிதையும் இயற்றியிருக்கிறார்கள். அவர்களின் கவிதை யாற்றலுக்குச் சான்று; புர்தா ஷரீபுக்குத் தமிழில் அவர்கள் வடித்துத் தந்திருக்கும் பாக்கள்.

அவர்கள் என்னிடம் ஒரு முறை தெரிவித்தார்கள் - நீங்கள் இனி மத சம்பந்தமான நூல் ஏதும் எழுதுங்கள் கதைகள் எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லை" என்று. அப்பெரியார் தம் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் இயல்புடையவள் யான். அவர்களது உத்தரவையும் மீறி. இச்சிறு சரித்திரக் கதை எழுதி வௌதயிட விரும்பினேன் என்றால், அதற்குக் காரணங்கள் பின் வருவன ! மரைக்கார் மாமா அவர்கள் உயிர் வாழ்ந்஢திருந்தாலும் கூட என்னை மன்னித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது வௌதவரும் மாத வார இதழ்களில் பத்திரிக்கையைப் பார்ப்பவர்க்குக் கவர்ச்சி யூட்டினால் விலை போகும் என்ற கருத்தினாலோ, வேறு எதனாலோ, பிஞ்சு உள்ளங்களில் இளஞ் சிறுவர். சிறுமிகள் உள்ளத்தில் தீய கிளர்ச்சியை ஊட்டத்தக்க ஆபாசமான. அசிங்கமான சிறுகதைகள், சரித்திரக் கதைகள், குறு நாவல்கள் எழுதி வௌதயிடுகிறார்கள். படங்களும் அவைகளுக்கேற்ப அமைக்கின்றார்கள் இவர்கட்குப் பேர் உயர்ந்த எழுத்தாளர்கள் என்று சமூக சீர்திருத்தவாதிகள் என்றுங் கூறிக் கொள்ளுகின்றார்கள். இவைகளைப் பார்க்கும் போது மனம் புண்படுகின்றது; வேதனையுறுகின்றது. அம்மாதிரி பண்பற்ற கதைகளைப் படிக்கும் வாசகர்கட்கு இந்த நூல் நல்வழி காட்டும் என்று நம்புகிறேன்.

இமாம் பூசிரி அவர்கள் புர்தா ஷரீபில் இறுதியாக ஓர் இறைஞ்சற்பா பாடியிருக்கிறார்கள். அதனை மரைக்கார் மாமா (அப்படித்தான் நான் அவர்களை அழைப்பது வழக்கம்) அவர்கள் கீழ் கண்டவாறு அருமையாக மொழி பெயர்த்திருக்கிறார்கள்:

"இறைவா ! நீ தேர்ந்தெடுத்த எம்பெருமான்
தம் பொருட்டால் மறைவாய் மனத்திடையாம்
வைத்துள நன்னாட்ட மெல்லாம்
நிறைவேற்றி யீந்தருள்வாய் !
நிதமும் வரையாதளிப் போய் !
கறையாம் கழிந்த பவம்
கணிக்காது விட்டருளே !" என்று.

இச்சிறு வௌதயீட்டிற்கு அணிந்துரை எழுதி உதவியதோடு வௌதவருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய என் பேரன்பிற்குரிய பேராசிரியர் கே. எம். காதர்மொகிதீன் எம் .ஏ அவர்கட்கு என் ஆழிய நன்றி.

நாகூர்
5-4-85
சித்திஜுனைதா பேகம்.


பொருளடக்கம


அத்தியாயம்

1 நிலமகளே !
2 நோயாளி
3 அமைதியான குடும்பம்
4 அழகேந்திரன் அறிக்கை
5 விருந்தாளி
6 நீர் மகளே !
7 கானகத்து கன்னி
8 மனப்போர்
9 சிறையில் வாலிபன்
10 கண்ணனின் மனக்கலக்கம்
11 தந்தையும் மகளும்
12 மலர்விழியின் துயர்
13 விடுதலை
14 இலட்சியக் காதலர்
15 மர்மம் வௌதப்படும் நிலை
16 கவிதாவின் புதிய துன்பம்
17 அசோகன்
18 மர்மம் வௌதப்படுதல்
19 வானமாதேவி
20 தப்புதல்
21 அழகேந்திரன்
22 கடமை வீரன்
23 பாண்டிய இளவரசி
24 அன்பும் பணியும் தொண்டும்
25 அன்பில்லம்
26 பொங்கும் மங்கலம் எங்குந் தங்குக !


மகிழம்பூ

அத்தியாயம் 1

நிலமகளோ!

''சேகர்! இருபத்தேழும் எட்டும் எத்தனை? ''

நிலமகள்போல் வீற்றிருந்த மலர்விழி புல்புல்தாராங்கினின்றும் இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கேட்டாள்.

''முப்பத்தி ஒன்பது'' என்று உடனே பதில் அளித்தான் சேகர். வந்தனத்துடன் தலையசைத்துக் குறித்துக் கொண்டாள் மலர்விழி.

அவர்கள் இருவரும் சகோதர சகோதரிகள், மிக்க அழகிய தோற்றமுடையவர்கள்.

''சேகர், அந்த புல்புல்தாராங்கை கீழே வைக்கிறாயா? நான் வந்து உடைத்து போடவா?'' என்றாள் மலர்விழி.

''அங்'' என்று மற்றொரு சுரம் எழுந்தது. அது புல்புல்தாராங்கின் ஓசை நிற்கவில்லை என்பதில் பொருள்.

''எப்போதும் அக்கா இப்படித்தான். நன்றி கெட்டது. இந்த மூர்க்கத்தனமான அக்காவின் நெஞ்சை இசையாலேயே தாக்கணும். அப்போது தான்.......''

சிரித்துக் கொண்டே மேல் விழுந்தாள்: ஐந்து நிமிடம் சண்டை நடந்தது. மலர்விழியைக் கீழே தள்ளி அவள் பேரில் உட்கார்ந்து கொண்டே பாட ஆரம்பித்தான் சேகர்.

''டேய் சேகர்! உன்னை எதற்காகத்தான் அம்மா பெற்றாங்களோ தெரியவில்லை. அப்பப்பா! என்ன துடி'' என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள் மலர்விழி.

''முட்டாளே, இன்னும்: நீ அறிந்து கொள்ள வேண்டியவைகள் அநேகம் இருக்கின்றன. இருபத்தேழும் எட்டும் முப்பத்தொன்பது அல்ல என்பது அவைகளில் ஒன்று'' என்றான் அவன்.

சில வினாடிகட்குள் சாயங்கால காப்பியை எடுத்துக்கொண்டு மேன்மாடிக்குச் சென்றாள் மலர்விழி. மிருதுவான பஞ்சு மெத்தையில் படுத்திருந்த நாற்பத்திரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியிடம் காப்பியை நீட்டினாள். வாடி வதங்கி, வளங்குன்றி. வாலிபத்தைக் கடந்து நின்ற அப்பெண்மணி இவர்களின் மாற்றாந்தாயான மரகதவல்லி அம்மாள். ஒரு காலத்தில் மிக அழகியாகத் தான் கருதப்பட்டதை அந்த அம்மாள் மறக்கவேயில்லை.

''இதோ காப்பி அம்மா! சேகரோடு பேசிண்டே இருந்துவிட்டேன். நேரமாகிவிட்டது.''

''உம், அதற்கென்ன இப்போ? ஒரு மணி நேரம் பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன முழுகிவிட்டதாம்! உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. என் விதியடி! யார் எதைச்செய்தாலும் பிறத்தியாரிடம் சொல்லாமல் பொறுத்துக்கொள்வது தான் என் வழக்கம். எங்கள் குடும்பமே பொறுமைக்குப் பேர் போனது. காப்பி நேற்று ஐஸ் போலிருந்தது: முந்தாநாள் காப்பிக்குழம்பு வைத்தாய்: இன்று கொதிக்கிறது. தொலைந்து போகிறது. கொஞ்சம் சத்தம் போடாமல் நீயும் உன் தம்பியும் இருந்தால் அது போதும் எனக்கு, ஒரே தலைவலியாக இருக்கிறது. கீழே இறங்கிப்போ!''

''சரி அம்மா! இன்றிரவு ஆகாரம் ஏதேனும்.............என்ன அம்மா!''

''ஆங், ஏதேனும் சொற்பமாகச் செய். ஒரு சாம்பார், ஒரு கூட்டு, ஒரு பொறியல், கொஞ்சம் இரசம், முடிந்தால் வடைகிடை கொஞ்சம் செய் என்றாள் மரகதவல்லி.''

''வேறு ஒன்றும் இல்லையே அம்மா!''

''வேறென்ன? எதைத்தான் உண்ண முடிகிறது? வேண்டுமானால் நல்ல மாம்பழங்கள் கிடைத்தால், வாங்கி வாயேன்'' என்றாள் மரகதவல்லி.''

மலர்விழியும் விரைவாக அந்நாட்டுப்புற கடைக்கு ஓடி பழங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள்.

அவள் தன் வீட்டை நெருங்கியபோது, சிலசிலுவென்று ஓடிக்கொண்டிருந்த அருவியின் இன்னிசையோடு பல ஒலிகளும் கலந்து அவள் செவியினுள் புகுந்தன. வேட்டை நாய்கள் குரைத்தன. தூரத்தில் அழகிய புரவியில் அமர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு கனவானைக் கண்ணுற்றாள். அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டே மெதுவாக வந்து கொண்டிருந்தார். அவர் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவரல்லர் என்பதை மலர்விழி ஒரு பார்வையிலே விளங்கிக் கொண்டாள். இன்னதென்று கூற முடியாத ஒரு கம்பீரத் தோற்றம் அவரிடத்தில் குடிபுகுந்து கொண்டிருந்ததை அவள் சிறுமியாயினும் உணர்ந்தாள். அதே நிமிடம் குழிமுயல் ஒன்று குதிரையின் காலிடையே நுழைந்து ஓடிற்று. குதிரை வெருண்டு எதிர்பாராத முறையில் துள்ளி மேலெழுந்தது. அடுத்த வினாடி குதிரை மேலிருந்த கனவான் மலர்விழியின் காலடியில் தூக்கி எறியப்பட்டு வீழ்ந்தார்.


அத்தியாம் 2

நோயாளி

ஒரு சில வினாடிகள் மலர்விழிக்கு இன்னது செய்வதென்றே புரியவில்லை. 'உதவி உதவி ' என்றே கூவினாள். தன் :வீட்டிலிருந்து ஒருவரும் வருவதாக தெரியவில்லை. யார் தான் இருக்கிறார்கள்? நோயாளி என்று மனப்பூர்வமாய் எண்ணிக் கொண்டிருக்கும் சிற்றன்னை, சிறுவன் தம்பி, சமையற்காரி பொன்னம்மா இவர்களைத் தவிர உணர்வற்று தன் காலடியில் வீழ்ந்து கிடந்த அந்த கனவானை அச்சிறுமி உற்று நோக்கினாள். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அடுத்திருந்த ஓடைக்கு ஓடி நீர் கொண்டு வந்து முகம், கால் கைகளில் பிழிந்தாள்.

அப்பொழுது தான் அடிபட்டுக் கிடந்த அக்கனவான் மிக அழகு வாய்ந்தவர் என்ற உண்மை அவளுக்குத் தெரிய வந்தது. வாழ்க்கையோடு போராடி அதன் மேல் வெறுப்புக் கொண்டவர் போன்று அவரது முகத்தோற்றம் காணப்பட்டது. அவரது பரந்த நெற்றியும் சிறந்த உடையும், விரலில் மின்னிய ஆழியும் ஒரு நந்நிலையில் உள்ள கனவான் என்பதை உறுதிப்படுத்தின. சிறிது நேரத்திற்கெல்லாம் அம்மனிதர் கண்ணைத் திறந்து மிரள மிரள விழித்தார்.

''நான் உணர்வற்றுக் கிடந்தேனா?'' என்று அவளை நோக்கி வினாவினார்.

''ஆம்'' என்று பதிலளித்தாள் மலர்விழி.

''நீ மிகவும் பயந்திருக்க வேண்டும்! அனாவசியமாக உன்னைப் பயமுறுத்தியதர்க்கு நீ என்னை மன்னிப்பாயா?'' என்றார் அந்தக் கனவான்.

''உங்களுக்கு ஏதும் காயம் பட்டிருக்கிறதா?''

''ஒன்றுமில்லை, குழந்தே! நான் போகிறேன்'' என்று எழுந்தார். கால்கள் தள்ளாட மீண்டும் கீழே விழுந்தார். மலர்விழி கொஞ்சம் தாங்கிப் பிடித்துக் கொண்டு ''வாங்கோ, எங்கள் வீட்டுக்குப் போவோம்'' என்றாள்.

''இல்லை, நான் போக வேண்டும். போகிறேன் ''என்றார் அவர்.

''எங்கள் வீடு வசதியானது. யாரும் எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டும் போய்க் கொண்டுதாமிருப்பார்கள். நீங்கள் இப்போதிருக்கும் நிலைமையில் உங்களால் போக முடியாது'' என்றாள் மலர்விழி.

''ஏன் முடியாது!'' மீண்டும் அவர் எழுந்தார். முடியவில்லை. தள்ளாடி விழப்போனார். மலர்விழி தடுத்து அவர் கையை மெதுவாகப் பிடித்து, மெல்ல மெல்ல கூட்டிச் சென்றாள். தன் வீட்டை அடைந்து, வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டுக் கதவை தட்டினாள்.

பழங்கால வீடு: விசாலமான திண்ணை. கதவைத் திறந்தது சமையற்காரி கண்ணம்மா. தலையை நீட்டினாள்.

''கண்ணம்மா கத்தாதே! உள்ளே சென்று சீக்கிரமாக கொஞ்சம் காப்பிப்போடு'' என்றாள் மலர்விழி.

அவர் ஏதும் பதிலளிக்கவில்லை. அந்த வீட்டில் நீண்டகாலமாகச் சமையல் செய்துவருபவள். எனவே விரைந்து சென்று காப்பி கொணர்ந்தாள்.

மலர்விழி அந்தக் கனவானை உற்று நோக்கினாள். முகத்தில் கொஞ்சம் கடுமை, அவர் ஒரு இளைஞரன்று: இருபத்தெட்டு:ஆண்டை எட்டிப் பிடித்தவர். காப்பி அருந்தினார்.

''என் அன்பும் ஆசிர்வாதமும் உனக்கு. உன் உதவியையும், அன்பையும் நான் என்றும் மறக்க மாட்டேன். போய் வருகிறேன்'' என்று எழுந்தார். நிற்க முடியவில்லை. அதற்குள் சிற்றன்னை எதிர்பாராமல் அங்கு வந்தாள்.

தனது மாற்றாந்தாயைக் கண்டு நடுநடுங்கி நின்ற மலர்விழியைப் பார்த்து, ''மலர்விழி ! இவர் யாரடி?:''என்றாள்.

மலர்விழி பதிலளிக்கவில்லை. உட்கார்ந்திருந்த அக்கனவானே பதில் அளித்தார். சுருக்கமாக விவரங்களைத் தெரிவித்து, ''அம்மா! மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கஷ்டம் தந்து விட்டேன்: எதிர்பாராமல் இவ்வாறு நேர்ந்தது இறைவனின் செயல்'' என்றார்.

அவரது தோற்றமும் பேசிய பேச்சும் அவர் ஒரு மேற்குலமகன் என்பதை எடுத்துக் காட்டின. அவர் பால் மரகதவல்லிக்கு திடீரென அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. உடனே அவள். 'சரி சரி,அதற்கென்ன! இது என்ன ஒரு கஷ்டமா? சாதாரணமாக ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசை செய்து வாழ வேண்டுமென்பது தானே மனிதர்களாகப் பிறந்ததன் நோக்கம்'' என்று அவரிடம் கூறி விட்டு, மலர்விழியைப் பார்த்து, ''ஏண்டி சுவரோட்டமா அப்படியே மலைச்சுப்போய் நிற்கிறாய்? போய் அவருக்கு அந்த அறையில் மெத்தையை எடுத்துப் போடு.போ. சீக்கிரம்! பொன்னம்மா! நீயும் கூடப்போடீ!'' என்று அதட்டினாள்.

பிறர் முன்னிலையில் இவ்வாறு கடிந்து கொள்ளுதல் நாகரீகமற்ற செயல் என்று அந்தக் கனவான் எண்ணியிருக்க வேண்டும். அவர் தன் உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டார்.

''எனக்கு ஒன்றுமில்லையம்மா! குதிரையிலிருந்து கீழே விழுந்ததினால் ஒரு காலில் மட்டும் நரம்பு பிசகிவிட்டாற்போல் இருக்கிறது. அது தான் மிகவும் வலிக்கிறது'' என்றார் அவர்.

''என்ன? கால் நரம்பு பிசகிவிட்டதா? அப்படியானால் வைத்தியரிடமல்லவா காட்ட வேண்டும்? ஏ, பொன்னம்மா! நமது வைத்தியரைக் கூட்டி வா! ஓடு சீக்கிரம்'' என்று கத்தினாள் மரகதவல்லி அம்மாள்.

பிறகு அந்தக் கனவானைப் பார்த்து,. நீங்கள் சுகம் ஆகும் வரையில் இங்கேயே இருக்கலாம். விருந்தாளிகளை விரட்டுகிற வழக்கம் எங்கள் குடும்பத்திலேயே இல்லை. நான் சந்திரசேகர் பிரபுவின் நெருங்கிய உறவினள்.உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கக்கூடுமே! '' என்றாள்.

''இல்லை, எனக்குத் தெரியாது. ஆனால் சந்திரசேகர பிரபுவைப் பற்றி அடிக்கடி கேள்வியுற்றிருக்கிறேன். அதிலும் இப்போதுதான் அவரைப்பற்றி.............'' என்று அவர் சொல்லும்போது, மரகதவல்லி அவர் சொல்வதைக் கவனியாமல் இடைமறித்து,''உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்றாள்.

"என் பேர் அசோகன், நான்," இதற்கிடையே பொன்னம்மா வைத்தியரோடு வந்தாள்,

''வைத்தியரே, இவர் நம் வீட்டிற்கு வந்த விருந்தாளி. எதிர்பாராமல் இவ்வாறு நேர்ந்து விட்டது. கொஞ்சம் கவனித்துப்பாருங்களேன்''.

மருத்துவர் அசோகனைப் பார்த்தார். முதன் முதலாக அவர் ஏதோ ஒரு பச்சிலைச் சாற்றைப் பிழிந்து காயத்தில் வைத்துக் கட்டினார். இரத்தம் வடிந்து கொண்டிருந்தது நின்று விட்டது. ''சுகமாகி விடும். பயப்பட வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். நான் காலையில் வருகிறேன். இந்த மருந்தை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். நல்ல தூக்கம் வரும்'' என்றார் மருத்துவர்.


அத்தியாயம் - 3

அமைதியான குடும்பம்

முல்லைப்பட்டி மிராசுதாருக்கு மிஞ்சியவள் நமது மரகதவல்லி தான். எனவே, அவளுக்குத் தகுந்த இடத்தில் வரன் கிடைக்காமையால், சந்திரசேகர பிரபுவின் ஒன்று விட்ட மைத்துனர் இராஜேந்திரருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டாள்.

இராஜேந்திரரின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்களே மலர்விழியும் சேகரும். இவர்கள் போதிய பணக்காரர் இல்லாவிடினும், கொஞ்சம் நிலபுலம் உள்ளவர். ஏதோ ஒருவாறு குடும்பத்திற்கு தாராளமாகப் போதும். ஆனால் நமது மரகதவல்லிக்குத்தான் ஒரு பெரிய இடத்தில் தான் வாழ்க்கைப்படாத குறை இருந்து கொண்டே வந்தது. என்றாலும், இராஜேந்திரர் உயிர் வாழ்ந்த வரையிலும் அவர்கள் வாழ்க்கையில் நூதனம் ஏதும் நடைபெறாது .அமைதியே குடிகொண்டிருந்தது. திடீரென்று அத்தகைய மாறுதல் அவர்களுக்கு வந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்ததே இல்லை. இராஜேந்திரர் தமக்கு ஓய்ந்த நேரங்களில், வீண் அக்கப்போர்களில் தலையிடமாட்டார். தமது எஞ்சிய பொழுதைப் பணக்கார அக்கம்பக்கத்தார் வீட்டிற்குச் செல்வதிலும், ஏழை மக்களுக்கு உதவி ஒத்தாசை செய்வதிலும் கழித்து வந்தார்.

நெடுஞ்சாலைக்கு அண்மையில் இருந்ததால், அடிக்கடி வழிப்போக்கர்களும், அந்நியர்களும் அவர்கள் இல்லத்தில் வந்து தங்கிப் போவது உண்டு. அவர்கள் வீட்டிற்கு கொல்லைப்புறத்தேயுள்ள நாரத்தம் பழத்தில் ஒருவித பானம் பண்ணுவதில் மரகதவல்லி மிகத்தேர்ந்தவள். சரித்திர ஆசிரியர்களுக்கு வேண்டப்படும் வாய்மையுடன் பேச வேண்டுமானால், அது வரையில் அப்பழத்தின் தீஞ்சுவைப் பானத்தைக் குறை கூறியவர் ஒருவரும் இல்லை. நொண்டி,முடம்,குருடு ஆகியவர்கள் பலமுறை இவர்கள் வீட்டிற்கு வந்து உண்டுகளித்துப் போவார்கள். இன்னுஞ்சிலர், இவர்களின் தூரத்து உறவினர் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி வந்து துன்பம் கொடுப்பார்கள். இவ்வாறு வருபவருள் இக்குடும்பத்தினருக்கு விருப்பமில்லாதவர்களும் உண்டு. இவர்கள் வருவதோடு இல்லாமல், ஒரு செருப்பையோ மேல் சொக்காயையோ அல்லது ஏதேனும் பொருளையோ எடுத்துச் செல்வதும் உண்டு. இவர்களை-இவ்வேண்டாத மக்களை வராமல் இருக்கச் செய்ய பல சூழ்ச்சிகளைக் கையாள வேண்டி இருந்தது. ஆனால், வழிப்போக்கர்களையோ அல்லது அன்புடைய ஏழை உறவினர்களையோ இக்குடும்பத்தார் விரட்டினதாக யாருமே கூறவியலாது.

மித வாழ்க்கையில் பழக்கப்பட்ட இவரது குழந்தைகள் நற்குணசீலர்களாய், உடல் நலத்துடன் விளங்கினர். சேகர் உடலுரம் பெற்று, சுறுசுறுப்புடையவனாய் விளங்கினான். மலர்விழியும் அழகிற்கரசியாக விளங்கினாள். அவர்கள் நடுவில் இராஜேந்திரர் நிற்கும் போது, ''தம் பொருள் என்பர் தம் மக்கள்'' என்ற ஆன்றோர் வாக்கு எவ்வளவு உண்மை என்று அடிக்கடி கூறுவார். அந்தக் கிராமப் பகுதியிலே இரு குழந்தைகளும் அழகிற் சிறந்தவர்கள் என்று பேர் பெற்றிருந்தனர். இவர்களது மாற்றாந்தாயான மரகதவல்லி அம்மாள் எவ்வளவுக்கெவ்வளவு ஆடம்பரக்காரியாகவும் படபடவென்று துடியாகப் பேசக்கூடியவளாக இருந்தாளோ, அதற்கு நேர்முரணாக இருந்தார்கள் இக்குழந்தைகள். சாந்தமும் அடக்கமும் இவர்களிடம் குடிகொண்டிருந்தன. சேகர் அவனது கள்ளங்கபடமற்ற பேச்சினால் அவளது தந்தையை மகிழ்வித்தால், மலர்விழி தனது சாந்தகுண அறிவுப் பேச்சினால் அவரை மகிழ்விப்பாள்.

சேகர் திண்ணைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். மலர்விழி வீட்டிலேயே தந்தையின்பால் பல படிப்பையும் பெற்றுக்கொண்டிருந்தாள். ஆனால் உலகம் இன்னதென்று அறியாத குழந்தைகளைப்பற்றி இப்போது விவரிப்பது வீண் வேலை. போகப் போக அவர்களைப் பற்றி அறியலாம். ஆனால் ஒன்று உண்மை! பொதுவாகக் கூறுமிடத்து, இக்குழந்தைகள் பரோபகாரசிந்தனை உடையவர்களாயும், எளிதில் யாரையும் நம்புவோர்களாயும், எவருக்கும் மனத்தாலும் தீங்கு எண்ணாதவர்களாகவும் இருந்தனர்.

இக்கதை நிகழும்போது இவர்கள் வாழ்க்கையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. அஃது இவர்களின் தந்தையான இராஜேந்திரர் திடீரென இறந்துபட்டதே. அவர் இறந்து போனதும் இக்குடும்பத்தில் சீர்கேடுகளும், அமைதிக் குறைவும் ஏற்பட்டன. ஆடம்பரக்காரியான மரகதவல்லி மலர்விழியைப் பல அல்லற்குட்படுத்தி வேலை வாங்கினாள். இயல்பாகவே அமைதி வடிவான மலர்விழி எதனையும் பொருட்பத்தாமல், தனது சிற்றன்னையின்பால் அன்புடையவளாகவே இருந்தாள். இப்போது மலர்விழிக்கு பதினைந்து வயதாகிறது. சேகருக்கு வயது பன்னிரெண்டு. இந்நிலையின்தான் நமது கதை நிகழ்கிறது.


அத்தியாயம் 4

அழகேந்திரன் அறிக்கை

மாலை வேளை. அழகாபுரியைச் சேர்ந்த காடுகளில் சிறு சிறு வேளாண் குடி மக்களின் குடிசைகள் அங்கும் இங்குமாய்ச் சிதறிக் கிடந்தன! மேடானதோர் புல்தரையில் மாட்சிமை மிக்க அழகேந்திரனின் போர் வீரர் பலர் நின்று கொண்டிருந்தனர். வீரர் தலைவன், மன்னரின் அறிக்கையை அங்குக் குழுமியிருந்த குடியானவர்கட்கு உரக்க வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

''அழகாபுரியின் முடிவேந்தரும் , சோழ மன்னனோடு போரிட்டு வெற்றி கொண்டவருமான யாம் , இதனால் மக்கட்குக் கட்டளையிடுவது: காட்டிக் கொடுத்து ஓடிய சந்திரசேகர பிரபுவின் சொத்துக்கள் எமக்கு உரியமைகளாகிவிட்டன கரந்துறையும் அவர்தம் மகன் இராமச்சந்திரனுக்கு மறைமுகமாய்த் தந்தைக்கு உதவி அளித்தற்காகத் தண்டனையளித்திருக்கிறோம்.. அவரை மறைத்து வைத்திருப்பவர்கள், உதவி செய்பவர்கள் கடுந் தண்டணைக்கு உள்ளவர்கள். குடி மக்களில் எவர் கண்டபோதினும் அவரை உடனே பிடித்து, அரசியலாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்குத் தகுந்த பரிசளிக்கப்படும் !"

பறையொலி முழங்க, வீரங்கள் மேல்நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போதுநான் அவ்வீரர் தலைவனுக்கு அழகேந்திர வனத்துக் கொல்லன் சின்னையாதேவன் அறிக்கை கேட்க வரவில்லையென்று தெரிந்தது.

"திரும்புங்கள் : கொல்லன் உலைக்கு" என்று கட்டளை இட்டான் தலைவன். கூப்பிடு தூரத்தில் மரங்களால் இயற்கை அரண் அமைக்கப்பட்டுள்ள சின்னையா தேவனது குடிசை தென்பட்டது. சலிக்காது உழைப்பவனும் சிறந்த பாட்டாளி மகுனும் , உடல் உரம் பெற்றவனாகிய சின்னையா தேவன் பேரில் அவ்வனம் உறை மக்கட்கு அளப்பரிய அன்பும், மரியாதைமிருந்தன. இஃதல்லாம் சிறந்த அறிவாளியும் ஏழை மக்கட்குத் தொண்டாற்றுவதே தன் கடமையாகக் கொண்டவனும், பாண்டிமா நாட்டு எல்லா சிற்றரசர்கள், பேரரசர்கள் அனைவராலும் கொலைத் தண்டனை விதிக்கப்பெற்றவனும், செல்லவந்தர்களை ஒழிப்பதையே தன் தொழிலாகக் கொண்டவனுமான இராமச்சந்திரனும், கொல்லன் சின்னையா தேவனும் உழுவலன்பு பூண்ட உயரிய நண்பர்கள் என்ற வதந்தியும் உண்டு. எனவே மாண்பு மிக்க மன்னர்பிரானின் அறிக்கையை சின்னையா தேவனுக்கு அறிவிக்காது போனால், அஃது எதிர்காலத்தில் இடையூறு ஏதும் தனக்கு உண்டாகலாம் என்ற எண்ணமே தலைவனை அங்கே செல்லுமாறு உந்தியது.

இரண்டொரு வினாடிகட்குள் சின்னையா தேவனின் குடிசையை அண்மினர் வீரர்கள். குடிசையினின்றும் அமைதி தவழ சின்னையா தேவன் வௌதப்போந்தான். மன்னர் பிரானின் அறிக்கை வாசித்துக் காட்டப்பட்டது. அவன் ஒன்றுமே பேசவில்லை.

"தேவரே, இளைய பிரபுவைப்பற்றிய செய்தி ஏதும் உமக்குத் தெரியுமா?" என்றான் வீரர் தலைவன்."

"நான் இருக்கும் வனமெல்லாம் தேடி பாருங்கள், இருந்தால் பிடித்துச் செல்லுங்கள்" என்றான் தேவன்.

இரண்டு வீரர்கள் வனத்தின் மூலைமுடுக்கெல்லாம் சோதித்தனர்; ஏமாற்றமடைந்தனர். " பின் அவர் எங்கோ?" என்று மீண்டும் கேட்டான் தலைவன்." எனக்கென்ன தெரியும்?" என்று மறுமொழி தேவனிடமிருந்து வந்தது. வீரர்கள் எங்கும் தேடினர் : காடெலல்லாம் துருவினர், மரக்கிளைகளையெல்லாம் அசைத்துப் பார்த்தனர். ஆளைகாணோம் ! எங்கே அவன்?

சின்னையா தேவன் குடிசைக்கு வௌதயே பசுப்புல் தரையில் அமர்ந்தான். அப்போது தான் இலேசாகத் தூற்றல் விழுந்து ஓய்ந்திருந்து, பயங்கரமான பல நினைவுகளின் நிழல்கன் தங்கள் முழுத்திறனையும் அவனிடம் செலுத்தின. அந்த இரவின் நடுவிலே எழுந்து நின்று வௌதயில் கவிழ்ந்திருக்கும் இருளையே ஊடுருவிப் பார்த்தான். இருள் : இருள் ! ஆம் எங்கும் பேரிருள் !

கொஞ்சம் தூரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கட்கு இடையே சிறிது வௌதச்சம் தெரிந்தது. அந்த வௌதச்சத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான் சின்னையாதேவன். திடீரென்று அவன் கைகளை யாரோ பற்றினார்.

'ஆ ! வந்துவிட்டாயா? உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூட்டம் ஆரம்பித்து விட்டதா?" என்றான் தேவன்.

"ஆம் , தேவரே ! வாரும் போவோம் ! என்ன மன்னரின் அறிக்கையை கேட்.டீரா? எனக்கு மரண தண்டனையாம் ! நீதி வழுவாத மன்னர் வழி வந்தவரல்லவா? சரி போவோமா? "

"அப்பனே ! ஏழைகளுக்காகவே வாழும் உனக்கு மரணதண்டனை கிடைக்கவேண்டியதுதான். இந்நாட்டு எல்லா சிற்றரசர், பேரரசர்கனும் உனக்கு........" ஏதோ சத்தம் கேட்டது, இருவரும் பேச்சை நிறுத்தினர். சற்று நேரம் அமைதி மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான் தேவன்.

"பாண்டிமா நாட்டு எல்லா சிற்றரசர் பேரரசர்களும் உனக்கு மரண தண்டனை தர நீ செய்த குற்றம்தான் என்ன? நீ என்ன அரசியல் சதி செய்கிறாயா? அல்லாமலும் உன் தகப்பனார் அவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகி என்று மன்னரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியய்யா நமது நாட்டை எதிரிக்குக் காட்டிக் கொடுத்தாரா? என்ன? அரசரின் அறிக்கை வெகு அழகு !"

" தேவரே , அரசர் அவ்வாறு நம்பும்படிச் செய்யப்பட்டுள்ளார். என்னைப்பற்றி நீர் கவலைப்படாதீர் ! பொது வாழ்க்கையில் ஈடுபடும் எவர்க்கும்.. எக்காலத்திலும் இத்தகைய கொடுமைகள் விளைவிக்கப்படுவது இயல்பு தான். நேரமாகிறது ! நமது நண்பர்கள் காத்திருப்பார்கள் வாரும் !

அவன் கிளம்பினான். தேவனும் பின் தொடர்ந்தான். இருவரும் மினுக் மினுக்கென்று வௌதச்சம் வந்த அந்த இடத்தை அண்மினர். அவ்விடத்தைச் சுற்றிலும் அடர்ந்த காடு. குடியானவர் பலர் ஆங்கு குழுமியிருந்தனர். வீரர் மறவர்களும் , உடலுரம் வாய்ந்த மறக்குலாப் பெண்டிர் சிலரும் அங்கு காணப்பட்டனர். அத்தனை பேரும் ஏழைகள்.

இவர்களைக் கண்டதும் அங்கு குழுமியிருந்த மக்கள் அன்பு மேலீட்டால் ஆரவாரம் செய்தனர். அவர்களைக் கையமர்த்தி பேசத் தொடங்கினான் இராமச்சந்திரன்.

"அன்பர்களே ! அரசரின் அறிக்கையை கேட்டீர்கன்: உங்களில் எவரேனும் பரிசை விரும்பி என்னைக் காட்டிக் கொடுக்க நினைத்தால் அப்படியே செய்யலாம். அவ்வாறு நீங்கள் செய்வது எனக்கு மகிழ்ச்சியைத் தரும். என்னைக் காட்டிக்கொடுப்பதால்., உங்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கிறதல்லவா?"

"ஐயா ! ஐயா ! நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது உங்களைக் காட்டிக் கொடுத்து நாங்கள் பிழைக்க வேண்டுமா? அப்படிச் சொல்ல வேண்டாம்". இது அங்கு குழுமியிருந்த மக்களின் கூக்குரல்.

மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான் இராமச்சந்திரன்: " நண்பர்களே ! நீங்கள் உங்களை உணர்ந்துகொண்டீர்கள் . இனி உங்களை எந்த மனித சக்கியும் உங்கள் முன்னேற்றத்தை அணையிட்டுத் தடுக்க இயலாது. உங்களுக்குச் சேவை செய்வதே என் வாழ்க்கையின் குறிக்கோள். உங்கள் உணர்ச்சியும், எனக்கு விதிக்கப்படும் தடைகளுமே என்னை இந்த போராட்டப் பாதையில் உந்தித்தள்ளுகின்றன. நமக்கு மாடமாளிகைகள் வேண்டாம், கூடகோபுரங்கள் வேண்டாம். ஆனால் உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் போதிய ஓய்வு நேரமும் வேண்டும். நாம் நம் நாட்டுக்கு - மன்னருக்கு துரோகம் செய்யவில்லை. சதி செய்யவில்லை நமது இந்த இன்றியமையா தேவைகளை நாம் எளிதில் அடைய திட்டம் வகுக்கின்றோம். ஆனால் அரசர் என்னை ஒரு புரட்சிகாரனாய் கருதுகின்றார். அவர் அவ்வாறு கருதுவதும் இயல்புதானே ! ஆம், நான் ஒரு புரட்சிக்காரன்தான். ஆனால் எவருக்கும் எத்தகைய தீங்கும் என் புரட்சியால் ஏற்படாது. என் தந்தையாரையும் ஒரு புரட்சி வீரராய்க் கருதியே அரசர் சிறையிலிட்டார். நமது வீரர்கள் சோழ மன்னரின் வீரர்களாய் நடித்த அவரை விடுவித்தார்கள் அல்லவா? எனவே, அவரைக் காட்டிக் கொடுத்த துரோகி என்றே அரசர் கருதுகின்றார்.

எனவே. என் சகோதரர்களே ! வீர மறக்குலப் பெண்களே ! நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் : வேண்டுகோள் விடுக்கிறேன். எனது..........."

பேச்சு முடியவில்லை. தூரத்தில் குதிரைகளில் காலடிச் சத்தம் கேட்டது, "ஆ! அதோ வீரர்கள் வருகிறார்கள். நாம் இன்று கூட்டத்து இத்தோடு முடிப்போம்" என்றான் சின்னையா தேவன்.

கூட்டம் கலைந்தது. அவரவர் அமைதியாக வந்த வழியே திரும்பினர்.


அத்தியாயம் 5

விருந்தாளி஢

வைகறைப் பொழுது, பகலவன் மெதுவாக எழுந்து கொண்டிருந்தான். இராஜேந்திரன் பிரபுவின் குடும்ப விருந்தாளியான அசோகன் தன் படுக்கையில் உட்கார்ந்தபடியே தன் அறைக்கு வௌதயே தெரிந்த அடிவானத்தை நோக்கினார். எங்கும் பச்சைப்பசேல் என்ற காட்சி. தென்னந் தோப்புகளுக்கு அப்பார் வைகையாற்றின் விரிந்து, பரந்து கிடக்கும் புனர் நீர் உருக்கி வார்த்த வௌ஢ளிக்குழம்பு போல் தெரிந்தது. இந்த மாதிரி காலை நேரங்களை அவர் அந்த கிராமப் பகுதிகளில் அனுபவித்து, எத்தனை மாதங்களோ ஆயின. மீண்டும் இப்போதுதான் அவருக்கு அதை அனுபவிக்க ஏற்ற தருணம் கிடைத்தது.

அந்த அறைக்கதவு திறக்கப்பட்டது. மலர்விழி உள்ளே நுழைந்தாள். அசோகன் அவள் வதனத்துப் பார்த்தபோது அதில் மெல்லிய துன்பத்திரைப் படர்ந்திருந்தது. அத்துண்பம் புதிதாக ஏற்பட்டிருத்தல். வேண்டும், அவன் முதன் முதலாக அவளை நேற்று கண்டபோது , இத்துயரக் குறி அவள் வதனத்தில் இல்லை களங்கமற்றிருந்தது. ஆனால் இப்போது அதை மறைக்க முயலாமலே அச்சிறுமி அவனைப் பார்த்து கைகூப்பினாள்.

சாதாரண உடை : ஒல்லியாய் நடுத்தர உயரத்துடன் தந்தத்தால் கடைந்தெடுத்த மோகினிச் சிலை போல் தோன்றினாள். அவளது அழகிய கருவிழிகளில் அழகொளி ஔதர்ந்தது.

"ஐயா ! இப்போது உங்களுக்கு உடம்பு எப்படி ?" என்றாள் அவள்.

"இப்போது சற்று சுகமே. இன்று சாயங்காலம் நான் இங்கிருந்து போய் விடுவேன். இப்போதே போக என் உடல் நிலை இடமளிக்கவில்லை. உங்கள் எல்லோருக்கும் மிக்க தொந்தரவை தந்து விட்டேன்.

இப்போது நீங்கள் போக வேண்டாம். உங்கள் உடல் நலமாகும் வரையில் நீங்கள் இங்கேயே இருக்கலாம். நீங்கள் வேற்று மனிதராக எண்ணக்கூடாது. உங்கள் வீடாகவே நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் என்ன யோசிக்கிறீர்கள்?" என்றாள் மலர்விழி.

"ஒன்றுமில்லை , குழந்தே ! உன் முகம் ஏன் இவ்வளவு வாட்டமாக இருக்கிறது? அம்மா ஏதும் சொன்னாங்களா?" என்றான் அவன்.

சிறுமி ஏதும் பதில் அளிக்கவில்லை. அவள் கண்களில் நீர் நிறைந்தது. அதற்கிடையில் பணிப்பெண் காலை உணவு கொணர்ந்தாள். அவளைத் தொடர்ந்து சிற்றன்னையும் அங்கு வந்தாள்.

"ஐயா . நீங்கள் கேள்விப்பட்டீங்களா? நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன்,. உம் அவர் இருந்தால் எங்களுக்கு உடனே செய்தி கிடைத்திருக்கும். சந்திரகேசர பிரபுவின் குடும்பத்தாருக்கு இப்படி ஒரு விதி ஏற்பட வேண்டுமென்றிருக்கும் போது அதை யார் தடுக்க முடியும்? இராமச்சந்திரனுக்கு மரண தண்டனையாமே ! வேணும் அவனுக்கு, உம் ! மகா கிறுக்குப் பிடித்தவன், அவனைக் கண்டால் எனக்கு எப்போதுமே பிடிக்காது" என்றாள் சிற்றன்னை.

அசோகன் ஏதோ சொல்ல வாயைத் திறந்தான் அதற்குள் சேகர் அங்கு ஓடி வந்தான்.

"அம்மா ! நம்ம இராமச்சந்திர அத்தான் நீங்கள் தூங்கப்போன பிறகு இங்கே ஓடி இங்கே வந்து,,,,,,"

அவன்பேச்சை முடிக்கவில்லை, மரகவல்லி அம்மாள் உடனே தன் கொடுமையான சொற்களால் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்: "எப்போ ! எப்போ வந்தான்?" என்றாள் ஒருவாறு தன்னை அடக்கிக்கொண்டு.

"ராத்திரியம்மா ! இங்கே வந்து அக்காவிடம் ஏதோ சொல்லி விட்டு உடனேயே போய் விட்டார்" என்றான் சேகர்.

"என்னை துணிவு அவனுக்கு ! இன்றைக்கு ராத்திரி அவன் இங்கே வந்திருந்தானா? எனக்குத் தெரியாதே ! மலர்விழி ! இனி நமக்கு அவனிடம் என்ன பேச்சு ? அதிலும் வயது வந்த பெண் நீ ! பொன்னம்மா ! நீ ஏன் சொல்லவில்லை ?" என்றாள் மரகதவல்லி. பணிப்பெண் பொன்னி சும்மாயிருந்தாள்.

"அம்மா, தெரிவிக்க நேரமில்லை தூங்கப்போன பிறகு உங்களை எழுப்பினால், நீங்கள் கோபித்துக் கொள்ளுவீர்கள், சின்னையா வந்து போனதை நான் வேணுமென்று சொல்லாமல் இல்லை. வந்து,,,,,," என்று மென்று விழுங்கியபடி பதில் அளித்த பொன்னம்மா மேலே எதுவும் கூறுமுன், மரகதவல்லி, "வந்தாவது போயாவது ! நீ வேண்டுமென்றே தான் செய்திருப்பாய் ! நான் படுத்த படுக்கையானதிலிருந்து நீ ரொம்ப துளுத்துப் போயிருக்கிறாய் !" என்று இரைந்தாள்.

"படுத்த படுக்கையாக அப்படி ஒன்றும் இல்லையே !" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள் வேலைக்காரி.

மலர்விழியின் இதயம் பொங்கிப் பொங்கி மேலெழுந்தது. உள்ளிருந்து பாய்ந்து வரும் நீரை அவள் அடக்க முயன்றும், அவள் கண்கள் திறனற்று விட்டன. யாருடைய மார்பிலாவது தலையைப் புதைத்துக் கொண்டு அழவேண்டும் போல் இருந்தது.

மீண்டும் மரகதவல்லி இரைந்தாள், "அவளைப் பிடித்துக் கொடுப்போர்க்குப் பெருந்தொகை பரிசளிக்கப்படுமாம். அப்படி விளம்பரப்படுத்தப்பட்டிருந்தும் அவன் என்ன துணிச்சலாக இங்கே வந்திருக்கிறான் ?

சேகர் இவ்வளவு நேரம் இங்கே தான் நின்று கொண்டிருந்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை. இப்போது வாய் திறந்தான். "அத்தானையாரும் பிடித்துக் கொடுப்பார்களென்று நினைக்கிறாய் அம்மா ! ஒருக்காலும் இல்லை எல்லாரும் அவரைத் தெய்வம் மாதிரி என்று சொல்லுகிறார்கள். உனக்குத் தெரியுமா?

அப்போது தான் அசோகன் வாய் திறந்தான், "அம்மா ! ஏழை மக்கள் அவரைத் தங்களுக்கு உதவி செய்வதற்காகவே வந்த ஒரு தேவனாகவே நினைக்கிறார்களாம். நான் கேள்விப்பட்டது இது. ஆனால் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. ஒருக்கால், நான் இன்றிரவு விழித்திருந்தேனானால்,,,,," என்று ஏதோ கூறப்போனவன் மலர் விழி தன்னை உற்று கவனிக்கிறாள் என்பதையறிந்ததும் சட்ககென்று தன் பேச்சை உடனே நிறுத்திக்கொண்டான். அன்றியும், அச்சிறுமியின் கவலைக்குக் காரணமும் இராமச்சந்திரனது வருகையாகத்தானிருக்கும் என்ற ஐயமும் அவன் உள்ளே எழாமலில்லை. இஃதன்றியும் நேற்று மாலை வரையில் சந்திரசேகரின் உறவினாள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மரகதவல்லி அம்மாளின் இன்றைய திடீர் வெறுப்பிற்குரிய காரணத்தையும் அவனால் ஒருவாறு ஊகித்துணர முடிந்தது. அக்குடும்பத்தார்க்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டதும். அவளுக்கு அவர்கள் பால் உண்டாயிருந்த மதிப்பும் அன்பும் மாறி, வெறுப்பைத் தந்திருக்கிறது. அன்றியும் அரசரது அறிக்கையும் அவளுக்கு அச்சத்தைத் தந்திருக்க வேண்டும். மனித இயல்புதானே !

இவன் சிந்தனைக்கிடையில் மலர்விழி மெதுவாக அங்கிருந்து நழுவினாள். சேகரும் அவளைப் பின்தொடர்ந்தான். பணிப்பெண் இவர்கட்கு முன்னரே சென்று விட்டாள்.

சற்றுநேரம் அமைதி நிலவியது அசோகன் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான்.

"மலர்விழியும் சேகரும் இராமச்சந்திரன் பேரில் மிகவும் பிரியமா இருப்பார்களோ" என்றார் மரகதவல்லியைப் பார்த்து,

"ஆம் அவனும் இவர்கள் பேரில் உயிரையே வைத்திருக்கிறான். இவர்களது அப்பா உயிரோடிருந்த காலத்தில் இவளை அவனுக்குக் கொடுப்பதாகத்தான் ஏற்பாடாகியிருந்தது. இந்த சம்பந்தத்தை அவர் தனக்குக்கிடைக்கக் கூடாத ஒரு உயர்ந்த சம்பந்தமாகக் கருதினார்".

ஏதோ சற்று நேரம் சிந்தணையில் ஆழ்ந்திருந்த அசோகன் விரைந்தெழுந்து நின்று கொண்டான். அம்மா ! போய் வருகிறேன். சேகர், மலர்விழி இருவரிடமும் தெரிவித்து விடுங்கள், மற்றொரு முறை இந்தப் பக்கம் வந்தால் வருகிறேன்' என்றான்.

"என்ன ! இப்போதே போகவா ? நீங்கள் இப்போதே போவீர்கள் என்று நான் நினைக்கவில்லையே ! உடம்பு எப்படி ? என்றாள் சிற்றன்னை.

"எல்லாம் சரியாகி விடும்.. அவசரமாக நான் போக வேண்டியிருக்கிறது. இனி நான் சுணங்க முடியாது" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது மலர்விழி திரும்ப அங்கு வந்தாள்.

இப்போது அவள் குளித்து விட்டு வந்திருந்தாள், அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த அவள் கூந்தலினின்றும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. எவ்விர அணியும் அவள் உடம்பை அலங்கரித்துக் கொண்டிருக்கவில்லை.

மௌனமாகக் கைகூப்பினாள். திரும்பிப்பார்த்த அசோகரின் கண்கட்கு அவள் ஒரு தேவதையாகக் காட்சியளித்தாள், "போய் வருகிறேன், குழந்தாய் ! அம்மா, விடை பெற்றுக் கொள்ளுகிறேன். உங்கள் அன்பை என்றும் மறக்க மாட்டேன். என் நன்றி !" சென்றுவிட்டான், அவன் இவ்வாறு திடீரென்று சென்றுவிடுவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இவைகளை அறியவேண்டும் என்பது சிற்றன்னையின் விலக்கொணா விருப்பம். மலர் விழியும் அவனைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினாள் என்பது உண்மை. இந்த இரண்டு நாள் பழக்கமே அவள் வாழ்வில் எத்துணை மாறுதலை உண்டு பண்ணப் போகிறதென்பதை இப்போது யார் அறிவார்? பெண்களுக்குள்ள இயல்பான அறிவால், இந்த குறுகிய காலப் பழக்கத்திலேயே அக்கனவான் தன்னை விசேஷமான பிரியத்தோடு பார்ப்பதாக அவள் சிறுமியாயினும், அவளுக்குத் தோன்றியது. எனவே அவன் முன்னறிவிப்பின்றிச் சென்றுவிட்டதும், தாயும் மகளும் ஒருவரையொருவர் நோக்கியவாறு நின்றுவிட்டனர்.


அத்தியாயம் 6

நீர்மகளோ

பெருக்கெடுத்து ஓடிவந்த பொருநையாற்றின் பெருவௌ஢ளத்தை அவள் பார்த்துப் பார்த்து வியந்துகொண்டிருந்தாள். நேற்று படுத்து உறங்கிக் கொண்டிருந்த பொன்பதிந்த பொருநை என்னும் திருநதி, இன்று 'ஓ' என்ற இரைச்சலுடன் ஒடியது. நோக்குமிடமெல்லாம் காடும் செடிகளும். கிழக்கே வெகுதூரத்தில் மேகம் கவிழ்ந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலை. சூரியன் மெதுவாக மறைந்துக்கொண்டிருந்தான்! அவளுக்குப் பதினாறு வயதிருக்கும். குன்றுகளின் மீது அவள் வெகுவிரையாக ஓடினாள். வானாளாவிய மலைகளும் கிடுகிடுவென்ற பள்ளத்தாக்குகளும் சின வேங்கையின் கடுஞ்சத்தமும் அவனுக்குப் பாலூட்டி வளர்த்தன. பொருநை வௌ஢ளம் பெருக்கெடுத்தோடி வரும்போது வருகின்ற மறவர்களையும் குறவர்களையும் தவிர அவள் வேறு எந்த மக்களையும் கண்டதில்லை. மரங்களை செதுக்கி படகாக்கி, காடுபடு செல்வத்தையும் மலைபடு செல்வத்தையும் சேமித்து அவர்கள் ஆண்டுக்கு இருமுறை கொணர்ந்து குவித்தார்கள். அந்த மக்களின் தலைவனே கண்ணன்.

மலைநாட்டுக்கு கண்ணன் வந்து பல ஆண்டுகளாகி விட்டது. அவன் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவன்? எந்த ஊர்? என்ற முன் சரித்திர வரலாறு ஒன்றும் யாருக்கும் தெரியாது. அவன் மேற்குத் தொடர்ச்சிக்கு அந்த மலைநாட்டுக்கு வந்த போது இளைஞனாகவே இருந்தான். அப்போது ஏந்திழைக்கு ஒரு வயது.

குறவரும் மருளும் குன்றிலே வாழ வந்த அவன் ஏதோ ஒரு பெருங்கவலையால் பீடிக்கப்பட்டு வெறுப்புத் துறவு கொண்டவனைப்போல் காணப்பட்டான், அவன் கம்பீரத் தோற்றமுடையவன். மலைநாட்டு மக்களை ஆளப்பிறந்தவன்போல் காணப்பட்டான். எஃகு நரம்பும் ஏறுபோல் நடையும் அவன் பிறப்புரிமைகளாக இருந்தன. முன்றாண்டுகளுக்குள்ளேயே அவன் மலை நாட்டுத் தலைவன் ஆனான். புதிய பல சீர்திருத்தங்கள் செய்தான். கூர்விழியும் கடுங்கண்ணியும் மருங்குசேர்த்து மாக்களாகத் திரிந்த ஒரு கூட்டத்தாரை அவன் மக்களாக்கினான். தேன், தந்தம், தினமா, அகில், சந்தனம், புலித்தோல் இவைகளைக் கொணர்ந்து சேர்க்கும் ஒரு பெரிய வாணிப கூட்டமாக்கினான். ஆண்டு முழுதும் அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையிலே உள்ள காடுகளில், அவைகளில் உள்ள செல்வத்தை ஈட்டினார்கள். அவைகளை ஆண்டிற்கு இருமுறை படகுகள் வழியே கொணர்ந்து தலைவனிடம் சேர்ப்பித்து தங்கட்கு வேண்டிய அரிசி, பருப்பு முதலியவைகளைப் பெற்றார்கள், அவர் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் உறந்தையிலும் , காஞ்சியிலும்., மதுரையிலும் , அழகாபுரிச் சந்தையிலும் அப்போதைக்கப்போது நல்ல விலைக்கு மற்றொரு கூட்டத்தாரால் விற்கப்பட்டன. பாண்டியனுக்கும் , சேரனுக்கும், சோழனுக்கும் அழகு வழிந்த பல பொருட்களை கண்ணன் பரிசிலாக வழங்கினான். சிங்கிப்பட்டிக்கு வந்து பதினைந்து ஆண்டுகாளக அக்காட்டை விட்டு அகலாத கண்ணனின் பெயர் வணிகருலகிலேயே தனிப்பெரும் மகிமையுடன் விளங்கிற்று. ஒப்புயர்வில்லாயாரோ ஒரு காட்டரசனாக அவன் விளங்கினான். அழகிய பாண்டியன் அழகேந்திரனைத் தோற்கடித்தது கண்ணன் தந்த பந்நூறு மறவர்களைக் கொண்டே என்ற வதந்தியும் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தது.

ஆள் வலியும், தோள் வலியும் பெற்றிருந்த கண்ணனுக்கு அம்மலைநாட்டு மக்கள் இசைக்காடும் அரவம் போன்று அடங்கினார்கள். அவன் ஆணைக்கு ம.றுப்பு இருந்ததேயில்லை. சிங்கிப்பட்டியின் பெருமையும் செல்வமும் ஓங்க ஓங்க அவனுக்கு ஓய்வே இல்லாது போயிற்று

மலைநாட்டு மக்கள் மலைபடு பொருள்களுடன் திரும்ப வேண்டிய நாள். கந்தன் வரவை அம்மலை நாட்டுப் பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள் எங்கிருந்தோ பாடிய பண்ணொலி அலைகளின் ஊடே மிதந்து வந்தது. "முதல்வன் எங்களுக்கே முருகா ! முத்தும் மணியும் உண்டு முருகா ! ஒரே அமளி, குதூகலம் "அதோ அதோ" என்று சிறுவர் கூவினர். ஒன்றன்பின் ஒன்றாக முப்பது படகுகள் சிங்கிப்பட்டியின் அருகே ஒதுங்கின. அவர்கள் கரையில் குதித்தார்கள். மனைவி மக்களை ஆர்வமுடன் பார்த்தார்கன்: மக்களைத் தழுவினர் அந்த அமளி அடங்குமுன். எல்லோரும் ஒரே வழி ஒரே படகை உற்று நோக்கினார்கள். காதுக்குள் ஒருவரோடு ஒருவர் ஏதோ பேசிக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த பொருள் அங்கே உட்கார்ந்து இருந்த ஒரு வாலிபன், மலையிடப் பிறவா மணியென அவன் அங்கு கண்கள் கக்கின. அவனது கை கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தன, என்றாலும் அவன் நிதானமாக அம்மலைநாட்டு மக்களைப் பார்த்தான். அப்பார்வையில் வெறுப்பு வௌதப்பட்டது திடீரென்று அவன் முகம் மலர்ந்தது. வியப்பும். மகிழ்ச்சியும் அதில் தாண்டவமாடின. அவன் பார்த்த திக்கு நோக்கி, எல்லாக் கண்களும் திரும்பின. உயர்ந்த மரக்கிளை மீது நின்று பறவைகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தாள் கவிதா, எத்தகைய உணர்ச்சியும் காட்டாத தந்தையின் முகத்தையும் பார்த்தவர் திடுக்கிடும் மறவர் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்திராத செல்வி கவிதாவுக்கு படகிலிருந்தவன் கவின் திருமுகம் வியப்பூட்டியது. தேவனோ விஞ்சைக் கிறைவனோ என்றவள் ஐயுற்றாள்."ஏன் அவன் கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கிறான்? அவன் என்ன குற்றஞ் செய்தான்? இந்த வினா அவள் உள்ளத்தில் ஊடுருவிற்று மாசு மறுவற்ற அவன் முகம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. கவிதா கிளையினின்றும் குதித்தாள். மறவர் கூட்டத்திற்கு விரைந்தோடினாள், "அவரை அவிழ்த்து விடுங்கள் ' என்றாள்.

"மேற்கு மலைக்காடுகளிலே அவர் யானை வேட்டையாடினார். அதற்குத் தலைவர் ஆணை மரணதண்டனை"

"அது கொலை குற்றமா?"

"ஆம் , அம்மா ! கொலைகுற்றந்தான், தலைவர் கட்டளை அது"

"அதற்கு மன்னிப்பே இல்லையா ?"

"இல்லை அம்மா ! "

"உங்கள் விருப்பம் அம்மா ! ஆனால், யாரும் அவரோடு பேசக் கூடாதென்பது உங்கள் அப்பாவின் கட்டளை அம்மா !"

"மேற்கு மலைக்காடுகளிலே யானை வேட்டையாடுதல் கொலை குற்றம் என்பதை அவர் அறிவாரா ?"

"எங்களுக்கு தெரியாது, விசாரணையின்போது அது வௌதயாகும். எங்கள் வேலை அவரைப் பிடித்துக் கொண்டு வருதல், மற்றவை தலைவரைச் சேர்ந்தவை"

"ஓகோ" அடர்ந்த மரங்களின் ஊடே அவள் மறைந்து சென்றாள்.


அத்தியாயம் 7

கானகத்து கன்னி

மாலை நேரம் ,மங்கிய வௌதச்சம் எங்கும் பரந்தது. சிறுமி கவிதா உயர்ந்த மரக்கிளையொன்றில் அமர்ந்து ஏதோ சிந்திக்குக் கொண்டிருந்தாள். அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை. அவள் சிந்தனை எங்கெங்கெல்லாமோ சென்றது. இந்தப் பதினாறு ஆண்டு காலமாகத் தன் தந்தையின் அன்பின்றி வேறெதனையும் அறியாள். இல்லாளின்றி ஏகாந்தமாய் வாழ்ந்த அந்த ஏந்தலும் தன் இளம் மகளிடத்து எல்லையற்ற அன்பைச் சொரிந்தான். உலகை வெறுத்து, தன்னை பணியெனக் கருதி வாழ் நாளைக் கடத்தி வரும் தன் தந்தையைப் பற்றி எண்ணினான். அவன் உலக வாழ்வை விரும்பவில்லை : அவளது அன்பையே விரும்பினான், இந்த எண்ணங்கள் மிளிர அவள் கண்கள் நீரைச் சிந்தின.

அவள் தன் தாயை அறியாள், என்றாலும் தனக்கொரு தாய் அருந்திருக்கத் தானே வேண்டும் ? என்று அடிக்கடி எண்ணுவாள், "அப்பா ! என் அம்மா எங்கே? அவள் எப்படியிருப்பாள் ? அவள் பெயரென்ன? அவள் எந்த ஊர் ?" என்றெல்லாம் தந்தையிடம் அடிக்கடி கேட்பாள். அவள் தாயைப்பற்றி அவன் ஏதும் கூறான் அவள் தன் தாயைப்பற்றி வினவுந்தோறும் மனங்கசிந்து கண்ணீர் விட்டு மௌனமானான். அவனது மெத்தனத்தைக் கண்டு அதற்கு மேல் அவள் ஏதுங் கேட்கத் துணியாள்.

அவள் வௌத உலகம் இன்னதென அறியாதவள், என்றாலும் ஒரு அரசிக்குரிய அனைத்தும் அவளுக்குக் கற்பிக்கப்பட்டன. தன் தந்தையிடமே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டாள். அவன் அவளுக்குப் பல கலைகளையும் கற்பித்தான். சமயநூல், பூகோளம் . இலக்கணம் . நம் நாட்டு வீரர். வீரப்பெண்கள் வரலாறு குதிரையேற்றம் வாட்போர் முதலியவைகளை நன்கு கற்பித்தான். அடிக்கடி நல்ல கதைகளை உருக்கமாகச் சொல்லுவான். உயர்ந்த எண்ணங்களை அவளுக்கு ஊட்ட அவன் பாடுபட்டான். சுருங்கச் சொன்னால், அவள் உயர்வாழ்க்கையின் பொருட்டு அவன் தன்னையே தியாகஞ் செய்ய பின்வாங்கவில்லை.

தந்தையைப் பற்றிய இந்த எண்ணங்கள் அவனைக் கட்டு மீறிய உணர்ச்சி வயப்படுத்தின. தன்னை மறந்தாள்: உலகை மறந்தாள். தன் நிலையை மறந்தாள் நன்றாக இருட்டி விட்டது.

திடிரென தன் சிந்தனை உலகினின்றும் விழித்தெழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள், மரத்தை விட்டு கீழே இறங்கினாள்.

இந்த இளஞ்சிறுமியின் அபார சிந்தனைக்கு என்ன தான் காரணம்? கண்ணன் வாலிபத்தைக் கடந்தவன் கிழவன் அல்லனாயினும் இளைஞனல்லன், அதிலும் இளஞ்சிறுமி, ஒரு கன்னிப்பெண்ணின் மன ஓட்டத்தை அவன் எங்ஙனம் புரிந்து கொள்ள முடியும்? அவளை வாழ்விற்குப் பயிற்றுங்கலையைத்தான் அவன் எங்ஙனம் அறிவான்? அக்கலையை ஒரு அன்னைதான் அறிவாள் பருவ மலர்ச்சி உயிரினங்கட்கு இயல்பாகவே உண்டாதல் போலவே, இளமைக்குரிய அன்பும் ஆசைகளும் அவள் மனத்தில் அரும்பின, அந்த அரும்புகளைத் தன் தந்தையின் ஆட்களால் சிறை பிடிக்கப்பட்டு, படகிலே திடீரென்று வந்து தோன்றிய அந்த வாலிபனின் அன்புப் பார்வை மலர்த்தியது. என்றாலும், பருவத்தின் அழகு இன்னும் தளிர்க்கவில்லை. எனவே அவனிடத்து திடீரெனத் தோன்றிய அந்த அன்பை எல்லா மக்களிடத்தும் தோன்றும் ஒரு சாதாரண கருணையென்றே கருதினாள். தன் தந்தையின் துறவின் வறட்சி அவளுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் அவனை அவள் தெய்வமாகப் போற்றினாள், எனவே தன் தந்தையின் அன்பிற்கெதிராக ஏற்படும் எதனையும் அவள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. உலகம் இன்னதென்றறியாத, தனிக் காட்டிலிருந்து வளர்ந்து அவளுக்குக் காதல் என்றால் என்னவென்றே தெரியாது. அதை அவள் அறியக்கூடாதென்பதே கண்ணனது ஆசை. அதற்கான பொறுப்பு உணர்ச்சியுடனேயே அவளை வளர்த்தான். என்றாலும் இயற்கையின் கனிந்த கூப்பாட்டை யாரால் மறுக்க முடியும் ? எனவே, அவள் மனம் ஒரு தீர்மானத்திற்கு வந்தது. அந்த இளஞ்சிறுமியின் சிந்தனையின் முடிவு அஃது , அந்த முடிவுதான் என்ன?


அத்தியாயம் 8

மனப்போர்஢

எங்கும் கும்மிருட்டு, மப்பும் மந்தாரமுமாக இருந்தது. காற்று, புயல் மாதிரி வீசி, மரஞ் செடிகளைப் பேயாடச் செய்தது. செல்வி கவிதா படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டுகொண்டிருந்தாள். அன்று மாலை ஒரு முடிவுக்கு வந்திருந்த அவள் சிந்஢தனை மீண்டும் சுழன்றது. அவள் சிந்தனை என்ன?

'ஆம், அந்த வாலிபனை சிறை மீட்க இது தகுந்த நேரம். நரியின் ஊளையும், புலியின் உறுமுதலும், சிங்கத்தின் கர்ஜனையும். பேய்க்காற்றின் பேரரவமும் தவிர வேறெந்த சந்தடியுமில்லை. இப்போது அவர் தப்பித்துச் செல்லுவது மிக எளிது.

என்ன மாசு மறுவற்ற முகம் ! ஆம், அவர் கொல்லப்படக் கூடாது. மேற்கு மலைக்காடுகளிலே யானை வேட்டையாடுதல் மரண தண்டனைக்குரிய கொடிய குற்றம் என்பதை அவர் தெரிந்திருக்க மாட்டார். அறியாமற் செய்த குற்றத்திற்கு மரண தண்டனையா? இதோ அவரை விடுவிக்கிறேன். அதுவுமில்லாமல், எந்த அரச நீதியிலும் இந்த மரண தண்டனை இல்லாதொழியட்டும்.

எழுந்து உட்காருகிறாள். மீண்டும் சிந்தனை 'எந்தைக்கு துரோகம் நினைப்பதா ? ஆ! அதை நினைக்கும் போதே என்னை மனசாட்சி வாள்போல் அறுக்கிறதே ! என் உடல் நடுங்குகிறதே ! அந்த இளைஞன் தானாகவே தப்பித்துக் கொண்டு ஓடினாலும், இளைஞனைப் பிடித்துத் தருவது எனது கடமை. அப்படியிருக்க, நான்-நானே அவனை விடுவித்துவிடுவதா? நான் எந்தையின் உப்பை தின்கிறேன். ஒருக்காலும் அவர் விருப்பத்திற்கு மாறாக நடக்கமாட்டேன். அதிலும் , அவர் உண்மையாளர் : மகாத்மா : தன்னலமற்ற தியாகி. அவர் எத்தனை ஏழைகட்கு உபகாரியிருக்கிறார்? தனது ஆற்றலால் - திறமையால் , மிகக் கீழ் நிலையில் வாழ்ந்த ஒரு கூட்டத்தினரை அவர் மக்களாக்கினார். ஆயிரக்கணக்கான ஏழைகள் அவரையண்டி மகிழ்வுடன் வாழ்கின்றனர். அன்பும்., அறமும், இரக்கமும் , தயையும் தூய வாழ்வுமே அவர். சீ ! என்ன நினைத்தேன் ! என் கடமை என்ன? அவருக்கு கீழ்படிவது தான். அதிலும் நான் சிறுமி. உலகானுபவம் எனக்கென்ன தெரியும் ? ஒருவரைப் பார்த்ததும் அவர் நல்லவர் . தீயவர் என்று விளங்கிக்கொள்ளும் ஆற்றல் தான் எனக்கேது?

மீண்டும் படுக்கையிற் படுக்கிறாள் . அவள் சிந்தனைகளை ஒதுக்கித்தள்ளி தூங்க முயற்சிக்கிறாள். கருணை வடிவான அவள் குழந்தையுள்ளம் மீண்டும் புலட்சி செய்கின்றது.

'ஆ ! என்ன அழகான கண்கள் ! குற்றமற்ற கண்கள் நானே அவரை விடுவிக்காமற் போனாலும், அந்த வாலிபனுக்காக எந்தையிடம் மன்றாடுவேன். அவனின் மீட்சி வேண்டி என் சக்தி முழுதும் உபயோகிப்பேன் , அப்பா என்னருமை அப்பா! உன் மகத்தான உள்ளம் அவனை எளிதில் மன்னித்து விடும் !

ஏதோ ஒரு முடிவிற்கு வந்த கவிதா எழுந்து வௌதயே எட்டிப்பார்த்தாள். எங்கும் பேரிருள். அவளுக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது. வானளாவிய மலைகளும். அதன் பள்ளத்தாக்குகளும், நோக்குமிடமெல்லாம் காட்சியளித்த காடுஞ் செடிகளும், சின வேங்கையின் கடுங்கர்ஜனையும் அவளுக்கு அச்சத்தைத் தரவில்லை. எனவே, வௌதயே வந்தாள். சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து யாரும் தன்னைப் பின் தொடரவில்லை யென்பதைத் தெரிந்து கொண்டாள். மலைச்சாரலை நோக்கி, இருட்டினூடே அவள் விரைந்து சென்றாள்.


அத்தியாயம் 9

சிறையில் வாலிபன்

அந்த வாலிபன் தூங்கவில்லை : அந்த மலைக்குகையின் உள்ளே அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தான். அவன் கோபம் உள்ளத்தின் உள் உச்ச நிலையில் இருந்தது. கூண்டில் அடைபட்ட சிங்கம் போன்று கர்ச்சித்தான். அம்மலை நாட்டு மக்களையே வெறுத்தான். ஏன் ? உலகையே வெறுத்தான். எனினும் நிதானமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். சிந்தித்துச் செயலாற்றலே அவன் பிறப்புரிமை.

அவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். அவனது மனோகர வதனம் பிறர் தம் கண்ணையும் . கருத்தையும் கவரத்தக்கது. மங்கிய வௌதச்சம் அந்தக் குகை முற்றும் பரவியிருந்தது. சிறிய விளக்கொன்றிலிருந்து அந்த வௌதச்சம் வந்து கொண்டிருந்தது.

'கிளிக்' என்ற மிக மெல்லிய சப்தம் தௌதவாகக் கேட்டது. இளைஞன் நின்றான். உற்று கவனித்தான் ஏதோ ஒரு பாறையை ஆம், நகர்த்தும் சப்தம் அது , சில வினாடிகட்கெல்லாம் ஒரு சிறுமி அங்குத் தோன்றினாள்.

நடு நிசி : பயங்கரமான குகை ; சிறுமியின் கண்கள் அஞ்சாமையையும் ஆண்மையையுங் கக்கின. அந்த மங்கிய வௌதச்சத்தில் அவளை உற்றுப்பார்த்த அந்த வாலிபன், வியப்பும், திகைப்பும் ஒருங்கே அடைந்தவனாய் படியே அசைவற்று நின்று விட்டான்.

வானுலகத்திலிருந்து பூவுலகிற்கு நேரே இறங்கி வந்த தெய்வ கன்னியைப் போன்று காட்சியளித்த அச்சிறுமி தான் சிறைவாய்ப்பட்டுப் படகிலே கொண்டு வரப்பட்ட போது மரக்கிளையொன்றில் அமர்ந்திருந்தவளே என்ற உண்மை அவனை வியப்புக்கடலுள் ஆழ்த்தியது. எனவே அவன் பேசாமல் அவளது எழிலுருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மெல்லிய கொடிபோன்ற ஒல்லியான உடம்பு . தேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்ட மாக்கற் சிலைபோல் விளங்கினாள். பிறைபோன்ற விசால நுதல். அதன் பேரழகை வௌதயே வீசும் பேய்க்காற்றினால் அலைக்கழிக்கப்பட்டு. அங்குமிங்கும் சிதறித் தொங்கும் அவள் முன் கூந்தல் அரைவாசி மறைத்தது.

சில வினாடிகள் மௌனம். பிறகு சிறுமியே வாய்திறந்தாள் . "ஐயா , நான் உங்களைப் பார்த்துப்போகவே வந்தேன் . என்னால் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா ?'

"பெண்ணே ! நீ யார் ? இந்த நாள்ளிரவில் இவ்விடம் எப்படி வந்தாய்? முன்பின்னறியாத என்னிடம் உனக்கு இவ்வளவு கருணை ஏற்பட என்ன காரணம் ? உன் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா" என்றான் இளவல்.

சிறுமி சிறுநகை பூத்தாள். "நான் இங்குள்ளவன் தான். அதனால் , இவ்விடத்தை நான் அறிந்து கொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. முன்பின் தெரியாத உங்களிடம் தனிப்பட்ட அன்பு ஒன்றுமில்லை. உலகத்தில் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசை செய்துதான் வாழ வேண்டுமென்று எப்போதும் அப்பா சொல்லிக் கொண்டேயிருப்பார். அதனால் உங்களுக்கு ஏதேனும் உதவிவேண்டுமா ? என்று கேட்டுப்போகவே வந்தேன் "

"இம்மலைக் காட்டில் வாழ்ந்தும், சிறுமியாக இருந்தும் நன்றாக பேசக்கற்றிருக்கிறாய். ஆனால் உன் அனுதாபம் எல்லை மீறி விட்டது. இம்மாதிரி கருணை, இரக்கம் எல்லாம் நீ அன்பு காட்டுபவருடைய ஆபத்துக்கு மேல் பெரிய ஆபத்துக்குள்ளே உன்னை உள்ளாக்கிவிடும்" என்றான் இளைஞன்.

சிறுமி மீண்டும் நகைத்தாள். "நீங்கள் சொல்லுவது ஒரு வேளை மற்றவர்களுக்குச் சரியாக தோன்றலாம். ஆனால் இந்தக் காட்டில் எனக்கு யாரும் எத்தகைய தீங்கும் செய்யமுடியாது . எனக்குத் தெரியும் அதனாலேயே அச்சமற்று இங்கே........."

இளைஞன் இடைமறித்தான் . "புலி, சிங்கம், கரடி கூடவா? அது போகட்டும் , நீயே வயது வந்த பெண், நானோ நீ முன் பின் பார்த்தறியாத இளைஞன். ஒருக்கால் நான் தீயவனாகவுமிருக்கலாம் ! அப்படியிருந்தால்......."

இது மாதிரி சொற்களை அவள் இது காறும் எவரிடமும் கண்டதில்லை. ஆண்பெண் என்ற வேற்றுமை இன்றி வளர்க்கப்பெற்றவள். இன வேறுபாடே சிறுமியின் உள்ளத்தில் இடம் பெறலாகாதென்பது அவளது தகப்பனின் நீங்காத ஆசை. எனவே அவன் எல்லா மக்களிடமும் கூச்சமின்றி இதுகாறும் பழகி வந்தாள். எனவே இந்த வாலிபனது மொழிகள் , அவள் இது வரை சிந்திக்காத ஓர் உலகிற்கு வழிகாட்டின. அவள் இன்னதென விளங்கிக் கொள்ள முடியாத நாணம் மீதூர தலைகவிழ்ந்தாள். அவள் கன்னங்கள் கொவ்வையெனச் சிவந்தன.

"நான் இது மாதிரி பேசியதற்காக வருத்தப்படுகிறாயா நங்காய் ? தப்பிதமானால் மன்னித்து விடு " என்றான் வாலிபன் மீண்டும்.

"இல்லையே, நீங்கள் என்ன தவறாகச் சொல்லி விட்டீர்கள் ! நீங்கள் சொல்வது சரிதான் . ஆனால் என் விஷயம் தனி. வேறு புலி, கரடி முதலிய மிருகங்கள் என் விளையாட்டுத் தோழர்கள். நீங்கள் எனக்குத் தீங்கு ஏதும் செய்ய மாட்டீர்களென்பதை நான் நன்கறிவேன் " என்றாள் அச்சிறுமி.

வியப்போடு அவளை உற்று நோக்கினான் இளவல் கானகத்து மோகினியைப்பற்றிய பல்வேறு பாட்டிக் கதைகள் அவன் நினைவில் எழுந்தன. இத்துணை இளஞ்சிறுமி மிருக வர்க்கத்தையோ, மனித வர்க்கத்தையோ இலட்சியஞ் செய்யவில்லை. அச்சமற்ற இம்மலைக்கன்னி யார்?

அவனது சிந்தனையை விளங்கிக் கொண்டாற்போல அவள் கலகலவென்று நகைத்தாள். அவள் குரல் மணியோசை போன்று கணிரென அக்குகையினூடே எதிரொலித்தது. அவள் குரலைக் கேட்ட இளைஞன் அப்படியே மலைத்து நின்று விட்டான். வியப்பும் , திகிலும் பிரமிப்பும்., பீதியுங் கொண்டவனாய் மீண்டும் அவளைப் பார்த்தான்.

"ஐயா, நான் காட்டிலே திரியும் மோகினிப் பேய் என நினைத்து பயந்து விட்டீர்கள் போல் இருக்கிறது. அது போகட்டும், உண்மையைப் சொல்லுங்கள் மேற்கு மலைக்காடுகளிலே யானை நீங்கள் அறிவீர்களா ?" என்றாள் அவள்.

'நான் அறிவது இருக்கட்டும் . மேற்கு மலைக்காடுகளிலே நான் யானை வேட்டையாட வந்தேன் என்று கூறுவதே பெரிய அபாண்டமாயிற்றே' என்றான் அந்த இளைஞன்.

"நீங்கள் யானை வேட்டையாடியதாகக் கூறி உங்களைக் கைது செய்திருக்கிறார்களே அவர்கள் ! ஏன் ?" என்றாள் அவள்.

"அது அவர்களைத்தான் கேட்க வேண்டும். இது அபாண்டம் மட்டுமல்ல ; வெண்டுமென்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்கிறேன்" என்றான் கோபம் கொந்தளிக்க.

"உண்மைதானா ? நீங்கள் அதைச் செய்யவில்லையா? என்னிடம் சொல்லுங்களேன் " என்று பதைபதைத்தாள் கவிதா.

"பெண்ணே ! சட்டம் . ஒழுக்கம் எல்லாம் மெலியவர்களுக்குத்தானா ? வலியவர்களுக்கு இல்லையா? 'வலியவர் மெலிவு செய்தால்,. புகழ் அன்றி வசையுமுண்டோ ' என்று வாலியின் சார்பாக உலக மக்களை நோக்கி வினாவிடுக்கிறான் கம்பன். அத்தகைய நீதியைத்தான் இத்தனிக்காட்டு மன்னன் வழங்குகிறான்?" என்றான் கோபத்தோடு.

தன் தந்தையைப்பற்றி அவன் அவ்வாறு பேசுவதை அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இவ்வளவு நேரம் வதனத்திலே விளையாடிய இளநகை. குறுநகை எல்லாம் எங்கோ பறந்தோடி விட்டன.

"ஐயா,. அறியாமல் பிழை செய்யாதீர்கள். இம்மலைநாட்டு மன்னன்: மகாத்மா புண்ணியாத்மா, நீங்கள் இவ்விடத்திற்குப் புதியவர். அதனால் நீங்கள் அறியாமல் பேசியவைகளை மன்னிக்கிறேன். அதிலும் மாசு மறுவற்ற உங்கள் கண்கள் குற்றமுடையவன அல்ல. என்னவோ உங்கள் பேரில் எனக்கு அனுதாபம் ஏற்படுகிறது. அதனால் விட்டுச் செல்கிறேன். மற்றொருவராயிருந்தால் நீங்கள் நிற்குமிடத்திலேயே வெட்டப்பட்டு தரையில் உங்கள் தலை உருண்டோ டச் செய்வேன்" அவள் சினங் கொண்ட வேங்கை போல் சீறினாள்.

மீண்டும் கேலி நிறைந்த குரலில் அவன் சொன்னான்: 'இது மலை நாட்டு மங்கையின் நீதி போலும்'.

"அப்பாவை பற்றி உங்களுக்குத் தெரியாது. அவர் இக்காட்டில் விழுந்து கிடந்தாலும் அவரைப்பற்றிய புகழ் எங்கும் பரவியிருக்கிறது. சிறந்த வீரர்களை எல்லாம் அவரை அடிபணிந்து வணங்குகிறார்கள். சரி . அவர் பெருமையைப்பற்றி உங்களிடம் நான் எதற்காகச் செல்ல வேண்டும்? நாளை விசாரணை நடக்கும். அப்போது நீங்கள் குற்றமற்றவர் என்று வௌதப்பட்டாள் விடுதலை அடைவீர்கள். நேரமாயிற்று. நான் போக வேண்டும்.

அவள் கருவிழிகள் அவனுக்கு வேண்டிய யாரையோ நினைப்பூட்டின. அன்றியும். அவன் முதன் முதலாக அவளைக் கண்டபோதே. கண்டவர் திடுக்கிடும் மறவர் இடையே வதியும் இப்பெண், நீர்மகளோ, நிலமகளோ, வான் மகளோ அன்றி இப்பூவுலக மாதோ என ஐயுற்றான். இப்போது இந்நள்ளிரவிலே, பயங்கரமான காட்டிடையே இருக்கும் இக்குகையிலே கண்டபோது அவனது வியப்பு பன்மடங்காகப் பெருகியது. ஆனால் இப்போது அவள் வார்த்தைகள் அவள் யார் என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டன. ஆம் . இவள் மலைநாட்டு மன்னன் மகளே ! எனினும். , அவளாகவே தனக்கு உதவி செய்ய முன்வந்ததையெண்ணி, வியப்பும், மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்தன். எனவே. அவன் அன்பு நிறைந்த குரலில். "நேரமாகி விட்டதா? இப்போதே போக வேண்டுமா ? இது வரை நீங்கள் பேசிக்கொண்டிருந்ததும்.........."

"என்ன நீங்கள் ? திடீர் மரியாதையா?" என்றாள் அவள்.

"நீங்கள் யாரென்பதை எனக்கு அறிவிக்கவில்லையே ! நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? நீங்கள் வருத்தப்படும்படி பேசி விட்டேனா? என்னை மன்னிப்பீர்களா?"

"என் பெருக்கு ஏன் ஆசைப்படுகிறீர்கள் ? நீங்களும் நானும் என்னும் உறவுக்கு மேல் பெயர்கள் பெரிதா ? "

திடீரென இருவரும் ஏக காலத்தில் திடுக்கிட்டார்கள். பக்கத்தில் யாரோ ஒரு பெருமூச்சு விட்டாற்போன்ற சத்தம் மிகத் தௌதவாகக் கேட்டது.

அதற்கு மேல் அவள் நின்று கொண்டிருக்கவில்லை. வந்த வழியே திரும்பினாள். சற்று நேரம் அசைவற்று நின்ற அவ்விளைஞன். அவளைத் தொடர்ந்தோடினான். பாதை வளைந்து வளைந்து சென்றது. அந்தக்குகை பகற் காலத்திலேயே மிக இருட்டாக இருந்தது. நடுநிசி: வௌதயே புயல் மழை: பேய்க்காற்று, அவன் அவள் சென்ற வழியை அறிய முடியவில்லை. 'உங்கள் பெயரைச் சொல்லி விட்டுப் போங்கள்" என்று அவன் கத்தினான். அச்சத்தம் அக்குகையுனூடே எதிரொலித்து, தேய்ந்தொழிந்தது. அதை அவள் கேட்டுக்கொண்டிருக்கவில்லை.

அப்படியே திகைத்து நின்றான் அவன். சிந்தனை அலை அலையாக எழுந்தது. உடலதிர்ச்சி, மனோவதிர்ச்சியால் தளர்வடைந்த அவன், பொத்தென்று படுக்கையில் சென்று விழ்ந்தான். வௌதயே வானம் பொத்துக்கொண்டாற் போல மழை கொட்டியது.


அத்தியாயம் 10

கண்ணனது மனக் கலக்கம்

அந்த மலைக்குகையிலே கவிதாவையும் . அந்த வாலிபனையும் ஒரே நேரத்தில் திடுக்கிட வைத்த அந்தப் பெருமூச்சு வேறு யாருடையதுமல்ல. கண்ணனுடையதே அந்த நள்ளிரவிலே. அக்குகையின் உள்ளே எவரும் அச்சமின்றி உட்புகமுடியாதென்பதைக் கவிதா மிகத் தௌதவாய் உணர்ந்திருந்தாள். எனவே அவள் உள்ளுணர்ச்சி ஏதோ கூற ஆற்றாளாகி, அவள் தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தோடினாள்.

கண்ணன் அங்கே எப்படி வந்தான்? இராக்காலங்களில் அவனுக்குத் தூக்கம் மிககுறைவு. அடிக்கடி எதைப்பற்றியேனும் சிந்திப்பான். தனது முந்தைய வாழ்க்கையைப்பற்றி நினைப்பான். அவன் கண்கள் கண்ணீரைப் பொல பொலவென உதிர்க்கும்.

கவிதா பருவமடைந்ததும் அவன் கவலைகள் அதிகமாயின. பருவமலர்ச்சி அவளுக்குப் புத்தழகைத் தந்தது. இந்தப் பருவ மலரின் அழகையும் வனப்பையுங் கண்டு கண்ணன் அஞ்சினான். இந்த உலக வாழ்க்கையிற் பாசத்துடன் தான் காட்டும் - நேசிக்கும் ஒரே பொருள் கவிதா. அவளுடனிப்பதே அவனுக்குப் பேரின்பம், தனது துன்ப வாழ்க்கையையே அவளால் மறந்திருந்தான். அவளோ அவனுக்கு எல்லாம் தாய், தகப்பன், சகோதர, சகோதரி, நண்பர்கள், உற்றார் , உறவினர், அனைத்தும் அவளே தான். இந்தப் பிறர் நலம் விரும்பி இந்த ஒன்றில் மட்டும் தன்னலமோம்பினான். கவிதாவை அச்சிறுமியை, அவன் எத்துணை ஆழமாக நேசிக்கிறானோ, அவ்வாறே அவளது நேசம் அனைத்தும் அவனிடமேயிருக்க விரும்பினான். நீண்ட நாட்களாகத் துறவியின் வளர்ச்சியில் ஊறிய அவன் உள்ளம், பருவத்தின் இனிமையை-வசந்தத்தை, உணர்ச்சியை மறந்து விட்டதோ ! அவனால் மறக்க முடியாது. மறக்காததினால் தான், அந்த பருவ நேசம் அவளைப் பாதிக்காதவாறு மிகப் பொறுப்புணர்ச்சியோடு கண்ணைப்போல காத்தான்.

அன்றிரவு கண்ணன் தன் படுக்கையிற் படுத்தான், நித்திரை வரவில்லை: மழை நின்றிருந்தது. எழுந்து சற்று வௌதயே உலாவி வந்தால், உடல் அதிர்ச்சியுற்று உறக்கம் வரும் என்றெண்ணி வௌதயே வந்தான். அப்போது தான் கவிதா தன்னை நன்றாக போர்த்திக் கொண்டு மலைச்சாரலை நோக்கி விரைந்து சென்றாள். அந்தக் கும்மிருட்டிலே அவளை அடையாளந் தெரிந்து கொள்ள முடியாது கண்ணன் அவளைப் பின் தொடர்ந்தான். அவள் மலைச்சாரலை அடைந்து, அந்த அந்நிய வாலிபன் சிறைப்பட்டிருக்கும் குகையின் வாயிலில் அமுத்திருக்கும் பாறையை நகர்த்தி அதனுட் புகுந்தாள். தன் ஆணையில், தன் சட்டத்தைப் புறக்கணித்து. இத்தனைத் துணிகரமாக அக்குகையினுட் புகுந்த அவ்வுருவம் யார் என அறிய அவாவிய கண்ணன் அக்குகையினுள் தானும் நுழைந்தான். அக்குகையின் இருட்டைப் போக்க உதவிய அம்மங்கிய விளக்கொளியில் அவ்வுருவத்தைக் கவனித்த கண்ணன் வியப்பே வடிவமாக மாறிவிட்டான். ஏதுமே அறியாத தன் இளம் மகளுக்கு, இந்த முன்னறியா அந்நிய வாலிபரின் சிறைக்கூடத்தில் என்ன வேலை? அதுவும் இந்த நள்ளிரவிலே !

அவன் கால்கள் அசைய மறுத்தன. எழுந்து நிற்கச் சத்தியற்று அப்படியே இருளில் மறைந்து கொண்டான். அந்நிலையில், அவ்விருவருக்கும் நிகழ்ந்த பேச்சி வார்த்தைகள் மிகத் தௌதவாக அவன் காதில் விழுந்தன. அச்சமயம் அவன் தன் உள்ளத்தெழுந்த உணர்ச்சிகளை விவரிப்பது சாத்தியமன்று.

அவன் அறிவு குழப்பியது. அவனது சென்ற கால வாழ்க்கை முற்றும் அப்படியே அகக்கண் முன்பு காட்சி கொடுக்கவாரம்பித்தது, கடமையினின்னும் தான் வழுவாதிருக்க வேண்டி எத்தனைக் கசப்பான தியாகங்களைச் செய்ய வேண்டி வந்தது? தான் வாழ்க்கையிலேயே காதலித்த அந்த ஒரே பெண்மணியை. அவள் மாட்டு அவன் கொண்டிருந்த அந்த உயர்ந்த தெய்வீகப் பேரன்பையே உதறித்தள்ள வேண்டியிருந்தது. அந்தக்கொடிய உண்மை. அவன் இதயத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தது. ஒரு நீண்ட பெருமூச்சு அவனையும் மீறி வௌதப்பட்டது. அங்ஙனமாயின் தான் வளர்த்த இந்தச் சிறுமி ? அவனது சிரம் சுழன்றது.

ஒருகாலும் கவிதா கடமையினின்றும் வழுவாள், என்றாலும், இந்த நள்ளிரவிலே, இத்துணை துணிச்சலாக முன்பின்னறியா இந்த அந்நிய ஆடவணை எதற்காகச் சந்திக்க வந்தாள்? அவனிடத்து இத்துணை கருணை ஏற்பட என்ன காரணம்?

அவன் இருட்டிலே தடுமாறினான், சிந்தனை குழம்பியது. குழம்பித் தானே தௌததல் வேண்டும்? முன்பின் அறியா தன்னிடத்து அவள் அத்துணை அன்பு காட்ட அன்று என்ன காரணமிருந்தது? இந்த உண்மை, அவன் தடுமாறிய இருளிலே பளிச்சென்று ஔத வீசியது, தன் நேசமனைத்திற்கும் உரித்தான இந்தச் சிறுமி தன் அன்புப் பிடியினின்றும் நழுவி விடுவாளா? அவன் கால்கள் நிலை கொள்ளாமல் ஆடின. அவன் அதற்கு மேல் ஒரு வினாடி கூட அங்கு நிற்கவில்லை வந்த வழியே திரும்பினான்.


அத்தியாயம் 11

தந்தையும் மகளும்

படுக்கையிற் சோர்ந்து கிடந்தான் கண்ணன். அவன் எவ்வளவு நேரம் கிடந்தானோ? அவன் கண்களினின்றும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஒரு மென்மையான கை அவன் உடம்பிலே சில்லெனப்பட்டதும் கண் விழித்தான். எதிரே, தான் எவள் பொருட்டு இந்த உலகிலே உயிர் வாழ்கிறானோ? அவள் நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் கண்ணீரால் மறைப்புண்டிருந்தான. அவள் உடை நனைந்திருந்தது.

அவன் மிருதுவாக அவளைப்பார்த்து , 'அப்பா ! என் அருமை அப்பா ! குளிர் நடுக்குகிறதே ! நான் இங்கே கணப்பு மூட்டுகிறேன். ஏன் இப்படிப் படுத்திருக்கிறாய்? எழுந்திரு"

" வேண்டாம் குழந்தாய். வாழ்வில் எத்தனையோ துயர்களைப் பொறுத்திருக்கிறேன். இக்குளிர் எனக்கு ஒரு பொருட்டா?" மீண்டும் மகளை உற்றுப்பார்த்தான். "குழந்தே உன் உடை நனைந்திருக்கிறது. உடையை மாற்றிக் கொண்டு வா" என்றான் அவன்.

"அப்பா உன் உடையும் நனைந்திருக்கிறது, நீயும் மாற்றிக்கொள். நீ அழுது கொண்டுதானே இருந்தாய்? என்னிடம் உண்மையைச் சொல், அப்பா ! " என்றான் கவிதா.

"நீ இந்நேரம் தூங்கவில்லையா? உன் கைகள் ஏன் இவ்வளவு சில்லிட்டிருக்கின்றன. எங்கேணும் வௌதயே சென்றாயா?"

கண்ணன் இதைச் சொல்லி வாய் மூடவில்லை. திடீரென அவன் கால்களில் விழுந்தாள் செல்வி கவிதா அவன் கால்கள் அவள் கண்ணீரால் நனைப்புண்டன. அவள் அவன் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு "என்னை மன்னித்து விடு அப்பா ! "அறியாமற் பிழை செய்தேன். நான் செய்தது தப்பு தான். அந்தக் குகையில் பெருமூச்சு விட்டது நீதானே ! " என்றாள் தேம்பிக்கொண்டே.

கண்ணன் ஒன்றுமே பேசாது மௌனமாக இருந்தான். சிந்தனைக்கோடுகள் அவன் நெற்றியிலே தெரிந்தன. அவள் நெற்றியிலே தெரிந்தன. அவள் தலையை வருடிக்கொண்டே அவன் சொன்னான் : "குழந்தே ! வெகுநேரமாகி விட்டது காலையில் போசிக்கொள்ளுவோம். நீ உன் அறையில் போய்த் தூங்கு. நான் சற்றுத் தனியே இருக்கிறேன். என்றான் அவன்.

"நான் போறேன், அப்பா ! நீ என்னைப் பின் தொடர்ந்தா வந்தாய்? நான் அந்தக் குகைக்குச் சென்றது உனக்குப் பிடிக்காவிட்டால், அப்போதே என்னை ஏன் தடுக்காதிருந்தாய்?" என்றாள் கவிதா.

"நான் உன்னைப் பின்தொடர்ந்து வரவில்லையே ! நான்.............."

தன் தந்தையின் வாயினின்றும் ஒரு பொய் கூட வராதென்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே வியப்போடு "அப்படியானால் குகையின் உள்ளே வந்தது யார்? யாரோ பெரு மூச்சி விட்டார்களே , அது யாராயிருக்கும்? "

அவள் பேச்சை முடிக்கவில்லை அவன் சொன்னான் : "குகையிலே நீ கேட்ட பெருமூச்சு என்னுடையது தான்: அம்மா ! ஆனால், நான் உன்னைப் பின்தொடரவில்லை, நான் வளர்த்த எனது குழந்தை என்க்குத் தெரியாமல் இவ்வாறு செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் தூக்கமின்றி வௌதயே சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது நன்றாகப் போர்த்திக் கொண்டிருந்த ஒரு உருவம், மலைச்சாரலை நோக்கிப் போவதைக் கண்டேன். எனது கட்டளையை மீறி அவ்வாறு செல்வது யார் என்று அறியும் பொருட்டுப் பின் தொடர்ந்தேன். ஆனால் அந்த உருவம் நீ என்று அறிந்ததும், அந்தக் குகையை விட்டும் திரும்பக் கூட என்னால் முடியவில்லை. அப்படியே அயர்ந்து உட்கார்ந்து விட்டேன்.

அவன் மிக அமைதியாகச் சொன்னான். என்றாலும் அவன் குரலில் தோய்ந்திருந்த துன்பத்தை அவள் மிக எளிதாக உணர்ந்தாள். எனவே குரல் தழுதழுக்க அவனை பார்த்து, "அப்பா ! எல்லாரையும் சகோதரர்களைப் போலவே நேசிக்க வேண்டுமென்று நீ தானே அடிக்கடி என்னிடம் சொன்னாய். அதனால் ஆதரவற்ற அந்த இளைஞனைப் பார்த்து, ஏதும் உதவி தேவையா என்று கேட்க வேண்டுமென்று என் மனந்துடித்தது. அதனால் தான் அங்குச் சென்றேன். உண்மையைச் சொல். இதற்காகவா அழுது கொண்டிருந்தாய்?'என வினாவினாள் கவிதா,

"உலகம் துக்கம் நிறைந்தது தானே! இந்த உலகத்தில் மகிழ்ச்சி ஏது?" என்றான் கண்ணன்.

"நான் சந்தோஷமாயில்லையா? அப்பா ! நீ ஏன் எப்போதும் துக்கமாகவேயிருக்கிறாய்" என்று வினாவினாள்.

"நீ குழந்தை, உலகம் இன்னதென அறியமாட்டாய் இப்போது நான் இல்லையென்று வைத்துக்கொள். அப்படி ஒன்று ஏற்பட்டால் கூட அந்தத் துயரத்தையும் நீ எளிதில் மறந்து விடுவாய். ஆனால், நானோ நீ இல்லாவிட்டால், உடனே சாவை விரும்பி ஏற்பேன்" என்றான் அவன்.

"நீ இல்லாவிட்டால் நான் ஒருக்காலும் மகிழ்ச்சியாயிருக்க மாட்டேன் , அப்பா ! நீ என்னை விட்டு எங்கே போவாய் ? நான் உன்னை எங்கும் விட மாட்டேன். ஊஹும் , நீ எங்கிருப்பாயோ, அங்கே தான் நானும் இருப்பேன். ஏன் இன்று இப்படியெல்லாம் பேசுகிறாய்? நான் அப்படி என்ன குற்றஞ் செய்து விட்டேன்?" என்றாள் கவிதா.

கண்ணன் ஒன்றும் பேசவில்லை. மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்தான். "நான் ஏன் இவ்வாறு கலங்க வேண்டும். குழந்தை கொஞ்ச நேரம் அந்த இளைஞனோடு பேசிக்கொண்டிருந்தால், என்ன கெடுதி நேரிடும்: பெண்கள் இயல்பாகவே இரக்க குணம் படைத்தவர்கள். அதிலும், எனது கவிதாவோ அன்பே உருவானவள். எனவே, அவ்வாலிபனை விடுவிக்க விரும்புகிறாள். அந்த இளைஞன் குற்றஞ் செய்தானோ என்னவோ , அப்படியே செய்திருப்பினும், அது அறியாது புரிந்த குற்றம் என்பது அவள் வாதம், ஆனால், அவனோ தான் குற்றமே செய்யவில்லையென்றல்லவா அவளிடம் கூறினான். அவன் கண்கள் உண்மையையும் உறுதியையும் காட்டுகின்றன. அப்படியும் சொல்ல முடியாது. சிலர் தோற்றத்தில் நல்லவர்களாயிருப்பார்கள். உண்மையில் அவர்கள் கெட்டவர்களாயிருப்பார்கள். தோற்றத்தில் சிலர் மிகக் கடுமையானவராகக் தோன்றுணவர்கள். அவர்கள் சிறந்த குண நலன்கள் பெற்றவராயிருப்பார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் எத்தனைபேர் இருக்கிறார்கள் : என்றாலும், நம் கடமையை நாம் செய்வோம் நாளையே அவனை விசாரித்து, அவன் குற்றமற்றவனாயின் விடுதலை செய்கிறேன்' என்று தன்னையே தேற்றிக் கொண்டான்.

அவன் ஒன்றுமே பேசாததைக் கண்டு "அப்பா எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே, நீ ஏன் இப்படியிருக்கிறாய்?" என்றாள் மகள்

"நீ என் அருமைக் குழந்தை நீ ஒன்றும் தப்பு செய்யவில்லை. விடிவௌ஢ளி முளைத்து விட்டது. பேசாமல் உன்னறைக்குப் போய்ப் படுத்துப் கொள். ஆனால் ஒன்று நினைவில் வைத்துக் கொள். இனி இம்மாதிரியெல்லாம் நடந்துகொள்ளாதேயம்மா, உனக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால், நான் எவ்வளவு துன்பப்படுவேன் என்பது உனக்குத் தெரியாதா?" என்றான் கண்ணன் அன்பொழுக,

"இனி உனக்குத் தெரியாமல் நான் ஒன்றுமே செய்ய மாட்டேன், என்னை மன்னித்து விட்டாயா, அப்பா?" என்றாள் சிறுமி.

"சரி, போய்ப் படுத்துக்கொள்".


அத்தியாயம் 12

மலர்விழியின் துயர்

சிறு சிறு துளிகளாக விழுந்த மழைத்துளிகள் பெரிய பெரிய துளிகளாக வீழ்ந்தன. அந்தக் கிராமப் பகுதியிலே எங்கணும் இருள் கவ்வியிருந்தது.

வீட்டு வேலை எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இப்போது தான் படுக்கையிற் படுத்துக்கொண்ட மலர் விழிக்குத் தூக்கம் வரவில்லை. அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தாள்.

இத்துணைச் சிறு வயதில் அவளுக்காக எத்தனைத் துன்பங்கள் காத்திருந்தன ! முதன் முதலாக அவள் தாயைப் பறி கொடுத்தாள். அவள் நினைவு தெரியும் வயது வருவதற்கு முன்னர் விதி அவள் அன்னையைப் பிரித்து விட்டது.

ஐந்து வயதில் தாயையும் பதினைந்து ஆண்டிற்குள் பெற்ற தகப்பனையுமிழந்து உலகிலே தன்னந்தனியாக விடப்பட்டதோர் துர்பாக்கியம் மலர்விழிக்கு ஏற்பட்டது.

தாயின் அன்பு இன்னவென அறியாமல் வளர்ந்த மலர் விழிக்குத் தந்தையே தாயாகவும் , தந்தையாகவுமிருந்தார். அவரையும் பிரிந்து அனாதைக் குழந்தைகளாக வளரும் அவர்களிடம் மிகவும் அன்புடன் நடந்து கொண்டவன் அவள் அத்தான் இராமச்சந்திரனே, அவளும் தன் சிறு உள்ளத்திலே பொங்க நின்ற அன்பு முழுவதையும் அவன் மீது அர்ப்பணஞ் செய்திருந்தாள். அவள் தன் கள்ளங் கபடமற்ற குழந்தை உள்ளத்திலே பொங்கி நின்ற எல்லையற்ற அன்பிற்கு இராமச்சந்திரனே உரியவனானான்.

சின்னாட்களாக அவன் இங்கே அடிக்கடி வர முடியவில்லை. அவன் உள்ளமும் உணர்வும் பொதுத் தொண்டிலேயே நிலைத்திருந்தன. எனினும், அவள் மீது அவன் கொண்டிருந்த அன்பை மறக்கவில்லையென்பதை மலர்விழி நன்கு அறிவாள். அரசியலால் அவனுக்குத் தடைகள் விதித்தனர். அத்தகைய இடையூறுகள் ஏற்பட்டபோது கூட அவன் அவ்வப்போது வந்து அவளைப் பார்த்துச் செல்லத் தவறியதில்லை,

அப்போதெல்லாம் மரகதவல்லி அவனைப் பேருவகையோடு வரவேற்பாள். இராமசந்திரன