சித்தி ஜுனைதா பேகம் - ஓர் அறிமுகம்



நாகூர் ரூமி

ஆச்சிமா என்று எங்களால் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்ட சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள இரண்டு நாவல்கள் மற்றும் கட்டுரைகளின் ஆசிரியை மட்டுமல்ல. உறவு முறையில் என் தாயாரின் மூத்த சகோதரியும் என் பெரியன்னையும் ஆவார்.

என் குடும்பத்தைப் பற்றி நானே சொல்வதா என்ற கேள்வி நியாயமானதே. அதற்கு நியாயமான பதில் உண்மையை யாரும் சொல்லலாம் என்பது மட்டுமல்ல ஆச்சிமாவின் விஷயத்தைப் பொறுத்து சொல்லவேண்டியது என் கடமையும் ஆகும் என்றே நான் நினைக்கிறேன். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அந்தக்கால இஸ்லாமிய உலகில், நாகூரிலிருந்து, புரட்சி செய்த ஒரு படைப்பாளி என்று சொன்னால் மிகையாகாது. இன்னும் ஒருபடி மேலே போய் வரலாறு படைத்தவர், படிக்காத மேதை என்று வாருணித்தாலும் பொருத்தமானதே.

இந்த சிறப்புக்கெல்லாம் காரணம் கதைகள் கட்டுரைகள் எழுதிவிட்டார்கள் என்பதல்ல. அவைகள் எழுதப்பட்ட காலம், சூழல், பின்புலம், ஆச்சிமாவின் பள்ளிப்படிப்பின்மை மற்றும் அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்களுக்கிருந்த கட்டுப்பாடுகள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்ப்போமேயானால், இவற்றையெல்லாம் மீறி அவர்கள் எழுதி, தனது பெயரையும் போட்டு, தன்வீட்டு முகவரியையும் கொடுத்து, உருவப்படங்களுடன் கூடிய புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள் என்பதுதான்! ஆச்சிமாவின் துணிச்சலும் அந்த இளம் வயதிலிருந்த முதிர்ச்சியும் வியப்பை ஏற்படுத்துகிறது. அந்தக்காலத்தில் முஸ்லிம் பெண்கள் எழுதுவதில்லை. அப்படியே எழுதினாலும் தங்கள் பெயரை வெளியிடுவதில்லை. (இந்த தகவலை எனக்கு ஆச்சிமாவே சொன்னது). அந்தக் காலத்தில் பெண்கள் செருப்பு போட்டு நடப்பது மரியாதைக் குறைவான செயலாகக் கருதப்பட்டதாம்! " என்ன இது? மரியாதையில்லாம ஆம்புளைங்க முன்னாடி டக்கு டக்குன்னு செருப்பு போட்டுகிட்டு நடக்குறா! " என்று பேசுவார்களாம்! (இந்த தகவல் ஆச்சிமாவின் மூத்த மகளார் சொன்னது).

என்னுடைய பாட்டியார் செல்லம் என்கிற அலிமுஹம்மது நாச்சியார்தான் நாகூரில் முதன் முதலில் ஹைஹீல் செருப்பு போட்டு நடந்தது என்று சொல்லப்பட்டபோது இதில் என்ன உள்ளது என்று நான் அப்போது நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது செருப்பின் மீதிருந்த வெறுப்பின் வரலாற்றுப் பின்னனி ! அப்படிப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களுக்கு கொடுக்கப்பட்ட செருப்படிதான் ஆச்சிமாவின் படைப்புக்கள்.

இந்த துணிச்சல், தமிழறிவு, இலக்கிய அறிவு, ஆன்மீகத்தேடல் இவற்றின் வேர்கள் எங்கிருந்தன என்ற குறிப்பையும் எனக்குக் கொடுத்தது ஆச்சிமாவின் பேச்சும் எழுத்தும்தான். அதைப் புரிந்துகொள்ளுமுன் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை சற்று தெரிந்து கொள்வது பயனளிக்கும்.

படிப்பு

ஆச்சிமா படிக்கவில்லை என்று ஏற்கனவே சொல்லியிருந்தாலும் தந்தை அனுமதியோடு மூன்றாவது வரை தன் தெருப்பள்ளித் தெரு வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு கிறிஸ்தவார்களால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் படித்ததாம். அதற்குமேல் படிக்க தாயார் அனுமதி தரவில்லையாம் ! (இந்த தகவலை தந்தது ஆச்சிமாவின் மூத்த மகளான எங்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் சித்தி ஹமீதா அவர்கள்.)

இது ஒரு சோகமான விஷயம்தான். என் தாய்வழிப் பாட்டனாராகிய ஆச்சிமாவின் தந்தையார் படித்தவரா என்று தெரியாது. ஆனால் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர். அந்தக் காலத்திலேயே நாகூரில் நெல்சன்ஸ் என்சைக்ளோபீடியா படித்துக்கொண்டிருந்தவர்! (என் சின்னம்மாகூட அதன் பக்கங்களைக் கிழித்து கிழித்துதான் அடுப்பெரிக்க பயன்படுத்தியது!) ஒரு ஆங்கிலேய கப்பலின் கேப்டனாக வேலை பார்த்தவர். அவருடைய ஆங்கில எழுத்துக்கள் கர்சிவ் ரைட்டிங்கில் ப்ரின்ட் எடுத்த மாதிரி இருக்கும். அவருடைய ஒரு கடிதம்கூட இப்போது என் கையில் கிடைக்காதது துரதிருஷ்டமே.

இதில் விஷயம் என்னவெனில், இந்த அளவு படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்த ஒரு தந்தையாக இருந்த போதும் மூன்றாவதுக்கு மேல் படிக்க வைக்க அவரால் முடியவில்லை. அல்லது முதல் மனைவியின் விருப்பத்தை மீறமுடியவில்லை! இந்த சவால்களையெல்லாம் மீறித்தான் ஆச்சிமா தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

இது எப்படி சாத்தியமானது என்று நான் பலமுறை யோசித்துள்ளேன். வெறும் தூண்டுதல்கள்களால் இவ்வளவு செய்ய முடியுமா என்ற கேள்வி நிற்கிறது பதிலில்லாமலே. தனக்குத் தூண்டுதல் தானேதான் என்று ஆச்சிமாவும் பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் இதற்கு பதில் விதி என்று வைத்துக்கொள்வதா? விதியை விட சிறப்பான பதில் ஒன்று உண்டு. அதுதான் பரம்பரை வித்து என்பது. பல காலமாக தொடர்ந்து ஊறிக்கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது.

ஆச்சிமா தன்னை வண்ணக்களஞ்சியப் புலவர் பரம்பரை எனவும் டெல்லியில் அடக்கமாகியுள்ள ஷாஹ் ஒலியுல்லாஹ் என்ற இறைநேசச் செல்வரின் பௌத்திரி என்றும் எப்பவும் சொன்னார்கள்.( பார்க்க காதலா கடமையா தலைப்புப் பக்கம்). முதலில் வண்ணக்களஞ்சியப் புலவர். யார் இவர்?

பல்லவி

மனமே வாழ்வைச் சதமென் றனுதினம் நபிபதம்
வாழ்த்தா திருந்தாய் மனமே

சரணம்

நண்ணும் திருமதினத் தண்ணல் அப்துல்லா பெறும்
நாத ராமகு முதர்
வண்ணக் களஞ்சியமும் விண்ணோரெவரும் துதி
வணங்கும் கமலப் பாதர்
கண்ணீர் பெருகிவரும் அந்நாள் மகுஷரிலே
காப்போ ரவரல்லாமல்
தீர்ப்போம் துயரமெவர்

இது வண்ணக் களஞ்சியத்தின் வண்ணங்களில் ஒன்று. பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடியதால் அவருக்கு வண்ணக் களஞ்சியம் என்ற கௌரவப்பட்டத்தை நாகூர் வாழ்ந்த கவிஞர்கள் அளித்தனர். இவரது இயற்பெயர் சையது ஹமீது இபுராஹீம். இவர் ராமநாதபுரத்திலுள்ள மீசல் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் நாகூர் வந்து சில காலம் வாழ்ந்து பின் மீசல் திரும்பி அங்கேயே இந்த உலக வாழ்வை நீத்து அடக்கமானவர்.

அவர் நாகூரில் வாழ்ந்த காலத்தில் நாகூருக்குப் பக்கத்தில் உள்ள பிறையாரு (பொறையார்) என்ற ஊரின் பதாயி மரைக்காயர் என்ற செல்வந்தரின் குடும்பத்தில் பெண் கேட்டு, முதலில் இவரின் வறுமை காரணமாக மறுக்கப்பட்டு பின் பதாயி மரைக்காயரின் செல்வம் மர்மமான முறையில் சரிவடைந்து இதன் காரணம் கவிஞரை மனவருத்தப்படுத்தியதே என்பதை உணர்ந்து பின் பதாயி மரைக்காயரே நாகூர் தர்காவிற்கு வந்து அங்கே நாகூராரிடம் முறையிட்டுக்கொண்டிருந்த வண்ணக் களஞ்சியத்தை தனது மருமகனாக்கிக் கொண்டார் என்பது வரலாறு. இது நாகூராரின் அற்புத சக்திக்குச் சான்றாகவும் அந்தக்கால கவிஞர்களின் பெருமைக்குச் சான்றாகவும் பதியப்பட்டுள்ளது. அறம்பாடி அற்புதங்கள் செய்த ஜவ்வாதுப்புலவரும் வண்ணக் களஞ்சியமும் சமகாலத்தவரே. நாகூரிலேயே வாழ்ந்தவர்களும்கூட.

வண்ணக்களஞ்சியப் புலவருக்கு ஒரு சிறப்பு உண்டு. தமிழ்ப்புலவர்களில் காப்பியம் இயற்றியவர்கள் ஒரு சிலரே. கம்பன் இளங்கோ போன்றவர்கள் காப்பியங்கள் இயற்றியிருந்தாலும் ஒவ்வொருவரும் ஒரு காப்பியம்தான் இயற்றியுள்ளனர்.

ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டிட காப்பியங்களை தமிழில் இயற்றிய பெருமை மூன்று முஸ்லிம் புலவர்களைச் சேரும். ஒருவர் ஷேய்குனாப் புலவர் என்று அறியப்பட்ட சையது அப்துல்காதிர் நய்னாப் புலவர். இவர் நான்கு காப்பியங்கள் இயற்றியுள்ளார். இன்னொருவர் நாகூர் மஹாவித்வான் வா.குலாம் காதிரு நாவலர். இவர் மூன்று காப்பியங்கள். மூன்றாவது வண்ணக் களஞ்சிய ஹமீதுப்புலவர். இவரும் மூன்று காப்பியங்கள் இயற்றியுள்ளார். (1) இராஜ நாயகம். இது நபி சுலைமான் அவர்களைப் பற்றியது. (2) குதுபு நாயகம். (3) தீன் விளக்கம். இது தனது மூதாதையரும் ஏர்வாடியில் அடக்கமாகியுள்ள இறைநேசருமான சையிது இபுராஹீம் ஷஹிது வலியுல்லாஹ்வைப் பற்றியதாகும். இதுவன்றி அலி பாதுஷா நாடகம் என்று ஒரு நாடகத்தையும் இயற்றியுள்ளார். அவருடைய காப்பியமான இராஜநாயகத்திலிருந்து ஒரு கடவுள் வாழ்த்து :

ஆரணத் தினிலகி லாண்ட கோடியி
லேரணக் கடல்வரை யினின்மற் றெங்குமாய்
பூரணப் பொருளெனப் பொருந்ருமோர் முதற்
காரணக் கடவுளை கருத்திருத்துவாம்

இப்படி காப்பியங்களும் வண்ணங்களும் இயற்றிய புலவரின் பரம்பரை ஆச்சிமாவுடையது. வண்ணக்களஞ்சியப் புலவர் நாகூரைச் சேர்ந்தவரல்லவாகையால் அவர் திருமணம் புரிந்த வகையில்தான் ஆச்சிமாவின் முன்னோர்கள் இருந்திருக்க முடியும். இது இலக்கிய வேர்.

ஆன்மீக வேரொன்று உண்டு. அது ஷாஹ் ஒலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களிடமிருந்து வருகிறது. இவர்கள் டெல்லியில் அடக்கமாகியுள்ள இறைநேசரும் மார்க்க அறிஞரும் ஆவார்கள். அவர்கள் எழுதிய ஹ¥ஜ்ஜதுல்லாஹ¤ல் பாலிகா என்ற நூல் இன்றுவரை உலக அறிஞர்களால் இஸ்லாமிய சட்டதிட்டிடங்கள், திருமறை, ஹதீது மற்றும் ஆன்மீக வி\யங்களுக்கான விளக்கங்களுக்கு ஆதாரப்பூர்வமான நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ·பௌஜூல் கபீர் என்பது அவர்களுடைய இன்னொரு நூலின் பெயர்.இந்த நூலை ஆச்சிமா தனது முதல் நாவலின் தலைப்புப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இறைநேசரின் பேத்தியின் பேத்தி (பௌத்திரி)என ஆச்சிமா தன்னை அடையாளம் காண்கிறார்கள். ஆச்சிமாவின் சிறிய தந்தையாரின் பெயரும் ஷாஹ் வலியுல்லாஹ் என்பதேயாகும்.

ஒரு பக்கம் தூய இலக்கியம். இன்னொரு பக்கம் தூய மார்க்கம் மற்றும் ஆன்மீகம். ஆச்சிமா அவர்கள் எழுதிய பல கட்டுரைகள் தொகுக்கப் படாமலும் வெளியிடப்படாமலும் உள்ளது. அவற்றில் பல ஆன்மீகச் செல்வர்கள் பற்றிய கட்டுரைகள். உதாரணமாக நாகூரில் அடங்கியுள்ள காதிர்வலி பற்றி திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு : பெருமானார் ஷாஹ¥ல் ஹமீதின் பேரின்ப வாழ்க்கை என்ற பெயரில் ஒரு சிறு நூலே எழுதியுள்ளார்கள் ஆச்சிமா.மேலும் இறைநேசர்கள் ஹசன் பசரி பற்றியும் ராவியதுல் பசரியா பற்றியும் நீண்ட கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். இது ஆச்சிமாவின் இன்னொரு பரிமாணம். இன்னும் வலுவாக அறியப்படாதது. இஸ்லாமும் பெண்களும் கட்டுரைத்தொகுப்பில் அறச்செல்வி ராபியா என்ற ஒரு கட்டுரை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இலக்கியமும் ஆன்மீகமும் கலந்த இந்த பாரம்பரியம் ஆச்சிமாவோடு முடிந்து போய்விடவில்லை. இந்த காலக்கோட்டில் ஆச்சிமா நடுவில் வருகிறார்கள் என்று சொல்லலாம். ஆச்சிமாவுக்கு முந்திய பெரும்புள்ளிகளாக வண்ணக் களஞ்சியப் புலவரும் ஷாஹ் வலியுல்லாஹ்வும் உள்ளார்கள் என்றால் ஆச்சிமாவுக்குப் பின்னும் சிலர் எங்கள் குடும்பத்தில் இலக்கியம் மற்றும் கலைத்துறைகளில் பங்காற்றிக்கொணடும் மிளிர்ந்து கொண்டும்தான் உள்ளார்கள்.

எனது தாய்மாமா முராது பெய்க் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர். அவருiடைய கம்பீரமான குரலும் பேச்சு வன்மையும் கேட்பவரை வேதனை மறந்து சிரிக்க வைக்கும்.

இன்னொரு தாய்மாமா அக்பர் அவர்கள். தூயவன் என்ற பெயரில் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து முத்திரைக் கதைகள் எழுதி பரிசு பெற்று அந்தக் கால சினிமா சூபர் ஸ்டார்களான ஏவிஎம் ராஜன் போன்றோரால் அணுகப்பட்டு பால்குடம் என்ற படத்தின் மூலம் சினிமாத் துறைக்குவந்து பின் திரைப்பட வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர்.

ஆட்டுக்கார அலமேலு, பொல்லாதவன், மனிதரில் மாணிக்கம் போன்ற படங்களுக்கு வசனம் அவரே. வைதேகி காத்திருந்தாள் (விஜய காந்துக்கு திருப்பு முனையாக அமைந்த படம்), அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற படங்கள் அவருடைய சொந்த தயாரிப்புகளே. அவற்றில் சில படங்களுக்கு (உதாரணமாக அன்புள்ள ரஜினிகாந்த் )வசனமும் அவரே. தன்னிடத்திலே பணிபுரிந்த பாக்யராஜ் போன்றவர்களை பாரதிராஜாவிடம் அறிமுகப் படுத்தியவரும் அவரே.

இன்னொரு தாய்மாமா கவிஞர் நாகூர் சலீம். இவர் கிட்டத்தட்ட மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இஸ்லாமிய பாடகர்கள் பல பேரை இவர் உருவாக்கியுள்ளார். ஆரம்ப காலத்து ஈ.எம்.ஹனிபா பாடல்கள் மற்றும் புகழ்பெற்ற ஷேக் முகம்மது பாடிய "தமிழகத்து தர்காக்களை" என்ற பாடலையும் இயற்றியவர் இவரே. சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி பட்டமும் வழங்கப்பட்டார். இவர்களெல்லாம் ஆச்சிம்மாவின் சகோதரர்கள் என்பது சொல்லாமலே விளங்கியிருக்கும். இதில் ஒரு வேடிக்கையான ஒற்றுமை என்னவெனில் மேற்கூறிய மூன்று தாய்மாமாக்களுமே பள்ளிப்படிப்புக்கு மேல் போகாதவர்கள்!

கடைசியாக என்னையும் சேர்த்துக் கொள்ளலாம். நதியின் கால்கள் என்றொரு கவிதைத் தொகுதியும் குட்டியாப்பா என்றொரு சிறுகதைத் தொகுதியும் ஸ்நேகா வௌpயீடாகவே வந்துள்ளன. நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவின் சிறுகதைத் தொகுதியில் குட்டியாப்பா என்ற சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியீடாக பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஆச்சிமா என்ற ஆலமரத்தின் வேர்கள் மற்றும் கிளைக் கொழுந்துகளின் வரலாற்றுச் சுருக்கம் இது.

திருமணம்

ஆச்சிமாவுக்கு திருமணம் நடந்தபோது அவர்கள் வயது பனிரண்டு ! பால்ய விவாகம் மாதிரிதான். கணவர் பெயர் ஏ. ·பகீர் மாலிமார். இவர் ஆச்சிமாவின் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் சகோரதரர் ஆவார். ·பகீர் மாலிமார் ஒரு அற்புதமான மனிதர் என்றும், எனினும் ஆச்சிமா கற்பனை செய்து வைத்திருந்த லட்சிய கணவரல்ல என்றும் அம்மாவும் ஆச்சிமாவின் பேத்தியும் சொன்னார்கள். அவர் நாகூரிலேயே ஒரு மளிகை கடைவைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். பின் சில வருடங்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள பூலோசாம்பு என்ற தீவுக்கு சென்றாராம். ஓரிரு முறை வெளிநாட்டிலிருந்து திரும்பியும் வந்திருக்கிறார். ஆனால் அவர் அங்கேயே இரண்டாவது உலகப்போரின்போது பெரிபெரி என்ற நோய்வாய்ப் பட்டு இறந்து போனார்.(தகவல் அம்மா).

குழந்தைகள்

ஆச்சிமாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். மூத்தவர் பொன்னாச்சிமா என்றழைக்கப்பட்ட சித்தி ஜபீரா. இரண்டாவது சித்தி ஹமீதா (அம்மா). மூன்றாவது சித்திமா என்றழைக்கப்படும் சித்தி மஹ்மூதா. நான்காவது சித்தி சாதுனா (இறந்து விட்டார்). முதலிரண்டு குழந்தைகள் கணவர் நாகூரிலிருந்தபோது பிறந்தவை. மற்றவை அவர் வெளிநாடு சென்று திரும்பி வந்து போனபோது.

ஆச்சிமாவின் திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகள்தான். தனது இளமைப் பருவத்திலேயே விதவையாகிவிட்டார். எனினும் தனது குழந்தைகளை 11வது வகுப்புவரை படிக்க வைப்பதற்காக, நாகூரில் இருந்த தனது வீட்டை விட்டுவிட்டு நாகப்பட்டினம் சென்று -- அங்கேதான் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளும் இருந்தன -- வாடைகை வீட்டில் தங்கி படிக்கவைத்தார் அந்த விதவை என்பது குறிப்பிடத்தக்கது.(தகவல் அம்மா).

சித்தி என்ற பெயர் சித்தி ஜூனைதா பேகம், சித்தி ஹமீதா என்று எல்லாம் சித்தி சித்தி என்று வருகிறதே இது என்ன சித்தி ? ராதிகாவின் மெகாசீரியலாக உள்ளதே என்று ஒரு நண்பர் கிண்டலாகக் கேட்டார். இது தமிழ் சித்தி அல்ல அரபி சித்தி. என் தாயாரின் பெயர்கூட சித்தி ஜெமீமாதான். சித்தீக் என்றால் அரபியில் உண்மையாளர் என்று பொருள். அதன் பெண்பால்தான் சித்தி. அதே பொருள்தான் இங்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார்களுக்கு இந்த பெயர் இருந்தது. சித்தி ஜைனப், சித்தி உம்மு குல்சும் என்று இரண்டிடு மகளார்களின் பெயர்களிருந்தன என்று சஹீஹில் புகாரி கூறுகிறது. எனவே சித்தி என்று பெயர் வைப்பது சுன்னத் (நபி வழியை பின்பற்றுதல்) ஆகிறது.

எழுத்து

ஆச்சிமா எழுத ஆரம்பித்தது திருமணத்திற்குப் பிறகுதான். அல்லது விதவையான பிறகு என்றுகூடச் சொல்லலாம். தனது பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்தார்கள். கட்டுரைகள் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் முதலில் நாவலுக்கே நேரடியாகப் போய்விட்டார் என்றுதான் தெரிகிறது. ஒரே தாவல்! இஸ்லாமும் பெண்களும் கட்டுரைத் தொகுப்பின் ஆச்சிமாவின் முன்னுரையை கவனமாகப் படிப்பவர்கள் இதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

காதலா கடமையா

அவருடைய முதல் நாவல் காதலா கடமையா? அது உவேசா அவர்களால் முன்னுரை வழங்கப்பட்டது என்பது முக்கியமானது. புதுமைப் பித்தன்கூட தனது கடிதங்களில் ஒன்றில் ஆச்சிமாவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று என் நண்பரும் கவிஞருமான தாஜ் சொன்னார். இன்று வரை அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

ஆச்சிமாவின் மனக்கிடக்கையையும் பெண்களுடைய நிலை மாறவேண்டும் என்று அவர்கள் மிகவும் விரும்பியதையும் அந்த முதல் நாவலைப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த நாவலை எழுதிய பிறகு எழுந்த எதிர்ப்புகள் சுவாரசியமானவை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றுகூடச் சொல்லலாம். நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வௌடிளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப்பள்ளித்தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம் ! சும்மா அல்ல. ஒரு கெட்டுப்போன நல்ல குடும்பத்துப்பெண்ணை விசாரிக்க வருவதுபோல! இந்த தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப்பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப் படுத்தினார்கள். ஒரு முஸ்லிம்பெண்! நாவல் எழுதுவதா?! அதுவும் காதல் என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்டிசழுத்தம் வேண்டும்?

இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. திரைப்படத்துறையில் நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா ரவீந்தர் என்று ஒருவர் இருந்தார். இவரும் மாமா தூயவனிடம் இணைந்து பணியாற்றியவர்தான். எம்ஜியாரின் மகாதேவி படத்துக்கு வசனமெழுதியவர் இவர்தான். மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி என்ற புகழ்பெற்ற வசனம் இவருடையதுதான். எம்ஜியாரின் நாடேர் மன்னன் படத்தில் ஒவ்வொரு சீக்வென்சும் அப்படியே காதலா கடமையா நாவலில் உள்ளதுதான் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிர நண்பர் என்னிடம் சொன்னார். படத்தை மறுபடி சிடியில் பார்த்ததில் அது உண்மை என்று தெரிந்தது. ரவிந்தர் ஆச்சிமாவின் நாவலிலிருந்து சுட்டுவிட்டார் என அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் அப்படித்தான் உள்ளது. அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் நாவல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

மற்ற படைப்புகள்

1. செண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல் - இது ஒரு சின்ன வரலாற்று நாவல். ஆச்சிமா ஆராய்ச்சி செய்து எழுதி 1947 ல் வெளியிடப்பட்டது. 2. மகிழம்பூ - நாவல் 3. இஸ்லாமும் பெண்களும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நூருல் இஸ்லாம், செம்பிறை, ஷாஜஹான் போன்ற பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைத் தொகுப்பு. நான் 1995 ல் வெளியிட்டது. 4. மலைநாட்டு மன்னன் - நூருல் இஸ்லாம் பத்திரிக்கையில் வந்த தொடர்கதை. 5. ஹலிமா அல்லது கற்பின் மாண்பு 6. பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை 7. திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு - நாகூர் ஆண்டவர் என்று அறியப்படும் காதிரடி வலீ ஷாஹ¥ல் ஹமீது ஆண்டகை அவர்களின் வாழ்க்கை வரலாறு. நான்கே நாட்களில் எழுதி முடிக்கப்பட்டது. 1946 ல் சிறு நூலாக வெளிவந்தது. 8. காஜா ஹஸன் பசரீ (ரஹ்): முஸ்லிம் பெருமக்கள் வரலாறு இஸ்லாமிய ஞானி ஹஸன்பசரி அவர்களைப்பற்றியது. நூருல் இஸ்லாம் பத்திரிக்கையில் வந்த தொடர் கட்டுரை.

இன்னும் சில நாவல்கள் எழுதப்படாமலோ அல்லது முடிக்கப்படாமலோ இருந்திருக்கலாம். மூவாமூவர் என்றொரு நாவலுக்கான விளம்பரம் செண்பகவல்லிதேவியின் பின் அட்டையில் காணப்படுகிறது ஹலிமா அல்லது கற்பின் மாண்பு போன்ற கதைகளும் எழுதி முடிக்கப்பட்டனவா என்று தெரியவில்லை.

ஆச்சிமா இறந்தபிறகே அவர்கள் பெருமை எனக்குப் புரிந்தது. ஈடு செய்யமுடியாத இழப்பு என்பது இதுதான். உன் அன்புள்ள அன்னை என்று தூய தமிழில் இனி எனக்கு யார் கடிதம் எழுதப் போகிறார்கள்?

ஆச்சிமாவிற்கு டைரி எழுதும் வழக்கம் உண்டு. எஒபோது பார்த்தாலும் டைரி எழுதிக்கொண்டே இருக்கும். அவைகளை படிக்கும் வாய்ப்பும் அவகாசமும் ஏற்படும்போது எங்கள் பாரம்பரிய வரலாறு பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் ஆழமான அற்புதமான உண்மைகள் காணக்கிடைக்கும் என்று நம்புகிறேன். அவசியம் ஏற்பட்டால் அவற்றையும் பிரசுரிக்கலாம். இன்ஷா அல்லாஹ்.

ஆச்சிமாவின் நோய்

ஆரம்பத்திலிருந்தே உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டதாக ஆச்சிமா பேட்டியில் கூறியுள்ளார்கள். 1979 -- 80 களில்தான் அவர்களுக்கு மார்புப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 1998 வரை வாழ்ந்த ஆச்சிமா தனது நோய்க்காக ஆங்கில மருத்துவத்தை நாடவில்லை. சித்த மருத்துவம் செய்து கொண்டார்கள். புகழ்பெற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பலராமய்யாதான் அவர்களுக்கு வைத்தியம் பார்த்தார்.

ஆச்சிமா ஒரு வஸ்வாஸ். அதாவது மிகவும் அதீதமாக சுத்தம் பார்ப்பவர்களை நாங்கள் வஸ்வாஸ் என்று கூறுவோம். ஆச்சிமா அப்படிப்பட்ட ஒரு மனநிலையிலேயே வாழ்ந்தது. அடிக்கடி தனது வாய்க்குள் ஏதோ தூசி புகுந்து விட்டதைப்போல கற்பனை பண்ணிக்கொண்டு தூ தூ என்று துப்பிக்கொண்டு தன் வௌடிளைத் தாவணியால் வாயை அடிக்கடி துடைத்துக்கொண்டே இருப்பார்கள்.

இது பரவாயில்லை. ஒரு முறை வைத்தியர் மீன் ஆகாது என்று சொல்லிவிட்டார். அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஆச்சிமா அவருக்கு இரண்டு கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பியிருந்தது . 1. இளநீர் குடிக்கலாமா? 2.கிணற்று நீரை கைகால் கழுவ பயன்படுத்தலாமா? மீன் ஆகாதென்றதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே பார்க்கிறீர்கள்? சம்பந்தம் உள்ளது. அது ஆச்சிமாவுக்குத்தான் தெரியும். மீன் சாப்பிடுகின்ற ஒருவன்தானே மரத்தின்மீதேறி இளநீர் பறிக்கிறான்? அவன் கையால் பிடித்த அரிவாளால் வெட்டப்பட்ட தேங்காயினுள் உள்ள இளநீரை குடிக்கலாமா? !

அடுத்தது. ஆற்று நீரும் கடல் நீரும் சங்கமமாவதால் - நாகூரில் கடல் உள்ளது - அதில் உள்ள மீன்களின் மேல் பட்ட தண்ணீர்தானே கிணற்றுக்கும் வரும்? அதைப் பயன்படுத்தலாமா? ஆச்சிமாவின் சந்தேகங்களுக்கான ஆச்சிமாவின் விளக்கம் இதுதான்!

இது கேட்ட பலராமய்யர் இனிமேல் இதுபோல் சந்தேகங்கள் வேண்டாமென்றும் இப்படியெல்லாம் சிந்திப்பதைவிட மீனே சாப்பிட்டுவிடலாம் என்று கடிதம் கொண்டுபோன என் தம்பி நிஜாமிடம் சொல்லியிருக்கிறார் நொந்து போய்!

கடைசியில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து சென்னைக்கும் போயாச்சு. இன்னும் இரண்டொரு நாளில் ஆபரேஷன். தங்கியிருந்த வீட்டில் இருந்த டி.வி.பெட்டியில் புற்று நோய் வந்த மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையைக் காட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆபரேஷன் வேண்டாம் என்று ஊருக்குத் திரும்பியாச்சு! புரட்சிப் பெண்ணின் மருட்சிப் பக்கம் இது!

மறைவு

ஆச்சிமா அவர்கள் 19-3-1998 அன்று இரவு 10 மணி அளவில் (ஹிஜ்ரி 1418, துல்காயிதா மாதம், பிறை 19/20 ல்) இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களைப் பற்றிய தகவல்களை எனக்குத் தந்துதவியது அவர்களுடைய மகளார் அம்மா என நாங்கள் அழைக்கும் சித்தி ஹமீதா அவர்களும், ஆச்சிமாவின் பேத்தியும் பேரர் செல்வமணி ஆஜாதும் மேலும் நாகூரின் நடமாடும் கலைக்களஞ்சியம் தமிழ்மாமணி சொல்லரசு ஜாபர்முஹ்யித்தீன் அண்ணனும் ஆவார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தன்னிடமிருந்த காதலா கடமையா நாவலின் ஒரே (ஜெராக்ஸ்)காப்பியைக் கொடுத்துதவியதும் சொல்லரசு அவர்கள்தான். அதை வைத்துத்தான் ஸ்நேகா டிடிபி செய்ய முடிந்தது.

மேலும் தமிழ் மரபு அறக்கட்டளை (தமிழ் ஹெரிடேஜ் பவுண்டேஷன்) ஜெர்மனியின் நா.கண்ணன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது என்னிடம் ஒரிஜினல் காதலா கடமையா இருக்கவில்லை. அதிருஷ்டவசமாக நண்பரும் எழுத்தாளருமான காரைக்கால் சாயபு மரைக்காயர் தன்னிடமிருந்த ஒரேயொரு ஒரிஜினல் காப்பியைக் கொடுத்துதவினார். அவருக்கு என் நன்றியை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன். இப்போது அந்த ஒரிஜினல்தான் டிஜிடைஸ் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. வருங்கால சந்ததியினருக்காக ஆச்சிமாவின் நாவலை ஆர்கைவில் வைத்துதவும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் அதன் நா. கண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

ஆச்சிமாவின் நாவலை எம்.·பில் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ள உதவியரும் மற்றும் ஆச்சிமா பற்றி ஆர்வத்தோடு எழுதியவருமான என் நண்பர் பேராசிரியர் நத்தர்\h அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஆச்சிமாவின் இரண்டு நாவல்களையும் என் சொந்த முயற்சியில் நான் வெளிக்கொண்டு வந்த கட்டுரைத்தொகுதியையும் சேர்த்து அழகான முறையில் வெளிக்கொண்டு வரும் ஸ்நேகாவுக்கும் அதன் உயிர் நாடியான திரு பாலாஜி மற்றும் திரு சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

ஆச்சிமா பற்றிய தகவல்களை நாகூர் பற்றிய தனது வலைப்பக்கத்தில் சேர்த்துள்ள நண்பர் ஆபிதீனுக்கும் -- பார்க்க www.geocities.com/hadeen_ncr -- ஆச்சிமாவின் பேட்டியை மறுபிரசுரம் செய்த www.sify.com நண்பர் வெங்கடேஷ் அவர்களுக்கும் என் நன்றிகள்.

சென்னை சா·ப்ட்வ்யூ இயக்குனர் ஆண்டோ பீட்டர், துபாய் எழுத்தாள நண்பர் சடையன் அமானுல்லாஹ், எழுத்தாளர் இரா.முருகன் ஆகியோருக்கு என் நன்றிகள்.

ஆச்சிமாவின் உடல் மறைந்துவிட்டது. ஆனால் மனிதரிடையே எந்த வேற்றுமையும் பாராட்டாத மகாஉள்ளம் ஆச்சிமாவுடையது. ஒரு உதாரணம் தருகிறேன். நாகூரில் ஆண்டுதோறும் கந்தூரி உற்சவம் நடைபெறும். அதை மார்க்க அறிஞர்கள் சிலர் பித்அத் (புதுமை) என்றும் ஷிர்க் (இறைவனுக்கு இணைவைக்கும் காரியம் ) என்றும் எதிர்க்கின்றனர். அதைப்பற்றி ஆச்சிமா எழுதியதை கீழே தருகிறேன் : " உலகிலே எல்லாரும் அறிவாளிகளாயும் ஞானிகளாயும் துறவிகளாயும் இருத்தல் இயலாது. பாமர உலகம் ஆடம்பரத்தை விரும்புவதியல்பு. ஆடம்பரத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்றால், உலகம் அவர்கட்குச் சூனியமாகத் தோன்றும். அன்றியும் மற்றொரு வி\யத்தையும் நாம் ஊன்றி நோக்கல் வேண்டும்.

பணக்காரரின் வாழ்வு, எப்போதும் வேடிக்கை விளையாட்டிலும், கேளிக்கைக் கூத்திலும், வருவார் போவாரிலுமே கழிகின்றது. ஏழைகளின் வாழ்வு களியாட்டத்துக்கு இடமேயின்றி, இன்பமற்ற மந்த வாழ்க்கையாய்க் கழிகின்றதென்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். எனவே, ஆண்டொன்றுக்கு வரும் கந்தூரி, பாலைவனத்தில் உண்டாக்கப்பெற்ற பசிய பூங்காவைப் போலும், அப்பூங்காவினூடே தோண்டப்பெற்ற தெளிந்த நீரூற்றுப் போலும் அவ்வேழை மக்கள்தம் உள்ளத்தில் சிறிது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையுமளிக்கும்.

இயந்திரத்தைப்போல் சென்று கொண்டிருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் இன்பத்தேன் வந்து பாய செவ்வி ஏற்படும். சிரித்துக் களிப்பதற்கே சந்தர்ப்பமில்லாத ஏழைகட்கு, இந்தக் கந்தூரி கொண்டாட்டங்கூட இருக்கக்கூடாதென்று சொல்ல முடியுமா? எந்த வகையிலும் வீண் செலவையும் அனாச்சாரத்தையும் நிறுத்த வேண்டியதுதான். அதற்கென்று எளியவர்களுடைய களியாட்டச் சந்தர்ப்பங்களை அடியோடொழித்துவிட்டு, அவர்களது வாழ்க்கையை இன்னும் இன்பமில்லாது பாழாகச் செய்ய வேண்டுமா?

நடுத்தர வகுப்பார்க்கும் இது பொருந்தும். இம்மாதிரி விழாக்களிலேதான் உறவினர்களையும் பழைய நண்பர்களையும் நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்க இயலும்! அவர்களையெல்லாம் அடிக்கடி சந்திப்பதென்பது முடியாததொன்று. மேலும், பலர் ஒரே சமயத்தில் சந்திப்பதும் கஷ்டமாகும்.

அன்றியும், கந்தூரி எத்தனை இலட்சக்கணக்கான மக்கட்கு மகிழ்ச்சியையும் மன ஆறுதலையுமளித்து வருகிறது ! எத்துனை சிறு குழந்டிதைகள் இக்கொண்டாட்டத்தில் குதூகலத்தோடு கலந்து கொள்ளுகின்றன! அக்குழந்தைகட்கு எவ்வளவு உற்சாகம் !

இ·து ஒரு முஸ்லிம் விழாவாக இருப்பினும், திரளான இந்துக்களும் இதில் கலந்துகொள்ளுகின்றனர்.

இக்கொண்டாட்டத்தின்போது எங்கு நோக்கினும், உற்சாகமும் மகிழ்ச்சியுமே காணப்படும். வர்த்தகம் பெருகும். ஏழைகட்கும் ஏராளமான வரும்படி கிடைக்கும்."

இது ஆச்சிமா தன் கைப்பட எழுதிய தாளிலிருந்து எடுக்கப்பட்டது. எந்த கட்டுரையின் பகுதி இது என்று தெரியவில்லை. இதை ஆச்சிமாவே நேரில் என்னிடம் ஒப்படைத்தது.

ஜாதி மத பேதம் பாராத அந்த தூய இலக்கிய ஆன்மா அவர்களது எழுத்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும். எப்போதும்.

நாகூர் ரூமி
23-6-2002
ஆம்பூர்


காதலா, கடமையா? - சித்தி ஜுனைதா பேகம் (குறுநாவல்) To read this novel click here


Back
Designed by: Suba :-Copyright THF