காதலா? கடமையா?

சித்திஜுனைதா பேகம்







மதிப்புரை

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலா நிதி
டாக்டர் உ,வே, சாமிநாதையர்
அவர்கள் அன்புடன் அளித்த



இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு.

சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய "காதலா கடமையா" என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய 'நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்.

ஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன்.

இங்ஙனம்
வே. சாமிநாதையர்.


முகவுரை


புதுக்கதைக்கு முகவுரை எழுதுவது பொதுமக்கட்கு சற்றுவியப்பை உண்டு பண்ணலாம். ஏனெனில், அம்முகவுரைகள் பெரும்பாலும் வாசகர்கட்கு குறிப்பிட்ட புத்தகத்தை ஆதரிக்கும்படி விண்ணப்பஞ் செய்து கொள்ளும் நோக்கத்தோடு எழுதப்படுபவை. புதுக்கதைக்கு (Novel) முகவுரை அவசியமில்லையென்பது உண்மையேயாயினும், அப்புத்தகம் எழுதும் ஆசிரியரின் நோக்கத்தை ஒரு சிறு அளவு அப்புத்தகத்தை வாசிக்கும் முன்பு, வாசகர்கள் அறிந்துகொள்ளுமாறு தெரியப்படுத்துவது இன்றியமையாததென்று இம்முகவுரையை வரையலானேன். சிறந்த அறிஞர் பலரால் எழுதப்படும் புத்தகங்கள், நாடோறும் பெருகிவரும் இந்நாளில், உயர்ந்த கல்வியைக் கற்காத மிகச் சிறிய அறிவையுடைய சிறுமியாகிய யான் புத்தகம் எழுதத் துணிவது பண்டித சகோதர சகோதரிகளிற் பலர்க்கு, எதிர்பாராத வியப்பினையும் திகைப்பினையும் உண்டுபண்ணலாம். ஆயினும் அப்பெரியார் இச்சிறு புத்தகம் எழுதும் நோக்கத்தை சிறிது ஆராய்ந்து, இதன்கண்ணுள்ள குற்றங்களைப்பொறுத்தாதரிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

பழம்பெருமை வாய்ந்த நமது இந்தியநாடு, சரித்திர ஆரம்பகாலத்து, மிகவுயர்ந்த நாகரிகத்தின் உச்சியை அடைந்த திராவிடமக்களால் நம்மிந்திய நாடுமுற்றும் பரவியிருந்தது. ஆரியர்கள், இந்தியாவின் பெரும்பாகத்தைக் கைப்பற்றிய காலத்தும் திராவிட நாகரிகம் அழிக்கப்படவில்லை. அழகிற் சிறந்த ஆரியர்கள், திராவிடரின் நாகரிகத்தை கையாண்டு, அதை மென்மேலும் பெருகச் செய்தனர். நாகரிகத்திற்கு அதன் மொழியே சிறந்த வாகனமாதலின், பெரும்பாலும் அம்மொழியின் வளர்ச்சியினாலேயே, அந்நாகரிகத்தின் உயர்வைப்பற்றி சரித்திர அசிரியர்கள் அறிந்துகொள்ளுகின்றனர். எடுத்துக்காட்டாக உரோமநாட்டின் உயர்ந்த நாகரிகத்தின் பெருமையை லத்தீன்மொழி தௌ¤வாக வெளிப்படுத்துகின்றது. பழைய கிரேக்க நாகரிகத்தின் பெருமையை, மகாகவியாகிய ஹோமரின் (Homer) என்றும் அழிவில்லா காவியங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகின்றோம். அஃதேபோல், எமது தமிழ் நாட்டிலும் திருக்குறள், நாலடியார் முதலியவைகளிலிருந்து தமிழரின் தத்துவ ஞானத்தைப் பற்றியும் நல்லொழுக்கத்தைப் பற்றியும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவைகளிலிருந்து தமிழரின் நாகரிகத்தைப் பற்றியும் ஒருவாறு நாம் தெரிந்துகொள்ளுகின்றோம். ஆகவே, ஒரு மொழியை வளர்ப்பது, அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் கடமைகளில் ஒன்றாம். பண்டைக்காலத்து மொழிவளர்ச்சியானது மிகக் கற்றுணர்ந்த புலவர் பெருமக்களாற் செய்யப்பட்டுவந்தது. அரசர்களும், செல்வந்தர்களும் அக்கவிகளை ஆதரித்து ஊக்கமளித்து வந்தனர். அதனாலேயே தற்காலத்திலும் மிக உயர்ந்த நூற்களாய்ப் புகழ்தேத்தும் பல தமிழ்க் காவியங்களும் வெளியாயின. தமிழ் நாட்டின் தலை நகராய் ஒரு காலத்திற் சிறப்புற்றோங்கிய மதுரையும் பதியில், மூன்று காலங்களில் இருந்ததாகக் கூறப்படும் தமிழ்ச் சங்கத்தாலும் பல அறிவு நூல்கள் வெளியிடப்பட்டுவந்தன. அவையும் இலக்கண இலக்கியப் பயிற்சி உடையார்க்கே இனிது விளங்குந் தன்மையன. ஆதலின், யாவர்க்கும் எளிதில் விளங்கும்படி, தற்கால தமிழ்ப் பெரியார் பலர், தமது விடா முயற்சியினால் பல அறிவு நூல்களும், பொழுது போக்கிற்காக படிக்கக்கூடிய பல புதுக்கதைகளும் வெளியிட்டுள்ளனர், அப்பெரியார் தம் உயர்ந்த நூற்கள் சிலவற்றை யான் படித்தபொழுது, உரைநடையில், ஒரு சிறு புதுக்கதை எழுதவேண்டுமென்னும் விருப்பம் என்னை வெகு நாட்களாய்த் தூண்டியது. யான் பத்திரிகைகட்கு கட்டுரைகள் அடிக்கடி வரைந்தனுப்பியதைக் கண்ட என் உற்றார்உறவினரும், என் சினேகிதிகளும் அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டுமென்று பெரிதும் விரும்பினார், அன்னார் தம் விருப்பத்தையும், எனது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டியே இச்சிறு புத்தகத்தை வெளியிடுகின்றேன். எங்கள் விருப்பம் ஈடேறுமாறு அருள்பாலித்த எல்லாம் வல்ல இறைவனைத் துதிக்கின்றேன்.

இக்கதையில், தலைமகனாய்வரும் சுரேந்திரன் என்பான், கடமையின் பொருட்டு தன் வாழ்க்கையின்பத்தையே தியாகஞ் செய்கின்றான். கதா நாயகியாகிய விஜய சுந்தரி என்னும் மின்னாள். தங்கடமையினின்றும் வழுவிவிட எண்ணுங்காலை, உலகினில் உயிர்வாழ்வான் ஒவ்வொருவனும், எல்லாவற்றிலும் கடமையையே தன் வாழ்க்கையிற் பிரதானமாய்க் கொள்ளவேண்டுமெனச் சுரேந்திரன் எடுத்துக்காட்டுகின்றான். இக்கதையில் இன்னும் பல சிறந்த நீதிகளும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன, பொது மக்கள் இப்புத்தகத்தை ஆதரித்து, எனக்கு மேன் மேலும் ஊக்கத்து அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இப்புத்தகத்தை அச்சிடுமாறு என்னைப் பலமுறையும் தூண்டிய என் உற்றார் உறவினர்கட்கும், தாய் நாட்டின் விடுதலைப் போரிற்கலந்து, சிறை சென்ற தேசபக்தரும், தற்போது தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக இருந்துவரும், எனது பாட்டனார் மு.யூ, நவாபு சாகிபு மரைக்காயர் அவர்கட்கும், நாகூர் வாசியும், பெரும்பாலும் சிங்கையில் வதிந்து பல பொதுத்தொண்டுகளில் ஈடுபட்டிருப்பவரும், பெண் மக்களின் முன்னேற்றத்திலும் தேனினுமினிய தமிழ் மொழியின் அபிவிருத்தியிலும் மிக்க ஆர்வமும். விடாமுயற்சியுமுள்ள சகோதரர் S. செய்யது அஹமது அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி என்றும் உரித்தாகுக.

நச்சுடை சில நாகங்களைத் தனக்குக் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர் தம் தூற்றுதலுக் கஞ்சி, பத்திரிகைகட்கு பெயர் போடாது கட்டுரைகள் வரைந்தனுப்புமாறு அன்று என்னைத் தூண்டியவரும், இன்று தமது பச்சிளங்குழவிகளை பரிதவிக்கவிட்டு பரமனடி எய்தியவருமான எனது அரும்பெருஞ் சிற்றன்னையார் ஹதீஜா நாச்சியார்க்கு இப்புத்தகத்தை என் மனமார்ந்த பிரீதியுடனும் அனுதாபத்துடனும் அர்ப்பணஞ் செய்கின்றேன். அம்மாதரசியின் ஆத்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனடி தொழுது வேண்டுகின்றேன்.

நாகூர்
2-2-28
சித்திஜுனைதா பேகம்.


பொருளடக்கம

¢
அத்தியாயம்

1. சிறு குடும்பம்
2. வனமாளிகை
3. மாயாபுரி
4. ஹோட்டலில் சுரேந்திரன்
5. வனமாளிகையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்
6. பிள்ளையார்ப்பிடிக்க குரங்காய் முடிந்தது
7. இயற்கையன்னையின் இன்பவிளையாடல்
8. திடுக்கிடும் செய்தியும், தியங்கியமனமும்
9. அன்புள்ள அரசன் - அதிசய கடிதம்
10. விருந்து
11. வஞ்சகனால் வஞ்சிக்கப்பட்ட வஞ்சி
12. அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்
13. எதிர்நோக்கிய அபாயம் - எழில் மிகுவனிதை
14. பிரிவாற்றாமை
15. தியாக செல்வனும் அன்புச் செல்வியும்
16. கருப்பு மாளிகை
17. எதிர்பாரா நிகழ்ச்சி
18. உடைந்த நெஞ்சத்தின் உன்னத நோக்கம்.


காதலா? கடமையா?

அத்தியாயம் 1

ஒரு சிறு குடும்பம்

பாண்டிய நாட்டின் தலைநகராய் ஒரு காலத்தில் சிறப்புற்றோங்கிய மதுரையம்பதியில், ஒரு பகுதியின்கண், ஒரு சிறு குடும்பத்தார் நமது கதை நிகழுங்காலையில் வசித்து வந்தனர். விமலநாதன் என்பாரே இக்குடும்பத்தலைவர். சுரேந்திரநாதன் என்னும் அவர்தம் இளஞ்சகோதரனொருவனும். அவர் மனைவியொருத்தியுமே இக்குடும்பத்திலுள்ளவர்கள். இவர்கள் மாயாபுரியின் அரசகுடும்பத்தை சார்ந்தவர்களென்றும். பல்லாண்டுகட்கு முன்னரே இவர்கடம் முன்னோர் இவ்வூரில் குடியேறினரென்றும் கூறப்பட்டது. மாயாபுரியின் அரசவம்ச சாடை பெரும்பாலும் இவர்கட்கிருப்பதாயும் ஓர் வதந்தியுண்டு.

விமலநாதன் தனது உழைப்பினால் கொண்டு வரும் பணத்தைக் கொண்டே மூவரும் மிகச் சிக்கனமாய் வாழ்க்கை நடத்தினர். சுரேந்திரன் பல உயரிய குணங்கள் இயற்கையிலேயே அமையப் பெற்றவனாயினும் கவலையின்றி ஊர் சுற்றி அலைவதையே தொழிலாய்க் கொண்டிருந்தான். விமலநாதன், தன் தம்பியின் மாட்டு கொண்டுள்ள அளப்பரிய அன்பால் அவனை கடிந்து ஏதுங் கூறுவதில்லை. ஆனால், அவர்தம் மனைவியோ, தங்கணவனின் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போன்றே எண்ணி நேசித்தாளாதலின், அடிக்கடி சுரேந்திரனிடம் இங்ஙனம் ஊர் சுற்றித் திரிய வேண்டாமென்றும் ஏதேனும் ஓர் வேலையில் அமர்ந்து, ஓழுங்காய் நடந்து கொள்ளும்படியும் அன்பாய் கடிந்து புத்தி புகட்டுவாள். இங்ஙனம் தன் அண்ணியார் அடிக்கடி கூறிவந்தது சுரேந்திரனது மனத்தை உறுத்தியது. அன்றியும், மாயாபுரிக்கும், மற்றும் பிற ஊர்கட்குஞ் சென்று பார்த்து வரவேண்டுமென்னும் மனோவெழுச்சி உண்டாயது. ஆகவே, தமயனும் தமயன் மனைவியும், அறிந்தால் தன்னைப்போக விடா ரென்றெண்ணி, ஒருநாளிரவு ஒருவருமறியாவண்ணம் தான் சேர்த்து வைத்திருந்த 25 ரூபாயை எடுத்துக்கொண்டு மாயாபுரியை நோக்கிப் பிரயாண மாயினான். காலையில் விழித்தெழுந்த விமலநாதன் மனைவி சுரேந்திரனைப் படுக்கையிற் காணாமையான் வெளியிற்சென்றிருக்கக் கூடுமென்றெண்ணி வாளாயிருந்து விட்டாள். ஆனால் பொழுதேற அவள் மனத்தில் விவரிக்க வொண்ணா அச்சம் பூண்டு வதைத்தது. 'வருவான் வருவான்' என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள். இதற்குமேல் உண்மையை உரைக்காதிருத்தல் கூடாதென்றெண்ணி, தங் கணவர் வந்ததும் சுரேந்திரன் காலையிலிருந்து காணப்படவில்லை யென்னும் உண்மையை உரைத்தனள். திடுக்கிட்டுப்போன விமலநாதன் பல ஆட்களைக் கொண்டு எங்குந்தேடியும் அவன் அகப்பட்டானில்லை. பல ஊர்கட்கும் ஆளனுப்பியதன்றி. ஊர்க்காவற்சாவடியிலும் எழுதி வைத்தார். ஒன்றும் பயனளிக்கவில்லை. இதே கவலையால் ஏக்கம் பிடித்த இருவரும் செய்வதியாதெனத் தெரியாமல் கலங்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இவர்கடம் நிலைமை இங்ஙனமிருக்க, மாயாபுரியினை நோக்கிச் சென்று நமது இளவலை கவனிப்போம். பல ஊர்களையுஞ் சுற்றிக்கொண்டு. வருவோர் போவோரிடங் கேட்டு மாயாபுரியின் எல்லையைக் குறுகினான். கையிற் பணமில்லை என்ன செய்வதெனத் தெரியாது சற்று தயங்கினன். மீண்டும் அவனுக்கு இயல்பாய தைரியம் திரும்பி வந்தது. நேரமோ கழிந்து கொண்டே சென்றது. அன்று பொழுது போவதற்கு முன் மாயாபுரியின் எல்லைக்குள் சென்று விட்டதற்கடையாளமாய் அவ்வெல்லையின் ஆரம்பத்தில் அழகியதோர் சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

சுரேந்திரனுக்கு பசியோ மிகவும் அதிகமாயிருந்தது. அன்றியும் வழிப் பிரயாணத்தினாலும் மிகவுங் களைப்படைந்திருந்தான். மழைத்துளிகள் சிறு சிறு துளிகளாய் விழுந்து கொண்டிருந்தன. அச்சிற்றுண்டிச் சாலையின் கதவு மூடிவைக்கப் பட்டிருந்தது. சுரேந்திரன் மெதுவாய்ச் சென்று கதவைத்தட்டினான். சிற்றுண்டடிச் சாலையின் சொந்தக்காரனது இளம் மகளொருத்தி கதவை திறந்தாள். கதவினைத் திறந்து விட்ட அவ்விளம் பெண் சுரேந்திரனைக் கண்டதும் வியப்போடு ஊற்று நோக்கி தலைவணக்கஞ் செய்தாள். அவட்கு சிறிது நேரம் பேச வாயெழவில்லை. பிறகு அவள் சுரேந்திரனை நோக்கி, "மாட்சிமை தாங்கிய பெருமானே, வருக! எங்கள் மனைக் கெழுந்தருளி எங்களைக் கௌரவித்த கோமானே வருக!" எனக் கூறிவிட்டு, தன் தாய் தந்தையரை அழைக்கும் பொருட்டு உள்ளே ஓடிச் சென்றாள். அவள் செய்த தலைவணக்கமும், தோற்றுவித்த வியப்புக்குறியும் சுரேந்திரனை, திப்பிரமை அடையும்படி செய்துவிட்டன. எதற்காக தனக்கு அவள் இத்துணை கௌரவங் கொடுக்க வேண்டுமென எண்ணி வியப்புக்கடலுள் ஆழந்திருக்கும் சுரேந்திரனை, அவள் கூறிய மொழிகள் பின்னும் ஆச்சரியத்தில் அவனை ஆழ்ந்துபோமாறு செய்து விட்டன. அவன் ஒன்றுந் தோன்றாமல், வியப்பே வடிவாய் பேசா ஊமை போன்று நின்று கொண்டிருந்தான்.


அத்தியாம் 2

வனமாளிகை

இச் சிற்றூண்டிச் சாலைக்கு ஏறக்குறைய ஒரு மைல் தூரத்தில் அழகிற் சிறந்த வனமாளிகை யொன்றுண்டு. அதைச் சுற்றிலும் விசாலமான எழில் நிறைந்த சிங்காரவன மொன்றிருந்தது. சில தென்னை மரங்கள், ஒன்றிரண்டு மாமரங்கள் தவிர அத்தோட்டத்தில் இருந்தவை பூத் தொட்டிகளும். 'குரோடன்' வரிசைகளும் கொடிப் பந்தல்களுந்தான். அவ் வனமாளிகைக் கெதிரில் ஒரு கொடிப் பந்தரின் மறைவில் அழகியதோர் ஊற்றுக் குழாய் நடுவில் அமைக்கப்பட்ட வட்டம் ஒன்றிருந்தது. இந்த வட்டத்தில் பன்னீர் தௌ¤ப்பதேபோன்று, சுழல் குழாய் நீரைத் தௌ¤த்தபோது சூரிய கிரணங்கள் நீர்த்துளிகளில் பட்டு. இடைவிடாமல் வானவில் நிறங்கலை மிக்க அழகாய்த் தோன்றச் செய்த காட்சி, காண்போர் கண்ணையுங் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. இங்ஙனமே பல சிறு குழாய்கள் ஆங்காங்கு கொடிகட்கும் நீரூட்டின.

இங்ஙனம் மிக்க வனப்போடு விளங்கிய அவ்வனமாளிகையின் உட்புறத்தில், ஒரு விசாலமான அறையில் நான்கு ஆடவர் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர் மேசையின்பேரில் பல உயர்ந்த மதுபான வகைகளும், தட்டுகளில் பலவிதமான தின் பண்டங்களும் வைக்கப் பட்டிருந்தன. ஒரு பணிமகன் மிக்க அடக்க ஒடுக்கத்தோடு வாயிலில் நின்று கொண்டிருந்தான்.

அவ்வாறு சீட்டாடிக் கொண்டிருந்த நால்வரின் தோற்றமும், பிறப்பாலும், செல்வத்தாலும் உயர்ந்த கண்ணியமான பெரிய மனிதர்களுடையதாய்த் தோன்றியது. ஒருவர்க்கு ஏறத்தாழ 25 வயதிருக்கலாம். இயற்கையில் மிக்க அழகுடையராயினும், உடம்பு சரியான நிலைமையிலில்லாமையாலோ, துர்ச்செயல் காரணமாயோ வதனஞ்சுருங்கி, கன்னங் குழி விழுந்து மிக்க மெலிந்த தோற்ற முடையராய்க் காணப்பட்டார். அவர்க்கு மற்ற மூவரும் மிக்க பணிவோடும், மரியாதையோடும் நடந்து கொண்டனர். மற்றும் அவர்க்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த இன்னொருவர்க்கு 50 வயதிருக்கலாம். பரந்த முகமும். விசாலநுதலும், கம்பீர தோற்றமும் உடையராய்த் தோன்றினார்.மற்று மிருந்த இரண்டு பேர்க்கும் நடுத்தர வயதிருக்கலாம். அவர்களும் உயர்வகுப்பைச் சேர்ந்த பிரபுக்களைப் போன்றே காணப்பட்டனர்

அப்போது இரவு மணி எட்டியிருக்கலாம். ஆட்டத்திலேயே முற்றும் மனத்தை செலுத்தி, தம்மையும் உலகையும் மறந்திருந்த மூவரையும், 50 ஆண்டெய்திய முற்கூறிய பெரியார் நோக்கி மிக்க வினயமாய், "நேரமாகி விட்டது, இதோடு ஆட்டத்தை நிறுத்திவிடுவோம்" என்றார். ஆனால். அவர்க் கூறியதை ஒருவரும் செவிமடுத்ததாய்த் தோன்றவில்லை. சிறிது நேரம் ஏதோ சிந்தித்திருந்த பெரியவர், மீண்டும் 25 ஆண்டுடைய யௌவன வாலிபனை விளித்து, 'இளவரசரே ! தாங்கள் இச் சூதாட்டத்தில் இத்துணை ஆர்வங் காட்டலாமா? பொதுமக்கள் தங்களைப்பற்றி பலவாறாய்ப் பேசிக்கொள்ளுவதாய் வதந்தி. இராகுலப் பிரபு தங்களைப் பற்றி பொதுமக்கள் கெட்ட அபிப்பிராயங் கொள்ளும்படி தந்திரமாய்ப் பல சூழ்ச்சிகள் செய்வதாயுங் கேள்வியுற்றேன். ஆதலின், முடிசூட்டும் வரையிலாயினும் தாங்கள் இம்மாதிரி காரியங்களை நிறுத்தி வைத்தலே நலமென எண்ணுகின்றேன்" என்று பணிவுடன் மொழிந்தார்.

அங்கிருந்த மற்றவர், "ஆம், இளவரசே! சேனைத் தலைவர் கூறுவது முற்றிலும் உண்மையே. இராகுலாப்பிரபு இவ்வன மாளிகைக்கு தங்களை வரவழைத்தது கூட ஏதும் சூழ்ச்சியா யிருக்குமென்றே எண்ணவேண்டி யிருக்கின்றது. பொது மக்களிடை தங்களைப்பற்றி கெட்ட அபிப்பிராயத்தைப் பரப்பிவிட்டால். அஃது இராகுலனுக் கநுகூலமானதன்றோ?" என்றார்.

இன்னொருவர், "ஆம் ஒரு சாரார் இராகுலனுக்காக உழைத்து வருவதாய்த் தெரிகின்றது. தங்களின் நடத்தை கெட்டதென நிரூபிக்கப்படுமாயின், அதை இராகுலப்பிரபுக் கநுகூலமாய் உபயோகித்துக்கொள்ளவும், அவர்கள் விருப்புகின்றனர்-" என்று கூறி வரும்பொழுது, இளவரசர் அவரை அடை மறித்து,

"ஆம், நண்பர்களே! நீங்கள் இப்போது கூறியவையெல்லாம் உண்மையே. இராகுலனது சூழ்ச்சிகளை அறியாமல் நாம் இங்கு வரவில்லை. அவன் செய்வனவற்றை நாம் அறிந்து கொள்ளாதது போன்றே நடிக்கவேண்டும். என்பேரில் குடி மக்களிடையே கெட்ட அபிப்பிராயம் பரப்பப்படுமாயின். இராகுலனையே தமக்கரசனாய்த் தேரந்தெடுப்பார்களென்று அவன் நம்பியிருக்கிறான்" என்றார்.

"அங்ஙனம் அவர் எண்ணுவது இயல்புதானே? தாங்கள் அரசராய் வராவிடின். தங்கட்கடுத்தபடி அரசுரிமைக்குரியார் இராகுலப் பிரபுவன்றோ? அதுவன்றி பிரபு இராகுலன். இளவரசி விஜயாளை மணக்க பெரிதும் விரும்புவதாய்த் தெரிகின்றது. இன்னொரு விஷயத்தையும் நாம் முக்கியமாய் கவனிக்கவேண்டும். பொதுமக்களின் விருப்பம், விஜயசுந்தரி தங்கட்கரசியாக வேண்டுமென்பதே" என்றார் சேனாதிபதி கமலாகரர்.

"ஆம், கமலாகரரே! நீர் கூறுவது உண்மையே. ஆனால் அரசிளங்குமரி விஜயம் என்னை நேசிக்கின்றாளா? என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவளிடத்து என் மனத்தை எத்துணை வெளிப்படையாய்த் திறந்து காட்டியபோதினும் அவள் தன் உள்ளக்கருத்தை ஒருவராலும் அறிந்துகொள்வதற் கியலவில்லை" என்று ஒருவாறு வருத்தத்தோடு கூறினார் இளவரசர்.

"ஆயினும், அவள் கடமைத் தவறாதவன். பொது மக்கள் தன்னை அரசியாக கண்டு களிக்க விரும்புவதை அவள் நன்கறிவாள். குடி மக்களின் விழைவையும், இறந்துபோன தன் தந்தையாரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதே தங்கடனென எண்ணுவாளேயன்றி, அதற்கு மாற்றமாய் நடக்கச் சிறிதும் துணியாள்" என்றார் கமலாகரர்.

அத்துடன் அவர்கடம் பேச்சு முடிவுற்றது. அதற்குமேல் ஆட்டத்தை நிறுத்தி விட்டு. ஆகாரம் அருந்துதற்கு சமையல் கட்டிற்குச் சென்றனர்.


அத்தியாயம் - 3

மாயாபுரி

நாம் கதையைத் தொடர்ந்து செல்லுதற்கு முன் மாயாபுரியைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்ளுதல், கதா நிகழ்ச்சிக்கு இன்றியமையாதது வேண்டப்படுவதால், அதைப்பற்றிய சில விவரங்களை அறிவதற்காக, நாம் இங்கே சற்று தாமதிப்போம்.

மாயாபுரி யென்பது இரண்டு மலைகட்கு நடுவே, அழகான பள்ளத்தாக்கில், ஆற்றங்கரை யோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மலைப்பிரதேசம். அப் பிரதேசத்தை அரச குடும்பத்தின் வழித்தோன்றலாக வந்த சுசீலரென்பார் ஆட்சி புரிந்து வந்தார். அவர்க்கு விஜய சுந்தரி என்ற பெண்மகவைத் தவிர, வேறு குழந்தைகள் கிடையா. ஆகவே சுசீல மன்னர்க்குப் பிறகு, அவர் சகோதரி புதல்வனான பிரதாபனே பட்டத்திற்குரியனாய், அந்நாட்டு வழக்கப்படி கருதப்பட்டான். அதுபற்றி குடிமக்களும், உற்றார் உறவினரும், பிரதாபனை இளவரசனாகவும், விஜயத்தை இளவரசியாகவுங் கருதி மரியாதை செலுத்தி வந்தனர்.

செல்வி விஜயாள் மக்கள் மனத்தைக் கவரும் மாண்புடன் விளங்கினாள். சிறந்த அழகும், பரந்த ஞானமும், சீரிய குணமும் ஒருங்கமையப்பெற்ற இளவரசியை மக்கள் விரும்பியது வியப்பாமா? அவள் ஏழைகளிடத்து காட்டும் அன்பும், ஆதரவற்றரிடங் கூறும் இனிய மொழிகளும் அவட்கு தனி மதிப்பைக் கொடுத்தன.

இளவரசன் பிரதாபனுக்கடுத்தபடியாய், பிரபு இராகுலனே பட்டத்திற்குரியனாய்ப் பொது மக்களாற் கருதப்பட்டான். அவன், கோமகன் பிரதாபுக்கு ஒன்றுவிட்ட சகோதரனாவான்.

இஃதிங்ஙனமிருக்க, தமக்கு மரண காலம் கிட்டிவிட்டதென உணர்ந்த சுசீலமன்னர், தமது மந்திரி, பிரதானிகள், சேனைத் தலைவர் முதலியோரை அருகழைத்து. பிரதாபனையும் விஜயாளையும், தமக்குப் பிறகு அரசனையும் அரசியாயும் ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அரசர் கூறியதை மந்திர சுற்றத்தார், தந்திரச் சுற்றத்தார் முதல் எல்லோரும் அன்போடு ஏற்றுக்கொண்டனர். பிறகு, தம் மகளையும் மருமகளையும் மருங்கழைத்து, இருவரும் ஒருவரையொருவர் மணந்துகொண்டு, அரச பாரத்தை ஏற்று, நீதிநெறி வழுவாது ஆட்சி புரிந்து வருவதே தம் விருப்பமெனக் கூறி, மீண்டும் தம் மகளை நோக்கி, "குழந்தாய்! நான் கூறியவைகளை யெல்லாம் உன் மனதில் பதிய வைத்துக்கொள். உன் அன்னையார் இறந்து இத்தனை ஆண்டுகளாய், அவளது விருப்பத்தை நிறைவேற்றுவான் வேண்டி, நான் மற்றோர் மாதை மணம் புரிந்து கொள்ளவில்லை. உன்னையே என் ஏகபோக சொத்தாக நினைந்து அன்பு பாராட்டி வந்தேன். நீ கடமைத் தவறாது நடந்து கொள்ளுவாயாக. நீயும் பிரதாபும் ஒன்று பட்டு, நெறி பிறழாது ஆட்சி புரிந்து வருவீர்களாயீன், குடிமக்கள் உங்களை வாழ்த்துவர். நாட்டில் அமைதி நிலவும். பகைவர் அஞ்சியோடுவர். இம்மாயாபுரி. பிற ஆட்சிக்குட்பட்டதன்று. இஃது தனிப்பட்ட பிரதேசம். நீ என் விருப்பத்தை மீறி. பிரதாபை விடுத்து, பிறனொருவனை மணந்துகொள்ளுவாயின்.அரசுரிமையைப்பற்றிய கிளர்ச்சிக்கு இடமளித்தவளாவாய். விஜயா! இன்னும் அரை நாழிகையிலோ ஒரு நாழிகையிலோ என் உயிர் போய்விடும், ஆகவே, நீ என் விருப்பப்படியே பிரதாபை மணந்து கொள்ளுவா யென்று உறுதியாய் நம்பி, நான் மன அமைதியுடன் உயிர் விடுகின்றேன். இறக்குந் தறுவாயிலிருக்கும் எனது இந்த விருப்பத்தை, பூர்த்தி செய்ய வேண்டியது புதல்வியாகிய உனது கடமை" என்று உருக்கத்தோடு கூறினார்.

பிறகு பிரதாபை அருகழைத்து, பல்வேறு புத்தி புகட்டி, ஒழுக்க நெறி கற்பித்து, தமது சேனைத் தலைவர் கமலாகரர் கூறும் புத்திமதியைக் கேட்டே நடந்து கொள்ள வேண்டுமென்று கூறினார். அதன் பிறகு கமலாகரரை அழைப்பித்து, பிரதாபை அவரிடம் ஒப்படைத்து, அவரது சொந்தக் குழந்தையைப் போலவே அவனை பாவித்து, எல்லா விஷயங்களிலும் அவர் தம் விருப்பப்படியே செய்து வரவேண்டு மென்றுந் தெரிவித்துதன்றி கமலாகரர் கடமைத் தவறாத உத்தம புருடராகலின், அவரிடத்து தமக்கு முழு நம்பிக்கையும் உண்டெனத் தெரிவித்தார். இங்ஙனம் பேசிக்கொண்டிருந்த சில வினாடிகட்கெல்லாம், அவ்வரசர் பெருமான் என்றும் எழுந்திரா நித்திரையிலாழ்ந்தார். ஆறு மாதங்கள் கடந்தன. விஜயாளின் இளம் பருவத்திலிருந்தே அவள் மாட்டு அளப்பரிய அன்பு பாராட்டி வந்த இளவரசன் பிரதாப், சுசீல மன்னர் இறந்த பிறகு இன்னும் அதிகமாய் அவளை நேசித்து வந்தான். ஆனால் செல்வி விஜயாள், பிரதாபை அத்துணை தூரம் நேசித்தாளா? இல்லையா? என்பதை ஒருவராலும் உணர்ந்து கொள்ளுதற் கியலவில்லை. விஜய சுந்தரியின் உள்ளப் பான்மையை ஒருவராலும் வெளிப்படையாய் விளங்கிக்கொள்ள முடியாமையான் பிரதாப் தனது விருப்பத்தை அவளிடம் அத்துணை அதிகமாய் தெரிவிக்க அஞ்சினான். ஆனால் பொது மக்களோ விஜயாளை அரசியாகக் கண்டு களிக்க ஆவலுற்று துடித்துக்கொண்டிருந்தனர்.

இளவரசன் ஒரு உல்லாச புருஷன். மக்கட்கு அவனது நடத்தைகளில் சில பெரும்பாலும் அருவருப்பைத் தந்தன. அவனது நடத்தையைப்பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொள்ளுவாராயினர். குடியிலும் ஆடம்பரத்திலும் மூழ்கியிருப்பதாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்,இங்ஙனம் பிரதாபின் நடத்தையைப்பற்றி குடி மக்களிடம் மிகைப்படுத்தி, மிகத் தந்திரமாய்ப் பிராசாரம் புரிந்து வந்தது பிரபு இராகுலனது வகுப்பாரே. ஆயினும், குடிமக்கள் தாம் அன்போடு நேசித்துவரும் செல்வி விஜயாளுக்கு கணவனாகப் போகிறவரும், இறந்து பட்ட மன்னரின் விருப்பப்படி தங்கட்கு அரசராய் வரக்கூடிய வரும், அத்தேய வழக்கப்படி நேரிய முறையில் அரசுரிமைக் குரியருமான இளவரசன் பிராதாபைப் பற்றி வெளிப்படையாய் பேசிக்கொள்ள அஞ்சினார். இந்நிலையில்தான் முடிசூட்டுதற் குறிய ஏற்பாடுகள் நடைபெற்றன.

முடி சூட்டுதற்கென்று நல்ல நாளொன்று குறிப்பிடப்பட்டது. அன்று எப்படியும் முடிசூட்டியே தீர வேண்டுமென்பது குடி மக்களது அவா.

பிரபு இராகலனோ, இளவரசி விஜயாள் மாட்டு தன் மனத்தைப் பறிகொடுத்திருந்தான். அவளையும் அவட்கே நியாயமாய் உரித்தான சிம்மாசனத்தையும் கவர்ந்து கொள்ள பெரிதும் பேராசைக்கொண்டான். இயற்கையிலேயே ஆழஅறிவும் அறியசூழ்ச்சியும் உடைய இராகுலானது மூளை பிரதாபுக்கு முடிசூட்டு தற்கியலாமல் எங்ஙனம் தடுக்க முடியுமென்பதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.

சில நாட்களாய் உடல் நலமின்மையான் மெலிந்து தோன்றிய பிரதாபுவைக் கண்ட இராகுலன், அதுவே தான் சூழ்ச்சி செய்தற்கு ஏற்ற தருணமாய் நினைந்தான். அடிக்கடி பிரதாபிடத்து, கிராமத்திற்குச் சென்று, சில நாட்கள் ஆங்கிருக்கும்படியும், அங்ஙனம் கிராமத்திற்குச் செல்லின், கிராமக் காற்றும், இனிமையான இயற்கைக் காட்சிகளும் அவன் மனத்தைக் கவரக் கூடுமென்றும் கூறிவந்தான்.

பிரதாபின் மனத்திற்கு இராகுலனது மொழிகள் சூழ்ச்சியாய்த் தோன்றியபோதிலும், கிராமவாசமே உடல் நலத்திற்கு கேற்றதென நினைந்து, சில நாட்கள் கிராமத்திலுள்ள இராகுலனது வனமாளிகையிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான். இராகுலன் தன் கருத்து நிறைவேறுதற்குரிய ஏற்ற தருணத்தை எதிர்நோக்கி யிருந்தமையான், தன் சொந்த பணி மக்கள் மூலமே எல்லா ஏற்பாடுகளுஞ் செய்து தெரிவித்தான், குறித்த நாளொன்றில் இளங்கோ பிரதாப், இராகுலனது சூழ்ச்சியை சிறிதும் அறிந்துகொள்ளாததே போன்று நடித்து அவனது வனமாளிகைக்குச் செல்ல, கமலாகரரும் இன்னும் முக்கியமான சில பிரபுக்களும் பின் தொடந்தனர்.

இங்ஙனம் இளவரசன் பிரதாப், பிரபு இராகுலனது வனமானிகைக்குச் சென்றபொழுதுதான், நமது கதை ஆரம்பமாகின்றது.


அத்தியாயம் 4

ஹோட்டலில் சுரேந்திரன்

வாசகர்களே ! இனி, நாம் கதையைத் தொடர்ந்து செல்வோம். சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரனது புதல்வியின் மொழிகளைக் கேட்டு ஆச்சரியத்தினால் கற்சிலையைப்போன்று சுரேந்திரன் நின்றுவிட்டான் என்று முன்னர்க் கூறினோமல்லவா? அங்ஙனம் சில வினாடிகளே நின்றுகொண்டிருக்க, அதற்குள் அச் சிறுமி, தன் தாய் தந்தையரை அழைத்து வந்தாள். இவர்களிருவரும் சுரேந்திரனைக் கண்டதும் சிறுமி சுசீலை செய்தவாறே தலை வணங்கி நின்றனர்.

சிறிது நேரம் வியப்பே வடிவாய் ஒன்றும் பேசாதிருந்த சுரேந்திரன். பிறகு அவர்களைப்பார்த்து,"நீங்கள் ஏன் என்னைக் கண்டதும் இங்ஙனம் தலைவணங்கி நிற்கின்றீர்கள்? இச் சிறுமி கூறிய வார்த்தையின் பொருளென்ன? என்னால் ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அன்பு கூர்ந்து சற்று விளங்க உரைக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்" என்றான்.

சுரேந்திரன்:- நான் மதுரையைச் சேர்ந்தவன் . என் பெயர் சுரேந்திரன்னென்பர். எனக்கு இம் மாயாபுரியையும் மற்றம் பிற ஊர்களையும் பார்க்க வேண்டுமென்னும் அவா அதிகமாயிருந்ததுபற்றி, யான் என் வீட்டார் ஒருவரும் அறியாவண்ணம், இரவில் வீட்டை விட்டும் வெளிப்போந்து. பல ஊர்களுஞ் சுற்றிப் பார்த்துக்கொண்டே இன்று இங்கு வந்தடைந்தேன். இவ்வளவுதான் என் வரலாறு.

சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரன்:- ஐயா! நாங்கள் உம்மைக் கண்டு தலைவணங்கி, நின்றதற்குக் காரணம். இன்னும் இரண்டொரு நாட்களில் முடிபுனையப்போகும் எங்கள் இளவரசர் பிரதாபன். உருவத்தில் உம்மைப்போலவே இருப்பார்.நன்றாய்க் கூர்ந்து கவனித்தாலன்றி. ஒருவராலும் உம்மை பிரதாபல்லவென்று தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் இளவரசர் பிரதாபைவிட நீர் இளமையுடையாராயும், அழகுடையாராயும் காணப்படுகின்றீர். உமது வதனத்தில் இருக்கும் மீசையை மட்டும் நன்றாய் வெட்டி விட்டுக்கொண்டால், உமக்கும் அரசர்க்கும் வேற்றுமை கண்டுபிடிக்க யாராலும் முடியாது. நண்பரே! இப்போது உம்மைக்கண்டு நாங்கள் தலைவணங்கியதற்குரிய காரணத்தை விளங்கிக்கொண்டீரல்லவா?

சுசீலை:- ஆம், அப்பா! இவரைக்கண்டதும் நமது இளவரசர் என்றே நான் எண்ணினேன். அதனாலேயே உங்களை யழைத்து வந்தேன்.

இவர்கள் கூறியதைக்கேட்ட சுரேந்திரன் சற்றுநேரம் ஏதோ சிந்தித்துக்கொண்டு பேசாதிருந்தான். பிறகு அவர்களைப்பார்த்து, "ஆம், ஐயா, நீங்கள் கூறியவை யெல்லாம் உண்மையென்று உணர்ந்து கொண்டேன். ஆனால் என் மனத்தே ஒரேயொரு ஐயம் எழுகின்றது. அஃதாவது, மாயாபுரியின் இளங்கோவான பிரதாப், என்னைப் போன்று எளிய உடையில், இங்ஙனம் தன்னந் தனியே இந் நேரத்தில் வருவாரே? என்பதே" என்றான் .

"அன்பான ஐயா, உமது மனத்திலுதித்த ஐயம் நியாயமானதேயாகும். இளவரசர் தமது தலை நகரிலிருந்து இவ்விடத்திற்கு தனியே வரவில்லை. இவ்விடத்திற்கு சமீபத்திலேயே இராகுலப் பிரபுவினது வனமாளிகை இருக்கின்றது.. பிரதாப இளவரசர், உடல் நலத்தைக்கருதி இவ்வனமாளிகையிற் சில நாட்களாய்த் தங்கியிருக்கின்றார். அவர் ஒருவிதமான உல்லாச பேர்வழியாதலின், சிற்சில அமயங்களில் அவர்மாறுடையயோடு எங்கேனும் செல்வதுண்டு. அதைப் போலவே, இன்று அவர் இங்கு வந்திருப்பதாய் நாங்கள் எண்ணியது ஓர் வியப்பல்ல. ஏன், நான் சொன்ன காரணம் உமக்கு பொருத்தமாகப் படவில்லையா? என்றான் சாப்பாட்டு கடைக்காரன்.

"நீர் கூறியதில் பொருத்தமற்றது ஒன்றுமில்லை. சரி, இது போகட்டும். இளவரசர் பிரதாபனுக்கு முடிசூட்டு வைபவம் இன்னும் இரண்டொரு நாளிலென்றா கூறினீர்" என்றான் சுரேந்திரன்.

"ஆம், அப்படித்தான் எங்கும் கூறிக்கொள்ளுகின்றனர். எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகவேயிருக்கின்றது. முடிசூட்டு வைபவத்தைப் பார்க்கும்பொருட்டு ஆயிரக்கணக்கான மக்கள். தலைநகரை நோக்கிச் செல்லுகின்றனர். என் மகள் சுசிலையும் அங்கு செல்லவேண்டுமென்றே தொந்தரை கொடுக்கின்றாள்" என்றான் ஹோட்டல் சொந்தக்காரன்.

"பேச்சிலேயே பொழுதை போக்கிவிட்டால். வந்திருப்பவர் உணவருந்த வேண்டாமா? நேரமாகிறது, சாப்பிட வாருங்கள்" என்று சற்று அதிகார தோரணையில் தங்கணவனைப் பார்த்துக் கூறினாள் ஹோட்டல்காரன் மனைவி.

அத்துடன் அவர்களது பேச்சு நின்று விட்டது. சிற்றுண்டிச்சாலை சொந்தக்காரன் முன்செல்ல, அவனைத் தொடர்ந்து அவனது மனைவியும், மகளும், சுரேந்திரனுஞ் சென்றனர். சுரேந்திரனுக்கு மிக்க உருசிகரமான உணவு வகைகளும். பானைவகைகளும் பரிமாறப்பட்டன. மிகவும் பசியோடிருந்த சுரேந்திரன், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுவகைகளை நன்றாய்ச் சாப்பிட்டான். பிறகு அவனுக்கென விடப்பட்ட படுக்கையறையிற் சென்று, களைப்பு மேலீட்டால் படுக்கையிற் படுத்து ஆழ்ந்த துயிலில் அழுந்தி விட்டான்.

காலை மணி எட்டுக்கு படுக்கையினின்றெழுந்து உட்கார்ந்தான். அவன் படுத்திருந்த அறையின் பலகணிவழியாய்ச் சூரிய கிரணங்கள் வீழ்ந்து கொண்டிருந்தன. தான் வெகு நேரம் வரையிலும் அயர்ந்து துயின்று விட்டதாய் நினைந்த சுரேந்திரன், காலைக்கடன் கழிக்க வெண்ணிஉடனே படுக்கையினின் றெழுந்தான். எழுந்திருக்க முடியவில்லை. உடல் அவ்வளவு கனத்திருந்தது. தன் உடல் மிகவுங் களைப்படைந்திருந்தமையான், இன்று பகற்பொழுது முழுதும் ஓய்வெடுக்கக் கொள்ளவேண்டுமென்றெண்ணி, ஒருவாறு எழுந்து காலைக்கடன் கழித்து, ஏதோ சிறிது ஆகாரம் உட்கொண்டு மீண்டும் படுக்கையிற் படுத்துக் கொண்டான்.

இங்ஙனம் பகற்பொழுது கழிய, சாய்ங்காலம் மணி ஐந்துக்கு, அந்த ஹோட்டல்காரனுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு. அங்கிருந்து புறப்பட்டான் மெல்லமெல்ல சுரேந்திரன், வழிநெடுக நடந்து கொண்டிருந்தான். நேரங் கழிந்து கொண்டே சென்றது. அவ்வமயம் அவன் கண்கட்கு இனிமையாய்த் தோன்றிய சிங்காரவனமொன்¢று காணப்பட்டது. அதன் வாயில் எவ்வித காவலுமின்றி திறந்திருந்தமையால் சுரேந்திரன் அதைச் சுற்றிப்பார்க்க வெண்ணி அதற்குள் நுழைந்தான். அஃது மிக்க மனோகரமாய் விளங்கியமையான், அன்றிரவை அங்கேயே கழிக்க நினைந்து, ஆங்கோரிடத்திற் தோன்றிய பசும்புற்றரையில் அமர்ந்து கொண்டான். தன்னைக் காணாது, தன் அண்ணனும அண்ணியும் எங்ஙனம் வருந்துகின்றனரோ என்றெண்ண அவன் மனம் மிக்க துயரடைந்தது. அதனோடு பல்வேறுபட்ட நினைவுகளும் அவன் மனத்தில் தோன்றின. இங்ஙனம் தன் மனத்திற்தோன்றிய நினைவுகளிலேயே தன் சிந்தனையை செலுத்தியபடி, அப்புற்றரையிலேயே படுத்து உறக்கத்தில் ஆழ்ந்தான்.


அத்தியாயம் 5

வனமாளிகையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்

பகலவன் கிழக்கே தோன்றினான். அவனது வெய்ய கிரணங்கள் இராகுலப் பிரபுவினது வன மாளிகைமீது வீழ்ந்தன.

சுரேந்திரன் கண் விழித்தான், தான் ஒர் புற்றரையில் படுத்திருப்பதை உணர்ந்து, உடனே எழுந்து உட்கார்ந்தான். காலை நேரத்தில் அவ்விடம் மிக்க மனோகரமாய்த் தோன்றியது. அத்தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க எண்ணி, மெதுவாய் எழுந்தான். எங்கு பார்க்கினும் அழகிய பூஞ்செடிகளும், குரோடன் வரிசைகளுமே காணப்பட்டன. அத்தோட்டத்தின் நடுவே எழில் மிகுந்த மாளிகை யொன்றிருந்தது. அம்மாளிகையின் எதிரிலிருந்த கொடிப்பந்தல், எல்லாவற்றினுஞ் சிறந்து மிகக் கம்பீரமாய் விளங்கிற்று. அதன் மீது பல நிறங்களையுடைய பூக்கள் எண்ணற்று மலர்ந்திருந்தன. பூக்கள் இலைகளைக்கூட மறைத்துவிட்டன. தென்றலின் அவை ஒய்யாரமாய் அசைந்தசைந்தாடியது. காண்போரைக் களிப்புறும்படி செய்தது. இத்தகைய எழில் மிகுந்த அச்சிங்கார வனத்திடையே சுரேந்திரன் உலாவி வரும்பொழுது, அங்கியணிந்த, நீண்ட ஒருருவம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு தம்பித்து நின்று விட்டான். அங்ஙனம் எதிர்பாராது தன்னை நோக்கிவரும் உருவத்தைக் கண்ட நமது இளவல் சற்று அச்சமடைந்தானென்றே கூறல் வேண்டும். அவ்வாறு வந்த அவ்வுருவம் கிட்ட நெருங்கியதும், அஃது கம்பீரத் தோற்றமுடைய ஓர் கனவான் என்று சுரேந்திரன் அறிந்து கொண்டான், அக்கனவான் அவனை நெருங்கி வந்ததும், நின்று தலைவணங்கி பிறகு அவனைப் பார்த்து," என்ன இளவரசே! காலை நேரத்தில் உல்லாசமாய்ப் பொழுது போக்குகிறாப்போல் தெரிகிறதே" என்று விகடமாய்க் கூறினார்.

அக்கனவான் காட்டிய மரியாதையையும், கூறிய மொழிகளையுங் கேட்ட சுரேந்திரன் முந்தியைப் போன்று அத்துணை வியப்படையவில்லை. எனினும், ஹோட்டல்காரன் கூறியவை. அவன் மனத்திற்கு உறுதிப்பட்டன. இங்ஙனம் அவன் பல்வேறு எண்ணங்களான் மனங்குழம்பி வாய் பேசாதிருக்க, அக்கனவான் அவனை உற்று நோக்கியதும் பெரிதும் வியப்படைந்து, சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்து, பிறகு அவனைப் பார்த்து, "ஐயா, நீர் யாரென அறிவிக்க முடியுமா? உலகினில் ஒருவரின் சாடை மற்றொருவர்க்கு இருப்பது இயல்பே. ஆயினும், இங்ஙனம் ஒருவரைப்போல் மற்றொருவர் அச்சு, அடையாளம் பூராவும் இருத்தல் சாத்தியமாமா? எங்கள் இளவரசர்க்கும் உமக்கும் எவ்வித உருவவேற்றுமையுமில்லை. உமது மீசையை எடுத்துவிடின், உம்மை யாரும் இளவரசரல்லவென்று நினைக்க இயலாது. இளவரசரோடு நெருங்கிப் பழகும் நானே, உம்மை உடனே கண்டுபிடிக்க இயலவில்லையே-"என்று கூறி வரும்பொழுது, வெகு தமாஷாய்ப் பேசிக்கொண்டே ஒருவர் இவர்களை நோக்கி ஓடி வந்தார். "என்ன கமலாகரரே! பேச்சு வலுத்தாப் போலிருக்கிறதே!" என்று கூறிக்கொண்டே இவர்களை நெருங்கினார். மிகச் சமீபமாய் நெருங்கியதும் சுரேந்திரனைக் கண்டு பிரம்மித்து நின்றுவிட்டார். சுரேந்திரனும் வந்தவரை நோக்கி ஆச்சரியத்தில் அமிழ்ந்து வாய்பேசாது நின்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வந்தவரே பேசத் தொடங்கி, சுரேந்திரனைப் பார்த்து, "இளைஞனே, நீ யார்? உன்னை பார்க்கப் பார்க்க, நீ இளவரசனா? நான் இளவரசனா யென்பது எனக்கே சந்தேகமாகி விட்டது. உண்மையிலேயே என்னைப் போலவே யிருக்கின்றாய்! உயரம், பருமன், நிறம் எல்லாம் ஒரேமாதிரியாகவேயிருக்கின்றன. நீ யாரப்பா? உண்மையைக் கூறு" என்றார்.

சுரேந்திரன் வந்தவரே இளவரசரென முன்னரே ஒருவாறு யூகித்துக்கொண்டான். அவர் கூறியதைக் கேட்டதும், அவனது யூகம் உறுதிப்பட்டது. அங்ஙனம் உறுதிப்பட்டதும், இளவரசர்க்கு உடனே தலை வணங்கினான். இளவரசர்க்குமுன் வந்து தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர் சேனைத் தலைவர் என்பதையும் அறிந்துகொண்டான். சிறிதுநேரம் ஏதோ சிந்தித்திருந்து பிறகு அவர்களைப் பார்த்து,

"மாட்சிமை தங்கிய இளவரசே! சேனாதிபதியவர்களே! நான் மதுரையைச் சேர்ந்தவன், என் பெயர் சுரேந்திரனென்பர். பல ஊர்களையுஞ் சுற்றிக்கொண்டு முந்தா நாள் மாலை இவ்விடத்திலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள சாப்பாட்டு விடுதி வந்தடைந்தேன். அச்சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரர் இன்னும் இரண்டொரு நாட்களில் முடிசூட்டு வைபவம் நிறைவேறப் போவதாய்க் கூறினார். ஆகவே, அதைப் பார்க்கும் பொருட்டு, தலைநகர்ச் செல்ல உத்தேசித்து இவண் வந்தடைந்தேன்" என்றான்.

"என் இளவரசே! நான்கூட முதலில் தாங்கள்தானென்றெண்ணி விட்டேன். பிறகே உண்மையை உணர்ந்தேன் உடையினாலும், மீசையினாலுமன்றி வேறுவிதத்தால் இவரை தாங்கள் அல்லல்வென்று உணர்தற்கியலா. ஆனால், இவர் தங்களை விட இளமையாய்த் தோன்றுகிறார்" என்றார் கமலாகரர்.

"உண்மையே சகோதரா, நீ தனியே தலைநகர்ச் செல்லவேண்டாம். நாம் எல்லாரும் ஒன்றாகவே போவோம். என் சிம்மாசனத்தருகிலேயே உன்னை உட்கார வைத்துக் கொண்டால் எல்லாரும் வியந்து நம்மையே நோக்குவர். நல்ல வேடிக்கையாயிருக்கும். சேனாதிபதியவர்களே! நான் கூறுவது எப்படி?" என்றார் இளவரசர். கமலாகரரும் அவர் கூறியதையே தழுவிக் கூறினார்.

மீண்டும் இளவரசர் சுரேந்திரனைப் பார்த்து, "சுரேந்திரா, நாளைக்குத்தான் முடிசூட்டு வைபவம். இன்றிரவு இங்கிருந்து விட்டு, நாளைக்கு அதிகாலையில் நாம் எல்லாரும் அரண்மனைக்குச் சென்றுவிடல் வேண்டும். நீயும் எங்களோடு கூடவே தங்கிவிடு" என்று அன்போடு கூறி, அவனது கையினைப்பற்றி இழுத்துக்கொண்டே வனமாளிகையின் உட்புறம் செல்ல, சுரேந்திரன் மட்டற்ற மகிழ்ச்சியோடு அவரைப் பின் தொடர்ந்தான். பிறநாட்டில் தனது அனாதரவான நிலையில், எதிர்பார்க்க முடியாதவிடத்தின் நட்பு கிடைத்ததைப்பற்றி எல்லாம் வல்ல இறைவனை மனத்தாற்றொழுதான். அன்று பகற்பொழுது மிக்க ஆடம்பரத்தோடு கழிந்தது.

இரவு வந்தடுத்தது. மாளிகை முழுதும் எங்கு பார்க்கினும் பட்டப்பகல் போன்று பல விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வீசின. இரவு மணி ஒன்பதடித்தது. இளவரசர் பிரதாபனும், சேனைத் தலைவர் முதலியோரும் நமது கதாநாயகனை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேஜையின் மீது பலவகையான சிற்றுண்டிகளும் மதுபானங்களும் வைக்கப்பட்டிருந்தன. எல்லாரும் மேசையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளிலமர்ந்து சிற்றுண்டிகளருந்தினர். அப்பால் மதுபானமருந்த ஆரம்பித்தனர். எல்லாரும் மட்டாகவே குடித்தனர். ஆனால், இளவரசரோ மிதமிஞ்சி பருகிக்கொண்டே போக, இடையிடையே கமலாகரர் எச்சரித்துக்கொண்டே வந்தார். ஆயினும் இளவரசர் கேட்டாரில்லை,

இறுதியில் இராகுலப் பிரபுவினால் அங்கு அமர்த்தப்பட்டிருந்த பணிமகனொருவன், உருக்கிய பச்சைநிற ஸ்படிகம்போல் பளபளவென்று பிரகாசித்த, ஒருவகைபானத்தை, ஒருகிண்ணத்தில் ஊற்றி, அதை இளவரசர்க்கு மட்டும் தனியே கொடுத்தமையால் ஐயுற்ற கமலாகரர், அதைப் பருகவேண்டாமென்று இளவரசரிடந் தெரிவித்தார். இளவரசர் அவர் கூறியதைக் கேட்காது அப்பானத்தை மடமடவெனக் குடித்துவிட்டார். அப்பால், எல்லாரும் மிக்க மகிழ்வோடு பற்பல விஷயங்களைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்க, இளவரசர் தமக்கு தூக்கம் வருவதாய்க் கூறி பள்ளியறைக்குட் சென்றனர்

சுரேந்திரனும் சீக்கிரமாகவே அங்கிருந்து எழுந்து, தனக்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குட் சென்று படுக்கையிற் படுத்து துயிலில் ஆழ்ந்தான். மணி மூன்றிருக்கலாம். யாரோ அவனது படுக்கையறைக் கதவை மெல்ல மெல்லத் தட்டுஞ் சத்தங்கேட்டு, திடுக்கிட்டு துயிலுணர்ந்தெழுந்து, கண்களிரண்டையும் கசக்கிக்கொண்டே சென்று கதவினைத்திறக்க, எதிரே சேனைத்தலைவர் பெரிதும் வாடிய வதனத்தினராய் நின்றுகொண்டிருக்கக் கண்டான். கண்டவன் ஆச்சரிய மேலீட்டால் அப்படியே தம்பித்து நிற்க, கமலாகரர் உள்ளேவந்து வாயல் கதவினை மூடிவிட்டு சுரேந்திரன் அருகேவந்தார்.

சுரேந்திரன் ஏதோ பேச வாயெடுத்தான், ஆனால் அவனைத் தடுத்துவிட்டு, அவன் கையை அன்போடுபற்றி "ஜயா! நீர் ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றார்,

"நானா? தங்கட்கா? என்னால் என்ன செய்ய இயலும்? என்று சுரேந்திரன் ஆச்சரியத்தோடு வினாவினான்.


அத்தியாயம் 6

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது

வியப்போடு தன்னைநோக்கி வினாவிய இளைஞனை கையமர்த்தி,சேனாதிபதி அவனருகே உட்கார்ந்து கொண்டு அவனைப் பார்த்து, "நண்ப, நேரமாகிறது. விஷயத்தை சுருக்கமாய்க் கூறுகின்றேன். கவனமாய்க் கேளும்" என்றார்.

சுரேந்திரன் அவரது வாயைப் பார்த்த வண்ணமே வீற்றிருந்தான். மீண்டும் அவர் பேசத்தொடங்கி, "நமது இளவரசர் பிரதாபனுக்கு, இன்றிரவு கடைசியாய்க் கொடுக்கப்பட்ட பானத்தில் மயக்கமருந்து கலந்துகொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர் மயக்கந் தௌ¤ந் தெழுந்திருக்க குறைந்தது மூன்றுநாட்களாகிலுஞ் செல்லும். ஆனால் நாளைகாலைதான் முடிசூட்டுவதாய்த் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அஞ்ஞான்றும் எப்படியும் இளவரசர் அரண்மனையிலிருத்தல் வேண்டும். பொது மக்கள் ஏற்கனவே பிரதாபன் பேரில் அருவருப்படைந் திருக்கின்றனர். இந்நிலையில் மதுபானத்தை மட்டுக்கு மீறி அருந்திவிட்டு, குடி மயக்கத்தில் ஆழ்ந்து, முடிசூட்டுதலையே அடியோடு மறந்து விட்டதாய் குடிமக்கள் எண்ணி விடுவர். இங்ஙனம் குடிவெறியில், பொறுப்புடைய இம்முக்கிய சம்பவத்தையே மறந்துவிடும் ஒருவர், தமக்கரசராய வரின், எத்தகைய நன்மையை அவரிடம் எதிர்பார்க்க முடியுமென்று குடிமக்கள் எண்ணுவதும் இயல்பே. அதுவுமன்றி, முன்னமே பிரதாபன் செய்கைகளால் உள்ளுக்குள் அருவருப்படைந்திருக்கும் இளவரசி விஜயாள், இளவரசரின் இச்செய்கையால் பெரிதும் மணமுடைந்து விடுவார். குடிமக்கள் தங்கட்கு அரசியாக வர விரும்புவது விஜய சுந்தரியையே, ஆகவே இப்போது குடிமக்களின் எண்ணமும், இளவரசி விஜயாளின் விருப்பமும் பிரதாபுக்கு விரோதமாய் மாறி விடுமாயின், அடுத்தபடி அரசராய் வரக்கூடியவர் இராகுலப் பிரபுவே. இவைகளையெல்லாம் முன்னரே ஆழ சிந்தித்தே தான். இராகுலன் தன் பணியாள் மூலமாய்ப் பிறர் சிறிதும் ஐயுறாவண்ணம் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுக்கும்படி திட்டம் பண்ணியிருக்கிறார். இந்நெருக்கடியான நிலைமையில், நீர் எங்கட்கோர் உதவி செய்யின், நாங்கள் என்றும் உமக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவராவோம்" என்றார்.

சிறிது நேரம் ஏதும் பேசாமலிருந்த சுரேந்திரன், கமலாகரரைப் பார்த்து, "சேனாபதியவர்களே! தாங்கள் கூறுவதை ஒருவாறுணர்ந்து கொண்டேன். ஆனால், அதற்காக நான் என்ன செய்ய முடியுமென்பதுதான் எனக்கு விளங்கவில்லை" என்றான்.

"வீணில் நேரம் போக்க எனக்கு விருப்பமில்லை. உருவத்திலும், பிறவற்றினும் நீர் அரசரைப் போன்றே இருக்கின்றீர். ஒருவரும் உம்மை பிறன் என்று கண்டு பிடிக்க இயலாது. அரசர் மயக்கந்தௌ¤ந் தெழுந்திருக்கும் வரையிலும் நீர் அரசராய் நடிக்கவேண்டும்! இதுதான் நீர் எங்கட்குச் செய்யக்கூடிய மாபெரும் உதவி!" என்றார் சேனாதிபதி.

சுரேந்திரன் உண்மையிலேயே திடுக்கிட்டுவிட்டான். அவர் கூறியது கனவோ, நனவோவென ஐயுற்றான். தன் பக்கத்தே உட்கார்ந்திருக்கும் கமலாகரரை உற்று நோக்கி உண்மையேயென்றுத் தௌ¤ந்தான். உண்மையாயின், சிறியனும், அரசர் நடந்துகொள்ளக்கூடிய பழக்க வழக்கங்களைச் சிறிதும் அறிந்துகொள்ளாதவனும், பிறநாட்டைச் சேர்ந்தவனுமான தான், எங்ஙனம் இத்தகைய மாபெரும் பொறுப்புடைய அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுவதென நினைத்தான். இங்ஙனம் பற்பல எண்ணங்களான் குழம்பிய மனத்தோடு சுரேந்திரன் ஏதும் பேசாது நின்று கொண்டிருந்தான்.

"இளைஞனே! சீக்கிரம் விடைகொடும். நீர் அரசராய் நடிக்கவேண்டுவது இன்றியமையாதது. நண்பா, நீர் செய்யும் இவ்வுதவி, எங்கட்குமட்டுமல்ல: மாயாபுரியின் அரச சம்சத்திற்கே உண்டாம் சிறு சொல் நீங்கும்படி செய்ததாகும். அதுவுமின்றி அரசுரிமை பொருட்டு நேரப்போகும் கலகங்களும் உண்டாகாமல் தடுத்தவராவீர். ஆதலால் மாயாபுரியின் அரச குடும்பத்திற்கு உண்டாகப் போகும் சிறுசொல் நீங்கும்படி ஆவதைச் சொல்லும் உயிர்போன்ற என்னை நோக்கியும், தலைவன் தன் தலைமையினின்றும் வழுவும் நிலைமையை நோக்கியும் இந்த வரத்தை அருளிச் செய்ய வேண்டும்" என்று மிகவும் இரந்துவேண்டினார் கமலாகரர்.

"இளைஞனாகிய என்னிடத்து பெரியவராகிய தாங்கள் இங்ஙனம் வேண்டிக்கொள்ளுவதை நான் கேட்க மறுப்பதாக எண்ணவேண்டாம். திடீரென ஓர் அரசராய் நடிப்பதென்றால், அரசியல் விஷயங்களை நன்றாய் உணர்ந்த தங்களை போன்ற நிபுணர்கட்கே இலேசான காரியமல்லவென்பது தங்கட்குத் தெரியாததல்ல. அங்ஙனமிருக்க ஏதுமறியாத சிறுவனான யான், எங்ஙனம் பொறுப்புடைய ,இவ்விஷயத்தில் தலையிடுவதென்றே அஞ்சுகின்றேன். முதலாவது மந்திரி பிரதானிகள், மற்றும் அரண்மனை வேலைக்காரர்கள் முதலியோரின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டாமா?, மேலும்,அரசர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பழக்க வழக்கங்கள் முதலியன தெரிந்திருக்க வேண்டாமா? இளவரசி விஜயாளுக்கும், இளவரசர் பிரதாபனுக்கும் ஏதும் நெருங்கிய சம்பந்தமிருக்கலாம். எதுபற்றியாயினும் நான் ஐயுறப்படுவேனாயின், அதனால் ஏற்படும் பிரதிபலன் தங்கட்குத் தெரியாததல்ல. இவையெல்லாம் தாங்கள் நன்கு சிந்திக்குபடி வேண்டுகின்றேன்" என்றான் சுரேந்திரன்.

"நண்பரே, நீர் கூறுவது முற்றிலும் உண்மையே. இவைகளையெல்லாம் நான் சிந்திக்கவில்லையென்று நினைக்க வேண்டாம். எவ்வளவு தூரம் ஆழ சிந்திக்க வேண்டுமோ அவ்வளவுதூரம் சிந்தித்துவிட்டேன். என்ன செய்கிறது. வேறு வழியில்லை; நீர் கூறிய எல்லா விஷயங்களையும் நான் கவனித்துக் கொள்ளுகின்றேன்; உமக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயங்களை அவ்வப்போது குறிப்பாய் அறிவிக்கின்றேன். நேரமாகிறது, தயவுசெய்து சீக்கிரம் எழுந்திரும்" என்று கமலாகரர் பிறர் மறுக்கமுடியாத ஒருவிததொனியில் கூறினார்.

அதற்குமேல் சுரேந்திரன் ஏதும் மொழிந்தானில்லை உடனே எழுந்து சேனாபதியைப் பின் தொடர்ந்தான். இருவரும் பல அறைகளைத் தாண்டி அரசனது படுக்கையறைகுட் சென்றனர். ஆங்கு இளவரசர் தன்னுணர் விழந்து படுக்கையின் பேரில் கிடந்தார். மெல்ல இருவரும் இளவரசரைத் தூக்கிக்கொள்ள, நம்பிக்கையுள்ள ஆயுத பாணிகளான இருவர் கையில் விளக்கேந்திய வண்ணம் மிகவும் வாடிய வதனத்துடன் அவர்களைத் தொடர்ந்தனர். ஒருவரும் வாயைத் திறவாமலே இருண்டிருந்த ஒருநிலவறை வழியாய் சென்றனர். அந்நிலவரையின் இறுதியில் அழகிய- ஆனால் மிக்க மர்மமான ஒர் அறை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வறையின்கண் போடப் பட்டிருந்த படுக்கையொன்றில் இளவரசரைப் படுக்க வைத்தனர். பிறகு வீரர் இருவரிடமும், கமலாகரர், இளவரசரை மயக்கம் தௌ¤யும்வரையிலும் மிக்க விழிப்போடு கவனித்துக்கொள்ளும்படியும், இராகுலனது வேலைக்காரர்யாரும் சிறிதும் அறிந்துகொள்ளாதவாறு மிகவும் பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளும்படியும் அன்றைக்கு மூன்றாம் நாளிரவு தாம் அங்கு வரும்வரையிலும் அவ்வீரர்தம் உயிர்க்கே அபாயம் நேரிடினுங்கூட இளவரசரைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாதென்றும் கண்டிப்பான கட்டளையிட்டு விட்டு சுரேந்திரனுடன் அவணிருந்தகன்றனர்.

பின்னர், அரசர் அணியத்தக்க ஆடையாபரணங்களெல்லாம் நமது இளவலான சுரேந்திரனுக் கணிவிக்கப் பட்டது. அவனது மீசையும் எடுக்கப்பட்டது. அரசசின்னங்கள் சுரேந்திரனுக்கு புது அழகைத் தந்தன. இப்போதே சுரேந்திரன் அரசனாய் விளங்கினான். அவன் குதிரையின் மீதேறிக்கொள்ள, சேனாதிபதி மற்றொரு புரவியூர்ந்து அவன் அயலில்செல்ல மெய்காப்பாளர் இருபதின்மர் புடை சூழ, எல்லாரும் தலைநகரை நோக்கிப் பிரயாணமாயினர்.

அரசன் வருதலைக்கேட்ட நகரத்தார் மிகுந்த மகிழ்ச்சியடைந்து வீதிகள்தோறும் நடைக்காவணமிட்டு, கீழே பூக்களைப் பரப்பிப் பழுக்குலைக்கமுகு, குலைவாழை, கரும்பு முதலியவற்றை இரண்டுபக்கங்களிலும் முறையே கட்டி முத்துமாலைகளையும் பவழமாலைகளையும் ஆங்கங்கே நாற்றி வாயில்தோறும் தோரணகம்பங்களை நாட்டி, பெருங்கொடிகளையும் சிறுகொடிகளையுங் கட்டி பின்னும் பலவகையான அலங்காரங்களையுஞ் செய்தனர். செய்து வெந்துய ரருவினை வீட்டிய அண்ணலை இந்திரவுலக மெதிர் கொண்டாற்போல, அவர்கள் சுரேந்திரனை எதிர்கொண்டார்கள். முரசங்கள் முழங்கின; பலவகையான வாத்தியங்கள் ஒலித்தன. மகளிரும் மைந்தரும் வாயில்களில் வந்து, நின்று அரசனைக்கண்டு கண்குளிர்ந்து மனங்களித்து "எங்களுடைய துன்பமாகிய இருளைப் போக்குதற்குச் சூரியன்போலவே தோன்றிய பொங்குமலர்த் தாரோய்! புகுக" என்பாரும், "காணுதற்கரிய கட்டழகியான விஜயாளை மணந்து, கண்கள்பெற்ற பயனையடையும்படி செய்யும் மன்னர் மன்னன் மன்னுக" என்போரும், தத்தமக்குத் தோன்றியவாறே இன்னும் இவைபோன்ற பலவற்றைச் சொல்லுபவர்களுமாய் அங்கங்கே நிற்க, சுரேந்திரன் அமராபதியிற்புகும் இந்திரன்போல நகரத்திற் புகுந்து அரண்மனையை யடைந்தான்.

அங்கு அரசனை வரவேற்கும் பொருட்டு, பிரபுக்களும், அல்லாத பிறரும் குழுமியிருந்தனர். "அரசர் பிரதாபனுக்கு ஜே" கோஷம் அரண்மனை முற்றும் தொனித்தது. எங்கணும் வாழ்த்தொலி நிரம்பியது. மேளவாத்தியங்கள் கடலொலிபோல் ஆர்ப்ப, பெரியோர் ஆசி கூற, மாயாபுரியின் அரசனாக சுரேந்திரன் முடிபுனையப் பெற்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் அரசிளங்குமரி விஜயாள், தோழியர் புடைசூழ அரசவைக்கு வந்து மன்னர் மன்னனாய் வீற்றிருக்கும் சுரேந்திரனுக்கு முழந்தாட்பணிந்தெழுந்தாள். எழுந்த அதேசமயம், சுரேந்திரனின் கண்களும் இளவரசியின் கண்களும் ஒன்றையொன்று நோக்கின. அக்கோமகளின், எழுதற்கும் எண்ணுதற்குமரிய பேரழகு, சுரேந்திரனை திக்பிரமையடையும்படி செய்தது. அவ்வமயம் பொறாமையோடுகூடிய இருகண்கள் அரசனையே உற்று நோக்கின.


அத்தியாயம் 7

இயற்கையன்னையின் இன்பவிளையாடல்.

முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட முடிசூட்டு வைபவம் நிகழ்ந்த மறுநாள் இரவு மணி ஒன்பதிருக்கலாம், மாயாபுரியின் அரசவீதியிலுள்ள அழகியதோர் மாளிகையின் அறையொன்றில் எறக்குறைய 19 - ஆண்டே நிரம்பிய எழில்மிகு யுவதியொருத்தி, சார்மணைக்கட்டிலொன்றில் சாய்ந்தவண்ணம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் தன் மனம் முற்றையுஞ் செலுத்தியபடி உடகார்ந்திருந்தார்கள். அவள் கையில் ஏதோ ஓர் நாவல்புத்தகம் இருந்ததெனினும் அவள் அதை படித்ததாக தெரியவில்லை அவ்வமயம் அறைக்கதவைத் திறந்து கொண்டு மற்றோர் பெண்மணி உள் நுழைந்தாள்.

வந்தவள் தன்னை சிறிதும் கவனியாமல் வீற்றிருக்கும் பெண்மணியருகிற் சென்னு தலைவணங்கினாள். அப்போதுதான் அவள் ஏறிவிட்டு நோக்கினாள். வந்தவள் மிகவும் பணிவாக,"தங்களின் சிந்தனைக்கு என்னால் எதும் இடையூறு ஏற்பட்டதாயின் மன்னிக்கமாறு பிரார்த்திக்கின்றேன்" என்றாள்.

"அப்படியொன்றுமில்லை. நான் இப்போது யோசித்துக்கொண்டிருந்தது நமது அரசரைப்பற்றியே. ஏற்கெனவே அவர்மாட்டு எனக்குச் சிறிதுகூட அன்பில்லையென்பதை நீ நன்றாயறிவாய். ஆனால் நேற்றுமுதல் எனக்கு அவரிடத்து என்னையறியாமலே அன்பு ஊறுகின்றது. அதற்குக்காரணம் எனக்கே தெரியவில்லை. எத்தனையோ முறை, முன்னமே அவர் வேண்டிக்கொண்ட பொழுதெல்லாம் இன்னஞ் சிறிதுநாள் போகட்டுமென்றே கூறிவந்தேன். ஆனால் நேற்றுமுதல் என் மனநிலையே வேறாக மாறிவிட்டது. கிரீடம் அவர்க்குத் தனியழகைத் தரவில்லையா? என்றாள் யுவதி.

வந்தவள் மிக்க மரியாதையோடு, "ஆம், பொருமாட்டியே,நேற்றுமுதல் அவர் புதிய அழகோடுதான் விளங்குகின்றார். கிராமக்காற்று அரசர் பெருமானுக்கு நலத்தையளித்தது போலும்" என்றாள்.

"இருக்கலாம் அவரது குணம், செய்கை முதலியனவும் மாறுபட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதுவன்றி அவர் முந்தியைவிட இளமையுடையார்போன்று தோன்றுகின்றார்" என்றாள் பெருமாட்டி.

"உண்மையே நான் கூற எண்ணியதையே தாங்களுங் கூறினீர்கள். அவர்தங் குரலுங்கூட முந்தியைவிட காதுக்கினிமையைத் தருகின்றது" என்றாள் வந்தவள்.

"வனஜா, நீயும் நன்கு கவனித்திருக்கின்றாய். சரி,நேரமாகிறது. நேற்று அரசர் என்னிடங்கேட்டுக்கொண்ட படி அவரது அரண்மனைக்கு நாம் செல்ல வேண்டும். வண்டி தயாராகிவிட்டதா என்று பார்த்துக்கொண்டு சீக்கிரம் உடையுடுத்திக்கொண்டு வா. அதற்கிடையில் நானும் தயாராயிருக்கிறேன்" என்று பெருமாட்டி கூற, அக்கட்டளையைப்பெற்ற அவளது தோழி வனஜா, அதை விரைவில் முடிப்பாள் வேண்டி அவ்விடத்தைவிட்டும் சடுதியில் சென்றாள்.

இவர்கள் நமது இளவரசி விஜயசுந்தரியும் அவள் தன் தோழியுமென்பது நாம் கூறாதே யமையும்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவளது தோழி களிரிருவரும் பின்தொடர்ந்தனர். மூவரும் வண்டியேறி, அவ்வழகிய வீதியின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அரண்மனைக்குச் சென்றனர். அங்கு கமலாகரர் முதலியோர் எதிர் வந்தழைத்துச்சென்று, ஓர் விசாலமான அறையுள் விடுத்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் சுரேந்திரன் ஆங்குதோன்றி இளவரசியை அன்போடு வரவேற்றான், இருவர் கண்களும் ஒன்றையொன்று நோக்கின.கண்ணோடு கண் நோக்கின் வாய் சொற்களால் ஏதும் பயனிலவன்றே? சுரேந்திரன் மிக்க அன்போடு "இளவரசி! யான் இதுவரையிலும் உம்மைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேனென்று கூறின். நீர் வியப்படைய மாட்டீரென்று நம்புகிறேன்.தாம் இத்துணை தாமதமாக வந்ததற்கு எது காரணமோ"என்றான்.

அதற்கு விடையாக, "அரசர் பெரும! உண்மையைக் கூறப்புகின் நேற்று முதல் என்மனம் ஒருநிலையிலில்லை அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். வேறு விசேஷ மொன்றுமில்லை" என்றாள் இளவரசி.

சுரேந்திரன் எந்த பெண்மணிகளோடும் நெருங்கிப் பழகியவனல்லன். ஒரு பெண் பிள்ளையிடத்து அவனுக்கு அன்புண்டு என்று கூறினால் அவள் அவனது அண்ணியாகவே யிருக்கலாம். ஆனால், இப்போது விஜய சந்தரியைக் கண்டது முதல், எப்பெண்களிடத்தும் தோன்றாத அன்பு அவள் மாட்டு தனக்குண்டாவதாய் எண்ணினான். ஆயினும், அரசர் பிரதாபனுக்கு உரியளாய்க் கருதப்பட்ட விஜயாளோடு நெருங்கிப்பழக அவனது தூய்மையான மனசாட்சி இடங்கொடுக்கவில்லை. எனினும், கமலாகரர், சுரேந்திரன் விஜயாளோடு நெருங்கிப்பழகாவிடின் அவள் ஐயுற நேருமென்றும், ஏற்கனவே பிரதாபை வெறுப்போடு நோக்கி வந்தவளான இளவரசி, தானே நெருங்கிப் பழக வரும்போது, சுரேந்திரன் அதற்கிடங்கொடாவிடின் ஆழ்ந்த அறிவுள்ளவளான விஜயாள், ஒருகால் உண்மையை உணர்ந்துகொள்ளக் கூடுமென்றும் எச்சரித்தார். தர்ம சங்கடமான காரியத்தில் தான் நன்றாய் அகப்பட்டுப்கொண்டதாய் நினைந்த சுரேந்திரன், இன்னும் ஒரு நாள் எவ்வாறு கழியுமோவென்று ஏங்கி, இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான்.

விஜயாளின் மறுமொழியைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாயிருந்த சுரேந்திரன், மீண்டும் அவளோடு உரையாடத் தொடங்கி, "பெருமாட்டி! நேற்று முதல் உமது மாசற்ற மனத்திற்கு தொந்தரையைத்தரும் மாற்றத்தை நானறிந்துகொள்ளலாமா? என்னால் கூடுமாயின் உமக்கு மன அமைதி ஏற்படும்படி செய்வேன்" என்றான்.

சுரேந்திரனது மொழிகள் விஜயாளது உள்ளத்திற்கு பெரிதும் மகிழ்வையளித்தன. அவர் சுரேந்திரனை தனது அன்பு வழியுங் கண்களால் அமைதியோடு நோக்கி "அத்தான்! தாங்கள் கிராமத்திற்குப் போகுமுன்னிருந்ததை விட, இப்போது எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றீர்கள் அல்லவா?" என்றாள்.

அவள் தன் உள்ள கருத்தை ஒருவாறுணர்ந்து கொண்ட சுரேந்திரன், அவளை நோக்கி, "இருக்கலாம், நேரமாகிறது, ஏதாவது சாப்பிடவேண்டாமா?" எனக் கூறி பேச்சைமாற்றி வேறோர் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு மேசையொன்றில், மடைத்தொழில்வழுவாத வாழ்க்கையரான் சமைக்கப்பெற்ற அமுதினன்ன அடிசிலும் நெய்யாலாக்கிய சிற்றுண்டிகளும் வெள்ளித் தட்டுகளில் அழகுபெற பரத்திவைக்கப்பட்டிருந்தன. கண்ணாடி எனங்களில் பலவகையான பழவகைகள் கண்ணுக் கினிமையாய்த் தோன்றும்படி போடப்பட்டு மேஜையின் மற்றொரு புறத்தே வைக்கப்பட்டிருந்தன.

அங்கு அழைத்துச்செல்லப்பட்ட இளவரசியும் அவளது தோழிகளிருவரும், இன்னும் இரண்டொரு பிரபுக்களும், சேனைத்தலைவர் கமலாகரரும், சுரேந்திரனும் மிக்க மகிழ்ச்சியோடு உரையாடிக்கொண்டே உணவருந்த ஆரம்பித்தனர். உணருவருந்தியபின், விஜயாளின் விருப்பத்திற்கிணங்கி சுரேந்திரன் அவளோடு தோட்டத்தில் உலாவச் சென்றான்.

இருவரும் ஏதோ அரசியல் விஷயமாய்த் தோட்டத்தில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சுரேந்திரன் எத்துணைதான் சேனைத்தலைவர்கூறி யாங்கு விழிப்போடு நடந்துகொண்டபோதினும், சிற்சில விஷயங்களில் தவறியே நடந்துவந்ததை மிக நுணுக்கமாய் விஜயசுந்தரி கவனித்து வந்தாள். நிற்க, தோட்டத்தில் நெடுநேரமாகி விட்டதால் இருவரும் அவ்விடத்தை விட்டும் அரண்மனைக்கு வந்து அவரவர்தம் படுக்கையறையுட்சென்று படுத்துக்கொண்டனர்,

சுரேந்திரன் படுக்கையிற் படுத்துக்கொண்ட போதினும் அன்றிரவு தூக்கமே யில்லாதொழிந்தது. விஜயாளின் இனிய மொழிகளும், சிறந்த குணங்களும், எழிலே ஒருக்கொண்டற் போன்ற அவளது தோற்றமும், தன்னிடத்து அவள்காட்டும் உண்மையான அன்பும் அவனது ஐம்புலன்களையும் ஒருங்கே மயக்கி ஆனந்தமுறச் செய்தன. ஆனால், அவனது மனசாட்சி இடைக்கிடையே அவள் பிறனொருவன் பொருளன்றோ' என ஞாபகமூட்டி அவனைக் கலக்கமுறச் செய்தது. இங்ஙனம் பற்பல எண்ணங்களான் குழப்பப்பட்ட மனத்தோடு சுரேந்திரன் ஒருவாறு அவ்விரவை யோட்டி காலையில் எழுந்தான். தனக்கு முன்னதாகவே விஜயாள் எழுந்து தனக்காகக்காத்திருக்கிறா ளென்பதை பணிமகன் மூலமாய் அறிந்த நமது சுரேந்திரன் உடனே எழுந்து காலைக்கடன் கழித்து இளவரசி யிருக்குமிடத்திற்குச் சென்றனன்.

அவனை கண்டதும் மலர்ந்த முகத்தோடு விஜயம் அவனை வரவேற்றாள். பிறகு அவனைப் பார்த்து "என் அரசே ! ஏன் தங்கள் அழகிய கண்கள் சிவந்திருக்கின்றன.

இன்றிரவு தாங்கள் நன்றாய் அயர்ந்து தூங்கவில்லையோ? என்றாள்.

"பெருமாட்டியோ! நீர் கூறியது உண்மையே. இன்றிரவு எனக்கு நன்றாய்த் தூக்கம் வரவில்லை தான்" எனக் கூறிவிட்டு காலையாகாரம் அருந்தும் பொருட்டு அவளையும் அழைத்துச் சென்றான்.

காலை மணி 10 இருக்கலாம். அரண்மனையின் கண்ணுள்ள விசாலமான அறையொன்றில் நமது கதாநாயகன் சுரேந்திரனும், கதாநாயகி விஜயாலும் மெத்தை தைக்கப் பெற்ற நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம் மிக்க உல்லாசமாய்ப் பேசிக்கொண்டிருந்தனர். சுரேந்திரன் மகிழ்ச்சியே மயமாய்ப் பேசிக்கொண்டிருந்தபோதினும் அவனது மனம் சஞ்சல மடைந்தபடியே யிருந்தது. 'இன்று பகல் மட்டுந் தானே இவளோடிருப்போம்' என்ற எண்ணம் அவனுக்கு உண்டாக அவன் மனம் சொல்லொணாத் துயரடைந்து 'படபட' வென்றடித்துக்கொண்டது.

அந்நிலையில் காவலன் வந்து தலைவணங்கினான். 'மாட்சிமைதங்கிய மன்னர் பெருமானே! தங்களைக் காணும்பொருட்டு இராகுலப்பிரபு வந்திருக்கின்றார்" என நவின்றான் அக்காவலன்.

"அங்ஙனமாயின் நான் உடனே வருகின்றேன்" என்று சுரேந்திரன் கூறி விடை கேட்கும் பாவனையாக இளவரசியின் முகத்தை நோக்கினான்.

அவனது விபரீதப் போக்கு இளவரசியால் சிறிதும் விளங்கிக்கொள்ளக் கூடாததாகவே இருந்தது. "என் அரசே! தாங்கள் இவ்வூரைப் புரக்கம்புரவலன் என்பதை மறந்துவிட்டீர்களா? அரசரைப் பார்க்கவருவோர் அரசர் இருக்குமிடத்திற்கு வருவரா? அன்றி அரசர் அவர் இருக்கு மிடத்திற்குச் செல்லுவரா?" என்று சற்று சினத்துடன் கூறினாள் இளவரசி.

அரசர் நடந்துக்கொள்ளக்கூடிய பழக்கவழக்கங்களைச் சிறிதும் அறிந்துக்கொள்ளாத சுரேந்திரன், விஜயாள் கூறிய வார்த்தைகளால் விழிப்படைந்தான். அவள் கையைமிக்க ஆர்வத்தோடுபற்றி, "பெருமாட்டி, ஆம் நான் அரசனென்பதை உமதருகிலிருக்குங்காலை மறந்து விடுகின்றேன்." எனக்கூறி காவலனை விளித்து, "இராகுலப்பிரபு பிரபுவை உடனே இங்கு வரும்படி சொல்" என்ன, காவலனும் உடனே அங்கிருந்தும் வெளியே சென்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் இராகுலப்பிரபு ஆங்கு தோன்றினார். முடிசூட்டி வைபவத்தின்போது பொறாமையோடு அரசனை உற்றுநோக்கிய அதே கண்கள், மீண்டும் பொறாமையோடு கூர்ந்து நோக்கின. உடனே எரிமலையின் அகட்டுத் தீமூண்டெழுந்தாற்போல, இராகுலனது முகத்தில் ஒருவகைத் தீயொளி பரவியது. ஆனால் மறுவினாடியே அது மறைந்துவிட்டது.

சுரேந்திரன் பிறன் என யாரும் சிறிதும் ஐயுறாதிருந்துங் கூட, மிகக் கூறிய கண்களையுடைய இராகுலன் இப்போது அரசனாய் விளங்கும் சுரேந்திரன் அரசன் பிரதாபனல்லனென்று தெற்றென விளங்கிக்கொண்டான். அங்ஙனமாயின், அரசனாய் நடிக்கும் இவன் யார்? என்ற எண்ணம் அவன் மனத்தைக் கலக்கியது.

சுரேந்திரனோடு சுற்றுநேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு இராகுலன் அவ்விடத்தைவிட்டும் அகன்றான். பின்னர் இளவரசியும், சுரேந்திரனும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தனர்.

செல்வி விஜயாள் இம்மூன்றுநாட்களாய் அரசனிடங் காட்டிய பேரன்பு, எல்லாரையும் வியப்புக் கடலுள் மூழ்கும்படி செய்தது. இனி வெகுசீக்கிரம் இளவரசியை அரசியாகக் கண்டுகளிக்குந் தருணம் கிட்டும் என்று மக்கள் ஆனந்த மெய்தினர்.

இவ்வாறு பகற்பொழுது கழிய சூரியன் அஸ்தமித்தது: முல்லை மலர்ந்தது; தாமரைகள் குவிந்தன. மணி ஆறடித்தது. இளவரசி தன் மாளிகைக்குச் செல்ல சுரேந்திரனிடம் உத்தரவு கேட்டாள். இதுவே அவளது கடைசி சந்திப்பாயிருக்குமென்றண்ண அவனது கண்கள் கலங்கின. நீண்ட பெருமூச்சோடு அவட்கு விடையளித்தான்.

நேரம் சென்றுகொண்டே யிருந்தது. அன்றிரவு அரண்மணை மணி 11 அடித்தது. எங்குபார்க்கினும் பேரிருள் சூழ்ந்திருந்தது. அப்போது கமலாகரரும் இரண்டு வீரர்களும் சுரேந்திரனிடத்து வந்தனர். அவ்வீரர்களிடத்து கமலாகரர், சுரேந்திரனது படுக்கையறைவாயிலே மிக்க எச்சரிக்கையோடு காவல் புரியும்படி, தாம் இங்குவரும் வரையிலும் மந்திரியே ஏதும் அரசியல் விஷயமாய் அரசரைப் பார்க்க விரும்பிய போதிலும் உள்ளே விட வேண்டா மென்றும் மிகக் கண்டிப்பான உத்தரவிட்டார், அப்பால் இருவரும் பாராவண்ணம் மறைந்ததுமறைந்து, அழகிய-ஆனால் வேகமாய் ஒடக்கூடிய குதிரைகளில் அமர்ந்தவண்ணம் இராகுலனது வன மாளிகையை நோக்கிச் சென்றனர்.

இராகுலப் பிரபுவின் வனமாளிகையின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த மணி யறிவிக்குங் கருவி 'டாங் டாங்' கென மூன்றடித்தது. ஆடவிரிருவர் அம்மாளிகையினுட் சென்றனர். எங்கு நோக்கினும் மனித ரிருப்பதின் அடையாளமே காணப்படவில்லை. அவ்விடத்துச் சென்ற ஆடவரிருவரும் முன்னர் கூறப்பட்ட நிலவறையின் வழியாய் விரைவாக மர்ம அறைக்குச் சென்றனர். அவ்வறையினருகிற் சென்றதுமே இருவர் தம் மனமும் ' படக் படக்' கென அடித்துக்கொண்டது, ஏன்? அங்கு காவலிருந்த வீரரிருவரையுங் காணோம். ஒருவாறு மனத்தை திடப்படுத்திக்கொண்டு உள்ளே சென்று பார்க்க, அங்கு படுக்கையிற் படுக்கவைக்கப்பட்டிருந்த அரசன் பிரதாபனைக் காணவில்லை, வேறு அங்கு என்ன கண்டனர்? அரசன் பிரதாபனது இரத்தம் படிந்த ஆடைகளையே! பேரிடியே தலையில் விழுந்தாற் போன்று இருவரும் அசைவற்று நின்றுவிட்டனர்.

இவ்வாண் மக்களிருவரும் நமது கதாநாயகன் சுரேந்திரனும், சேனைத் தலைவர் கமலாகரருமே யாவர் என்பது யாம் கூறாமலே வாசகர் கட்கு இனிது விளங்கும்.


அத்தியாயம் 8

திடுக்கிடும் செய்தியும் தியங்கிய மனமும்

கமலாகரரும் சுரேந்திரனும் சிறிதுநேரம் வரையிலும் ஒருவரோடொருவர் ஏதும் பேசவில்லை பிறகு சுரேந்திரன் சேனைத் தலைவரை விளித்து, "அரசரைத் தான் காணோமென்றால் நாம் காவல் வைத்துச் சென்ற வீரர்கள் எங்கு போயினர்? ஏதுங் கைக்கூலி பெற்று காட்டிக் கொடுத்துவிட்டனரா?" என்றான்.

"ஒருக்காலும் அப்படிச் செய்திரார். மிக்க நம்பிக்கையுள்ளவர்கள். மேலும் அரசரிடத்து ஆழ்ந்த அன்புடையவர்கள் " என்றார் சேனைத் தலைவர்.

"அங்ஙனமாயின், அவர்கள் எங்கு சென்றிருப்பர் " என்றான் சுரேந்திரன்.

சேனைத் தலைவர் ஏதும் பதில் மொழிந்தாரில்லை. ஆழ்ந்த சிந்தனையோடும் அளப்பரிய துயரத்தோடும் செய்வதியாதெனத் தெரியாது ஒய்ந்து உட்கார்ந்துவிட்டார், சுரேந்திரன் மட்டும் கையில் விளக்கேந்திய வண்ணம் மாளிகை முழுதுஞ் சுற்றிவந்தவன், ஓரிடத்தில் நின்று வீரிட்டலறினான். அங்ஙனம் அவன் அலறிய இடத்தை நோக்கி சேனாதிபதி விரைந்துசென்றார், ஆங்கு அவர்கள் கண்ட காட்சி, அவர்கள் மனத்தைத் திடுக்கிடும்படி செய்தது. அரசன் பிரதாபை காவல் புரியும்படி சேனாபதியினால் வைத்துச் சென்ற வீரர்களிருவரும் கை கால் முதலியன பிணிக்கப்பட்டு கீழே கிடைத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

உடனே கட்டுகள் நீக்கப்பட்டன. ஆயினும், அவ்வீரரிருவரும் சோர்ந்து உணர்வற்றிருந்தனர். அவர்கள் முகத்தில் மெல்ல விசிறி தண்ணீர் அருந்தும்படி செய்த பின்னர், அவ்வீரர்கள் இழந்த உணர்வை மீண்டும் பெற்றனர். அவர்கள் உணர்வடையப்பெற்றதும் கமலாகரர் அரசனைப்பற்றி உடனே மிகக் கண்டிப்பான குரலில் வினாவினார்.

அவர்களிருவரும் தங்கள் கையினால் முகத்தை மூடிய வண்ணம் தேம்பித் தேம்பி அழுதனர், இங்ஙனம் அவர்கள் அழுவதைப் பார்த்து பிரதாபனுக்கு ஏதோ ஒரு துன்பம் வந்துவிட்டதென்று நிச்சயித்து அறிவு மயங்கி சோர்ந்து விட்டனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சுரேந்திரனும் கமலாகரரும் செய்வதியாதெனத் தெரியாது அறிவு மயங்கி நின்றுகொண்டிருந்தனர்.

"வீரர்களே, நேரமோ போய்க்கொண்டிருக்கின்றது. தாமதிக்காமல் உண்மையான விவரங்களைக் கூறினால். மேலே நடக்கவேண்டிய விஷயங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம் " என்றார் கமலாகரர்

"சேனாதிபதியவர்களே, உண்மையான விவரங்களைக் கூற எங்கள் நா எழவில்லை. தாங்கள் பணித்தவாறே அன்றுமுதல் இன்றிரவு மணி 11 வரையிலும் மிக்க விழிப்போடு அரசரைக் காவல்புரிந்து வந்தோம். திடீரென முகமூடி யணிந்த அறுவர், எங்களை எதிர்த்தமையானும், அவர்கள் அறுவரா யிருந்தமையானும் எங்களால் ஒன்றுங் செய்ய முடியவில்லை. ஆயினும், எங்கள் உயிரைக் கொடுத்தோனும் அரசரைக் காக்கமுயன்றோம். அவர்களில் ஒருவன் கூட எங்கள் வாட்கிரை யாயினன்---------" என்று முதற் காவலன் கூறி வரும்போது சேனாதிபதி அவனை இடைமறுத்து.

"மற்றவர் அரசரைத் தூக்கிச் சென்றனரோ?" என்ன, அவ்வறுவரில் ஒருவரேனும் உங்கட்கத் தெரிந்தவர்களாயில்லையோ? அவர்களது தோற்றம் எப்படிப்பட்டதென்பதை யாயினும் நீங்கள் கவனித்திருப்பீர்களல்லவா?" என்று கமலாகரர் அவர்களிடம் மீண்டும் வினாவினார்.

"இல்லை, அவர்கள் முன்னெச்சரிக்கையோடு தங்கள் உடம்பு முழுதும் மறைக்கும் நீண்ட அங்கியணிந்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் தலைவனாய்த்தோன்றியவரது குரல், எத்துனை மாற்றிப்பேசிய போதிலும் இராகுலனுடையதைப் போன்றே காணப்பட்டது" என்றான் காவலன்.

சற்று நேரம் ஏதோ சிந்தித்திருந்த கமலாகரர் சரேந்திரனை நோக்கி "சரி. இனி அதிக விவரஞ் சொல்லவேண்டியதில்லை. நேரமாகிறது. சுரேந்திர! இராகுலானே அரசரைத் தூக்கிச் சென்றிருக்க வேண்டும். ஒருக்காலும் அவன் அரசரைக் கொலைசெய்ய முயலான். அங்ஙனம் அவன் அரசரைக் கொலை செய்துவிட்டால் தனது நிலைமை இன்னம் மோசமாகிவிடுமென்பதை மதியூகியான இராகுலன் நன்கு உணர்ந்திருக்கலாம். ஆகவே, அரசர் கொல்லப்பட்டுப் போகவில்லையென்பது நிட்சயம். உயிரோடு கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் அரசர் கொலை செய்யப்பட்டுப் போனதாய், நினைத்து அரசரைத்தேடும் முயற்சியில் இறங்காமலிருக்க வேண்டுமென்னங்கருத்தோடுதான், பிரதாபனது ஆடைகள் இரத்தத்தில் தோய்க்கப்பட் டிருக்கின்றன. அன்பான சுரேந்திர, இப்பொழுது உண்மை உனக்குந் தௌ¤வாய்ப் புலப்பட்டிருக்கும். அதிகநேரம் யோசிக்க வியலாது. நீ இந்த மூன்று நாட்களாய் எங்கட்கு செய்திருக்கும் உதவி என்றென்றும் மறத்தந்கியலா. அரசரை மறைமுகமாகவே நாம் தேடி கண்டுபிடிக்கும் வரையிலும் நீயே பிரதாபன் அகப்படாமலே போய்விடின், அல்லது கொல்லப்பட்டு போய்விடின் எப்பொழுதும் நீயோ மாயாபுரியின் மணிமுடி புனைந்து, மன்னனாகத் திகழலாம். கோமகள் விஜயாளும் உன்னை விரும்பி மணந்துகொள்ளுவாள்.கைம்மாறு கருதாது மழையை சொரியும் கார்முகிலேபோல, நீ எங்கட்குச் செய்யும் இப்பேருதவி எங்களால் ஞான்றும் - மறத்தற்கியலா" என்று மிக்க உருக்கமாய்ப்பேசினார்.

சுரேந்திரன் ஏதோ பேச வாயெடுத்தான். ஆனால், சேனைத்தலைவர் அதற்கு இடமளித்தாரில்லை. அதுவன்றி, இளவரசி விஜயாளும் உன்னை விரும்பி மணந்து கொள்ளுவாள்" என்று கூறிய கமலாகரரின் மொழிகள், சுரேந்திரனை ஆனந்தக்கடலில் ஆழ்த்தின. அவ்வாறான பாக்கியமும் தனக்கு கிட்டுமோ என்றேங்கினான். கிரீடம் தனக்குக் கிடைப்பதைப்பற்றி அவன் மனம் ஆனந்தமுறவில்லை. இளவரசி தனக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற விஷயமே அவனை பெரிதும் மகிழ்வித்தது. ஆயினும், உடனே பிரதாபனின் பரிதாபகரமான வதனம் அவன் அகக் கண்கட்கு புலனாயிற்று. அவனது பொருளான விஜயாளை தான் விழைவது பெரிதும் தவறென நினைத்தான். எங்ஙனமாயினும் அரசர் பிரதாபனைக் கண்டு பிடித்து அரசுரிமையை அவரிடம் ஒப்பித்துவிடுவதே சாலச்சிறந்த தென்று எண்ணினான். தான் பிரதாபனுக்கு பதிலாக அரசுரிமை ஏற்று, அரசனாய்த் திகழ்ந்தால் இளவரசி விஜயாளின் விலக்க முடியா நேசத்திலிருந்து தன்னை எங்ஙனம் காப்பாற்றிக்கொள்ள இயலுமென்பதே அவனது முக்கிய பிரச்சனையாய் இருந்தது. அன்றியும் ஒரு நாட்டைப் புரக்கும் புரவலனாக விருக்கத்தக்க யோக்கியதையும் ஆண்மையும் எனக்கு உண்டா? என்பதை முகற்கண் நான் பரிசீலனைசெய்து பார்க்கவேண்டும். காவலன் தொழில் இலேசானதல்ல. வரியை வசூலிப்பதும், வசூலித்த வரிப்பணத்தைவிருப்பப்படி செய்து இறுமாந்திருப்பதும் அரசனுடைய இலக்கணங்களல்ல. அரசருடைய பொறுப்புக்கள் அளவிளடங்காதன' என்று சுரேந்திரன் பலவாறு சிந்தித்தான். சிந்தித்து, செய்வதியாதெனத் தோன்றாது கவலை கொண்டவதனத்தோடு ஏதுமே பேசாது நின்று கொண்டிருந்தான்.

நுண்ணிய அறிவுடைய சேனைத்தலைவர் அவனது உள்ளப்பான்மையை ஒருவாறு ஊகித்துணர்ந்து கொண்டார். ஆயினும் ஒன்றுங் கூறாமல் சுரேந்திரனது கையினைப் பற்றினார். சுரேந்திரனும் ஏதும் பதில்மொழிந்தானில்லை வாய் பேசாது கமலாகரரைப் பின் தொடர்ந்தான். கமலாகரர் வீரரிருவரையும் காலையில் வருமாறு பணித்து, சுரேந்திரனோடு வெளியே வந்து, பரிமாயூர்ந்து தலைநகரை நோக்கிக் கடுகிச் சென்றனர்.


அத்தியாயம் 9

அன்புள்ள அரசன் அதிசயக் கடிதம்

முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட திடுக்கிடும் நிகழ்ச்சி நிகழ்ந்து மூன்று மாதங்கள் கடந்தன. அரசர் பிரதாபனை எத்துணையோ ஆட்களை விட்டு பிறர் அறியா வண்ணம் மர்மமாய்த் தேடிய போதிலும் எதும் பயனளிக்க வில்லை. ஆயினும், கமலாகரரும் சுரேந்திரனும் ஊக்கத்தோடு தேடுவதை விட்டுவிடவில்லை. பின்னும் பின்னும் முயற்சி செய்வாராயின். அரசர் பிரதாபன் அகப்படுதற்குரிய சிறுதடயமுங் கிடைக்கவில்லை. நமது கதாநாயகனும் கமலாகரரும் என்ன செய்வதெனத் தோன்றாது மிகவும் கவலையோடு காலங் கடத்தினர்.

இதற்கிடையில், அரசிளங்குமரி விஜயம் சுரேந்திரனிடத்து நாளுக்கு நாள் அளப்பரிய அன்பு பாராட்டி வந்தாள். தந்நலங்கருதாது பிறர் நலத்தையே கருதும் இயல்பினனான சுரேந்திரன், தன்னடக்கத்துடன் சற்று விலகியே நடந்து கொண்டபோதினும் அவளது ஒப்பற்ற அன்பை அவனால் முற்றும் புறக்கணித்துவிட முடியவில்லை, அவனும் அவளை முழுமனத்தோடு நேசித்தான். ஆயினும். இளவரசியிடம் அவன் தன் மனத்தை வெளிப்படையாய்த் திறந்து காட்டவில்லை.

சுரேந்திரன் செங்கோலைக் கைக்கொண்டு ஒருமாதம் வரையிலும் அரசியலை நிர்வகிக்கக்கூடிய போதிய திறன் உண்டாகவில்லை. எனினும் பிறகு, மாயாபுரி மக்களின்முன்னேற்றத்திற்கான பல காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டான், 18 வயதிற்குமேல் 45 வயதிற்குள்ளடங்கிய ஒவ்வொரு ஆண்மகனுக்கும் புத்தப் பயிற்சி அளித்தான். மக்கட்கு கல்வியில் ஆர்வத்தை யூட்டினான். வைத்திய வசதிகளையும், பயிர்த்தொழில். குடிசைக் கைத்தொழில் முதலியவற்றில் விருத்தியையும் அவன் பெருக்கினான். சுரேந்திரன் தன்னுடைய முழு கவனத்தையும் தங்கள் முன்னேற்றத்தில் ஈடுபடுத்தியதைக் கண்ட நாட்டுமக்கள், அவனை அன்போடு நேசித்து வந்தனர்.

பெண்ணினத்திடத்து அவனுக்குள்ள அளவுகடந்த அபிமானத்தினால் பெண்களின் விடுதலைக்கென உழைத்தான். பெண்மணிகளின் விடுதலையின் மூலமாகவே, நாட்டின்முன்னேற்றமும் சித்திபெறுமென்பது அவனது திடமான நம்பிக்கை. எந்த சமுகம் பெண்மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றதோ, அந்த சமூகம் ஒருகாலத்தும் தலைநிமிர்ந்து நிற்கமுடியாதென்பது அவனது கொள்கை, 'ஒரு சமூகத்தின் வாழ்வும், தாழ்வும், உயர்வும், வீழ்ச்சியும் அதனுடைய பெண்களைப் பொறத்தவைகளாயிருக்கின்றன வென்பது மறுக்க முடியாத உண்மை. ஏன்? பெண்ணினம் சாதாரணமானதல்ல. அவர்கள் எதிர்கால மக்களின் தாய்மார்கள். சமூகத்தின் அபிவிர்த்தி அவர்கடம் கைவசமிருக்கின்றது' என்றெல்லாம் அவன் அடிக்கடி எண்ணுவான். ஆகவே, அவன் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தீவிரமாக உழைத்தான்.

சுரேந்திரனால் பல பெண் பள்ளிக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன. பெண் மக்களின் உயர்தரப் படிப்பின் பொருட்டு பல கல்லூரிகளும், அனாதையாச்சிர மங்கள், பெண்மக்கட்கென தனியே மருத்துவச் சாலைகள் முதலியனவும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி கற்க சக்தியற்ற ஏழை மாணவர்கம்கென பல கல்விச் சாலைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன. கழகங்களென பெயரளவிற் கூறிக் கொண்டு திங்கள்தோறும் முறைபோட்டு சோறாக்கி பணக்காரரெனப் படுவோரெல்லாம் ஒன்றுகூடி உண்டுகளிக்கும் வழக்கங்கள் நீக்கப்பட்டு உண்மையும் தூய்மையுங் கொண்ட உறுப்பினரையுடையவைகளாக மன்றங்கள் மிளிர்ந்தன.

சுருங்கக் கூறுமிடத்து. மாயாபுரிமக்கள் இதுவரை கண்டிராதவாறு சுரேந்திரன் செங்கோல் செலுத்தி வந்தான். குடிமக்கள் அரசனை வாழ்த்தினர். மந்திரி பிரதானிகள் போற்றிப் புகழ்ந்தனர், மாற்றார் வெருவினர் நாட்டில் அமைதி நிலவியது.

இந்நிலையில், குடிமக்களும் மந்திரிப் பிரதானிகளும் உற்றார் உறவினரும் செல்வி விஜயாளை மணந்துகொள்ளாது அதிக நாட்கள் தாமதிக்கக் கூடாதென சுரேந்திரனிடம் பெரிதும் வேண்டிக்கொண்டனர். அதற்குக் காரணம் அவள் அரசர்க்கருகே அரசியாக அரியனையில் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழும் பொருட்டே.

இந்நெருக்கடியான நிலைமையை சமாளிக்க முடியாமல், கடமையே தங்கள் வாழ்க்கையின்பமெனக்கொண்ட செம்மல் சுரேந்திரனும், சேனாதிபதி கமலாகரரும் திணறிப்போயினார். எங்கு தேடியும் 'பிரதாபனின் விஷயம் ஒன்றுமே புலப்படவில்லை. இவ்வமயம் இளவரசி விஜயாளும் தன்மணவினையைப்பற்றி குறிப்பாக சுரேந்திரனிடம் தெரிவித்தாள். ஆனால் சுரேந்திரனோ அவள் குறிப்பை உணராதவனே போலிருந்துவிட்டான்.

ஒருநாள் இவ்விஷயங்களைப்பற்றி மிக்க மர்மமாய் சுரேந்திரனும் கமலாகரரும் உரையாடிக் கொண்டிருந்தனர். சுரேந்திரன் சேனாதிபதியை விளித்து.

"சேனாபதியவர்களே, தாங்கள் என்னைப் பெரிய தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டுவிட்டீர்கள். எனக்கு என்ன செய்வதென்பதே தெரியவில்லை. ஒருபுறம் குடிமக்களும் ஏனையோரும் விஜயாளை அரசியாகக் காண பெரிதும் விரும்புகின்றனர். மற்றொரு புறம் இளவரசி விஜயாள் அளப்பரிய அன்போடு நேசிக்கின்றாள்; அவளுக்கு நான் ஏதும் தகுந்த மறுமொழியளியாமையான், என்பேரில் வருத்தத்தோடிருக்கின்றாள். இவைகட்கெல்லாம் தாங்கள் தான் ஒரு தகுந்த யோசனை கூறவேண்டும்" என்று வருத்தத்தோடு கூறினான்.

"தன்னலங்கருதா பிறர்க்குரியாள! நின்னைப்போன்றே யானும் ஏதுமறியாது தயங்குகின்றேன். ஆயினும் இதற்கு முடிவாய் ஓர் யோசனைக் கூறுகின்றேன். இன்னும் மூன்று மாதங்கள் வரையிலும் நம்மால் இயன்ற அளவு முயன்று அரசர்பிரதாபனைத் தேடிப்பார்ப்போம். அங்ஙனம் நாம் முயன்று அவர் அகப்படாவிடின், இளவரசியை நீ மணந்துகொள்ளலாம். ஏனென்றால், அதற்குமேல் நம்மால் நிலைமையை சமாளிக்க இயலாது. நாம் கடமைத் தவறிவிட்டதாக நம் மனசாட்சியும் இடித்துரைக்காது" என்று அளப்பரிய துயரத்தோடு கூறினார் சேனைத் தலைவர்.

"அரசர் பிறகு அகப்பட்டுக்கொள்ளுவாராயின் என் செய்வது! அங்ஙனமாயின் வருந்தத்தக்க செயலன்றோ?" என்று துயரத்தோடு கூறினான் சுரேந்திரன்.

"உண்மையே. வெறென் செய்வது ! நிலைமை நெருக்கடியாயிருக்கிறது இவைகளையெல்லாம் நன்கு சிந்திக்காமல் நான் கூறுவதாய் எண்ணவேண்டாம். நான் கூறுவதைப்போல். நீ மூன்று திங்கள் கடந்தும் இளவரசியை மணந்துகொள்ளாயாயின், எல்லார்க்கும் உன்னைப்பற்றி ஐயந் தோன்றுவதியல்பே. இப்போது அமைதியாயிருக்கும் நாட்டில் கலகம் ஏற்படும், அன்றியும், இளவரசிக்கும் தகுந்த சமாதானம் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்" என்றார் சேனைத்தலைவர்.

சுரேந்திரன் ஏதும் பதில்மொழிந்தானில்லை, சேனாதிபதியும் அவனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

அன்று மாலை மணி ஆறிருக்கலாம், மழைச் சிறிது தூரிக்கொண்டிருந்தது. சில்லென்று எங்கும் காற்று வீசிக்கொண்டிருந்தது. சுரேந்திரநாதன் ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்தவனாக அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தான். கோமகள் விஜயாளைத் தான் எங்ஙனம் சமாதானப்படுத்துவது என்ற யோசனையிலேயே அவன் மனம் முற்றும் சென்றிருந்தது, அவளது மாசுமறுவற்ற அன்பும், தூய்மையான காதலும் அவனை அவளுக்கு அடிமைப்படுத்தின. 'என்ன அழகு ! என்ன அன்பு! சந்தர்ப்பங்கள் ஒத்திருக்கும்போது நான் ஏன் அவளை மணந்துக்கொள்ளக்கூடாது' என்று ஒரு வினாடி எண்ணினான். ஆனால் அடுத்த நிமிடமே அரசர் பிரதாபன், மிக்க துன்பகரமான நிலைமையிலிருந்துகொண்டு, பரிதாபகரமாய்த் தன்னைப்பார்த்து கெஞ்சுவதாய் சுரேந்திரனுக்குத் தோன்றியது. திடுக்கிட்டான்,. அவனது தூய்மையான மனம், தீயவழியை எண்ண இடமளிக்கவில்லை ஒருபுறம் காதல், மற்றொருபுறம் கடமை. என் செய்வான்! காதல் பெரிதா? கடமை பெரிதா? என்ற வினாவுக்கு விடைக்கண்டுபிடிக்க பெரிதும் முயன்றான். அவன் மனங் கலங்கியது. இங்ஙனம் பல்வேறுபட்ட எண்ணங்களும் மனத்தைக் குழப்ப அவ்வறையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தான்.

மெதுவாக பணியாள் ஒருவன் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தான். அவன் சுரேந்திரனை அண்மி, வெள்ளித் தாட்டொன்றை வணக்கத்தோடு நீட்டினான். அத்தட்டில் கடித மொன்று இருந்ததைக் கண்ட சுரேந்திரன், அக்கடிதத்தை விரைந்தெடுத்துக் கொண்டு பணிமகனை பார்த்து, "இக்கடிதத்தை உன்னிடம் யார் கொடுத்தது" என்றான்.

மாட்சிமை மிக்க மன்னர் பெருமானே ! யாரோ ஒரு நீண்ட மனிதன் இக்கடிதத்தை என்னிடங் கொடுத்து உடனே இதை அரசரிடம் சேர்ப்பித்து விடு' என்று கூறிவிட்டு எங்கும் நிற்காமல் சரெலென சென்று விட்டான்" என்றான் பணிமகன்.

அப்பணிமகன் வெளியே சென்றதும் கடிதத்தை உற்று நோக்கினான். தனக்கு முன்பின் பழக்கமில்லாத யாரோ ஒரு பெண் பிள்ளையினால் அக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறதென்பதைத் தெற்றென உணர்ந்து கொண்டான். ஒவ்வொரெழுத்தும் மிக்க அழகாயும் முத்து முத்தாயும் இருந்தது. உடனே பிரித்து ஆவலே வடிவாய் படிக்கலானான். கடிதம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

"இப்போது மாயாபுரியை ஆட்சி புரியும் மாண்புடையோய்! இவ்வூருக்கு வட கிழக்கேயுள்ள வெட்ட வெளியில் ஓர் தனி மாளிகை யொன்றுண்டு. அம்மாளிகைக்கு இன்றைக்கு நாலாம் நாளிரவு மணி 8-க்கு தன்னந் தனியே மெய் காப்பாளர் எவருமின்றிவரின், உண்மையான பட்டத்திற்குரிய அரசர் பிரதாபனின் இருப்பிடம் அறிவிக்கப்படும்". உண்மை உணர்ந்தேன்.

இக்கடிதத்தைப் படித்தபோது சுரேந்திரனக்குண்டான ஆச்சரியமும் ஆனந்தமும் அளவிட்டுரைக்க வியலாது. ஆயினும். இக்கடிதத்தில் எழுதப்பட்டிருப்பவை உண்மையா யிருக்குமாவென்ற ஐயமும், தான் தனியே செல்லின் யாது தீங்கு நேருமோவென்ற அச்சமும் ஒருங்கே கூடி சுரேந்திரனை வதைத்தது. எனினும், கடமையின் பொருட்டு அவன் எத்தகைய தியாகமுஞ் செய்ய தயாரயிருந்தான். எதற்கும் கமலாகரரைக் கலந்து ஆலோசிக்க எண்ணி, பணிமகனொருவனை யழைத்து, சேனாபதியை உடனழைத்து வருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையைப் பெற்றுக்கொண்ட பணிமகன் அங்கிருந்தும் விரைந்து சென்றான்.


அத்தியாயம் 10

விருந்து

முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட சம்பவம் நிகழ்ந்த மறுநாள் இரவு மணி ஒன்பதிருக்கும். அரண்மனை முழுவதும் கண் கூசும்படி பல விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வீசியது. உயர்ந்த ஆடையணிகள் பூண்ட பெருமான்களும் பெருமாட்டிகளும் எங்கணும் நிறைந்து அரண்மனையை அழகுபடுத்தினர். அரண்மனையின் முன்வாயிலில் கீழே வெண்மணல் பரப்பிய பூப்பந்தரிடப்பட்டிருந்தது; தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன; முழுவும் பிற வாத்தியங்களும் முழங்கின; முரசங்கள் சிலைத்தன; சங்கங்கள் ஒலித்தன; சிறு கொடிகளும் பெருங்கொடிகளும் உயர்ந்து அசைந்து விளங்கின; தரையில் கண்ணுக்கினியவும் விலையுயர்ந்தனமான இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன.

இங்ஙனம் பெருஞ்சிறப்புற்று அவ்வரண்மனை அன்று விளங்கியதற்குக் காரணம் விஜயசுந்தரி சுரேந்திரனிடத்து சினமிக்கிருந்தமையான், அவளது, சினத்தைக் தணிக்கும் பொருட்டும், அவளோடு தனியே உரையாடி அவள்மாட்டு அவனுக்கிருக்கும் உள்ளன்பை வெளிப்படையாய்த் தெரிவிக்குமாறும் சிறந்த விருந்தொன்று செய்விக்கும்படி சேனைத்தலைவர் சுரேந்திரனுக்குக் கற்பித்திருந்ததே இங்ஙனம் இளவரசியை கௌரவிக்கும் பொருட்டு சுரேந்திரன் விருந்தொன்று செய்வித்தால், கூடிய சீக்கிரம் இருவரும் மணந்து கொள்ளுவரென்னும் வதந்தி மக்களிடையே பரவக்கூடுமென அரச தந்திரியன கமலாகரர் எதிர்பார்த்தார். அங்ஙனம் அவர் எதிர்பார்த்து ஏமார்ந்துவிடவில்லை. 'அரசர் இளவரசிக்கு விருந்து செய்யப்போகிறார்' என்ற செய்தி எட்டியதும் மாந்தரிடையே ஒர் பரபரப்பு ஏற்பட்டது. கூடிய சீக்கிரம் விஜயாளை அரசியாகக் கண்டு கண்கள் பெற்ற பயனை தாங்கள் அடையக்கூடுமேன ஒருவருக்கொருவர் மகிழ்வோடு பேசிக் கொள்ளுவாராயினர்.

அன்று அவ்வரண்மனை முழுதும் மகிழ்ச்சியே மயமாய்க்காணப்படா நின்றது. ஒவ்வொருவரும் உல்லாச மாய்ப்பேசிக்கொண்டிருந்தனர். உயர் குலப் பிரபுக்களும் உத்தியோகஸ்தர்களும் ஒருபுறத்தே கூடிக் கம்பீரமாய் வீற்றிருந்தனர். தேவமாதர் இவர் தாமோ என்று ஐயுறக்கூடிய வனப்புவாய்ந்த உயர்குலப் பெருமாட்டிகள் பலர், புன்னகை தவழ்ந்த வதனத்தை யுடையராய், மற்றொருபுறத்தே சிறகுவிரித்தாடா மயிற்குலம்போல அமர்ந்திருந்தனர். இவர்கள் குழலில் முடித்த புதுமலரின் மணமும், வந்தார்க்கும் வருவார்க்கும் வழங்கப்படும் சந்தனத்தின் நறுமணமும், தௌ¤க்கப்படும் பனிநீரின் இன்மணமும் ஒன்றுகூடி பெருமணம் வீசி ஒவ்வொருவரையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்தின.

இங்ஙனம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியமாய் இருக்கும் அந்நேரத்தில், அரண்மனையின் மற்றொரு புறத்தே நன்றாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அறையொன்றில் சுரேந்திரன் துயரமே வடிவாய் நாற்கலியொன்றில் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் சேனைத்தலைவர் அமர்ந்து, அவன் இளவரசியிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையைப் பற்றி தெரிவித்துக்கொண்டிருந்தார். அவனும் அவர் கூறுவனவற்றை மிக்க கவனத்தோடு கேட்டு, அங்ஙனமே நடந்து கொள்வதாய் உறுதி கூறிக்கொண்டிருந்தான்.

கடிகாரம் ஒன்பது முறை அடித்தது. அப்பொழுது 'அதோ, அதோ! இளவரசி வருகின்றார்' என்ற சத்தம் பலவிடங்களில் எழுந்தது. உடனே எல்லோர் பார்வையும் வாயிற்புறம் சென்றது. ஆம்! அப்பொழுதுதான் இளவரசி விஜயசுந்தரி இருமருங்கும் தாதியர் சூழ்ந்துவர அரண்மனையுட் புகுந்தாள். சுரேந்திரன், இளவரசியை மிகவும் மரியாதையோடும், அன்போடும் எதிர்கொண்டு வரவேற்றான், அப்பொழுது வாத்தியங்கள் கடல்போல் முழங்கின; வாழ்த்தொலி அரண்மனை முழுதுங் கேட்டது; எல்லா பிரபுக்களும் பெருமாட்டிகளும் இளவரசிக்கு தலைவணக்கஞ் செய்தனர்.

விஜயாளின் வதனம் மலர்ந்து புன்னகை பூத்திருந்த போதிலும், வெளுத்திருந்தது. ஆங்கு குழுமியிருந்த சீமாட்டிகளிடையே அவள் போய் நின்றது, ஆயிரக்கணக்கான விண்மீன்களிடையே தோன்றிய திங்களைப்போன்றிருந்தது. அவள் தனது தௌ¤வான இன்குரலால், சுரேந்திரனுக்கும் மற்றும் ஏனையோர்க்கும் அவர்கள் தனக்குச்செய்த கௌரவத்தையும் உபசரணையையுங் குறித்து வந்தனமளித்தாள்.

அப்பால்பெரு விருந்தொன்று நடந்தது. அரண்மனை முழுவதும் இளவரசிக்கும் அரசர்க்கும் ஆக்கம் பெருக எனும் வாழ்த்துரைகள் தொனித்தன தேயமக்கள் அரசிளஞ் செல்வி விஜயத்தை எத்துணை தூரம் நேசிக்கின்றன ரென்பதைப்பற்றி சுரேந்திரன் வியப்போடு கவனித்து வந்தான். அன்றிரவு வெகுநேரம் வரையில் விருந்தினர் கேளிக்கையும், ஆரவாரமும் ஓயவில்லை.

சுரேந்திரன் விஜயாள் அருகே அமர்ந்து வெகு இனிமையாய்ப் பேசி, அவளது சினத்தை மாற்ற முயன்று கொண்டிருந்தான். அவளும் அவனோடு இனிமையாய்ப் பேசிக்கொண்டிருந்தாளாயினும், அவள் வதனம் உள்ளடக்கிய துயரத்தைக் காட்டியது.

சிறிது நேரத்திற்கு பிறகு சேனாதிபதி காட்டிய குறிப்பை உணர்ந்த சுரேந்திரன், இளவரசியை அரண்மனையைச் சார்ந்த பூஞ்சோலைக்கு வருமாறு அழைத்தான். நுண்ணிய அறிவும், செவ்விய உள்ளமும் தந்த பேரொளி விளங்கிப்பொலியும் திருமுகத்தோடு கூடிய அம்மங்கை நல்லாள் நயனங்கள், சுரேந்திரனை உற்றுநோக்கின. ஏன்? சுரேந்திரன் தன்னை உள்ளன்போடு நேசிக்கவில்லையென விஜயாள் எண்ணினாள். அணிமுடியண்ணல் சிறிதுநேரம் திகைத்து நின்றான். பிறகு அச் சுந்தரவடி வரசியை நோக்கி, இனிமையும் , பணிவும் இணைந்த குரலில் "விஜயா! என் கண்ணனைய விஜயா! சிறிது நேரமாயினும் பூஞ்சோலைக்கு வரமாட்டாயா?" என்றான்.

ஆ! அவ்வார்த்தைகள் - ' என் கண்ணனைய விஜயா என்ற அவ்வார்த்தைகள் - அவள் இதயத்தில் எங்ஙனம் பாய்ந்தன! திடீரென்று நேர்ந்து ஒரு பெருந்துயரம் போலக் கொடிதாக அல்ல - மிகுந்த இன்பம் பயப்பதான மயக்கத்தை உண்டு பண்ணின, அம்மயக்கத்தால் தள்ளாடிக் கீழ் விழுந்து விடாதபடி அவள் அருகேயிருந்த சுவரின் மீது சாய்ந்தாள். அவள் கண்கள் மீண்டும் நமது கதாநாயகன் முகத்தை நோக்கின. ஆனால், அதே சமயத்தில் அவள் முகம் தன் இயற்கை நிறம் மாறி வெளிறிற்று. ஏனெனில் சுரேந்திரன் உண்மையில் தன்னைக் காதலிக்கவில்லை என்ற எண்ணம் அவள் ஞாபத்திற்கு மீண்டும் வந்தது,

சுரேந்திரன் மறுபடியும் விஜயாளை நோக்கி, "நல்லாய்! என்னோடு தனியே பூஞ்சோலைக்கு வர விரும்பவில்லையா? என்ன நினைக்கின்றாய்?" என்று வினாவினான்.

உடனே விஜயாள் சிறிது தடுமாற்றமுற்ற மெல்லிய இனிய குரலில், "தங்களோடு யான் வருதற்கு விரும்பாமலல்ல. தங்கள் விருப்பம் போலவே வருகிறேன். வாருங்கள். பூஞ்சோலைக்குப் போவோம்" என்று கூற இருவரும் அவ்விடத்தை விட்டுப் பூஞ்சோலையை நோக்கிச் சென்றனர்.


அத்தியாயம் 11

வஞ்சகனால் வஞ்சிக்கப்பட்ட வஞ்சி

மேற் கூறிய விருந்து நிகழ்தற்கு மூன்று நாட்களுக்கு முன்னே மாயாபுரியைச் சேர்ந்த அழகியதோர் சிறு கிராமத்தில் உள்ள மாளிகையில் நடந்த சில விஷயங்களை ஈண்டு கூறுதல் கதா தொடர்ச்சிக்கு இன்றியமையாததாதலின், அவைகளைப்பற்றி இங்கு கூறுவாம்.

மாலை மணி ஐந்திருக்கும் ஏறத்தாழ 25 வயது மதிக்கத் தகுந்த உருவிற் சிறந்த மெல்லியலாள் ஒருத்தி அம்மாளிகையின் உட்புறத்தே யுள்ள அறை யொன்றில் ஒரு சார்மணைக் கட்டிலில் சாய்த்திருந்த வண்ணம் ஏதோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவளது கையில் ஒரு புத்தகம் இருந்த தெனினும் அவள் அதைப் படித்து கொண்டிருக்கவில்லை. அடக்கவியலா ஏதோ துயரத்தினால் அவளது ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த போதிலும், அடிக்கடி அவள் கடியாரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்ததை கவனிக்குமிடத்து. அவள் யாருடைய வரவையோ மிக ஆவலோடு எதிர் பார்ப்பதாய்த் தோன்றியது. இவ்வாறு அப்பெண்மணியின் மனம் பற்பல விஷயங்களைச் சற்றி சுழன்று கொண்டிருந்தபோது, அவ்வறையின் கதவு மெல்லத் திறக்கப்பட்டது. அதை அடுத்து தொங்கிக் கொண்டிருந்த திரையும் சிறிது நீக்கப்பட்டது, இராகலப் பிரபு உள்ளே நுழைந்தார்.

அந்நங்கை சற்று வெறுப்போடு பிரபுவை வர வேற்றாள். “பெருமாட்டி ! என்னை இத்துணை விரைவில் இங்கு அழைத்து காரணம் யாது? நான் ஒரு முக்கிய விஷயம் பற்றி உடனே சொல்ல வேண்டும், சீக்கிரம் என்னையழைத்த காரணத்தை தெரிவிப்பாய்” என்று அப்பெண்ணங்கை நோக்கிக் கூறினார், இராகுலப்பிரபு.

அந்நங்கை நல்லாள் தன்னுள் எழுந்த சினத்து உள்ளடக்கியவண்ணம் “பிரபுவே, உங்களை நான் எதற்காக இப்போது அழைத்தேனென்பது நான் கூறாமலே உங்கட்கு விளங்கியிருக்கலாம். நாட்கள் கடந்து போகின்றன. இனித் தாமதிக்கவியலாது. நான் இப்போது கர்ப்பவதியாயிருப்பதாய் உணர்கிறேன். இனியும் என்னை ஏமாற்ற நீங்கள் நினைப்பதாயின், நான் கொடிய பழி வாங்குவேனென்பதை மறந்துவிட வேண்டாம். முடிவான விடை கூறிவிட்டுச் செல்லலாம்” என்றாள்.

“பதுமினி. உன்னை யான் ஏமாற்ற வில்லை. நான் முக்கிய அரசியல் விஷயம்பற்றி அலைந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்திற்குள் உன்னை கட்டாயம் மணந்து கொள்ளுகின்றேன். அது வரையிலும் பொறுத்துக்கொள்” என்று நயந்து வேண்டினார் பிரபு.

“முடியாது இந்த ஏமாற்றுதல் இனி வேண்டா நியாயமாய் பிரதாபனுக்கே உரித்தான மாயாபுரியின் அரசுரிமையை, நீர் அபகரித்துக்கொள்ள பல வழிகளிலும் முயன்று வருகின்றீர்.உம்மால் அஃது ஒருபோதும் இயலாது. உமது சதியாலோசனையின் மூலமாய், நீர் எண்ணுகின்றவாறு கிரீடம் உமக்கு சொந்தமாய் விடினும், செல்வி விஜயாள் உம்மை மணந்து கொள்ளுவாள் என்று கனவு காணவேண்டாம். அவள் உமது நடத்தைகளை எவ்வாறோ அறிந்து, உம்மை நஞ்சென வெறுக்கின்றாள். நாட்டு மக்கள் அவளையே அரசியாக கண்டு களிக்க விழைவுடன் காத்திருக்கின்றன ரென்பதைப்பற்றி உமக்கு ஞாபக மூட்டுகின்றேன். பிரபு ! வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். இப்போது அரியணையில் வீற்றிருக்கும் இளைஞன் - “ என்று பதுமினி கூறி வரும் பொழுது அவளை இடமறித்து.

“பதுமினி, என்ன கூறுகின்றாய்! ஏதும் அறியாது உளறுகின்றனை போலும். உனது மன நிலை சிதைந்து நீ இவ்வாறு கூறுகின்றையா.?” என்றார் பிரபு.

“என் மனம் சரியான நிலைமையிலேயே யிருக்கின்றது. பணச்செருக்கு என்னை பாழாக்கி விட்டது. பிறர் தம் வார்த்தைகளை பொருட்படுத்தினேனல்லை நான் உம்மை யோக்கியரென என் மனப்பூர்வமாய் நம்பி மோசம்போனேன். ஆயின், இப்பொழு தென் செய்வது! உமது நயவஞ்சக வார்த்தையில் மயங்கி, விலை மதிக்கவொண்ணா எனது கற்பை பாழ்படுத்திக்கொண்டே னெனினும், “கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதை யொக்க” பிறகு விழித்துக் கொண்டேன், எனது வாழ்க்கை சாரமற்றுப் போயினும், உம்மால் பிறர்க்கு இன்னல் நேராதிருக்க என்னால் இயன்ற அளவும் முயன்று வருவேன். உமது மர்மங்களை நான் அறிந்து கொள்ளவில்லை யென்றெண்ணி மனப்பால் குடிக்கவேண்டாம். நீர் செய்யும் ஒவ்வொரு காரியமும் எனக்கு தெரியாமலிரா. இனியும் கெட்டுப்போக வேண்டாம். நான் சொல்லுவதை கேட்டு இனியாயினும் ஒழுங்காய் நடக்கக் கற்றுக் கொள்ளும். அநீதியாய், கெடுமதி மிகுந்து உம்மால் கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கும்-“ என்று அப்பெருமாட்டி கூறி வரும்பொழுது இராகுலன் இடைமறித்து.

“போதும், உன் பிரசங்கத்தை நிறுத்து. நெறி நின்று ஒழுகாது, ஒழுக்கந் துறந்த உன்னிடம், யான் ஆலோசனை கேட்க இப்போது வரவில்லை, நான் சடுதியிற் செல்லவேண்டும், சீக்கிரம் எனக்கு விடைகொடு” என்று என்று கோபத்தோடு கூறினான்.

“ஏ, துரோகி, நீ கூறுவது ஒரு விதத்தில் நியாயமானதே. பெண்ணினத்தின் வரம்பைக் கடந்து, நீ வீசிய மாயவலையில் முழுதுஞ் சிக்கி,”ஒழுக்கம் விழுப்பந்தரலானொழுக்க முயிரினு மோம்பப்படும்” என்ற ஆன்றோர்வாக்கை முற்றும் மறந்து உன்பால் என் மனத்து ஓட விட்டதற்கு, கூற்றினுங் கொடியனான நின் கடு மொழிக்கூற்று நியாயமானதே, நீ என்பால் முன்னர்க்காட்டிய அன்பும், காதலும், நான் உன்னிடங் கொண்டுள்ள தௌ¢ளிய பேரன்பைப்போன்ற தென்றே எண்ணி ஏமார்ந்து போனேன். பல பெண் மக்களை இங்ஙனமே வஞ்சித்தவனென்பதை பிறகே உணர்ந்தேன். எத்தனையோ பிரபுக்கள் இப்போதும் என்னை மணக்க விரும்பி காத்திருக்கின்றன ரென்பது உனக்குந் தெரியாததல்ல. ஆயினும் அவர்களிடத்தே என் மனஞ் செல்லவில்லை. ஏ பிரபு! முடிவாய்க் கூறுகின்றேன். இனியாயினும். யோக்கியதையாய் நடந்துகொள்ளும். உமது வாக்குறுதியைக் காப்பாற்றும். பேராசை பிடர் பிடித்துத் தள்ள - கெடுமதி மிகுந்து அரசுரிமையையும் விஜயாளையும் விரும்புவீராயின் உமக்கு அழிவு காலத்தை நீரே தேடிக்கொண்டவராவீர்.’ என்று பதுமினி படபடப்பாயும் ஆத்திரத்தோடும் பேசினாள்.

சிறிது நேரம் ஏதுமே பேசாது, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த பிரபு இராகுலன், பதுமினியை நோக்கி “ என் அரிய பொழுதை உன்னோடு பேசி வீணாக்க எனக்கு இஷ்டமில்லை. உனக்கு எது விருப்பமோ அங்ஙனமே செய்து கொள்ளுவதைப் பற்றி யாதும் தடையில்லை நான் சீக்கிரம் போகவேண்டும்” என்று கூறி எழுந்தார்.

“சரி, போகலாம்” என்று அப் பெருமாட்டி கூறி விட்டு அவ்விடத்தை விட்டும் மற்றோர் அறைக்குச் சரேலெனச் சென்று விட்டாள்.

இப் பெருமாட்டி யாரென்பதை வாசகர்கட்குச் சிறிது அறிவித்துப் பிறகு கதையைத் தொடர்வோம். இப் பதுமினியின் தந்தையார் ஒர் உயர் குலப் பிரபுவே யாயினும், வறுமையின் கொடுமையான், மிகச் செல்வந்தரான-ஆனால், கொஞ்சம் வயதுசென்ற-பிரபு ஒருவர்க்கு இவளை மணஞ் செய்து கொடுத்தனர். அப்பிரபு இவளை பெரிதும் பாராட்டி மிக்க அன்போடு நேசித்து வந்தார். பதுமினியை தெய்வம்போன்று வணங்கி வந்தாரென்று கூறின், மிகையாகாது. ஆனால், பதுமினி அப் பிரபுவை நேசித்தாளா? என்பதே கேள்வி. எத்துணைக் கெத்துணை அப்பிரபு பதுமினியிடத்து அன்பைச் செலுத்தினாரோ, அத்துணைக் கத்துணை இவள் அவரை விடமென வெறுத்தாள். அவரைக் காணின், கொடிய விரோதியைக் கண்டாற் போன்று முகத்தைச் சுளித்துக்கொள்ளுவாள். அப்பிரபு பதுமினி தன்னிடத்துக் கொண்டுள்ள வெறுப்பை உணர்ந்தாராயினும், அதை வெளியில் கூறாது தன் மனத்துள்ளே அடக்கிக்கொண்டு அவளிடத்து அன்புடனேயே நடந்து வந்தார்.

பதுமினி சில நற்குணங்கள் இயல்பிலேயே வாய்க்கப்பட்ட வளாயினும் அவளது பணச் செருக்கு அவளது நற்குணங்கனை மறைத்தன. இளமையிலிருந்து வறுமையில் வளர்க்கப்பட்டவளாதலின், திடீரென பெரும் பணங்கிடைக்கவே செல்வச் செருக்குற்று அவள் விளங்கினாள். அதற்குக் காரணமான அவளது கணவரையும் அவள் மதித்தாளில்லை.

இயற்கையிலேயே அழகுடையாளான பதுமினி, எப்பொழுதும் செயற்கை அலங்காரங்களோடு மிளிர்வாள். எல்லாரும் அவளை 'அழகு மிக்க அணங்கு' என்று புகழ்ந்து கொண்டாட வேண்டுமென்பது அவளது விலக்கொண விருப்பம். அவள் எதிர்பார்த்ததைப் போன்ற பல ஆடவர் அவளை, அறிவினும் அழகினுஞ் சிறந்த அணங்கெனக் கூறி புகழ்ந்தனர். அவளும் பொதுவாய் எல்லா ஆடவரிடத்தும் அன்போடு பேசிக்கொண்டடிருப்பாளாயினும், எல்லாரையும்விட இராகுலப் பிரபுவினிடமே அதிக அன்பு காட்டி வந்தாள். பதுமினி இத்தகைய குணங்களோடு விளங்கியபோதினும் ஒழுக்க நெறியை விட்டும் சிறிதும் பிறழ்ந்துவிடவில்லை.

இந்நிலைமையில், ஊழ்வினையின் பயனாய் அவளது கணவர் திடீரென மரணமடைந்தார். அவளது தந்தையும் அவள் கணவரைப் பின்பற்றினார். இங்ஙனம் ஒருவர் பின்னொருவராய் இருவரும் இறந்துவிடவே, அதுபற்றி பெரிதும் வருந்திய பதுமினி மிகவுந்துக்கத்தோடு தனியே காலங் கடத்தி வந்தாள்.

தனியே காலங்கடத்தும் தன் தீவினையை நினைத்து மனம் உடைந்தாளாயினும், உடலழகு மாறாதிருந்தமையானும், விண்ணுலகு சென்ற அவள் கணவர் தம் செல்வங்கட்கெல்லாம் அவளே உரித்தானவளாய் விட்டமையானும் பலபிரபுக்கள் அவளை மணந்துகொள்ள பெரிதும் விரும்பினார். ஆனால், அவள் ஒருவர்க்கும் தகுந்த விடையளிக்கவில்லை.

இந்நிலையில் இராகுலப் பிரபு அடிக்கடி அவள் இல்லத்திற்கு வந்து பேசிச் செல்லுவார். அவள் பொருட்டு பல விருந்துகள் செய்வார். இயற்கையிலேயே சிறந்த அழகும் சாதுர்யமாய்ப் பேசுந்திறமையும், இனிமையும் உடைய இராகுலன் வீசிய வஞ்சக வலையில், கள்ளமற்ற உள்ளத்தினாளான பதுமினி மயங்கியது ஓர் வியப்பல்ல. சுருங்கக் கூறுமிடத்து, அவரது வஞ்சக வாக்குறுதியை நம்பி, விலை மதித்தற்கரிய தனது கற்பை பதுமினி அவர்பால் ஒப்படைத்தாள்.

நாட்கள் கடந்தன. பதுமினி தான் கர்ப்பவதியாய் இருப்பதை உணர்ந்தாள். இராகுலனிடம் பன்முறை அவள் நயந்து வேண்டியும், அவர் தாம் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினாரில்லை. அத்துடன் அவர் சிறுகச்சிறுக அவள் இல்லத்திற்கு வருவதையும் நிறுத்தி விட்டார். பேதை என் செய்வாள்! நெருப்பிடை புழுவெனத் துடித்தாள். தன்னிடத்து உள்ளன்பு மிக்க பணி மகனொருவனை, தந்திரமாய் இராகுலானது கையாளாய் அமர்த்தி, அவனது மர்மங்கள் முற்றையுந்தெரிந்துகொண்டாள். அதற்குப் பிறகே இராகுலனை வரவழைத்து, மேற் கூறியபடி அவன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டாள். அவள் கேட்டுக்கொண்டதும், அதற்கு அவன் அளித்தபதிலும் வாசகர்கள் நன்கறிவார்களாதலின், இங்கு மீண்டும் எழுதவேண்டிய அவசியமில்லை. நிற்க.

இராகுலனது மறுமொழியைக் கேட்டு மற்றோர் அறைக்குட் சென்ற பதுமினி, ஏதுஞ்செய்ய ஆற்றலின்றி பொத்தென்று படுக்கை யிற்சென்று விழுந்தாள். எண்ணாததும் எண்ணி ஏங்கினாள். அவள் மனம் துடித்தது. இப்போது எங்ஙனமாயினும் அவளது மானம் காப்பாற்றப் பட வேண்டும். ஆழ்ந்து சிந்தித்தாள். ஏதும் வழி புலப்படவில்லை. 'மானமழிந்தபின் வாழாமை முன்னினிதே'யனறோ? என்றெண்ணினாள். ஆயினும், தான் தற்கொலை புரிந்துகொள்ளுதற்கு முன், இராகுலனைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும்! என்ற எண்ண மெழுந்தது.

நாம் இங்கு ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிக்க வேண்டுவது அவசியமாயிருக்கின்றது. பதுமினி நற்குணங்களுடையளேயாயினும். தம் கற்புக் குலைந்ததைப் பற்றி எண்ணி எண்ணி ஏங்கி மனம் வாடினாளில்லை. ஏனெனின், அவள் இயற்கை அப்படிப்பட்டது. தனக்குத் தீங்கிழைத்த இராகுலனைச் சமயம் பார்த்துத் தண்டிக்க வேண்டுமென்ற உறுதி கொண்டாள்!

அந்நிலையில், பதுமினி படுக்கையிற் படுத்து புரண்டு கொண்டிருந்தபொழுது, பணிமகளொருத்தி கதவை மெதுவாகத் திறந்துகொண்டு உள்நுழைந்து பெருமாட்டி அருகிற் சென்றாள்.

"எங்கு வந்தாய்" என்று வினாவினாள் பதுமினி.

"நேற்று வந்து தங்களோடு பேசிச்சென்ற பிரபு, தங்களை மீண்டுங் காண்பதற்காக இங்கு வந்திருக்கின்றார். தங்களின் சந்தர்ப்பம் எப்படி யிருக்கிறதென்பதை அறிந்து வரும்படி கூறினார்.

அவள் கூறியதைக் கேட்டதும் ஏதோ சிறிது நேரம் சிந்தித்து, பதில் கூறாதிருந்த பதுமினி, பிறகு ஒரு முடிவுக்கு வந்தவள்போல வேலைக்காரியைப் பார்த்து,"சரி அப்பிரபுவை விரைந்து அறைக்கு அழைத்துவா"என்ன, அப்பணிமகள் விரைந்து சென்றாள். அவள் சென்றதும் தன் புடவையை சரியாக உடுத்துக்கொண்டு பக்கத்தறைக்குள் சென்றாள்.

பதுமினி அவ்வறைக்குள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் நெட்டையான, சிறந்த அழகில்லாவிடினும் சாதாரணமான அழகினையுடைய ஒரு மனிதர் அவ்வறையினுள் நுழைந்தார். இவர்க்கு ஏறத்தாழ 33 வயதிருக்கலாம். சற்று கடுத்த முகத்தை யுடையவரேயாயினும், விழுமிய குணங்கள் நிரம்பப்பெற்றவர். பதுமினியை மணக்க விரும்புபவருள் இப்பிரபுவும் ஒருவர். அவளிடத்து உண்மையான அன்பும், மதிப்பும் உடையார். பதுமினி இப்பிரபுவிற்கும் தகுந்த பதில் அளிக்கவில்லையாயினும், அவள்பேரிலுள்ள அன்பு மேலீட்டால், அடிக்கடி வந்து அவளைக்கண்டு பேசிவிட்டுச் செல்வார்.

இப்போது இவரைக் கண்ட பதுமினிக்கு அடக்க வியலா துயரம் உண்டாயிற்று. அவளது அகம்பாவமும் பணத்திமிரும் எங்கோ ஓடி ஒளிந்தன. 'அப்பொழுதே இப்பிரபுவை மணந்துகொண்டிருப்பின் தனக்கு இம்மாதிரி இழிவு நேர்ந்திராதே' என்றெண்ணினாள். இப்போது அவட்கு ஆறுதல் அளிப்பதற்கும், யோசனை கூறுதற்கும் ஓர் உற்ற நண்பன் தேவையாயிருந்தது. அதற்கு இப்பிரபுவைத் தவிர வேறோருவர் தகுதியற்றவரென நினைந்தாள். ஆகவே, பிரபுவை மிக்க அன்போடு வரவேற்றாளெனக் கூறத் தேவையில்லை.

'பெருமாட்டி ! உமது அழகிய வதனம் வாட்டமுற்றிருப்பதேன்' என்று பதுமினியை நோக்கி வினாவினார் பிரபு.

இங்ஙனம் மிக்க அன்போடு தன்னை நோக்கி வினாவிய பிரபுவிற்கு, பதுமினி உடனே மறுமொழி யளித்தாளில்லை. அவள் அடக்கிவைத்திருந்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. அதிகம் விவரிப்பானேன்? பிரபுவிற்கு அனைத்தும் அறிவிக்கப்பட்டது. இராகுலன் அவனை வஞ்சித்தது முதல், சற்று முன்பு அவன் பது மினக்கு அளித்த பதில், வரையிலும் எல்லாம் அப்பிரபுவிற்கு விளக்கப்பட்டன. பிறகு பதுமினி பிரபுவை நோக்கி 'பிரபு! இனி எனக்கு உயிர் வாழ்க்கையால் ஏதும் பயனில்லை. என் சொத்துகள் முற்றும் தங்களின் மேற் பார்வையில் தர்மத்திற்கெனச் செலவழிக்கப்படட்டும். என்னை நம்பும்படி செய்து வசித்து இராகுலனை பழிக்குப்பழி வாங்குவேன். பிறகு யான் தற்கொலை புரிந்து கொள்வதைவிட வேறு சிறந்த வழி யொன்றுமில்லை' என்று அளப்பரிய துயரத்தோடு கூறினான்.

அவள் கூறியதை அமைதியோடு கேட்டுக்கொண்டிருந்த பிரபு, அவட்காக மிகவும் வருந்தினார். இறுதி நாள் வரையில் அவளது மனமகிழ்வை குலைக்கக் கூடிய விதமாய். அவளது கற்பைக் குலைத்துவிட்ட இராகுலனின் மீதே பிரபுவின் ஆத்திரமுற்றுஞ் சென்றது. சிறிது நேரம் ஒன்றுங் கூறாது சிந்தித்துக் கொண்டிருந்தார். பிறகு அவளைப் பார்த்து.

"பெருமாட்டி! உமக்காக யான் பெரிதும் வருந்துகின்றென். தீய எண்ணமுடைய அவ்வஞ்சகப் பிரபுவோடு தாம் நெருங்கிப் பழகியதே மிகவுந் தவறு. 'எண்ணித்துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவமென்பதிழுக்கு' என்றார்போல, இப்பொழுது வருந்துவதான் என்ன பயன்? தாம் தற்கொலை செய்து கொள்ளுவதாய்க் கூறுகின்றீர்; அங்ஙனம் நீர் செய்து கொள்ளுவீராயின் உமக்கு உண்டாகும் இழிவு மறைக்கப்பட்டு விடாது. அன்றியும், தற்கொலை புரிந்து கொள்ளுவதை எம்மதமும், எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை. பதுமினி! நான் கூறுவதை கவனித்துக் கேளும், மனிதர் ஒவ்வொருவரும் தவறுதல் இயல்பே. ஆயினும். நாம் செய்த குற்றத்திற்காக இப்போது உண்மையில் மனம் வருந்தி ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்கின்றீர். நிட்சயமாக எம்பெருமானிடமிருந்து உமக்கு மன்னிப்பளிக்கப்படும். பெருமாட்டி ! இப்பொழுது உனது மானம் காப்பற்றப்பட வேண்டுமென்றறைகின்றீர்; அஃது உண்மையே. இப்போது இருதயபூர்வமாய் உம்மை நேசிக்கின்றேன். எனது அன்பு, இராகுலன் உம்மீது கொண்டிருந்ததைப் போன்று இழிவானதன்று. இப்போதும் நீர் விரும்பினால் உம்மையான் மணந்து கொள்ள யாதொரு தடையுமில்லை யோசித்து பதில் கூறும்" என்று அன்போடும் அனுதாபத்தோடுங் கூறினார்.

பதுமினி இப்பிரபுவின் பெருந்தன்மையையும், தன்னிடத்து அவர் கொண்டுள்ள உண்மை அன்பையும் எண்ணி வியந்தவாறு ஏதுங்கூற சக்தியற்றாள். பிரவுவின் அருகே சென்று முழந்தாட்படியிட்டு, பிரபுவின் கைகளை எடுத்து அவளது கண்களில் ஒற்றிக்கொண்டாள். அக்கரங்களை அவளது கண்ணீர் நனைத்து. பிரபுவை மிக்க நன்யறிதலோடு நோக்கி, நாத்தழுதழுக்க, இன்குரலில்"பெருமானே, அடியாள் தங்களின் ஒப்பற்ற அன்பிற்கு தகுதியற்றவள்" என்றாள்.


அத்தியாயம் 12

அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்

பகலவன் மேற்றிசையில் மறைந்து வெகு நேரமாயிற்று. வானமாகிய நீலவிதானத்தின் கீழ் இளவரசி கொலுவமர வந்தாள். அவளுக்கு வெண் கொற்றக்குடையாக, வெண்ணிலாக்கதிர் வீசி வானத்திடையே சந்திரன் தோன்றினான். அப்பொழுது அரண்மனையைச் சார்ந்த பூஞ்சோலை மிக்க எழிலுடன் விளங்கிற்று. ஆங்குள்ள பசும் புற்றரை யொன்றில் நமது கதாநாயகன் சுரேந்திரனும், கதாநாயகி விஜயசுந்தரியும் உட்கார்ந்து இனிமையாய் பேசிக் கொண்டிருந்தனர்.

"அன்பிற்குரிய விஜயா! இவ்வெண்ணிலா மனத்திற்கு எவ்வளவு மகிழ்மை யளிக்கின்றது. வானத்தை உற்றுப்பார். பிறையைச் சுற்றிலும் உடுக்கள் விளங்குகின்றன. நாம் ஒரிடத்தை செயற்கையான் எத்துணை அழகுபெறச் செய்திருப்பினும், அஃது இயற்கையன்னையின் எழிலுக்கீடாமோ! கைம்மாறு கருதாது மழையைச் சொரியும் கார்முகிலேபோல், மக்களிடத்து ஏதும் எதிர் பாராது, அனைத்தையும் அவ்வுயிர் பொருட்டு அமைத்தருளிய ஆண்டவனுக்கு யாம் செய்யக் கூடிய உதவி யாதேனும் ஒன்றுளதோ?


	பொன்னாற் பிரயோசனம் பொன்படைத்
	தாற்குண்டு பொன்படைத்தான் 
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்
 கேதுண்டத் தன்மையைப் போல் 
உன்னாற் பிரயோசனம் வேணதெல்
	லாமுண்டு உன்றனக்கிங்
கென்னாற் பிரயோசனம் ஏதுண்டு
	காண்கச்சி ஏகம்பனே"

என்று பட்டினத்தடிகள் கூறியவாறே, நாம் அப்பெருமானுக்கு இயற்றும் உதவி ஏதும் இல்லையென்றோ?" என்று எம்பெருமானின் அருட்டிறத்தை வியந்தவாறு கூறினான் சுரேந்திரன்.

"ஆயினும், எக்காலத்தும் அவனை வணங்கி வழிபடுவதே நமக்கு இன்றியமையாக் கடமையன்றோ?

" உண்மையே அதிருக்கட்டும். விஜயா! ஏன் ஏதோ ஒருவிதமாய் வாட்டமுற்றிருக்கின்றாய்? காரணம் கேட்டால் கூற மறுக்கின்றாய்? என்னிடங் கூறக்கூடாதா? என்று பேச்சை வேறு விஷயத்தில் திருப்பினான் சுரேந்திரன்.

விஜயாள் ஏதும் பதில் அளிக்க வில்லை. மீண்டும் சுரேந்திரன் அவளைப் பார்த்து விஜயா ! என் அருமை விஜயா! உனக்கு மறுமொழியளிக்க விருப்பமில்லையா?" என்று கொஞ்சும் பாவணையாகக் கேட்டான்.

விஜயாள் ஏதோ கூற வாயெடுத்தாள். ஆயினும் அவள் ஏதும் மொழிந்தாளில்லை. தான் கூறக் கருதிய மொழிகளை உரைத்தற்கு மனோபலமற்றவளாய்த் தன் பார்வையாலேயே உட்கருத்தை வெளியிடுவாள் போல சுரேந்திரன் முகத்தை நோக்கினாள். அந்நோக்கின் மென்மையையும், இனிமையையும், கனிவையும் மறைப்பதற்கு விஜயாளின் பேதைமையும் பெண் தன்மையையும் கூடப்போதிய ஆற்றல் இலவாயின, அந்நோக்கம் சுரேந்திரன் மனதில் மின்னல்போற் பாய்ந்தது. உடனே அவன் அவளை நோக்கி, "விஜயா, யான் உன்னை நேசிக்கவில்லையென நினைக்கின்றாய்! ஐயோ, இவ்வுலகின் உன்னை விட அதிகமாய் வேறெப்பெண்ணையும் நேசிக்கவில்லையென்னும் உண்மையை நீ யறியமாட்டாய், ஆயினும்--"

"ஆயினும் என்ன?" என்று வினாவினாள் இளவரசி.

"விஜயா, உன்னிடம் நான் எதைக் கூறுவதென்பதே எனக்குத் தெரியவில்லை. என் அன்பான விஜயா! நான் இப்போதிருப்பதைப்போலின்றி, ஏழையாய், எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு இவ்வூரைவிட«¢ட துரத்தப்படினுங்கூட அப்பொழுது என்னை நேசிப்பாயல்லவா?" என்று உருக்கத்தோடு கேட்டான் சுரேந்திரன்.

"என் அரசே! ஏன் இவ்வாறு எவ்வித தொடர்புமின்றி தாங்கள் பேசுகின்றீர்களென்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தாங்கள் உற்சாகமாயும் மகிழ்ச்சியாயும் இருக்கவேண்டிய இந்நேரத்தில், இங்ஙனம் அபசகுனமாக வார்த்தைகளைக் கூறுவது எனக்கு மிகுந்த வறுத்தத்தை தருகின்றது. நான் தங்களை நேசிப்பது தாங்களிருக்கும் உயர்பதவியைக் கண்டல்ல. பணத்திற்காகவும் பதவிக்காகவும் நேசிப்பது உண்மை அன்பாகுமா? தாங்கள் அமரும் ஒரு சிறந்த தேசத்து அரசுகட்டிலும், தாங்கள் முடியில் பிரகாசிக்கும் நவரத்ன மகுடமும், தங்கட்குக் கவுரவிக்கப்பாடும் வெண்கொற்றக் குடையும், தங்கள் செங்கரத்திற்பற்றும் செங்கோலும் எனக்கு தங்களிடத்து இத்தகைய பேரன்பை உண்டாக்கவில்லை. தாங்கள் பரம ஏழையாய், உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி, எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, இத்தேயத்தைவிட்டே துரத்தப்படினும் யான் இப்போதைப்போன்றே தங்களை உள்ளன்போடு நேசிப்பேன். தாங்கள் எங்கு செல்லினும் யானும் தங்களை மனமகிழ்வோடு பின்பற்றுவேனென்பதை உறுதியாய் நம்பலாம்" என்று மிகத்துயரத்தோடு மொழிந்தாள் இளவரசி. அவளது அழகிய கண்களில் நீரரும்பியது. அவளையறியாமல் அவளுக்குத் துக்கம் பொங்கியது. "அன்பிற்குமுண்டோ வடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற ஆன்றோர் வாக்கு உண்மையன்றோ?

விஜயாளின் கண்களில் நீரரும்புவதைக் கண்ட சுரேந்திரன்"என் அன்பிற்குரியாய்! கண்ணீர் உகுக்கின்றாயே. நீ என்னிடத்து கொண்டுள்ள அன்பின் அளவை அறிதற்காகவே கூறினேனேயன்றி வேறன்று" என்றான். அவன் மனங் குழம்பியது. தன்னிடத்து அவள் வைத்திருக்கும் மாசற்ற அன்பை எண்ணி எண்ணி உள்ளம் உருகினான். ஏதேதோ எண்ணினான். ஆயினும், அவள் தனக்குரியள் அல்லன் என்பதை நினைந்து தன்னைத் தேற்றிக்கொண்டான்.

"தங்கள் மனத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது. எதைப்பற்றியோ அடிக்கடி எண்ணி உங்கள் மனம் துன்பப்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது. தாங்கள் மர்மமாய் வைத்திருக்கும் விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்தல்ல. ஆனால் எந்த விஷயத்திலாவது நான் தங்களின் துன்பத்தை மாற்ற உதவி செய்யக்கூடுமென்றே கேட்கின்றேன். தங்களின் உள்ளத்தைத் துன்புறுத்தும் துயரத்தைத் தாங்கள் எனக்கறிவிப்பின் தங்கள் மனம் சற்று ஆறுதலடையலாமென்றெண்ணுகின்றேன்" என்று அன்போடு கூறி, அவனது முகத்தை நோக்கினாள்.

எழுதுதற்கரிய எழிலுடன் விளங்கிய ஒரு இளவரசி பூஞ்சோலையில் தன்னந்தனியே, தன்னிடத்து அன்புமீதூர பேசிக்கொண்டிருந்ததானது சுரேந்திரனுக்கு எல்லையற்ற ஆனந்தத்தைத் தந்ததெனினும், அவள் பிறர்க்குறியள் என்பதை நினைக்க நினைக்க, அவனது மனம்சொல்லொணா சஞ்சலமடைந்தது. அந்நிலையில் அவள் மீண்டும் சுரேந்திரனை நோக்கி. "அண்ணலே! தாங்கள் என்னை நேசிப்பது உண்மையாயின், தங்களின் இரகசியத்தை என்னிடம் ஏன் ஒளிக்கவேண்டும்? என்னிடங்கூறுதற்கு தங்கட்கு விருப்பமில்லையா?" என்று கனிவோடு மொழிந்தாள்.

அப்பொழுது மணி பன்னிரன்டிருக்கும். பூரண மதியினொளி எங்கும் பரவி யாவரையும் ஆனந்தக் கடலிலாழ்த்தியது. சுரேந்திரன் விஜயாளின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அவள் வதனமும் பூரண மதியைப்போன்றே விளங்கியது. விஜயாளின் கையை ஆர்வத்தோடு பற்றி முத்தமிட்டான். அந்நிலையில் அவன் அனைத்தையும் அடியோடு மறந்தான். அவன் நினைத்திருந்த நினைவுகள் எல்லாம், அவன் உணர்ச்சியெல்லாம் அவள் முகத்தை நோக்கவும் மனத்தேயெழுந்த அன்பென்னும் வெள்ளத்தில் கரைந்துபோயின. அவள் உடலமைப்பின் மென்மையான அழகையும், அவள் பார்வையிலும் அவள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லிலும் தௌ¤வாகக் காணப்பட்ட அவளது உள்ளச் செம்மையையும் கவனிக்கக் கவனிக்க, சுரேந்திரனுக்கு எல்லையற்ற ஆனந்தம் பொங்கியது. அவன் தன்னையும் உலகையும் மறந்தான்.

விஜயசுந்தரிக்கு அதுகாறும் தௌ¤வுற விளங்காதிருந்த ஒர் பெரிய உண்மை, அஞ்ஞான்று துலக்கமுற விளங்கிற்று. அவ்வுண்மையானது அரசன் (சுரேந்திரன்) தன்னைக் காதலிக்கின்றான் என்பதே. அவ்வுண்மை விளங்கியதும் தனது பெண்மைக் குணத்துக்கு இயல்பாகிய நாணத்தால் சிறிது தலைகவிழ்ந்தாள்.

மந்தமாருதம் இன்பமாய், வீசியது. மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோசா முதலிய அழகிய மலர்களின் நறுமணம் நந்தவனம் முற்றும் பரவ இன்பமளித்தது. இருவரும் தங்களையே மறந்திருக்கும் அந்நேரத்தில் சிறிது தூரத்தே தங்களை நோக்கி கமலாகர் வரக்கண்டனர்.

அவர் முகம் மலர்ந்திருந்தது. அவர் நெருங்கி வந்ததும் இருவர்க்கு தலைவணக்கங்ஞ் செய்தார்."என் அரசே! வெகுநேரமாய் விட்டது. மெல்லிய தன்மையையுடைய இளவரசி இதற்குமேல் விழித்திருக்கலாகாது. நான் இங்கு வந்து தங்கள் தனிமையிற் குறுக்கிடத் துணியவில்லையாயினும், அவசியங்கருதி வரலானேன்" என்று சுரேந்திரனை நோக்கி பணிவோடு மொழிந்தார்.


அத்தியாயம் 13

எதிர் நோக்கிய அபாயமும், எழில்மிகு வனிதையும்

மேலதிகாரத்திற் கூறியவை நிகழ்ந்த மூன்றாம் நாளிரவு மணி எட்டிருக்கும். ஓர் போர்வையால் உடம்பு முழுவதையும் மறைத்துக்கொண்டு, நமது கதாநாயகன் சுரேந்திரன், புரவியிலமர்ந்த வண்ணம், மெல்ல மெல்லத் தயங்கித் தயங்கிச் செல்கின்றான்.

ஆம், - அவன்தான் - கருணையும், வீரமும் ஒருங்கே கொண்ட நமது சுரேந்திரன் தான்-இப்போது, ஒன்பதாவது அத்தியாத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ள கடிதத்திற் குறிக்கப்பட்டிருந்த தனி மாளிகையை நோக்கிச் செல்கின்றான்.

சுரேந்திரன் குறிப்பிட்ட தனி மாளிகையை அண்மினான். வாயிற் கதவு மூடி வைக்கப்பட்டிருந்தது அதைத் திறப்பான் வேண்டி, சுரேந்திரன் கதவின் பேரில் கையை வைக்க, அக்கதவும் உடனே திறந்துகொண்டது. அஞ்சாநெஞ்சு படைத்த அந்நம்பியும் விரைந்து உட்சென்றான். எங்குநோக்கினும் அம்மாளிகையினுள் மனிதரிருப்பதின் அடையாளமே சிறிதும் புலப்படவில்லை. ஆனால் மேசையின் பேரில் மங்குதலாய் விளக்கொன்று எரிந்துக்கொண்டிருந்தது. இரண்டொரு அறைகளைத் தாண்டி, மிகக் குறுகுதலாயிருந்த அறையொன்றினுட் புகுந்தான். அவன் அவ்வறையினுள் புகுந்த சிறிகுநேரத்திற்கெல்லாம் சிறந்த அழகுடன் கூடிய நங்கையொருத்தி ஆங்குத்தோன்றினாள்!

சுரேந்திரன் வியப்படைந்தான். தான் தவறுதலாய் வேறொரு மாளிகைக்குள் வந்துவிட்டோமோ வென்று ஐயுற்றான். அப்பெண்ணை மரியாதையோடு நோக்கி "பெண்மணி! மன்னிக்க வேண்டும். யான் வேறொரு மாளிகைக்குச் செல்லவேண்டியவன் அடையாளந் தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்" என்றுக் கூறி போதற்குத் திரும்பினான்.

அந்நங்கையோ அவனது உள்ள நெகிழ்வை ஒருவாறு உணர்ந்துகொண்டு அவனை நோக்கி,"ஐயா! தாங்கள் கூறுமாறு இம்மாளிகைக்குத் தவறி வந்துவிடவில்லை. சட்டென்று தாங்கள் இவ்விடத்தை விட்டுஞ் செல்ல வேண்டும்; எவ்வளவு சடுதியில் தாங்கள் இங்கிருந்து செல்லுகின்றீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. கடித மெழுதி தங்களை இங்கு வரவழைத்தவள் நானே" என்றனள்.

"பெண்மணி, நீங்கள் யார் என்பதை எனக்கு அறிவிக்கக் கூடுமோ? தாங்கள் எனக்குச் செய்யும் இப்பேருதவிக்கு நான் எத்தகைய நன்றியைச் செலுத்துவதென்பதே எனக்குத் தெரியவில்லை" என்றான் சுரேந்திரன்.

"வீரர் தலைவ ! தாங்கள் கூறுமாறு தங்களிடமிருந்து யான் எத்தகைய நன்றியறிதலையும் எதிர்பார்க்கவில்லை அருட்பெருங்கடலான எம்பெருமானை உண்மை அன்பால் வழிபடுபவர் யாவரும் அவசியம் கைக்கொண்டொழுக வேண்டிய அருளொழுக்கத்தின் வழி நின்று எனது கடமையை நிறைவேற்றுகிறேனேயன்றி வேறன்று. ஆகவே, நான் இன்னாரென்பதைத் தங்கட்கு அறிவிக்க வேண்டுவது அத்துணை அவசியமல்ல. ஆயினும், என்னை தங்கட்கு அறிவிக்க விரும்பினால், "இராகுலனின் ஏமாற்றத்துக்குள்ளாகிய பலபெண்களுள் நானும் ஒருத்தி என்று கூறுவதே போதுமானது" என நவின்றாள் அம்மாதரசி.

சுரேந்திரன் ஏதோ சிறிது ஆழ்ந்து சிந்தித்தான். அதற்குள் அம்மங்கை மீட்டும் அவனை நோக்கி, "அறிவின் மிக்க வல்லீர்! இங்ஙனம் யாம் பேசிக்கொண்டிருத்தற்கு இவ்விடம் ஏற்றமல்ல. எதன் பொருட்டு யான் தங்களை இங்கு வரவழைத்தேனோ அதை உடனே அறிவிக்கவேண்டியது அவசியமாயிருக்கின்றது. அஃதாவது, இம்மாயாபுரிக்கு மேற்கே ஏழுகல் தூரத்தில், அகன்று விரிந்து செல்லும் ஆழமான ஆறொன்றுள்ளது. அவ்வாற்றின் அருகே கருங்கற்களினாற் கட்டப்பட்டு, கருநிற சாயம் பூசப்பெற்ற கருப்பு மாளிகை யொன்றுண்டு, அம்மாளிகையின் அறையொன்றிலே கை, கால்களுக்குத் தளையிடப்பட்டு, எமது அரசர் பிரதாபர் கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார். அவ்வறை பண்டு கட்டப்பட்டமையான், மிக்க பலமாய் அமைக்கப்பட்டுள்ளது. முன் பக்கஞ் செல்லும் கதவொன்றை விடுத்து, வேறுவாயில் அவ்வறைக்குக் கிடையாது. ஆனால், அவற்றின் புறமாய்த் கம்பியில்லா பலகணி யொன்றுண்டு. அதன் புறமாய்த் தப்பிப்போவது எவர்க்கும் சாத்தியமானதல்ல வென்னுங் காரணத்தினால், அச்சாளரத்திற்குக் கம்பிவைக்கவில்லைபோலும்-" என்று அப்பெண்மணி கூறிவரும் பொழுது, சுரேந்திரன் அவளை இடைமறித்து.

"பொறுக்கி யெடுத்தி பல வீரர்களைக் கொண்டு மாளிகையை திடீரெனத் தாக்கி, அம்மாளிகையிலுள்ள வீரர்களை சின்னாபின்னப் படுத்தினால், பிரதாப அரசரை மீட்பது எளிதென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?" என்று வினாவினான்.

"இல்லை நான் ஒருபோதும் அங்ஙனம் எண்ணுதற் கியலாது. ஏனெனின், இராகுலன் ஒருகால் இங்ஙனம் நேரிடக்கூடு மென்றெண்ணியே முன் யோசனையோடு. எல்லாக் காரியங்களையும் ஒழுங்குபட அமைத்திருக்கின்றான். அரசர் அருகிலேயே இரண்டு வீரர்களை இடைவிடாமல் காவல் புரியுமாறு நிறுத்தி வைத்திருக்கின்றான். திடீரென இம்மாதிரி குழப்பம் வெளியில் உண்டாயின் அறைவாயிற் காவலன் உள்ளேயிருக்கும் வீரர்கட்கு ஏதோ சைக்கினை செய்யவேண்டும், ஆனால், அங்ஙனம் செல்லுவது உயிர்க்கிறுதி பயக்கக் கூடிய செயலென்பதிற் சிறிதும் ஐயமில்லை. இறைவனது அருளால் உயிர் தப்பி, அப்பலகணியை அண்மினால் ஏதுஞ் சந்தடியின்றி ஏணி வைத்து மேலேற வேண்டும்" என்று அம்மங்கை கூறி வருகையில் சுரேந்திரன் இடை மறித்து.

"ஏதும் படகின் மூலமாய் அப்பலகணி யண்டையிற் செல்லுதற்கியலாதா?" என்று, மீட்டும் வினாவினான்.

"செய்யலாம், ஆனால், அதிலும் ஓர் பெரிய இடைஞ்சல் இருக்கின்றது. இராகுலனின் வேவுகாரர் பலர், இராக் காலங்களில் ஆற்றின் பக்கம் அங்கு மிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனர். எவர் கண்ணிலேனும் அப்படகு தென் படுமாயின், விழிப்படைந்து விடுவர். பிறகு எத்துணை முயன்றும் அரசரைப் காப்பாற்ற இயலாதுபோம்" என்று அம்மங்கையர்க்கரசி கூறிவரும்பொழுது பின்னால் யாரோ பேசும் பேச்சுக்குரல் கேட்டது.

அப்போது அந்நங்கை அச்சத்தோடு அவனை நோக்கி, சிறப்புடைவீரே ! தாங்கள் எங்காயினும் மறைந்து கொள்ளுங்கள். இராகுலனுடைய ஆட்கள் இதோ வந்து விட்டனர். தங்களைப்போன்ற சீரிய வீரரொருவர், கூற்றினுங் கொடிய இராகுலனின் வீரர்களால் அகால மரணமடையக்கூடாது. நானும், என் கணவரும் எப்பொழுதும், அரசிளஞ்செல்வி விஜயாளிடத்து பேரன்புடையவர்கள், ஆகவே அவ்விளவரசியின் களங்கமற்ற காதலுக்கு உரித்தான தங்களிடத்தும் எங்களன்பு செல்லுதல் இயல்பேயாம் - ஆ! அதோ வந்துவிட்டனர். சட்டென்று ஒடிவிடுங்கள். "சீக்கிரம் சீக்கிரம்", என்று கூறிக் கொண்டே பின்புறமாய் ஒடி மாயமாய்மறைந்துவிட்டாள்.

சுரேந்திரன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நன்றாய் உடையணிந்து முகமூடியணிந்த அறுவர், சுரேந்திரனை அண்மினர். அதற்குமேல், மறைந்து கொள்ளவோ ஒடிவிடவோ முடிவில்லை. சமயோசிதமாய் அவ்வறைக் கதவை மூடித் தாளிட்டுக்கொண்டான். அதற்கிடையில் அவ்வறுவரும் கிட்ட நெருங்கி வந்துவிட்டனர்.

அங்ஙனம் நெருங்கி வந்துவிட்ட அவ்வீர் அறுவரும் சுரேந்திரன் மூடிக்கொண்டு உள்ளிருந்த அறைக்கதவைத் தட்டினர். அவன் பதில் அளித்தானில்லை "அடே, கதவைத்திற. உன் உயிர் தப்பவேண்டுமாயின், இந்நாட்டை விட்டே ஒடிவிடு. எவ்வளவு சீக்கிரமாய் இத்தேயத்தின் எல்லையைத் தாண்டிச் செல்லுகின்றாயோ, அவ்வளவுக்கு உனக்கு நல்லது" என்றான் ஒருவன்.

"பிச்சைக்காரநாயே, எங்கேயோ கிடந்த உனக்கு இத்துணை கெர்வமா? உன்னை இளவரசியும் மட்டுக்கு மீறி நேசிப்பதான், திமிர் பிடித்துக்கொண்டது போலும். என்னசொல்லுகிறாய்? இம்மாயாபுரியை விட்டு ஒடிவிடுகின்றாய், இல்லையா?" என்றான் மற்றொருவன்.

"மரியாதையாக எங்களின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு, இவ்வூரினின்றும் போய்விடுவாயாயின், உன்னுயிர் காப்பாற்றப்படுவதோடு பெருந்தொகையும் உனக்கு பரிசளிக்கப்படும். என்ன கூறுகின்றாய்?" என்றான் பின்னுமொருவன்.

இங்ஙனம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்ப் பேசி துன்புறுத்த, அவர்கட்கெல்லாம் தகுந்த சமாதானம்சொல்ல இயலாதெனக்கண்ட சுரேந்திரன், அவர்கள் கூறுவனவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டவனைப் போன்று நடித்தான்.

"ஆயின், உடனே கதவைத்திற, யாங்கள் கூறிய நிபந்தனைக்கு நீ கட்டுபட்டா யாதலின், மன்னிக்கப்படுவாய்" என்றான் முதலில் பேசியவன்.

"எங்ஙனம் நீ இம்மாளிகைக்கு வந்தாய்" என்று வினாவினான் இன்னொருவன்.

"அதெல்லாம் வெளியில் வந்தபிறகு கேட்டுக்கொள்ளுவோமே? ஏ, தம்பி! கதவைதிற" என்றான் இரண்டாமவன்.

சுரேந்திரனும் வேறுவழியின்மையான், ஆங்கிருந்த பெரிய நாற்காலியொன்றினை யெடுத்து, தனக்கு நேரே பிடித்துக்கொண்டு கதவினைத்திறந்து விட்டான். உடனே அரக்கரனைய அவ்வீரர்கள் சுரேந்திரன் மீது பாய்ந்தனர். ஏற்கனவே இங்ஙனம் நேரக்கூடுமென யூகித்திருந்த நமது இளவல், அவர்கள்மீது தான் பிடித்துக்கொண்டிருந்த நாற்காலியை விட்டெறிந்தான். அந்நாற்காலி நன்றாய் அவர்களது முகங்களிற் தாக்கியதானும். அவர்கள் அதைச்சிறிதும் எதிர்பார்க்கவில்லை யாதலானும் சற்றுத் தடுமாற்றமடைந்தனர். அதற்குள் சுரேந்திரன், அதி ஆச்சரியமான ஒரு சாமர்த்தியித்தினால் தன்னை வளைந்திருந்தவர்களினூடே மின்னல் போற்பாய்ந்து வெளியே ஒடினான். அவர்கள் துரத்தினர். பின்னும் வேகமாய் ஒடினான். அவர்களெல்லாரும் தன்னை நோக்கிச் சுடக்கண்ட செம்மல் சுரேந்திரன் தானும் அவர்களை நோக்கி திரும்பித் திரும்பித் திரும்பி சுட்டவண்ணம் அதிவேகமாய் ஒடினான். ஆயினும் பயனொன்னுமில்லை. அதோ! அதோ! நெருங்கிவந்துவிட்டனர்.இன்னும் ஒரு நிமிடத்தில் கொடிய அவ்வீரர்களது கையில், அறிவுடை அன்பன் - நட்புணர்ந்த நம்பி- சிறப்புடை செம்மல் அகப்பட்டுக்கொள்ளுவான். சீரிய வீரனாய சுரேந்திரன் தன்னந்தனியே அவ்வறுவர் மத்தியில் அகப்பட்டுக்கொண்டமையான், ஏதுஞ்செய்ய செயலற்றான். ஒருவன் வாளினால் வெட்டினான், திறன் மிக்க அவ்வீரன், அவ்வாளுக் கிரையாகாமல் தப்பிக்கொண்டானாயினும் அவனது வலது கையில் அவ்வெட்டு விழுந்தது.

"நமது விரோதி தானே வலியவந்து இன்று மாட்டிக்கொண்டான். இப்போது நாம் இவனைக்கொல்வது இவனுக்கேற்ற தண்டனையல்ல. ஆதலால், நாம் இவனை விரைவாக நமது மாளிகைக்கே கொண்டுபோவோம்" என்றான் அவ் வீரர்களின் தலைவன். அத்தலைவனது கொடிய உத்திரவைப்பெற்ற அவ்வீரர்கள், சுரேந்திரனைச் சூழ்ந்து நின்றனர்.

இவ்வாறு கூறி வாய்மூடு முன்னே, விரைந்துவரும் பல்லோர் காலடிச் சத்தங்கேட்டது. மறு நிமிடமே அவ்விடம் பன்னிரு சிறந்த வீரர்கள் நிரம்பியது. சுரேந்திரன் தனக்கு நேர்ந்த ஆபத்தினின்றும் தப்பினான்.

சுரேந்திரன் தன்னுயிரைக் காப்பாற்றிய அவ்வீரர்களை உற்று நோக்கினான். அவர்களெல்லாரும் கருப்பாடை அணிந்திருந்தனர். அவ்வீரர்களது தலைவர் செல்வாக்குப்பெற்ற பிரபுக்களில் ஒருவரென உணர்ந்து, அவர்க்கு நன்றி செலுத்தினான். ஆனால், அப்பிரபுவை அடுத்து நின்ற ஒரு பெண்மணியை நோக்க, சுரேந்திரன் வியப்பு மேலீட்டால் அப்படியே தம்பித்துவிட்டான். ஏன்? தனக்கு கடித மெழுதி அவ்வபாயகரமான தனி மாளிகைக்குத் தன்னை வரவழைத்தவளுமான அவ்வழகிய நங்கையே அவளெனக் கண்டான். இராகுனது ஆட்களைக் கண்டதும் மறைந்தோடிவிட்ட அம்மின்னற் கொடியே, தனது அபாய நிலைமையை உணர்ந்து, தகுந்த சமயத்தில் தங்கணவரோடு வந்துதவினாள் என்பதை சுரேந்திரன் தெற்றென உணர்ந்தான். உடனே அப்பெண்மணிக்குத் தனது வந்தனத்தையும், மனமார்ந்த நன்றி யறிதலையும் தெரிவித்துக் கொண்டான். சுரேந்திரனைப் பிடித்துக்கொண்டிருந்த இராகுலனது ஆட்கள் எங்கோ ஓடி ஒளிந்து விட்டனர். அவ்வாட்களை உடனே தேடிக்கண்டு பிடிக்குமாறு தனது வீரர்கட்கு கட்டளையிட்டாள் அப்பெண்மணி.

அவ்வீரவனிதை யாரென நினைக்கிறீர்கள்? வாசகர்களே! அவள் நமது பதுமினி பெருமாட்டியே!


அத்தியாயம் 14

பிரிவாற்றாமை

மறுநாள் பொழுது புலர்ந்தது. முதல் நாளிரவு ஏற்பட்ட அதிர்ச்சியால் நன்றாய் அயர்ந்து தூங்கிவிட்ட சுரேந்திரன், பொழுது விடிந்ததும் உற்சாகத்துடன் நித்திரை நீங்கி படுக்கையிலேயே எழுந்து உட்கார்ந்தான். தான் எழுவதற்கு முன்னமேயே, இளவரசி விஜயம், தனது கையில் ஏதோ காயம்பட்டிருப்பதாய்க் கேள்வியுற்று, தன்னைப் பார்க்கும்பொருட்டு அதிகாலையிலேயே அரண்மனைக்கு வந்திருக்கின்றாள் என்ற செய்தியை கமலாகரர் மூலமாய்ச் சுரேந்திரன் அறிந்தான்.

அவனது கையில் அரண்மனை வைத்தியர் ஏதோ மருந்து வைத்து கட்டியிருந்தார். சுரேந்திரன் எழுந்து விட்டானென்றறிந்த இளவரசி, பதைத்த மனத்தொடு அவன் கிட்ட நெருங்கி, அவன் கையில் எங்ஙனம் காயம் பட்டதென வினாவினாள். ஏதேதோ பொய்க் காரணங்கூறி அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவன் கூறிய காரணங்களை அவள் ஏற்றுக்கொண்டாளில்லை. பூஞ்சோலை சென்று, பூஞ்செடிகளை விளையாட்டாகவெட்டி விட்டு கொண்டிருந்ததாயும், அவ்வெட்டு தவறி கையில் விழுந்துவிட்டதாயும் சுரேந்திரன் பொய்க்காரணம் புகன்றான். சேனைத் தலைவர் அவன் கூறியது உண்மை தான் என்று சான்றுபகர, அவற்றான் சிறிது சமாதான முற்றக் கோமகள், அவளது கையிற் கட்டியுள்ள கட்டை அவிழ்த்துக் காட்டுமாறு வற்புறுத்தினாள். உடனே கமலாகரர், மருந்து போட்டு கட்டியிருப்பதால் இப்போது அவிழ்க்கக் கூடாதென்றும், இன்னும் எட்டு நாட்கள் கடந்த பின்னரே அவிழ்க்கவேண்டுமென்றும் கூறினார். அரசிளஞ் செல்வியும் அக்கூற்றை உண்மையெனவே நம்பினாள்.

நாட்கள் சென்றுகொண்டே யிருந்தன. சேனாதிபதியும், சுரேந்திரனும் கருப்பு மாளிகையினுள் கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசர் பிரதாபனை எவ்வாறு மீட்பதென்றே யோசனையிலேயே தம்கவனம் முற்றுஞ் செலுத்தியிருந்தனர். இராகுலப் பிரபுவின்பேரில் குற்றஞ்சாட்டுதற்குரிய வெளிப்படையான காரணமேது மின்மையான், மிகச் செல்வாக்குப் பெற்ற பிரபுவான இராகுலனை. திடீரெனக் கைதியாக்குதற்கும் இயலவில்லை. மிகத் தந்திரமாயும் சாமர்த்தியமாயும் காரியத்தை சாதிக்கவேண்டியிருந்தது. என்ன செய்வதெனத் தோன்றாது பல நாட்கள் மயங்கி பின்பு ஒரு முடிவுக்கு வந்தனர்.

கருப்பு மாளிகைக்குச் சிறிது தூரத்தில் அரசர்க்கு உரித்தான் பெரியதோர் மாளிகையுண்டு. அஃது, மாயாபுரியின் அரசர்கள் வேட்டையாடி வந்து இளைப்பாறும் பொருட்டு, பண்டு அத்தேயத்து அரசரொருவரால் கட்டப்பட்டதாகும். அம்மாளிகைக்குச் சுரேந்திரனும் கமலாகரர் முதலியோரும் வேட்டையாடும் முகாந்தர மொன்றை ஏதுவாக வைத்துக்கொண்டு செல்லுவதெனத் தீர்மானித்தனர். ஆங்கு சென்றால், அரசரை மீட்பதற்குரிய பல வழிகள் தோன்றக்கூடுமென அவர்கள் எண்ணினார். ஆகவே, அங்கு செல்லுதற்கு நல்ல நாளொன்று குறிப்பிட்டனர்.

நிச்சயிக்கப்பட்ட அந்நாளும் வந்தடுத்தது. சுரேந்திரன் அளப்பரிய துயரத்தில் அமிழ்ந்தினான். முதன் மந்திரியிடம் சில விஷயங்களை மர்மமாய் அறிவித்து, அரசியல், விஷயங்களை கவனித்து வரும்படி சேனைத்தலைவர் கேட்டுக் கொண்டார். சுரேந்திரன் எல்லாரையும் அருகழைத்து. தான் வேட்டைக்குச்சென்று திரும்பி வருவது பெரும்பாலும் நிட்சியமில்லையென்றும், அங்ஙனம் தான் திரும்பிவாராமல் போய்விட்டால், உள்நாட்டுக் கலகங்கட்கிடமளிக்காமல் எல்லோரும் ஏகோபித்து இளவரசிக்கே முடிசூட்டி, தன்னிடத்திருந்ததைப் போலவே அவர்களெல்லாரும் அவட்கடங்கி நடக்குமாறும் கேட்டுக்கொண்டான். ஊழ்வினையின் பயனாய், பிரதாபை விடுவிக்கும் முயற்சியில் தானும் மாண்டு, பிரதாபும் கொலை செய்யப்பட்டுவிட்டால் மாயாபுரி மக்கள், வீண் கலகங்கட்கு இடங்கொடாது விஜயாளையே தங்கட்கரசியாகத் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டுமென்பது சுரேந்திரனது விருப்பம். ஆகவே, மேலே கூறியவண்ணம் எல்லாரிடம் வேண்டிக்கொண்டான். ஆனால், அவன் கூறிய மாற்றத்தின் உட்கருத்தை விளங்கிக்கொள்ள முடியாது எல்லாரும் திகைத்து நின்றனர். மந்திரச் சுற்றத்தாரும் தந்திரச் சுற்றத்தாரும் ஏனையோரும், அங்ஙனம் ஏதும் இடையூறு நேருமெனத் தோன்றினால் வேட்டைக்குச் செல்லவேண்டாமெனத் தடுத்தனர். அதற்கு தகுந்த சமாதானங் கூறுவான் விழைந்த சுரேந்திரன், தான் பெரும்பாலும் திரும்பிவர முடியாமல் ஏதும் பெருந்தடை நேரக்கூடுமெனத் தன்னுள்ளளிருந்து ஏதோ ஒன்று கூறுவதையும், அதுபற்றியேதான் இங்ஙனங் கூற நேர்ந்ததென்றும், அதற்காக அஞ்சி வேட்டைக்குப் போகாமலிருப்பது ஆண்மைக் கழகல்லவென்றுங் கூறி அவர்களை சமாதானப்படுத்திவிட்டு, எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு விஜயாளிடம் விடைபெறுவான்வேண்டி அவளிடத்துச் சென்றான்.

அன்று அவள் ஒரு வெண்பட்டாடை யணிந்திருந்தாள். அப்புடவை அவளது உடலுக்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருந்தது. கட்டிலில் படுத்தவண்ணம், தன் தோழியோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவளது பணிப்பெண் வனஜா அவளை நோக்கி,

" பெருமாட்டி! அரசர் பெருமான் தாங்கள் கூறியதைப்போன்றே தங்களிடத்து பேரன்பு பூண்டிருப்பது உண்மையே. ஆயினும்,'இங்ஙனம் ஒருவரை ஒருவர் விரும்பி மனங்குழையும்பொழுது ஏன் சீக்கிரம் மணஞ்செய்துகொள்ளக்கூடாது' என்று அரண்மனை வேலைக்காரர்முதல் எல்லாரும் ஒருவர்க்கொருவர் இரகசியமாய்ப்பேசிக்கொள்ளுகின்றனர்" என்று சிறிது அச்சத்தோடு மொழிந்தாள்.

"வனஜா, பயப்படாமல் உண்மையைக் கூறு அரசரைப்பற்றி உண்மைக்கு மாறான பல வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருவதாய்ச் சற்றுமுன் கூறினாயே, அஃதென்ன? சற்று தௌ¤வாய்க் கூறு" என்று தன் பணிமகளை நோக்கி அன்போடு கூறினாள் இளவரசி.

"பெருமாட்டி, மன்னிக்கவேண்டும். மன்னர்பெருமான் முடிசூட்டிய பிறகு எல்லாவற்றிலும் மாறுபட்டிருப்பதாகத் தாங்கள்கூட ஒருமுறை தெரிவித்திருக்கின்றீர்களல்லவா? அம்மாதிரியே பலரும் பலவிதமாய்ப் பேசிக்கொள்ளுகின்றனர். முடிசூட்டிய அன்று, ஆகாரம்சித்த மாய்விட்டதும் உடனே சேனைத் தலைவர் எச்சரித்து அரசே, தங்களின் உணவை டாக்டர் பரிசோதிக்கின்றார்; சற்று பொறுக்கவேண்டுகின்றேன்' என்று கூறிவிட்டு, அரசரது காதில் ஏதோ கூறியதாயும் அரண்மனை வேலைக் காரனொருவன் என்னிடம் மிக்க மர்மமாய் அறிவித்தான்" என்று வனஜா பணிவோடு, தன் எஜமானியின் முகத்தை உற்று நோக்கியவண்ணங் கூறினாள்.

விஜயாள் ஏதும் மறுமொழி யளியாமல் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள். பிறகு வனஜாவை நோக்கி, "சரி. நீ கூறுவது உண்மையாயு மிருக்கலாம். அதிருக்கட்டும், வேறு அரசரைப்பற்றி என்ன பேசிக் கொள்ளுகின்றனர்?" என்றாள்.

"வேறு ஏதும் தவறுதலாய்ப் பேசிக்கொள்ளவில்லை மாட்சிமை மிக்க நமது மன்னர் பெருமானை எல்லாரும் போற்றிப் புகழ்கின்றனர். முடி சூட்டுதற்குமுன் அரசரது செய்கைகள் எல்லார்க்கும் அருவருப்பைத் தந்தன என்பது தாங்களும் அறிந்ததே. ஆனால் இப்பொழுதோ சிறந்த குணங்களும் சீரிய ஒழுக்கமுடைய நமது மன்னர் மன்னனை விரும்பாதார் எவருளர்?-" என்று வனஜா கூறிவரும்பொழுது, இளவரசி அவளை இடை மறித்து,

"வனஜா, நீ என்னிடத்து உள்ளன்புடையள் என்பதை யான் நன்கறிவேன்ழுழுழழிழழழழதுதமனகனகனளகனனனனனனகனளகனளகனபகதபகனபகன. நான் என்றும் உன்னையோர் பணிப் பெண்ணாக நினைத்ததில்லை. என்னுயிர்க்குயிரான தோழியாகவே நினைத்து நேசித்து வருகின்றேன். நீ மிக்க நுண்ணறிவுடையாள். மனிதர் பிரசன்னமாயிருக்குங்காலை, ஒளிவுடன் விளங்கும் அரசரது முகம் தனிமையில் வாடுதற்கு காரணம் என்ன?" என்றாள்.

வனஜா தன் எஜமானியை ஒரு தெய்வ மாதாய் எண்ணி வணங்கி வந்தாள். தன் எஜமானியின் குறிப்பறிந்தொழுகும் இயல்புடையாள். அத்தகைய இயல்புடைய அப் பெண்மணி, இளவரசி தன்னை நோக்கி வினாவியதற்கு உடனே பதிலளிக்க விரும்பி, அக்கோமகனிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள், அவ்வறைக் கதவு திறக்கப்பட்டது. வசந்தா உள்ளே நுழைந்து தன் எஜமானியை வணங்கினாள்

"வசந்தா, எங்கு வந்தாய்" என்று வினாவினாள் இளவரசி.

"அம்மணி, மாட்சிமை தங்கிய மன்னர் பெருமான் தங்களைக் காண்பான்வேண்டி இங்கு வந்திருக்கின்றார்கள்" என்றாள் வசந்தை.

அம் மாற்றத்தைக் கேட்டதும் இளவரசியின் வதனம் மலர்ந்தது. அதற்கிடையில் சுரேந்திரனும் ஆங்கு தோன்றினான். ஒரு அரசிக்குரிய கம்பீரத் தோற்றத்துடன், விஜயாள் கட்டிலினின்றும் இறங்கி சுரேந்திரனை வரவேற்றாள்.

அவ்விரு பணிப்பெண்களும் அங்கிருந்து அகன்றனர். சுரேந்திரன் முதலிற்சற்றுத் தயங்கி பிறகு தான் வேட்டைக்குச் சென்று வரவேண்டிய அவசியத்தைப்பற்றிப் பீடிகை போட்டு பேச ஆரம்பித்தான். பயிர்களையும் நந்தவனங்களையும் காட்டு மிருகங்கள் அழித்துவிடுவதாய்க் குடிமக்கள் மனு செய்துகொள்ளுவதாயும், தான் உடனே வேட்டையாடச் சென்று, வெகு சீக்கிரம் திரும்பி வந்துவிடுவதாயும் இளவரசி தனக்கு விடையாளிக்க வேண்டுமென்றுங் கேட்டுக்கொண்டான். ஆனால் அதற்கு இளவரசி ஒருப்பட்டாளில்லை. குடிமக்களது குறைகளைக் களைய வேண்டுவது அரசர்தம் கடமையேயாயினும், தான் அவனைவிட்டு பிரிந்திருக்க விரும்பாததினால் தானும் வேட்டையாடுதற்கு வருவதாய் இளவரசி கூறினாள். சுரேந்திரன் பலதேற்றுரை பகர்ந்து, அவளை சமாதானப் படுத்துவது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது.

வெகுநேரஞ் சென்றுவிட்டது. அதற்குமேல் சுரேந்திரன் வேட்டைக்குச் செல்லுதற்கு சிறிது சம்மதித்தாள் உடனே சுரேந்திரன் நேரமாகிவிட்டதாயும், எல்லாரும் தன் வரவுக்கெதிர்நோக்கி காத்திருப்பதால் விரைவில்தான் செல்லவேண்டுமென்றுங் கூறி, அவளிடம் முடிவாய் விடை கேட்கத் தயங்கி அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான்.

"அரசே! சீக்கிரம் திரும்பி வந்துவிடுங்கள். எல்லாம் வல்ல இறைவன் தங்கட்கு உடல் நலத்தையும் நிறைந்த ஆயுளையும் அளிப்பானாக. இனி நான்-" என்று கூறிக்குறை வாக்கியத்தையும் முடித்து"போய்வாருங்கள்" என்று கூற விரும்பினாளாயினும், தன் மனத்தெழுந்த அன்பின் துக்கவெள்ளத்தால், அவ் வார்த்தைகளை வாய் விட்டுக் கூறுதற் கியலாதவளாய்த் தயங்கினாள் இளவரசி. அவள் கண்களில் நீர் ததும்பியது. இரண்டொரு துளிகளும் கீழே வீழ்ந்தன. ஆ ! அன்பின் திறத்தை அன்புடையோர் அறிவாரன்றி அயலார் அறிவாரோ? துளிகளாய்த் துளித்த கண்ணீர் ஆறாய்ப் பெருகிற்று. அன்பென்னும் வெண்மெழுகாற் செய்யப்பட்ட பாவை ஒன்று உள்ளருகிக் கண்விழி யொழுகினாற்போல, அழகுங்குணமும் ஒருங்கமைந்த விஜயாள் தலைகுணிந்த வண்ணம் பொருமிப் பொருமி அழுது இரு கண்களிலும் நீர்ப்பெருகி நின்றாள்.

அன்பிற்கிளகாத உயிரொன்றுண்டோ? அவள் நிலையை கண்ணாரைக் கண்டு நெஞ்சார உணர்ந்த சுரேந்திரன் மனங்கரைந்து செயலற்று அவளையே அன்புடன் நோக்கி கொண்டிருந்தான். அந்த அன்பின் பிரவாகத்தைத் தடுக்க அவன் அஞ்சினான். "இனி, அவளைப் பார்க்க வியலாமலே போய்விடுமோ? அங்ஙனமாயின், அவள் எங்ஙனம் வருந்துவாளோ?" என்றெண்ண அவன் உள்ளம் நெக்குநெக் குருகியது. சற்றுநேரங் கழித்து அக்கோமகள், ஒருவாறு துயரமடங்கிக் கண்ணீரைத்துடைத்துக்கொண்டாள். அப்பால் சுரேந்திரன் அவளை நோக்கி, "என் அருமை விஜயா! உனது நட்பின் மேன்மையை நான் நன்கறிவேன். என்னைவிட்டுப் பிரிவதால் உனக்குள்ள துயரத்தினும், உன்னை விட்டுப் பிரிவதால் எனக்குள்ள துயரம் பன்மடங் கதிகமாகுமேயன்றி குறையாது. ஆகவே, மகிழ்ச்சியோடு விடையளிப்பாய். நீ துயருறக் கண்டால். என்மனம் சொல்லொணா சஞ்சல மடைகின்றது" என்றான்.

"தங்களுக்கு என்பால் அன்பில்லை என்று யான் கூறத்துணியேன். ஆயினும், தாங்கள் ஒரு காரியத்தை மேற் கொண்டு செல்லுகின்றீர்கள். நானே எக்காரியமுமின்றி தங்களை நினைத்து நினைந்து வருந்திக்கொண்டு இங்கேயே இருக்க வேண்டியவளாகின்றேன். ஆனால் நம்மிருவர்க்கும் கூடிய சீக்கிரம் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திப்போமென்னும் ஆறுதலொன்றுள்ளது" என்றாள் இளவரசி.

சுரேந்திரன் அவள் கையைப்பற்றி முத்தமிட்டு, 'என் அன்பே ! நீ கூறியவாறே கூடிய சீக்கிரத்தில் நாம் மீண்டும் சந்திப்போம். நான் சென்று கருதிய கருமத்தை முடித்து வருகின்றேன். இனி நான் போக விடைகொடுக்க- என்று கூறி மேற்கூற இயலாது தயங்கி நின்றான். அவன் கண்கள் கண்ணீரை சொரியவிட்டன.

விஜயாள், அன்பு மிக்கூர, அதன் ஆற்றாக எழுந்தகவல் பெரும் வெள்ளத்தை ஆற்றாளாகித் தன் கையை அவன் கையினின்று பிடுங்கிக்கொண்டு, அவனெதிரே நிற்காது அவ்வறையைவிட்டும் வெளியே சென்றுவிட்டாள்.


அத்தியாயம் 15

தியாகச் செல்வனும் அன்புச் செல்வியும்

கருப்புமாளிகையை அடுத்துள்ள அரசர் இளைப்பாறும் விடுதி, வெண்மையான சலவைக் கற்களினாற் கட்டப்பட்டது. பார்ப்போருக்கு பரமானந்தத்தை விளைவிக்கும் முறையில் அம்மாளிகை அமைக்கப்பட்டிருந்தது. தூய வெண்மையாயிருந்ததுபற்றி அம்மாளிகை வெள்ளைமாளிகை எனவுங் குறிக்கப்பட்டது. இனி, நாமும் அம்மாளிகையை 'வெள்ளைமாளிகை' என்றே அழைப்போம்.

அம்மாளிகைக்கு சுரேந்திரன் முதலியோர் சென்று ஐந்து நாட்காளாய்விட்டன. அரசர் வேட்டையாடும் பொருட்டு வெள்ளை மாளிகையில் வந்து தங்கியிருக்கின்றோர் என்பதை யறிந்த பிரபு இராகுலன், தனது பிரதிநிதி யொருவரை அரசரைக் காண்பான் வேண்டி அனுப்பி வைத்தான். செம்மல் சுரேந்திரனும் அப்பிரதிநிதியை எதிர் சென்றழைத்து அன்போடு பேசிக்கொண்டிருந்தான். இருவரும் பலபொது விஷயங்களைப்பற்றி உரையாடி சிற்றுண்டியருந்துவான் பிரிந்தனர்.

மக்களின் மனத்தடத்தே மகிழ்வூட்டுகின்ற மங்காத மாலை வேளை. அம்மாலை வேளையில், வெள்ளி மாளிகையைச் சுற்றியுள்ள காட்டின் ஊடே சுரேந்திரன் தனியே சென்று கொண்டிருந்தான். அம்மாளை வேளையில் அவ்விடம் கண்ணுக்கினிமையாயிருந்தது. எங்கு நோக்கினும் மலைகளும் மலைத்தொடர்களும், குன்றுகளும், அவைகளின் மேல் படர்ந்திருக்கும் செடி கொடிகளின் செழுமையும் பார்ப்போர்க்கு பரமானந்தத்தை விளைவித்தன. அவ்வடர்ந்த காட்டின் ஊடே ஒடிய மலையருவிகளில், அந்திவெய்யிலின் இனிய கிரணங்கள் பட்டு பொன்மயமாய்ப் ஒளிர்ந்தன.

அவ்வியற்கை காட்சிகளைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் சுரேந்திரன் சென்று கொண்டிருந்தான். திடீரென எதையோ கண்டு உற்றி நோக்கினான்.ஆம் அவனைநோக்கி யாரோ ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான், கிட்ட நெருங்கியதும் அவன் யாரென உற்று நோக்க, அம்மனிதன் இராகுலனது பிரதிநியெனக் கண்டான். அம்மனிதன் சுரேந்திரனை அன்மியதும் தலை வணங்கினான்.

"எங்கு இவ்வளவு தூரம்" என்றான் சுரேந்திரன்.

"தங்களிடம் தனியே சில விஷயங்கள் கூற வேண்டியிருக்கின்றன. தங்களை தனியே சந்தித்தற்கியலாமையான் சாயங்கால நேரத்தில் இங்கு தனியே உலாவ வருகின்றீர்களென்பதை பணிமகன் மூலமாய் அறிந்து இங்கு வந்தேன்' என்றான், அப்பிரதிநிதி.

"எம்மிடம் தாங்கள் அத்துணை மர்மமாய் அறிவிக்க வேண்டிய விஷயம் யாதுளது?' என்று வினாவினான் சுரேந்திரன்.

சிறிது நேரம் ஏதுங்கூற வாளாயிருந்த அப்பிரதிநிதி சுரேந்திரனது முகத்தை உற்று நோக்கிக்கொண்டே, யான் இப்பொழுது தங்களிடம் கூறப்போகும் விஷயங்களைப் பிறரிடஞ்சொல்வதில்லையென வாக்களிப்பின். யான் தங்களிடம் உரைத்தற்கு விரும்பியவைகளைக் கூறுகின்றேன். என்றான்.

உமது இரகசியம் காப்பாற்றப்படும். அச்சமின்றி உரைக்கலாம், என்றான் நமது இளவல்.

நான் கூறப்போவது தங்கட்கு நன்மை பயக்கக் கூடியதே; இளவரசி தங்களைப் பெரிதும் விரும்புகின்றாரன்றோ? என்றான் பிரதிநிதி.

'அதைப்பற்றி இப்போதென்ன?" என்று சற்று அதிகார தொனியில் வினாவினான் சுரேந்திரன்.

'தாங்கள் வெள்ளை மாளிகைக்கு வேட்டையாடும் பொருட்டு வரவில்லை யென்பதும், வேறொரு முக்கிய காரணத்தை முன்னிட்டே வந்திருக்கின்றீர்களென்பதும் எனக்குத் தெரியும் ஏன்? யான் கூறுவது உண்மை தானே?" என்றான் பிரதிநிதி.

"உம்மிடம் யாம் எதையும் ஒப்புக்கொள்ள வேண்டுமென்னும் அவசியம் ஏதேனும் உண்டோ?" என்றான் சுரேந்திரன்.

"தாங்கள் ஒப்புக்கொண்டாலும் , கொள்ளாவிடினும் தாங்கள் உண்மையில் அரசரல்லவென்பதும். இம்மாயாபுரியின் உண்மையான அரசர் பிரதாபன், கருப்பு மாளிகையிலேயே இதுகாலை இருந்துவருகின்றாரென்பதும், அவரை விடுவிக்க வேண்டிய தாங்களும் ஏனையோரும் இங்கு வந்திருக்கின்றீர்களென்பதும் எனக்குத் தெரியும். அத்துடன்-' என்று அப்பிரதிநிதி கூறிவருகையில் சுரேந்திரன் இடைமறித்து.

"ஐயா! நீர் ஏதேதோ உளறுகின்றீர்; நீர் கூறுவது ஒன்றையும் எம்மால் புரிந்துகொள்ளுதற்கியலவில்லை. உம்மோடு வீண் பேச்சு பேசுதற்கிலாது. நாம் போகவேண்டும்' என்று கடுத்து அறைந்தான் சுரேந்திரன்.

"தாங்கள் காரணமின்றி என்னிடத்து கோபங்கொள்ள வேண்டாம். யான் கூறும் மாற்றம் முழுவதையுங் கவனித்து பிறகு பதிலளியுங்கள். இளவரசி தம்மை நேசிக்குமளவு பிரதாபனை நேசிக்கவில்லை. தாங்களோ வலியவரும் சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவதையொப்ப,'கடமை கடமை' எனக் கூறிக்கொண்டு பிரதாபனைத் தேடியலைகின்றீர்கள். கிழட்டு சேனாதிபதியின். பேச்சைக் கேட்டு கெட்டுப்போக வேண்டாம். மாயாபுரியின் மணி முடியும் அரசிளஞ் செல்வியும் தானே உம்மை வந்தடையும் பொழுது, வீணே மறுத்து ஏதேதோ புராணக் கதைகளை படிக்கின்றீர். ஆழ்ந்து சிந்திப்பின், யான் கூறுவதின் உண்மை தெற்றென உமக்கு விளங்கலாம்' என்றான் அப்பிரதிநிதி.

"நீர் ஏதோ கனவு காண்கின்றீர் போலிருக்கின்றது. நீர் கூறுவதை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லையென்று முன்னரே கூறிவிட்டேன். மீட்டும் மீட்டும் ஏதேதோ கூறுகின்றீர். என்ன ஐயா! நாம் இன்னாரென்பதை மறந்துவிட்டீரா?" என்று சினத்தோடு கூறினான் சுரேந்திரன்.

"ஐயா, இங்ஙனம் என்னை மிரட்டினால் நான் ஏமாறிப் போவேனென்றெண்ண வேண்டாம் இவ்வுலகினில் எல்லாவிதமான சுகபோகங்களுடனுமிருக்க உமக்கு சந்தர்ப்பங்கள் பல இருந்தும், அவைகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உமது பழைய தரித்திரத்தை விரும்பி வரவழைப்பதைப் பார்ப்பின், எனக்கு மிக்க மனவருத்தமாயிருக்கின்றது, வீணே மறுப்பதை விட்டு, யான் கூறுவதை தயவுசெய்து பொறுமையாய்க் கேளும். காதல் ஒன்றிற்காக எத்தகைய இழிகாரியங்களையும் மனங் கூசாது எத்தனையோபேர் செய்து விடுவிதை புத்தகங்களில் நீர் படித்ததில்லையா? தூய்மையான காதலைப் பெறுதற்காக முடிதுறந்த மன்னரும் இந் நிலவுலகில் இல்லாமலில்லை. காதலை விடுத்து அரசாட்சியை கவனிக்கப் புகுவோமாயின், தான் அரசாட்சியைப் பெறுதற்பொருட்டு தன் சொந்த சகோதரர்களைக் கொன்றவர் எத்தனைபேர்? தந்தையைக் கொலைபுரிந்தார் எத்தனைபேர்? இவைகளை தேச சரித்திரங்கூட உமக்கு எடுத்துகாட்டவில்லையா? அவர்களெல்லாம் உம்மைப்போன்று கடமையைப் கடைப்பிடித்தொழுகின், தம் வாழ்நாள் முற்றும் ஏழ்நிலையில் வருந்திக்கொண் டிருக்கவேண்டியதே" என்றான் பிரதிநிதி.

சுரேந்திரன் ஏதோ ஆழ்ந்து சிந்தித்தான். அதற்கு மேல் அப் பிரதிநிதியிடத்து உண்மையை மறைப்பது வீண் எனக் கண்டான். பிறகு அவனை நோக்கி, "நீர் கூறுவது உண்மையே. ஆயினும் அவர்களெல்லாம் இவ்வுலகினில் நீடு நின்று இன்பமனுபவித்துவிட்டனரா? இல்லையே?'முடிசார்ந்த மன்னரும் ஓர்நாள் பிடி சாம்பராவ' துண்மையன்றோ? நிலையற்ற தன்மையையுடைய இந் நிலவுகின் நலத்தை நச்சி, இங்ஙனம் தாம் விரும்புபவைகளைப் பெறுதற்காக பிறர்க்குத் தீங்கு செய்தேனும் வாழவேண்டுமா? ஐயா, வீண் பேச்சு பேசிக் கொண்டிருக்க நேரமில்லை; எனக்கு விருப்பமுமில்லை. நீர் என் உள்ளத்தை நன்குணர்ந்திருப்பின். இங்ஙனம் பேசத்துணியமாட்டீர். இம்மாதிரி இழிகுணங்கட்கு யான் இடங்கொடுப்பவனல்லன் என்பதை இனியாயினும் அறிந்துகொள்ளும். கடமையின் வழிநின்று ஒழுகுவதே என் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். பிறரைக் கொலை செய்தோ, பிறர்க்கு இன்னல் விளைவித்தோ பெறும் அரசாட்சியையோ, காதலையோ யான் விரும்பவில்லை, நானும் விஜயாளும் ஒருவரை ஒருவர் நேசிப்பது உண்மையேயாயினும், அந்த உண்மைக் காதலாகிய பெறுதற்கரிய பேரின்பத்தைப் பெறுதல் வேண்டிக்கூட, பிறர்க்குத் தீங்கு செய்ய ஒருக்காலும் சம்மதியேன்" என்றான் சுரேந்திரன்.

சிறிது நேரம் அப்பிரதிநிதி ஏதும் பேசத் தெரியாமல் தயங்கி நின்றான். பிறகு மீண்டும் சுரேந்திரனை நோக்கி,'உமதுவரையில் நீர் கூறிக்கொண்டது சரியென வைத்துக்கொண்டபோதிலும், கவலை இன்னதென் றிதுகாறும் அறிந்திராத அக் கோமகட்கு, அவள்தன் வாழ்நாள் முற்றும் துயரத்தைக் கொடுப்பது நியாயமாகுமா? உம்மைப் பிரிந்தால். அவள் அதிகநாள் உயிர்தரியாள். எல்லா நியாயமும் தெரிந்த உமக்கு, இது தெரியாது போனதேன்? முடிவாய்க் கூறுகின்றேன். என் பேச்சைக் கேளும். நீர் விரும்பினால் இராகுலப் பிரபுவையும், அரசர்பிரதாபனையும் ஒருவருமறியாமல் கொன்று ஆற்றில் எறிந்துவிடுகின்றேன். பிறகு எவ்வித அச்சமுமின்றி, மாயாபுரியின் மணிமுடி புனைந்து எப்பொழுதும் மன்னராகத் திகழலாம். இளவரசியின் மனமகிழ்வுங் குலையாது. யான் உமக்கு செய்யும் அப்பேருதவிக்கு பிரதிபலனாக என்னை முதன் மந்திரியாக்கி-' என்று கூறி பேச்சை முடிப்பதற்குள் சுரேந்திரன் தன்னிரு செவிகளையும் கைகளாற் பொத்திக்கொண்டு, 'உண்ட வீட்டிற்கு இரண்டகஞ் செய்யும் துரோகி! என்னிடம் இனி நீ ஏதுங்கூற வேண்டாம். சீக்கிரம் போய் விடு. சீச்சீ. இராகுலனது சோற்றைத் தின்று கொண்டே அவனை கெடுக்க நினைக்கும் கொடிய துரோகி, உன் முகத்தில் விழிப்பதே பெரும் பாவம். மீண்டும் நீ இங்கேயே நின்று கொண்டிருப்பாயாயின்,கொடிய தண்டளைக்குள்ளாக்கப்படுவாய்' என்று சீறினான். அதற்குமேல் அங்கு நிற்க அஞ்சிய பிரதிநிதி கருப்பு மாளிகையை நோக்கி விரைந்து சென்றான்.

சுரேந்திரனும் கமலாகரரும் பிரதாபனை அதிகமான உயிர்ச்¢சேதமின்றி எங்ஙனம் விடுவிக்க வேண்டுமென் பதைப்பற்றியும் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளவேண்டும் முறைமையைப்பற்றியும் ஆழ்ந்து யோசித்து, தம் வீரர்கட்கு உசிதம் போல் சொல்லி, ஒவ்வொருவரையும் திறமையாக நடந்துகொள்ளுபடி கற்பித்தனர். கருப்பு மாளிகையில், எப்பக்கமுள்ள அறையில் பிரதாபன் வைக்கப்பட்டிருக்கின்றானென்ற விஷயம் தெரிந்துகொள்ள முடியாமை யான், அவர்களிருவரும் தயங்கித் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அந்நிலையில் அவர்கட்கு தகுந்ததோர் உதவி கிடைத்தது.

சுரேந்திரன் மாயாபுரியின் எல்லைக்குள் சென்றஞான்று, ஆங்குள்ள சிற்றுண்டிச் சாலை சொந்தக்காரனது இளம் மகளொருத்தி எதிர்ப்பட்டு சுரேந்திரனை வரவேற்றாளென்று முன்னர் கூறியது வாசகர்கட்கு ஞாபகமிருக்கலாம். அச்சிறுமி சுசீலை யென்பாள் இராகுலனது கருப்பு மாளிகையில் ஒரு பணிமகளாய் அமர்த்தப்பட்டிருந்தாள். அழகிய மகளிரெல்லாம் தனக்காகவே படைக்கப்பட்டிருப்பதாய் நினைந்துகொண்டிருக்கும் பிரபு இராகுலன் அவளது அழகிய வதனத்தையும் பணிவையும் பலமுறைக் கண்டு மகிழ்ந்து அவளை தன் வேலைக்காரிகளில் ஒருத்தியாக அமர்த்திக்கொண்டான்.

கூரிய அறிவு வாய்ந்த அச்சிறுமி, அரசர் பிரதாபன் அம்மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை எங்ஙனமோ அறிந்து கொண்டாள். அங்ஙனம் அறிந்து கொண்டதும், எப்படியாயினும் முயன்று அவனைக் காப்பாற்றிவிட வேண்டுமென்றெண்ணி, தன்னால் எப்படி அப்பெருங்காரியம் சித்திக்குமென்பதைப்பற்றி அடிக்கடி வருந்திக்கொண்டிருந்தாள். அந்நிலையில் ஒரு நாள் இராகுலனும் மற்றொரு பிரபுவும் மிக்க மர்மமாய் உரையாடிக் கொண்டிருந்ததை அச்சிறுமி உற்று கேட்டதில், மாயாபுரியின் இப்போதைய அரசன் வெள்ளை மாளிகையில் தங்கியிருப்பதாயும், பிரதாபன் கருப்புமாளிகையில் கடுங்காவலில் வைக்கப்பட்டிருப்பதாய் அவன் சிறிதும் அறிந்து கொள்ளக் கூடாதென்றும், ஏதேனும் தந்திரத்தாலேயோ நயவஞ்சகத்தாலேயோ அவனையும் சேனைத் தலைவரையும் ஒழித்து விட்டால் தான், தான் நிம்மதியாயிருக்க முடியுமென்றும் பேசிக்கொண்டிருந்தது. அவள் காதுக்கெட்டியது.

இம்மாதிரியான கொடியவர்களிடம் தான் வேலைக் கமர்ந்ததைப்பற்றி சிறிது வருந்தினாள். அங்ஙனம் அமர்ந்திருப்பதினாலேயே அக்கொடியவர்களின் கருத்தை சிறிதாகிலும் உணர்ந்து,. பிறர்க்கு உதவிசெய்யக் கூடிய சந்தர்ப்பங்கிடைக்கிறதென்ற எண்ணம் அவள் மனத்தே உண்டாக சிறிது சமாதானமுற்றாள்.

அன்றுமுதல் அவ்விளஞ் சிறுமி, தான் எங்ஙனம் அப்புது அரசரிடஞ் சென்று இவ்விஷயங்களைத் தெரிவிப்பதென்பதை எண்ணி எண்ணி மனம் நொந்தாள். அதிலேயே அவளது மனஞ் சென்றுகொண்டிருந்தது. கைம்மாறு கருதாது, பிறர்க்கு உதவி செய்யவேண்டுமென்னும் எண்ணமே அவள் மனத்தில் போராடிக் கொண்டிருந்தமையான் ஊணை மறந்தாள்; உறக்கத்தை நீத்தாள். புது அரசர் எம்மாதிரி எம்மாதிரி இயல்புடையவரோ? உண்மையில் அரசுரிமைக் குரியரான பிரதாபன் உயிருடனிருப்பதை புதிய அரசர் அறியின்.அதனால் பிரதாபுக்கு இன்னும் அதிகப்படியான தீங்கு ஏதேனும் நேரிடக்கூடுமோ? என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் புண்ணாகினாள். ஆயினும். பிரதாபன் இங்கிருப்பதை இப்போதைய அரசன் அறியக்கூடாதென்று இராகுலனும், இன்னொரு பிரபுவும் பேசிக்கொண்டிருந்தது அவள் ஞாபகத்துக்கு வந்தமையான், புதிய அரசர் பிரதாபுக்கு தீங்கிழைப்பவரல்லர் என்ற எண்ணமே அவள் மனத்தில் உறுதிப்பட்டது. அன்றியும், இப்போதைய அரசரை பிரதாபென்றே எல்லாரும் எண்ணிக்கொண்டிருப்பதாலும், அவர் பிரதாபல்லாத வேற்று மனிதன் என்பது எவருமே அறியமுடியாத பரம இரகசியமாக யிருப்பதாலும் இருவரும் உருவில் ஒன்றாயிருக்கக் கூடுமென்றெண்ணினாள். அங்ஙனம் அவள் எண்ணியபொழுதே சில மாதங்கட்கு முன்னர் தன் தந்தையின் விடுதியில் தான் சந்தித்த மனிதராயிருக்குமோ என்ற ஐயமும் இடையிடையே எழுந்து அவள் மனத்தை உலப்பியது. நன்மை ஏற்படினும், தீமை ஏற்படினும் வெள்ளை மாளிகைக்குச் சென்று அரசரைக் கண்டுவரவேண்டுமென்னும் முடிவுக்கு வந்தாள்.

அன்றைக்கு மறுநாள், கருமமே கண்ணாயிருந்த சிறுமி சுசீலை, தான் எண்ணியவாறு, ஓர் போர்வையால் உடம்பு முழுவதையும் மறைத்துக்கொண்டு மெல்ல மெல்ல, வெள்ளை மாளிகையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். அப்போது ஆங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த காவலன் ஒருவன் அவளை இடைமறித்து "நீ யார்? எங்கு செல்கிறாய்?" என்று உசாவினான்?. நான் அரசரைப் பார்க்க வேண்டும். என்னை அவ்விடத்திற் கழைத்துச் செல்லுகின்றாயா?" என்றாள் சுசீலை. அக் காவலனும் உள்ளே சென்று அனுமதிபெற்றுவர, இருவரும் அரசரிருப்பிடஞ் சென்று, அரசரைக் கண்டு வணங்கினர்.

அச்சமயத்தில் அரசர் முகத்தைக் கூர்ந்து கவனித்த அச் சிறுமி, "ஆ, இஃதென்ன ஆச்சரியம்!" என்று கூவி அரசர் முகத்தை மீண்டும் உற்று நோக்கினாள்.

இங்ஙனம் தன்னை உற்றுநோக்கிய சிறுமியைச் சுரேந்திரன் கவனித்தான். அப்பொழுது அவள் இன்னாரென்பதை உடனே உணர்ந்துகொண்ட நமது கதாநாயகன். காவலனை விளித்து வெளியே போகும்படி கட்டளையிட, அவனும் உடனே அவ்விடத்தை விட்டகன்றான்.

எதற்காக அச்சிறுமி தன்னை அங்கு வந்து காண விரும்பினாளென்பதைப்பற்றி சுரேந்திரன் யோசித்துக் கொண்டிருக்கும்போது. அச் சிறுமி "ஆம், அந்த முகந்தான்! ஒருமுறை பார்த்தால் மனதிற் பதியக்கூடிய அம்முகத்தை மறக்க முடியுமா? எந்த இடத்தில், எந்த வேடத்திலிருந்தாலும் அந்த முகத்தை எளிதில் அறிந்து கொள்வேன" என்றாள்.

"குழந்தாய், அதிருக்கட்டும், இப்போது நீ என்னைப் பார்க்க விரும்பிய காரணம் யாது?" என்று வினாவினான் சுரேந்திரன்.

உடனே சுசீலை, தான் இராகுலப் பிரபுவிடம் வேலைக்கம்ர்ந்திருப்பது பற்றியும், அக் கருப்பு மாளிகையிலேயே பிரதாபனை சிறை வைத்திருப்பதைத் தான் அறிந்தது முதல் தன் மனம் பட்ட பாட்டையும், இராகுலனும் மற்றொரு பிரபுவும் பேசிக்கொண்டிருந்ததைத் தான் அறிந்ததுமுதல், தன்னால்இயன்ற அளவு முயன்று எங்ஙனமாயினும் அச்சதியாலோசனை நிறைவேறவொட்டாமற் தடுப்பதோடு, பிரதாபையும் ஏதேனும் முயற்சிசெய்து விடுவிக்க வேண்டுமென்று தான் கொண்ட தீர்மானத்தையும் சுரேந்திரனிடந் தெரிவித்ததன்றி, அதற்காகவே அவனைப் பார்க்க விரும்பியதாகவுங் கூறினார்.

"கும்பிடப்¢போன தெய்வம் குறுக்கே வந்த" தனைய கருப்பு மாளிகையிலேயே தற்போதிருக்கும் சிறுமி சுசீலையின் உதவி கிடைத்ததானது சுரேந்திரனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்தது. அவன் அவளை நோக்கி, 'என்னை எங்ஙனமறிந்துகொண்டாய்?' என்று உசாவினான்.

யான் தங்களை அறிந்து கொண்டது ஒர் வியப்பல்ல. தங்களை அறிதற்கு முன்னிருந்த, என் மனக் குழப்பமெல்லாம் தங்களைக் கண்ட வினாடியே தீர்ந்துவிட்டது. அச்சமொழிந்து ஆனந்தமடைந்தேன்' என விடையிறுத்தாள் சுசீலை.

அப்பால் சுரேந்திரன் கமலாகரரை அழைப்பித்து சுசீலை மொழிந்த மாற்றத்தைத் தெரிவிக்க, அவர் அதற்கு மேல், செய்ய வேண்டுவனவற்றை விவரமாய்த் தெரிவித்து, அச்சிறுமியை கருப்பு மாளிகையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஆங்கு வந்து தெரிவிக்குமாறு ஆக்ஞாபித்தார்.

இராகுலனின் சோற்றைத் தின்றுகொண்டு அவனுக்கே துரோகஞ்செய்வது கேவலம், இழிந்தோர்செய்கையென்று சுசீலை முதன் முதல் நினைந்தாளாயினும், அவன் செய்வது முற்றும் அட்டூழியமும், அநியாயமுமாய் இருத்தலினால் தான் அவனுக்கு மாற்றஞ்செய்வது குற்றமாகதென்ற முடிவுக்கு வந்ததும், அவர் கூறியவண்ணமே செய்வதாய் சுரேந்திரனிடத்தும் கமலாகரரிடத்தும், வாக்குறுதி செய்துவிட்டு, அவ்விருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவனிமிருந்தகன்றாள்.

அன்றுமாலை மணி ஐந்திருக்கலாம். இனிமையான காற்று சில்லென்று மேல்வீசியது. சுரேந்திரன் குன்றுகளின் ஊடே உலாவிக்கொண்டிருந்தான். இவன் மனம் பற்பல விஷயங்களைச் சுற்றிச் சுழன்று சோதித்துக் கொண்டிருந்தது. தன் சிந்தனையிலேயே மனதைச் செலுத்தி தன்னையும் உலகையும் மறந்து உலாவிக்கொண்டிருந்த சுரேந்திரனுக்கு, பொழுதுபோனதே தெரியவில்லை. பகலவன் மேற்றிசையில் மறைந்தான். சிறுகச் சிறுக இருள் எங்கும் பரவிக்கொண்டிருந்தது.

திடீரெனத் திரும்பிப் பார்த்தான்.எங்கணும் இருள் சூழ்ந்துவிட்டதையறிந்த சுரேந்திரன், மாளிகையை நோக்கி விரைவாக நடக்கலுற்றான். அப்பொழுது அயலிலிருந்த மரப்பொதும்பில் யாரோ சிலர் பேசும் அரவம் அவன் காதுக்கெட்டியது. உடனே தலை நிமிர்ந்து தன் மனப் பிராந்தியென நினைத்து மறுபடியும் மாளிகையை நோக்கி நடந்தான்.

அப்போது அவனது வலது கையில் யாரோ பின்புறமாய் நின்று ஒதுங்கிக் குத்தியதாய்த் தெரிந்தது. வீரிட்டலறிக் கொண«¢ட திரும்பிப் பார்த்தான். அவனால்பார்க்க முடியவில்லை. அதிகமான இரத்தம் அவனது உடலினின்றும் வெளிப் போந்தமையான் மயக்கம் வந்து கீழேசாய்ந்தான். அந்நிலையில், அவன் கீழே விழுந்துவிடாதபடி யாரோ ஒருவர் அவனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்.

சுரேந்திரன் மயக்கம் நீங்கிக் கண் விழித்தபோது இராவாகிவிட்டது. அவன் வெள்ளை மாளிகையில் தன் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.அவன் படுக்கைக்குச் சமீபத்திற் கிடந்த மேசை ஒன்றின் மீது ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

சேனைத் தலைவர் - தியாகத்தினும் குணத்தினும் ஒப்புயர்வற்ற கமலாகரர் சுரேந்திரனருகே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். சுரேந்திரன் கண் விழித்தவுடன், தான் உலாவிட்டுத் திரும்பி வருங்காலையில் தன் வலதுகைத்தோளில் யாரோ குத்திவிட்டு ஒடியதும். தான் மயக்கம் வந்து கீழே விழப்போகும் அமயத்து தன்னைக்கீழ்ந்து விடாது ஒருவர் தாங்கிப் பிடித்துக்கொண்டதும் அவனது நினைவில் தோன்றின. அதுவன்றி பல்வேறு பட்ட நினைவுகளும் அவன் மனத்தில் தோன்றின. இங்ஙனம் தன் மனத்தில் தோன்றிய நினைவுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தமையால் இவையெல்லாம் நினைவோ அல்லது கனவோ என்று அவன் ஐயுற்றான்.

சுரேந்திரனது மனக்கலக்கத்தை யறிந்த சேனைத் தலைவர் அவனை நோக்கி அன்பாக,"அரசே, தனியே உலாவ வெளியிற் போக வேண்டாமென்று எத்தனை முறைக் கூறியும் கேட்கவில்லை. தாங்கள் உயிரைப் போக்க பல விரோதிகள் காத்திருக்கின்றனர். வெட்ட வெளியில் அகப்பட்டு கொண்டபோது பதுமினிப் பெருமாட்டியாலன்றோ காப்பாற்றப்பட்டீர்கள்? அப்பெருமாட்டியும் அவர்தங் கணவரும் தங்களை அரண்மனைக்குக் கொண்டு வந்துசேர்த்தபோது, அவர்கள் தங்களிடத்துக் கூறிய எச்சரிக்கை மொழிகளை மறந்துவிட்டீர்களா? சுசீலைக் கூறிய மொழிகளையாயினும் கவனிக்க வேண்டாமா? ஒன்றையுங் கவனிக்காததினாலேயே தங்கட்கு இத்தகைய இடுக்கண் நேர்ந்தது' என்றார்.

"பெரியீர், தாங்கள் கூறுவது உண்மையே. என்னை இங்ஙனம் கொலை செய்ய முயன்றவர் யாவர்? நான் இங்கு யாரால் கொண்டுவரப்பட்டேன்." என்றான் சுரேந்திரன்.

"இன்னாரென்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, ஏனெனில் அப்பாதகர்கள் ஒடிவிட்டனர்.ஆயினும் , அவர்கள் இராகுலனது ஆட்களாய் தான் இருக்க வேண்டுமென யூகித்தேன்" என்றார் கமலாகரர்.

"நீங்கள் அங்கு எதற்காக வந்தீர்கள்" என்று வினாவினான் சுரேந்திரன்.

"அதிக நேரமாகிவிட்டமை யான்,நான் தங்களைத் தேடிக்கொண்டு வந்தேன். தாங்கள் தனியே செல்லுந்தோறும் எனக்கு மனக்கலக்கமாயிருப்பது வழக்கம். ஆகவே, இன்று தங்களை வெகு நேரம் எதிர்பார்த்தும் வாராமையான் எங்கும் தேடிக்கொண்டு அங்கு வந்தேன், அப்பொழுது அங்கு நேர்ந்த கொடிய காட்சியைக் கண்டு மனங்கலங்கி, தங்களைக் கீழ் வீழ்ந்துவிடாது தூக்கிக் கொண்டு இவண் வந்தடைந்தேன்" என்று விடையிறுத்தார் பெரியவர்.

"அன்பார்ந்த பெரியீர்! நான் உங்கள் மாட்டு எத்துணை நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்! எத்தனையோ முறை தாங்கள் எனக்கு புத்தி போதித்தும் யான் கவனிக்காமையான் எனக்கு இத்தகைய துன்பம் நேர்ந்தது. தாங்கள் என்னிடத்துக் காட்டும் இத்தகைய பேரன்பிற்கு கைம்மாறேதுஞ் செய்ய வகையறிகிலேன்" என்று சுரேந்திரன் அன்போடு கூறினான்.

கமலாகரர் ஒருவர் காதுக்கும் எட்டாத மெல்லிய குரலில் அவனை நோக்கி, "குழந்தாய்! நான் உனக்குச் செய்ததாய்க் கூறும் இச்சிறு உதவி, ஜீவகாருண்யமுள்ள ஒவ்வொரு மனிதனும் செய்யக் கூடியதே. ஆனால், நீ எனக்குச் செய்துள்ள பேருபகாரங்கள் - எத்துணை மடங்கு சிறந்ததென்பதை எண்ணிப்பார்! எனக்குமட்டுமா? தேசத்திற்கு, தேச மக்கட்கு, அரசர் பிரதாபுக்கு- இன்னும் எத்தனையோ கூறலாம். இம்மாயபுரியின் அதன் அரசரும் உனக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றனர். இவைகளைப்பற்றி பேசுதற்கு இது ஏற்ற சமயமல்ல. உனது புயத்தில் பலமான காயம் பட்டு அதிகமான இரத்தம் வெளிப்பட்டுவிட்டது. இந்நிலையில் நாம் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கலாகாது.

சற்று அமைதியாய் நித்திரை செய் நான் போகிறேன்" என்று அன்பொழுகக் கூறினார்.

பிறகு சேனைத் தலைவரின் உத்திரவைப்பெற்ற பணிமகனொருவன், சுரேந்திரனுக்கென்று சித்தப்படுத்தித் தயாராக வைத்திருந்த ஆகாரத்தை அவனுக்குக் கொடுத்து அதை உண்ணும்படி வேண்டினான். அவனும் அதற்கிசைந்து ஆகாரத்தை உட்கொண்டான், பின்பு கமலாகரர், உற்சாகமூட்டும் சில மருந்துகளை அவனுக்குக் கொடுத்தார். இச்சமயத்தில் மருத்துவர் வந்து அவனுக்குத் தூக்கம் வரும்படி மருந்து கொடுத்துத் தூங்க வைத்து விட்டார்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. முந்திய நாள் மாலை மலைகளின் ஊடே அரசர் உலாவிக்கொண்டிருந்தபொழுது யாரோ ஒருவன் அரசரின் வலதுகை புயத்தில் குத்திவிட்டு ஒடிவிட்டதாயும், அதனால் பலவீனமுற்ற அரசர் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமலிருப்பதாயும் எங்கணும் பரவிய செய்தி இளவரசி விஜயாளின் காதுக்கும் எட்டியது.

அதைக் கேள்வியுற்றது முதல் அவள் ஒர் உயிரற்ற பதுமை போலானாள். அவளது மனது எதிலுஞ் செல்லவில்லை. அவள் அடைந்த வேதனையும் சங்கடமும் கூறத்திறமன்று, அவனை உடனே சென்று பார்க்காவிடின் தன் உயிரே போய்விடுமென்றுணர்ந்தாள். அவளை வெள்ளை மாளிகைக்குச் செல்ல வேண்டாமென்று பலர் தடுத்தனர் ஆயினும், அவள் கேட்டாளில்லை. ஆகவே அவ்வன்புச் செல்வி வருதற்குரிய ஏற்பாடுகள் தாமதமின்றி நடைபெற்றன. அவளைப் பின் தொடர்ந்து செல்லுதற்கு பலர் ஆயத்தமாயினர்.

அன்று பிற்பகல் மணி மூன்றிருக்கும், கமலாகாரர் சுரேந்திரனது படுக்கையறைக்குள் வாடிய முகத்தோடு நுழைந்தார். அவர் சுரேந்திரனை அண்மி "மெதுவாக, இளவரசி உங்கட்குக் காயம்பட்டதைக் கேள்வியுற்று இவண் நோக்கி வருகின்றார். நான் எதிர் சென்றழைத்து வருகின்றேன்" என்றார்.

"விஜயசுந்தரி இங்கு வந்துவிடின், நமது காரியங்கள் நடைபெறுதற்கு ஏதும் இடைஞ்சல் ஏற்படுமே" என்றான் சுரேந்திரன்.

"என்ன செய்கிறது! நம்மால் ஆகக்கூடிய ஒன்று மில்லை. எல்லாம் தெய்வச் செயல். உனக்கும் உடம்பு நலமாகி, நல்ல நிலைமைக்கு வரவேண்டாமா? அது வரையிலும் இளவரசி இங்கிருக்கட்டும்" என்றார் கமலாகரர்.

"ஐயோ! விஜயாளின் மாசற்ற அன்புப் பெருக்கைத் தடுக்கயான் விரும்பவில்லை. ஆயினும் கூடிய சீக்கிரம் அரசரை விடுவிக்க வேண்டியது நமது கடமையன்றோ? இன்னுஞ் சிறிது நாட்கள் பிரதாபை விடுவியாதிருப்பின் அவரது உயிர்க்கே அபாயம் நேரக்குடுமென்று சுசீலைக் கூறினாளன்றோ?" என்றான் சுரேந்திரன்.

கமலாகரர் துக்கத்தோடு பெருமூச்சு விட்டு "உண்மையே. நாம் என்ன செய்கிறது? வருவது வந்தே தீரும். இளவரசி இங்கிருந்து எவ்வளவு சடுதியிற் செல்லுகின்றாரோ அவ்வளவுக்கு நல்லது. சரி, நேரமாகிறது. நான் போய் விஜயாளை வரவேற்கவேண்டும்" என்றுக்கூறி விட்டு அவ்விடத்தினின்றும் வெளியே சென்றார்.

சாயங்காலம் மணி ஐந்தடித்தது. அரசிளஞ்செல்வி விஜயாள், மாந்தர் பலர் பின்தொடர்ந்துவர வெகு பரபரப்போடு வெள்ளை மாளிகையினுள் நுழைந்தாள்.

சுரேந்திரன், விஜயாள் கவலையடையக் கூடுமென்றெண்ணி படுக்கையிற் படுத்திராமல் எழுந்து உட்கார்ந்திருந்தான். விஜயாளின் உயர்ந்த குணங்களும், தன்னிடத்து அவள் கொண்டுள்ள மாசுமறுவற்ற அன்பும் அவன் மனத்தைக் கவர்ந்தன. அவனும் அவளைத் தன் உயிரினும் மேலாகப் பாவித்தாளகள்; அவள் கண்களில் மனத்துயரால் ஒரு துளி நீர் தோன்றுமாயின், அதைக் காண அவன் சகியான்.

திடீரென அறைக் கதவு திறக்கப்பட்டது. விஜயாள் பரபரப்போடு ஒடிவந்து சுரேந்திரனது இரு கைகளையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள். அவள் கண்கள் நீரைச் சொரிந்தன.

"என் அன்பிற்குரியாய்! கண்ணீர் உகுக்கின்றாயே? என் உடம்பு நலமாகவேயிருக்கிறது. வீண் வதந்தியை உண்மையென்று நம்பி வருந்துகின்றாய்போலும்,எவனோ ஒருவன் என் தோளில் குத்திவிட்டுச் சென்றது உண்மையே. ஆயினும் அஃதொரு பலமான காயமன்று" என்று சுரேந்திரன் அன்பொழுகக் கூறினான். அவளைப் பார்க்கவும் சுரேந்திரனுக்கு அவனையுமறியாமல் துக்கம் பொங்கியது. தன் கண்களில் அரும்பிய இரண்டொரு நீர்த்துளிகளை எத்துணை அடக்கமுயன்றும், அவனால் அடக்க முடியவில்லை.

சற்றுநேரஞ் சென்று சமாதானம் அடைந்தவளாய்க் காணப்பட்ட விஜயாள், சுரேந்திரனை நோக்கி 'எங்ஙனமாயினும் ஆகுக., முற்றிலும் உடல்நலமடையும் வரையில் யான் தங்களைத் தனியே விட்டுச் செல்லேன். நான் அங்ஙனம் செல்வேனாயின் மனச்சலிப்பே என் உயிரைப் போக்கிவிடும். ஆதலால் அரசே! நான் தங்களோடு தான் ஊர்க்குத் திரும்புவேன். அப்பொழுதுதான் என் மனம் சாந்தியடையும்" என்று உருக்கமாய்க் கூறினாள்.

சுரேந்திரன் சிறிதுநேரம் சிந்தனையிலாழ்ந்திருந்து பிறகு விஜயசுந்தரியை அன்போடு பார்த்து,"நல்லது இனி என்னைவிட்டுச் செல்லவேண்டாம்" என்றான்.

அதே சமயத்தில் அறைக்கதவு திறக்கப்பட்டது. சேனாபதி உள் நுழைந்தார்.


அத்தியாம் 16

கருப்பு மாளிகை

செம்மல் சுரேந்திரன் அரசாட்சியை மந்திரிவசம் ஒப்புவித்துவிட்டு வெள்ளை மாளிகைக்குவந்து ஆறுவாரங்களாய் விட்டன. சுரேந்திரன் இப்போது நல்ல உடல்வன்மையைப் பெற்றான். இளவரசியும் சுரேந்திரனோடு அம்மாளிகையிலேயே தங்கிவிட்டாள். அதிக நாட்கள் ஆய்விட்டமையான், வெகு சீக்கிரத்தில் பிரதாபை விடுவிக்கக் கூடிய முயற்சியை மிக்க மர்மமாய் சேனைத் தலைவரும் சுரேந்திரனும் செய்துகொண்டிருந்தனர்.

கருப்பு மாளிகையில் இராகுலன் உட்பட மற்றெல்லோரும் சிறுமி சுசீலையின் பேரில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆகவே, அவள் அக்கருப்பு மாளிகையில் உள்ள எவ்விடத்திற்கும் போகவர அனுமதிக்கப்பட்டிருந்தது. அவள் கருதிய கருமத்தை இனிது முடித்தற்கு ஏதுவாய் அமைந்திருந்தது.

அவள் பணிவும் அன்பும் இயல்பிலேயே வாய்க்கப் பெற்ற அழகிய சிறுமியாதலின், பொதுவாய் அம் மாளிகையிலுள்ளார் எல்லாரும் அவளை நேசித்து வந்தனர். அங்ஙனமே பிரதாபைக் காவல் புரியும் காவலரிருவரும் அவளிடத்து அன்பு பாராட்டிவந்தனர். நாட் செல்லச் செல்ல, அக் காவலரில் ஒருவன், சுசீலையிடத்துக் கொண்டிருந்த சாதாரண அன்பு காதலாய் மாறியது. அவள் அவனை நேசித்தாளோ இல்லையோ, அவன் அவளை அளவு கடந்து நேசித்தான். அங்ஙனம் அவள் அக்காவல் வீரனது நட்பைச் சம்பாதித்துக்கொண்டது, பெரிதும் அனுகூலத்தைத் தந்தது,

நாள்தோறும் சுசீலை, அக்காவல் வீரனோடு நகைச்சுவை ததும்ப பேசிக்கொண்டிருப்பாள், அவனும் அவள் கூறுவனவற்றை மகிழ்ச்சியோடு கேட்டு ஆனந்தமடைவான். அவள் அவனோடு விளையாட்டாக பேசிக்கொண்டே சிற்சில சமயங்களில், பிரதாபைச் சிறை வைத்திருக்கும் அறைக்குள்ளேயும் போவதுண்டு. அங்ஙனம் அவள் போகுந்தோறும் அக்கம்பியில்லா சாளரத்தின் மேலேறி ஆற்றில் ஒடும் வெள்ளத்தை உற்று நோக்குவாள். அங்ஙனம் அவன் செய்வதை பிரபு அறிவாராயின், தன்னை மிகவுங் கோபித்துக்கொள்ளக் கூடுமென்று அக் காவல் வீரன் அஞ்சினானாயினும், அவளது விருப்பத்தைக் கெடுக்க மனமின்றி பேசாதிருந்துவிடுவான். மற்றவனும் அவள் மாட்டு அன்புடையவனாதலின் ,முன்னவனைப் போலவே யிருந்துவிடுவான்.

இவைகளையெல்லாம் அப்பொழுதைக்கப்பொழுது சுசீலை வெள்ளை மாளிகைக்கு வந்து சுரேந்திரனிடம் தெரிவித்துவிடுவாள். அவனும் கமலாகரரோடு ஆலோசித்துக் கொண்டு அவள் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றித் தெரிவிப்பான்

இஃதிங்ஙனமிருக்க, சுரேந்திரனும் கமலாகரரும் அரசர் பிரதாபை விடுவிக்கக்கூடிய முயற்சியைத் துரிதமாக செய்ய ஆரம்பித்தனர். சேனைத் தலைவரும், பொறுக்கி யெடுத்த ஐம்பது சிறந்த வீரர்களும் கருப்பு மாளிகையை இரவில் யாருமறியாவண்ணம் முற்றுகையிட்டுக் கொள்ளுவதென்றும், சுரேந்திரன் ஆற்றின் பிரவாகத்தில் நீந்திக்கொண்டு பிரதாபை சிறை வைத்திருக்கும் அறையின் ஆற்றின்பக்கமுள்ள கம்பியில்லா சன்னலருகிற் செல்லுவதென்றும், அதற்கிடையில் சுசீலை, பிறர் ஐயுறாவண்ணம் எப்போதும் செய்வதைப்போலவே அக் கம்பியில்லா சாளரத்திலேறி அதன்மேல் ஒரு நூலேணியைக் கட்டித் தொங்கவிட்டு வைப்பதென்றும், அதன்மேலேறி சுரேந்திரன் அவ்வறையில் மெதுவாய்க் குதித்து, பிரதாபின் தளைகளைக் களைந்தெறிவதென்றும், காவல் வீரர் விழித்துக் கொண்டு சுரேந்திரனைத் தாக்கினால், அவனும் அவர்களோடு பொருவதென்றும், அதற்குள் மாளிகையைச் சுற்றி மற்ற வீரர் முற்றுகையிட்டிருக்க, சுசிலையின் உதவியினால், கமலாகரரும் 20 வீரர்களும் மாளிகையினுட்புகுந்து, அச்சிறுமி வழிகாட்ட பிரதாபின் அறைக்கருகில் வந்து வாயிற் காவலனைக் கட்டிப்போட்டுவிட்டு, அறைக் கதவை திறந்துகொண்டு உட்புகுவதென்றும் தீர்மானித்துக் கொண்டனர். யாரும் எதிர்த்தால், யுத்தம் புரிவது இன்றியமையாதது, என்று ஏற்பட்டதவன்றி ஒருவரையும் தாக்குவதில்லை யென்றும், கூடுமான வரையில் உயிர்ச்சேதமின்றி பிரதாபை விடுவிக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு வீரர்கட்கும் சுரேந்திரன் கடுமையான உத்திரவிட்டான். இவ்வேற்பாடுகளெல்லாம் மிக்க இரகசியமாகவே நடைபெற்றமையால், அன்புச் செல்வி விஜயம் இவைகளில் ஒன்றையும் அறிந்துகொள்ளவில்லை. நிற்க.

அரசர் பிரதாபை விடுவிக்க குறிப்பிடப்பட்டிருந்த இரவும் வந்தடுத்தது. முன்னரே ஏற்படுத்தியிருந்த ஏற்பாட்டின்படி, வீரர்கள் ஐம்பதின்மரும் , ஆயுதபாணிகளாய்ச் சென்று கருப்பு மாளிகையை முற்று கையிட்டுக் கொண்டனர். காரிருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கருப்பு மாளிகையிருள்ளார் ஏதுமறியாமல் நன்றாய் அயர்ந்து நித்திரை போயினர். சிறுமி சுசீலை அங்குமிங்கும் ஒடிஎன்னென்னவோ செய்து கொண்டிருந்தாள். அவளது நெஞ்சு பட பட என்றடித்துக் கொண்டிருந்தது.

சுரேந்திரன் இளவரசியிடஞ் சென்று, அவளை நோக்கி "எஞ்சியுள்ள பகைவரைக் கெடுத்ததற்குரிய சிறந்த ஆலோசனை யொன்றுண்டு; அதனையாம் தனித்துச் செய்யவேண்டும். ஆதலால், கருப்பு மாளிகைக்குச் சென்று வரவேண்டும். எல்லா பிரபுக்களும் அங்கு வந்து கூடியிருக்கின்றனர்; சேனைத் தலைவரும் அவ்விடத்திற்குத் தான் சென்றிருக்கிறார். நான் போய், பிரபுக்கள் சபைக் கலைந்ததும் உடனே திரும்பி வந்து விடுகின்றேன்" என்றான். துக்கம் அவனது தொண்டையை அடைத்தது. அவளைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாகுமோ வென்ற எண்ணம் அவனைப் பைத்தியங்கொள்ளும்படி செய்தது. ஆயினும் பெரிதும் முயன்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு விஜயாளிடம், போக விடையளிக்குமாறு கேட்டான்.

அந் நாள்ளிரவில் சுரேந்திரன், கருப்பு மாளிகைக்குச் செல்ல விடை கேட்டதானது, விஜயாளுக்குச் சொல்லொணா சஞ்சலத்தை விளைவித்தது. அங்ஙனம் அந்த அர்த்த இராத்திரியில் போவது ஒருவிதமான துர்க்குறி என்று அவள் மனத்துள்ளிருந்து ஏதோ ஒன்று கூறினது. அவள் அவனைக் கருப்பு மாளிகைக்குள் அனுப்பவிரும்பவில்லையாயினும், எஞ்சியுள்ள பகைவரைக் கெடுத்தற்குரிய ஆலோசனை யொன்று செய்யப்போவதாகச் சுரேந்திரன் தெரிவித்தமையான், தான் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாதென்றெண்ணி, துயரத்தோடு அவன் போகுமாறு விடையளித்தாள்.

அவளது அனுமதியைப் பெற்ற சுரேந்திரன், அவ்விடத்தினின்றும் விரைவாக வெளியில் வந்தான். வாசலில் அவனுக்காகக் குதிரை யொன்று காத்திருந்தது. அப்புரவியிலமர்ந்து கருப்பு மாளிகையை நோக்கிச் செல்வானாயினன்.

மாளிகையருகிற் சென்றதும் குதிரையின் வேகத்தைச் சிறிது தளர்ததி மெதுவாக நடத்தினான். அதற்குள் சேனாதிபதி அவனை நெருங்கி அவனது கையைப் பிடித்துக் கீழே இறக்கினார். இருவரும் ஏதும் பேசவில்லை. ஆற்றங்கரையை நோக்கிச் சென்றனர்.

அவர்கட்கு சற்று தூரத்தில், இராகுலனது வேவுகாரன் ஒருவன், சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே உலாவிக்கொண்டிருந்தான். ஆற்றுநீர் வெகு வேகமாய் ஒடிக்கொண்டிருந்தது. ஆற்றின் பிரவாகத்துக் கண்ட கமலாகரர், சுரேந்திரனது காதில் மிக்க இரகசியமாக, ஆற்றில் இறங்க வேண்டாமென்றும், மாளிகையினுள்ளே நுழைந்து பிரதாபை விடுவிக்கலாமென்றும் கூற அவர் கூற்றைக் கேட்ட சுரேந்திரன், தனக்கு நன்றாய் நீந்தத் தெரியுமெனக் கூறி, அவர் தம் மறுமொழிக்குக் காத்திராமல் திடீரென ஆற்றில் குதித்துவிட்டான். வெகு நேரம் ஆற்றோரத்திலேயே நின்று, சுரேந்திரனது தலை தண்ணீர் மட்டத்துக்குமேல் வருகின்றதாவென சேனைத் தலைவர் உற்று நோக்கினார். ஆனால், அவனது சிரம் அவரது கண்கட்குப் புலப்படவில்லை.

ஆற்றில் நீந்திக்கொண்டு சென்ற சுரேந்திரன் பலமுறைத் தண்ணீரில் மூழ்கி எழுந்தான். ஆயினும் குறிப்பிட்டசாளரம் அவன் கண்கட்குத் தெரியவில்லை. ஊக்கத்தைத் தளரவிடாமல் பின்னும் பின்னும் சென்று கொண்டேயிருக்க, திடீரென்று ஒரு படுகுழியில் வீழ்ந்து விட்டான். அதிலிருந்து அவன் எழுதற்குப் பெரிதும் துன்புற்று, ஓர் ஆச்சரியமான சாமர்த்தியத்தினால் அப்படுகுழியிலிருந்து மீண்டான். பின்னும் நீந்திக்கொண்டே செல்ல, பலகணியொன்றுத் தென்பட்டது. அதனை யண்மியதும் அப்பலகணியில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த நூலேணி கண்கட்குத் தோன்றியது. அந் நூலேணியைக் கண்டதும், குறிப்பிட்ட சாளரம் அதுதான் என நிட்சயப்படுத்திக்கொண்டு ஆனந்தத்தோடு கிட்ட நெருங்கினான். நெருங்கியதும், அந் நூலேணியைப் பற்றிப் பிடித்து, அஃது பலமாகக் கட்டப்பட்டிருக்கின்றதா என்றுய்த் துணர்ந்துகொண்டு, அதன்பேரில் விரைவாக ஏறினான். மேலேறியதும் உள்ளே நோக்க, மிக மங்கலாய் ஒருவிளக்கெரிந்து கொண்டிருந்தது.

அவ்வறையில் காவலரிருவன் உட்கார்ந்தவண்ணம் தூங்கி விழுந்துகொண்டிருந்தனர். இதுதான் தகுந்த சமயமெனக் கண்ட சுரேந்திரன், மெதுவாகக் கீழே குதித்தான். அவ்வறையின் அமைப்பைக் கூர்ந்து நோக்கினான். கருங்கற்களினால் மிக்க உறுதியாய் அவ்வறைக் கட்டப்பட்டிருந்தது. அலங்காரமான எவ்வித சாமான்களும் அவ்வறையில் காணப்படவில்லை. இரண்டு பழைய நாற்காலிகளும், ஒரு உடைந்த மேசையும் ஒரு கயிற்றுக் கட்டிலுந்தான் அவ்வறையில் காணப்பட்டன. அக் கட்டிலின் மீதே பிரதாப்,மிக்க பரிதாபகரமான நிலைமையில் கைகால்களில் விலங்கிடப்பட்டு படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவன் உடல் மிகவும் பலவீனமுற்றிருந்தது. சரேலென அவனருகில் நெருங்கிய நமது கதாநாயகன், ஏற்கனவே சுசீலை தந்திரத்தால் பாதிகளையப் பட்டிருந்த அவனது தளைகளைக் களைதான். பிரதாப் சுரேந்திரனை வியப்போடு உற்று நோக்கவும், சுரேந்திரன் இன்னானென்பதை உடனே விளங்கிக்கொண்டான்.

ஆ! அப்பொழுது அவன் மனத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றிய நினைவுகளை என்னென்பேம்! தான் வனமாளிகையில் சுரேந்திரனைக் கண்டு தன்னோடிருத்திக் கொண்டதும் அன்றிரவு அம் மாளிகையில் எல்லாரும் மிக்க ஆனந்தமாய் உணவருந்தியதும், பிறகு பச்சைநிற ஸ்படிகம் போன்ற ஒருவிதமான லாகிரியை, கமலாகரர் குடிக்கவேண்டாமென மறுத்துங் கேளாமல் தான் பருகியதும் சிறிது நேரத்திற்கெல்லாம் தனக்கு மயக்கம் வந்து விட்டதும், விழித்துப் பார்க்குங்கால், தான் ஒர் கைதியைப்போல இவ்வறையில் அடைப்பட்டிருப்பதும்- ஆகிய இவைகளெல்லாம் பிரதாபின் மனத்தில் விவரமாகவும் விளக்கமாகவும் ஒன்றன்பின் ஒன்றாய் முறைமுறையே தோன்றின.

இங்ஙனம் தோன்றின நினைவுகளால் எழுந்த பிரமையும், அவற்றுட் சிலவற்றால் ஏற்பட்ட விசனகரமான உணர்ச்சியும் ஒருபுறத்தே யிருக்க, பிரதாபின் மனத்தில் தான் தற்போதிருக்குமிடத்திற்கு சுரேந்திரன் எப்படி வந்தான்? தான் இதுகாறும் அனுபவித்துவரும் துன்பத்தைப்பற்றி சுரேந்திரனிடம் அறிவித்தவர் யார்? அங்ஙனம் அறிவித்தபோதிலும், மாயிருஞாலத்து மன்னுயிருண்ணுங் கூற்றைப்போன்றவராகிய எம்முடைய வீரர் இருக்க, அவ் வீரர்களின் தலைவரான கமலாகரரிருக்க உறுதிச் சுற்றத்தாரிருக்க, தன்னைக் காப்பாற்றுவதில் அவர்களனைவர்க்கும் அக்கரை, இளஞ்சிறானான இவனுக் கேற்பட்டதென்ன? என்ற இவைபோன்ற கேள்விகள் எழுந்தன.

இதற்கிடையில். சுரேந்திரன் தளைகளைக் களைந்த சத்தத்தினால் விழித்துக்கொண்ட காவலன் ஒருவன், பிறன் ஒருவன் பரிதாபின் விலங்கைக் தறித்துக்கொண்டிருப்பதைப் கண்டதும் சிறிதுநேரம் வியப்பினால் வாய்பேசாது திகைத்து நின்றான். மறு வினாடியே சுரேந்திரன் மீது பாய்ந்து அவனைத் தாக்கினான். அவனும் அதை எதிர்பார்த்திருந்தமையான் அக் காவலனோடு யுத்தம் புரிந்தான். இங்ஙனம் இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளியும் தாக்கியும் அடித்தும் பொருதனர். சந்தடி அதிகமாகவே, மற்றவனும் விழித்துக்கொண்டான். நெருக்கடியான நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட மற்றொரு காவலன், சுரேந்திரனை மறுபுறம் தாக்கினான்.

தன்னை விடுவிக்கும்பொருட்டு தேவதூதனே போன்று வந்து தோன்றிய அச்சுந்தர வாலிபனை காவலரிருவரும் தாக்குவதைக்கண்ட பிரதாப், தனது பலவீனமான நிலைமையை முற்றும் மறந்து, எழுந்து, காவலரில் ஒருவனை பின்புறமாய்ச் சென்று தாக்கினான். திரும்பிப் பார்த்த அக் காவலன், சுரேந்திரனை விடுத்து, பிரதாபை வாளின் பிடியினால் ஒங்கி மண்டையில் ஒர் அடி அடித்தான். அப்போதைய அவனது உடல்நிலையில், அக் காவல் வீரன் அடித்த அடியைப் பொறாமல் கீழே விழுந்து விட்டான். அவனது மூளை சுழன்றது.

பிரதாபனது நிலைமை இங்ஙனமிருக்க, சுரேந்திரன் தன்னோடு முதலில் யுத்தம்புரிந்த காவலனை அடித்து வீழ்த்திவிட்டு மற்றவனோடு போர்புரிந்தான். ஒருவரை ஒருவர் அடித்தும், தாக்கியும் குத்தியும் கடுமையான போர் செய்தனர். வரவர சுரேந்திரன் பலங்குன்றினான். அர்த்த இராத்திரியில் ஆற்றில் இறங்கிக் குளிரில் மிகுந்த பிரயாசைசோடு நீந்திக்கொண்டு வந்தமையானும், முதலில் எதிர்த்த காவலனோடு சண்டையிட்டு அவனை தோற்கடித்தமையானும் சுரேந்திரன் சிறிது தளர்ச்சியடைந்தான்.

அதே சமயத்தில் கதவு திறக்கப்பட்டது. சுசீலை முன்னே வர, சேனாதிபதியும் 20 சிறந்த வீரர்களும் முன் ஏற்பாட்டினபடி அறைக்குள் நுழைந்தனர். உடனே காவல் வீரன் கைதுசெய்யப்பட்டான். சுரேந்திரன் ஆற்றின் பிரவாகத்தை நீந்திக்கொண்டு எவ்வித அபாயமுமின்றி வந்ததைப்பற்றி கமலாகரர் இறைவனுக்கு நன்றி செலுத்தினார். எனினும் பிரதாபின் அபாயகரமான நிலைமைக்கு வருந்தி அவனருகிற்சென்றார். பிரதாப் தந்நிலையிழந்து உணர்வற்றுக் கிடந்தான்.

கதையின் இப்பகுதியை எவ்வளவு விரைவாகக் கடந்து செல்லக்கூடுமோ அவ்வளவு விரைவாகக் செல்ல வேண்டுமாதலால், ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பித்து மேற்செல்லுவோம். சுரேந்திரன் அரசர் பிரதாபல்லவென்று மிகமுக்கியமான சிலர்க்குமட்டும் தெரியுமன்றி ஏனையோர்க்குத் தெரியாது. ஆகவே, பிரதாப் விடுவிக்கப்பட்டதும், சுரேந்திரன் மறைவிடமொன்றில் தனியே விடப்பட்டான்.

அதற்குமேல், எல்லாக்காரியங்களும் வெகுவிரைவாயும் மந்தணமாயும் நடந்தேறின. அம்மாளிகையிலுள்ளார் எல்லாரும் இராஜ துரோகத்திற்காக கைது செய்யப் பட்டனர். இராகுலப் பிரபுமட்டும் ஒருவர் கையிலும் அகப்படாமல் தப்பிக்கொண்டார். ஆயினும் அவர் அதற்குமேல் உலகினில் உயிர் வாழ விரும்பினாரில்லை. " மானமழிந்தபின் வாழாமை முன்னினிதே" என்றதற் கொப்ப ஆற்றில் குதித்து உயிர்நீத்தார்.

அரசன் பிரதாப், வசதியான படுக்கையொன்றில் விடப்பட்டான். அவனருகில் சிறந்த டாக்டர் ஒருவர் உட்கார்ந்து மணி தவறாமல் மருந்தும் ஆகாரமும் உட் செலுத்திவந்தார்.

எல்லாக் காரியங்களும் மேற்கூறியவண்ணம் விரைவாகவும் மந்தணமாகவும் நடந்தேறினவாயினும், எங்கணும் உண்மைக்கு மாறுபட்ட ஒர் வதந்தி பரவியது. கருப்புமாளிகையில் எதோ அரசியல் விஷயமாய்ப் பேசுதற்காக அரசர், இராகுலப்பிரபு, மற்றும் பிரபுக்கள் எல்லாம் ஒன்று கூடியிருந்ததாயும், ஆங்கு அரசர் ஏதோ பேசிக்கொண்டிருந்தபொழுது, திடீரென ஆங்குள்ளார் எல்லாரும் அரசர்பேரில் பாய்ந்து அவரைக்கொலை செய்ய முயன்றதாயும், தகுந்த சமயத்தில் அரசரது சேனைத்தலைவர் வந்து அரசரைக்காப்பாற்றியதாயும், அயினும் அரசரது தலையில்பட்ட அடியினால் உணர்வுகலங்கி, மரண மூர்ச்சையில் கிடப்பதாயும், அப்பால் தப்பியோடியவர் போக மிச்சம்பேர் கைது செய்யப்பட்டதாயும் வதந்தி பரவியது.

மறுநாள் பொழுது புலர்ந்தது மக்கள் கூட்டங்கூட்டமாய், அரசரைப் பார்க்க வேண்டி கருப்புமாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஆயினும், அரசரைப்பார்க்க எவரும் அனுமதிக்கப்படவில்லை. இவ்விஷயங்களெல்லாம் மறுநாட் காலையிலேயே இளவரசி விஜயாளுக்குத் தெரியவந்தன.


அத்தியாயம் - 17

எதிர்பாராத நிகழ்ச்சி

பகலவன் பேரொளியுடன் கீழ்த்திசையில் எழுந்தான்; வானம் முழுவதும் மாசுமறுவற்ற நீல நிறத்துடன் விளங்கியது. மன்னர் பெருமான் பிரதாபன் மரண மூர்சசையில் கிடப்பதாக ஏற்பட்ட வதந்தி, மறுநாட் காலையிலேயே இளவரசி விஜயத்துக்குத் தெரியவந்தது. கருப்புமாளிகைக்கு தன்காதலன் விடைபெற்றுச் சென்ற வினாடியிலிருந்தே இன்னதென்று கூறிவியலாத, பெருங்கவலையும், திகிலும் அரசிளங்குமரி விஜயத்தைப் பிடித்திருந்தன. இறுதிநாள்வரையில் தன் மனமகிழ்வை குலைக்கக்கூடிய எதிர்நோக்காத ஒரு பெருநிகழ்ச்சி நிகழக்கூடுமென்று அவளது அன்பு வழிந்த நெஞ்சத்தில் ஏதோ ஒன்று கூறிக்கொண்டே இருந்தது. பல்வேறு எண்ணங்களாலும் உலப்பப்பட்டு, கவல்கடலில் ஆழ்ந்து தடுமாறித் தத்தளித்துக்கொண்டிருந்த அக்கோமகட்கு, திடீரென்று வந்துதாக்கிய அவ்வதந்தி பேரதிர்ச்சியை உண்டாக்கியது. பல்லக்கேறி பவணிசெல்லாது, கால்கள் தள்ளாட கருப்பு மாளிகைக்கு காற்றாய்ப் பறந்தோடினாள், அவ்வரசிளஞ் சிறுமி.

அளப்பரிய அன்புவெள்ளம் பெருக்கெடுத்தோடும் போது அணைபோடுவது அறமன்று என்பதை உணர்ந்திருந்த சேனைத்தலைவர், சுரேந்திரனுக்கு ஒழுக்கநெறியை உணர்த்தி, மக்கள் தம்கடமையை அறிவுறுத்தி, விஜயாளிடத்தில் இறுதி விடைபெறாமற் போய்விடுமாறும் அதற்குப் பிரதியாகவும், அரசர் பிரதாபனுக்குச் செய்த பேருதவிக்காகவும், பெருத்தபணத்தொகை அவனுக்கு பரிசளிக்கப்படுமென்றுங் கூறினார். அறநெறிபிறழாத அந்நம்பியும் தந்நலங்கருதாது பிறர் நலங்கருதி, அவ்வுடன் பாட்டிற்கு இணங்கி அக்கணமே வெளிப்போந்தான். விஜயாள் எதிர்நோக்கி வரக்கூடுமென்று எதிர்பார்த்த கமலாகரர், சுரேந்திரனை அரச பாட்டைவழியே செல்லவிடாது. அடுத்துசென்ற ஒரு உந்தின் வழியாக புகைவண்டிச் சாவடிக்குச்செல்லுமாறு விடுத்து, தான் அரசிளஞ்செல்வியை வரவேற்குமாறு சென்றார்.

எங்ஙனும் நோக்காது, எதையும் எண்ணாது, சுரேந்திரனது திருமுகதரிசனமே தனது இருலோக வாழ்க்கையினது இன்பசாரம் என்றுண்ணி, கண்ணீர் விடாது கவல்கொண்ட முகத்தோடு கருப்புமிளிகைக்கு ஏக, திடீரென்று வெளிப்போந்து ஒடின அவ்வரசகுலச் சிறுமியை இரண்டொரு பணியாட்களே பின்தொடர்ந்து செல்ல முடிந்தது.

சிலவினாடிக்குப்பின்பு, இந்நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற தாதிப்பெண்கள் பலர், அரசபாட்டைவழியே நெடுந்துரஞ்சென்றுவிட்ட அவ்வன்புச் செல்வியை, விரைவிற் சென்றடைவான் வேண்டி, பலகுறுக்கு வழிகளின் மூலமாயும் விழுந்து ஒடினர். அவர்களில் வனஜா என்ற பணிப்பெண், அரசபாட்டைக்கு அடுத்துள்ள ஒர் சந்தின் வழியாக விழுந்து ஒடினாள். ஆங்கு ஆச்சரியகரமான ஒர் காட்சியைக் கண்ணுற்றாள். மாட்சிமை மிக்க மன்னர் கோமான், மண்டலம் புகழும் மாயாபுரியின் மணிமுடி வேந்தன், எண்டிசையும் புகழ்கொண்ட அரசர்பிரதாபன், தனியனாய், கவலுற்ற வதனத்தோடு ஏவலாள் எவருமின்றி, புரவியிலமராது எளிய உடையில் எதிர்நோக்கி வரக்கண்ட காட்சியே அது, மரணமூர்ச்சையில் கிடப்பதாக கூறப்பட்ட அரசன், எவ்விதகாயமுமின்றி, குனிந்த தலையோடு எதிர்நோக்கி வருவதைக்கண்டு அப்பணிமகள்திப்பிரமை அடைந்தாள். இறும்பூதெய்தும் இம்மங்கல மாற்றத்தை அரசகுமரி விஜயாளிடந் தெரிவிக்க நினைத்து "மகாராஜ், இன்னே வந்து தங்களைக் காண்பார்கள்" என்று சுரேந்திரனை நோக்கிக் கூவினாள், அடுத்தகணமே அடுத்தபாட்டைக்குச் செல்ல குறுக்கே முறித்துக்கொண்டு செடிகளை விலக்கி கல்லும் முள்ளும் காலில் கடிந்துறுத்த கடுகிச் சென்றாள்.

உடல் முழுதும் வியர்வை வெள்ளம் பொழிய வனஜா அரசபாட்டைச் சென்றடைந்தபொழுதுதான் இளவரசி விஜயாள் அங்கு வந்துகொண்டிருந்தாள். இரண்டொரு மொழிகளில் எல்லாம் விளக்கப்பட்டன. அதற்குள் கமலாகலரரே அவ்விடம் வந்துசேர்ந்தார். அனைவரும் வனஜா வழிகாட்ட, அவள் வந்தவழியாகவேசென்று சுரேந்திரனையடைந்தனர். இளவரசி தலைவிரி கோலத்துடன், பாய்ந்து சுரேந்திரனது இருகைகளையும் பற்றிக் கொண்டு "எம்பெருமானே! வாட்டமுற்றிருப்பதேன்? மரணமூர்ச்சையில் கிடப்பதாகக்கேட்டு திகில்கொண்ட அடியாளுக்கு தேற்றமொழி பகராததென்னை?" என்றறைந்து, ஒ வெனக்கதறி யழுதாள். கண்கள் நீர்சொரிய செம்மல் சுரேந்திரன் ஏதும் மறுமொழியளியாது, சேனாதிபதியை ஏறிட்டு நோக்கினான், கடமையே தன்வாழ்க்கையின்பம் எனக்கொண்ட அப்பெருமகனும் கீழ்கண்டவாறு கூறினார்.

"பெருமாட்டியே மாறிமாறிச் சுழலும் இப்பிரபஞ்சத்தகப்பட்டு, தாறுமாறாய் அலையும் உயிர்கட்கெல்லாம், தனிக்கருணைப் பெருமானாகிய இறைவன், பல ஒழுங்கு முறைகளையும், சட்டதிட்டங்களையும் வகுத்திருக்கிறான். அவைகளை மாற்றவோ, கூட்டவோ, குறைக்கவோ மக்களால் முடியாது. மாற்றவியலா அச்சட்டதிட்டங்கட்குத்தான் 'விதி' என்று பெயர். அவ்விதிக்கு உட்பட்டவர்கள் தான் தாங்களும் என்பதை மறந்துவிட முடியாது. விதியின் ஆக்ஞைக்கு உட்பட்டவர்களாகிய நமக்கு, அதுவே சில சமயங்களில் சதி செய்வதாகவும் படும், அவ்வாறு உங்கள் கண்கட்கு சதியொன்று படக்கூடிய ஒன்றைத்தான் விதி உங்கட்குச் செய்துவிட்டது. எனவே, "நிதியுங் கணவனும் நேர்படினுந் தத்தம் விதியின் பயனே பயன்" என்ற ஆன்றோர் வாக்கை நினைந்து, அனுமதியோடு கருப்பு மாளிகைக்கு வரின் உண்மை விளக்கப்படும்"


அத்தியாயம் 18

உடைந்த நெஞ்சத்தின் உன்னத நோக்கம்

அன்று மாலை மணி ஆறிருக்கும். நிகழப்போகும் நிகழ்ச்சி கட்கு நான் சாட்சியாயிருக்கமாட்டேன் என்று கூறுவதைப்போல் கதிரவன் தன் கதிர்களை ஒடுக்கி, உலக மாயையில் அகப்பட்டு செய்வதின்னதென அறியாது, ஏன் வந்தோம், யாது செய்யவேண்டும், என்பதை முற்றிலும் மறந்து, கேவலம் உண்பதும் உடுப்பதும் மாக்களைப் போல இருத்தலுந்தான் வாழ்க்கையின் இன்பம் என்றெண்ணும் 'மனிதர்கள்' என்று சொல்லும் இத்தகைய பிராணிகளின் கண்கட்கு கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்னை மறைத்துக்கொண்டிருந்தான். உடைந்துபோன இரு நெஞ்சங்களின் இருளோடு பேரிருளும் வந்து உறவாடிற்று.

கொடிய எண்ணங்களென்னும் பெரும் பூதங்களான பயமுறுத்தப்பட்ட சுரேந்திரன், கருப்பு மாளிகையின் வரவேற்பு மண்டபத்தில், ஆழ்ந்த யோசனையுடன் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தான். திடீரென கதவு திறக்கப்பட்டது. சேனாதிபதி உள்ளே நுழைந்தார்.

"விஜயாளுக்கு அனைத்தும் அறிவிக்கப்பட்டு விட்டதா?" என்று சுரேந்திரன் மெதுவான தொனியில் கமலாகரரை நோக்கிக்கேட்டான்.

"ஆம், அனைத்தும் அறிவிக்கப்பட்டுவிட்டது; இரண்டாவது மாடியின் வட பாரிசத்தறையில் உன்னை எதிர் நோக்கிக் காத்திருக்கிறாள். ஆங்கு சென்று அவளிடம் இறுதிவிடை பெற்றுக்கொள்ளுவாயாக" என்று கூறிய சேனாதிபதியின் வார்த்தைக்கிணங்கி, சுரேந்திரன் மேன் மாடியை நோக்கிச் சென்றான்.

விஜயாள் இருந்த அறையின் கதவை மெதுவாகத் திறந்தான். பலகணி வழியே மீன்களின் துள்ளு விளையாட்டை உற்று நோக்கிக்கொண்டு, துயரமே வடிவாய் வீற்றிருந்த செல்வி விஜயாள் திரும்பினாளில்லை. அவள் முகம் இரத்தமே இல்லாததுபோல் வெளுத்திருந்தது. ஆனால் அவள் கண்களில் பிரகாசம் குறையவில்லை; சுருண்டு, இருண்டு அடர்ந்து வளர்ந்திருந்த அவள் கூந்தலின் அழகும் மாறவில்லை. மினுமினுவென்றிருந்த அவளுடைய நீலநிற பட்டாடை, உருக்கிவார்த்த தங்கச் சிலை போன்ற அவளது உடலுக்கு மிகுந்த அழகைக்கொடுத்தது. ஆயினும், அவள் முகத்தில் விசனக்குறி தௌ¤வாயிருந்தது.

மெதுவாக அவனை அண்மினான். நாத்தழுதழுக்க இன்குரலில் "விஜயா" என்றழைத்தான், மெதுவாகத் திரும்பினாள்.

"என்னை மன்னி, அறியாது யான் செய்த பெரும் பிழை பொறு. செய்வதின்னதென் றறிகிலேன். நான் ஏகுமாறு-" என்று சுரேந்திரன் கூறிப் பின்புறமாகத் திரும்பினான். ஏனெனில், அதற்குமேல் அவன் கூற விரும்பியது அவன் வாயினின்றும் புறப்படவில்லை, அவன் உள்ளழுத்திவிட முயன்ற பெருமூச்சு, அவனையும் மீறி வெளிப்பட்டு அவன் உடல் முழுதையும் குலுக்கிற்று அவன் தன் அழகிய கை விரல்களால், தன் ஒரு கரத்தால் அவர்களது கரத்தைப் பற்றி முத்தமிட்டு, அவளை சிறிது நேரம் அமைதியுடன் நோக்கி,"விஜயா! சென்று வரட்டுமா?" என்றான்

"அன்பே, இவ்வளவு சீக்கிரத்திலா?" என்றாள் விஜயாள் , அவள் குரல் கம்மியது. தன் முகத்தைப் பின்புற மாகத்திருப்பி தன் அம்பனையவரி நெடுங் கண்களின்று துளித்த இரண்டொரு நீர்த்துளிகளைத் துடைத்து முகத்தை சாந்தப்படுத்திக்கொண்டு, பிறகே சுரேந்திரன் புறமாய்த் திருப்பினாள்.

சுரேந்திரனுக்கும் உள்ளம் உருகிக் கண்களில் நீர் சுரந்தது. அவன் செயலற்று அவளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

சில நிமிடங்கட்கெல்லாம், விஜயா சுந்தரி சிறிது மனோதிடத்துடன் தன்பேச்சைத் தொடர்ந்து," அன்புடைய அறத்தாறு அறிந்து ஒழுகும் வழி தெரிகிலேன், ஆயின் மாட்சிமை மிக்க மாயாபுரியின் மணிமுடி வேந்தர் பிரதாபனிடம் என் மனம் எக்காலும் சென்றறிகிலேன். வேற்றுருபுனைந்து, மாயாபுரியின் மாயோனாகத் திகழ்ந்த சுரேந்திரனே என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டவன். சுரேந்திரா! ஏழ் நிலையிலுள்ள உன்னையே விரும்புகின்றேன்,. நான் முன்னொருமுறை பூஞ்சோலையில் உன்னிடம் தெரிவித்தவாறு, பூ உருண்டையின் இறுதிவரைக்கும் உன்னைப் பின் தொடர்வேன். என்னையும் உன்னோடழைத்துச் செல்வாயா?" என்று துயரத்தோடு மொழிந்தாள்.

"செல்வி, கடமையாற்றலின் இன்பமே வாழ்க்கையின் இன்பம், மக்களை நிறைமுதலாக்குவதும் அதுதான். என் ஒருவனுக்காக மாயாபுரியின் பல்லாயிரக் கணக்கான மக்கள், ஏமாற்றப்படுவதை நான் விரும்புகின்றேனில்லை. பெரியதோர் மனிதசமூகம், நீ அரசியாகத் திகழ்வதைக் கண் குளிரக் காண்பான் வேண்டி, விழைவுடன் எதிர் நோக்குகின்றது. அவர்கட்காக நம்முடைய வாழ்க்கையை தியாகஞ்செய்தலே மேல்நோக்கு, பிறர்க்காக தனது இன்பத்தை தத்தஞ்செய்தலே மேல்நோக்கு. பிறர்க்காக தனது இன்பத்தை தத்தஞ்செய்யும் அத்தகைய பெரியதோர் தியாகமே மனித வாழ்க்கையின் இலட்சியம்; நமது காதல் தூய்மையானது; நிர்மலமானது. பொங்கும் மலநீர் புழுக்கூடாம் இம்மாமிச பிண்டத்தின் பேரில் இச்சைவைத்த தன்று. மாயாபுரியின் அரசியாக நீ திகழ்வாய். யான் செல்வன்" என்றான் சுரேந்திரன்.

"அன்பிற்குகந்த சுரேந்திர, நீ கூறுவது முற்றும் உன்னையன்றி என்னால் உயிர்வாழ முடியாது. ஐயோ! நான் என்செய்வேன்! என் வாழ்நாளில் உன்னைவிட உயர்ந்தபொருள் வேறு ஒன்றுமே இல்லை என்று உறுதி கூறுகிறேன். உன்னைவிட்டு என்னால் பிரியமுடியாது. அரசர் பிரதாபை, அத்தான் என்ற முறையில் மட்டும் அன்பு பாராட்டுகின்றேனேயன்றி, அவரை மணக்க என் உள்ளம் ஒருபோதும் சம்மதியாது. நீ என்னை விட்டுச் செல்வாயாயின், நான் தற்கொலை புரிந்து கொள்ளுவேன். காதல் இன்றி வாழ்வதைவிடச் சாதல் சாலச் சிறந்ததன்றோ?



"பல்லார் புகழப் பெருஞ் சிறப்பும்
பாக்யம் பலவும் படைத் தென்ன?
அல்லார்  நெஞ்சத் திருள கற்றி
அன்பின் உருவா யதைத் திருத்தி
எல்லா நலனும் ஒருங் களிக்கும்
இன்பக் காதல் அடையா ரேல்
நல்லா ரல்லர் அவரெல்லாம்
நாற்கா லில்லா விலங்கினமே''

ஆகவே, நான் மாயாபுரியின் அரசு கட்டிலில் வீற்றிருந்து மணமுடி தரித்து ஆட்சி புரிவதைவிட, நெடியதோர் காட்டில், வேய்ந்த குடிசையில் குடியான சுரேந்திரனுடன் குடும்பம் நடத்துவதே எனக்கு பேரின்பம் பயப்பதாகும். சுரேந்திர, மீட்டும் என்னைத் தடுக்காதே" என்று உருக்கத்தோடு கூறினாள் இளவரசி.

சுரேந்திரன் பதில்கூற அறியாது சிறிது நேரம் தயங்கினான். பிறகு அவள் கரத்தைப்பற்றி, அமைதியுடன் அவள் முகத்தை நோக்கி "என் அருமை விஜயா! உண்மையே. ஆயினும், தந்நலத்திற்காக பல்லாயிரக் கணக்கான மாந்தரின் ஆர்வத்தையும், ஆவலையும் பாழ்படுத்துவது ஏற்புடைத்தன்று. மரணப்படுக்கையில் படுத்திருந்த உன் தந்தைக்குக் கொடுத்த வாக்கை நீ தவறுவதும் பீடுடைத்தன்று. அளப்பிரிய அன்பு வயப்பட்டு, மறுதளிக்கப்பட்ட எனக்கு, இனி இவ்வுலகம் எத்தகைய நன்மை பயத்தல் சாலும்? எனக்கென உஞற்றுதல் என்பது ஒன்றில்லை. மக்கட்கு யான் ஆற்றவேண்டிய கடமை யொன்றுளது. அதையே இனி உஞற்றுவன். நெஞ்சம் உன்னை விரும்புகின்றது; கடமையோடு போராடுகின்றது' தோல்வியும் உறுகின்றது. விஜயா! சீர் தூக்கிப்பார். கடமையை மறக்காதே" என்றான்.

சுரேந்திரன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் செல்வி விஜயாள் மிக்க பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்தாள். அவ்வமயம் அவள் தன் மனத்திலெழுந்த உணர்ச்சிகளை விவரிப்பது சாத்தியமன்று. அவளது சிரம்சுழன்றது. தனது தந்தையார் மரணப்படுக்கையிலிருந்த பொழுது நடந்த நிகழ்ச்சிகள் முற்றும் அப்படியே அகக்கண் முன்பு காட்சிகொடுக்க வாரம்பித்தன. சுரேந்திரன் கூறிய ஒவ்வொரு மொழியிலும் சிறந்த உண்மை பொதிந்திருக்கக் கண்டாள். தான் கடமையை முற்றும் புறக்கணித்து, காதலே பெரிதென்றெண்ணி, சுரேந்திரனைப் பின் பற்றிச் சென்று அவனை மணந்துவிடினும் எத்துணை காலந்தான் இவ்வுலகினில் நீடு நின்று இன்பநுகர்தல்கூடும்? முடிசார்ந்த மன்னரும் ஒர் நாள் பிடிசாம்பராவது உண்மையன்றோ!

இவ்வகையான எண்ணங்களான் அவள் அறிவு குழம்பியது. சிறிது நேரம் அமைதி நிலவியது. விஜயாள் ஏதும் மறுமொழி யளியாததைக் கண்ட சுரேந்திரன் மீட்டும் அவளை நோக்கி,"விஜயா, அறியாதவனென்று என்னை இகழற்க; யான் சொல்லுதலை ஊன்றிக்கேட்டிடுக. இனி, இவ்வுலகம் முழுதும் வெறும் பாழாகவும், சாரமற்ற சக்கையாகவுமே எனக்குத் தோன்றும், உன்காதல் பலன் பெறும் என்ற நம்பிக்கை இனி எனக்கிருக்க நியாயமில்லை ஆதலின், வேறேதேனும் உயர்ந்த நோக்கம் ஒன்றில் என்மனம் பற்றினாலொழிய, உயிர் வாழ்க்கையாற் பயனில்லை ஆதலின், இனி நாட்டின் நன்மைக்காக உழைப்பேன். என் தாய் நாடு, தமிழ்க்கோர் தாயகமாய் ஒரு காலத்தில் சிப்புற்றோங்கிய மதுராபுரி, பிற ஆட்சிக் குட்பட்டிக்கின்றது, அதை மீட்பதற்காக தம் உடல், பொருள், ஆவியையெல்லாம் தத்தஞ்செய்த பெரியாரை பின்பற்றுவேன். என்னைபோன்ற மனிதர்களை - மனித சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவருவதாகிய உயர் நிலையில் என் நோக்கம் சென்றிருக்கிறது. ஏழைகளை அற்பப் புழுக்களாகக் கருதி, அவர்களைத் தாங்கள் காலின் கீழிட்டு நசுக்கும் சிலர். பணம் பதவிக் காசையுற்று, தேயநலத்திற் குழைப்பதைப் போன்று நடிக்கின்றனர். பிறர் நலங்கருதாது தந்நலத்தையே கருதும் அவ்வித தந்தலப் புலிகளைப் பின் பற்றாமல் உண்மையான தியாகிகளைப் பின்பற்றி, எனக்கென வாழாது பிறர்க்கென வாழ்வேன். நாட்டை பிற ஆட்சியினின்றும் மீட்பதற்கு பல இடையூறுகள்- அளப்பரிய இடையூறுகள் -உள்ளன. ஆனால் தந்நலம் அற்ற தியாகிகள் பலர் உண்மையாய் உழைக்கக் கங்கணங் கட்டிக்கொண்டு முயல்வார்களாயின், நாளடைவில் அவ்விடையூறுகள் முற்றும் நீங்கிவிடும், அங்ஙனம் முயல்பவருள் நானும் ஒருவனா யிருக்கவேண்டுமென்பது என் விருப்பம், காதல் என்ற கவசம் எனக்குக் கிடைத்திருக்குமானால், இவ்வுலகினில் உண்டாம் எவ்வகையான இடுக்கண்களையும் பொருட்படுத்தாது எதிர்த்து நிற்பேன், ஆனால் , ஐயோ ! விஜயா, அக்காதற்கவசத்தை அளிக்கவல்ல நீ, பிறனொருவனுக்கு வாழ்க்கைப் படப்போகின்றாய். இனி, நான் அதைப்பெற எண்ணக்கூடாது நடந்தேதீரும். விஜயா, நேரமாகிறது இனி நான்செல்ல விடைகொடு" என்று அளப்பரிய துயரத்தோடு கூறினான்.

"சுரேந்திரன்! தந்தலத்திற்காக பெரியாரின் விருப்பத்தையும், தேயமக்களின் ஆர்வத்தையும், என்கடமையையும் மீறிவிடத் துணிவுகொண்ட எனக்கு, அறிவு கொழுத்திய அண்ணலே! நீ கூறுவது முற்றும் உண்மையே, ஊழ்வினையை நிர்ணயித்துவிட்ட இறைவன், என்னை சோதிப்பதுபோல உன்னிடத்து எனக்கு இத்தகைய பேரன்பை புகுத்தி, என்னை ஏன் வருத்தவேண்டும்? என் மனத்தை எத்துணைதான் கட்டுப்படுத்திக் கொண்ட போதினும், இவ்வளவு சீக்கிரத்தில் நாம் பிரிந்துவிட வேண்டியிருப்பதை உன்னுந்தொறும் என் உள்ளம் உருகுகின்றது. அன்பா நாம் மீண்டும் ஒருவரை யொருவர் சந்திக்க முடியாதா?" என்று வினாவினாள் இளவரசி.

சுரேந்திரன் மிகவும் மெல்லிய, சோகமான குரலில் அவளைநோக்கி "விஜயா, எண்ணிப்பார் - நன்றாய் சிந்தித்துப்பார். நீ ஒருவர்க்கு வாழ்க்கைப் படப்போகின்றாய், நானோ இத்தேயத்தைவிட்டே செல்கின்றேன். நாம் இனி ஒருவரையொருவர் சந்திப்பதினால் நம்மிருவர்க்கும் தீங்கு நேருமேயன்றி நன்மையுண்டாகாது. வேண்டாம், வேண்டாம் - அந்த நினைவே வேண்டாம், இதுவரையில் நீ என்னைக்கண்டதினால் பட்ட துன்பம்போதும், இனியும் வேண்டாம், விஜயா, இனி எனக்கு: விடைகொடு, நான் சென்று - தெய்வத்துக்குத் திருவுளமிருக்குமாயின் - வருகிறேன். இல்லாவிட்டால் மேலுலகத்தில் சந்தித்துக்கொள்வோம்" என்றான்.

"சுரேந்திரா, நீ இப்பொழுது எங்கே செல்கிறாய்? உன்னுடைய தீர்மானமென்ன? எவ்வகையில் வாழ்க்கையை செலுத்துவதாக நீ உத்தேசித்திருக்கிறாய்?" என்று மிகவுங் கவலையோடு கேட்டாள் விஜயசுந்தரி.

"அவைகளைப்பற்றி நான் இன்னும் ஒருவகையான தீர்மானத்திற்கும் வரவில்லை. எங்கே, எவ்விடத்திற்கு என்ற உண்மை எம்பெருமானுக்குத்தான் தெரியும் அதிருக்கட்டும் சிறுமி சுசீலையை உன்பணிப்பெண்களில் ஒருத்தியாக அமர்த்திக்கொள். அன்பும் அழகும் ஒருங்கமைந்த அவ்விளஞ்சிறுமி, பிரதாபை மீட்பதற்கு சிறந்த ஒர் கருவியாய் உபயோகப்பட்டாள்" என்றான் சுரேந்திரன்.

அதிகநேரங்கடந்து விட்டமைபற்றி சுரேந்திரன் எழுந்துநின்றான். அதற்குள் கமலாகரர் ஆங்குவந்து, நேரமாகிவிட்ட தென்பதைக் குறிப்பித்து வெளிச்சென்றார். கடைசியாக சுரேந்திரன் விஜயாளை அண்மி அவளது இரண்டு கரத்தையும் ஆர்வத்தோடு பற்றி, அவளை அமைதியோடு நோக்கி, "விஜயச்செல்வி! போய்வருகிறேன்" என்று கூறி பொருக்கென அவ்விடம் விட்டு நீங்கினான். மெதுவாகத் தேம்பித் தேம்பியழும் குரல் கேட்டது. உடனே அவன் மாளிகை வாயிலில் தனக்காகக் காத்துக்கொண்டிருந்த வண்டியிலேறினான். முதன் மந்திரியும் , சேனைத்தலைவரும் சுரேந்திரனை வழியனுப்ப கூடவே அவ்வண்டியி லேறிக்கொண்டார். சுரேந்திரன் கண்களில் நீர் ஆறாய்ப்பெருகியது.

மூவரும் புகைவண்டித்தொடர் நிலையத்திற்குச் சென்றனர். இரயிலும் நிலையத்தை அண்மியது. சுரேந்திரன் உலகமே இருண்ட நிலையில். துயரமே ஒருருவெடுத்ததோவென்னும் படி, முகத்தைப் பிறர்பார்க்க முடியாமல் மூடிக் கொண்டவண்ணம் இரயிலிலேறி அமர்ந்து கொண்டான்.

சேனைத்தலைவர் அவனை அண்மி, மிக்கதுயரத்தோடு "யார்க்கு தகுதியுடையதோ, அவர்க்கு இவ்வுலகிர் அரசபதவி அளிக்கப்படுவதில்லை" எல்லாம்வல்ல இறைவனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்றே" என்றார்.

முதன் மந்திரி சுரேந்திரனது கைகளை ஆர்வத்தோடு பிடித்துக்கொண்டு, "சுரேந்திரா, மாட்சிமை மிக்க மாயாபுரியின் முடிமன்னர்¢க்கு ளெல்லாம் உன்னைப்போன்று சீரிய முறையில், நெறிபிறழாது ஆட்சிபுரிந்தவர்களன்று. மன்னர் பெருமான் பிரதாபன், உன்னைப் பின்பற்றி ஆட்சி புரிவாராக" என்று மெதுவாய்க் கூறினார்.

புகைவண்டியும் சிறுகச்சிறுக ஸ்டேஷனை விட்டும் நகர்ந்தது, முதன்மந்திரியும், சேனைத்தலைவரும் சுரேந்திரனை மிக்கமரியாதையோடும் பயபக்தியோடும் வழியனுப்பியதைக்கண்ட பொதுமக்கள், அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒர் பெரிய உத்தியோகஸ்தர், எங்கோ வேற்றுருபுனைந்து பிரயாணஞ் செய்வதாய் நினைந்துகொண்டனர்.

சுரேந்திரன் கண்கள் நீரைகக்கின! மாயாபுரியின் எல்லையைவிட்டு அவன் நீங்கியபோது செங்கதிர்ச் செல்வன் கருங்கடல் புக்கொளித்தான். நகரெல்லையைக் கடந்ததும், தான் விட்டு வந்த அந்நகரை உற்றுநோக்கினான். மாடமாளிகைகளிலும், கூடகோபுரங்களிலும் ஏற்றப்பட்டிருந்த விளக்குகள், ஞாலத்தின் உதடுகளைப்போன்று ஒளிவீசின. ஆனால், சுரேந்திரனின் கண்கள் கண்ணீரால் மறைப்புண்டிருந்தமையான், அவ்விளக்குகளின் பிரகாசம் முற்றும் அவனுக்கு தோற்றவில்லை. அவன் தன் சோகமான குரலில், மெதுவாக அந்நகரை நோக்கி, "மாயாபுரியே உனக்கு வந்தனம்! நான் செல்கிறேன் - இஞ்ஞாலத்து ஆண்மகனாய்ப்பிறந்து நான்காதலித்த-காதலிக்கும் பெண்மணி ஒருத்தியே, அவ்வொருத்தியைத் தவிர வேறொருவர் மட்டும் என் சிந்தை சென்றதில்லை, இனி எஞ்ஞான்றும் செல்லப்போவதுமில்லை, அந்த ஒருத்தியை-என்மனங்கவர்ந்த அந்த மங்கையை-ஏ, மாயாபுரியே! உன்னிடத்து விட்டு விட்டு, யான் தனியே-தௌர்பாக்கியனாய்ச் செல்கின்றேன்" என்று கூறிவிட்டு முகத்தைக் கையினால் மூடிக்கொண்டான், அக்கையை அவன் கண்ணீர் நனைத்தது; அவன்விட்ட பெருமூச்சால் அவனது உடல் குலுங்கி விசாலமான மார்பகம் விம்மியது.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக


முற்றிற்று.






Designed by: Suba :-Copyright THF