Monday 21st of May 2018

Home கிராம தெய்வங்கள் / Village Deities
கிராம தெய்வங்கள் / Village Deities PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 06 February 2010 17:59

 

The Hindu Village deities are found in almost every villages in India, Sri Lanka, Malaysia and other countries where Hindus are living. Among the most popular village deities are Veeran, Sudalai Veeran, Ayyanar, kathavarayan and Mariamman who are considered to be guardian angels of the village.

 

கிராமத்து தேவதைகள், சிறு தெய்வங்கள் இந்திய, இலங்கை மலேசியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் காணமுடிகின்றது. இப்பகுதியில் இக் கிராம தேவதைகள் பற்றிய சில செய்திகளை இப்பகுதியில் காணலாம்.

 


 

திருநெல்வேலி - தாமிரபரணி

விளக்கம், படங்கள்: சுபாஷினி ட்ரெம்மல்

 

தமிழகத்தின் சிறப்புக்களில் ஒன்றாகத் திகழ்வது தாமிர பரணி ஆறு. இந்த ஆறு செல்லும் கரையோரங்களில் ஆங்காங்கே சில ஆலயங்களைக் காணமுடிகின்றது.  சிறிய ஆலயங்கள் சற்றே பெரிய ஆலயங்கள் என கிராம மக்களின் வழிபடு தலங்கள் பல இப்பகுதியில் இருக்கின்றன. நான் டிசம்பர் 2009ல் திருநெல்வேலி சென்றிந்த போது ஆற்றின் அருகாமையில் எடுக்கபப்ட்ட புகைப்படங்கள் இங்கு உள்ளன. ஒரு அருகாமையில் உள்ள ஒரு கோயிலில் திருவிழா. அதற்காக ஆற்றின் ஓரத்தில் பக்தர்கள் பூஜைக்குத் தயாராகும் காட்சியை காணலாம்.

 

தாமிரபரணி ஆறு

 

பூஜைக்குத் தயாராகும் பக்தர்கள்

 

 

 

பூஜை சடங்குகளில் பக்தர்கள்

 

 

பூஜை சடங்குகளில் பக்தர்கள்

 

சிறுவர்கள் திருவிழா மகிழ்ச்சியில்

 

ஆற்றின் அருகாமையில் சாலையோரத்தில் மயில்

 

 


 

கிராம தேவதைகள், குறி சொல்லுதல் போன்ற கிராமிய வழக்குகள் 

திரு.ஓம் சுப்ரமணியம்

 

சிலாரூபங்கள் மண்சிலைகள்.முப்பிடாரி அம்மன், செல்லி அம்மன், இசக்கி அம்மன், பச்சையம்மன், பேச்சியம்மன், பலவேசம் இன்னும் பல தெய்வ வடிவங்கள் உள்ளன.இந்த மூர்த்திகள் கற்சிலையாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர். விழாதோரும் புதிதுபுதிதாக வேளார் அம்மன் சிலைகளும் மண்குதிரைகளும் உருவாக்குகிறார். அதனால் கழிக்கப்பட்ட யானை, குதிரை, பின்னப்பட்டஅம்மன் சிலைகள் குவிந்து கிடக்கும்.


சங்கிலி பூதத்தார், சுடலைமாடன், அய்யனார்,பனையாடியான், கருப்பசாமி, முனீஸ்வரன், மொட்டைக கோபுரத்தான், என்ற மூர்த்திகள் உண்டு.


முகம் கைகால் அங்கங்கள் தெரியாமல் , அடிப்பகுதி சற்றுப் பருத்து, மேலே செல்லச் செல்ல சுருங்கி நான்கு பக்கங்கள் கொண்ட கன ட்ரபீசிய வடிவங்கள் உண்டு. அதில் ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வங்களின் பெயர்கள் செவி வழிச் செய்தியாக அறியப்படும்.

ஒரு வளாகத்தில் பல மூர்த்திகள் இருப்பார்கள்.  விழாக்காலம் என்பதை ’கோயில் கொடையிட்டுத் தருதல். என்று அழைப்பார்கள்.


கொடையிடுங் காலங்களில் அந்த தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்; ’’தலைக் கட்டு’’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் பெற்றோர் ஒரு தலைக் கட்டு, திருமணமான மகன் குடும்பம் ஒரு தலைக்கட்டு ஆகும். கொடையிட்டுக் கொடுக்கும் போது ஆகும் மொத்தச் செலவு அத்தனை தலைக்கட்டுகளுக்கும் சமமாக பகிர்ந்து விதிக்கப்படும்.


வழக்கமாக ஒவ்வொரு மூர்த்திக்கும் அதன் அடியார்களெனக் கருதப்படும் குறிப்பிட்ட ஒவ்வொரு  குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்.


அந்தக் குடும்பத்தில் வழக்கமாக ஆவேசம் வந்து ஆடுபவர் காலமாகிவிட்டால் அவர் குடும்பத்தின் முக்கிய ஆண்மகன் மீது ஆவேசம் வரும். ஆவேசம் கொண்டு ஆடுவோருக்கு அந்தத் தெவத்துக்குரிய ‘சல்லடம்’ என்று அழைக்கப்படும் சீருடைகள் தனித்தனியே உண்டு. அதை அணிவிப்பார்கள். குடிமக்கள் குறைகள் களைய பரிகாரங்கள், இயற்கையின் கொடையான விவசாயியின் கேள்வி மாதமும் பொழியும் மாரியைப் பற்றியதுதான்.


தேரில் அலங்காரம், பெரிய தோரணக் குடை போன்றவற்றிர்க்கு துணி தைப்பவர் தான் இந்தச் சல்லடமும் தைத்து உருவாக்குவார். பாரம்பரிய வழக்கத்துக்கு மாறுபட்டு வேறு ஒரு விருந்தாளிக்கும் தேவாவேசம் வந்துவிட்டால் ’நீ எந்த பீடம்?’ என்று பூசாரி கேட்பார்.


ஆடுபவர், தான் பலவேசம், சுடலை, கருப்பு என்று ஒன்றைச் சொல்வார். ஏளனத்துக்கென எவராவது பொய்யாக ஆவேசம் கொண்டால் சவுக்கினால் அடித்து உண்மையை வரவழைத்துவிடுவார்கள்.வளாகத்திலேயே இல்லாத ஒர் மூர்த்தியின் பெயரை அவர் சொன்னால் சவுக்கடி வழங்கிவிடுவார் ஆவேசம் வந்த மூத்த சாமியாடி.


இதைத்தான் ’பீடம் தெரியாமல் சாமியாடினான்’ என்பது.
 
இந்தச் சொற்றொடர். அடிப்படை என்னவென்று தெரிந்துகொள்ளாமல் மேம்போக்காகப் பேசிச் செயற்படு வோரைக் குறிக்கவும் நடைமுறையில்  பயன்படுத்துகிறார்கள்.

 

பம்பை ; என்ற பெயருடைய ஓன்றின் மீது ஒன்றாக வைக்கப்பட்ட இரட்டை மேளம்.முக்கியமாக இடம்பெறும். கீழே இருக்கும் கொட்டு மேளம் ’உறுமி’ எனப்படும். வாசிப்பவருடைய இடது கையில் வளைந்த ஒரு குச்சியால் தேய்க்கும் போது ” வ்ரூம் வ்ரூம்” என்று உறுமுதல் போன்று ஒலி எழுப்பும். வலது கையில் மெலிந்த குச்சி யொன்று ‘ரண்டக்க ரண்டக்க’ என்று ஒலிஎழுப்பும்.நாகஸ்வரம் (நாதஸ்வரம் என்று அழைப்பது பிழையானது என்ற கருத்தும் உண்டு) ஒத்து ஜாலரா ஆகியவையும் வாங்கா,என்ற நீண்ட பித்தளைக் குழல்களும் உண்டு. சேகிண்டி, வெண்சங்கு இத்துடன் உண்டு.
உச்சஸ்தாயியில் அனைத்து வாத்தியங்களும் ஒரு சேர ஒலிஎழுப்பி அவசர கதியில் தொனிக்கும் போது ‘ஆடாத மனமும் உண்டோ?


நான் அனுபவப்பட்டவரையில் அங்கங்கள் அற்ற உருவப் பீடங்கள் (செங்கல் குழை சாந்து, ஆகியவற்றால் செய்து சுண்ணாம்பு பூசி வெள்ளையிடித்திருக்கும்).ஆண் தெய்வங்களுகு மட்டுமே இருக்கின்றன.


பெண் தெய்வத்திற்கு சிற்பி செதுக்காத முழுமையான சிறிய சாதாரணக் கல்லில் ஆவாஹனம் செய்திருப்பார்கள்.’
அய்யனார், முன் கால்கள் தூக்கிய நிலையில் நிற்கும் பெரிய குதிரையில் அமர்ந்திருப்பார். பூதத்தார் பேருருக்கொண்டவர். தலைவன், தலைவி, ஒரு சேய் ஆகிய மூன்று பேருடைய சிலாரூபம் செங்கல்லால், குழை சாந்துச் சுணத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.


கற்குவேல் அய்யனார், ஒரு தெய்வம் கிளிக்கூண்டு ஐயனார்(கோயில் பட்டியிலிருந்து நாலாட்டின்புதூர் போகும் வழியில்வானரமுட்டி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ளார். அவர் தலைக்கு மேல் ஒரு கூண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.)


வெங்கலமுடி ஐயனார் (திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சாணார்பட்டியிலிருந்து தனியே பிரிந்து அயயாபட்டி என்னும் ஊரில் விளை நிலங்கள் தாண்டி காட்டிற்குள் கோயில் கொண்டிருகிறார்.)’ என்னத்தக் கண்னையா’ என்ற திரை நடிகர் பிறந்த ஊர்.


அய்யனார் கோயிலின் முன்னர் நெடிதுயர்ந்த காட்டு மரங்கள் இரண்டு உள்ளன ஒரு மரத்தில் ஆயிரக் கணக்கான வெண்கல மணிகள் மாட்டப்பட்டுள்ளன. அவை ஓசை எழுப்பாதவை. காரணம் அந்த மரம் சேவார்த்திகள் கொண்டு மாட்டியிருக்கும் வெண்கல மணிகளை உள்ளே இழுத்து சதை வளர்ந்து வருவது போன்று மரம் வளர்ந்து மணிகளை மூடிவிடுகின்றது.. சிறிய மணிகளை இழுத்துக் கொள்வதைப் போன்று நான்கு அடி நீள இரும்புக் கம்பியில், இரும்புச் சங்கிலியிட்டுத் தொங்கவிட்டிருந்த பெரிய அளவிலான ஒன்றரையடிவெண்கலமணியையும் சட்டம், சங்கிலி,  யாவற்றையும் அதன் இரும்பு நாக்குடன் சேர்த்து மூடியிருக்கின்றது. இரண்டாவது மரம் அதே இனத்தைச் சேர்ந்ததுதான். அந்த மரத்திற்கு இந்தக் குணம் இல்லை.

 

இராப் பிச்சைக்காரன் (புரத வண்ணான்) என்ற வகுப்பு ஒன்று கிராமங்களில் உண்டு. செட்யூல்டு வகுப்பினரின் சலவைத் தொழிலாளி. அவர்களின் கிராமியத் தொண்டு மிகவும் பிரஸித்தமானது. அவர்கள் பகற்பொழுதில் பணியில் ஈடுபட்டு இரவு ஒவ்வொரு குடியானவர் வீட்டிற்கும் வந்து உணவு பெற்றுச் செல்வர். விழித்திருந்து பிட்சை அளிக்க இயலாதவர்கள். முறத்தில் உணவுப் பொருள்களை வைத்து வீட்டுத் திண்ணையில் தெரியும் படியாக வைத்துச் செல்வார்கள். இராப்பிச்சைக்காரர் இரவு பூசை முடித்துபின்னர்தான் வருவார்கள். மூடிய கதவிற்கு வெளியே குடும்ப அனுகூலச் சங்கதிகளை மொழிந்துவிட்டுச் செல்வார்கள்.


அவர்களைப் போன்று குடுகுடுப்பைக் காரன் என்று ஒரு வகுப்பினர் வருவர். அவர்கள் மாந்த்ரீகம் கற்று நியம நிஷ்டைகளுடன் வலம் வருவர். ஒன்பது கம்பளம் , எண்பது கம்பளம் என்றெல்லாம் அவர்களுக்குள் பிரிவுகள் உண்டு. வசதி மிக்க பணக்காரராக அவர் வாழ்ந்தாலும் ஆறு மாதங்கள் வெளியூர் சென்று பழைய ஆடைகள் பெற்று வருவது அவர்களின் தர்மம். குடும்பச் சிக்கல்கள் நிகழ்ந்து மன உளைச்சலில் இருப்போர்,(  இரவு நடுச் சாமத்தில் இடுகாடு/சுடுகாடு சென்று வழிபாடியற்றி ஆவேச நிலையில் வருகின்ற குடுகுடுப்பை காரரை வாயிலில் நின்று சிறு குடுகுடுப்பையை விரைவாக ஆட்டிக் கவனத்தைத் திருப்பி,சில தெளிவுரைகள் இடையிடையே சுருக்கமாகக் கூறுவர். வீட்டினுள் இருந்தே விவாதித்து கருத்துகள் பரிமாரிக்கொள்வோரும் உண்டு. மறு நாள் வந்து ஜக்கம்மா இவ்வாறு கூறினாள் என்பார்கள்.அந்த சமயங்களில் ஆவேசம் இராது. அவர்கள் இரவில் வரும் போது ஊர் நாய்கள் குரைக்க ஆரம்பித்தால், “ச்சடு”  என்று உரத்த குரலில் ஓங்கரித்துத் காரித் துப்புவது போன்று கத்துவார்கள். நாய் தன்னுடைய குரைக்கும் தொழிலைவிட்டு ஓடிவிடும்.
அல்சேஷன் போன்ற பெரியநாய்கள் குரைத்துக்கொண்டு கம்பிக் கதவை விட்டு வெளியே வந்தால் வாய்க்கட்டு என்ற வித்தை உண்டு. அந்தநாய்களின் வாயினைக் கட்டிவிட்டால் அதன் பின்னர் அது குரைக்கவும் முடியாது. இரைஎடுக்கவும் இயலாது. பணி முடிந்தபின்னர் வாய்க்கட்டை நீக்கிவிடுவது அவர்களின் வழுவாத தர்மம். பயமுறுத்தி பகல் வேளைகளில் வீடுகளுக்கு வந்து, நகைக் கடைத் தெருவில் வாடிக்கையாளர்களை, தக்க நபர்களை அடையாளம் கண்டுகொள்ள மோப்பம் பிடிக்கும் மனிதர்களைப் போல் அசந்து போன பயந்தாங்கொள்ளிகளை வேண்டாத தோஷங்களைச் சொல்லி பரிகாரம் செய்ய வென்று எண்ணெய் மிளகாய் வற்றல் அரிசி பணம் ஆகியவை பெற்று(பிடுங்கிச்) செல்வதும் உண்டு.


சவுக்கின் நுனியில் விளார் என்ற பகுதி இருக்கும். த்னக்குத் தானே அடித்துச் சுண்டுவதில் சில வழிமுறைகள் உண்டு. ஓசையப் பெரிதாக எழுப்பி உடலைத் தொட்டுச் செல்லும் படியும் வீசமுடியும். அடி விழாது. சாதாரணமாக அடித்தால் விளார் உடம்பின் மீது பட்ட இடத்தில் சதையைப் பிய்த்துக் கொண்டுவரும். காலில் சலங்கை கட்டிக்கொண்டு சலம் போடும் அன்பர்கள்(கவுண்டமணி ஒரு படத்தில் அவ்வாறு செய்வார்.) அடி விழுவது மாதிரி காட்டுவார்கள். குங்குமக் கரைசல் உடம்பில் வழியும்.  சாமியாடுபவர்கள் பிரம்பினாலும், சவுக்கினாலும் தன்னைத்தானே அடித்துக் கொள்வதும் ஒரு சம்பிரதாயம்.

 

நெல்லையிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது. அங்கே சந்தைகு அருகில் நெடுஞ்சாலையை ஒட்டியே சாய்ந்து மல்லார்ந்து படுத்த நிலையில் மண் செங்கல்லால் வடிக்கப்பட்ட ‘வண்டிமறித்த அம்மன்’ என்ற திருநாமம் கொண்ட இரண்டு பெரிய உருவங்கள். அமைந்த கோயில் திறந்த வெளியில் இருக்கிறது. அந்த அம்மனின் மூக்கின் ஒருதுவாரத்தினுள்ளே சிறு குழந்தை சென்றுவரும் அளவிற்கு பெரிய உருவம் .
வெயில் உகந்த அம்மன் கூரையின் அடியில் பிற மூர்த்தங்கள் கோயில் கொண்டிருக்க தான்மட்டும் வெட்ட வெளியில் வெயிலிலும் மழையிலும் நிற்கிறாள்.


பாபநாசம் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அகத்தியர் அருவி தாண்டி, வாண தீர்த்தம் அருகில் சொரிமுத்தையன் கோயில் சிறப்பு வாய்ந்தது. மதுரையில் முத்தையா கோயில் , சப்பாணி கோயில் உண்டு.
உசிலம்பட்டியில் பேயாண்டி, மாயாண்டி, விரும்பாண்டி கோயில்கள் உள்ளன.மூன்று கோயில் வழிபாடு. அவை முறையே சிவன், விஷ்ணு, பிரம்மாவைக் குறிக்கும்.

 

கோடாங்கி ஒரு வகையில் பூசாரி என்பர்.ஒரு தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர்.  குறி சொல்லுதல் அவர்களது இயல்பு.  அவர்கள் கையில் உடுக்கு(கோடாங்கி) இருக்கும். ஒரு பட்டையான கயிறு இருபக்கங்களையும் இணைக்கும் கயிற்றுப் பின்னலை இடதுகையினால் தளர்த்தியும் இறுக்கியும் வலதுகை விரல்கள் உடுக்கின் தோல்பகுதியில் விரைந்து மோதும்போது ஒலிஎழுப்பும்.   பேச்சின் நடுவே ஒலிஎழுப்பி பேசுவது ஒரு லயம்.  நோய்க்கும் பார் பேய்க்கும் பார்! என்ற சொற்றொடரின் பிற்பகுதி கோடாங்கி. ஒருவரே தொடர்ந்து பேசும் போது சுவாரஸியம் குறைவு.  இடையிடையே கவன ஈர்ப்பாக உடுக்கு அடிப்பார் கோடாங்கி.


மனிதமனத்துக்கு அமைதி தேடி செய்யபடும் ஒரு வகை சங்கீதக் கலை இது ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனுபவம் சான்றளிக்க வளரும் ஒருகலை.


இதைப் போலவே ’வில்பாட்டு’  ஒரு கிராமிய கதா காலக்ஷேபம்.கோயில்களில் புராண இதிகாசங்களை எளிய முறையில் எளிய மொழியில் பகிர்ந்தளிப்பது அதன் சிறப்பு. இரவு 11 மணிக்கு மேல்தான் வில்பாட்டு களைகட்டும். ஒரு வயிறகன்ற ம்ண்பானையின் கழுத்தில் நீண்ட வில்லில் ஒரு சலங்கை கோர்த்த கயிற்று நாண்-  கட்டப்பட்டிருக்கும். பானையின் குறுகிய வாயினில் வலதுகையில் மட்டை வைத்து அடித்தும், இடக்கையில் நூல்கண்டு சுற்றும் ராபின் கட்டை ஒன்று விரல்களில் இடுக்கி வைத்தும் தட்டுவார். ஜால்ரா, உடுக்கு, பின்பாட்டுப் பாடும் ஒருவர் ஆகிய குழு உடனிருக்கும். அலுப்புத் தட்டாமல் தூங்கவிடாமல் சங்கீதத்துடன் கதையின் உட்கரு தக்க முறையில் விளக்கப்படும்.


வில்பாட்டு ஆரம்பிக்கும் போது”தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லில் பாட- வில்லில்பாட” என்று முழுமுதல் கடவுள் முந்தி முந்தி விநாயகனைப் பாடி வரிசையாக அனைத்து மூர்த்திகளையும் பாடிகொண்டிருக்கும் போது ஊர்ப் பெரியவரின் மகன் வருவார். மரியாதையின் நிமித்தம் மீண்டும் விநாயகன் தொட்டுப் பாடுவார். சற்று நேரத்தில் மற்றொரு முக்கியஸ்தர் வருவார்.  இவ்வாறாக’ஹசேன் ஹுஸேன்’ என்ற ஆட்டம் போன்று மேற்கொண்டு நகராமல் அந்த இடத்திலேயே பாட்டு நிற்கும். இரவு 10-00 மணி தாண்டிய பின்தான் பாடல் தொடர்ந்து தடையின்றி ஓடும்.


மதுரையில் கள்ளழகரைத் தொடர்ந்து வரும் பக்தகோடிகள் நாய்த்தோலில் நீர் எடுத்துப் பாய்ச்சிக்கொண்டு கள்ளரின் மீதான எளிய சந்தத்தில் பாடல்கள் பாடி ஆராதிப்பர். அந்தப்படல்கள் ஒரு கிராமிய சங்கீதம்.  பழனியில் முருகனைப் பாடி வரும் காவடிச் சிந்து போன்றவை காலத்தால் அழியாதது.
 

 

Last Updated on Friday, 12 February 2010 23:55
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved