Thursday 19th of April 2018

Home கிராம தெய்வங்கள் / Village Deities அங்காளம்மனின் மயானக் கொள்ளை!
அங்காளம்மனின் மயானக் கொள்ளை! PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 06 August 2011 08:24

கீதா.சாம்பசிவம்

 

தென்னாங்கூரிலிருந்து நாங்கள் சென்றது மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம். வழியில் சில சமண ஆலயங்கள் வயல்களுக்கு நடுவே கண்களில் பட்டன. ஆனால் இறங்கிச் சென்று தான் பார்க்கவேண்டும். அதற்குக் குழுவினர் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமே. எல்லாமே பழைய ஆலயங்கள் எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. இன்னொரு சமயம் வாய்க்கவேண்டும். சமண ஆலயங்கள் பற்றிக்குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு செல்லவேண்டும். ராஜஸ்தான், குஜராத்தில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. இனி அங்காளம்மனின் வரலாறு. சக்திபீடம் என்றும், உலகின் சிருஷ்டி முதன்முதல் இங்கே தான் ஆரம்பித்தது என்றும் இவள் ஆதிபராசக்தி என்றும் கூறுகின்றனர்.

 

 

அம்மன் ஆதிபராசக்தி ஆவாள். சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது. அருள் மிகு அங்காளம்மன் முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.

 

முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.

 

தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.

 

அம்பிகையின் உடலைத் தூக்கிக்கொண்டு சிவன் தாண்டவம் ஆடியபோது அறுந்து துண்டாக விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர். ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருக்கிறதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய, சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிக்ஷை போட்டு அந்த பிக்ஷையை ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிக்ஷை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.

 

மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் போன்ற அனைவருக்கும் சூரை இடும் நாள் ஆகும். அதுவே மயானக்கொள்ளை என்றும் கூறப்படுகிறது. சூரை என்பது உணவு அளிப்பதையே இங்கே குறிக்கும். அப்போது உலகெங்கும் சுற்றி வந்த சிவன் அங்கே வந்து சேரும் தினம் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையாக இருக்கவே அன்று அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது. இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இடுகின்றாள். உணவின் ருசியில் தன்னை மறந்த பிரம்மஹத்தி அதையும் உண்ண, மூன்றாவது கவளத்தைச் சூரையாகச் சுடுகாட்டில் இறைக்கும்போது ஈசனைப் பற்றி இருந்த பிரம்ம ஹத்தி அந்தச் சூரையைச் சாப்பிட வேண்டி ஈசன் உடலில் இருந்து இறங்க, கையில் இருந்த கபாலத்தில் புகுந்து கொண்டு கீழே இறங்கியது. கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார, என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.

 

பிரம்ம கபாலத்தினுள் புகுந்த பிரம்மாவின் பிரம்மஹத்தியானது சாப்பிட்டு முடிந்ததும் ஈசனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு விண்ணில் பறக்க ஆயத்தமானது. அங்காளி இதைக் கண்டு கோபம் கொண்டு அதற்கும் மேல் தானும் விஸ்வரூபம் எடுத்து பிரம்மாவின் கபாலத்தை பிரம்மஹத்தியோடு சேர்த்து அழுத்தித் தன் கால்களால் மிதித்தாள். அவள் கோபத்தைக் கண்டு மஹாவிஷ்ணு தலையை மிதித்த அங்காளியை அவ்வண்ணமே பூமிக்குள் தள்ளி மூடி மறைத்துவிட்டார். சற்று நேரத்தில் பூமிக்கு மேல் சுயம்புவாகப் புற்று உருவாகி அதில் ஒரு நாகமும் குடிகொண்டதாய்த் தலவரலாறு கூறுகிறது. இந்த நாகத்தின் படம் சுருங்காமலே பல யுகங்கள் இருந்ததாயும் கலி யுகத்திலே தேவர்கள் அனைவரும் தேர் உருவில் வந்து வணங்கவும் நாகத்தின் படம் சுருங்கி உள்ளே சென்று அங்காளம்மனாக அமர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

 

அங்காளம்மனை ஆதி பராசக்தி என்றே கூறுகின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரத்தை அம்பிகை எடுத்ததாகவும் சக்தி உபாசகர்கள் கருத்து. இதைத் தான் முதல் சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர். சிருஷ்டியை அம்பிகை இங்கிருந்தே ஆரம்பித்ததாயும் ஐதீகம். கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் கர்ப்பிணிக் கோலத்தில் அம்பிகையைத் தரிசிக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் அங்கெல்லாம் போய்ப் பார்க்க முடியவில்லை. கோயிலின் நுழைவாயிலில் ஒரே கூட்டம். அங்கிருந்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப் பட்டோம். ஆனால் கோயிலின் சில ஊழியர்கள் தனியாகப் பணம் வாங்கிக்கொண்டு நேரே அழைத்துச் செல்கிறோம் என வற்புறுத்துவதையும் காண முடிந்தது. யாராயிருந்தாலும் உள்ளே போய்ப் புற்றுக்கருகே கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டே ஆகவேண்டும்.

 

இங்கே நாங்கள் நுழைவுச் சீட்டே வாங்கிக்கொண்டு, குழுவினர் அனைவரும் வரிசையில் நின்றோம். சிறிது தூரம் சம தரையில் சென்றதும் பின்னர் படிகள். மரப்படிகள். அதன் பின்னர் மேலே ஒரு பால்கனி போன்ற அமைப்பு, பின்னர் கூண்டு மாதிரியான இடத்தைக் கடந்து சென்றால் மேலே உயரமான பாலம். அதைக் கடக்கையில் கோயிலின் கீழே நடப்பதை நன்கு காண முடிந்தது. அவ்வாறு கண்டபோது முன் மண்டபத்தில் ஒரு அம்மன் சிலையை வைத்து அலங்கார, அபிஷேஹங்கள் செய்து வழிபாடுகள் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தன. இது கோயிலைச் சேர்ந்ததே இல்லை என்றனர். கோயில் பரம்பரையாகப் பூசாரிகள் வசம் இருப்பதாயும், அவர்களில் சிலர் இம்மாதிரித் தனியாக வழிபாடுகள், பிரார்த்தனைகளை நடத்தித் தருவதாயும் கூறினார்கள். இன்னும் சற்று முன் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் ஒரு பெரிய ஸ்ரீசக்கரம் போன்ற அமைப்புக் கல்லினால் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்னால் அங்கேயும் ஒரு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு ஒரு பெண்மணி அதற்கு வழிபாடுகள் நடத்திக்கொண்டு கோயிலுக்கு வரும் பெண்களை எல்லாம் அங்கேயும் வந்து வழிபட்டாலேயே வழிபாடு பூர்த்தி அடையும் எனச் சொல்லிப் பணம் பிடுங்கிக்கொண்டிருந்தார். ஸ்ரீசக்கர அமைப்பில் படுக்கத் தனியாகச் சீட்டுப் பணம் செலுத்தி வாங்க வேண்டும். அதை வாங்கிக்கொண்டு சிலர் ஒவ்வொரு இடத்தில் தங்கள் தலையை வைத்துப் படுத்துக்கொண்டு இருந்தனர். அதைச் சுற்றி ஒரு கூண்டு.

 

அதற்குள் நாங்கள் கீழே இறங்கிச் சந்நிதியின் பின் பக்கம் இருந்த பெரிய புற்றினருகே வந்துவிட்டோம். இங்கே சில கோயில் ஊழியர்கள், (இந்தக் கோயிலில் கவனிக்கத் தக்கவை அனைத்து ஊழியர்களும், பெண்களே, அவர்களுக்கு உதவிக்கு மட்டும் ஆண்கள், கூட்டத்தைச் சமாளிக்க, எதையாவது எடுத்து வர என) புற்றின் மேல் போடப் பட்டிருந்த மஞ்சள் பொடிக்கும், மஞ்சள் கயிற்றுக்கும் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்களின் பக்தி அங்கே வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதையும் வாங்கப் போட்டாபோட்டி. கயிற்றின் தரத்துக்கு ஏற்பப் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை வசூலிக்கப் பட்டது. அங்கே நுழைவிடம் வேறே குறுகல். ஆகவே நெரிசலில் மாட்டிக்கொள்ள நேரிடுமே எனக் கவலை வந்தது. நல்லவேளையாக முன்னாலிருந்தவர்களில் சிலர் எங்கள் குழுவினர் என்பதால் கொஞ்சம் ஆறுதலாயும் இருந்தது. ஒரு மாதிரியாக உள்ளே போய் அம்பாளைத் தரிசித்தால், ஒரே தள்ளு! போங்கம்மா, போங்கப்பா, பார்த்தது போதும், போங்க, போங்க, அடுத்தவங்க பார்க்க வேண்டாமா?

 

அடக் கடவுளே, ஒரு விநாடி கூடப் பார்க்க முடியலையே? ஏமாற்றம் மனதில் சூழ்ந்தது. என்றாலும் அவசரம் அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக்கொண்டு அம்பிகை நீயாவது என்னைப் பார்த்துக்கோ அம்மானு சொல்லிட்டு அங்கிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பினோம்.

 

கோயில் பற்றி விசாரித்ததில் கிடைத்த மேலதிகத் தகவல்கள். மாசி மாதம் சிவராத்திரி அன்று லிங்கோத்பவம் எனக்கொண்டாடினாலும் இந்தக் கோயிலில் மட்டும் அன்றிரவு ஈசன் அம்மனின் சூரையை எதிர்நோக்கி வருகிறார். மறு நாள் அமாவாசையன்று இரவே அம்மன் மயானத்தில் உள்ள பூதங்கள், ஆவிகள், பேய், பிசாசுகள் அனைத்துக்கும் உணவளிப்பதாயும், அவ்வாறு அளிக்கும் உணவை வாரி இறைப்பதையே சூரை எனவும் கூறுகின்றனர். இதைப் பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அம்மன் வரலாற்றைக் கூறும் விழாவாக இங்கே மட்டுமே கொண்டாடப் படுவதாயும் கூறுகின்றனர்.

 

Last Updated on Saturday, 06 August 2011 08:28
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  August 2012  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
2728293031  

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved