Saturday 22nd of July 2017

பா.வே. மாணிக்க நாயக்கர் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 28 November 2008 22:50

மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்!

புலவர் பா.அன்பரசு

 

பா.வே. மாணிக்க நாயக்கர்

1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது தேவையான ஒன்றாகும்.


மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் - முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, 1896ல் தமது 24ம் வயதில் பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.


மறைமலையடிகளார் தொடங்கிய "தனித்தமிழ்" இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார். இவர் கட்டுமானப் பொறியியல் அறிஞராகப் பணியாற்றியபோதும் இவரது மரபுநிலை காரணமாக இயற்கையிலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.


ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
சுத்தானந்த பாரதியார்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய உமாமகேசுவரனார்,
ஈ.வெ.ரா.பெரியார்,
நாமக்கல் கவிஞர்,
மு.இராகவையங்கார்,
ஆபிரகாம் பண்டிதர்
முதலியோர் நாயக்கரின் சமகால அறிஞர்கள் ஆவர்.
மாணிக்க நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் செயற்பொறியாளராகப் பணியாற்றியபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம். 1919ம் ஆண்டு தமிழ்ப் புலவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். வட ஆந்திர நாட்டிற்கு இவர் மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் இந்த மாநாட்டைக் கூட்ட இயலவில்லை.
 
பல அறிஞர்களின் தொடர்பு இவருக்கு இருந்ததால் நாயக்கர் அறிவியல் சிந்தனை, தமிழ் ஒலி இலக்கணம், தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம், ஆயுத எழுத்தைப் பயன்படுத்தி எல்லா மொழிச் சொற்களையும் எழுதுதல்,
விலங்கியல் தொடர்பான அறிவு போன்றவை அவரிடம் அமைந்திருந்தன.
 
"தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்," என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே நாயக்கர் கொண்டிருந்தார்.
 
"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.
 
நாமக்கல் கவிஞரின் ஓவியத் திறமையை அறிந்த பா.வே.மாணிக்க நாயக்கர் அவரை தில்லிக்கு அழைத்துச் சென்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். முடிசூட்டு விழா நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டிய நாமக்கல் கவிஞருக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கக் காரணமாகவும் இருந்துள்ளார். 1923 - 24ல் "செந்தமிழ்ச்செல்வி" இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து பல, தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார்.
 
தமிழகம்,

அறிவியல் தமிழ்ச் சொற்கள்,
வடிவு திருந்த அறிவு வளர்ந்த கதை,
கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்
ஆகிய கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி திங்களிதழில் வெளிவந்தன.
 
"அறிவியல் தமிழ்" பற்றிய சில தொடர்கள் "தமிழகம்" என்னும் இதழிலும், "ஜஸ்டிஸ்" இதழிலும் வெளிவந்தன.
1913ம் ஆண்டு மாணிக்க நாயக்கர் நீண்ட விடுப்பில், தமது சொந்தச் செலவில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மான்செஸ்டர் தொழில் பள்ளியில் தமது "Calculograph" என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்தார்.


தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார். ஆந்திர நாட்டில் பணியாற்றியபோது "திராவிடர் - ஆரியர் நாகரிகம்" என்னும் சொற்பொழிவை தெலுங்கு மொழியில் உரையாற்றினார்.
 
மாணிக்க நாயக்கரின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. காரணம், ஆங்கிலேயரிடையே தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்ப வேண்டும் என்பதே. இவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்
 
காழி.சிவ.கண்ணுசாமிப்பிள்ளை,
க.ப.சந்தோஷம்
ஆகியோர்.
 
1926ம் ஆண்டு வெளியான "Madras - 200" என்னும் நூலில் விளக்கப்படங்கள் பல காணப்படுகின்றன. இந்த நூல் அன்றைய சூழலில் கற்றவர் நடுவில் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
அன்றைய "ஜஸ்டிஸ்" இயக்கம் நாயக்கரின் பணிகளைப் பாராட்டி ஒரு கையேடு வெளியிட்டது. இந்நூலைப் படிக்கும் போது, அந்த இயக்கம் அவரை முழுமையாக ஆதரித்ததை அறியமுடிகிறது. "மொழிமுதல் தமிழர் கடவுட் கொள்கை" என்னும் சொற்பொழிவில் இறைவடிவம் உருவம் அற்றது என்றும், அதற்குச் சான்றாகத் தொல்காப்பியரின்
கொடிநிலை,
கந்தழி,
வள்ளி
என்னும் நூற்பாவையும் காட்டுகிறார்.
 
"தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்" என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)"ஓ" என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.


ஈ.வெ.ரா தமது கட்டுரை ஒன்றில் "பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக எவ்வளவோ செய்தார். அவரது ஓங்காரத்தின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பு அவரை முழுவதும் அறிந்துகொள்ள இயலாதபடி செய்துவிட்டது. அவர் இருந்திருந்தால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு எவ்வளவோ செய்திருப்பார்," என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் பணியாற்றியபோது பெரியாரின் இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


1916ம் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்ட "தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் நூலை மாணிக்க நாயக்கர் படிக்க நேர்ந்தது. அதைப்படித்த நாயக்கருக்கு தொல்காப்பியத்துக்கு உண்மைப் பொருள் காண்பதற்குப் பதிலாகப் பல ஐயங்கள் எழுந்தன.


தமது ஐயங்களைக் குறிப்பிட்டு இராகவையங்காருக்கு நான்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றுக்கு இரு கடிதங்கள் வாயிலாக இராகவையங்கார் பதில்கள் எழுதியுள்ளார். இந்த பதில்கள் பெரும்பாலும் வினா வடிவிலேயே இருந்தன. இந்த வினாக்கள் தொடர்பாக ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமிருந்தும் நாயக்கருக்கு இரு கடிதங்கள் வந்தன.
மேற்குறிப்பிட்ட எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924ம் ஆண்டில் நாயக்கரே தமது சொந்தச் செலவில் நூலாக வெளியிட்டார்.


"ஐரோப்பியர்கள் டார்வின் என்பவருக்குப் பிறகு கண்டறிந்த இயற்கை உண்மைகளையும், இன்னும் காணாதிருக்கின்ற பெரும் பகுதிகளையும் நம் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு உணர்ந்திருக்கிறார்கள்," என்பது நாயக்கரின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது என்பது அவர் "அஞ்ஞானம்" என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து தெரியவருகிறது.


"பண்டைத் தமிழ் மொழிச் செவ்வியையும், தமிழகத்தோர் வன்மையும், சிறக்கப் பரக்கச் சிதைவின்றிக் காட்டக் கிடைத்த அழியாப் பெருந்திடரித் (திடர் - மலை) தொல்காப்பியம் ஒன்றே" என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மாணிக்க நாயக்கர்.


சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கான வரைமுறை அமைத்தவர் அவர்தான் என்றும் செவிவழிச் செய்தி உண்டு. இவர் சோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டு, தமது ஆயுள் 60 ஆண்டுகள் என்று குறித்து வைத்திருந்தார். அதன்படி தமது அறுபதாம் வயதில் (25.12.1931) நள்ளிரவில் இயற்கை எய்தினார் என்பது வியப்பான செய்தி. நாயக்கரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் புகழ்பெற்றார். ஆனால் பல தமிழ் இலக்கியப் பணிகளையும், அறிவியல் சிந்தனைகளையும், கணக்கியல் முறைகளையும்
அறிமுகப்படுத்திய அந்த அறிஞரை இன்று தமிழ் உலகம் மறந்துவிட்டது.


1941ல் சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நடத்திய புறநூனூற்று மாநாட்டில் பா.வே.மாணிக்க நாயக்கரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயம் அவரை மறந்துவிட்டாலும் அவரது படைப்புகளும், ஆய்வுப் பணிகளும் மூத்த தமிழறிஞர்களின் மனதில் பதிந்துதான் உள்ளது. அவற்றை எதிர்கால இளைஞர்களுக்குக் கொண்டு செல்வது அரசின் கடமையாகும்.
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Last Updated on Saturday, 06 June 2009 20:06
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  July 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
       1  2
  3  4  5  6  7  8  9
10111213141516
17181920212223
24252627282930
31      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved