Wednesday 29th of March 2017

மு.இராகவையங்காரின் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 28 November 2008 20:59

"இராவ்சாகேப்" மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி

ம.சா.அறிவுடைநம்பி 

மு.இராகவையங்கார்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் மு.இராகவையங்காரும் ஒருவர்.
தமிழறிஞராக, இலக்கிய ஆசிரியராக, கவிஞராக விளங்கிய பெருமை இவருக்கு உண்டு. பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக 1906 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருந்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.
 

மு.இராகவையங்கார் (1878 - 1960)


தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகவும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செய்திகளை வெளியிடுவதற்காகவும் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" எனும் திங்களிதழின் முதல் பதிப்பாசிரியராக இரா.இராகவையங்கார் 1902 முதல் 1906 வரை இருந்தார். இவருக்கு உறுதுணையாகத் துணைப் பதிப்பாசிரியராக அன்னாரின் மருமகனான மு.இராகவையங்கார் இருந்தார்.


"தமிழ்க் கல்வியிலும், தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்றது செந்தமிழ்ப் பத்திரிகையேயாம். ஒவ்வொரு மாதத்துப் பத்திரிகையிலும் அதுவரை அறியாத அரிய விஷயங்கள் குறித்துச் சிறந்த கட்டுரைகள் பல வெளிவந்து கொண்டேயிருந்தன. பத்திராசிரியர் எழுதியனவெல்லாம் தமிழ்மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து விளங்கின; கற்பார்க்குப் பெருவிருந்தாயமைந்தன. ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள். தமிழ் நாட்டுப் பெரும் பேராசிரியனாயமைந்து, தமிழ்மக்கள் வீடுதொறுஞ் சென்று, தமிழ்க்கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைகே உரியதாயிருந்தது. இப்பத்திரிகையின் உயிர் நிலையாயிருந்தவர் மு. இராகவையங்காரவர்களே. பலர் சிறந்த தமிழறிஞர்களாக விளங்குவதற்கும், அறிவுநலமிக்க பலர் தமிழாராய்ச்சியை மேற்கொள்ளுதற்கும் அவரே காரணமாயிருந்தார்," என்று ச.வையாபுரிப்பிள்ளை, "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அது இங்கு நினைவு கூரத்தக்கது.
 
"செந்தமிழ்" இதழில் இவர் ஆசிரியராக இருந்த காலத்தில்
இலக்கியம்,
இலக்கணம்,
வரலாறு,
மூலபாடம்
ஆகிய தலைப்புகளில் 53 கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இக் கட்டுரைகளில் சில பல்வேறு விவாதங்களுக்கு இடந்தந்தும், சில மறுப்பதற்கென்றும் எழுதப்பட்டன. மறுப்பதற்குத் தகுந்த காரணங்கள் பலவற்றைச் சான்றுகளுடன் மு.இராகவையங்கார் தம் கட்டுரைகளில் தருகிறார்.


சேர வேந்தர் தாயவழக்கு,
சேர நாட்டின் தலைநகரம் வஞ்சியா? கரூரா?
என்ற இவ்விரண்டும் பற்றி இவரும், நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் எழுதிய கட்டுரைகள் ஆராய்ச்சிக்கு இடந்தந்து நின்றன.


சில கட்டுரைகள் எழுத நேர்ந்தமைக்குரிய காரணங்களைக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறும் பழக்கத்தை இவரிடம் காண முடிகிறது. பல கட்டுரைகளின் முன்னுரையில் அல்லது கட்டுரைத் தலைப்பில் இடுக்குறியிட்டு அதன் அடிக்குறிப்பில் அக்கட்டுரை எழுத நேர்ததற்கான காரணத்தைக் கூறுவதை மரபாகக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.


"செந்தமிழ்" இதழில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் இறைவன் திருவடி நீழலடைந்த பொழுது பாடிய 12 கவிதைகளும், சேதுபதியின் 34ஆவது வெள்ளணி நாள் விழாவையொட்டிப் பாடிய 5 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் பாடியதன் மூலம் ஒரு கவிஞராகவும் விளங்கியதைக் காண முடிகிறது.
மதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ள நூல்களில் அருமையான சில நூல்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளை "நூலாராய்ச்சி" எனும் தலைப்பில் எழுதியுள்ளார். "பூருரவா சரிதை" என்ற நூலைப் பற்றி சில குறிப்புகள் கூறிய ஐயங்கார், நூலாராய்ச்சியை எழுதும் முயற்சியைத் தொடராமல் விட்டுவிட்டார். இதற்குரிய காரணம் எதுவெனத் தெரியவில்லை.


"செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக இருந்த காலத்தில் "பத்திராசிரியர் குறிப்புகள்" எனும் தலைப்பில், நூல் பதிப்பிக்கும்பொழுது நூலுக்கு முன் பகுதியிலும், சிலர் எழுதிய கட்டுரைகளில் ஐயங்கள் ஏதாவது எழுமாயின் அவற்றைக் குறிப்பிட்டுச் சில விளக்கங்களையும் எழுதியிருக்கிறார்.
"புத்தகக் குறிப்புகள்" எனுந்தலைப்பில் அந்தக் காலத்தில் வெளிவந்த நூல்களைப் பற்றி "மதிப்புரை" எழுதியுள்ளார். நூலாசிரியரைப் பற்றியும், நூலைப் பற்றியும் பாராட்டிக் கூறுவதாகவே இம்மதிப்புரைகள் அமைந்துள்ளன. சில நூல்கள் அறிமுகம் மட்டும் செய்து வைக்கப்படுகிறது. இவ்வாறு 62 நூல்களைப் பற்றிய குறிப்புகளை இப்பகுதியில் ஐயங்கார் எழுதியுள்ளார். ஒரு நூலைப் படித்து அதற்கு மதிப்புரை எவ்வாறு எழுத வேண்டும் என்ற நெறிமுறையை இவரெழுதிய மதிப்புரைகள் மூலம் அறிய முடிகிறது.


"செந்தமிழ்" இதழின் ஆசிரியராக இருந்த காலத்தில் இவர் பதிப்பித்த நூல்கள், பாடல்கள் பலப்பல. சிலவற்றுக்கு "உரைக்குறிப்புகள்" எழுதியுள்ளார். சிலவற்றை மூலத்துடன் பதிப்பித்துள்ளார். எல்லா நூலுக்கும் எழுதிய "முன்னுரை"யில் தாம் அந்நூலைப் பதிப்பிக்க நேர்ந்த காரணத்தைக் கூறியுள்ளார்.
 
பெருந்தொகை (இரண்டு தொகுதிகள்),
நிகண்டகராதி,
திருக்குறள் பரிமேலழகர் உரை(கையடக்கப் பதிப்பு),
நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்)
போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
ஏடுகளில் எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் அமைவது உண்டு. உரையாசிரியர்கள் அவற்றுள் ஏற்புடையனவற்றைக் கொண்டு ஏலாதனவற்றை விலக்கி விடுவதுண்டு. அம்முறையில் ஐயங்கார் தாம் பதிப்பித்த நூல்களில் உள்ள பாடல்களில் காணப்படும் பாடவேறுபாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். சான்றுக்குப் பெரியாழ்வார் திருமொழி முதற்பத்தில் காணப்படும்,
 
"வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
 கண்ணன் கேசவ நம்பி பிறந்தினில்
 எண்ணெய் சுண்ண மெதிரெ'திர் தூவிடக்
 கண்ணன் முற்றங் கலந்தள றாயிற்றே." (1)
 
"பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
 காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்." (3)
என்ற பாசுரங்களில் "நம்பி பிறந்தினில்", "பிள்ளை பிறந்தினில்," என்று வழங்கப்படுகின்றன. "பிறந்தினில்" என்பதற்குப் - பிறந்தபோது, பிறந்தவளவில் எனவும், "பிறந்தவிதனில்" என்பதன் விகாரமாகவுமாம் எனவும் சிலர் பொருளுரைத்துள்ளனர். இதை,
"நம்பி பிறந்தீனில்," "பிள்ளை பிறந்தீனில்,"
 
என்று பாடங்கொள்வதே பொருந்தும். கண்ணன் அவதரித்த சூதிகாகிருதம் என்பது இங்கே பொருளாம். பிறந்த ஈனில் - பிறந்தீனில்; பிறந்தகம் என்பது போல, ஈன்இல் - பிரசவ வீடு, பிறந்த பிள்ளையைக் காணப்புகுவதற்கும், புக்குப் போதுதற்கும் "பிரசவவீடு" என்ற பொருளே மிகவும் ஏற்புடையதாகும். இப்பொருளில்,
குறுந்தொகை,
பதினொராந்திருமுறை,
திருக்கோவையார்
முதலான நூல்களில் வழங்கப்படும் மேற்கோள்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.
மு.இராகவையங்கார் தம் 24 ஆம் வயதில் முதன்முதல் "செந்தமிழ்" இதழ் மூலம் ஆய்வுப்பணியைத் தொடங்கி ஏறத்தாழ 58 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியைத் தம் மூச்சாகக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் இவருக்கென்று ஓரிடம் இருப்பது வெள்ளிடைமலை. இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு இவர் ஆய்வுப் போக்கு, நெறிமுறைகள் பெரிதும் உறுதுணை புரியும்.
 
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Last Updated on Saturday, 06 June 2009 20:07
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
2728293031  

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved