Friday 20th of April 2018

செகவீரபாண்டியனார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 28 November 2008 20:04

கவிராச பண்டிதர் செகவீரபாண்டியனார்

முனைவர் ச.சாம்பசிவனார்

செகவீரபாண்டியனார்

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை 1801ம் ஆண்டு ஆங்கிலேயப் படையினர் சுற்றி வளைத்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் வழியிலே வந்த, அறுபது வயதைத் தாண்டிய அஞ்சா நெஞ்சம் படைத்த ஒருவர், தமிழ் மண்ணைக் காப்பாற்ற தன் இன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பேராண்மையுடன் போர் புரிந்தார். ஆங்கிலேய படைவீரன் ஒருவன் அவர் மீது குண்டு ஒன்றைப் போட்டான். அதனால் குற்றுயிராய், அருகில் இருந்த வயல் வரப்பில் வீழ்ந்தார் அந்த முதியவர். அப்போது குதிரை மீது வந்துகொண்டிருந்த மற்றொரு ஆங்கிலேயப் படைவீரன், அம்முதியவரது கையில் வீரவாள் இருப்பதைக் கண்டு அதைத் தன்னிடம் தருமாறு அதட்டினான். அதற்கு அவர், "என்னால் எழுந்திருக்க முடியாது; நீயே குனிந்து வாங்கிக்கொள்," என்றார். வாளை வாங்க அவன் குனிந்தபோது, தம் கையிலிருந்த வாளை ஓங்கி படைவீரனின் தலையையும் அவன் ஏறிவந்த குதிரையையும் கொன்று வீழ்த்தினார் அம்முதியவர். சில வினாடியிலேயே அவர் உயிரும் பிரிந்தது. இது பொய்யோ பழங்கதையோ அல்ல; உண்மை நிகழ்ச்சி.
 
"போர்க்குறிக் காயமே புகழின் காயம்," என்று எண்ணிய அத்தமிழ் வீரனின், மறக்குடியில் தோன்றிய மாபெரும் புலவர் ஏறே "கவிராச பண்டிதர்" எனப் போற்றப்பட்ட செகவீரபாண்டியனார்.
 

தென்னகத்தில், கோயில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட ஊர் மணியாச்சி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு பெற்ற சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. இத்தகைய ஊருக்கு அருகில் உள்ளது ஒட்டநத்தம். இதை "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்றும் கூறுவர். இவ்வூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தில் தோன்றிய பெருமாள்சாமி என்பவருக்கும் ஆவுடையம்மைக்கும் 10.3.1886ல் பிறந்தவரே கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார்.
 
இவரது மூன்றாம் வயதில் தந்தை இறந்து போனார். எனினும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து படிக்க முடியாத சூழல்; எனினும்,
ஆத்திசூடி,
கொன்றை வேந்தன்,
மூதுரை,
திவாகரம்
முதலானவற்றைப் படித்து நல்ல புலமை பெற்றார். இடையே மற்போர், விற்போர் முதலானவற்றையும் கற்றுக்கொண்டார். ஒருநாள் ஊர்க் குளக்கரை வழி வரும்போது, ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார்; அதில் பின்வரும் பாடலடிகள் இருந்தன:
"சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
 ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்."


இதனைப் படித்ததும் கல்வியினால்தான் அறிவுடையோராக ஆதல்கூடும் என்ற முடிவுக்கு வந்தார். எனவே மீண்டும் கல்வியில் ஆர்வம் கொண்டு தாயுமானவர் பாடல் முதல் பல்வேறு நூல்களைத் தாமாகவே படித்தார். தமிழின் மீதும் சைவத்தின் மீதும் தணியாக் காதல் உண்டாயிற்று.


அரிமளம் என்ற ஊரிலிருந்து சிவானந்த சுவாமி என்பவர் இவரது ஊருக்கு வந்திருந்தார். செகவீர பாண்டியனாரைக்கண்டு, "எம் ஊரில் ஓர் ஆசிரமம் உள்ளது, அங்கு வரலாமே," என்று கூற, பாண்டியனாரும் தம் அன்னையின் இசைவு பெற்று அரிமளம் சென்றார். ஓராண்டு துறவிபோல் வாழ்ந்தார். வேதாந்த நூல் பலவும் கற்றுத் தெளிந்தார். மகனைப் பிரிந்திருக்க முடியாத அன்னையார் ஊருக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்த, ஒட்டநத்தம் திரும்பினார். தமிழில் பெரும் புலமை பெறவேண்டும் என எண்ணினார். இலக்கண முத்துக்கவிராயரிடம் தமிழ் கற்றார். தமது 19ம் வயதிலேயே "ஆசிரியர்" என்று அனைவரும் போற்றும் நிலைக்கு உயர்ந்தார்.
 
பாண்டியனார், நாநலம் மிக்கவர். சிறந்த புராணச் சொற்பொழிவாளர் எனும் புகழைப் பெற்றவர்.
கம்பராமாயணம்,
பெரியபுராணம்
ஆகியவற்றை மொழிவதில் வித்தகராக விளங்கினார். அக்காலத்தில் தமிழகத்துப் பட்டிதொட்டியெல்லாம் இவர் புகழ் பரவியது எனில் மிகையன்று.


பாண்டியனார் தம் 27ம் வயதில் வெள்ளைத்தாய் என்னும் மங்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். தென்பாண்டி நாட்டில் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றிவந்தார். ஆனாலும் இத்தகைய பேச்சுகள் காற்றோடு காற்றாகப் பயனின்றிப்போகும் என்று உணர்ந்தவர், நூல் எழுதுவதே தக்க பணி என்று எண்ணினார்.
மதுரை மேலமாசி வீதியில் தங்கி, தாம் வசித்த இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு "வாசுகி அச்சகம்" என்றும் பெயரிட்டார். எவரையும் வேலைக்கு அமர்த்தாமல் அச்சுக் கோர்ப்பது முதலான பணிகளைத் தாமே செய்தார். பாண்டியனார் கவி புனைவதில் வல்லவர். இவரது உரைநடையும் கவிதையின் சாயலாகவே இருக்கும். 1920ம் ஆண்டு கோவையை அடுத்த பேரூரில் கவிதைப் போட்டி ஒன்று நடந்தது.
"பஞ்சாங்கம் பார்க்கப்படும்" எனும் ஈற்றடி கொடுத்து மூன்று மணித்துளிகளில் பாடலை நிறைவு செய்யவேண்டும் என்பது விதி. பாண்டியனார் அதில் கலந்துகொண்டு குறிப்பட்ட நேரத்திற்குள் பாடிய பாடல்,
 
"வான்மதியும் கான்மானும் வன்முயலும் பாதலத்தோர்
 கோன்குலமும் தீயுமொன்றில் கூடுமோ - ஏன்கூடா
 நஞ்சாங் கமரருய்ய நல்லமுதாக் கொண்டபரம்
 பஞ்சாங்கம் பார்க்கப் படும்."
"வானில் உலாவும் சந்திரன், காட்டில் வாழும் மான், பூதலத்து வாழும் பாம்பு, தன்னையடுத்த பொருளைச் சுட்டெரிக்கும் நெருப்பு ஆகிய இவ்வைந்தும் ஓரிடத்தில் ஒன்றாய்க் கூடுமோ? கூடும். அமரர் உய்ய நஞ்சினை அமுதமாக உண்டு அருளிய சிவபெருமானின் தலை, கால், கை, நெற்றி, கழுத்து என்ற ஐந்து அங்கங்களையும் பார்த்தால் அவ்வைந்தும் ஒன்றுகூடி இருப்பது தெரியவரும் என்பது இப்பாடலின் பொருள்."
 
பாண்டியனார் கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக,
மாசிலா மணிமாலை
அணி அறுபது
தருமதீபிகை
திருக்குறட் குமரேச வெண்பா
வீரபாண்டியம்
இந்தியத் தாய்நிலை
உலக உள்ளங்கள்
கம்பன் கலைநிலை
அகத்திய முனிவர்
கவிகளின் காட்சி
தமிழர் வீரம்
பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம்.


யாருடைய உதவியையும் நாடாமல், எந்தப் பதிப்பகத்தின் ஆதரவையும் விரும்பாமல், அரும்பெரும் நூல்களை எழுதியதோடன்றித், தம் இல்லத்திலேயே அச்சகத்தை உருவாக்கி, தம்நூலில் ஓரிடத்திலும் அச்சுப்பிழை வாராமல் தாமாகவே அனைத்தையும் பார்த்து நூல்களை வெளிக்கொணர்ந்தார்.


"தமிழுக்கு கதி கம்பரும் திருவள்ளுவரும்" என்று கூறுவதுண்டு. இவ்விரு புலவர்களிடத்தும் பாண்டியனார் அளவற்ற பக்திகொண்டவர். அதனால்தான் திருக்குறள், கம்பராமாயணம் இவ்விரு நூல்களையும் ஆயிரக்கணக்கான பக்கங்களில் வெளிக்கொணர்ந்தார். "திருக்குறளை உரையுடன் மட்டும் வெளியிட்டால் அத்துணையளவு பயனில்லை" என்று உணர்ந்த பாண்டியனார், ஒவ்வொரு குறளுக்கும் அதற்கேற்றவாறு கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறளோடு மேலும் இரண்டு அடிகள் சேர்த்து முழு வெண்பாவாகப் பாடியதோடு மட்டுமன்றி அதற்கான முழு விளக்கத்தையும் தந்துள்ளார். ஒவ்வொரு பாட்டிலும் "குமரேசா" எனும் விளி அமைந்திருக்கும். அதனால் இதற்குத் "திருக்குறட் குமரேச வெண்பா" என்று பெயர்.


ஆங்கில மொழியையும் தாமாகவே படித்துப் புலமை பெற்றவர். இரண்டு வரிகளில் ஆங்கிலத்தில் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர்.


வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, தமிழ்த்திரை உலகில் பெரும்புகழ் பெற்றது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அந்தத் திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய (பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இதற்குச் சான்று) கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார் பெயர் இடம்பெறவில்லை. தம் பெயரைக் குறிப்பிடாதது அறிந்து பெரிதும் வருந்தினார் பாண்டியனார். உண்மை அறிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மதுரை வந்தபோது, பாண்டியனாரைக் நேரில் கண்டு உதவிசெய்ய முன்வந்தார். ஆனால், பாண்டியனார் வறுமை நிலையில் இருந்தபோதும் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.


17.6.1967ல் தாம் எழுதிய "உலக உள்ளங்கள்" என்ற நூலின் மறுபதிப்புக்குரிய அச்சுப்பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பலனின்றி இறைவனடி சேர்ந்தார்.
 
தமிழகம், கவிராசபாண்டியனாரைத் தக்கவாறு போற்றத் தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும். பாண்டியனாரின் நூல்களை அரசு நாட்டுடைமையாக்கி, அவர்தம் குடும்பத்தார்க்கு நிதி உதவி அளிப்பதே அவருக்கும், அவர்தம் தமிழுக்கும் செய்யும் உதவி எனலாம்.
 
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Last Updated on Saturday, 06 June 2009 20:07
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
30      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved