Sunday 20th of May 2018

மு.வ. PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Thursday, 27 November 2008 10:50

அக்டோபர் 10 - நம்மைவிட்டு அகலாத தமிழ் விளக்கு - பேராசிரியப் பெருந்தகை மு.வ.! 

சு. அனந்தராமன்

மு.வ.

"ஆசிரியர் வரதராசனாரை யான் நீண்டகாலமாக அறிவேன். அவரை யான் முதல் முதல் பார்த்த போது அவர் தம் மலர்ந்த விழியும், கூரிய மூக்கும், பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன,"என்று தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரால் புகழ்ந்து பாராட்டப் பெற்ற பெருமைக்குரியவர்தான் டாக்டர்.மு.வரதராசனார்.

மு.வரதராசனார்

மு.வ. என்று அனைவராலும் அறியப்பட்ட மு.வரதராசனார், வட ஆர்க்காடு மாவட்டம் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு 25-04-1912ல் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார்.


திரு.வி.க. ஆசிரியராகப் பணியாற்றிய "நவசக்தி" வார இதழைத் தவறாமல் படித்து வந்த மு.வ.வின் மனத்தில் தமிழ் ஆர்வம் ஆல் போல் தழைத்து வளர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை. பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.
எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.
தமிழின் மீதிருந்த காதலால் 1931ல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935ல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக திருப்பனந்தாள் மடம் ரூ.1000 பரிசளித்தது.


1935ல் மாமன் மகளை மணம்புரிந்த அவருக்கு, மூன்று மகன்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.


தலைநகரப் பணி:-


1939ல் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார்.
1944ல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.


1948ல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ.


1939ல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945ல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
பின்னர் 1971ல் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.


எழுத்துப் பற்று:-

"தமிழ்ப் பேராசிரியர் பதவியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டேன். துணைவேந்தர் பதவியிலிருந்தும் இன்னும் சில திங்களிலோ ஓர் ஆண்டிலோ விடை பெற்றுவிடுவேன். பிறகு ஆராய்ச்சிப் பேராசிரியராக இருக்க நேர்ந்தாலும் அதிலிருந்து சில நாள்களில் விடைபெற்றுவிடுவேன். நான் கடைசி வரையில் ஓய்வு பெற விரும்பாத பதவி ஒன்று உண்டு என்றால் அது எழுத்தாளர் பதவிதான். எழுத்து என் உயிருடன் கலந்து விட்ட ஒன்றாகும். என் கடைசி மூச்சு உள்ள வரையில் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். எழுத முடியாத போது சொல்லிக் கொண்டாவது இருப்பேன்," என்று மதுரைப் பல்கலைக்கழகத்தில் 1974ல் ஆற்றிய சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் மு.வ. என்று டாக்டர் இரா.மோகன் எழுதிய "அறிஞர் மு.வ." என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மு.வ. சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர் உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார்.


நாவல்கள்
சிறுகதைகள்
சிறுவர் நூல்கள்
நாடகங்கள்
கட்டுரைகள்
தமிழ் இலக்கிய நூல்கள்
பயணக் கட்டுரை
போன்றவற்றை தமிழுக்குத் தந்துள்ளார்.
பெர்னாட்ஷா
திரு.வி.க.
காந்தியடிகள்
இரவீந்திரநாத் தாகூர்
ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார்.
 
இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டு பெருமை தேடிக்கொண்டுள்ளது. (நமது குழுமத்தில் திரு.வி.இராமசாமி வாரந்தோறும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)


"மு.வ.எழுதிய நூல்களில் கி.பி.2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதினங்களில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதில் மு.வ. தனித்து நின்றார். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய்த் திகழ்ந்தார். பழந்தமிழ் இலக்கியங்களைப் போற்றுவதிலும், தொன்றுதொட்டு வரும் தமிழ்ப் பண்பாடுகளை, நெறிகளைக் காப்பதிலும் அவர் தலைசிறந்து விளங்கினார். அதே சமயத்தில் இன்றைய உலகப் போக்கை ஒட்டி அறிவுக்கு ஒத்த முறையில் நம் மொழியை வளர்க்க வேண்டும், நம் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும் என்பனவற்றிலும் அவர் முன்னோடியாக விளங்கினார்.


குறிப்பாக நாளை மலர்ந்து மணம் வீச இருக்கும் இன்றைய அரும்புகளாகிய இளைஞர்களை உருவாக்குவதில் மு.வ. கண்ணும் கருத்துமாக இருந்தார்," என்று சாகித்ய அகாதெமி வெளியீடான மு.வ. என்ற நூலில் பொன் .செளரிராஜன் குறிப்பிட்டுள்ளார்.


"வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலையும் எதிர்படும் போது ஒதுக்கிச் செல்வதும் உண்டு; ஒதுங்கிச் செல்வதும் உண்டு. ஒதுங்கிச் செல்லும் வாழ்க்கை அச்சம் நிறைந்த வாழ்க்கை; ஒதுக்கிச் செல்லும் வாழ்க்கை அச்சமற்ற வாழ்க்கை. இந்த இரண்டும் பயனற்றவை. சிக்கலைத் தீர்த்து வெல்லும் வீரமே வேண்டும். அதுவே புத்துலகத்தின் திறவுகோல்," என்று கி.பி.2000 என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் மு.வ.


சாகித்ய அகாதெமி விருது:-
மு.வ.வின் "அகல் விளக்கு" எனும் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. "கள்ளோ காவியமோ" என்ற நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.


முதல் நாவல்:-


1944ம் ஆண்டு மு.வ. எழுதிய "செந்தாமரை" நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார். ஏமாற்றத்தையும், புறக்கணிப்பையும் தாங்கி அந்நாவல் வெளிவந்ததாலும் மு.வ. ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைந்தார்.


இது குறித்து மு.வ. மறைவுக்குப் பின் "கலைமகள்" இதழில் எழுதிய அகிலன், "அவருடைய முதல் நாவலை அக்காலத்தில் பதிப்பகங்கள் சில வெளியிட ஏற்றுக் கொள்ளவில்லையாம். கடைசியாக அதை வெளியிடத் துணிந்த பாரி நிலையம் செல்லப்பனிடமும் அன்றைய நிலையில் போதிய பொருள் வசதி இல்லை. பின்னர் மு.வ. தன் துணைவியார் இராதா அம்மையாரின் நகைகளை அடகு வைத்து தமது முதல் நாவலை வெளியிட்டாராம். பெர்னாட்ஷா எழுத்து வாழ்க்கைப் போராட்டம் பற்றித் தமிழில் ஒரு நூல் எழுதிய மு.வ. தாமே அப்படி ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது," என்று குறிப்பிட்டுள்ளார்.


செந்தாமரை வெற்றிக்குப் பின் 20 ஆண்டு காலம் உழைத்து ஆண்டுக்கு இவ்வளவு நூல்கள் என எழுதி பேரும் புகழும் பெற்றார். இந்த இருபது ஆண்டு காலத்தை மு.வ. என்ற எழுத்தாளரின் "பொற்காலம்" என்றே சொல்லலாம்.
மு.வ.வைப் பற்றி ஆர்.மோகன் முதன் முதலில் "மு.வ.வின் நாவல்கள்" என்ற நூலை 1972ல் எழுதியுள்ளார். மேலும் இரா.மோகன் மு.வ.வைப் பற்றி 5 நூல்கள் எழுதியுள்ளார்.


1972ம் ஆண்டு மு.வ.வுக்கு அறுபது ஆண்டு நிரம்பப் பெற்றபோது மணிவிழாக் கொண்டாடச் சிலர் முன்வந்தனர். "யான், எனது என்னும் செருக்குக்கு இடம் தருகின்ற தனிமனிதர் பாராட்டு விழாக்கள் குறைய வேண்டும். மனித இனம் கடவுளின் குடும்பம் என்ற நல்லுணர்வை வளர்க்கும் சமுதாய விழாக்கள் பெருக வேண்டும். பாராட்டு விழாக்களுக்கு உரியவர்களும் தமக்காக விழா நடப்பது குறித்து உள்ளம் ஒடுங்க வேண்டும்," என்று எழுதிய மு.வ. தம் மணிவிழாக் கொண்டாட்டத்தை மறுத்துவிட்டார்.


பெரியோருக்கு மரியாதை:-

1940ல் எழுதிய "படியாதவர் படும் பாடு" என்னும் நூலின் கடைசிக் கட்டுரையில், "நமக்குமுன் வாழ்ந்த பெரியோர்களின் வாழ்வை நாம் அறிதல் வேண்டும். அவர்கள் வாழ்வு நமக்கு வழிகாட்டியாகும். அவர்களைக் காண்பதும் கேட்பதும் அவர்களோடு பழகுவதும் இப்போது கூடுமோ? ஒரு வகையால் கூடும். அவர்கள் நூல்களின் வடிவாக விளங்குகிறார்கள். அந்நூல்களைக் கற்றலும் கேட்டலும் வேண்டும். அப்பேறு எவர்க்கு உண்டு? கற்றவர்க்கே உண்டு; மற்றவர்க்கு இல்லை," என்று எழுதியுள்ளார்.
மு.வ.வுக்கு உடல் தளர்ச்சி மிகுந்துகொண்டே சென்று 1974 அக்டோபர் 10ம் தேதி இறையடி சேர்ந்தார்.
நம் காலத்தில் நமக்காக வாழ்ந்த பெரியார் மு.வ. வின் வாழ்வு நமக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகும்.

 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Last Updated on Saturday, 06 June 2009 20:08
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2012  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728293031 

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved