Tuesday 21st of November 2017

க.வெள்ளைவாரணனார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Thursday, 22 January 2009 18:38

 

"தமிழ்மாமணி" க.வெள்ளைவாரணனார்

 

"பண்பிலே இமயம், நல்ல படிப்பிலே இமயம், தூய அன்பிலும் இமயம்" எனக் கலைமாமணி க.வெள்ளைவாரணனாரை டாக்டர் தமிழண்ணல் பாராட்டுவார். 


 

Vellai Varanar


 
குள்ளமான தோற்றம், அறிவுக் கூர்மையினையும், ஆன்மிக ஈடுபாட்டினையும் ஒருசேரப் புலப்படுத்தும் அகன்ற நீறு பூசிய நெற்றி, பார்ப்போரை ஈர்க்கும் புன்னகை தவழும் முகம், எளிய தூய வெண்ணிற உடை உடுத்திய மேனி இவ்வாறு விளங்கியவரே வெள்ளைவாரணனார் ஆவார்.
பயனில சொல்லாப் பண்பும், நகைச்சுவை இழையோடுமாறு இன்சொல் பேசும் இயல்பும் கொண்டிருந்த இப்புலவர் பெருந்தகை, மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞர் ஆவார். ஓர் இலக்கியச் செல்வராகவும், இலக்கணக் கடலாகவும், கன்னித் தமிழ்க் காவலராகவும் விளங்கிய இவரை ஆன்றவிந்தடங்கிய அருந்தமிழ்ச் சான்றோர் எனலாம். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகவும் திகழ்ந்தமை இவரின் தனிச் சிறப்பாகும்.


தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் செங்குந்தர் மரபில் கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935ல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1935-37ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.
வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1939ம் ஆண்டு செங்கல்பட்டு கனகசபை முதலியாரின் மகள் பொற்றடங்கண்ணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.
1943ல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962ல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது. 1977ம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62ம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979ல் ஓய்வு பெற்றார். 1979 முதல் 1982ம் ஆண்டு வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.
 
வெள்ளைவாரணனார்,

 • தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்
 • தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்
 • தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்
 • தொல் - பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்)
 • ஆகிய இலக்கண நூல்களையும்,
 • குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி
 • சங்ககால தமிழ் மக்கள்
 • ஆகிய சங்க இலக்கியம் சார்ந்த நூல்களையும்,
 • திருவுந்தியார்
 • திருக்களிற்றுப்படியார்
 • சேக்கிழார் நூல்நயம்
 • பன்னிரு திருமுறை வரலாறு
 • தில்லைப் பெருங்கோயில் வரலாறு
 • திருவருட்பாச் சிந்தனை
 • ஆகிய சைவ சமயம் சார்ந்த நூல்களையும்,
 • தேவார அருள்முறைத் திரட்டுரை
 • திருமந்திர அருள்முறைத் திரட்டுரை
 • திருவருட்பயன் விளக்கவுரை
 • ஆகிய உரை நூல்களையும்,
 • காக்கைவிடுதூது என்னும் படைப்பிலக்கியத்தையும்
 • இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த நூல்களையும்

எழுதியுள்ளார்.


விபுலானந்தரின் யாழ் நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரை இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண்மான் நுழை புலத்தினைக் காட்டுவன. திருமந்திர அருள்முறைத் திரட்டு என்னும் உரைநூலில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலும் அதன் விளக்கவுரையும் கீழே தரப்பட்டுள்ளன.
 
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வேனே.
 
இப்பாடலில் இடம் பெற்றுள்ள;
தேடுதல் என்பது அன்பர் பலரையும் வினவிச் செல்லுதல்
திரிதல் என்பது சிவபரம்பொருளை எதிர்ப்பட்டுக் கண்டு மகிழவேண்டும் என்னும் ஆர்வத்துடன் அடியார் பலருடன் பல ஊர்களில் சுற்றியலைதல்
பாடுதல் என்பது வாக்கின் தொழில்
பணிதல் என்பது காலத்தின் தொழில்.


1937ல் இராஜகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார். 1938ல் இந்தியாவிலேயே முதன் முதலாக மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலானோர் எதிப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939ல் பாந்தளூர் வெண்கோழியார் என்ற புனைப் பெயரில் காக்கை விடுதூது என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.
 
தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு இலக்கியம் மற்றும் சமய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் வெள்ளைவாரணனாருக்குப் பல்வேறு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளன.

 • சித்தாந்தச் செம்மல்
  தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்
  திருமுறை உரைமணி
  செந்தமிழ்ச் சான்றோர்
  தமிழ்மாமணி
  சிவகவிமணி
  திருமுறைத் தெய்வமணி
  தமிழ்ப் பேரவைச் செம்மல்


ஆகிய விருதுகள் பல்வேறு ஆண்டுகளில் கொடுக்கப்பட்டவை.
 
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985ல் கலைமாமணி விருதை வழங்கியது.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது. தில்லை சென்று தங்கி அங்கு ஆடவல்லானையே சிந்தித்து வாழ்ந்திருந்த இப்புலவர் பெருமான் 1988ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 
அன்பு நெஞ்சர் அருந்தமிழ்க் காதலர் 
பண்பின் உறைவிடம் பழகுதற் கினியார்
கள்ளம் சிறிதிலா வெள்ளை வாரணர்
நிலைத்த புகழுடன் நீடு வாழ்கவே!
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Last Updated on Saturday, 06 June 2009 20:11
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved