Tuesday 21st of November 2017

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு பு.ரா.புருஷோத்தம நாயுடு
பு.ரா.புருஷோத்தம நாயுடு PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 12 June 2009 10:09

 

 

வைணவக் கடல் பு.ரா.புருஷோத்தம நாயுடு

தேசிகன்

 

சிதம்பரத்தின் அருகே உள்ள வெள்ளாற்றின் வடகரையில் அமைந்திருக்கிற புவனகிரிக்கு அபூர்வமான சிறப்பு ஒன்று உண்டு. வெள்ளாற்றின் கரையில் செந்நெல்லும், கரும்பும், வாழையும் செழித்தது போலவே வைணவ சித்தாந்தமும் செழித்து வளர்ந்தது. அத்தோடு துவைத தத்துவத்தின் மூலவரான மத்வரின் வழி வந்த மகான் இராகவேந்திரரும் புவனகிரியில் பிறந்து இந்த மண்ணுக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தார்.
ஆன்மிகம் செழித்து வேர் கொண்ட புவனகிரியில் புகழ் பெற்ற வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஒருங்கே தமிழ்த் தொண்டும் வைணவத் தொண்டும் செய்து பெயர் பெற்ற பெரியார்களில் முக்கியமானவர் பு.ரா.புருஷோத்தம நாயுடு.
 
 கஸ்தூரி இராஜகோபால் நாயுடு - ஆண்டாளம்மாள் தம்பதிக்கு மகனாக 1901ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி புருஷோத்தம நாயுடு பிறந்தார். கஸ்தூரி என்பது இவரது குடும்பப் பெயர். மறந்தும் புறம் தொழாத வீர வைணவப் பரம்பரை இவருடையது. பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகளுக்கும் இவரது முன்னோருக்கும் நடந்த சித்தாந்தப் போர் அந்த நாள் தத்துவ உலகில் பிரசித்தி பெற்ற ஒன்று.


இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த புருஷோத்தம நாயுடு, தமிழுக்கும் வைணவத்துக்கும் ஒருங்கே தொண்டாற்றிப் பெருமை பெற்றதில் வியப்பில்லை. அன்றைய குடும்பங்களைப் போலவே புருஷோத்தமருக்கு உடன் பிறந்தோர் பலர். இரு அண்ணன்கள், இரு தம்பியர், ஒரு அக்காள், இரு தங்கைகள் என்று பெரிய குடும்பம்.


இவரது பெரிய தகப்பனார் அழகிய மணவாள இராமானுஜ ஏகாங்கி ஸ்வாமிகள். அந்த நாளில் தம் குடும்பக் குழந்தைகள் சாதாரண பாடங்களோடு வைணவ சமயக் கல்வியையும் கற்றுத் தேற வேண்டும் என்று விரும்பியவர்.


அக்காலத்தில் வைணவத்தின் வளர்ச்சிக்காக திருவரங்கத்தில் நடந்து வந்த பள்ளி ஸ்ரீ இராமானுஜ தர்சன வித்தியாசாலை. அது சித்ரகூடம் என்று வைணவர்களால் அழைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு மாற்றப்பட்டது. இந்தப் பள்ளியின் மற்றோர் பிரிவாக வரவர முனி பாடசாலை என்ற பெயரில் ஒரு பள்ளியும் துவங்கப்பட்டது. இதில்தான் புருஷோத்தம நாயுடு தன் பள்ளி வாழ்க்கையைத் துவக்கினார். இதன் பிறகு வேறொரு பள்ளியிலும் மதுரை செந்தமிழ்க் கலாசாலையிலும் படித்தார். அன்றைய படிப்பான பாலபண்டிதம் வரை படித்த நாயுடுவுக்கு அன்று பெரும் புலவர்களாக விளங்கிய திருநாராயண ஐயங்கார், சேற்றூர் கவிராயர் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டினர். அதன் பயனாக அவர் வித்வான் பட்டமும் பெற்றார். பின்னாளில் நாயுடு பல பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.


இப்படித் தமிழ் படித்த போதிலும் வைணவம் தொடர்பான முக்கியமான பல ஆதார நூல்களையெல்லாம் வைணவ மகாவித்வானாக விளங்கிய தன் பெரிய தகப்பனாரிடமே அவர் நேரடியாகக் கற்றது குறிப்பிடத்தக்கது. கல்வி நிலையங்களில் கற்றுத் தேற முடியாததை பண்டைய மரபின் படி, தனி ஒரு ஆசானின் கீழ் இருந்து பாடம் கேட்பதன் மூலமே பெற முடியும் என்பது அன்றைய அறிஞர்களின் நம்பிக்கை. பின்னாளில் வைணவம் தொடர்பான விஷயங்களில் புருஷோத்தும நாயுடுவுக்கு இருந்த ஆழ்ந்த அறிவு, இந்த மரபில் அவர் கற்றதன் மூலமே உருவாயிற்று.
சிதம்பரத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய போது அன்று சிதம்பரம் மீனாட்சித் தமிழ் கல்லூரியின் முதல்வராக தமிழ்த்தாத்தா உ.வே.சா பணியாற்றி வந்தார். புருஷோத்தம நாயுடுவின் சிறந்த புலமையும், கற்பிக்கும் திறனும் ஐயர் அவர்களுக்கு தெற்றெனப் புலனாயிற்று. உடனே அவர் நாயுடுவை அழைத்துத் தங்களுடைய கலாசாலை ஆசிரியராக்கினார்.


மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கிய நாயுடுவின் திறமைக்கு உதாரணமாக மற்றொன்றையும் சுட்டிக் காட்டலாம். அந்த நாளில் இவர் சேனாவரையத்தைப் பாடம் சொல்வதில் மிகச் சிறந்து விளங்கினார். 1935ம் ஆண்டு திருவையாறு அரசர் கல்லூரியில் இவர் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் இவரிடம் சேனாவரையம் பாடம் கேட்பதற்காகவே இலங்கையிலிருந்து மாணவர்கள் திருவையாறு வந்து தங்கி இவரிடம் கற்றனர். இத்தகவலை இவரது மாணாக்கரும் சிறந்த தமிழ்ப் புலவருமான ஆர். ஆளவந்தார் குறிப்பிடுகிறார். இவர் "புருஷோத்தம நாயுடுவின் தமிழ் - வைணவத் தொண்டு" என்ற அருமையான நூலை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் பல்வேறு கருத்துக்களும் இந்த நூலிலிருந்து திரட்டப்பட்டவையே.


1948ல் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் ஆய்வுத் துறையில் விரிவுரையாளரானார். இப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இவரது ஆய்வுப்பணிகள் தொடர்ந்தன.


புருஷோத்தம நாயுடுவின் தமிழ்ப் பணிகளை விளக்கின் அது பெருகும். சுருக்கமாக அது குறித்துப் பார்க்கலாம்.
ஆழ்வார்களின் பாசுரங்கள் இணையற்ற இன்பம் பயப்பவை என்றால் அதற்கான பல்வேறு வியாக்கியானங்களும் பேரின்பம் பயப்பவை. பல்வேறு வைணவ ஆசாரியர்களால்;

  • ஆறாயிரப்படி
  • ஒன்பதினாயிரப்படி
  • பன்னீராயிரப்படி
  • இருபத்தினாலாயிரப்படி
  • முப்பதாறாயிரப்படி

என்று அழைக்கப்படும் அவை மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. வடமொழி அறியாமல் அவற்றின் பொருளழகையும், ஆழத்தையும் உணர இயலாத நிலை இருந்தது. இதை மனத்தில் கொண்டு வடமொழி அறியாதாரும் இந்த வியாக்கியான அமுதத்தை அள்ளி அருந்தும்படி அவற்றின் தமிழாக்கங்கள் உருவாகியுள்ளன. அவற்றுள் முப்பத்தாராயிரப்படி என்னும் வியாக்கியானம் நம்பிள்ளையால் செய்யப்பட்டது. "நம்பிள்ளையின் ஈடு வியாக்கியானம்" என அதை அழைப்பர். இந்த வியாக்கியானத்தை பத்துத் தொகுதிகளாக சுமார் 4400 பக்கங்களில் அளித்து பெரும்பணி செய்தவர் புருஷோத்தம நாயுடு.


"பகவத் விஷயம்" என்ற தலைப்பில் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கான ஈடுவியாக்யான தமிழாக்கத்தை அளித்த அவர் ஆசார்ய ஹிருதயம், ஸ்ரீவசன பூஷணம் ஆகிய நூல்களுக்கு மணவாள மாமுனிகள் செய்த வியாக்கியானங்களையும் தமிழாக்கியுள்ளார். தமிழோடு, வடமொழியிலும் இவர் புலமை பெற்று விளங்கியதால் அவரது தமிழாக்கம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.


நான்கு பகுதிகளாக அமைந்த ஆசார்ய ஹிருதயம் சுமார் 650க்கும் மேற்பட்ட பக்கங்களால் ஆனது. இவரது ஸ்ரீவசன பூஷண வியாக்கியானத் தமிழாக்கம் சுமார் 700 பக்கங்கள் கொண்டது. இவை தவிர இவர் செய்துள்ள பதிப்புப் பணிகளையெல்லாம் சொல்ல முற்பட்டால் தனியாக ஒரு பட்டியலே இட வேண்டியிருக்கும். இப்புலவர் பெருமானது பேருழைப்பும், பெரும் தொண்டும் இதனால் விளங்கும்.


தன் ஓய்வுக் காலத்திற்குப் பிறகும் பல்கலைக்கழக மானியம் பெற்று நான்கு ஆண்டுகள் தமிழ் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அவர், ஓய்வு பெற்ற பின் கடலூரில் தன் மனைவி மக்களுடன் தங்கி இருந்தார். இவருக்கு மூன்று மகள்களும், இரு மகன்களும் உள்ளனர். தனது 75ம் வயதில் 1976ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி இவர் எம்பெருமான் திருவடிநீழலை அடைந்தார்.
 

 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved