Tuesday 28th of March 2017

தேவநேயப் பாவாணர் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 12 June 2009 10:07

 

 

"மொழிஞாயிறு" தேவநேயப் பாவாணர்

முனைவர் சி.சேதுராமன்

 

 

"மொழிஞாயிறு" என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 1902ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நெல்லை மாவட்டம், சங்கரநயினார் கோயிலில், ஞானமுத்தன் - பரிபூரணம் ஆகிய இருவருக்கும் பத்தாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". இளம் பருவத்திலேயே தமது தாய் - தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். அதனால் தாயைப் பெற்ற தந்தையார் குருபாதம் என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசெளரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.

 

பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

 

1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். "நேசன்" என்பதும் "கவி" என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் "தேவநேயப் பாவாணர்" என அமைத்துக்கொண்டார்.

 

1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்.ஓ.எல். பட்டம் பெறுவதற்கு "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை.

 

பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.

 

முகவை மாவட்டத்திலுள்ள சீயோன் மலை உயர்நிலை தொடக்கப்பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார்
தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பின்லே கல்விச்சாலையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.

 

  • திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியிலும்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும்

சேலம் நகராண்மைக் கல்லூரியிலுமாகப் பற்பல இடங்களில் பணிபுரிந்தார்.


இஃது இவரது சொல்லாய்வுக்கு உறுதுணையாய் இருந்தது. வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

 

1974ம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பன்மொழிப் புலவராகிய பாவாணர் வீட்டில் உலக மொழிகளில் உள்ள அனைத்து அகராதித் தொகுப்புகளும் இருந்தன. பாவாணர் தாமே முயன்று பல மொழிகளையும் கற்றார். திராவிட மொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர் என அறிஞர் கூறுவர்.

 

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியினை ஆராய்ந்து அதில், ஆயிரக்கணக்கான தென் சொற்கள் விடப்பட்டிருப்பதும், தமிழின் அடிப்படைச் சொற்களையெல்லாம் வடசொல்லென்று காட்டியிருப்பதும் தமிழ்ச் சொல் மறைப்பாகும் என பாவாணர் சுட்டிக்காட்டினார்.

 

காலமெல்லாம் பாவாணர் சொல் வழக்காறுகளைத் தொகுத்தார். அவர் தொகுத்த சொற்களஞ்சியச் செல்வத்தினைத் தாம் எழுதியவற்றில் வாரி வழங்கினார். எழுதுவது போலவே பேசுவார். அவர் நூல்கள் போலவே உரையாடலிலும் ஊடகமாகச் சொல்லாய்வு தலைதூக்கி நிற்கும். பாவாணரைப் பற்றி, "சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று யாம் உண்மையாகவே கருதுகின்றோம்," என மறைமலையடிகளார் குறிப்பிடுகிறார்.

 

பலசொற்கள் வடமொழியில் இருந்தே வந்தது என்று பலர் கூறியபோது அதனை மறுத்து அவை தூயதமிழ்ச் சொற்களே என மெய்ப்பித்தவர் பாவாணர். "புத்தகம்" எனும் சொல் வடசொல்லில் இருந்து வந்ததாகக் கூறுவர். இதனை மறுத்து பாவாணர், "புத்தகம்" என்னும் சொல் "பொத்தகம்" என்பதன் வழிவந்த சொல்லாகும். அதாவது புல்லுதல் - பொருந்துதல், புல் - பொல் - பொரு - பொருந்து - பொருத்து - பொத்து - பொட்டு, பொத்துதல் - பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல், பொத்து - பொத்தகம் - பொத்திய (சேர்த்தல்) ஏட்டுக்கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி என விளக்கி இஃது தூய தமிழ்ச்சொல் என்று மொழிகிறார்.

 

சொல்லாய்விற்காக அரும்பாடுபட்டவர் பாவாணர். "மொழியாராய்ச்சி" என்ற பாவாணரின் முதற்கட்டுரை, செந்தமிழ்ச்செல்வி ஜூன் - ஜூலை திங்களிதழில் 1931ம் ஆண்டு அவரது 29ம் அகவையில் வெளிவந்தது. "உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு" என்ற அவரது இறுதிக் கட்டுரை அதே இதழில் 1980ம் ஆண்டு டிசம்பர் திங்களில் வெளிவந்தது. இருப்பினும் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை நகரில் 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியபோது வெளியிடப்பட்ட மலரில் இடம்பெற்றதும், பாவாணரால் மாநாட்டரங்கில் படிக்கப்பெற்றதும் ஆகிய கட்டுரை, "தமிழனின் பிறந்தகம்" என்னும் கட்டுரையாகும்.

 

மாநாட்டு அரங்கில் இக்கட்டுரைக்கு பாவாணர் விளக்கம் கூறிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது 79ம் அகவையில் இயற்கை எய்தினார்.

 

தொகுப்புக் கலைத்தோன்றலாகிய பாவாணர் அகரமுதலிகளைத் தொகுப்பதில் பேரார்வம் கொண்டுழைத்தார். அப்பணி வளர்ந்து கொண்டே இருந்தது. அவரது மூச்சின் ஓய்வில்தான் அத்தொகுப்பு முடிவுற்றது. வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்தார். இதனை தமிழ்கூறும் நல்லுலகத்தார் அனைவரும் அறிவர். பாவாணர் தோன்றி 107 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவரது தமிழ்ப்பணியை தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் நினைந்து, அவர்தம் வழியில் சென்று தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ப்பதுடன், அதனைக் காப்பதும் அனைவரின் கடமையாகும்.

 

நன்றி: தமிழ்மணி (தினமணி)

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
2728293031  

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved