Saturday 22nd of October 2016

நா.வானமாமலை PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 12 June 2009 10:01

 

"இலக்கிய கலாநிதி" நா.வானமாமலை

முனைவர் இரா.காமராசு

 

அறிவின் இருப்பு பிறப்பிலேயே அடங்கியிருக்கிறது என காலம் காலமாக நம்ப வைக்கப்பட்ட அறிவுச் சூழலை அடித்து நொறுக்கி அறிவும், உழைப்பும், இயங்குதலும் நெருக்கமானவை என நிரூபித்தவர் பேராசிரியர் நா.வானமாமலை.

 

1917ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி, நாராயணன் - திருவேங்கடம் தம்பதியருக்கு நெல்லை மாவட்டம் நான்குனேரி என்ற ஊரில் பிறந்தார் நா.வா. வைணவ இலக்கியங்களையும், தமிழ் பேரிலக்கியங்களையும், மொழிபெயர்ப்பில் கிடைத்த மேலை இலக்கியங்களையும் இளம் வயதில் கற்றார். வாசித்த இலக்கியங்கள் வழி உருவான மனிதநேய உணர்வும், இயல்பிலேயே அமைந்த சமூகச் சமத்துவ அக்கறையும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் பேச்சும் எழுத்தும் இவரை சமூக விடுதலைக் களத்துக்கு ஈர்த்தன. வேதியியலிலும், கல்வியியலிலும் இளங்கலைப் பட்டங்களும், தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர், ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். தமது எழுத்து, பேச்சு, இயக்க செயல்பாடுகளுக்கு அரசுப்பணி ஊறு செய்தலை பொறுக்காமல் ஆசிரியப் பணியைத் துறந்தார். தானறிந்த எதையும் பிறர்க்கு கையளிக்கும் குணம் கொண்ட நா.வா. தனிப்பயிற்சி நிலையம் தொடங்கிப் பல்லாண்டுகள் நடத்தினார்.

 

நான்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் நேரடியாகப் பங்கேற்றார். 1948இல் ஒரு முறையும், 1970இல் நில மீட்சிப் போராட்டத்திலும் கைது செய்யப்பட்டார். பிரபலமான நெல்லை சதி வழக்கில் விசாரணைக் கைதியாக்கப்பட்டார். நில மீட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருந்த நா.வா. சிறைக் கூடத்தை படிக்கவும், எழுதவும் பயன்படுத்திக் கொண்டார். திவான் ஜர்மன்தாஸின் "மகாராஜ்" என்ற இந்திய சமஸ்தான மன்னர்களைப் பற்றிய நூலை மொழிபெயர்த்துக் கட்டுரைகளாக வெளியிட்டார்.

 

பாளையங்கோட்டை நகர மன்ற உறுப்பினராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கல்விக் குழுப் பொறுப்பாளராகவும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராகவும், உழைக்கும் மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.இவ்வாறு இயக்கச் செயல்பாட்டாளராக விளங்கிய நா.வா. நாட்டின் விடுதலைக்குப் பின் இடதுசாரி இயக்கத்தின் தேவை கருதி அறிவுப் பரப்பல் பணியில் ஈடுபட்டார். தேசிய இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் கருத்தியல்களுக்கு மாற்றாக மார்க்சீய நெறிப்பட்ட முன் வைப்புகளை;

 • ஜீவா
 • பாலதண்டாயுதம்
 • பி.இராமமூர்த்தி
 • எஸ்.இராமகிருஷ்ணன்
 • ஆர்.கே.கண்ணன்
 • தொ.மு.சி.இரகுநாதன்

போன்றோர் நிகழ்த்தினர்.

 

நா.வானமாமலை தமிழில் எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடங்கி வைத்த அறிவியல் வழிப்பட்ட ஆராய்ச்சி நெறிமுறையை சமூகவியல், வரலாற்றியல் துணைகொண்டு மார்க்சிய தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுத்தார். வட இந்தியாவில்;

 • டி.டி.கோசாம்பி
 • தேவி பிரசாத் சட்டோபாத்யாய
 • ஆர்.எஸ்.சர்மா

போன்றோர் மேற்கொண்ட ஆய்வு முறையியலை இவர் தமிழ்ச் சூழலில் பயன்படுத்தி நாட்டின் இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் தொடர்பான ஆய்வுகளில் புதுநெறிப் பாய்ச்சினார். கல்விப்புல வட்டாரம் ஏற்கத்தக்க முறையிலான மார்க்சிய ஆய்வுகளைக் கொண்டு செலுத்தியவர் இவரேயாவார்.

 

"நாட்டார் வழக்காற்றியல்" என்ற மக்களின் பண்பாட்டுக் கருவூலத்தை பல்கலைக்கழகங்கள் ஒப்புக்கொள்ளத்தக்க கல்விப் புலமாக்கியவரும் இவரேயாவார்.

 

நாட்டார் பாடல்கள், கதைகள் சேகரித்தல், பதிப்பித்தல் இவை குறித்த ஆய்வுரைகள் எழுதுதல் எனத் தொடங்கினார். நாட்டுப்புறவியலை பண்பாட்டு மானிடவியல், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் போன்றவற்றோடு இணைத்து ஆய்ந்து தமிழ்நாட்டின் சமூகப் பண்பாட்டு வரலாற்று உருவாக்கத்துக்கு நா.வா. கை கொடுத்தார். இன்றைக்கும் கோரிக்கையாகத் தொடரும் "தமிழ்வழிக் கல்வி" குறித்து 1960களில் தமிழகமெங்கும் கருத்தரங்குகளையும், தமிழ் வழியில் அறிவியல் தொழில் நுட்பக் கல்வி வழங்க முடியும் என்ற கருத்தாக்கத்தில் "தமிழில் முடியும்" என்ற நூலையும் கொண்டு வந்தார். மார்க்சிய அடிப்படை நூல்களை எளிமையாகவும், தமிழ்ச் சான்றுகளுடனும் தமிழில் தந்தார். புதுக்கவிதைத் தொடங்கி, சிறுகதை, நாவல் போன்ற புத்திலக்கிய வகைமைகளில் யதார்த்தவாத, மக்கள் இலக்கிய சாயல்களை இனம் கண்டு வரவேற்றார். இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தினார்.

 

கல்வி நிலைப் பின்புலமுள்ளவர்கள்தான் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட முடியும் என்ற தோற்றத்தை மாற்றி ஆர்வமும், ஈடுபாடும், உழைப்பும், நுட்பமும் கூடிவரும் யாரும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில், 1967ல் "நெல்லை ஆய்வுக்குழு" என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக 1969இல் "ஆராய்ச்சி" என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை மட்டுமே தாங்கி வரும் காலாண்டிதழைத் தொடங்கினார். இவற்றின் பங்கும், பணியும் மகத்தானவை. இவற்றின் பாதிப்பால் உருவான பலர் இன்றைக்குத் தமிழ் படைப்பிலக்கியத் துறையில், ஆராய்ச்சித் துறையில் முன்னனியில் உள்ளனர்.

 

அனைவருக்கும் எல்லா வகையிலும் உதவுதல், திறமை கண்டு சரியான திசையில் வளர வழிகாட்டல், எல்லையற்று அன்பு செய்தல், கொள்கையில் பற்றுறுதி, ஆய்வு முடிவுகளில் தெளிவு என தன் வாழ்க்கையை பின்பற்றத்தக்க முன்னுதாரணமாக ஆக்கிக் கொண்டவர் நா.வா. இவரது மனிதப் பண்பும், ஆய்வு ஆற்றுப்படுத்தலும், மார்க்சிய அடிப்படை நோக்கும் இணைந்து இவரை தனித்தொரு "சிந்தனைப் பள்ளியாக" இனம் காட்டுகின்றன.

 

தமிழக நாட்டுப்புறப் பாடல்களை முதன் முதலில் ஆய்வுப் பதிப்பாக வெளியிட்ட "தமிழர் நாட்டுப் பாடல்கள்", சமூக வரலாற்றுப் பின்புலங்களைக் சுட்டும் ஆய்வுரைகளுடன் வெளிவந்த;

 • ஐவர்ராசாக்கள் கதை
 • கட்டபொம்மு கூத்து
 • கட்ட பொம்மன் கதைப்பாடல்
 • காத்தவராயன் கதைப்பாடல்
 • கான்சாகிபு சண்டை
 • முத்துப்பட்டன் கதை
 • வீணாதிவீணன் கதை

முதலிய கதைப்பாடல் தொகுப்புகள் மற்றும் ஆய்வு நூல்கள் நாட்டார் இலக்கியம், பண்பாடு, வரலாறு, மானிடவியல் ஆகியவற்றைப் பற்றிய பல கட்டுரைகள் "நாட்டார் வழக்காற்றியல்" என தனித்தொரு அறிவுப் புலம் உருவாக இவரின் பங்களிப்புகள் பெரிதும் உதவின.

 

 • தமிழர் வரலாறும் பண்பாடும்
 • தமிழ்நாட்டில் ஜாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
 • வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
 • தமிழர் பண்பாடும் தத்துவமும்
 • பழங்கதைகளும் பழமொழிகளும்

முதலிய நூல்கள்,

 • சோழர் காலம்
 • நடுகற்கள் குறித்தவை

உள்ளிட்ட பல கட்டுரைகள் இவரின் வரலாறு, பண்பாடு குறித்த ஆய்வுப் பங்களிப்புகளாகும். இதைத் தவிர பல கட்டுரைகள் இவரது தத்துவப் போக்கினை உணர்த்தி நிற்கின்றன.

 

பெரிய நிறுவனங்கள் செய்ய வேண்டியவற்றை தனி ஒரு மனிதனாக நின்று தமிழ் ஆய்வில் புதுக் களங்களைக் கண்டு, புதுச் திசைகளில் பயணித்து, புதுநெறிப் பாய்ச்சிய மூலவராக நா.வானமாமலை திகழ்கிறார்.

 

தமிழ் ஆய்வின் எல்லைக் கல்லாகத் திகழ்ந்த நா.வானமாமலை 1980ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். இவரின் பன்முக ஆய்வுப் பங்களிப்பை கண்டுணர்ந்து இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் "இலக்கிய கலாநிதி" பட்டம் வழங்கி சிறப்பித்தது. எந்தக் கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும் தொழில் ரீதியாக பேராசிரியராக பணி செய்யாவிட்டாலும், உழைக்கும் மக்களுக்கு என்றென்றும் இவர் "பேராசிரியர்"தான்!

 

நன்றி: தமிழ்மணி (தினமணி)

 

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  October 2016  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
       1  2
  3  4  5  6  7  8  9
10111213141516
17181920212223
24252627282930
31      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved