
| அரங்கநாத முதலியார் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Friday, 12 June 2009 09:54 |
|
இரு மொழி அறிஞர் அரங்கநாத முதலியார் தேசிகன்
ஆங்கிலம் மணக்கும் சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் மேல் நாட்டு உடையில் வண்ண வண்ணப் பந்துகள் உருளும் பிரம்மாண்டமான பில்லியர்ட்ஸ் மேஜை அருகே நின்று விளையாடிக் கொண்டிருக்கிறார் ஒருவர். மேல் நாட்டுப் பாணியில் முழு சூட்டும், காலணியும் அணிந்த அவர் ஆட்டத்தின் இடையிடையே கம்பராமாயணப் பாட்டைத் தன் நண்பர்களிடம் இரசனை ததும்பச் சொல்கிறார் என்றால் கேட்கச் சற்றே வியப்பாக இருக்கிறதா இல்லையா? அதிசயம். ஆனால் உண்மை.
கடந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இருந்தபடி மேல் நாட்டு நாகரிக வாழ்க்கையை வாழ்ந்தவர்களிடையே தன் தாய்மொழியான தமிழின் பால் ஆழ்ந்த பற்றும், புலமையும் பெற்று விளங்கிய அறிஞர்கள் சிலர் இருந்தனர். ஆங்கில மோகம் அவர்களது தமிழ் மரபின் வேர்களை அழிக்கவில்லை. இப்படிப்பட்ட மரபின் வேர்மாறா மைந்தர்களில் ஒருவர்தான் பூண்டி அரங்கநாத முதலியார்.
கல்லூரியில் படிக்கிற நாளிலேயே தன் ஆங்கிலப் புலமையால் வெள்ளையர்களின் உள்ளங்களையே கொள்ளை கொண்ட இப்பெருமகன்தான் "கச்சிக்கலம்பகம்" என்ற இலக்கண, இலக்கியச் செறிவு நிறைந்த நூலையும் இயற்றி அரங்கேற்றியவர் என்றால் இவரது இரு மொழிப் புலமைக்கும் தாய்மொழிப் பற்றுக்கும் இணை சொல்ல முடியுமா?
அரங்கநாத முதலியார் பிறந்த ஆண்டு 1844. தந்தை சுப்பராய முதலியார் அன்றைய ஆங்கில ஆட்சியில் பெரிய பதவியில் இருந்தவர். தமிழிலும் சிறந்த புலமை பெற்றவர். தொண்டை நாட்டில் உள்ள பூண்டி என்ற ஊரே இவர்களது குடும்பத்தின் பூர்வீகம். மிகச் சிறு வயதிலேயே அரங்கநாத முதலியாரின் தமிழ்க்கல்வி அவரது தந்தையிடமிருந்தே துவங்கிவிட்டது. பின்னாளில் பல புலவர்களிடம் அவரது தமிழ்க்கல்வி மேன்மேலும் உயர்வு பெற்றது. பள்ளி நாட்களில் சென்னையைச் சேர்ந்த கதிர்வேல் உபாத்தியாயரிடம் பல நூல்களை அவர் பாடம் கேட்டார். அத்தோடு அன்று சென்னையில் வாழ்ந்த பெரும்புலவர் புரசைவாக்கம் "அஷ்டாவதானம்" சபாபதி முதலியார் உள்ளிட்ட பெரும் புலவர்களிடம் நெருங்கிப் பழகித் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் தொடர்பான தனது ஐயங்களை நீக்கிக் கொண்டார்.
அவர் பின்னாளில் எம்.ஏ. பட்டம் பெற்று எம்.ஏ. அரங்கநாத முதலியார் என்றே பலரால் அழைக்கப்பட்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் ஆங்கிலமும் கணிதமும் எடுத்துப்படித்தபோதே வெள்ளையர்களான ஆசிரியர்கள் அவரது ஆங்கிலப் புலமையைப் பாராட்டினர்.
பி.ஏ. தேர்வு முடிவுகள் வந்தபோது, அவர்கள் யாவரும் அதிர்ச்சி அடையும்படி ஆங்கிலத்தில் மிகச் சாதாரண மதிப்பெண்களை முதலியார் வாங்கியிருந்தார். ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சியுற்ற போதிலும் மாநிலத்திலேயே முதல்வராக வருவார் என்று கூறப்பட்ட முதலியார் குறைவான மதிப்பெண்கள் பெற்றதில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்று அன்றைய கல்லூரி முதல்வர் எட்மண்ட் தாம்ஸன் தீர்மானித்தார்.
அதனால், முதலியாரின் விடைத்தாளை மறுபரிசீலனைக்காக அவர் பார்வையிட்டார். அப்போது முக்கியமான பகுதிகளில் பல விடைகள் திருத்தாமல் விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதில் உள்ள மதிப்பெண்களையும் கூட்டிப்போட்டதில் மாநிலத்திலேயே ஆங்கிலத்தில் முதல்வராக வந்தார் முதலியார்.
இவ்விதம் மிகச் சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்ததால், அவர் கல்வித் துறையில் பல்வேறு பதவிகளை வகித்து அனைவராலும் பாராட்டப்பட்டார்.
பெல்லாரி புரொவின்ஷியல் ஸ்கூல், கும்பகோணம் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் ஆசிரியர் பதவி வகித்த அவர், பின்னாளில் சென்னை இராஜதானி நிர்வாகத்தின் அதிகாரப் பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அந்த நாளிலேயே மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அளவுக்கு கல்வி இலாகாவில் பெரும் பதவிகளை வகித்தார்.
கும்பகோணத்தில் முதலியார் இருந்த போது கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய மகாவித்வான் தியாகராஜச் செட்டியாரிடம் மிகுந்த நட்புடன் பழகினார். எங்கு சென்றாலும் தமிழில் சிறந்த புலமையுடையவர்களுடன் பழகுவதில் முதலியார் ஆர்வம் காட்டிவந்தார். அப்படித்தான் பின்னாளில் அவர் உ.வே.சாமிநாதய்யருடனும் பழகினார். மாநிலக் கல்லூரியில் இவர் பணியாற்றிய நாட்களில் அங்கு தமிழ்த்துறையில் ஆசிரியராக விளங்கியவர் வள்ளலாரின் மூத்த மாணவரும் பெரும்புலவருமான தொழுவூர் வேலாயுத முதலியார். அவரது பழக்கத்தால் அரங்கநாத முதலியாரின் பாடல் இயற்றும் திறன் அதிகரித்தது. ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாடல் இயற்றுவார்களாம்.
அரங்கநாத முதலியாரின் விருப்பப்படி வேலாயுத முதலியார் "மகிழ்மாக் கலம்பகம்" என்ற கலம்பக நூலை இயற்றினார். அதன் பின்னர் தானே ஒரு கலம்பக நூலை இயற்ற வேண்டும் என்று விரும்பினார் அரங்கநாத முதலியார். அதன் விளைவாகப் பிறந்த நூல்தான் கச்சிக்கலம்பகம். காஞ்சி ஏகாம்பரநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்த நூல் 1889ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. சென்னை தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் இந்த நூல் அரங்கேறியபோது, முதலியாரின் விருப்பப்படி அவரது நண்பரான தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் கும்பகோணத்திலிருந்து வந்து அரங்கேற்றத்தில் பங்கேற்று கச்சிக்கலம்பகப் பாடல்களைப் படித்துக் கூறி அழகாக விளக்கம் அளித்தார்.
தனது சீவகசிந்தாமணி பதிப்புக்கு முதலியார் செய்த உதவிகளையெல்லாம் "என் சரித்திரம்" நூலில் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
மிகச் சிறந்த அறிவாற்றலும் தமிழ்ப் பற்றும் கொண்டு வாழ்ந்த அரங்கநாத முதலியார் 1893ஆம் வருடம் தனது 49ஆவது வயதில் காலமானார். மிகச் சிறிய வயதில் புகழுடம்பு எய்திய தமிழ்த் தாரகைகளில் முதலியாரும் ஒருவர்.
நன்றி: தமிழ்மணி (தினமணி) |
பிற வளங்கள்



