
| அரசஞ்சண்முகனார் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Friday, 12 June 2009 09:51 |
|
மகாவித்துவான் அரசஞ்சண்முகனார் முனைவர் ச. சாம்பசிவனார்
1902ஆம் ஆண்டில் ஒருநாள். பள்ளித் தலைமையாசிரியர் மாணவர்க்குரிய பாட அட்டவணையில் ஆங்கிலப்பாட நேரத்தைக் கூட்டித் தமிழ்ப்பாட நேரத்தைக் குறைத்திருந்தார். அங்கு வேலைபார்த்த தலைமைத் தமிழாசிரியர், "திடுமென இம்மாற்றம் ஏன்? இப்பாட அட்டவணையைத் திருத்தித் தமிழுக்கு உரிய பாட நேரத்தை ஒதுக்கித்தர வேண்டும்" என்று கேட்டார். அதற்குத் தலைமையாசிரியரோ சற்றும் கவலை ஏதுமின்றி, புன்சிரிப்புடன், "திருத்த இயலாது; தமிழ்தானே! அதனால் பயன் என்ன?" என்று மறுத்துவிட்டார்.
"தமிழ்தானே!" யாரோ ஒருவர் தம் முதுகில் சாட்டையடி கொடுப்பதுபோல் தோன்றியது அத் தமிழாசிரியருக்கு. "திருத்த வாய்ப்பில்லை" என்று சொல்லியிருந்தால்கூடத் தமிழாசிரியர் "சரி" என்று போயிருப்பார்.
"தமிழ் மண்ணிலே பிறந்து, தமிழ்க் காற்றினையே சுவாசித்து, தமிழ்நாட்டு உணவினையே சாப்பிட்டு, தமிழ் மண்ணிலே உயிர்விடப் போகும் ஒரு தமிழ்மகன், தம் தாயினும் சிறந்த தமிழ்மொழியின் பெருமை உணராமல் "தமிழ்தானே" என்று கூறிய நெஞ்சழுத்தந்தான் என்னே!" என்று உள்ளம் கொதித்து, அன்றே வேலையில் இருந்து விலகிக்கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு, பள்ளியை விட்டு வெளியேறினார். "தமிழ்தானே! தமிழ்தானே!" என்ற சொற்கள் அவர் உள்ளத்தே ஆழப்பதிந்துவிட்டன. அதனால் அவர் எழுதிய நூல் ஒன்றில், "உலகத்து வழங்கும் மொழிகள் பலவற்றினும் சிறந்து, பண்டைகாலந் தொட்டே அண்டரு முனிவரும் கொண்டாடப்பெற்று வழங்குவது நமது தண்டமிழ் மொழியே" எனத் தேற்றேகாரமிட்டுத் தமிழின் தொன்மையையும்,சிறப்பையும் விளக்கினார். ஆம்! அவர்தாம் மகாவித்துவான் அரசஞ்சண்முகனார்.
எளிய உருவத்தினர்; பிறர்க்குதவும் பெற்றியர்; செய்நன்றி மறவாச் சிந்தையினர்; செந்தமிழ்க் கடலின் நிலைகண்டவர்; இலக்கணக் கடல் எனப் பல்லோராலும் போற்றப்படுபவர்! 20ஆம் நூற்றாண்டின் இணையில்லாப் பெரும் புலவர்; பெருமையும் பீடுங்கொண்ட உரையாசிரியர் அரசஞ்சண்முகனார்.
மதுரையை அடுத்த சோழவந்தானில், அரசப்பபிள்ளை - பார்வதி அம்மையாரின் அருமை மகனாக 1868ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். அவ்வூர்த் திண்ணைப்பள்ளியில் கல்வி கற்றார். எழுத்திலக்கணம், நிகண்டு, அந்தாதி ஆகியன கற்றுத்தேர்ந்தார். பின்னர், சிவப்பிரகாச சுவாமிகளிடம் சங்க நூல்கள், இலக்கண, இலக்கியங்கள், தருக்கம், ஜோதிடம் ஆகியன கற்றுப் புலமை பெற்றார்.
அவர் தமது இளமையிலேயே தந்தையை இழந்தார். தம் பதினெட்டாம் வயதில் "மாலை மாற்று மாலை" என்ற நூலைப் பாடி முடித்தார். இளமையிலேயே தந்தையை இழந்ததால், குடும்பப் பொறுப்பை ஏற்கும் நிலையில் காளியம்மை என்னும் மங்கை நல்லாளை மணமுடித்தார். இல்லற வாழ்வு ஏற்ற சில காலத்திற்குள்ளாகவே, ஆசிரியப் பணி கிடைத்தது. மதுரை சேதுபதி உயர்பள்ளியில் பணிபுரியலானார். இவர்பால் தமிழ் பயின்றோர் பிற்காலத்தில் நாட்டுரிமைக்காகப் போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தகும். அவ்வகையில் மட்டப்பாறை வெங்கட்ராமையர், வைத்தியநாதையர் போன்றோரைக் குறிக்கலாம். சண்முகனார் இப்பள்ளியில் பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது நடந்த நிகழ்ச்சிதான் தொடக்கத்தில் குறிப்பிட்ட "தமிழ்தானே" நிகழ்ச்சி.
சண்முகனாரின் தோற்றம், நாட்டுப்புறங்களில் வேலை செய்யும் உழவனை நினைவுபடுத்தும். உடம்பை மறைக்க நான்குமுழம் வேட்டி; மேலே ஒரு துண்டு; தலையிலே சிறு குடுமி; வெற்றிலைக் காவி படிந்த மீசை; அடிக்கடி நோயினால் மெலிந்து காணப்படும் உடம்பு; இறைவனை என்றும் நினைவுபடுத்தும் நீறு. இவர்தம் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துவிட்டு "இவர்பால் அணுகவும் இயலாதே" என அஞ்சி ஒதுங்கி இருப்பவரெல்லாம், உருவத்தை நேரில் கண்டால் அவர்தாமா என்று எண்ணுமளவிற்குத் தம் புலமைத் திறத்தை வெளிக்காட்டாமல் அடங்கியிருந்தவர் சண்முகனார். இத்தகையாளரைப் புலவர் குழாத்திடை இருக்கச் செய்த பெருமை, வள்ளல் பாண்டித்துரைத் தேவருக்கு உரியது.
மதுரைத் தமிழ்ச்சங்கம், 1901 செப்டம்பர் 14இல் தொடங்கப்பட்டது. அதன் பயனாய்ச் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை உருவாயிற்று. நாராயணையங்கார், இரா.இராகவையங்கார் ஆகியோர் முறையே கலாசாலைத் தலைவராகவும் நூற்பதிப்பு ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் அமர்த்தப்பட்டனர். அந்த கலாசாலையில் 1902 முதல் 1906 வரை அரசஞ் சண்முகனார் ஆசிரியர் பணியில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கிய காலம் முதல் இறுதிக்காலம் வரை அதனுடன் தொடர்பு கொண்டிருந்ததால்,
ஆகிய பலரிடம் நட்பு கொண்டிருந்தார்.
தமிழ்க்கடலின் மரக்கலமாகிய தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றின் துணைகொண்டு தமிழாகிய அமிழ்தக்கடலில் மூழ்கி அரிய முத்துக்களாகிய ஆழ்ந்த பொருள்களைத் தேடிக்கொணர்ந்து தமிழ் உலகிற்கு உவந்தளித்தார். அத்தகைய முத்துக்களே;
எனப் பலவாகும்.
தமிழ்ப்பற்றும் தமிழறிவும் குறைந்திருந்த காலத்தில் தமிழுக்காகப் புத்துயிர் கொடுத்த பெருமை மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றுக்கே உண்டு. கரந்தைச் தமிழ்ச்சங்கத் தோற்றத்துக்கு அரசஞ்சண்முகனாரும் ஒருவகையில் துணை நின்றவர் எனலாம்.
சண்முகனார் வாழ்வில் பெரும்பகுதி உரை மறுப்பாகவே கழிந்தது எனலாம். சான்றுக்கு, "தொல்காப்பிய பாயிர விருத்தி", அறிஞர் பெருமக்களிடையே பெரும் கருத்து மோதல்களை உண்டாக்கியது. மாதவச் சிவஞான சுவாமிகளை ஏறத்தாழ முப்பது இடங்களில் மறுத்துரைக்கிறார் அரசஞ்சண்முகனார். இவ்வாறு சண்முகனார் வாழ்வில் பெரும்பகுதி உரை மறுப்பில் கழிந்தது. இத்தகு பெரும்புலவர், தம் 47ஆம் வயதில் 1915ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். எனினும் அவருடைய ஆராய்ச்சியாலும், தொண்டினாலும் என்றும் வாழ்வார் என்பது உறுதி!
நன்றி: தமிழ்மணி (தினமணி) |
பிற வளங்கள்



