Saturday 16th of December 2017

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு கம்பன் அடிப்பொடி - சா.கணேசன்
கம்பன் அடிப்பொடி - சா.கணேசன் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 12 June 2009 09:43

 

 

கன்னித்தமிழ் வளர்த்த கம்பன் அடிப்பொடி - சா.கணேசன்

சி.சேதுபதி

 

இராமாயணத்தில் சீதைக்கு அக்னிப்பிரவேசம் நிகழ்ந்ததுபோல், அக்காலத்தில் கம்பனுக்கும் தமிழகத்தில் சிதை மூட்டப்பட்டது.

 

இன்னொரு கோணத்தில் கம்பனைக் காட்டி எல்லாரது கவனத்தையும் அவன்பால் இழுத்து, "தீ பரவட்டும்" என்று எழுந்த குரலுக்கு மாற்றாகவோ, மறுப்பாகவோ அன்றிக் கம்பனின் மெய்த் தன்மையை (சுயத்தை)யும், அவனது பேருரு (விஸ்வரூபத்தை)வையும் உலகிற்கு எடுத்துரைக்கத் தமிழுலகம் கண்டு தந்த அரிய மாணிக்கம்தான் கம்பன் அடிப்பொடி என்னும் சா.கணேசன்.


அவர் கம்பநேயர் மட்டுமல்லர்; காந்திய நெறி நின்று தேசத்துக்கு உழைத்த உத்தமரும் ஆவார்.

 

"கம்பன் கழகம்" என்னும் பேரியக்கம் தோற்றுவித்த பிதாமகன்.

 

எதிர்நிலையில் நின்று கம்பனை விமர்சித்தவர்களும், கம்பனை உள்ளபடி உணர்ந்து உலகறிய உரைக்கத் தம் மேடையினைத் தந்து தாங்கி நின்றவர் அவர். அந்தவகையில் தமிழ்கூறுநல்லுலகில் முழங்கிய, முழங்குகின்ற பேச்சாளர்கள் மிகப்பலரும், கம்பனடிப்பொடியால் உலகிற்குக் கண்டுதரப் பெற்றவர்கள்.

 

 • தோழர் ஜீவா
 • தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
 • நீதியரசர்கள் மகராசன், மு.மு. இஸ்மாயீல் மற்றும்
 • பேராசிரியர்கள் ஏ.சி. பால்நாடார், எஸ். இராமகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தன்
 • எழுத்தாளர்களான கி.வா.ஜ., அ. சீநிவாசராகவன், கம்பராசன், கண்ணதாசன்

ஆகியோர் அவர்களுள் சிலர்.

 

கம்பன் பிறந்தநாள் இன்னதென அறியாத நிலையில், அவன் தமது காவியத்தை அரங்கேற்றம் செய்த, கி.பி. 886 பிப்ரவரி 23 அன்றைய தினத்தையே கம்பன் பிறந்த தினமாகக்கொண்டு, தாம் பிறந்த காரைக்குடி நகரில், கம்பன் கழகத்தை இனிது தொடங்கினார், கம்பன் அடிப்பொடி.

 

1939 ஏப்ரல் 2, 3 (வெகுதானிய வருடம் பங்குனி 20, 21) ஆகிய நாள்களில் டி.கே.சி.யின் தலைமையில் கம்பன் திருநாள் மிக எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. கம்பன் பள்ளிப்படைக்கோயில் (சமாதி) உள்ள நாட்டரசன்கோட்டையில் நிறைவுறும் அவ்விழா. இவ்வாறு அன்று தொடங்கிய அப்பெருவிழா, இன்று தமிழகம் மற்றும் உலக நாடுகளில் கம்பன் கழகங்கள் தோன்றக் காரணமானது.

 

மணிமேகலை காலத்தில் நிகழ்ந்த பட்டிமண்டபத்தைப் பாங்கறிந்து புதுப்பித்து, உலகெங்கும் கடைப்பிடிக்கக் காரணமானதும், இக்கம்பன் கழகமே. 71ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தாய்க்கழகம், இன்றைக்கும் புதிதாய்ப் பிறக்கும் எந்தவொரு கழகத்திற்கும் தம் சீராட்டைத் தந்து புரக்கும் தாயன்புமிக்கதாகத் திகழ்கின்றது.

 

கம்பன் அருட்கோவில் உள்ள நாட்டரசன்கோட்டையை உலகறியச் செய்து ஆண்டுதோறும் ஆங்கு அறிஞர்களை ஒருங்குதிரட்டிக் கம்பனைப் போற்றி மகிழ்கின்றது.

 

6-6-1908 அன்று காரைக்குடி சாமிநாதன், நாச்சம்மை தம்பதியர்க்கு மகவாகத் தோன்றிய கணேசன், காரைக்குடி ரெங்க வாத்தியார் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவர். தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களைப் பண்டித வித்துவான் சிதம்பர ஐயரிடமும், பர்மா தோங்குவா பண்டித சேதுப்பிள்ளையிடமும் பயின்றவர். காந்தியடிகளின் காரைக்குடி வருகையின்போது, அவருக்குப் பணிவிடை செய்யும் தொண்டர் படைத்தலைமையேற்று 1927இல் காங்கிரஸ் தொண்டரானவர்.

 

1936 முதல் தீவிர தேசியப் போராட்டத்தில் பங்கேற்று வந்த கணேசன், 1941இல் காந்தியடிகள் தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுப் பாதயாத்திரையாக தில்லிக்குப் பயணமாகி 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்ததும் உத்தரப்பிரதேச அலிபுரத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.

 

காந்தியடிகளைப் போன்று, நான்குமுழக் கதர் வேட்டியையும், மேலுடையாய் ஒரு துண்டையுமே அணிந்துவந்தவர் கணேசன். 1942இல் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின்போது, இவரை எங்கு கண்டாலும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்தம் சொத்துகள் அனைத்தையும் ஜப்தி செய்ய ஆங்கில அரசு உத்தரவிட்டது.

 

அப்புறமும், வேகந்தணியாத ஆங்கில அரசு, 1942 ஆகஸ்ட் போராட்டத்தின்போது, அவரது வீட்டைச் சூறையாடியது. கணேசன், ஊர் ஊராக மாறுவேடங்களில் சென்று மக்களை விடுதலை வேள்வியில் ஊக்கப்படுத்தியதுகண்டு பொறாத ஆங்கில அரசு, அவர்தம் நண்பர்களுக்கு எண்ணிலா இன்னல்கள் கொடுத்தது. அதனால் வேதனையுற்ற கணேசன், தமது வழிகாட்டியான இராஜாஜியின் ஆலோசனைப்படி, சென்னை போலீஸ் ஆணையரிடம் சரணடைந்தார். 18 மாத காலம் மீண்டும் அலிபூர் சிறைவாசம் ஏற்றார்.

 

அலிபூர் சிறைவாசத்தின்போது, உடனிருந்த மற்றவர்களுக்குக் கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியப் பாடங்களை நடத்தி, சிறைக்கோட்டத்தை இலக்கியக் கோட்டமாக மாற்றினார். அதுசமயம் அவர்தம் உரையினை செவி மடுத்த பெருமைக்குரியவர், கல்கி இதழின் அதிபரும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கணவருமான சதாசிவம் ஆவார். அவர் பின்னாளில் இந்நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

 

நாடு விடுதலை பெற்ற பிறகு, தியாகிகளுக்காக வழங்கப் பெறும் நிலம், ஓய்வூதியம் எதனையும் பெற மறுத்தார் கணேசன். அவ்வாறு பெற்றால் அது தொண்டிற்குப் பெறும் கூலியாகிவிடும் என்பது அவரது கருத்து.

 

1968இல் தமது மணிவிழாவைக் கொண்டாட விரும்பாத அவர், அவ்விழாவிற்கெனத் தம் அன்பர்கள் அளித்த ஒரு இலட்ச ரூபாய் நிதியைக் கொண்டு, காரைக்குடியில் கம்பன் மணிமண்டபத்தைக் கட்டத்தொடங்கி, 1972 முதல் அங்கேயே கம்பன் விழா நடத்தப்பட்டு வருகிறது.

 

உலகிலேயே, வேறு எம்மொழிக்கும் இல்லாத வகையில், தமிழ்மொழிக்காக, தமிழ்த்தாய் உருச்சமைத்து, அழகிய கோயில் ஒன்றை எழுப்பியவர் கம்பனடிப்பொடியாவார். 1975இல் அதற்குக் கால்கோள் செய்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி.

 

கம்பனைக் கற்றதன் காரணமாகத் தம்மையும் அவ்வழியில் கல்வியில், கலைகளில் பெரியவராக வளர்த்துக் கொண்டவர் கணேசன். தமிழோடு, வடமொழி, ஆங்கில மொழிகளில் புலமைகொண்ட இவர், சிறந்த சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்; மரபார்ந்த தமிழகத் தொன்மங்கள் அறிந்த நிறைகுடம்; சிறந்த எழுத்தாளர். அக்காலத்தில் கலைமகள் இதழில், "கல்சொல்லும் கதை" எனும் தலைப்பில் இவர் எழுதிய கல்வெட்டு, வரலாற்று ஆய்வியல் கதைகள் சித்திரநேர்த்தி கொண்டவை.

 

கம்பன் குறித்த கட்டுரைகள் இவர்தம் நுண்மாண் நுழைபுலம் உணர்த்தும் பெருமைக்குரியவை.

 

 • பிள்ளையார்பட்டித் தலவரலாறு
 • இராஜராஜன், தமிழ்த்திருமணம்

ஆகிய நூல்களோடு,"Some Iconographic concepts" என்ற ஆங்கில நூல் ஆகியன இவர்தம் நூல்களாகும்.

 

1968இல் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் கலைக்காட்சிக் குழுவிற்கு அண்ணாவின் வேண்டுதலால் தலைமையேற்ற கணேசன், கண்டோர் வியக்கும் வண்ணம் அழகுறு கலைக்காட்சியை நிகழ்த்தி, அதற்கெனக் கையேடு என்ற கருவூலத்தையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார்.

 

இன்றைக்கு அனைவரும் கண்டு கற்கும் வண்ணம் செம்மையான கம்பராமாயண நூல் உருவாக்கத்திற்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது.

 

தமிழறிஞர்களை துணைகொண்டு, கம்பனின் மூலபாடத்தைத் தெரிவு செய்ய எண்ணற்ற ஏட்டுச் சுவடிகள், பழைய பதிப்புகள் அனைத்தையும் ஆய்ந்து தெளிந்து தேர்ந்து, அனைவர்க்கும் புரியும் வண்ணம் சந்தி பிரித்து ஆறு காண்டங்களையும் 9 சிறுதொகுதிகளாய், ஓவியர் கோபுலுவின் கைவண்ணங்களைச் சேர்த்து மர்ரே நிறுவனத்தாரைக் கொண்டு பதிப்பித்தவர்.

 

மூதறிஞர் இராஜாஜியின் மீது பெரும் மதிப்புக் கொண்ட சா.கணேசன், சுதந்திராக் கட்சி ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். அந்தக் கட்சியின் சார்பில் சா.கணேசன், 1962 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1974 வரை தமிழக மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

 

எல்லா நிலைகளிலும் - "உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே" என்று கண்டு போற்றிய ஆழ்வார் மரபில் அனைத்து நிலைகளிலும் கம்பனையே போற்றி, கம்பனடிக்கே தம்மைத் தந்து கம்பனடிப்பொடியாக நிலைபெற்றிலங்கினார்.

 

கணேசனின் நூற்றாண்டினை, அவர் உருவாக்கி உயர்த்திய கம்பன் கழகம் காரைக்குடியில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி (இன்று) ஞாயிறன்று நிகழ்த்துகின்றது.

 

அவர்தம் அருமை மாணாக்கர் பத்மபூஷண் கணபதி ஸ்தபதி நிறுவிய,

 • கம்பனடிப்பொடி சிலைத்திறப்பு
 • அஞ்சல் தலை வெளியிடல்
 • நிரந்தர நிழற்படக் கண்காட்சி
 • கலைக்களஞ்சியம் வெளியிடல்

உள்ளிட்ட நிகழ்வுகளைத் தக்க சான்றோர்களைக் கொண்டு நிகழ்த்துகின்றது.

 

இராமனைப் பாடிய தியாகய்யர் மரபில், கம்பன் பாடல்கள் ஐந்தினைத் தெரிவு செய்து, பஞ்சரத்ன கீர்த்தனைபோல், "அருட்கவி ஐந்து" எனப் பாடச்செய்த கம்பனடிப்பொடி, 28-7-1982 அன்று கம்பனடி எய்தியபோதிலும், கம்பன் புகழ்பாடும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இலங்குவார் என்பதில் ஐயமில்லை.

 

நன்றி: தமிழ்மணி (தினமணி)

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  December 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
      1  2  3
  4  5  6  7  8  910
11121314151617
18192021222324
25262728293031

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved