Monday 21st of May 2018

கி.வா.ஜகந்நாதன் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 12 June 2009 09:39

 

"வாகீச கலாநிதி" கி.வா.ஜகந்நாதன்

க.துரியானந்தம்

 

தமிழ்த்தாய் எல்லா அணிகலன்களையும் அணிந்து மகிழ்வோடு இருக்கிறாள் என்றால், அதற்குக் காரணம் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்தான்.

 

பல பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் பணியை உ.வே.சா. தனியொரு மனிதராய் இருந்து செய்துள்ளார். அந்த மாபெரும் சான்றோரின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப் பொலிவு பெற்றாள்.

 

கிருஷ்ணராயபுரத்தில் வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி கி.வா.ஜ. பிறந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை சொற்பொழிவு செய்து, கேட்போர் மனம் மகிழச்செய்த கி.வா.ஜ., பிறந்தவுடன் அழவே இல்லையாம். எல்லோரும் கவலை அடைந்து மருத்துவம் செய்து குழந்தையை அழ வைத்தார்களாம். அழாமல் பிறந்த அவர், பின்னாளில் எத்தனையோ பேர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.

 

கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. இவர், அங்குள்ள திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மோகனூரில் சிறு குன்று ஒன்று இருக்கிறது. அதற்குக் "காந்தமலை" என்று பெயர். அக்குன்றில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்முருகப் பெருமானிடத்தில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு உண்டு. அப்பெருமான் மேல் பல பாடல்கள் புனைந்துள்ளார். இரவு, பகல் பாராது எப்போதும் அந்த முருகப்பெருமான் அருகிலேயே இருப்பார்.

 

தன் மேற்படிப்பைத் தொடர கி.வா.ஜ. மீண்டும் கிருஷ்ணராயபுரம் வந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் அவருக்குப் பிறப்பிலேயே இருந்தன. சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார்.

 

பள்ளியில் படிக்கும் சிறு பருவத்திலேயே கவிதை பாடத் தொடங்கியவர் கி.வா.ஜ. கவிதை இலக்கணம் முழுவதுமாகத் தெரிவதற்கு முன்பே கவிதையின் ஓசையை உணர்ந்து பாடும் ஆற்றல், பன்னிரண்டாவது வயதிலேயே அவருக்கு ஏற்பட்டுவிட்டது. கி.வா.ஜ.வின் கன்னி முயற்சியில் உருவானதுதான் நடராஜரைப் பற்றி அவர் எழுதிய "போற்றிப்பத்து" என்னும் பதிகம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றல் பெற்றவர் கி.வா.ஜ. "ஜோதி" என்ற புனைப்பெயரில் அவ்வப்போது கவிமழை பொழிந்தவர். பழமையின் இலக்கண மரபுகளில் ஊறித் திளைத்தவராக இருந்தும், அந்தப் பழமையின் வளத்தையே உரமாக்கிப் புதிய எளிய இனிய உருவங்களில் கவிதைகளைப் பொழிந்திருக்கிறார்.

 

1925ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சென்றார். அங்கே ஐராவத உடையார் என்ற ஜமீன்தார் இருந்தார். அவரது தெய்வ பக்தியும் அறிவாற்றலும் கி.வா.ஜ.வைக் கவர்ந்ததால் அவருடைய நண்பரானார். உடையார் ஒரு தெய்வீக ஆஸ்ரமத்தை அங்கே அமைத்திருந்தார். அந்த ஆஸ்ரமத்திலேயே கி.வா.ஜ. தங்கினார். சேந்தமங்கலத்தில் அவதூத மகான் ஒருவர் இருந்தார். அவரிடம் பக்தி கொண்டு அவரை வணங்குவார். அம்மகானது சீடர் துரியானந்த சுவாமிகளிடம் கி.வா.ஜ. நட்புக் கொண்டிருந்தார்.

 

சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அப்போது அவ்வூரில் இருந்த கிறிஸ்தவ சமயப் போதகர் திரோவர் துரை என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தார். அப்போதும் முருகப்பெருமான் நினைவாகவே இருந்து, பாடல்கள் புனைவார். சேந்தமங்கலத்தில் இருந்த காசி சுவாமிகள் மூலம் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

 

1927ஆம் ஆண்டு உ.வே.சா. சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அதனால் அவர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். உ.வே.சா.விடம் முறையாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற பேரவா நாளுக்கு நாள் கி.வா.ஜ.வுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவரது வேட்கையை நன்கு உணர்ந்திருந்த ஐராவத உடையார் 1927ஆம் ஆண்டு தைப் பூசத்துக்காக வடலூர் புறப்பட்டபோது கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சிதம்பரத்தில் உ.வே.சா.வைக்கண்டு அவரிடம் கி.வா.ஜ.வை ஒப்படைத்தார். அன்று முதல் உ.வே.சா. அமரர் ஆகும் வரை அவரது நிழல் போலவே இருந்தார்.

 

உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியைக் கூறினால், கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். அதில் உ.வே.சா. சில திருத்தங்களைச் செய்வார். அத்திருத்தங்களுடன் கட்டுரையை மிகவும் செம்மையாகவும் சுவையாகவும் எழுதிப் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார் கி.வா.ஜ. உ.வே.சா.வின் பெரும்பாலான உரைநடை நூல்கள் எல்லாம் அவ்வாறு உருவானவையே.

 

கி.வா.ஜ., உ.வே.சா.விடம் தமிழை முறையாகக் கற்றுத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ. உடன் இருப்பார்.

 

1932ஆம் ஆண்டு உ.வே.சா.வின் உதவியால், கலைமகள் பத்திரிகையின் துணையாசிரியர் ஆனார். பிறகு ஆசிரியரானார். கவியரசர் பாரதியாரைப் பற்றிப் பற்பல கட்டுரைகளை "கலைமகள்" இதழில் வெளியிட்டார். அரிய தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவினார். படிப்படியாகக் "கலைமகள்" இதழை வளர்த்து அதை ஒரு தரமான நிலைக்கு உயர்த்தினார் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமும் தான். ஒரு இலட்சிய இதழாசிரியர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் கி.வா.ஜ.

 

கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் விளங்கினார். தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அவருடைய சிறுகதைத் திறனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவருடைய உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் பக்தி உணர்வு அவருடைய சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுத்தோன்றும்.

 

1932ஆம் ஆண்டு அலமேலு என்பவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

 

கி.வா.ஜ.வின் முதல் நூல் காந்தமலை முருகன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். கலைமகள் ஆசிரியர் பணியுடன் தன் ஆசிரியர் உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளுக்கும் வழக்கம் போலவே உதவி செய்து வந்தார்.

 

  • வாகீசகலாநிதி
  • திருமுருகாற்றுப்படை அரசு
  • தமிழ்க்கவி பூஷணம்
  • உபன்யாசகேசரி
  • செந்தமிழ்ச்செல்வர்
  • தமிழ்ப்பெரும்புலவர்
  • திருநெறித்தவமணி

ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் சமயங்களும் வழங்கி அவரைச் சிறப்பித்துள்ளன.

 

உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகும் சோர்வில்லாமல் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். கி.வா.ஜ. சுமார் 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். கோபம் என்பதே வராத குணக்குன்று கி.வா.ஜ. தமிழ் தொடர்பாக யார் எப்போது, எவ்விதமான சந்தேகம் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமலும் சலித்துக் கொள்ளாமலும் அவர்களின் ஐயங்களைத் தீர்ப்பார்.

 

கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும் விளங்கினார். ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் அவர் உருவாக்கிய "தமிழ்க் காப்பியங்கள்" என்னும் நூலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் "கல்கி" நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக அவர் ஆற்றிய "தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் நூலும் அவருடைய ஆய்வுத் திறனுக்குக் கட்டியம் கூறுவனவாகும்.

 

பொதுவாக, எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை; அதேபோல், பேச்சில் வல்லவர்கள் எழுத்தில் வல்லவர்களாக இருப்பதில்லை. கி.வா.ஜ.வோ எழுத்து, பேச்சு ஆகிய இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார். தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் இவரது புகழ் பரவியது. நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். இவ்வுலகில் இருந்து மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்புவரை, மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியதைப் பொருள்படுத்தாமல் பெரியபுராணத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.

 

மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தும் மிக அரிய தமிழ்ப் பணிகள் செய்தும், ஓய்வு என்பதையே அறியாத சான்றோராகிய வாகீச கலாநிதி கி.வா.ஜ. 1988ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். கி.வா.ஜ. என்ற இந்தத் தமிழ்ப் பரம்பரையின் சகாப்தம் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.

 

நன்றி: தமிழ்மணி (தினமணி)

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2012  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
272829    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved