Sunday 14th of February 2016

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு சிதம்பரநாதன் செட்டியார்
சிதம்பரநாதன் செட்டியார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 12 June 2009 09:25

 தமிழ்ச் சொற்களஞ்சியம் கண்ட சிதம்பரநாதன் செட்டியார்

என்.நவநீதகிருஷ்ணராஜா

 

 

தமிழ் எனும் சேயைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த புலவர்களும், அரசர்களும் பலராவர். தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறியச் செய்த உயர்ந்தோர் சிலராவர். அவர்களுள் ஒப்பற்ற ஒருவராயிருந்து செந்தமிழ்க் காவலராய் விளங்கியவர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார்.


கும்பகோணம் இவரைப் பெற்றெடுத்த திருத்தலமாகும். அமிர்தலிங்கம் - பார்வதி அம்மையார் தம்பதிக்கு மகவாக 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தார்.

 

இவர் குடந்தை "நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி"யில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்காக "டாக்டர் ஜி.யு.போப் நினைவு" தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

 

1933ஆம் ஆண்டு முதல் 1935 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் 1943ஆம் ஆண்டு "தமிழ்ச் செய்யுள் வரலாறு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரியவர் என்ற பெருமையையும் பெற்றார்.

 

வடசொல் நீக்கி, செந்தமிழிலேயே பேசவும், எழுதவும் கூடிய ஆற்றலைப் பெற்றதைப் போன்று ஆங்கிலத்திலும் திறன்மிக்கவராகத் திகழ்ந்தார் சிதம்பரநாதன்.

 

சென்னை புதுக்கல்லூரி மற்றும் பாலக்காடு அரசினர் கலைக்கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1948ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராகவும் பொறுப்பேற்றார். தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் முதன் முதலில் துணைவேந்தராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

இவருக்குச் சிலப்பதிகாரமே உயிர் மூச்சாய் அமைந்தது. அந்நூலை மாணவர்களுக்கு அவர் எடுத்தியம்பும் பாங்கே தனி பாண்டித்யம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்களுக்குக் கருத்துரைகளைச் சொல்வதைக் காட்டிலும் ஆய்வு முறையில் அவர்கள் அறிந்து உணருமாறு செய்வதையே கொள்கையாகக் கொண்டார்.

இவர் எழுதிய நூல்கள் ஏராளம். அவற்றுள்;

 

 • தமிழோசை
 • முன்பனிக்காலம்
 • இளங்கோவின் இன்கவி
 • தமிழ் காட்டும் உலகு
 • செங்கோல் வேந்தர்
 • தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
 • கட்டுரைக்கொத்து

ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

 

உலக அரங்கில் தமிழ்க் காப்பியங்களின் சிறப்பினை நிலைநாட்ட ‘An Introduction To Tamil Poetry' என்ற அதி அற்புத நூலையாத்த அருந்தவப் புதல்வர். பேராசிரியர்களே போற்றும் அளவுக்குச் சிறந்த தமிழ்க் காப்பாளர்.

 

1956ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழின் சிறப்பை நன்கு உணர்த்தி, நம் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தார்.

 

1960ஆம் ஆண்டு உருஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார். 1961ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உலக மொழிகளில் விழுமிய தமிழிலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்த விரும்பி, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

 

 • இங்கிலாந்து
 • ஸ்காட்லாந்து
 • பிரான்ஸ்
 • இத்தாலி
 • சுவிட்சர்லாந்து

ஆகிய நாடுகளுக்கும் சென்று தமிழின் சிறப்பைப் பறைசாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க, "ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்" எனும் அரிய நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றினார்.

 

1959ஆம் ஆண்டு முதல் 1965 வரை, ஆறு ஆண்டுகள் அரும்பாடுபட்டார். அதன் பயனாய் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியத்தைத் தமிழுலகுக்கு அர்ப்பணித்தார்.

 

 • தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவராகவும்
 • தமிழகப் புலவர்குழுத் தலைவராகவும்

செயல்பட்டார் சிதம்பரநாதன்.


பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழகச் செனட்டிற்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து அகாதெமிக் கவுன்சிலுக்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே.

 

1964ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் இவரது உரை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்தது. ஆசிரியர் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளைக் களைய இவரது செயல்பாடு பேருதவியாக இருந்தது.

 

இவ்வாறு வேறு பல பொறுப்புகளையும் ஏற்று அந்தந்த காலகட்டங்களில் செய்த அருந்தமிழ்த் தொண்டின் மூலம் முத்திரை பதித்த இவரை தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்" எனும் சிறப்புப் பட்டம் தந்து கெளரவித்தது. இவர் எத்தனையோ கல்லூரிகளில் பணியாற்றினாலும் தம் இறுதிக்காலத்தில் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியின் முதல்வராக 1965ஆம் ஆண்டு முதல் 1967 வரை பணியாற்றியதையே தம் வாழ்வில் கிட்டிய பெரும்பேறாகக் கூறியுள்ளார். மிகச்சிறந்த தமிழ்ச் சான்றோர்களான;

 • வி.கல்யாணசுந்தரனார்
 • மறைமலையடிகள்
 • ஞானியாரடிகள்

போன்றவர்களால் பெரிதும் பாராட்டிப் புகழப்பட்டார்.

 

"கிராமப்புற மக்களே நம் மொழியை இயல்பாகப் பேசித் தமிழைப் பேணி, பாதுகாத்து வருகின்றனர்; நகர்ப்புறங்களில் வாழ்வோர் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் கலந்து பேசுவதையே நாகரிகமாகக் கொண்டுள்ளனர்; இவர்களால் தமிழ் சீரழிந்து வருகிறது என்பது உண்மை," என டாக்டர் சிதம்பரனார் அழுத்தமாகக் கூறியுள்ள கருத்து அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

 

அன்னைத் தமிழை அகிலமெங்கும் பரப்பித் தமிழுலகுக்குப் பெருமை சேர்த்த இவரது மணிவிழா 1967ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவருக்குக் கிடைத்த இத்தகு பெருமைகளைக் காலதேவனால் கூடப் பொறுத்துக் கொள்ள இயலாமல், அதே ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தமிழ் மக்களுக்கு ஆறாத்துயரை அளித்துவிட்டு இவ்வுலகை விட்டே அவரை ஈர்த்துச் சென்றுவிட்டான். அவர்தம் மறைவு தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழ்மொழி ஆகிய அனைத்துக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது தூய தமிழ்த்தொண்டினை என்றும் மறவாது பேணிக் காக்க வேண்டியது தமிழ் நெஞ்சங்களின் தலையாய கடமையாகும்.

 

நன்றி:- தினமணி

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2016  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
  1  2  3  4  5  6  7
  8  91011121314
15161718192021
22232425262728
29      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved