Monday 08th of February 2016

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு யாழ்ப்பாணம் சி.கணேசையர்
யாழ்ப்பாணம் சி.கணேசையர் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 13 June 2009 23:21

 

 

தொல்காப்பிய ஆசான் யாழ்ப்பாணம் சி.கணேசையர்!

பொ.வேல்சாமி

 

 

 

தமிழின் தலைசிறந்த நூல் என்று நாம் கொண்டாடும் தொல்காப்பியம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களே அறியாத நூலாக இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு முழுமையிலும் தொல்காப்பியத்தைப் பாடம் சொல்கிற ஆசிரியர் "வரதப்ப முதலியார்" என்ற ஒருவர் மட்டும் இருந்ததாக சி.வை.தாமோதரம் பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். 

 

1847இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையால் தொல்காப்பியம் -  இளம்பூரணர் உரை

 • மெய்ப்பாட்டியல்
 • உவமையியல்
 • செய்யுளியல்
 • மரபியல்

போன்றவை வெளியிடப்பட்டவுடன் நிறைவடைந்தது.

 

1930களின் பின்னர் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் தொல்காப்பியம் பாடமாக வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இதனைப் பாடம் சொல்வதற்கு ஆசிரியர்கள் பெருமளவில் இடர்ப்பட்டனர். இதற்கு தொல்காப்பியச் சூத்திரங்களை முறைப்படுத்த வேண்டும். உரையாசிரியர்கள் குறிப்பிடும் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் விளக்கங்கள் வேண்டும்.

 

தமிழ்நாட்டில் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி எழுத்ததிகாரத்துக்கும், சொல்லதிகாரத்துக்கும் விளக்கக் குறிப்புகளை எழுதினார். வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் மூல பாடத்தில் பல நல்ல திருத்தங்களைச் செய்துள்ளனர்.

அதே நேரத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து சி.கணேசையர் என்பவர்

 

 • எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை
 • சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை
 • பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் - பேராசிரியர் உரைகளுக்கு

விளக்கக் குறிப்புகளை விரிவாக எழுதினார்.

 

அதே நேரத்தில் சுவடிகளுக்கு இடையேயான பாட வேறுபாடுகளையும் நுட்பமாக ஆராய்ந்து சரியானவற்றைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் கொடுத்தார். இன்றுவரை இந்த விளக்கங்களை விஞ்சக்கூடிய எதனையும் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள "புன்னாலைக்கட்டுவன்" என்ற கிராமத்தில் 1878ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி பிறந்தார் கணேசையர். இவருடைய தந்தை சின்னையர் - தாய் சின்னம்மாள். இவரது பெரிய தந்தை கதிர்காம ஐயர், புன்னாலைக்கட்டுவனில் நடத்தி வந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை தமிழும் வடமொழியும் படித்தார். அத்துடன் ஆறுமுக நாவலரின் சகோதரி மகனாகிய - பெரும்புலவர் பொன்னம்பலம் பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர், கணேசையர் உறவினரும் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமையாளருமாகிய காசிவாசி செந்தில்நாத ஐயர், வடமொழி அறிஞர் பிச்சுவையர் போன்றவர்களிடம் கல்வி பயின்றார். 

 

தமது 21வது வயதில் இருந்து விவேகானந்த வித்தியாசாலை, நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை போன்றவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். இவருடைய 32வது வயதில் அன்னலட்சுமி எனும் அம்மையாரை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர் மணிமேகலை நூல் குறிப்பிடும் மணிபல்லவத்தீவு என்று கருதப்படுகின்ற "நைனார் தீவி"ல் ஆசிரியப் பணி புரிந்தார்.  15ஆம் நூற்றாண்டில், இலங்கை அரச வம்சத்தைச் சேர்ந்த "அரசகேசரி" என்பவர் காளிதாசனுடைய இரகுவம்சம் நூலை 2444 பாடல்களில் மொழிபெயர்த்தார். இந்த நூலின் 1506 பாடல்களுக்கு கணேசையர் உரை எழுதியுள்ளார்.

 

"ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் சரித்திரம்" போன்ற பல நூல்களை எழுதி இருப்பினும் கி.பி.1868, 1885, 1891ஆம் ஆண்டுகளில் சி.வை.தாமோதரம் பிள்ளையால் முதன் முதலாக வெளியிடப்பட்ட தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களுக்கும் கணேசையர் செய்த திருத்தங்களும் விளக்கக் குறிப்புகளும் மிகவும் சிறப்பான பணியாகும். 

இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் "செந்தமிழ்" பத்திரிகையில் 1905ஆம் ஆண்டிலிருந்து இவர் எழுதிய "கம்பராமாயணத்தில் பாட வேறுபாடுகள்" என்ற கட்டுரைத் தொடராக வெளிவந்தது. இது இன்றும் பழந்தமிழ் நூல்களுக்கான செம்மையான பாடங்களை ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகக் கருதத்தக்க சிறப்புடையதாகும்.  1937இல் கணேசையர் தொல்காப்பியக் குறிப்பை வெளியிடுவதற்கு முன்பே,

 • சி.வை.தாமோதரம் பிள்ளை
 • இரா.இராகவையங்கார்
 • கா.நமச்சிவாய முதலியார்
 • வ.உ.சி.யுடன்

இணைந்து,

 • வையாபுரிப் பிள்ளை
 • திரிசிரபுரம் கனகசபைப் பிள்ளையுடன்

இணைந்து மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை முதலிய பல்வேறு அறிஞர்கள் தொல்காப்பியம் மூலபாடத்தையும், சிறுசிறு குறிப்புகளுடனும் பதிப்பித்து வெளியிட்டிருந்தனர்.

 

இத்தகைய அறிஞர்களின் உழைப்பிற்குப் பின்பும் தொல்காப்பியமும் அதன் உரைகளும் மேலும் திருத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தன.

 

இந்நிலையில் "ஈழகேசரி" பத்திரிகையின் அதிபரான நா.பொன்னையா பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை நினைவைப் போற்றும்படியான ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். அதற்கு சி.வை.தாமோதரம் பிள்ளை வெளியிட்ட தொல்காப்பியத்தைத் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செம்மையான பதிப்பாகவும், தேவையான விளக்கங்களுடனும் வெளியிடுவது சிறந்ததாகும் எனக் கருதினார். இந்தப் பணியை சிறப்பாகச் செய்யக்கூடிய அறிஞர் கணேசையரே என்று கருதி, இப்பணியைச் செய்து தருமாறு அவரிடம் வேண்டினார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெகு சிறப்புடன் செய்து முடித்தார் கணேசையர். 

 

தொல்காப்பியப் பொருளதிகாரம், பேராசிரியர் உரையை ஆராய்ச்சி செய்யும்போது இன்னும் பல திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையில், இலங்கை முழுவதிலும் இதற்கான திருத்தமான பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே, கணேசையர் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் டி.கே.இராமானுஜ ஐயங்கார் உதவியுடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிகளைப் பார்த்துத் தம்முடைய குறிப்புகளைத் திருத்தம் செய்துகொண்டார். 

 

கடும் உழைப்புடன் தன் நுண்மையான அறிவைப் பயன்படுத்தி தொல்காப்பிய மூலத்திலும் உரையிலும் கணேசையர் பல திருத்தங்களைச் செய்தார். எடுத்துக்காட்டாக, பேராசிரியர் உரை எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்கள் 300,302,307,313,369,419,448,490,491 போன்றவற்றில் அறிவியல் பூர்வமான பல திருத்தங்களை கணேசையர் செய்துள்ளார். 

 

வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது.

 

தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

 

நன்றி:- தினமணி

Last Updated on Saturday, 13 June 2009 23:37
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2016  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
  1  2  3  4  5  6  7
  8  91011121314
15161718192021
22232425262728
29      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved