Saturday 21st of October 2017

ஜம்புநாதன் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 25 July 2009 20:44

வேதம் தமிழ் செய்த நாதன் (ஜம்புநாதன்)

 

முனைவர் சி.சேதுபதி

 

 


இந்தியத் திருநாட்டின் தொன்மைக்கும் பெருமைக்கும் உறுதுணையானவற்றுள் வேதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் வடமொழியில் அமைந்தவை. வேத ஆராய்ச்சியிலும் வேத மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்ட அறிஞர்கள் பற்பலராவர். அவர்களுள் செங்காவிச் சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர் வேதம் குறித்துப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார்.


""முழுமை நிறைந்த பண்பட்ட இலக்கியம் தொன்மைமிக்க வேதங்களாகும்'' என்பது அவர்தம் கருத்து. "கலைமகளுக்கு வேதம் திருவிழி', "இந்தியத் தாயோ அதனைத் தம் நாவினில் தாங்கியுள்ளாள்' என்று பாரதியார் கருதுகிறார். அதனால்தான், ""வேதத்திருவிழியாள்'' என்று கலைமகளையும், ""நாவினில் வேதமுடையவள்'' என்று இந்தியத் தாயையும் பாடிப்பரவுகிறது அவரது கவியுள்ளம்.


உலகியல் வெளிப்பாடுகளை ஆன்மிகத் தேட்டத்தோடு கவித்துவமாகச் சொல்லிச்செல்லும் வேத இலக்கியத்தின் நுட்பமறிந்த பாரதியார், அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்து "வேதரிஷிகளின் கவிதைகள்' என்று தமிழில் தந்திருக்கிறார் என்பது பலரும் அறிந்த செய்தி. அதேசமயம் கிட்டத்தட்ட, அதே காலகட்டத்தில், நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார் என்பது நாம் பலரும் அறிய வேண்டிய செய்தி.


திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள மணக்கால் என்னும் ஊரில் மணக்கால் இராமசுவாமி அவதானிகள்-இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு 23-ஆம் தேதி பிறந்தார்.


வட இந்தியாவில், மும்பையில் வசித்துவந்த ஜம்புநாதன், தயானந்த சுவாமிகள் மும்பையில் நிறுவிய ஆரிய சமாஜத்தால் ஈர்க்கப்பட்டார். ஜாதி கடந்த சமுதாயத்தைக் காணவும், வேதத்தை விரிவான நோக்கில் விளங்கிக் கொண்டு, உலகினர்க்குச் சிறப்பாக, தமிழர்களுக்கு விளக்கவும் விரும்பிய ஜம்புநாதனுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் சுவாமி தயானந்தர்.


அந்த ஈர்ப்பில்தான் சுவாமிகள் இந்தியில் எழுதிய ஆர்ய சமாஜம் தொடர்பான விளக்கங்கள் நல்கும் "சத்யார்த்த பிரகாசம்' என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், வடமொழி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த ஜம்புநாதன் தம் தாய்மொழியான தமிழைப் பெரிதும் நேசித்தார். அதன் அடையாளங்களுள் ஒன்றுதான் அவர் மும்பையில் வாழும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக முதல் முனிசிபல் தமிழ் தொடக்கப்பள்ளியை நிறுவியது.


இந்தியநாட்டு ஆன்மிகச் செல்வங்களான வேதங்கள் சாதி பேதமின்றி எல்லாத் தமிழர்களையும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நான்கு வேதங்களையும் தமிழில் தந்திருக்கிறார். அவற்றுள் ரிக் வேத மொழிபெயர்ப்புக்காக மட்டும் முப்பது ஆண்டுகள் உழைத்திருக்கிறார். ரிக் வேதத்தின் முதல் பாகம் அவரது மறைவுக்குப் பின் மனைவி சாந்தி ஜம்புநாதனால் வெளியிட்டப்பட்டிருக்கிறது. வேதத்தைத் தமிழ் செய்ததோடு உபநிஷதக் கதைகளையும் தமிழாக்கியிருக்கிறார்.


""அவர் மொழிபெயர்ப்புக்கு உரைநடையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் சமூக அடித்தளத்தில் உள்ளவர்களான தாழ்த்தப்பட்டோர் வேதங்களை அறிய வேண்டும் என்பதுதான். மற்றொன்றையும் நினைவு கூர்வது அவசியமாகும். அவர், மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் மூலத்தை சிதைக்காது எக்கருத்தையும் தம் விருப்பம் போல் சேர்க்காது, குறைக்காது வேதம் கூறுவதை அப்படியே தருகின்றார்'' என்று வேத ஆய்வாளர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.


வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். சென்னையில் "ஜம்புநாத புஸ்தக சாலை' என்னும் பதிப்பகம் அமைத்து அதன்வழி தமது மொழியாக்கங்களை வெளியிட்டிருக்கிறார். வேதம் அனைவருக்கும் பொதுவானது என்று கருதும் சான்றோர்கள் அதனை அனைவரும் அறியும்படி தம்மாலான பணிகளைச் சிறப்புறச் செய்துவந்த அக்காலத்தில், அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்று சேரவேண்டும் என்று கருதியவர் ஜம்புநாதன். தமது "சதபதபிராமணம்' என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார் ஜம்புநாதன். மிகுந்த உணர்வோட்டத்தோடு அவர் எழுதிய கீழ்க்காணும் அர்ப்பண உரை காத்திரமானது; முற்போக்கானது.


""ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்......... இந்நாடு, பூலோகமுழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''
1974-ஆம் ஆண்டுவரை வாழ்ந்த ஜம்புநாதன், தமிழில் 16 நூல்களையும், ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் படைத்தளித்திருக்கிறார். எனினும் இவர் பாரதியார்தம் வேத மொழிபெயர்ப்பான "வேதரிஷிகளின் கவிதைகள்' பற்றி அறிந்தவராகத் தெரியவில்லை என்று குறிப்பிடும் பாரதி ஆய்வாளர் பெ.சு.மணி, இந்த வரலாற்றைச் சிறப்பாகவும் செறிவாகவும் தமது "பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.


சுமார் எழுபத்தி எட்டு ஆண்டுகள் வேதம் தமிழ் செய்யும் வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜம்புநாதன் 1974-ஆம் ஆண்டு உலக வாழ்வை நீத்தார். அவரது தமிழ்த்தொண்டு வரலாற்றுச் சிறப்புக்குரியது.
  மும்பையில் இருந்துகொண்டு தம் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டும், தீண்டாமையை எதிர்த்து ஜாதிக்கும் அப்பால் வேதங்களைக் கொண்டுசெல்ல அவர் மேற்கொண்ட முயற்சியும் சாதாரண விஷயமா என்ன?


"ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தனியொருவராகச் செய்து சாதனையைப் புரிந்துள்ளார் ஜம்புநாதன் என்பது உளந்திறந்து பாராட்டுதலுக்குரியது. அவர் முதன் முயற்சியைத் தொடர்ந்து, வேறு எந்த வேத நெறி பரப்பும் நிறுவனமோ, தனிநபரோ வேத மொழிபெயர்ப்புக்குத் துணியவில்லை என்பதும் ஜம்புநாதனின் அரிய பணிக்குச் சான்றாகும்'' என்று குறிப்பிடும் அறிஞர் பெ.சு.மணியின் பாராட்டுரை முற்றிலும் மெய். வெறும் புகழ்ச்சி இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.


 
நன்றி: தினமணி

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  October 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
3031     

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved