Wednesday 22nd of November 2017

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு மகாவித்துவான் இரா.இராகவையங்கார்
"மகாவித்துவான்" இரா.இராகவையங்கார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 10 August 2009 21:24

"மகாவித்துவான்" இரா.இராகவையங்கார்

வளவ. துரையன்

 

தமிழ்த்தாத்தா உ.வே.சா., தனது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே "மகாவித்துவான்" எனப் போற்றிப் புகழ்வார். அத்தகைய உ.வே.சா.வே, மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்றதோடு, அவ்விழாவில் இரா.இராகவையங்காருக்கு "மகாவித்துவான்" எனப் பட்டமும் அளித்துச் சிறப்பித்துள்ளார்.

 


 
இக்காலத்தில் பேசப்படும் பெண்ணியச் சிந்தனைகளை அன்றே இரா.இராகவையங்கார் தமது, "நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்" எனும் நூலில் விளக்கியுள்ளார். ஆதிமந்தியாரில் தொடங்கி, பூங்கணுத்திரையார் முடிய சங்க காலப் பெண்பாற் புலவர்களின் கல்விச் சிறப்பையும் படைப்பாற்றலையும் அந்நூலில் காணமுடிகிறது.
 
"இராகவையங்கார்" எனும் பெயர் தாங்கிய இரு அறிஞர் பெருமக்கள் தமிழ்த்தொண்டாற்றி உள்ளனர். இவர்களில் இரா.இராகவையங்காரைப் "பெரியவர்" என்றும், மு.இராகவையங்காரைச் "சிறியவர்" (இரா.இராகவையங்காரின் மருமகனார்) என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு.
 
இராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள சிவகங்கை ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த இராமானுஜ அய்யங்கார் - பத்மாசினி அம்மையார் தம்பதிக்கு 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தார்.
 
ஐந்து வயதிலேயே தந்தையை இழந்ததால், இராகவையங்காரை அவரது தாய் மாமன் முத்துசாமி ஐயங்கார் தான் வளர்த்து, கல்வி பயிலச்செய்தார். முத்துசாமி ஐயங்கார் சதாவதானம் புரியும் ஆற்றல் உள்ளவர். மேலும் இவர் சேது சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்துவானாகத் திகழ்ந்தார். இவரது உதவியாலும் சமஸ்தானத்தில் இருந்த புலவர்கள் பலரது பழக்கத்தாலும் இராகவையங்கார் கல்வியறிவு பெற்று, சொல் வன்மையோடு கவிபாடும் ஆற்றலும் கொண்டு திகழ்ந்தார்.
 
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இராகவையங்கார், ஜானகியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று பெண் மக்களும் ஓர் ஆண் மகவும் பிறந்தன.
 
இராகவையங்கார் தமது இளமைப் பருவத்தில், திடீரென ஒருநாள் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திருநெல்வேலி சென்றுவிட்டார். அங்கே ஊற்றுமலை ஜமீன்தாராக இருந்த இருதாலய மருதப்பதேவரைச் சந்தித்தார். அந்த ஜமீன்தாரின் அவையில் தமது கவித்திறமையைக் காட்டிப் பல பரிசில்கள் பெற்றார். பிறகு இராமநாதபுரம் திரும்பிய அவரைக் கண்டு குடும்பத்தார் அனைவரும் மகிழ்ந்தனர்.
 
இராகவையங்கார் தமது இருபதாம் வயதில் திருச்சி சேஷையங்கார் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இப்பள்ளிதான் பிற்காலத்தில் திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியுடன் இணைக்கப்பட்ட பள்ளியாகும். மன்னர் பாஸ்கர சேதுபதி இளம் புலவரான இராகவையங்காரின் திறமையை உணர்ந்து, அவரைத் தமது ஆஸ்தான வித்துவான்களில் ஒருவராக நியமித்தார்.
 
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தொடங்கியபோது இராகவையங்கார் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். பாஸ்கர சேதுபதியின் விருப்பத்திற்கிணங்க இராகவையங்கார் அத்தமிழ்ச் சங்கத்தில் இருந்து கொண்டு நூற்பதிப்பு மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் தலைவராகத் தொண்டாற்றினார். இக்காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் பல இடங்களுக்குச் சென்று பழைய தமிழ் ஓலைச் சுவடிகளைக் கொண்டுவந்து தமிழ்ச் சங்க நூலகத்தில் சேர்த்தார்.
 
1902ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கிய "செந்தமிழ்" எனும் திங்கள் இதழில் முதல் ஆசிரியராகப் பணியேற்று சுமார் இரண்டரை ஆண்டுகள் இராகவையங்கார் பணி புரிந்தார். பிறகு உடல்நலம் குன்றியதால் வள்ளல் மெ.அரு.இராமநாதன் செட்டியார் ஆதரவில் சுமார் ஏழு ஆண்டுகள் தேவகோட்டையில் தங்கி, அங்கு பலருக்குத் தமிழ் பயிற்றுவித்து வந்தார்.
 
இராகவையங்காரிடம் தமிழ் பயின்ற இராஜ இராஜேஸ்வர சேதுபதி 1910ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதியானார். அவர் இராகவையங்காரை அழைத்துத் தம் அவைக்களப் புலவராய் அமர்த்திக்கொண்டார். இங்கு இருபத்தைந்து ஆண்டுகள் தங்கியிருந்து பல நூல்களை இயற்றினார் இராகவையங்கார்.

 

1935ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறை தோற்றுவிக்கப்பட்டபோது இராகவையங்கார் அங்கு முதன்மை ஆராய்ச்சியாளராகப் பதவியேற்று 1941 வரை பல ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கு இலக்கண, இலக்கிய நூல்களைப் பயிற்றுவித்தார்.

 

இராகவையங்கார் பாடிய "பாரிகாதை" எனும் நூலில் கடவுள் வாழ்த்திற்கு அடுத்ததாகத் தம் பெற்றோரைப் போற்றி உள்ளார். இந்நூல்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்நூல் வெளியீட்டில் முதல் நூலாக வெளியிடப்பட்டது. 1937இல் இந்நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து இரண்டாவது வெளியீடாகவும் இவர் எழுதிய "தமிழ் வரலாறு" 1941இல் வெளிவந்தது.
 

  • ஏழு உரைநடை நூல்களும்
  • இரு உரை நூல்களும்
  • ஆறு செய்யுள் நூல்களும்
  • மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும்

எழுதியுள்ளார் இராகவையங்கார்.

 

மேலும்,

  • நான்கு சங்க நூல்கள்
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
  • மூன்று இலக்கண நூல்கள்

போன்றவற்றைப் பதிப்பித்து சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்ந்துள்ளார்.

இதைத்தவிர, வால்மீகி இராமாயணத்தில் சில பகுதிகளையும், இரகுவம்சத்தில் சில சருக்கங்களையும் செய்யுள் நடையில் இராகவையங்கார் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இவை அச்சில் வந்ததாகத் தெரியவில்லை.  இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல "செந்தமிழ்" இதழில் வெளிவந்துள்ளன. மேலும், "தித்தன்", "கோசர்" எனும் புனைபெயர்களில் எழுதப்பட்டுள்ள இருநூல்களும் இவரது கல்வெட்டு ஆராய்ச்சிக்குச் சான்றாக உள்ளன. 
 
பல குழந்தைப் பாடல்களையும் எழுதியுள்ளார் இராகவையங்கார். "சங்கு சக்கரச் சாமி வந்து சிங்கு சிங்குகென ஆடுமாம்" என்று இன்றும் குழந்தைகளுக்காகப் பாடும் பாட்டு இவரால் எழுதப்பட்டதே ஆகும். தமிழ்நாட்டின் பல்வேறு இலக்கியச் சங்கங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுரைகள் நிகழ்த்தி உள்ளார்.
 
தமிழாசிரியராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, மொழிபெயர்ப்பாளராக, பதிப்பாசிரியராக பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்துவந்த மகாவித்துவான் இராகவையங்கார் 1946ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 

  • பரிமேலழகர் உரைவிளக்கம்
  • வஞ்சி மாநகரம்
  • சேதுநாடும் தமிழும்

போன்ற அவரது நூல்கள் தமிழ்கூறும் நல்லுலகில் என்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பது உண்மை.

 

நன்றி:- தினமணி

Last Updated on Monday, 10 August 2009 21:33
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved