Friday 28th of April 2017

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 10 August 2009 21:28

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

பி.தயாளன்

 

ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம்கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்" என்று இவ்வாறெல்லாம் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனால் போற்றிப் புகழ்ந்திட்ட பூந்தமிழ் அறிஞர் கா.அப்பாதுரையார். 

 

 

கா.அப்பாதுரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில், காசிநாதப்பிள்ளை - முத்துலெட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் "நல்லசிவம்" என்பதாகும். தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  இந்தி மொழியில் "விஷாரத்" தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.  திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது, இவரிடம் கல்வி பயின்ற மாணவர் கவிஞர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 வரை பணியாற்றினார். அப்போது, "இந்தியாவின் மொழிச்சிக்கல்" என்ற ஆங்கில நூலை எழுதியதால் தனது வேலையை இழந்தார்.  சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகப் பணி செய்தார். மேலும் தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.  திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் முதலிய இதழ்களில் இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.  அப்பாதுரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டபோது, 1938 - 39ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார். 

 

 • குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
 • தென்னாட்டுப் போர்க்களங்கள்
 • சரித்திரம் பேசுகிறது
 • சென்னை நகர வரலாறு
 • ஐ.நா.வரலாறு
 • கொங்குத் தமிழக வரலாறு

முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

 • திராவிட நாகரிகம்
 • திராவிடப் பண்பு
 • திராவிடப் பாரம்பரியம்
 • திராவிட மொழி

என்பனவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூல்களில் அளித்துள்ளார். 

 

அப்பாதுரையாரின், தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற வரலாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று,

 • போர்க்காரணங்கள்
 • போர்களின் பின்புலங்கள்
 • போர்ச் செயல்கள்
 • போரின் விளைவுகள்
 • போர்களின் வழியாக புலப்படும் அரசியல் நெறிகள்

ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் அந்நூலைப் போற்றுகின்றனர். 

 

தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, "இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்" என்று வியந்து கூறியுள்ளார்! 

 

 • கிருஷ்ண தேவராயர்
 • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
 • டேவிட் லிவிங்ஸ்டன்
 • அரியநாத முதலியார்
 • கலையுலக மன்னன் இரவி வர்மா
 • வின்ஸ்டன் சர்ச்சில்
 • அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
 • அறிவுலக மேதை பெர்னாட்ஷா
 • கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

மற்றும்,

 

 • ஆங்கிலப் புலவர் வரலாறு
 • சங்க காலப் புலவர் வரலாறு
 • அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்

உள்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார்.

மேலும் சங்க காலப் புலவர்களில்,

 • பிசிராந்தையார்
 • கோவூர்கிழார்
 • ஒளவையார்
 • பெருந்தலைச் சாத்தனார்

முதலிய நால்வர் பற்றியும் எழுதியுள்ளார் அப்பாதுரையார். 

 • அலெக்ஸாண்டர்
 • சந்திரகுப்தர்
 • சாணக்கியர்

ஆகிய மூவரைப் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

 

இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார்.

 

திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர். அவரது "திருக்குறள் மணி விளக்க உரை" என்ற தலைப்பில் அமைந்த நூல், ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய "தென்றல்" வார இதழிலும், "அன்னை அருங்குறள்" என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்துள்ளார். திருக்குறள் உரைக்கெனவே "முப்பால் ஒளி" என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார். அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பல மொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு, திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது எனலாம். 

 

"உலக இலக்கியங்கள்" என்ற நூலில்,

 • பிரெஞ்ச்
 • சீனம்
 • உருசியா
 • உருது
 • பாரசீகம்
 • கன்னடம்
 • தெலுங்கு
 • ஜெர்மனி
 • வடமொழி
 • கிரேக்கம்

எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார். 

 • வரலாறு
 • வாழ்க்கை வரலாறு
 • மொழிபெயர்ப்பு
 • இலக்கியத் திறனாய்வு
 • சிறுகதை
 • நாடகம்
 • பொது அறிவு நூல்
 • அகராதி
 • உரைநூல்
 • குழந்தை இலக்கிய நூல்

என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற தமிழறிஞர் அப்பாதுரையார். 

 

இப் பன்மொழிப் புலவர் 1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். எனினும், அவனியை விட்டு என்றென்றும் நீங்காமல் அவரது புகழும், அவரது படைப்புகளும் நின்று விளங்கும்.

 

நன்றி:- தினமணி

Last Updated on Monday, 10 August 2009 21:33
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
       1  2
  3  4  5  6  7  8  9
10111213141516
17181920212223
24252627282930

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved