Saturday 21st of October 2017

உமாமகேசுவரனார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 22 February 2010 20:25

 "தமிழவேள்" உமாமகேசுவரனார்

வளவ.துரையன்


 

பண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் "வேள்" என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர்.  ஒருவர், "வேள்" பாரி மற்றொருவர் "வேள்" "எவ்வி"  சங்க காலத்துக்குப் பிறகு, முதன்முதலாக "வேள்" எனும் பட்டத்தைப் பெற்றவர் தான் உமாமகேசுவரனார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான,

 • வடவாற்றுக்கும்
 • வெண்ணாற்றுக்கும்

இடையில் உள்ள "கருந்திட்டைக்குடி" எனும் கிராமத்தில், 1883ஆம் ஆண்டு மே 7ஆம் நாள் வேம்பப்பிள்ளை - காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

 

வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேசுவரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமானார். எனவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார்.

 

தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேசுவரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். உமாமகேசுவரனாரின் சிற்றன்னை இவரைத் தம் மூத்த மகன் போலவே வளர்த்துவந்தார்.

 

தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.நேர்மையான வழியில் செல்ல விரும்பிய அவருக்கு, அப்பணியில் நீடிக்க விருப்பமில்லை.

 

எனவே, சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர்,  தஞ்சை கே.சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார். தம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார்.

 

இவருக்கு,

 • பஞ்சாபகேசன்
 • மாணிக்கவாசகம்
 • சிங்காரவேலு

என்ற மூன்று பிள்ளைகள்.

 

மூன்றாவது பிள்ளை, பிறந்து நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். தமது மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் உமாமகேசுவரனார். துன்பத்துக்கு மேல் துன்பமாக, அவரது மூத்த மகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார்.  அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தினார்.  அதன் வழியாக ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பொருள் வசதி செய்ய வழிவகுத்தார். உமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர, அவரது வழக்குரைஞர் பணி மிகவும் உதவியாக இருந்தது.

 

தம்மிடம் வரும் கட்சிக்காரர்களிடம் "இவ்வளவு தொகை தர வேண்டும்" எனக் கேட்கமாட்டார்.  பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார்.  இவரது நேர்மையை அறிந்த அன்றைய அரசு, அவரை "அரசு கூடுதல் வழக்குரைஞர்" பணியில் அமர்த்தியது. தஞ்சை வட்டக்கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார்.  அவரது பதவிக்காலத்தில் வரகூர் - அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி - கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன.  மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார்.  இவர் பொறுப்பேற்ற போது நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன.

 

உமாமகேசுவரனார் அந்த எண்ணிக்கையை நூற்று எழுபதாக உயர்த்தினார்.

 

கூட்டுறவு இயக்கத்தில் அவருக்கிருந்த  ஆர்வத்தால், 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள்,  கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார்.  16.2.1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார்.  இதேபோல 1938இல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார்.  இவற்றுக்கெல்லாம் உமாமகேசுவரனாரின் சிறந்த நிர்வாகத் திறனே காரணம். 1911ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் தொடங்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக  உமாமகேசுவரனாரைத் தேர்ந்தெடுத்தனர்.

 

இன்று ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும்.  அன்றே தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம்
சார்பில் 6.10.1916இல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார்.   மேலும், சங்கத்தின் சார்பில் 1928 - 29இல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது.

 

உமாமகேசுவரனார் சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே "தமிழ்ப்பொழில்" என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது.

தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார்.  1915இல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார்.  இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928 - 30இல் "கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்" எனும் கட்டடம் கட்டப்பட்டது.

 

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார்  முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் "தமிழவேள்" பட்டம் வழங்கப்பட்டது.  அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார்  உமாமகேசுவரனார்.

 

துறையூரில் நடைபெற்ற மாவட்டத் தமிழர் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புரை,   நெல்லைப்பாலம் இந்துக் கல்லூரியில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை போன்றவை உமாமகேசுவரனாரின் பேச்சாற்றலை விளக்குவன.  "தமிழ்ப்பொழில்" இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன.

 

இவரது முயற்சியால் தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஓர் இடம் கிடைத்தது.

 

தமிழில் நிறைய கலைச்சொற்கள் உருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட  உமாமகேசுவரனார், தமிழ்ப்பொழில் இதழில் சாமி வேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு,  கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தார். ஞானியாரடிகளின் மணிவிழாவின் போது, "செந்தமிழ்ப் புரவலர்" எனும் பட்டத்தை ஞானியாரடிகள்  அவருக்கு அளித்தார்.

 

சைவ சமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், மற்ற சமயங்களை வெறுக்கவோ,  எதிர்க்கவோ இல்லை.  மாறாக பிற சமயங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளார். தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்தி நிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார்.

 

அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்தி நிகேதனைப் பார்வையிட்டார். பிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார்.

 

அப்போது அவரது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1941ஆம் ஆண்டு மே 9ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 

 • கரந்தைத் தமிழ்ச் சங்கம்
 • இராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி
 • உமாமகேசுவரர் மேல்நிலைப் பள்ளி
 • கரந்தை கலைக் கல்லூரி
 • திக்கற்ற மாணவர் இல்லம்
 • தமிழ்ச் சங்க நூல் நிலையம்
 • படிப்பகம்
 • தமிழ்ப்பெருமன்றம்
 • தமிழ்ப்பொழில் - இதழ்

ஆகியவை அனைத்தும் அவரது நினைவைப் பெருமையுடன் நிலைநிறுத்துகின்றன.

 

நன்றி:- தினமணி

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  October 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
3031     

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved