Friday 28th of April 2017

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு செந்தமிழ் ஆசிரியர் நாராயண ஐயங்கார்
"செந்தமிழ்" ஆசிரியர் நாராயண ஐயங்கார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 25 July 2010 16:00

"செந்தமிழ்" ஆசிரியர் நாராயண ஐயங்கார்

அ.கி.செல்வகணபதி

 

 

தமிழ்மக்கள் வீடுதோறும் தமிழ்க்கல்வி நலத்தை நுகரும்படி செய்த பெருமை "செந்தமிழ்" ஆசிரியராக விளங்கிய நாராயண ஐயங்காருக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.

"செந்தமிழ்" இதழில்

 

 • தமிழியல்பும்
 • இலக்கணமும்
 • இலக்கியமும்
 • தருக்கமும்
 • ஜோதிடமும்
 • பழைய வரலாறும்
 • சமயக்கொள்கைகளும்

பிறவும் பற்றி வெளியிட்ட ஆராய்ச்சி முறையும், வாதமுறையும்


பயின்ற கட்டுரைகள் ஐம்பதுக்கும் மேல் உள்ளன.

இவை தவிர, செந்தமிழ் இதழில் தொடர் கட்டுரைகளாக எழுதி, நூல் வடிவம் பெறாமலிருந்தவை,

 

 • வான்மீகரும் தமிழும்
 • நியாயப்பிரவேச மணிமேகலை
 • பரதாழ் வைபவம்
 • வஞ்சி மாநகராய்ச்சி


முதலியவை.

 

மேலும் வாதமுறையில் இவர் எழுதிய கட்டுரைகளிலிருந்து இவரது

 

 • பல்கலைத் தேர்ச்சியும்
 • நடுநிலை பிறழாத வாத நேர்மையும்
 • உண்மையை அஞ்சாது எடுத்துரைக்கும் மனவலிமையும்
 • தோல்விகளைப் பொருட்படுத்தாது உண்மை காண முயலும் உயர்வும்
 • வாதப் பொருளை விட்டு எதிரிகளை வசைபாடாத மாண்பும்


இவரது உயர் குணங்கள்.

 

1861ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தென் கிழக்கே உள்ள எதிர்க்கோட்டை என்ற சிற்றூரில், கோ.அப்பனைய்யங்கார் -


செங்கமலவல்லி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

 

இவரது தந்தை, கோ.அப்பனையங்கார், கிராம அதிகாரியாய் இருந்தவர். மாடபூசி என்னும் குடியில் பிறந்தவர்.

 

"மாடபூசி" என்பது திருக்கோயில்களைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் குடியிருந்து, இறைவனுக்குத் தொண்டு செய்ததால் கிடைத்த பெயர் என்று ஆன்றோர் கூறுவர்.

 

அன்றியும் இறைவனை தம் இதயமாகிய மாடத்தில் இருத்தி, அவனை எப்போதும் பூசித்தமையால் பெற்ற பெயர் என்றும், ஆந்திரத்தில் முன்பு "மாடசி"  என்னும் சிற்றூர் இருந்தது.

 

வெளிநாட்டுப் படையெடுப்பின் போது அங்கிருந்து குடிபெயர்ந்து காஞ்சிபுரத்தில் குடியேறியவர்கள் "மாடபூசியார்" என்றும் கூறுவாருமுளர்.

 

அப்பனையங்காருக்கு ஆண்மக்கள் நால்வர். நாராயண ஐங்கார் இரண்டாம் மகனாவார். தந்தையாரின் கிராம அதிகாரி பணியில் அவருக்கு உதவி புரிந்து செயல்முறைகளைக் கற்றறிந்தார்.

 

இளமை முதலே அறிவுத்தாகம் மிகுந்தவராயிருந்த நாராயண ஐயங்கார் தம் தந்தையிடமும், தாயிடமும் பேசத் தொடங்கிய நாள் முதலே, காணும் பொருள்கள், மக்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.

 

தமது இளமைப் பருவத்தில் தம்முடைய ஊரிலும், சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இருந்த தமிழ், வடமொழிப் புலவர்களிடத்திலும் சில நூல்களைப் பயின்றார்.

 

அந்த ஆசிரியர்கள் கூறும் தெளிவுரைகளைக் கூர்ந்து கவனித்து, தமக்கு ஏற்பட்ட ஐயங்களை மிக்க மரியாதையோடு ஆசிரியர்களிடம் தெரிவித்து, அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வது இவர் வழக்கம்.இவருடைய பணிவு, அடக்கம், உண்மை பேணும்தன்மை ஆகிய நற்பண்புகள் நாளும் வளர்ந்து வருவதைக் கண்டு ஆசிரியர்கள் இவருக்கு மிக்க மகிழ்ச்சியுடன் பாடங்களைக் கற்பிப்பாராயினர்.

 

உள்ளூர் ஆசிரியர் மூலமாகத் தம்முடைய அறிவு தாகம்  தீரவில்லை. எனவே, நாராயணர் மதுரை சென்று தமது தகப்பனார் வீட்டில் தங்கி மேலும் கல்வி பயில விரும்பினார்.அன்றியும் அச்சமயம், வான்பொய்த்ததால் ஊரில் கிணறுகளும் வற்றின. விவசாயமும் செய்ய இயலவில்லை. எனவே, தாம் பிறந்து வளர்ந்த எதிர்க்கோட்டையை விட்டு நீங்கிச் சென்றார்.

 

மதுரையிலும் நிலைமை திருப்தியில்லாததால் இராமநாதபுரம் சென்றார். அந்நாளில் இராமநாதபுரம் ஆட்சியை கவனித்து வந்த பொன்னுசாமித் தேவரின் புகழ் நாடெங்கிலும் பரவியிருந்தது.

 

புலவர்களை ஆதரித்த பெரும் புலவராக அவர் விளங்கினார்.பந்தல்குடி வேங்கடாசாரியாரிடம் வடமொழி நூல்களையும், இலக்கண நூல்களையும் ஐயமின்றி கற்றார்.

 

சித்தாத்திக்காடு ஸ்ரீநிவாசாசாரியாரிடம் திவ்யப்பிரபந்தம் முதலிய வைணவ சமய நூல்களையும்,சாமாசாரியாரிடம் தருக்க சாத்திர நூல்களையும் கற்றார்.

 

சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து பல நூல்களைக் கற்றறிந்தார்.

இவருடைய நற்பண்புகளையும், நூல்களைக் கற்றறியும் திறமையையும் கண்ட முத்துசாமி ஐயங்காரும், அவர் தம் துணைவியாரும் நாராயணர் மீது மிகவும் பரிவு காட்டினர்.

சைவ சமய நூல்களான,

 

 • சிவஞானபோதம்
 • சிவஞான சித்தியார்
 • தேவாரம்
 • திருவாசகம்


முதலிய நூல்களைத் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த பழனிக்குமாரத் தம்பிரானிடமும் கேட்டறிந்தார்.

 

முத்துசாமி ஐயங்காரிடம் ஒருசாலை மாணாக்கராக, நாராயணரும், பாண்டித்துரையாரும் இருந்தது அவர்களிடையே ஏற்பட்ட புலவர் - புரவலர்  உறவு வெகு நெருக்கமாகப் பிற்காலத்தில் தொடர வழிசெய்தது. இவருடைய மதிநுட்பத்தையும், இருமொழிப் புலமையையும், மந்திரம், ஜோதிடம், மருத்துவம், தருக்கம் முதலிய பல்கலை அறிவையும் கண்ட  பாண்டித்துரைத் தேவர், அவரைத் தம் அவைப் புலவராக மனமுவந்து நியமித்துக்கொண்டார்.இறையருள் நிறைந்து விளங்கிய பாண்டித்துரைத் தேவர் இல்லம் புலவர்கூடும் பொதுவிடமாகவும் திகழ்ந்தது.

 

இவ்வாறு புலவர் குழாத்துடன், தேவர் ஒரு நாள் உரையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு வடமொழிப் புலவர் வந்து, வடமொழி சுலோகம் ஒன்றைக் கூறி  அதன் பொருள் நயத்தையும், பா நயத்தையும் பாராட்டிப் பேசினார்.

 

அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த நாராயண ஐயங்கார், அந்த சுலோகத்தின் கருத்தும், நயமும் மேலும் சிறந்து விளங்கும்படி ஒரு  வெண்பாவைப் பாடி முடித்தார்.

 

அதைப் பாராட்டிய பாண்டித்துரைத் தேவர், நாராயணரின் மொழிபெயர்ப்பு ஆற்றலையும், கவிபாடும் திறமையையும் வெகுவாகப் பாராட்டி, அந்தச் சுலோகத்தை உள்ளடக்கிய வடமொழியில் சிறந்த ஜோதிட நூலாகிய "ஜாதகசந்திரிகை"யை இனிய தமிழ் வெண்பாவில் மொழி பெயர்த்து உதவுமாறு
வேண்டினார்.

 

அவ்வாறே நாராயண ஐயங்காரும் செய்ய, அந்நூலின் அருமை பெருமைகளை நன்கறிந்த தேவர், பெரும் புலவர்கள் நிறைந்த அவைக் களத்தில் அரங்கேற்றுவித்து, நாராயண ஐயங்காரைப் பெரிதும் பாராட்டிப் பரிசுகள் வழங்கி, அந்நூலை யாவரும் பயிலுமாறும், எளிதில் பெறுமாறும் அச்சிட்டு
வெளியிட்டார். நாராயண ஐயங்கார் எழுதி, வெளியிட்ட முதல் நூலும் இதுவேயாகும்.

 

1897ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் சேதுவேந்தர் பாஸ்கரராலும் மற்றும் பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

 

பின்னர் தேவர் பதிப்பித்து வெளியிட்ட "பன்னூற்றிரட்டு" (பன்னூல் திரட்டு) என்னும் நூல் வெளிவர மிகவும் உதவியாக இருந்தவர் நாராயண ஐயங்கார்.

 

செந்தமிழின் உதவியாசிரியராகவும் பிறகு அதன் ஆசிரியராகவும் இருந்த பேரா.மு.இராகவையங்காருக்கு, நாராயணரின் பணியை உடனிருந்து காணும் வாய்ப்புக் கிடைத்தது. 

 

அவர் தம்முடைய நூலில், "நூற்றுக்கணக்கான மாணவருக்குத் தமிழறிவூட்டி அக்கல்வித் துறையைப் பரவச் செய்து, தமிழக குலபதியாக விளங்கியவர்."  என்று கூறியுள்ளார்.

 

உ.வே.சாமிநாதையர் எண்பதாம் ஆண்டு விழாவில் அவருடைய சுயசரிதையை எழுதவேண்டுமென்று நாராயண ஐயங்கார் விடுத்த வேண்டுகோளே,  அவர் "என் சரிதை" எனத் தலைப்பிட்டு தம்முடைய சுயசரிதையை எழுதத்தூண்டியது.

 

1910ஆம் ஆண்டு முதல் தம் மறைவு வரை செந்தமிழாசிரியர் பணியை செவ்வனே நடத்தினார்.

"நாராயண ஐயங்கார், வடமொழி, தென்மொழி, நூல்களில் வல்லவர். ஒழுக்கம், அடக்கம் முதலிய உயர் குணங்களும் சிறக்கப்பெற்றவர். 

 

இப்பெரியார் தாம் ஐயமறப் படித்தது போலவே, தம்மிடம் தமிழ்க் கல்விபயின்ற மாணவர்களுக்கும் ஐயமறக் கல்வி புகட்டினார்.

 

மந்தபுத்தியுள்ள மாணவர்களுக்கும் எளிதில் விளங்குமாறு உலக நடைமுறைகளை எடுத்துக்காட்டிப் பொருள் விளங்கவைக்கும் திறம் இவரிடம் சிறந்து காணப்பட்டது.

 

இவரிடம் கல்விபயின்ற அனைவரும் இதனையே சொல்லிச் சொல்லி மகிழ்வது வழக்கம்.

பல்கலைகளிலும், பெருநூல்களிலும் வல்லவராய் இருந்த காரணத்தால், ஜோதிடம், மருத்துவம், இசை, நடனம் முதலிய பிற கலைச் செய்திகளை மிகத் தெளிவாக விளக்கி மாணவர்களுக்கு வியப்பையும், தம்பால் மதிப்பையும்  உண்டாக்கிக் கொண்டார். நாராயண ஐயங்கார் இங்ஙனம் தாம்
ஏற்றுக்கொண்ட ஆசிரியப் பணியைத் தம் இறுதி நாள் வரை சற்றேறத்தாழ நாற்பத்தாறு ஆண்டுகள் பொறுமையுடனும் புகழுடனும் ஆற்றிவந்தார்"  என்று இராசமாணிக்கனார் தமது நூலில் குறிப்பிடுகிறார்.

 

தமது பணியைத் திறம்பட செய்து கொண்டிருந்த நாராயண ஐயங்கார், 1947ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி காலமானார்.

 

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
       1  2
  3  4  5  6  7  8  9
10111213141516
17181920212223
24252627282930

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved