Tuesday 22nd of May 2018

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர்
"இலக்கணக் கடல்" தி.வே.கோபாலையர் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 25 July 2010 16:18

"இலக்கணக் கடல்" தி.வே.கோபாலையர்

செந்தலை ந.கவுதமன்

 

 

பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஒருவேளை அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை - தி.வே.கோபாலையர் இருந்தால் போதும்! அவர் நினைவிலிருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்.

 

தமிழறிஞர் பலரும் இப்படி ஒருமுகமாய் போற்றுமளவுக்கு "மாந்தக்கணினி"யாகத் தமிழுலகை வலம் வந்தவர் தி.வே.கோபாலையர்.

 

ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், புலமையாளர், ஆய்வாளர், பன்மொழிப்புலவர் எனப் பல நிலையிலும் தம்மையும் தம் புலமையின் ஆளுமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர்.

 

மன்னார்குடியில், 1925ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வேங்கடராமய்யர் - இலக்குமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் ஆறுபேர். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர்.

 

அரசுப் பணியில் எழுத்தராக இருந்தவரின் மூத்த மகனாகப் பிறந்த இவர், திருவையாறு அரசர் கல்லூரியில் நான்காண்டுகள் பயின்று, 1945இல் புலவர் பட்டக் கல்விகற்று மாநில அளவில் முதல் மாணவராகத் தேறினார். 1951இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டமும் 1958இல் ஆனர்சு பட்டமும் பெற்ற இவர், இரண்டிலும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்க "பண்டிதர்" தேர்வை 1953இல் எழுதி, அதிலும் முதல் மாணவராகத் திகழ்ந்தார்.

 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், திருக்காட்டுப்பள்ளி சிவகாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றிய தி.வே.கோபாலையர், 1963இல் புலவர் கல்வியை முதன்முதலில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் ஆனார். இவரைப் பொறுத்தவரை ஆசிரியர், பேராசிரியர், முதல்வர் எல்லாப் பதவியும் ஒன்றுதான்.

 

மரபுவழித் தமிழாசிரியர்களில் இவரே கடைசித் தலைமுறை!

 

குருகுலக் கல்வி போலத்தான் இவர் வகுப்பறை இருக்கும். வலுவான தமிழறிவும் ஆர்வமும் உள்ளோர் மாணாக்கர்களாய்க் கிடைத்துவிட்டால், கால எல்லை பாராமல் கற்பித்துக்கொண்டே இருப்பார். முடியில்லாத தலையை அவ்வப்போது இடக்கையால் தடவி விட்டுக்கொள்வார். அடுத்தநொடி தமிழ் வெள்ளமாய் இவர் நாவிலிருந்து பாய்ந்து வரும்.

 

"என்ன பாடம்?" என்று கேட்டபடி வகுப்பறைக்குள் நுழைவார். நூலின் பெயரைச் சொல்வோம்.

"எந்தப் பகுதி?" என்பார். நினைவூட்டுவோம்.

 

ஒருகாலைக் குத்துக்கால் இட்டபடி நாற்காலியில் அமர்ந்து கொள்வார். புத்தகத்தைத் தொடமாட்டார்.

பக்கம் பக்கமாய் புத்தகம் இவர் மனக்கண்ணில் விரிந்து நகர்ந்தபடி இருக்கும்.

 

தொல்காப்பியம், சங்க இலக்கியம் என எதைக் கற்பித்தாலும் வரிமாறாமல் தொடர்ந்து சொல்லும் ஆற்றல் பெற்றவர். வயது வேறுபாடின்றி எல்லாச் செய்திகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார்.

 

தொல்காப்பிய உரைகள் அனைத்தும் இவர் நாவிலிருந்து தொடர்ச்சியாய் வந்து விழும். நச்சினார்க்கினியர் மீது மட்டும் இவருக்குத் தனிப்பற்று உண்டு.

 

"கராத்தின் வெய்யது தோள்" எனத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வருகிறதே! எனக்கே புரியவில்லை.

 

மாணவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? என்று உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் இவரிடம் ஐயம் கேட்பார்கள்.

 

ஐயம் எழுப்பிய பேராசிரியரை அமைதியாய் உற்றுப் பார்த்தபடி தி.வே.கோபாலையர், "கராத்தின்" என்பது பிழை. "காரத்தின்" என்பதே சரி. புண்ஆற சித்த மருத்துவத்தில் காரத் துணிதானே வைப்பார்கள்! "திணைமாலை நூற்றைம்பது" என்ற நூலில் உள்ள வரி அது. ஏடெழுதுவார் செய்த பிழையால் "கராத்தின்" என இன்றும் பிழையாகப் பதிப்பிக்கப்படுகிறது என்று கூறுவார்.

 

எந்த ஐயம் எழுப்பப்பட்டாலும் எளிதாகக் கடந்து செல்வார். ஆராய்ச்சித் துளிகளை வெகு எளிதாக பேச்சில் வீசியபடி இருப்பார். "நின்" என்பதற்குப் பன்மை "நீம்". சீவகசிந்தாமணியில் மட்டும்தான் அதற்குச் சான்று உள்ளது. "நீமே வென்றி" என்ற பாடலை இசையோடு பாடிக்காட்டுவார்.

 

சீவகசிந்தாமணி மற்றும் கம்பராமாயணம் முழு நூலையும் இவர் வாய்மொழியாகவே பாடல்களை வரிசை மாறாமல் பாடுவார். தொல்காப்பிய நூற்பாக்களை உரையாசிரியர் அனைவரின் உரைகளோடும் சேர்த்தே கூறுவார்.

 

தமிழோடு ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி முதலிய நூல்களையும் படித்தபடி இருப்பார். தேவைப்பட்டால் மட்டுமே வகுப்பில் அவற்றை அரிதாகத் தொட்டுக்காட்டுவார். பெரும்புலவர் என்ற நினைப்போ, முதல்வர் என்ற ஆரவாரமோ இல்லாமல் எப்போதும் எங்கும் நடந்தேதான் செல்வார். எதிர்ப்படும் மாணவர்களிடம் இயல்பாகப் பேசிப்பழகும் குணமுடையவர்.

 

இவர் முதல்வராய்ப் பணியாற்றிய திருவையாறு அரசர் கல்லூரியில் இருமுறை இவரை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இருமுறையும் இவர் பணி நீக்கத்துக்கு ஆளானார். நிறைகுடமாகத் திகழ்ந்த இவர், நிம்மதியாக ஆசிரியப் பணியாற்றிய காலம் மிகவும் குறைவுதான்!

 

 இரண்டாம் முறை பணிநீக்கத்துக்கு ஆளானபோது, கல்லூரிப் பணியையே இவர் கை கழுவினார். புதுவை பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தில் 1979இல் ஆய்வாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கி, தமது 82ஆம் வயது வரை நிம்மதியாக அங்கேயே பணியைத் தொடர்ந்தார்.

 

பின்னர், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இலக்கண நூல் பதிப்பாசிரியர் ஆனார். நன்னூல் பதிப்பின் வழியாக 1835இல் தொடங்கிய தமிழ் இலக்கணப் பதிப்பு மரபை, 1970க்குப் பின் வளப்படுத்தும் வாய்ப்பை தி.வே.கோபாலையர் பெற்றார்.

 

இலக்கண விளக்கம் (1972), இலக்கணக் கொத்து (1973), பிரயோக விளக்கம் (1973) முதலான நூல்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு நூலைப் பதிப்பிக்கும் முன்பும் அதன் ஓலைச்சுவடிகளையும், அச்சு நூல்களையும் ஒன்றுதிரட்டி ஒப்புநோக்கி, அதில் தமக்குச் சரி எனப்படுவதை மட்டும் மூலமாக வைப்பது இவரின் பதிப்பு முறை.

 

தமிழ், வடமொழி இருமரபிலும் தேர்ந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்த காரணத்தால், இலக்கண உலகில் செம்பதிப்புகளையும், பயன்பாட்டுப் பதிப்புகளையும் உருவாக்கிய மிகச்சிறந்த பதிப்பாசிரியராக தி.வே.கோபாலையரால் புகழ்பெற முடிந்தது. இவரது வாழ்நாள் சாதனையாகத் திகழ்வது, சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட (24.10.2005) "தமிழ் இலக்கணப் பேரகராதி" பதினேழு தொகுப்புகள்தான்.

 

இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொல்காப்பியம் செம்பதிப்பு - 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. கம்பராமாயணம் தொடர்பாக ஏழு நூல்களை எழுதியுள்ளார். மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புக்கும், சேனாவரையம் பிரெஞ்சு மொழி பெயர்ப்புக்கும், "சோழர் கலைப்பணி" ஆங்கில நூலின் தமிழாக்கத்துக்கும் இவரின் பன்மொழிப் புலமை பயன்பட்டுள்ளது.

 

புதுவையில் வாழ்ந்த தி.வே.கோபாலையர், 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி காலமானார்.

இலக்கண ஐயம் எழும்போதெல்லாம், தி.வே.கோபாலையர் பெயரும் சேர்ந்தே எழும் சூழல், இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரும்.

 

நன்றி:- தினமணி

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved