Monday 19th of March 2018

த.நா.குமாரஸ்வாமி PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 25 July 2010 17:12

"குன்றின் மேலிட்ட தீபம்" த.நா.குமாரஸ்வாமி

கலைமாமணி விக்கிரமன்

 

தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும், பண்டைய இலக்கியங்களுக்கு ஈடாக மகாகவி பாரதியின் வழியில் புத்திலக்கியம் படைத்த எழுத்தாளர்கள் பலர்.

 

அவர்களுள், த.நா.குமாரஸ்வாமியைத் தமிழ் படைப்பிலக்கிய உலகம் என்றும் மறக்காது.

 

சென்னையில், 1907ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் தேதி தண்டலம் நாராயணஸ்வாமி ஐயர் - இராஜம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

 

 

60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மக்கள் விரும்பிப் படிக்கக்கூடிய அந்தக் கால மதிப்புப்படி மூவாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்க விரும்பினால், தகுதியுள்ள புத்தகங்கள் கிடைக்காது.

 

படிக்கக் கிடைத்தவையும் பெரிய எழுத்து

 

 • விக்கிரமாதித்தன் கதை
 • மதன காமராஜன் கதை
 • தேசிங்குராஜன் கதை

இப்படியாக இருக்கும்.

 

 • ஆரணி குப்புசாமி முதலியாரும்
 • வடுவூர் துரைசாமி அய்யங்காரும்
 • ஜே.ஆர்.ரங்கராஜுவும்

துப்பறியும் கதைகள் பல எழுதி, படிக்கும் ஆர்வம் உள்ளவர்களின் பசியை ஓரளவு தீர்த்தனர்.

அந்தக் காலகட்டத்தில் இந்தி, வங்க மொழியிலிருந்து நல்ல நூல்கள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

 

 • பக்கிம் சந்திரர்
 • சரத் சந்திரர்
 • பிரேம் சந்த்

ஆகியோர் வங்க - இந்தி மொழியில் எழுதிய புதினங்களை தமிழில் மொழிபெயர்த்துப் புகழ் பெற்றவர் - அந்த நாவலாசிரியர்களைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் - த.நா.குமாரஸ்வாமி.

 

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்க மக்களுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் இடையே நடந்த போராட்டத்தை விளக்கும் கதை "ஆனந்த மடம்".

 

அந்த நாவலில்தான் "வந்தே மாதரம்" என்னும் பாடல் புனையப்பட்டு போராட்டக்காரர்களால் பாடப்பட்டது.

 

இந்தப் பாடல்தான் பாரத நாட்டில் தேசபக்திப் பாடலாக மதிக்கப்படுகிறது.

 

த.நா.குமாரஸ்வாமி "ஆனந்த மடம்" நாவலை மொழிபெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களுள் சிறந்தது அது.

 

பக்கிம் சந்திரர், சரத்சந்திரர், தாராசந்தர் பானர்ஜி போன்ற பிரபல நாவலாசிரியர்களின் நாவல்களைத் தவிர இரவீந்திரநாத் தாகூரின் 29 நாவல்களை த.நா.கு. மொழிபெயர்த்துள்ளார்.

 

த.நா.கு. தமிழில் எழுதத் தொடங்கி, தனது இருபத்தேழாவது வயதிலேயே சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்.

 

1934ஆம் ஆண்டு த.நா.கு. எழுதிய "கன்னியாகுமரி" என்கிற முதல் கதை "தினமணி"யில் பிரசுரமானது.

அந்தச் சிறுகதைக்கு ஏற்பட்ட வரவேற்பைக் கவனித்த "ஆனந்த விகடன்" பொறுப்பாசிரியராக இருந்த "கல்கி", ஆனந்த விகடனில் "இராமராயன் கோயில்", "ஸ்ரீசைலம்" போன்ற கதைகளை எழுத வைத்து த.நா.கு.வின் பெருமையைத் தமிழகம் அறிய வழி செய்தார்.

 

த.நா.கு. வரலாற்று அடிப்படையில் சிறுகதைகள் பல எழுதினார்; என்றாலும் அவருக்குப் புகழ் தேடித்தந்த கதை "இராமராயன் கோயில்" என்ற சிறுகதையே.

 

பல மொழிகளை த.நா.கு. கற்கவும், எழுத்துத் துறையில் பிரகாசிக்கவும் உற்சாகப்படுத்தியவர் அவருடைய தந்தை தண்டலம் நாராயணஸ்வாமி ஐயர்.

 

அவர் சம்ஸ்கிருதத்தில் பெரும் புலமை பெற்றிருந்தார்.

 

அவர் எழுதிய "போஜ சாத்திரம்" என்ற நாடகம் கற்றவர்களாலும், மற்றவர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

அறிவு மேதையான அவர், தன் புதல்வர் குமாரஸ்வாமியையும் பல மொழிகள் கற்க ஊக்கமூட்டி எழுத்துப் பணியில் சிறக்க மிகவும் உதவினார்.

 

1930இல் வங்கம் சென்று, சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். தான் தமிழாக்கம் செய்த தாகூரின் சில கவிதைகளையும் அவருக்குப் படித்துக் காட்டினார். தாகூரின் பரிபூரண ஆசி பெற்றார். இந்தச் சந்திப்பு வங்கத்துக்கும் - தமிழுக்கும் இடையே ஏற்பட்ட இலக்கியப் பாலத்தின் அடித்தளம்.

 

1962இல் ரஷ்யப் பயணம் மேற்கொண்டார். ரஷ்ய பாலே நடனத்தைப் பற்றிய அவருடைய கட்டுரை எளிய தமிழில் அந்த நடனக் கலையை நாம் அறியச் செய்தது. ரஷ்யா செல்வதற்கு ரஷ்ய மொழியைச் செவ்வனே கற்றார்.

 

கெளதம புத்தரின் வாழ்க்கை தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள், மேற்கோள்களை பாலி மொழியிலிருந்து மொழியாக்கம் செய்வதற்கு முன், பாலி மொழியை ஆழ்ந்து படித்தார். எழும்பூர் கென்னட் சந்தில் உள்ள  பெளத்த மடாலயத்துக்கு அவ்வப்போது சென்று வருவார்.

 

பல்லவர்களைப் பற்றியும், பல்லவ மன்னன் மகேந்திர வர்மனைப் பற்றியும் சிறந்த கருத்துகளைத் தெளிவாக வெளியிடக் காரணம், அவருடைய சம்ஸ்கிருத அறிவே.

 

சங்க இலக்கியத்துடன் பண்டைய இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை உடையவர். அதனால்தான் த.நா.கு.வால் நல்ல தமிழில், பண்புமிக்க புதினங்களைப் படைக்க முடிந்தது.

 

த.நா.கு. தான் பிறந்த மண், வளர்ந்த மண்ணின் மணம் வீசச் செய்யும் பல புதினங்களை எழுதியுள்ளார்.

காஞ்சிபுரம், வேலூர் முதலிய மாவட்ட மக்கள், நகரம், கிராமம், வாழ்க்கை ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்ததால்

 

 • "வீட்டுப் புறா"
 • "ஒட்டுச் செடி"
 • "கானல் நீர்"

போன்ற நாவல்களில் கிராம மண் கமழ்வதைக் காணலாம்.

 

த.நா.கு.வின் இலக்கியத் தாகத்துக்கும், புரட்சிகரமான சீர்திருத்த எண்ணங்களுக்கும் அவர் எழுதிய "ஒட்டுச் செடி" ஓர் எடுத்துக்காட்டு.

 

"ஒரு மொழியின் இலக்கியத்தில் புதிய கருத்துகள், புதிய உவமைகள், புதிய சொற்கள் புகுவதனாலேயே அம்மொழி வளர்ச்சியும் செழுமையும் பெறுகிறது. ஒரே ஒரு வழியுடைய அறையில் இருந்தால் புழுங்கித்தான் போக வேண்டும். சுற்றுப்புறத்தில் சாளரங்கள் இருந்தால்தான் நல்லன உள்ளே புகவும், நம்மைப் பற்றி பிறர் அறியவும் வழி ஏற்படும்''

என்ற கொள்கையை வற்புறுத்தும்த.நா.குமாரஸ்வாமி, அந்தக் கொள்கையைத் தாமும் கடைப்பிடித்தார்.

 

பல்கலை விற்பன்னரான த.நா.கு., கைநீட்டிச் சம்பளம் வாங்கும் பணியில் சேராமல், முழுநேர இலக்கியத் தொண்டிலேயே இறுதி வரையில் இலக்கிய யாத்திரையை ஒழுங்காகச் செய்தார்.

 

1947 - 48ஆம் ஆண்டுகளில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி சில மாதங்கள் நடத்தினார்.

 

இதழ் நடத்துவதால் இழப்பு அதிகமாகும் என்பதை அறிந்தவுடன் நிறுத்தி விட்டார்.

 

காந்தியின் நூல்களைத் தமிழ்ப்படுத்தும் குழுவில் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டு, முதல் தொகுதி தயாராகும் வரையில் தம் கடமையைச் செவ்வனே செய்தார்.

 

பிறகு அக்குழுவின் தலைவருக்கும் அவருக்கும் குஜராத்தி சொல்லொன்றைத் தமிழாக்கம் செய்வதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகினார்.

 

"கருத்துகள் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் அதிகாரம்தான் நமக்கு உண்டே ஒழிய, நம் மனம் போனபடி மொழிபெயர்க்கும் உரிமை நமக்குக் கிடையாது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே ஐநூறு ரூபாய் ஊதியம் தந்த அந்தப் பணியை விட்டுவிட்டேன்''

என்று தன் நாள் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் த.நா.கு.

 

பல மேதைகளின் தொடர்பு அவருக்குண்டு.

 

"ஆனந்த விகடன்" பொறுப்பாசிரியர் தேவன், அவருடைய புரட்சிகரமான புதினங்களைத் தொடராக வெளியிட்டுள்ளார்.

 

ஓவியர் கோபுலுவின் சித்திரங்கள் "ஒட்டுச்செடி" புதினத்தை வாசகர்கள் விரும்பிப் படிக்கத் தூண்டின.

பலமொழி கற்ற கர்வம் அவரிடம் எள்ளளவும் இல்லை.

 

1925ஆம் ஆண்டு ருக்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

 

இசையில் த.நா.கு.வுக்கு ஈடுபாடு உண்டு. கோட்டு வாத்தியம் கற்றவர். நாகஸ்வர சக்ரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வர இசைத் தட்டின் மூலம் இடைவிடாது இசை கேட்டு இரசித்ததால், நாகஸ்வரம் வாசிக்கும் ஆற்றல் பெற்றார். இராஜரத்தினத்தின் எதிரே வாசித்துக்காட்டி பாராட்டுப் பெற்றார்.

 

அவரது வாழ்நாளில், அவருக்குக் கலைமாமணி விருதோ, திரு.வி.க. பரிசோ, சாகித்ய அகாதெமி விருதோ கிடைப்பதற்கு யாரும் பரிந்துரை செய்யவில்லை. ஆனால், வங்க அரசு, தமிழ் - வங்க மொழிக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி "நேதாஜி இலக்கிய விருது" அளித்துச் சிறப்பித்தது.

 

த.நா.கு. தமது 75வது வயதில் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி காலமானார்.

 

2008ஆம் ஆண்டு அவரின் புதல்வர் அசுவினி குமார், தமிழகத்தின் கோபுர தீபமான த.நா.கு.வின் நூற்றாண்டு விழாவை மிக எளிய முறையில் கொண்டாடினார்.

 

"குன்றிலிட்ட தீபம்" தண்டலம் நாராயண குமாரஸ்வாமி, தமிழ்மொழி உள்ள வரையில் படைப்பிலக்கியத்துக்கு வழிகாட்டும் ஜீவ சக்தியாவார்.

 

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728293031 

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved