Tuesday 23rd of January 2018

Home தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு பொ.திருகூடசுந்தரனார்
பொ.திருகூடசுந்தரனார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 23 October 2010 19:21

அறிஞர் பொ.திருகூடசுந்தரனார்

கலைமாமணி விக்கிரமன்

 

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

 

தன்னலமற்ற நாட்டுப்பற்று மிக்க ஓர் அறிஞர், சென்னையில் புகழ்பெற்ற நூலகத்துக்குச் சில குறிப்புகள் எடுக்கச் செல்கிறார்.

 

கையிலே மடிக்கப்பட்ட குடை, இடுப்பில் கதர்வேட்டி, மேலே உடலை மறைக்கத் துண்டு.

நுழைவாயிலில் நிறுத்தப்படுகிறார்.

 

வியப்படைந்த அந்த அறிஞர் காரணம் வினவ, "நாகரிகமாக" அவர் உடை அணியவில்லையாம்!

மேலே உடலை மறைக்கத் துண்டு, நாலுமுழ வேட்டி அணிந்த அவரைக் கிராமத்திலிருந்து வந்தவர் என்று நூலக அதிகாரி எண்ணிவிட்டார் போலும்.

 

அவரோ எம்.ஏ. பி.எல்., படித்தவர்.

 

மாநிலக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்று எம்.ஏ., முடித்தவர்.

 

பள்ளிப் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர்.

 

அவர்தான் பொ.திருகூடசுந்தரம்.

 

 

1917ஆம் ஆண்டு பொ.திருகூடசுந்தரம், மகாத்மா காந்தியின் சொற்பொழிவை சென்னைக் கல்லூரி ஒன்றில் கேட்டார்."பிறருக்கு உதவி செய்ய விரும்புபவர் முதன் முதலாகச் செய்ய வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாதது ஒன்று உண்டு.ஆடம்பர வாழ்க்கையை விட்டு எளிய வாழ்க்கையை மேற்கொள்வதுதான். உயிர் வாழ்வதற்கு முக்கியத் தேவையானவற்றை மட்டும் உடையவனாயிருக்க வேண்டும்''.மகாத்மாவின் இந்த உரையைக் கேட்ட அறிஞர் பொ.திருகூடசுந்தரம், எதிர்காலத்தில் இப்படித்தான் வாழவேண்டும் என்று உறுதி மேற்கொண்டார்.அதன் விளைவுதான், பிரபல நூலக நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம்.

 

அந்த உடையுடனேதான் உள்ளே செல்வேன் என்ற பொ.திருகூடசுந்தரம் பிள்ளைக்குத்தான் இறுதியில் வெற்றி கிடைத்தது.

 

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் என்ற புகழ்பெற்ற திருத்தலத்தில் பொன்னம்பலம் பிள்ளை - சொர்ணாம்பாள் தம்பதிக்கு 1891ஆம் ஆண்டு பிறந்தார்.அந்த ஊரிலேயே தொடக்கக் கல்வி பயின்றார்.திருநெல்வேலியில் உயர்கல்வி கற்றார்.பின்பு எம்.ஏ., (தத்துவம்) பட்டம் பெற்றார்.சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்து வழக்கறிஞரானார்.காந்திஜியின் கட்டளைக்கிணங்க ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு வழக்கறிஞர் தொழிலை விடுத்து, தேசியப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.கிராமங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற காந்திஜியின் இலட்சியத்தைக் கடைப்பிடித்து, திருநெல்வேலி மாவட்டம் எங்கும் பயணம் செய்து மேடை ஏறிப் பேசலானார்.இராட்டையில் நூற்று, தன் ஆடையைத் தானே தயாரித்துக் கொண்டார்."தூய்மை செய்" என்று மகாத்மா, மாணவர்களுக்கு நல்லுரை வழங்கியதை செய்தித்தாளில் படித்தார் அறிஞர் பொ.தி.

 

"எதைத் தூய்மை செய்வதென்று சிந்தித்தேன். உடல், உள்ளம், சுற்றுப்புறம், மூன்றில் வாழும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதென்று முடிவு செய்தேன். காரைக்குடிப் பகுதியில் உள்ள ஊருணியை, வீதிகளைச் சுத்தம் செய்யத் தொண்டர்களைச் சேர்த்து செயலில் இறங்கினேன். கழிப்பிடங்களைச் சுத்தம் செய்தேன். என்னைப் பார்த்து, பலர் அவ்வாறு தூய்மைப் படுத்தும் பணியில் இறங்கினார்கள். "எங்கள் பகுதியில் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வாருங்கள்" என்று கிண்டலாகப் பேசினார்கள். அவ்வாறு கூறியவர்களைப் பற்றி காரைக்குடியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "ஊழியன்" பத்திரிகையில் எழுதினேன். மற்றொரு இதழான "குமரன்" ஆசிரியர், என் காந்தியப் பணியைப் பாராட்டி "தோட்டி மகாத்மா" என்ற விருது கொடுத்தார்'' இவ்வாறு பொ.திருகூடசுந்தரனார் காந்திய சொற்படி நடந்த வரலாற்றை பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.

 

மகாத்மா மீது கொண்ட பக்தியை அறிந்த கவி சுத்தானந்த பாரதியார், "காந்தி பக்தரே வருக, கனல் தெறிக்கும் எழுத்தாற்றல் கொண்ட தமிழ் எழுத்தாளரே வருக'' என்று  பொ.தி.யைக் கட்டியணைத்துக் களிப்பெய்தினாராம்.

 

"பாலபாரதி" என்ற இதழை கவியோகி சுத்தானந்த பாரதி உதவியுடன் நடத்திவந்த வ.வே.சு. ஐயர், பொ.திருகூடசுந்தரனாரைக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.

 

அவர் எழுதிய தேசபக்தி உணர்வூட்டும் கட்டுரைகள் பல பாலபாரதியில் வெளிவந்தன.

 

சுதேசமித்திரன் இதழில் தொடர்ந்து கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார்.

 

1942 இயக்கத்தில் பொதுமக்களால் சிறையை உடைத்து விடுவிக்கப்பட்ட  இளைஞர் அண்ணாமலை சென்னைக்கு வந்து, சக்தி வை.கோவிந்தன், ஏ.கே.செட்டியார் உதவியுடன் "தமிழ்ப்பண்ணை" என்ற புத்தக வெளியீட்டகத்தை தியாகராய நகரில் தொடங்கினார்.

 

புத்தக அமைப்பில் பல புதுமைகள் செய்து வாசகர்கள் மனம் கவர்ந்த அண்ணாமலை, சின்ன அண்ணாமலை என்று இராஜாஜியால் அழைக்கப்பட்டவர், மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தபோது, அவர்தம் கொள்கைகளையும் சத்தியாக்கிரகம் அகிம்சை நிர்மாணத் திட்டங்கள், கிராம அபிவிருத்தி போன்ற செய்திகளை மக்களிடையே பரவச் செய்ய "யங் இந்தியா" என்ற வார இதழை வெளியிட்டு வந்தார்.

 

அந்தப் பெயரை "ஹரிஜன்" என்று மாற்றினார்.

 

சென்னை வந்தபோது, தமிழில் ஹரிஜன் பதிப்பை வெளியிட எண்ணினார்.

 

தமிழில் சிறந்த முறையில் வெளியிட ஏற்றவர், சின்ன அண்ணாமலைதான் என்று இராஜாஜி பரிந்துரைக்க, தமிழில் ஹரிஜன் வெளியிடும் உரிமையை சின்ன அண்ணாமலைக்கு வழங்கினார்.

தமிழ் ஹரிஜனுக்குத் தக்க ஆசிரியர் பொ.திருகூடசுந்தரம் பிள்ளையே என்று முடிவு செய்த சின்ன அண்ணாமலை, அவரைச் சென்னைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

 

முன்பே மொழிபெயர்ப்பு நூல்கள் பல எழுதிப் பாராட்டுகள் பெற்றவர் பொ.தி. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் "வார் அண்ட் பீஸ்" என்ற பிரசித்தி பெற்ற நாவலை "போரும், அமைதியும்" என்ற பெயரில் தமிழாக்கம் செய்து புகழ் பெற்றவர்.

 

சிறந்த காந்தியவாதி என்று மக்களால் பாராட்டப்பட்ட பொ.தி. தமிழ் ஹரிஜனின் ஆசிரியராக அமர்ந்து, "ஹரிஜன்" பத்திரிகையின் உள்ளடக்கம் போலவே தரம் குறையாமல் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

 

மகாத்மா காந்தி மறையும் வரை அந்த வார இதழ் தொடர்ந்து வெளிவந்தது.

 

"தமிழ் ஹரிஜன்" இதழின் ஆசிரியராக இருந்தபோதே புரட்சிகரமான நூல்கள் இரண்டை எழுதினார்.

"விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை", "குழந்தை எப்படிப் பிறக்கிறது?" முதல் புத்தகம், குடும்பக் கட்டுப்பாட்டை வற்புறுத்தி யோசனைகள் கூறுவது. மற்றொன்று, தாய் கருவுற்றதிலிருந்து குழந்தை பிறப்பு வரை "குழந்தை எப்படிப் பிறக்கிறது?" என்ற புத்தகம்.

 

தொடர்ந்து, குழந்தைகள் மனதில் அறிவியல் சார்ந்த செய்திகளை விதைப்பது அரிய விளைச்சலைப் பெருக்கும் என நம்பிய அறிஞர், "அப்பாவும் மகனும்", "கேள்வியும் பதிலும்" என்ற நூல்களையும் எழுதினார்.

 

தமிழ் ஹரிஜன் வார இதழ் நிறுத்தப்பட்டவுடன் மிகப்பெரிய பணி  திருகூடசுந்தரத்துக்குக் காத்திருந்தது.

 

பேரறிஞர் பெ.தூரனை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கத் திட்டமிட்ட கலைக்களஞ்சியத்தின் துணை ஆசிரியர் பொறுப்பு காந்தியச் செல்வருக்கு அளிக்கப்பட்டது.

 

கவிஞர் பெ.தூரனின் வலது கரமாகவே இருந்து "கலைக்களஞ்சியம்" பதிப்புகளைச் சிறப்பாக வெளியிட பொ.தி. உதவினார்.

 

"அறிவுக் கனிகள்", "இதய உணர்ச்சி", "அழியாச் செல்வம்" ஆகிய அறிவுப் பொக்கிஷங்களை இயற்றி வெளியிட்டார்.

 

ஆங்கிலத்திலும், தமிழிலும் மிக்க புலமையுடைய அறிஞர், சென்னை செனட் சபை அங்கத்தினராக இருந்திருக்கிறார்.

 

தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பத்து நூல்களையும், சொந்தமாக எழுதப்பட்ட பத்து நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

 

கலப்புத் திருமணம் செய்துகொண்டவர் பொ.தி. மனைவி, நாகர்கோயிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் ஒன்றை நிறுவி, ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலியவர்.

 

கணவரின் தொண்டுகள் அனைத்திலும் பங்கு கொண்டவர்.

 

இவர்களுக்கு ஓர் ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள்.

 

தன் பெற்றோர் பெயரையே அவர்களுக்குச் சூட்டி மகிழ்ந்தவர் பொ.தி.

 

தியாகராய நகர் கோவிந்து தெருவில் இறுதிக் காலம் வரை வசித்த அறிஞர், ஏறத்தாழ காந்திய நெறியில் உழன்று தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி சிறந்த நூல்களை எழுதி, தன் தியாக வாழ்க்கையை 1969ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.

நன்றி:- தினமணி

 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  January 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
  1  2  3  4  5  6  7
  8  91011121314
15161718192021
22232425262728
293031    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved