Tuesday 23rd of January 2018

வை.மு.கோதைநாயகி PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 23 October 2010 19:24

"கோதையர் திலகம்" வை.மு.கோதைநாயகி

கலைமாமணி விக்கிரமன்


"ஆணாதிக்கம்" என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.நூறாண்டுகளுக்கு முன்பும் ஆணாதிக்கம் இல்லாமலில்லை.பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவது அதிகம் என்றாலும் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தி இருப்பாள் என்று பெருமையாகக் கூறுவது ஆண்களிடம்தான் அதிகம்.பெண்ணின மேம்பாட்டுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட வீர மகளிரைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்துகொள்வது அவசியம்.

 

புதுமைப் பெண்ணாய் உருவெடுத்த வை.மு.கோதைநாயகி அம்மாள், என்.எஸ்.வேங்கடாச்சாரியார் - பட்டம்மாள் தம்பதிக்கு 1901ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.

 

குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயர் வைத்தமாநிதி.

 

முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊர்.

 

வைத்தமாநிதி, முடும்பை என்ற இவற்றின் முதல் எழுத்துகளைச் சேர்த்து வை.மு. என்ற எழுத்துகள் அமைந்தன.

 

வை.மு.கோ.வுக்கு அவர் மாமியார்தான் தெலுங்கு மொழியை முதன் முதலில் கற்றுத் தந்தார்.

பள்ளி, கல்லூரி செல்லாமலேயே கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளப் பெரிதும் ஆதரவு தந்தவர்கள் அவரது கணவரும் மாமியாரும்தான்.

 

கற்பதை எளிதாகப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் ஆற்றல் இயற்கையிலேயே அமையப்பெற்ற கோதைநாயகி அம்மாள், தன் தோழி பட்டம்மாள் உதவியுடனும், கணவர் ஆதரவுடனும் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

 

தன் சிறிய தகப்பனார், திருத்தேரி இராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

வை.மு.கோவின் வெற்றிக்கு அவர் செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதிதான்.

 

பால்ய விவாகச் சட்டம் தடைசெய்யப்படாத காலத்தில், பார்த்தசாரதிக்கும் வை.மு.கோதைநாயகி அம்மாளுக்கும் 1907ஆம் ஆண்டு (அம்மையாருக்கு ஐந்தரை வயது, கணவருக்கு ஒன்பது வயது) திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்தின்போது வை.மு.கோ.பள்ளி சென்று படித்தவரில்லை.பார்த்தசாரதி, வை.மு.கோ.வைக் கல்வி கற்கச் செய்தார்.சுருக்கெழுத்துத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்வு பெற்றதற்காகக் கிடைத்த தங்கப் பேனாவை, தன் துணைவி கோதைநாயகிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.ஆனால் அந்தப் பேனா தொலைந்துவிட்டது.அதனால் அம்மையாரின் ஆறாத துக்கத்தைக் கண்ட பார்த்தசாரதி, ஆறுதல் கூறித் தேற்றினார்.சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின.

 

சுற்றுப்புறக் குழந்தைகளின் வற்புறுத்தலுக்காக புதிய புதிய கதைகள் சொல்வதற்காக "இட்டுக்கட்டி"க் கதை சொல்லும் கட்டாயம் ஏற்பட்டது.

 

அதற்காகக் கற்பனை செய்யும்போது நாவல் எழுதும் ஆர்வம் பிறந்தது.அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் தமிழில் புதினங்கள் மிகக் குறைவு.

 

வெளி வந்தவையும் துப்பறியும் நாவல்கள்தான்.

 

வடுவூர் துரைசாமி ஐயங்கார் தன் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட "மனோரஞ்சனி" என்ற மாத இதழைத் தொடங்கினார்.

 

வை.மு.கோ.வின் படைப்புகளை வெளியிடவும் "மனோரஞ்சனி" இதழ் போல் மாத இதழ் ஒன்றைத் தொடங்க யோசனை கூறினார் வடுவூரார்.

 

அந்த யோசனையைச் செயலாக்க இதழ் ஒன்று தொடங்கும் ஆர்வம் அம்மையாருக்கு ஏற்பட்டது.

 

அந்த நேரத்தில் வெளிவராமல் நின்று போயிருந்த "ஜகன்மோகினி" என்ற இதழை விலைக்கு வாங்கி 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார்.

 

கோதைநாயகி அம்மாளின் முதல் நாவலான "வைதேகி" எழுத்துப் பிரதியை, பிழைதிருத்தித் தருவதாகக் கூறி வாங்கினார் வடுவூரார்.

 

"ஜகன்மோகினி" இதழ் வெளிவரத் தொடங்கியவுடன் வடுவூராரின் "மனோரஞ்சனி" துவண்டு விட்டது.

இதனால் பொறாமை கொண்ட வடுவூரார் அம்மையாரைப் பலவாறாகப் பயமுறுத்தி, நான்தான் வை.மு.கோவுக்காக "வைதேகி" நாவலை எழுதுகிறேன். அவருக்கு எழுத வராது. இனி நான் தொடர்ந்து எழுதித் தரமாட்டேன் என்று ஓர் அறிக்கையையும் "மனோரஞ்சனி" இதழில் வெளியிட்டார்.

 

வாசகர்களிடையே இந்த அவதூறு செய்தி பரவியது. குழப்பம் ஏற்பட்டது என்றாலும் வாசகர்கள் வடுவூரார் கூற்றை நம்பவில்லை.

 

அம்மையாரும் அஞ்சவில்லை.

 

தன் நினைவாற்றல் சக்தி கொண்டு "வைதேகி"யைத் தொடர்ந்து எழுதி வெளியிட்டதால் வடுவூரார் கூற்று பொய்யானது.

 

"ஜகன்மோகினி"யின் புகழ் மேலும் ஓங்கியது.

 

வை.மு.கோ.வின் எழுத்தாற்றல் தமிழ் வாசகர்களிடையே பரவியது.அதனால் அம்மையார், ஜகன்மோகினியில் பல்வேறு பகுதிகளையும் மற்ற இதழ்கள் போல் வெளியிடலானார். பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார்.விற்பனை கூடியது.1937ஆம் ஆண்டு சொந்த அச்சகம் உருவானது.பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோ.வுக்கு அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாள் நட்பு ஏற்பட்டது.தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு மகாத்மா காந்தி வருகை தந்தார்.வை.மு.கோ., காந்தியைச் சந்தித்தார்.

 

வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அதுமுதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார்.மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களைத் தவிர்த்து, வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதையும் இறுதி வரையில் கடைப்பிடித்தார்.

பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

 

1931 மகாத்மா கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார்.

 

சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் அம்மையாரும் கைது செய்யப்பட்டார்.

 

ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை அம்மையாருக்கு விதிக்கபட்டது.

சிறையில் இருந்த "ஜகன்மோகினி"யை அவர் கணவர் பார்த்தசாரதி வெளியிட்டு வந்தார்.

பத்திரிகைக்குக் கதை இல்லையே என்று கணவர் கவலைப்படாமல் இருக்க, சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் நாவல் எழுதி அனுப்பினார்.

 

அவ்வாறு எழுதப்பட்ட நாவல்தான் "உத்தமசீலன்".

 

இரண்டாவது உலகப்போரின் போது யுத்த பீதி காரணமாக மக்களை நகரை விட்டு வெளியேறப் பிரசாரம் செய்தபோது "ஜகன்மோகினி" அச்சகத்தோடு சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு அருகேயிருந்த சிங்கபெருமாள் கோயில் எனப்படும் சிற்றூரில் குடியேறினார். ஜகன்மோகினி வெற்றிக்கு அதில் சித்திரம் வரைந்த சாமுவேல் என்ற ஓவியர் இறுதிவரை ஜகன்மோகினி சிறப்பாக வெளிவர உறுதுணையாக இருந்தார்.

 

நாடு விடுதலை அடைந்தவுடன் மீண்டும் சென்னைக்கே "ஜகன்மோகினி" அலுவலகத்தையும் அச்சகத்தையும் அம்மையார் கொண்டு வந்தார்.வை.மு.கோ. தன் வாழ்நாளில் 115 நாவல்களை எழுதியுள்ளார்.விதவை பிரச்னை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் துயரம், கைம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் முதலிய பெண்களின் அவலங்களைச் சித்திரித்து அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வழிவகைகளையும் தெரிவித்தார்.

 

இந்திய விடுதலைக்கு முன்பு தேசிய நோக்குடன் எழுதப்பட்ட நாவல் வரிசையில் வை.மு.கோ. நாவல்களைத் திறனாய்வாளர்கள் இணைக்காதது சரியான திறனாய்வாகாது.

 

தமிழ் நாவல் இலக்கியத்தில் வை.மு.கோ. அம்மையார் அழியா இடம் பெற்றவர் என்பதே உண்மை.

மகாகவி பாரதியாரின் பாராட்டைப் பெற்றது அம்மையார் செய்த பெரும்பேறு.

 

வை.மு.கோ. இனிய குரலில் பாடுவதை மெய்மறந்து பாரதியார் இரசித்ததாகக் கூறுவார்கள்.

 

வை.மு.கோ.வின் நாவல்களில்,

  • அநாதைப்பெண்
  • தியாகக்கொடி
  • இராஜ்மோகன்
  • நளினசேகரன்

ஆகிய நாவல்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டன.

 

கணவன் - மனைவி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய கோதையர் திலகம் வை.மு.கோ. 1960ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி இயற்கை எய்தினார்.

நன்றி:-  தினமணி

Last Updated on Saturday, 23 October 2010 19:32
 

பிற வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  January 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
  1  2  3  4  5  6  7
  8  91011121314
15161718192021
22232425262728
293031    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved