Monday 23rd of April 2018

Home தமிழ் பெரியார்கள் கவியோகி சுத்தானந்த பாரதியார்
Sudhanandar PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 30 May 2009 15:37

 

 

 

"ஓம் சுத்த சக்தி" என்ற அவர்தம் கணீர் முழக்கம் என் செவிகளில் இப்போதும் ஒலிக்கிறது. சிறுவனாய் வியந்தும், பயந்தும் பார்த்த சுத்தானந்தர், எனக்கு வயது ஏற, ஏற என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். படிக்கப் படிக்கப் பிடிக்க முடியாத அந்த உயர்ந்த சிந்தனை!


 நமக்குக் கைக்கெட்டும்தூரம் இருந்தும் கண்மூடி இருந்தோமே என எண்ணி வருந்திய நாட்கள் அதிகம். இனியும் தாமதித்தால் வாழ்நாட்கடன் தீராப் பெருஞ்சுமையாக நெஞ்சை வருத்தும். எனவே, என்னால் முடிந்ததை மறு தட்டச்சுச் செய்து தருகிறேன் ;வியாக்கியானமோ, பொழிப்புரையோ தர நான் எத்தகுதியுமற்றவன். நான் ஒரு கருவி; அவன் இயக்குகிறான். அவ்வளவே.


எங்கள் வாழ்வுகளில் எத்தனை ஒளி வீசச் செய்துள்ளார் என்பனவற்றைக் கூற இந்த மின்மடல் போதாது. எனவே, முதலில் அவர்தம் படத்துடன் கண்ட ஆங்கில வாழ்க்கைக் குறிப்பை விட,த.ம.அ முதுசொம் பகுதியில் அவர்தம் வாழ்க்கை குறிப்பை  இடுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால், முதலில் அவரது வாழ்க்கைக் குறிப்பைத் தருகிறேன்.
இதை அவருடைய சீடர் சுத்தானந்த தாசன், கம்பரசம்பேட்டை அமரர் ஸ்ரீ.பா.கோபாலகிருஷ்ணன் முதலில் எங்கள் சமாஜம் நடத்தும் பள்ளியின் மாணவர் கூட்டு வழிபாட்டின் கையேட்டுக்காக எழுதினார்.
சிற்சில மாற்றங்களுடன் நான் அதையே மறுபதிவு செய்கிறேன்.

 

ஓம் சுத்த சக்தி ! - சந்திரசேகரன் - April 16, 2007

 

 

 


கவியோகி மஹரிஷி டாக்டர். சுத்தானந்த பாரதியார்
அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு.

 


 

 


கவியோகி மஹரிஷி டாக்டர். சுத்தானந்த பாரதியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு.
 
”சிவகங்கை என் ஜீவகங்கை” என்று சுத்தானந்தர் பாராட்டும் சிவகங்கை மண்ணில் காமாக்ஷி அம்மையாருக்கும், சிவிகுல ஜடாதர அய்யருக்கும் தெலுகு பிராம்மண குலத்தில் ஹேவிளம்பி ஆண்டு சித்திரைத் திங்கள் 31-ஆம் நாள் (11-5-1897) உத்திர நக்ஷத்திரத்தில் சுத்தானந்தர் அவதரித்தார். தாயார் ராமாயண, மகாபாரதக் கதைகளை சுயமாகவே பாடல்களாய்ப் பாடி உணவு ஊட்டுபவர்.


தந்தை வேத வித்தகர். உடன் பிறந்தோர்களில் மூத்த தமையனார் ஜெ. வேங்கடராமய்யர்.  இவர் போராட்ட வீரர்களுக்கு மட்டும் கோர்ட்டில் ஆஜராகும், தானே நெய்த கதராடை அணியும் தேச பக்த வக்கீல்! இரண்டாவது தமையனார் ரங்கசாமி அய்யரே பின்னாளில் குடும்பம் முழுவதும் பார்த்துக் கொண்ட ஸ்திதப்ரக்ஞர். அண்ணன் தேசீயவாதி, தம்பி சுதந்திரப் போராட்டக்காரன் மட்டுமின்றி, ஒரு துறவியும் கூட! இவர்களது ஒரே தமக்கை ரங்கநாயகி.


சுத்தானந்தரின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். இவர் பிறப்பதற்கு முன்பு நடந்த செவி வழிச் செய்தி ஒன்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் பேசக் கேட்டதுண்டு. இவர்தம் அன்னையார் கர்ப்பம் தரித்ததும், மீண்டும், மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்வதா என்று எரியும் கர்ப்பூரத்தை அப்படியே வாயால் விழுங்கி வயிற்றில் செலுத்திக் கொண்டார், அதே  இரவில்,இறைவன் அவர்தம் கனவில் தோன்றி, “கர்ப்பூர நெருப்பால் இந்த உலகிற்குக் குருவாகும் பேரொளியை அணைக்க இயலுமா? அவன் என் மகன்; உலகில் பெரும் யோகியாய்ச் சுடர் விடுவான்,”என்று சொன்னதாகச் சொல்லுவார்கள்.
 
எட்டாம் வயதில், அன்னை பராசக்தி மதுரை மீனாக்ஷியம்மனின் பேரருளால், குண்டலினிக் கனல் தூண்டப்பெற்று கவிதா சக்தி பெற்றார்; அன்றே அவருக்கு ஆன்மிக மலர்ச்சியும் ஏற்பட்டது.தாய்வழிச் சிறிய பாட்டனார் பூர்ணாநந்தர் இவருக்கு யோகம் பயிற்றுவித்தார். இமாலய மகான் ஞான சித்தர் ‘சுத்தானந்தம்’ என்று தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். அவரே இதய (தஹர) வித்தையையும், ஸஹஸ்ரார ஸித்தியையும், ஆதார ரகசியங்களையும் உணர்த்திச் சென்றார்.


புலவர் தெய்வசிகாமணி அய்யர், இவரது தமிழ் அறிவை வளர்த்தார்.சிருங்கேரி ஜகத்குரு சங்கராசார்யர்  ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ‘கவியோகி’, ‘பாரதி’ என்றும், இமயஜோதி ஸ்வாமி சிவானந்தர் ‘மஹரிஷி’ என்றும் சிறப்புப் பட்டம் அளித்தனர்.
ஷிர்டி சாய்பாபா இவர்தம் செவியில் ’ஓம்’ ஒலியை ஓதி, என்றும் சித்தத்தில் அது நிலைத்திருக்கத் தலைமேல் காதைச் சுற்றி ஒரு காவித் துணியைக் கட்டிவிட்டார். பகவான் ரமணர் ‘தன்னறிவு’ பெறச் செய்தார்.


சேஷாத்ரி ஸ்வாமிகள், சித்தாரூடர், மேஹர் பாபா, அரவிந்தர், அன்னை போன்றோர் இவர்தம்  ஆன்மிக உயர்வுக்கு வழிவகை செய்தனர். மஹரிஷி வ.வே.சு ஐயரின் உறவால் கவியோகியின் வாழ்வில் தேசீயமும் புகுந்தது. மகான் அரவிந்தர் தொடர்பால் சுத்தானந்தரின் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அன்னாரின் புதுவை ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் மோனத் தவம் புரிந்து சாதனை செய்தார். ஏற்கெனவே இமயமலைக் குகைகளிலும், விரூபாட்சி குகைகளிலும் ஐந்து ஆண்டுகள் தவமியற்றி இருந்தார். மோனத்தவம் புரிந்த இவ்விருபத்தைந்து ஆண்டுகளில் சுவாமிகள் பல ஸித்திகளையும், சக்திகளையும் பெற்று ஒரு விஜயதசமி நன்னாளில் மஹாதுரீய ஸமாதி அனுபூதி அடைந்தார்கள்.
 
மனமாறச் சமய ஒற்றுமை போற்றிய தூயவர் சுத்தானந்தர். கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பவுத்தம், சீக்கியம், ஜரதுஷ்ட்ரம் ஆகிய சமயங்களில் அவர்களாகவே வாழ்ந்து, அவர்தம் நூல்களைக் கற்றார். அவை காட்டிய நெறிகளையும் பழகி வந்தார். சமயங்கள் போதிக்கும் உண்மை ஒன்றே என்று கண்டார். ”’ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம்,” என்பதை உலகுக்கு அறிவுறுத்தினார்,  வேற்றுமையில் ஒற்றுமை கண்ட சுத்தானந்தர்.
 
மோனத்தவம் புரிந்த காலங்களில் பல ஆயிரம் நூல்களை இயற்றினார்.


பெரும்பாலானவை தமிழ் நூல்களே. வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு மொழிகளிலும் நூல்களை இயற்றியுள்ளார்.


கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாட்டியப் பாடல்கள், நாடகம், திறனாய்வு, நவீனம், சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு போன்ற பலதுறைகளிலும் நூல்களை எழுதிக் குவித்தார்; எனினும் சுத்தானந்தர் தமது படைப்புகளில் பெரிதும் போற்றியவை ‘பாரத சக்தி மஹாகாவியம்’ என்னும் நூலும், ’யோகசித்தி’ என்னும் குறட்பாக்களாலான நூலுமாகும். பாரத சக்தி ஐம்பதாயிரம் வரிகள் கொண்ட ஒரு படைப்பிலக்கியம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் முதல் ராஜராஜன் விருதை  இந்த நூலுக்கே அளித்தது.  யோகசித்தியின் ஆங்கில வடிவத்தையும் சுத்தானந்தரே ”THE GOSPEL OF PERFECT LIFE” என்னும் பெயரில் இயற்றியுள்ளார். "யோகசித்தி" ஃப்ரெஞ்சு, ஸம்ஸ்க்ருத மொழிகளிலும் வெளிவந்துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்ய அறிஞர் அண்ணா அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர் சுத்தானந்தர்.


காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டையிலும் ஆசிரியராகவும், சாரண ஆசிரியராகவும் பணியாற்றிய காலங்களில்,
தேசீயச் சிந்தனைகளைத் தூண்டும் பாடல்களை இசையோடு இயற்றி அவற்றை மாணவரிடையே பரப்பினார்.
திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு ஐயர், சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர ப்ரதாப் போன்ற பெருந்தலைவர்களுடன் நெருக்கம் கொண்டிருந்தார் யோகியார். காந்தியடிகளின் அறிவுரைப்படி கிராமப்பணி,கதர்ப் பணி,  மதுவிலக்கு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, உயிர் பலி தடுத்தல், பெண்கள்  மறுவாழ்வு போன்ற சீர்திருத்த இயக்கங்களையும் மேற்கொண்டு நாட்டுப் பணியும் ஆற்றியுள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் இப்பணியில் சுவாமிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.
 
1947ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் தாம் மேற்கொண்டிருந்த மௌனத்தைக் கலைத்து முதன் முதலில் ரிஷி கேசத்தில், ஸ்வாமி சிவானந்தர் முன்னிலையில், சுதந்திரச் சொற்பொழிவு செய்து அன்றிலிருந்து ஆன்மிகத் தேடற் பயணங்களை விரிவுபடுத்தினார்;. பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். ஜெனிவா, பெர்லின் நகரங்களில் நடந்த உலக அமைதி மாநாடுகளில் கலந்து கொண்டார். சோவியத் யூனியன், ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், ஹாலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், சீனம், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ஃபிஜி, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும்,   அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆஸ்திரியாவிலும் சுற்றுப் பயணங்கள், சொற்பொழிவுகள் தொடர்ந்தன.


 சுத்தானந்தர் உலகிற்கு அளித்த செய்தி ‘சமயோகம்’.அகவாழ்வு சிறந்திட யோகம்; புறவாழ்வு சிறந்திட அறிவியல். யோகமும், அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் அமர நிலையை அடையும்; மண்ணில் விண்ணரசு தோன்றும். இச்சமயோக வேள்விக்கென்றே ‘யோக சமாஜம்’ தோன்றியது. வடலூரிலும், சென்னை அடையாற்றிலும், யோக சமாஜம் சுமார் முப்பது ஆண்டுகள் நடந்தது.


 


1977 ஆம் ஆண்டு சிவகங்கையில், ’சுத்தானந்த யோக சமாஜம்’ என்னும் அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். தமது ஆன்மிக குரு ஞானசித்தர் உபதேசம் அருளிய சோழபுரம் கிராமத்திலேயே சமாஜப் பணிகளுக்கென நிலமும் நன்கொடையாக வந்தது!

 

1979-ல் சுத்தானந்த தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை அங்கு கவியோகி நிறுவினார். அருகிலேயே  தமது தவக்குடிலை அமைத்துக் கொண்டு, சமாஜம் ,பள்ளி ஆகியவற்றின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டி வழிநடத்தினார். பிணியின்றி எளிமையாய் வாழ்ந்து பேனா முனையில் தானாயுழைத்து ஈட்டியதனைத்தையும் சமாஜப் பணிக்கே  அர்ப்பணித்தார்.


குழந்தைச் சிரிப்பும், நகைச்சுவைப் பேச்சும், கணீர் குரலில் பாடலும், சுறுசுறுப்பும் இறுதி வரை மாறவேயில்லை.முதிர்ந்த வயதிலும் இமயம் வரைப் பயணம் மேற்கொள்ளும் திண்மை ஒரு யோகியிடம் மட்டுமே இருக்க முடியும்.
 அனைவரிடமும் அன்புகாட்டி வாழ்ந்த கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார் 7-3-1990 அன்று மஹாசமாதி அடைந்தார்.ஆண்டுதோறும் மாசிமாதம் சுக்லபட்ச ஏகாதசியன்று சுத்தானந்த ஆராதனை சோழபுரத்திலுள்ள சுத்தானந்தர் நினைவாலயத்தில் நடத்தப் படுகிறது.

 


இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!

 

 

 

 

Maharishi Kavi Yogi Shuddhananda Bharati

 

 

 

Kavi Yogi Maharshi Shuddhanadha Bharati born on 11th May 1897 was a Divine Poet, a Great Yogi and a freedom fighter. As a boy of eight years, the Divine Force descended upon him as he embraced the Holy Feet of Sri Meenakshi Amman, in the temple at Madurai, Tamil Nadu. In the wake of that Grace, he made his life-long spiritual pilgrimage with song-thrills, acquiring wisdom through meditation and association with Great men of his times. A mysterious saint in the Himalayas Gnana Siddha initiated him in Mahaturya Samadhi, the highest plane in spiritual development. His intimate contacts with Ramana Maharshi, Shirdi Sai Baba, Siddharudar, Sri Aurobindo, Mother, Sri Seshadri Swamigal and Avatar Meher Baba influenced his spiritual pursuit.

 

He was a tireless volunteer of the Indian National Congress during the freedom struggle and had contacts with Great Leaders like Lokmanya Tilakji, Gandhiji, Nethaji, V.V.S.Ayyar, V.O.C Chidambaram pillai (the first Indian to sail a commercial ship against the British), Poet Subrahmanya Bharati, Subramania Siva, M.N.Roy, Raja Mahendra Pratap and Shenbagaraman.

 

He served as an editor for `Swarajya’ (Tamil), `Bala Bharati’, `Iyarkkai’ (Nature in Tamil), and `Samarasa Bodhini’. He campaigned against evils of untouchability, Liquor and slaughter of animals in the name of God. His Holiness Sri Narasimha Bharati, Sankaracharya of Sringeri gave him the titles- `Kavi Yogi’ and `Bharati’, Shri Sivananda conferred on him the title `Maharshi’.

 

 Kaviyogi spent 20 years in silence at the Aurobindo Ashram, Pondichery. He wrote hundreds of books in Tamil, French, English, Sanskrit, Hindi and Telugu. His Magnum Opus, `Bharata Sakti Mahakavyam’, fetched him after long years, the first `Raja Rajan Award’ for best Tamil literature, constituted by the Tanjore Tamil University.
 

He mastered all the Yogic Sadhanaas and synthesized the best in every system of Yoga and Religion in what he called SAMA YOGA (Religion of Equality) or Spiritual Socialism. His SamaYoga recognizes the synthesis of Yoga and Science, vital for upliftment of human race. He traveled all over the world several times and spread his ideals and India’s celebrated culture and values. He established Yoga Samaj Centers at Vadalur and Chennai and published his books. He founded the Shuddhananda Bharati Desiya Vidyalayam High School in Sholapuram village, near Sivagangai, Tamilnadu. He lived in Sholapuram during his last years guiding the samaj and the school. He attained Maha Samadhi on 7th March 1990. Kaviyogi, during his life was ever healthy, smiling, simple and active.

 

Last Updated on Saturday, 20 June 2009 22:04
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
30      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved