Friday 18th of August 2017

பேச்சாளர் - சிந்தனைச் சிற்பி PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 06 June 2009 15:27

 

பேச்சாளர் - சிந்தனைச் சிற்பி - ஒரு காட்டாறு!

 

சுத்தானந்தரது சொற்பொழிவோ, துவக்க உரையோ, மடைதிறந்த காட்டாறு  போல் துள்ளி வரும். பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் பேசிய, மனதை நிரம்பச் செய்த ஒரு பகுதியை இங்கு இடுகின்றேன்: சந்திரசேகரன் - Sat, Apr 18, 2009

 


 

எங்கும் நிறைவான பரம்பொருளே! மங்களக் காலையில் மலர்முகங்காட்டுகின்றாய்!  இளமணத் தென்றலில் இன்பக்குழலூதுகின்றாய்; அன்பு,அன்பு' என்று சோலைக்குயிலில் அகவுகின்றாய்; அதோ பாயும் மலயருவியில், ‘ஓம் தத்ஸத் ஓம்' என்று வேத முரசொலிக்கிறாய்; திங்கள் அமுத நகை புரிந்து, எல்லையற்ற கடலைப் பொங்கியெழுந்து ஆனந்தக் கூத்தாடச் செய்கிறாய்! இந்தக் குழந்தைகளின் மாசற்ற உள்ளத்தில், வானரசை இலக்குகிறாய்; மனைதோறும் சவுந்தரிய சக்தியாக விளங்கிக் குலதருமத்தை வளர்க்கிறாய்; ஆணில் ஆண்மை, பெண்ணில் பெண்மையாகிக் காதற் கனலைத் தூண்டி,உலகம் உயிர் வாழச் செய்கிறாய்; வாழ்க்கை என்னும் எல்லையற்ற கலாசாலையில், இயற்கை என்னும் ஆசானைக் கொண்டு, பாடம் கற்பித்து, எமது மனத்தை பக்குவப் படுத்தி, முடிவில் உனது திருவடியே தஞ்சமென்று உணர வைக்கிறாய்!

 

பரம்பொருளே! உலகெலாம் உன் திருக்கோவில். உயிர்த் தொகுதி உனது திருமேனி. வாழ்க்கை உனது திருவிளையாடல். நீ வேறு, யாம் வேறின்றி உள்ளும் புறமும் உன்னைக் கலந்து அந்தப் பேரின்பத்தால் உனது பாராலயத்தில் உலவச் செய்தருள்.

 

பரமனே! நீயே உண்மை, நீயே அறிவு, நீயே இன்பம், நீயே எங்கும், எல்லாம். சாதி-மத-நிற-தேச- வகுப்பு வேறுபாடுகள் எமது மனத்தை விகாரப் படுத்தாமல், எவரையும் நினது நடமாடும் கோவில் என்று காணும் அருளறிவை எமக்கருள். எமது வாழிவு இன்பக் கனி குலுங்கி உயிர்த் தொகுதியாக விளையாடும் நினக்கே நிவேதனமாகுக!

 

அருள் தந்தையே! நாங்கள் நின் மைந்தர்கள். இந்த உலக மனையில் ஒரு குலமாக ஒருவருக்கொருவர் உதவியாக வாழவருள்! கொடுங்கோன்மை, தினியகந்தை,பொய், பொறாமை, ஆணவமாயம், கொலை, புலை, கோள், வஞ்சம், குடி, களவு. சூது, விபசாரம், சண்டை சச்சரவுகளின்றி, அன்பும், ஒப்புரவும், எளிமையும், வீரமும், இரக்கமும், அமைதியும்,உண்டுடுக்க யோக்கியமான தொழில் முயற்சியும் பயின்று, எங்கும் என்றும் எதிலும் உன்னையே கண்டு, உனக்கே வழிபாடாக வாழ அருள்!

 

தந்தையே, எமது ஆற்றலுக்கேற்ற பொதுநலம் புரியத் துணைசெய். ‘எனது,யான்' என்னும் அகந்தை வேரோடு அழிக! பூரணனே! இந்த வாழ்வாறு,  உனது அருட்சுடரொளியில் கலக்கவருள்! பரமாத்மனே வணக்கம். உனதருளில் வாழ்வதே யோக சித்தி, பூரண வாழ்க்கை.சுத்தம் வாழ்க! சுத்தன் வாழ்க! சுத்த நிலையம் வாழ்க! ஓம் சுத்த சக்தி.

 

எல்லா  உயிர்க்கும் இறைவன் ஒருவனே
எல்லா  உடலும்  இறைவன் ஆலயமே
எல்லா  ருக்கும் இயல்பாம் இன்பம்
எல்லா  வாழ்வும் இறைவன் யோகமே!

                                                               -சுத்தானந்த பாரதி

Last Updated on Saturday, 20 June 2009 22:09
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  August 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved