Tuesday 21st of November 2017

Home தமிழ் அமைப்புகள் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி அமைப்புகள்
தமிழ் வளர்ச்சியின் முன்னோடி அமைப்புகள் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 28 November 2008 20:31

 தமிழ் வளர்ச்சியின் முன்னோடி அமைப்புகள்

பெ.சு.மணி 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மூன்று அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகள், தமிழ் ஞானத்தோடும், ஆங்கில மொழியறிவையும் இணைத்த தமிழறிஞர்களால் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அமைப்புகள் வருமாறு:
 
உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை,
தென்னாட்டு தமிழ்ச் சங்கம்,
திராவிட பாஷா சங்கம்.


உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை - 1883:

சாதாரண தமிழ் மக்களிடையே நவீன அறிவு நூல்களை அறிமுகம் செய்யவும், பண்டைய நூல்களைப் பதிப்பிக்கவும், ஆங்கிலமும் தமிழும் கற்ற நாட்டுப்பற்றுடைய சிலர் முன்வந்தனர். இவர்கள் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணியில், சிங்கராச்சாரி தெருவில் 1883ல் "உபயோகமான அறிவைப் பரப்பும் சபை," எனும் பெயரில் ஓர் அமைப்பு நிறுவப்பட்டது.
 
தொடக்கத்தில், இந்தச் சபையில் பாடுபட்டவர்களுள்;
இந்து
சுதேசமித்திரன்
ஆசிரியரான ஜி.சுப்பிரமணிய ஐயர் மற்றும் முடும்பை வீரராகவாச்சாரியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ் மொழியில் முதல் இரு அரசியல் அரிச்சுவடிகளை எழுதியவர்கள் ஜி.சுப்பிரமணிய ஐயரும், முடும்பை வீரராகவாச்சாரியாரும் ஆவர்.


1883ல் ஜி.சுப்பிரமணிய ஐயர் எழுதி, "உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை"யின் சார்பில் வெளியிட்ட "சுய அரசாட்சி வினா - விடை", தமிழில் வெளிவந்த முதல் அரசியல் அரிச்சுவடி நூலாகும். இது இலவசமாக வழங்கப்பட்டது என்பது கூடுதலான சிறப்பாகும். இச்சபை பத்திரிகைகளாகவும், புத்தகங்களாகவும் பிரசுரஞ் செய்யத் தகுந்த விஷயங்களை எழுதி அனுப்பினால் அவற்றைக்கூட அங்கீகரித்துக் கொள்வார்கள் என்று அறிவித்தது. ஆனாலும், முற்கூறிய அரசியல் தமிழ் வளர்த்த இரு நூல்களைத் தவிர வேறு நூல்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஜி.சுப்பிரமணிய ஐயர், மு.வீரராகவாச்சாரியாருக்குப் பிறகு இச்சபையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் அக்காலத்தில் புகழ்வாய்ந்த மாத இதழான "விவேகசிந்தாமணி"யின் ஆசிரியர் சி.வி.சுவாமிநாத ஐயர்.


தென்னாட்டு தமிழ்ச் சங்கம் - 1890:

உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபையின் நோக்கங்களைக் காட்டிலும் தென்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்கள் விரிவானவை. பொது மக்களுக்குப் புரியும் வகையில் எளிய தமிழ் நடையில் வெளியீடுகளைக் கொண்டுவர வேண்டும் எனும் கருத்து இச்சங்கத்திலும் வற்புறுத்தப்பட்டது. தென்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் தோற்றத்தைப் பற்றி "சுதேசமித்திரன்" மே 1890ல் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
மேற்குறித்த பேரால் தமிழ் மொழி வளர்ச்சியை நாடிய சங்கம் ஒன்று நிறுவுவதற்காக சென்ற மாதம் பட்டணம், தொண்டை மண்டலம் பள்ளி வளாகத்தில் கூடிய கூட்டத்தில் நியமிக்கப்பட்ட குழு, மே மாதம் 1ம் தேதி காஸ்மாபாலிட்டன் கிளப் கூட்டத்தில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். அப்பொழுது சோமசுந்தரம் செட்டியார் அக்கிராசனாதிபதியாக இருக்கப், பின்வரும் கனவான்கள் குழு உறுப்பினர்களாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
 
இராவ்பகதூர் பூண்டி அரங்கநாத முதலியார்,
பி.வி.விஜயரங்க முதலியார்,
சேஷகிரி சாஸ்திரி,
சி.டபிள்யூ தாமோதரம்பிள்ளை,
இராவ்பகதூர் இராமசாமி முதலியார்,
எம்.வீரராகவாச்சாரியார்,
டி.பாலசுந்தர முதலியார் (தற்காலக் காரியதரிசி)


சங்கத்தின் நோக்கங்கள்:

தமிழ்ப் புத்தகசாலை ஒன்று ஏற்படுத்தி அதற்கு இதுவரையில் தமிழில் அச்சாகியிருக்கும் கிரந்தங்களை எல்லாம் சேகரித்தல்; இதுவரையில் அச்சிடப்படாத கிரந்தங்களின் ஏட்டுப் பிரதிகளையும், அச்சிடப்பட்டுள்ள நல்ல கிரந்தங்களை இனிமேல் எப்போதாவது இன்னும் நன்றாய் சீர்திருத்துவதற்கு உபயோகமாகும்படி அவைகளின் ஏட்டுப்பிரதிகளையும் சேகரித்து வைத்தல் ஆகியவை சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் சில.
 
தமிழ்ப் பேரறிஞர்கள் உ.வே. சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம்பிள்ளை,
பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளை அச்சேற்றும் அரிய திட்ட த்தை 1887 முதலிலேயே தொடங்கிவிட்டனர். இந்தத் திட்டத்துக்கு பேராதரவைத் திரட்டித்தர, 1890ல் ஏற்படுத்தப்பட்ட தென்னாட்டு தமிழ்ச்சங்கமும் முன்வந்தது. இச்சங்கத்தின் சிறுமுயற்சியும் காலகதியில் ஓய்ந்தது.
திராவிட பாஷா சங்கம் - 1899:
 
திராவிட பாஷா சங்கம் சென்னையில் பச்சையப்பன் அரங்கத்தில் மார்ச் 5, 1899ல் நீதிபதி எஸ்.சுப்பிரமணிய ஐயர் தலைமையில் நகரப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஐம்பது பிரமுகர்களுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
 
 
நீதிபதி எஸ்.சுப்பிரமணிய ஐயர்


நீதிபதி எஸ்.சுப்பிரமணிய ஐயர் 


திராவிட பாஷா சங்கத்தின்:

அமைப்பாளர் வி.பி.சேஷாத்ரியாச்சாரி,


உறுப்பினர்கள்:
டி.பாலசுந்தர முதலியார்,
இராவ்பகதூர் வீரேசலிங்கம்,
பந்துலு,
ஜி.சுப்பிரமணிய ஐயர்,
எஸ்.இரங்கய்ய செட்டியார்,
ஏ.நாராயணராவ்.
திவான்பகதூர் வி.கிருஷ்ணமாச்சாரி,
ஜெ.லாஸரஸ்,
டி.இராமகிருஷ்ணபிள்ளை,
எம்.சேஷகிரி சாஸ்திரிகள்,
எம்.இரங்காச்சாரி,
டி.எம்.சுப்புநெடுங்காடி,
எஸ்.மங்கோஷ்ராவ்,
எம்.கிருஷ்ணன்,
சி.வி.சுவாமிநாத ஐயர்(விவேகசிந்தாமணி - ஆசிரியர்).


மேற்குறிப்பிட்டவர்களில் தமிழ், கன்னட, கேரள, ஆந்திர அறிஞர்கள் உள்ளனர். இச்சங்கத்தின் முக்கியக் கொள்கைகளாவன:
 
பழமை மிக்க திராவிட மொழி நூல்களை வெளியிடுதல்.

அவ்வப்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்தல்.
தரமான விஞ்ஞான இலக்கிய நூல்களை மேலே குறிப்பிட்ட மொழிகளில் வெளியிடவோ, அல்லது வெளியிட முன்வருபவர்க்கு உதவி அளித்தல்.
சிறந்த நூல்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள் வழங்குதல்.
ஒவ்வொரு மொழியிலும் பத்திரிகைகள் வெளியிடல்.
மேற்காணும் அமைப்புகள் அந்த நாளில் புதிய சிந்தனைகளை வெளியிட்டன. தமிழ் வளர்ச்சியின் தொடக்ககால முயற்சிக்கு தூண்டுதல் அளித்தன.
 

நன்றி: தமிழ்மணி (தினமணி)

 

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved