Tuesday 09th of February 2016

Home கலைகள் பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி
பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 13 June 2009 07:14

 

பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி

பொன் .திருநாவுக்கரசு

 

 பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின் உணர்வுகளையும், உணர்வின் வெளிப்பாடுகளையும், யாரால் மறைக்க முடியும்? பழந்தமிழரின் உள்ளத்திலே ஏற்படும் மகிழ்ச்சி, அன்பு, கோபம், துக்கம், கவலை, ஏக்கம், காதல், கனிவு, போட்டி என உணர்வுகள் பலவும் வெவ்வேறானாலும் உண்மை, நீதி, அன்பு, சமத்துவம் என உரிமைகள் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்றõரிடமிருந்து உணரும்போதுதான் எதிர்ப்பு கிளம்பி போர்க்குணமாகப் பரிணமிக்கிறது. அத்தகைய பரிணாமங்கள் தான் நம் மூத்த குடிகளின் கைவரிசைகளாகவும், இம் மண்ணின் கலைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கிராமியக் கலைகளில் இருந்தே நம் சாஸ்திரிய நடனமான பரதநாட்டியம் தோற்றம் பெற்றுள்ளது என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. இக்கிராமியக் கலைகள் ஒரு சில கிராமங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

 

இக்கலையை காசுக்காக ஆசைப்பட்டு கலை சேவை செய்வதாக சிலர் நம் மண்ணில் கலைகளை கடைச்சரக்காகவும் கையாளுகின்றார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் தமிழர் வாழ்வையும் அவர்தம் உரிமை மொழியும் கலைவழி மீட்டெடுக்க இந்த மண்ணில் கலைகளையே ஆயுதமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்தவொரு கலை வடிவமும் அது உயிர் வாழ்வதற்கான சமூகக் காரணங்கள் உள்ளவரைதான் உயிர் வாழும். சமூகக் காரணங்கள் மாறும்போது அக்கலைகள் தானாகவே அழிந்துவிடும். எனவே, இக்கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்காகவே இதன் ஒரு முயற்சியாக மக்கள் பண்பாடு பற்றி ஒரு விழிப்புணர்வை பயிற்சிகள் மூலம் கொடுப்பதற்கு முயற்சி செய்தார்கள். இம்முயற்சியின் பயனாகத் தோற்றம் பெற்ற கலைக்கூடமே நாகர்கோவில் "களரி மக்கள் பண்பாட்டு மையமும்', "திண்டுக்கல் சக்தி மையமும்' ஆகும். இம்மையத்தின் ஆசான்கள் மூலம் பல மாணவர்களுக்கு கிராமியக் கலையை கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறு பாமரர் மட்டுமின்றி படித்தவர்களும் பயி ன்று திறனடைந்தார்கள். இக்களரி மையத்தால் தென்னிந்தியாவில் மட்டுமன்றி மேலைத்தேய நாடுகளிலும் இக்கலை கொண்டு செல்லப்பட்டது. இக்கலைகளின் பிரிவுகளான கும்மியாட்டம்,கோலாட்டம், ஒயிலாட்டம், லெசீம் ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் என்பனவாகும். இவைபோன்று இன்னும் பல ஆடல் வகைகள் உள்ளன.

 

கும்மியாட்டம்:

 

பெண்கள் வட்டமாகச் சுற்றிவந்து கைகளால் கொட்டி குனிந்து நிமிர்ந்து ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். கும்மாய், கும்முதல்,குழுமி என்பதிலிருந்து கும்மி என்று வந்தது. பழந்தமிழ் இலக்கிய நூலான அகநாநூறு, சிலப்பதிகாரத்தில் "கொம்மை' என்ற சொற்களும் வருகின்றன. கோயில் விழாக்கள், பூப்பு நிகழ்ச்சி, மழை பெய்ய வேண்டுதல் போன்ற வைபவங்களுக்கு கும்மி ஆடப்படுகின்றது.

 

கும்மி

 

ஆடும் போது முளைப்பாரி, குத்துவிளக்கு, மலர்க்கூடை, பலகாரக் கூø ட வைத்து ஆடுவார்கள். கும்மி நடனத்தின் தாளம் 6/8 அல்லது 12/8 என்ற வேகதாளம் கொண்டது. இத்துடன் தோல் பானை, சிங்கி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்டதே கும்மியாட்டமாகும்.

 

கோலாட்டம்:

 

கோலாட்டத்தில் நிறங்கள் தீட்டப்பட்ட கோல்களைக் கொண்டு தாளத்திற்கும், இசைக்கும் ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று தட்டி ஒலியெழுப்பி பெண்கள் ஆடும் நடனம் இதுவாகும். தமிழகத்தில் பல இடங்களிலும் மற்றும் குஜராத், ஒரிசா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் இது ஆடப்படுகின்றது. தமிழகத்தில் கண்ணன் பிறப்பு நாளன்று கோலாட்டம் ஆடுவதும் ஒரு மரபாக உள்ளது. மற்றும் அரச விழாக்கள், கல்விக்கூட விழாக்கள், சமூக விழிப்புணர்வுக்காகவும் ஆடப்பட்டு வருகின்றன. கோலாட்டத்தில் நேர்கோட்டு வடிவம், பின்னல் வடிவம், வட்டவடிவ முறை, கூட்டவடிவ முறை அல்லது சிலுøவக்கோல் என்றும் வடிவங்கள் உண்டு. பாடலுக்கு ஏற்ப தவில், டோலக் போன்ற இசைக்கருவிகள் பயன்படுகின்றன. இவ்வாட்டத்தில் நாடகப்பாணியும் பயன்படுத்தப்படுகின்றது.

 

ஒயிலாட்டம்:

 

ஆண்கள் குழுவாக கைக்குட்டை வைத்துச் சுழற்றித் தங்கள் ஆண்மை அழகு வெளிப்படும் வண்ணம் ஆடும் ஆட்டம் ஒயிலாட்டம் எனப்படும். ஒயிலென்றால் அழகு, அலங்காரம், ஒய்யாரம், சாயம் எனப் பொருள்படும். கோயில் விழாக்களிலும் கத்தோலிக்க, கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் ஆடப்பட்டு வருகின்றன. பாடல், ஆடல், உரையாடல் என்பவற்றைக் கொண்டுள்ளது. தற்காலம் உரையாடல் வழக்கில் இல்லை. அடவுகளின் வேகத்தை ""தக்கு, காலம்'' என இரண்டாகப் பிரிக்கலாம். மேலும் ஒயிலாட்டத்தின் அடவுகளை அடி, சாரி, தட்டு என மூன்று வகையாக பிரித்துள்ளனர். இவற்றிற்கு பயன்படுத்தும் இசைக்கருவி தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி என்பனவும் அத்துடன் காலில் சலங்கை கட்டியும் ஆடுவார்கள்.

 

லெசீம் ஆட்டம்:

 

இந்த ஆட்டத்தில் லெசீம் என்ற இசைக்கருவியைப் பயன்படுத்துவர். எவ்வாறெனில் லெசீமைக் கையில் பிடித்துக் கொண்டு தட்டியும், இழுத்தும் ஒலியெழுப்பி அடவுகளை ஆடும் ஆட்டம் லெசீம் ஆட்டமாகும். சால்ரா போன்ற ஒலியை எழுப்பும் லெசீம் சிறிய கட்டை, நீண்ட கட்டை என்ற இரு கட்டைகளினாலும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நடனம் ஒரு மராட்டிய நடனமாகும். இந்த நடனத்தை மராட்டிய மன்னன் சிவாஜி தனது போர் வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்று கருதப்படுகிறது. இந்நடனம் பிரசாரங்கள், ஊர்வலங்கள், வீதி நாடக நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் ஆடப்படுகின்றது. இந்த ஆட்டத்தின் அடவுகள் எழுச்சியும், ஆவேசமும் எழுப்பும் ஆட்டமாகும். இவற்றில் தவில், செண்டை அத்துடன் லெசீம் எழுப்பும் இசைக்கருவியும் முக்கிய இடம் வகிக்கின்றது.

 

கரகாட்டம்:

 

அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். செம்பின் வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர். குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன.

 

பறையாட்டம்:

 

பறை அல்லது தப்பு என்கின்ற இசைக்கருவியை இடது கை தோளில் தொங்க விட்டபடி தன் மார்போடு அணைத்து நீளமான குச்சியை இடது கையினாலும், சிறிய குச்சியை வலது கையினாலும், பிடித்து தாளங்களை அடித்து அடவுகளை ஆடுவது பறை ஆட்டம் ஆகும். தப்பு அடித்து ஆடுவதால் தப்பாட்டம் எனவும், பறையர் சாதியினரால் ஆடப்பட்டதால் பறையாட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பறை மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிச் சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலை இழுத்து ஒட்டிச் செய்யப்படும். ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்ட "சிம்புக்குச்சி' (மூங்கில் குச்சி) யைப் பயன்படுத்துவர். இதனை இடக்கையிலும், மற்றும் பூவரசக்கம்பில் செதுக்கப்பட்ட அரையடி நீளமும் மூன்று செ.மீ. சுற்றளவுமுள்ள "அடிக்குச்சி' வலது கையிலும் வைத்து அடித்து ஓசை எழுப்பப்படும். தப்பாட்டம் முன்பு "சாவு மேளம்' என்றும் உயர் சாதியினர் கூறினர். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோயில்களிலும், தேவாலயங்களிலும், அரச விழாக்களிலும் தப்பாட்டம் ஆடப்படுகிறது. இவ்வாட்டத்தில் பல அடிமுறைகள் உள்ளன. அவற்றில் சில சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, ஜாயிண்டு அடி, மருள் அடி, சாமி சாட்டுதல் அடி, சினிமா அடி, மாறடித்தல் அடி,வாழ்த்து அடி என்பவையாகும். இவற்றுக்கு துணைக் கருவிகள் ஆவன மரம், சிங்கி, செண்டை, மேளம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

 

சிலா ஆட்டம்:

 

கையில் மான் கொம்புகளை வைத்து விலாவில் அலகு குத்தி நேர்த்திக்காகவும், வேண்டுதலுக்காகவும் சிலம்பு அடவுகளோடு ஆடப்படும் நடனம் சிலா ஆட்டம் எனப்படும். மான் கொம்புக் கருவியானது இதை ஆடுகின்ற மக்களால் தயாரிக்கப்படுகிறது. நேராக சுழன்று வளைந்திருக்கும் இரு மான் கொம்புகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றதை கீழ் நோக்கியும் பிடித்து ஆடுவர். சிலர் உண்மையான மான் கொம்பை வைத்து ஆடுவார்கள். இது ஒரு நேர்த்தி நடனம் என்பதால் விரதம் இருத்தல், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குகள் கடைப்பிடித்தல் போன்ற பல நிபந்தனைகள் உண்டு. இந்நடனம் நேர்த்திக்காக ஆண்கள் மட்டும் ஆடும் நடனம். ஆசான் ஆடி முன் செல்ல தொடர்ந்து சிலா குத்தியவர்கள் பின் செல்வார்கள். மனிதன் மிருகங்களிடமிருந்து போர் உத்திகள், நடன உத்திகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டான் என்பதற்கு இந்த நடனம் நல்லதொரு எடுத்துக்காட்டு. இந்த நடனம் "மான்கள்' ஒன்றை ஒன்று எதிர்ச்சண்டையிடுவது போன்று ஆடப்படுகிறது. பாச்ச ஒயில், ஒத்தக்கிறுக்கி, இரட்டக்கிறுக்கி, நிரடு ஒயில், கால் தூக்கி ஒயில், ஒருகால் ஒயில், இரண்டு கால் ஒயில், ஐந்து கால் ஒயில், டேப் போன்றவை அடவு வகைகளாகும். சõமியாட்டத்திற்குரிய தவில், பம்பை, தப்பு போன்ற இசைக் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர்.

 

இக்கிராமியக் கலைகள் அனைத்திலும் ஆண்கள் தார்ப்பாச்சி, மஞ்சள் நிற ஜிப்பா சட்டை அணிந்து கொள்வார்கள். பெண்கள் சாரியை கிராமத்து முறையில் கட்டிக் கொள்வார்கள். காலில் சலங்கைகள் கட்டி ஆடுவார்கள். இவ்வாறு பல ஆடல் வகைகள் இருக்கின்றன. அவற்றில் இன்று ஆடப்பட்டு வரும் ஆடல்கள் இவையாகும். இன்று இந்தியா மட்டுமன்றி மேலை நாடுகளிலும் ஆடப்பட்டு வருகின்றன. இக்கிராமியக் கலை நம் நாடான ஈழ நாட்டிலும் அடவு முறைகள் இல்லாது ஆடப்பட்டு வருகின்றது. பாடசாலைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பழந்தமிழர் ஆடிய நடனம் இன்று அழிவுறாமல் அனைத்து நாடுகளிலும் பிரகாசித்து மிளிர்கின்றன.
 

 

 

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2016  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
  1  2  3  4  5  6  7
  8  91011121314
15161718192021
22232425262728
29      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved