Wednesday 21st of February 2018

கோபாலகிருஷ்ண பாரதியார் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 19 September 2009 09:00

கோபாலகிருஷ்ண பாரதியார் காலம் 1811-1896

திருமதி.கீதா சாம்பசிவம்

Jul 28, 2009

 

தஞ்சை ஜில்லா நரிமணம் என்னும் ஊரில் பிறந்த இவர் ஸத்குரு தியாகராஜ ஸ்வாமியின் சம காலத்தவர் ஆவார்.  இவரின் சங்கீத ஞானத்தைத் தியாகராஜரும், தியாகராஜரின் ஞானத்தை இவரும் பாராட்டினதாயும் சொல்லுவார்கள். பாரதியாரின்  தந்தை ராமஸ்வாமி பாரதி ஒரு பாடகராய் இருந்தார். கோபாலகிருஷ்ண பாரதியார் அத்வைதம், யோக சாஸ்திரம் போன்றவற்றை மாயவரத்தில் ஓர் குருவிடம் இருந்து கற்றார்.  உலக வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபடாவிட்டாலும் தன்னளவில் இவர் ஓர் துறவியைப் போலவே வாழ்ந்தார்.  குடும்பப் பின்னணியும் சங்கீதத்தைச் சார்ந்தே இருந்து வந்ததால் சிறு வயதில் இருந்தே சங்கீதத்தால் ஈர்க்கப் பட்டார்.  தானே பாடல்களை இயற்றிப் பண்ணமைத்துப் பாடும் திறன் இயல்பாகவே இவருக்கு வந்தது.  அவர் காலத்தில் இருந்த மற்ற சங்கீத வித்வான்களின் கச்சேரிகளையும் அடிக்கடி கேட்டுத் தன் சங்கீத்தத்தை மேலும் மெருகேற்றினார்.

 

அத்வைத சித்தாந்த்தை ஒட்டியே இவர் பாடிய பல கிருதிகள் மற்ற சங்கீத வித்வான்களாலும் பாடப் பட்டு இவர் காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்து வந்தது. பல சங்கீத வித்வான்கள் இவரிடம் வந்து தங்கள் தேவைக்கேற்றபடி கீர்த்தனைகளை இயற்றித் தரும்படிக் கேட்டுக் கொண்டு பாடுவதுண்டு.  இவர் தன் பாடல்களில் கடைசியில் தன் பெயரான கோபாலகிருஷ்ணா வரும்படியாக இயற்றி வந்தார். இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் ஒரு சங்கீத கதா காலட்சேபமாக இவர் காலத்திலும், அதற்கு அப்பால் இன்று வரையிலும் நிலை பெற்று இருக்கிறது.

 

இதை ஒட்டியே நந்தனார் என்னும் திரைப்படமும் பின்னாட்களில் எடுக்கப் பட்டு இவர் பெயரும், நந்தனார் சரித்திரமும் வரலாற்றில் சொல்லும்படியாக நிலை பெற்றது.  நந்தன் சரித்திரத்தைத் தன் காலத்திலேயே வெளியிட்டார் கோபால கிருஷ்ண பாரதியார். ஆனால் அப்போது திரிசிரபுரம் மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள் இதில் உள்ள இலக்கணப் பிழைகளை மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்தில் பிழை எனச் சொல்லி இந்த நந்தனார் சரித்திரத்திற்குப் பாயிரம் எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார். பின்னால் கோபால கிருஷ்ண பாரதியார் நடையாக நடந்து, மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தன்னுடைய என் சரித்திரத்தில் குறிப்பிடுகிறார். பரத நாட்டியத்தில் புகழ் பெற்ற பாலசரஸ்வதி இவரின் குறிப்பிட்ட சில பாடல்களைத் தன் அபிநயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்.  எம்.எம். தண்டபாணி தேசிகர் என்னும் சங்கீத வித்வானை நந்தனாராக நடிக்க வைத்து எடுக்கப் பட்ட கோபாலகிருஷ்ணபாரதியின் நந்தன் சரித்திரம் இன்றளவும் பேசப் படுகின்றது.

 

அப்போது சுதந்திரப் போராட்ட நாட்களாகவும் இருந்த காரணத்தால் தீண்டாதவர் குலத்தில் பிறந்த நந்தனாரைக் கதாநாயகராய்ப் போட்டு எடுத்த இந்தப் படத்தை  மஹாத்மா காந்தி தன் மற்ற சீடர்களுடன் பார்த்து மனம் உருகினார் என்று சொல்லப் படுகிறது.  நந்தனார் எவ்வாறு சிதம்பரம் நடராஜரைப் பார்த்து மகிழவேண்டும் என உள்ளம் உருகத் துடித்தாரோ , முக்தி பெற வேண்டும் என உருகினாரோ அவ்வாறே மஹாத்மா காந்தியும் இந்திய சுதந்திரத்தைக் காணத் துடித்ததாக அந்நாட்களில் பேசப் பட்டது.  காந்தியை நந்தனார் இடத்திலும், இந்திய சுதந்திரத்தை நடராஜராகவும் உருவகப் படுத்தப் பட்டதாய்ச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.  நந்தனார் சரித்திரத்தில் இருந்து சில பாடல்கள் கீழே:-

 

சிதம்பரம் போகாமல்...
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி

 

பல்லவி
சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்

சரணம்
பக்தியும் மனமும் பொருந்தின தங்கே
சத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே
ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே
பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே.

 

ஆண்டிக் கடிமைகாரன்...

ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ரூபகம்

பல்லவி
ஆண்டிக் கடிமைகாரன் அல்லவே - யான்
ஆண்டிக் கடிமைகாரன் அல்லவே (ஆண்டை)

அநுபல்லவி
மூன்று லோகமும் படைத்தளித்திடும்
ஆண்டவர் கொத்தடிமைக்காரன் (ஆண்டை)

சரணம்
ஆசைக் கயிற்றினில் ஆடி வரும் பசு
பாசம் அறுத்தவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)

தில்லை வெளிகலன் தெல்லை கண்டேறித்
தேறித் தெளிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)

சீதப் பிறையணிந் தம்பலத் தாடிய
பாதம் பணிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)


சபாபதிக்கு வேறு தெய்வம்...

ராகம்: ஆபோகி
தாளம்: ஆதி

பல்லவி
சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானமாகுமா [தில்லை சபாபதிக்கு]

அநுபல்லவி
கிருபானிதி இவரைப்போல
கிடைக்குமோ இந்த தரணி தனிலே [சபாபதிக்கு]

சரணம்
ஒரு தரம் சிவ சிதம்பரம்
என்று சொன்னால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமோ
ஆரியர் புலயர் மூவர் பாதம்
அடைந்தார் என்று புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம்
கோபாலக்ருஷ்ணன் பாடும் தில்லை [சபாபதிக்கு]

Last Updated on Saturday, 19 September 2009 09:04
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved