Wednesday 02nd of September 2015

Home சமய தத்துவங்கள் சைவ சித்தாந்தம் சைவம் வளர்த்த சிவனடியார்கள் மஹாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை
மஹாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 14 April 2012 15:30

திருமதி. கீதா சாம்பசிவம்

 

 

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்களைப்பற்றி. இவரைக்குறித்து அறியாதோர் இருக்க மாட்டார்கள். என்றாலும் ஒரு தெரிந்து கொள்வோம். அந்நாட்களில் திருச்சி என அழைக்கப்படும் தலமான திரிசிரபுரத்தில் அதவத்தூர் என்னும் ஊரில் சைவ வேளாளக்குடும்பத்தில் சிதம்பரம் பிள்ளை என்னும் கணக்காயருக்கும், அன்னத்தாச்சி எனப்படும் அவர் மனைவிக்கும் ஓர் ஆண்மகவு பிறந்தது.  1815-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் தோன்றிய இந்தக் குழந்தைக்கு மீனாக்ஷி சுந்தரம் என்னும் பெயர் வைத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர்.  தக்க பருவம் வந்ததும் திருவாவடுதுறையைச் சார்ந்த வேலாயுத முனிவரிடம் தமிழ் இலக்கியங்களையும், சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.  தமது பதினாறாம் பிராயத்திலேயே காவேரி ஆச்சியாரை மணந்து இல்லறத்தில் புகுந்தார்.  கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய பிள்ளையவர்கள், பல அறிஞர்களையும் நாடிக் கல்வி கற்றதோடு அல்லாமல், இரவில் பிச்சை எடுக்கும் இராப்பிச்சைக்காரனைக் கூட விடாமல் அவனிடமிருந்தும் பல பாடல்களைக் கற்றார்.  தண்டி அலங்காரத்தை இவ்வாறே தெருத்தெருவாக அலைந்து திரிந்த ஒரு பரதேசியிடம் கற்றார்.

 
மேலும் கல்வி கற்கும் ஆர்வத்தோடு திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார் பிள்ளையவர்கள். அப்போது 14-ஆம் பட்டம் குருமகா சந்நிதானமாக வேளூர் சுப்பிரமணிய தேசிகர் இருந்தார்.  அங்கே அம்பலவாண முனிவரிடம் சமய சாத்திர நூல்களைப் பயின்றதோடு தமக்குத் தெரிந்த தமிழை அங்கு இருந்த இளம் மாணாக்கர்களுக்குக் கற்றும் கொடுத்தார்.  திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்தபோது தான் திருவெண்ணீற்றுமை பி்ள்ளைத்தமிழ், சீகாழிக் கோவை, திருத்தில்லை யமக அந்தாதி போன்றவற்றை பிள்ளையவர்கள் இயற்றினார்.  இதைக் கண்ட ஆதீனத்தவர்கள் பிள்ளையவர்களுக்கு நுட்பமான தமிழ்ப்புலமை இருப்பதைக்கண்டு மகிழ்ந்து, அப்போதைய குரு மஹா சந்நிதானம் ஆன ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பெரும் வித்துவான்கள் நிறைந்த மஹாசபையில் “மஹாவித்துவான்” என்னும் பட்டத்தை அளித்துக்கெளரவித்தனர்.  சுப்பிரமணிய தேசிகர் காலத்தில் ஆதீனத்தொடர்பு கொண்ட பிள்ளையவர்கள் அவருக்குப் பின்னர் 15-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகர் காலத்திலும், அதன் பின்னர் 16-ஆம் பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் காலத்திலும் தொடர்ந்து ஆதீன வித்துவானாகவே திகழ்ந்தார்.
 
சிவபெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிள்ளையவர்கள் பெரிய புராணத்தை நன்கு படித்து அறிந்து பிரசங்கங்கள் செய்வதில் வல்லவராக இருந்தார்.  இதைப் பார்த்த செட்டி நாட்டுச் செட்டியாரான வன்றொண்டச் செட்டியார் என்னும் ஒருவர் சேக்கிழார் மீது பிள்ளைத் தமிழ் பாடச் சொல்லிப் பிள்ளையவர்களிடம் விண்ணப்பிக்கப் பிள்ளையவர்களும் அவ்வாறே பாடினார். பிள்ளைத்தமிழ் என்பது புலவர்கள் தாம் விரும்பும் இறைவனையோ, அரசனையோ, வள்ளலையோ  சிறு குழந்தையாகப் பாவித்துப் பாடுவதாகும்.  காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும், கடைசி மூன்று மட்டும் கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மாற்றத்தோடு பெண்பால் பிள்ளைத்தமிழாகவும் பாடப்படும்.  அவ்வாறே சேக்கிழாரைக் குழந்தையாகப் பாவித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழோடு சேர்த்துப் பிள்ளையவர்கள் பத்துப் பிள்ளைத்தமிழ் பாடி உள்ளார்கள்.
 
காப்புப் பாடல்கள் பொதுவாக விநாயகர், அம்பிகை, ஈசன் போன்றோரைக்குறித்தே அமையும்.  ஆனால் பிள்ளையவர்கள் சேக்கிழார் பிள்ளைத்தமிழின் அமைப்பில் சற்றே மாறுபட்டு காப்புப் பருவத்தில் திருத்தொண்டத் தொகையில் கூறப்பட்டிருக்கும் அடியார்களையே காப்புக் கடவுளராகப் பாடி இருக்கிறார்.  அதே போல் அம்பலவாணர் பிள்ளைத்தமிழில் காப்புக்கடவுளராக அகச்சந்தானக் குரவர், புறச்சந்தானக் குரவர், இவர்கள் வழிவந்த குருமஹாசந்நிதானங்கள் ஆகியோரைக் குறித்துப் பாடி இருக்கிறார்.
 
சேக்கிழார் பிள்ளைத்தமிழின் காப்புப் பாடல்:
 
கார்கொண்ட சோலைசூழ் ஆருரர் ஓர்அரைக்
கால்நம்பி ஆரூரர்முக்
கால்அரைக் கால்ஆக முடிவுசெய் தருள்மாக்
கவித்திசையின் வீற்றிருக்கும்
ஏர்கொண்ட தில்லைமூ ஆயிரர்முன் வழுவரும்
எழுவரும் தழுவரும்எம
திதயம் தழால்கொண் டுறைந்திடச் செய்தவரை
எப்போதும் ஏத்தெடுப்பாம்
பார்கொண்ட தொண்டர்வர லாறுசொல் புராணம்அம்
பலவர்அரு ளால்அமைந்த
படிதெரித் திடஉலகெ லாம்எனும் சுருதிநாப்
பண்ணும்ஈற் றும்பொருத்திப்
பேர்கொண்ட சைவபரி பாடைஅறி வரியசம்
பிரதாயம் முதலியாவும் 
பிறங்கத் தெரித்தெம்மை ஆண்டகுன் றத்தூர்ப்
பிரானைப் புரக்கஎன்றே
 
 
இது சேக்கிழார் பிள்ளைத் தமிழின் காப்புச் செய்யுளாகும்.  இதைத் தவிரவும் பிள்ளையவர்கள் திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றம்மை பிள்ளைத்தமிழ்,  திருவானைக்கா அகிலாண்டா நாயகி பிள்ளைத்தமிழ், உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ். திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை அம்மைப் பிள்ளைத்தமிழ், திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்,   திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ், திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் ஆகிய பிள்ளைத் தமிழ்ப்பாடல்களைப்பாடியுள்ளார்.
 
கீழுள்ள பாடல்கள் அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழின் காப்புப்பருவத்தின் பாடல்களில் முதல் பாடல் திருநந்தி தேவரையும்  அடுத்தது சனற்குமாரர் நால்வரையும் குறிப்பிடுகிறது. இது தவிர சந்தானக் குரவர்கள், குருமஹாசந்நிதானங்கள் என அனைவரையும் காப்புப் பாடல்களில் பிள்ளையவர்கள் வாழ்த்திப்பாடி இருக்கின்றார்கள்.
 
பூமேவு வேதா கமப்பொரு ளடங்கலும் பொங்கொளிக் கைலைப்பிரான் -
பொற்பத் தெருட்டத் தெருண்டுஞா னக்குரவு பூண்டுமா லயனாதியோர்,
தாமேவு மணிமுடித் தலைவணங் குந்தொறுந் தாங்குந் தொறுந்தழும்பு -
தாட்புற மகங்கொண்டு பொலிநந்தி நாயகன் றன்பெரும் புகழ்பரசுவாம்,
பாமேவு பேருலகர் கருமவள விற்கருவி பற்றியோ ருழியெய்தலே -
பாங்கென வுணர்ந்திடத் தொழிலொன்று கோடலிற் பகருநான் முகமொழித்துத்,
தேமேவு முகமொன்று தழுவியா வடுதுறை செழிக்கவதில் வீற்றிருக்குஞ் -
செல்வனைக் குரவர்தங் கோனையம் பலவாண தேவனைக் காக்கவென்றே.
(1)
 
சனற்குமாரமுனிவர் - வேறு.
 
838 எங்கள் பொதியத் திருமுனிவற் கியைந்த பழங்காப் பியக்குடியோ
னென்னக் கருணைச் சயிலாதிக் கியைந்து பிரமன் மான்முதலோர்
தங்க ளுணர்விற் கப்பலாய்த் தனித்தா ருணர்விற் குள்ளொளியாஞ்
சனற்கு மார முனிவர்பிரான் சரணாம் புயங்க டலைக்கணிவா
மங்கள் வழியு மாமலர்த்தா ளகத்துப் போகட் டுறத்தேய்த்த
வதனை முடிக்கொண் டனனெனமண் ணறையா வாறு திருமுடிமேற்
றிங்க ளொழித்து வளர்செல்வத் திருவா வடுதண் டுறைமருவித்
திகழுங் குருவம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.
 
 
1815-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம் நாள் பிறந்த பிள்ளையவர்கள் 61 வயது வரை வாழ்ந்தார்.  தம் வாழ்நாளில் பாதிக்காலத்துக்கும் மேல் திருவாவடுதுறை ஆதீனத்துடன் உள்ள தொடர்புகளுடனேயே கழித்தார்.  மூன்று பட்டத்து குருமகாசந்நிதானங்களுடன் நெருங்கிப் பழகிய பிள்ளையவர்களுக்குப் பல சீடப்பிள்ளைகள் உண்டு.  அவர்களில் முக்கியமானவரும், முதன்மையானவரும் நாம் அனைவரும் அறிந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் ஆவார்.   தெய்வங்களில் மும்மூர்த்திகள் என பிரம்மா, விஷ்ணு, சிவனைச் சொல்வது போல இசைக்கலைக்கு மும்மூர்த்திகளாக கர்நாடக இசைக்கு முத்துசாமி தீக்ஷிதரையும், தியாராஜரையும், சியாமா சாஸ்திரியையும் சொல்லுவதுண்டு.  அதுபோல் தமிழிசைக்கு மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் ஆகியோரைச் சொல்வார்கள்.  அதுபோலத் தமிழ் உலகில் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழின் மும்மூர்த்திகளாகச் சொல்லப்படும் மூவரில் பிள்ளையவர்கள், ஆறுமுக நாவலர், வள்ளலார் ஆகியோரை ஆன்றோர் கூறுகின்றனர்.  தமிழ்ப் பதிப்புலகிலும் அவ்வாறு பெருமை பெற்றிருக்கும் மூவரில் நாவலரோடு சி.வை. தாமோதரம் பிள்ளையும், தமிழ்த்தாத்தாவையும் சொல்வார்கள். இத்தனை பெருமைகளைப் பெற்றிருக்கும் பிள்ளையவர்கள் தங்கள் ஆதீனத்தில் இருப்பதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதும் ஆதீனகர்த்தர்கள் தங்களுக்குக் கிடைத்தற்கரிய கெளரவமாகக் கருதினார்கள்.
 
பிள்ளையவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாடம் சொல்லுவார் எனத் தமிழ்த்தாத்தா சொல்கின்றார்.  கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் உண்ணும்போதும், பயணங்களிலும், உறங்கப் போகையிலும் கூடப் பாடம் சொல்லுவாராம்.  பாடங்களுக்குக் குறிப்புப் புத்தகங்களோ, ஏடுகளோ இல்லாமல் மனதில் மனப்பாடமாக இருந்தவற்றில் இருந்தே பாடம் சொல்லுவாராம்.  மாணாக்கர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியன கிடைக்கிறதா என்பதில் மிகவும் அக்கறை காட்டுவாராம். ஒரு சமயம் மாணாக்கர்களுக்குத் தங்கிப் பாடம் சொல்லவென்றே மாயவரத்தில் வீடு ஒன்றை வாங்கி மாணாக்கர்கள் அங்கேயே தங்கி உண்டு, உறங்கிப் பாடம் கேட்குமாறு ஏற்பாடுகள் செய்தார். பாடம் சொல்வதில் இனபேதமோ, மதபேதமோ இல்லாமல் அனைத்து இனத்தவருக்கும், மதத்தவருக்கும் பாடம் சொல்லி இருக்கிறார் பிள்ளையவர்கள்.  சில மாணாக்கர்களின் திருமணத்தையும் தம் சொந்தப் பொறுப்பில் நடத்திக் கொடுத்திருக்கிறார். சவேரிநாதர் என்ற கிறித்துவரும், நாகூர் குலாம்காதர் நாவலர் என்னும் இஸ்லாமியரும் அதில் குறிப்பிடத் தக்கவர்கள்.  சவேரிநாதர் பிள்ளையவர்களுக்கு அருகேயே எப்போதும் இருந்து சேவைகள் செய்தும் வந்திருக்கிறார்.  பிள்ளையவர்களின் மாயவரம் வீடு கிட்டத்தட்ட ஒரு குருகுலமாகவே திகழ்ந்து வந்திருக்கிறது.  தமக்குக் கிடைக்கும் சொற்பப் பணத்தையும் மாணாக்கர்களின் நலனுக்கெனச் செலவிட்டு விடுவார் பிள்ளையவர்கள்.  திருவாவடுதுறை ஆதீனம் தவிர, குன்றக்குடி ஆதீனமும், தருமை, திருப்பனந்தாள் ஆதீனங்களும் பிள்ளையவர்களின் வித்தையை மதித்துக் கெளரவித்தார்கள்.
 
திருவாவடுதுறை ஆதீனத்திலோ ஒரு படி மேலே போய்ப் பிள்ளையவர்களிடம் தங்களுக்குள்ள அன்பையும், மரியாதையையும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டனர்.  மதிய உணவு அளிக்கும்போது போடும் பந்திக்குப் பந்திக்கட்டு எனப் பெயர்.  அதில் துறவறத்தார் வரிசையில் எப்போதுமே ஆதீனகர்த்தர்களே முதலிடம் பெறுவார்கள்.  அதே போல் இல்லறத்தார் வரிசையில் எப்போதுமே பிள்ளையவர்களுக்கே முதலிடம் அளித்து மரியாதை செய்து வந்தார்கள்.  இம்மாதிரி ஆதீனங்களில் மதிய உணவு உண்ணும்போதே நல்ல சத்தான சிறப்பான உணவு பிள்ளையவர்களுக்குக் கிடைத்து வந்திருக்கிறது.  மற்றபடி தம் வீட்டில் அவருக்கு அவ்வளவு சிறப்பாக உண்ணமுடியாமல் உணவில் நெய் கூடச் சேர்த்துக்கொள்ள முடியாமல் நெய்யில்லாமலே உண்டிருக்கிறார் என்பதைப் பிள்ளையவர்களின் சரித்திரத்தை எழுதிய தமிழ்த்தாத்தா மூலம் அறிகிறோம். அந்நிகழ்ச்சி வருமாறு:
 
ஒருமுறை ஆதீனத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரம் படிக்கப்பட்டது.  பிற்பகலில் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சரித்திரம் முடிக்கையில் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல்(பனிரண்டு மணி) ஆயிற்று.  அதன் மேல் வீட்டிற்குச் சென்று உணவு உண்ண வேண்டாம் எனப் பிள்ளையவர்களை ஆதீனத்திலே உணவு உண்டுச் செல்லும்படி சொல்லவே பிள்ளையவர்களும் அதற்கு இசைந்து உணவு அங்கேயே உட்கொண்டார்.  பின்னர் தம்முடைய மாணாக்கர் விடுதியில் உணவை முடித்துக்கொண்டு தம்மைத் தம் வீட்டிற்குக் கொண்டு விட வந்த தம் அருமைச் சீடர் ஆன உ.வே.சாமிநாதையரிடம் பிள்ளையவர்கள், “இன்று மடத்தில் உணவு உட்கொண்டதால் நெய் கிடைத்தது.” எனச் சிறு குழந்தையைப்போன்ற சந்தோஷத்துடன் கூறினாராம்.  இதைக் கேட்ட ஐயரவர்களின் மனம் வருந்தியது என எழுதியுள்ளார்.   நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் இல்லாமல் நெய் இல்லாமலேயே உணவு அருந்தி வந்தாராம் பிள்ளையவர்கள்.  குறிப்பறிந்து எவரும் கொடுத்தாலொழியத் தாமாக இது வேண்டும்; அது வேண்டும் எனக் கேட்டுப் பெறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை.  விடாமல் பாடம் சொல்லும் ஆசிரியருக்கு நெய் சேர்த்து உணவு அருந்துவது எவ்வளவு முக்கியம் எனப் புரிந்து கொண்டிருந்த ஐயரவர்கள், தம் ஆசிரியரின் வறுமை நினைந்து வருந்தினார். 
 
பெரிய கவிஞராகவும், பெரிய பெரிய பிரபுக்களால் கொண்டாடப்பட்டவரும், பெரியதொரு ஆதீனத்தின் வித்துவானுமான பிள்ளையவர்களின் நிலை இருந்தால் விருந்து; இல்லையேல் மருந்து என்னும்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இதேபோல் ஒரு நாள் காலை பிள்ளையவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணிப் பலகை போட்டு அமர்ந்திருந்தார். அவருக்கு எண்ணெய் தேய்க்கும் ஆள் சமையலறையில் சென்று எண்ணெய் கேட்க எண்ணெயோ இல்லை; ஆகையால் வரவே இல்லை.  ஆனால் பிள்ளையவர்களுக்கோ இதில் கவனம் இல்லை;  நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் எண்ணெய் தேய்த்துக்கொள்ளும் நேரமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். பாடம் சொல்லும் கவனத்தில் தாம் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டி அமர்ந்திருந்ததையே மறந்துவிட்டார்.  இதைக் கவனித்த ஐயரவர்கள் வேறு வேலையாகப் போவது போல் எழுந்து வெளியே போய்க் காவிரிக்கரையிலுள்ள ஒரு கடையில் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து எண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து சமையலறைத் தவசிப்பிள்ளையிடம் கொடுத்துக் காய்ச்சித் தர வேண்ட, அவரும் அவ்விதமே கொடுத்தார்.  அதன் பின்னர் காய்ச்சிய எண்ணெய் வந்து பிள்ளையவர்களுக்கு எந்த விஷயமும் தெரியாமலேயே எண்ணெய்க் குளியலும் நடந்தது.
 
ஆனால் பிள்ளையவர்களின் இந்த வறுமைக்கு முக்கியக் காரணம் அவரின் வள்ளல் தன்மையே ஆகும்.  தம்மிடம் வரும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தம் சக்திக்கு மீறிச்செலவு செய்து அவர்களின் தேவையை நிறைவேற்றி வந்தார்.  அதனாலே அவருக்கு வறுமை ஏற்பட்டது என்பது சிலரின் கூற்று. அந்நாட்களில் சைவத் திருமடங்களில் தமிழ் கற்றுக் கொடுத்தாலும் அவற்றில் சங்கப்பாடல்கள் இடம்பெறாது.  ஏனெனில் சங்கப் பாடல்களில் காதலும், வீரமுமே முதன்மை பெற்றிருந்தது. பெரும்பாலான புலவர்கள் சங்கப் பாடல்களை அறிந்திருந்ததில்லை.  காப்பியங்கள், புராணங்கள், சமய இலக்கியங்கள், பிரபந்தங்களே கற்பிக்கப்பட்டன.  சங்கப் பாடல்களுக்கு அசைவ நூல்கள் என மறைமுகப் பெயரால் அழைத்தனர்.  ஆகவே பிள்ளையவர்களும் அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் சங்க இலக்கிய ஏடுகள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றைக்கூடக் கற்பித்ததில்லை.  ஐயரவர்களுக்கும் பிள்ளையவர்கள் சங்கப் பாடல்களைக் கற்பித்ததில்லை.  1871-ஆம் ஆண்டு முதல் பிள்ளையவர்களின் இறுதிக்காலமான 1876-ஆம் ஆண்டு வரை அவரிடம் பாடம் கேட்ட சாமிநாத ஐயரவர்களுக்கு இந்தப் பெயரைச் சூட்டியதும் பிள்ளையவர்களே ஆகும்.  உ.வே.சாமிநாத ஐயர் என இன்று அறியப் படும் தமிழ்த்தாத்தாவின் உண்மைப் பெயர் வேங்கடராமன் ஆகும்.  அந்தப் பெயராலே அவர் அறியப் பட்டிருந்தார்.  ஆனால் ஐயரவர்களின் வீட்டில் சாமா என்னும் பெயரால் அழைப்பதை அறிந்த பிள்ளையவர்கள் கிட்டத்தட்ட தீக்ஷா நாமம் என்று சொல்லும்படி ஐயரவர்களின் பெயரை "சாமிநாதன்" என மாற்றினார்.
 
பிள்ளையவர்களின் வரலாற்றை அவருடைய முதன்மை மாணாக்கரான ஐயரவர்கள் 1933-34 ஆம் ஆண்டுகளில் இரு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.  ஐயரை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பிள்ளையவர்களுக்கு சங்கீதத்தில் ஈடுபாடு கிடையாது.  ஆனால் அந்நாட்களில் தமிழ் கற்போர் பலரும் தமிழ்ப் பாடல்களைப் பண்களில் அமைத்துப் பாடும் வண்ணமே கற்று வந்தார்கள்.   அதற்காகவென்றும், சங்கீத பரம்பரையான குடும்பத்தில் பிறந்ததாலும் ஐயரவர்களும் சங்கீதம் கற்று வந்தார்.  அந்நாட்களில் பிரபலமான கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சங்கீதம் கற்று வந்தார்.  ஆனால் இதைப் பிள்ளையவர்களின் சம்மதம் பெறாமலேயே செய்ய வேண்டி வந்தது.  மேலும் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரத்தை இசைப்பாடலாக இயற்றியதில் இலக்கணத் தவறுகளும், சொற்குற்றமும், பொருட்குற்றமும் நிரம்பி இருந்ததாகவும் பிள்ளையவர்களின் கருத்தாக இருந்தது.  அதற்காகவே கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்திற்குச் சிறப்புப் பாயிரம் எழுதிக் கொடுக்க மிகுந்த தாமதம் செய்துவிட்டுப் பின்னர் பாரதியார் வாயிலாகவே பாடல்களைக் கேட்டு மனம் உருகி எழுதிக் கொடுத்தார்.  ஆனால் அதற்காவென தன் கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.
 
திருவாசகத்தில் தில்லையைக் குறித்த பாடல்களே பெரும்பாலும் காணப்படுவதைப் போல, பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் என்னும் பிள்ளையின் பாடல்களே காணப்படுவதைப் போல, பிள்ளையவர்களின் வாழ்நாளில் பாதி திருவாவடுதுறை ஆதீனத்திலேயே கழிந்தது.  இவர் அங்கிருக்கையிலேயே பல தல புராணங்களையும் பாடி இருக்கிறார். காசி ரகசியம், சூத சங்கிதை ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு அல்லாமால் குசேலோபாக்கியானமும் எழுதினார்.  ஆனால் குசேலோபாக்கியானம் மட்டும் இவரது மாணாக்கரான வல்லூர் தேவராசப் பிள்ளை என்பவர் பெயரால் வந்துள்ளதாய்க் கூறப்படுகிறது.  எழுபது புராணங்கள், பதினொரு அந்தாதிகள், பத்துப் பிள்ளைத்தமிழ்கள், இரண்டு கலம்பகங்கள், மூன்று கோவைகள், ஏழு மாலைகள், உலா, லீலை ஆகியவற்றில் ஒவ்வொன்றும் எழுதி இருப்பதாய்க் கூறுவார்கள்.  அந்தாதிகளில் பதிற்றுப்பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி ஆகியன அடங்கும்.  இவரது சீடரான ஐயரவர்கள் இவற்றை எல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்து திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் வெளியிட்டிருக்கிறார். 
 
சங்கத் தமிழ் தந்த சாமிநாதையரைத் தமிழுலகுக்குத் தந்தவரே பிள்ளையவர்கள் எனலாம்.  தம் மாணாக்கரிடம் ஆசிரியரும், ஆசிரியரிடம் மாணாக்கரும் கொண்டிருந்த பற்றும் பாசமும் வியக்கத்தக்கது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பிள்ளையவர்களின் கடைசிக்காலம் வரையிலும் அவரிடம் பாடம் கேட்டவர் சாமிநாதையர்.  பிள்ளையவர்களின் சமகாலத்தவரான ஆறுமுக நாவலரிடமும் பிள்ளையவர்கள் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.  இருவரும் உரையாடுவதைக் கேட்கவென்றே சீடர்கள் ஆவலோடு காத்திருப்பார்களாம்.  ஆறுமுக நாவலரும் பிள்ளையவர்களும் கொண்டிருந்த நட்பைக் குறித்த செவிவழிச் செய்தி ஒன்று கூறுவதாவது:  மார்கழிக் குளிரில் ஒருமுறை மதுரை வையை நதியில் இருவரும் சீடர்கள் சூழக் குளிக்கையில் குளிர் தாங்காமல் நாவலர், “பனிக்காலம் கொடியது.” எனச் சொல்ல அதைக் கேட்ட பிள்ளையவர்கள்,” பனிக்காலம் மிக நல்லது.” என பதிலிறுத்தாராம்.  நாவலர் அவர்கள் கருத்தைப் புரிந்து கொண்டு நகைக்கச் சுற்றிலும் இருந்தவர் விளங்காமல் திகைக்கப் பின்னர் விளக்கினார்களாம். பனிக்கு, அதாவது குளிருக்கு ஆலம்(விஷம்) மிக நல்லது எனப் பிள்ளையவர்கள் கூறியதாகத் தெரிவித்தாராம் நாவலர்.  இது குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.
 
இவ்வாறு பணிவும், பொறுமையும் நிரம்பப் பெற்று எப்போது வேண்டுமானாலும் பாடல்களைப் புனையும் திறமையையும் பெற்று பிறரிடம் குற்றம் காணாமல், அனைவருக்கும் உதவிகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்த பிள்ளையவர்கள், 1876-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் தம் மாணவரில் ஒருவரான சவேரிநாதப் பிள்ளையின் மடியில் சாய்ந்து உயிரை விட்டார்.  இவரது முழுமையான வரலாற்றை உ.வே.சாமிநாதையர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  September 2015  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
282930    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved