Monday 23rd of April 2018

Home வரலாறு சிங்கை ஆலயங்கள் தண்டாயுதபாணி கோயில் - டேங் ரோடு
தண்டாயுதபாணி கோயில் - டேங் ரோடு PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 20 June 2009 19:17


தண்டாயுதபாணி கோயில் - டேங் ரோடு
கிருஷ்ணன், சிங்கை

 

முருகனை  முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயம் கெளமாரமாகும். தமிழரின் முழுமுதற் கடவுள் எனவும் முருகனைப் பகர்வதுண்டு. சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். சிவனது ஐம்பொறிகளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு. இவை ஆறினாலுமான ஒளித்திரள் சரவணப் பொய்கையில் பிரவேசித்து ஆறுமுகன் உருவானான் என்பது விளக்கம். சிவசொரூபம் சக்திசொரூபம் ஆகிய இரண்டும் அமையப் பெற்றவன் முருகன். மூலாதாரம், சுவாதிஷ்டானம் முதலிய உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கு ஒப்பானது முருகனது அறுபடை வீடுகள். ஆறுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது பல்வேறு தத்துவங்களைப் புகட்டுகிறது.

 

 

 

அநுபவத்தில், நித்தியமாயும் எங்கும் நிறைவாயும்,
கோணத்தில் ஆறாயும்(ஆராயும்),மதங்களில் ஆறாயும்,
சமயத்தில் ஆறாயும் விளங்குபவனே சுப்பிரமணியம்.

 

ஞானிகள், கடவுளை எங்கும் கண்டு வணங்குவரென்றும்,
யோகிகள் இருதயத்தில் கண்டு வணங்குவரென்றும், கர்ம
காண்டிகள் அக்கினியில் கண்டு வணங்குவரென்றும்,
பத்திகாண்டிகள் விக்கிரகத்தில் கண்டு வணங்குவரென்றும்

 

விதித்துள்ளது.

 

மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும்.மேலும் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும் கந்தசஷ்டி நோன்பானது முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ்வாறு நாட்களின் போது மக்களின் மனதிலுள்ள காமம்,வெகுளி, ஈயாமை, செருக்கு, பொறாமை என்னும் ஆறு பகைகள் அழிக்கப்படுகின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் சிறிய தீவாக இருந்தபோதும் இன்று பொருளாதாரத் துறையில் வளமிக்க நாடாக திகழ்கிறது.1819 ஖ல் சிங்கப்பூருக்கு வந்த கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஸர் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு வித்திட்டார். மீன் பிடித் தீவாக இருந்த சிங்கப்பூரைக் கப்பல் துறைமுமாக மாற்றி வியாபாரத் தளமாகவும் மாற்றியமைத்தார்.

 

புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பெரும் முயற்சியில் உருவான கோயில் தான் டேங் ரோட்டில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில். ஆரம்ப காலத்தில் சிங்கப்பூருக்கு வந்த செட்டியார் சமூகம் வர்த்தகம், வியாபாரம், கொடுத்து வாங்கும் தொழில்களில் (வட்டித் தொழில்) மட்டுமல்லாது வங்கித் தொழில்,அரசாங்க அலுவலத்திலும், தனியார் தொழிற்துறைகளிலும், கல்வி நிலைங்களிலும், ஏனைய தொழில்களிலும் தங்களை ஈடுப்படுத்தி சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளார்கள்.

 

 

 

நாட்டுக்கோடை செட்டியார்கள் சிங்கையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு என்னும் நூலை எழுதிய திரு. அ. இராமநாதன், 1824-ல் நகரத்தார் சிங்கப்பூருக்கும்,பினாங்கிற்கும் வர்த்தகம் செய்ய பாய் மரக்கப்பலில் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.முதன் முதலில் தங்களின் கொடுத்து வாங்கும் தொழிலை சிங்கப்பூர் மார்க்கெட் ஸ்திரீட்டில் மிகச் சிறப்பாகத் தொடங்கி நடத்தி வந்தார்கள். கப்பல் துறை மிக அருகில் இருந்த காரணத்தால் அங்கு கிட்டாங்கி எனப்படும் பொருட்கள் சேமித்து வைக்கும் பெட்டகம் அமைந்து இருந்தது.1828-லிருந்தே நாட்டுக் கோட்டை செட்டியார் வர்த்தக சங்கம் டேங் ரோட்டில் இயங்கி வந்துள்ளது. சுமார் 400 குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள்.

 

 

 

பொதுவாகச்  செட்டியார்கள் சைவத்தின் மீதும், சைவ சித்தாந்தங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். சாத்வீக உள்ளம் அமைந்த செட்டியார்கள் எதிர்பார்ப்பு இல்லாத இறை பக்தி கொண்டவர்கள்.அதனால்தான் நிறைவாக வாழ்ந்தார்கள்.நகரத்தார் பார்வையில் சிங்கப்பூரில் இரண்டு கோயில் இருந்து வருகின்றன. ஒன்று தெண்டாயுதபாணி கோயில், மற்றது சைனா டவுனில் அமைந்துள்ள லயன் சித்தி விநாயகர் கோயில்.

 

முருகனையும் சிவனையும் முதற்முதல் கடவுளாகக் கொண்டு வழிப்பட்டார்கள் என்றாலும், இங்கும் குறிப்பாக முருகனையே முதன்மைப் படுத்தியே வழிபட்டார்கள்.ஏனெனில் இச்சமூகம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிவாச்சாரியார்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தக் கோயில் திருப்பணியிலும் ஈடுபடுவது கிடையாது.

 

 

 

 

அச்சிவாச்சாரியார்கள் அச்சமூககத்திற்கு, ஑சிவன் கோயில் கட்டினால் அங்கு சிவாகாம முறைப்படியே தினசரிப் பூஜைகள் செய்யப்படவேண்டும். அப்பூசைகளைச் சிவாசாரியாரே செய்ய வேண்டும்ஒஒ என்று அறிவுரை வழங்கி இருந்தனர். அந்தக்காலத்தில் சிவாச்சாரியார்கள் கடல் கடந்து செல்லத் தயாராக இல்லை. ஆகவே செட்டியார் சமூகம் பர்மா, தாய்லாந்து, வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சிவ ஆலயங்களைக் கட்டாமல் தெண்டாயுதபாணி கோயில்களையே கட்டினார்கள். (இன்றும் சிங்கப்பூர் தெண்டாயுதபாணி ஆலயத்தில் பண்டாரங்களே பூஜைகள் நடத்துகின்றனர்)

 

சில சிவாச்சாரியார்கள் கடலைக்கடக்கத் தீமானித்த பிறகே இந்தியாவுக்கு வெளியே சிவன் கோயிலை டேங் ரோடு தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் செட்டியார் சமூகம் கட்டியது.

 

டோங் ரோடு, தெண்டாயுதபாணி கோயில் வரலாறு

 

1859-ல் தான் செட்டியார்கள் தெண்டாயுதபாணி கோவிலைக் கட்டினார்கள் என்று கல்வெட்டு வரலாற்றுக் குறிப்பு காட்டுகிறது. முருகப் பெருமானாகிய தெண்டாயுதபாணியே மூலவராக இருக்கிறார்.ஆதியில் சிங்கப்பூர் ஆற்றங்கரை ஓரத்திலிருந்து ஒரு அரசமரத்தடியில் முருகனின் வேலை மட்டும் நாட்டி, ஸ்தாபனம் செய்து அபிஷேக ஆராதனை வழிபாடு பூஜைகள் செய்துள்ளார்கள். 

 

[1859 ஆண்டுகளில் இங்கிருந்துதான் மலாயாவுக்குச் செல்லும் இரயில் நிலையம் அமைந்துள்ளது.இரயில் இஞ்சினுக்கு வேண்டிய தண்ணீர் நிரப்ப உயரமான நீர் தொட்டி (TANT) கட்டி இருப்பார்கள்.அதுவே காரணப் பெயராக டோ ங் ரோடு (Tank Road) ஆகிவிட்டது] இந்த நிலம் ஒக்ஸ்லி எனும் டாக்டருக்குச் சொந்தமான நிலம். அவரிடமிருந்து நிலத்தை வாங்கி கோயிலைக் கட்ட ஆரம்பித்துள்ளார்கள். முதல் திருக்குட நன்னீராடு விழா 4.4.1859-இல்  நடந்திருகிறது.பின்னர் 2.2.1936-லிலும், 7.7.1955 ஖லிலும் கோயில் திருப்பணி நடந்து, நன்னீராட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.

 

 

கருவறையின் நுழைவாயிலில் ஜம்பு விநாயகர் திருவுருவம் இடமுறமாகவும், இடும்பர் வலப்புறமாகவும் அமைந்துள்ளது. கோயிலின் முன்பக்கம் இரண்டு திண்ணைகள். பின்பு செட்டி நாட்டு வீடுகளிலுள்ள அலங்கார அமைப்பில் அர்த்த மண்டபம், கருவறை என்று முன்பு கோயிலிருந்தது. கார்த்திகை கட்டு என்று ஒரு கட்டட அமைப்பும் கார்த்திகை போன்ற நாட்களில் அன்னதானம் செய்வதற்கு 1859 முதல் 1981 வரை இருந்தது. முதன் முதற் தெய்வமான சிவபெருமானையும் 1878-ஆம் ஆண்டில் அருவுருத் திருமேனியான சிவலிங்கத்தையும் அவரது சக்தியாகிய உமையம்மையை வைத்து தனித்தனியே ஒரு கோயிலாகத் தெண்டாயுதபாணி கோயிலை ஒட்டியே கட்டி வழிபடத் தலைப்பட்டனர். 26.1.1886-ல் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

 

சிவபெருமானுக்குச் சொக்கலிங்கம்/சுந்தரேஸ்வரர் என்றும் அம்மைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டித் தொழுதனர். மதுரையிலுள்ள இறைவனை இறைவி பெயரையே தாங்கள் எழுப்பும் ஆலயங்களுக்கு பெயரிட்டு வழங்குவதை மரபாகக் கொண்டுள்ளனர். சிவன்,அம்பிகை இருவருக்கும் தனிதனிக் கருவறைக் கோயில்கள் இப்போதுள்ளன.

 

மூர்த்திச் சிறப்பு

 

தெண்டாயுதபாணி ஆலயத்தின் மூலவர் உண்மையில் வேல் வடிவிலேயே அமைந்திருக்கின்றார். முருகப்பெருமானின் வடிவம் தங்க அங்கியாக அவ்வேலின் மேல் சாத்தப் பெற்றிருக்கிறது. இதுவே பக்தர்கள் காணும் வழிபாடு.எனவேதான் இத்திருவுருவத்துக்கு முன்னர் மயிலுருவச் சிலையோ பலிபீடமோ இல்லை. மேலும் கருவறையில் உற்சவ விக்ரமாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகப் பெருமான் திருவுருவம் அருகில் வழிபாடு செய்யப்படுகிறது. நாள்தோறும் நடைபெறும் நீராட்டு அபிசேஷகம் மூலவரான வேலுக்கே செய்யப்படுகிறது. இதனைத் திரைமறைவில் செய்வதே வழக்கமாக இருக்கிறது. மகா சிவராத்திரியன்றும் வருடாபிஷேகத்தின் போதும் நீராட்டினைப் பக்தர்கள் கண்டு மகிழலாம்.

சிவன் கோயில் கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவிலும் இன்னொரு கருவறையில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளியிருக்கிறார்கள். சிவன்,அம்பிகையுடன் தெண்டாயுதபாணி, நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேசுவர், வயிரவர், அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, நவக்கிரங்கள் ஆகிய திருவுருவங்களும் உள்ளன.நடராசர்  சிவகாமி செப்புத் திருமேனி உருவங்கள் தனியே உள்ளன. இத்திருவுருவங்களுக்கு ஆகம முறைப்படி சிவாச்சாரியார்கள் பூசை செய்கின்றனர். தெண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர்.

 

கோபுர சிறப்பு

 

அருள் மணமும் கலையழகும் கொண்டு தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாகச் சிங்கப்பூர் டேங் ரோடு கம்பீரமாக எழுந்திருளியிருக்கின்றது தெண்டாயுதபாணி கோயில் தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகளைக் கொண்டு சிற்பச் செந்நூல் முறைப்படி இராசகோபுரம்,விமானங்களும்,எழில் சேர் சிற்பங்களும்,திருமண மண்டபமும் அமைக்கப்பெற்றுள்ளது.

 

சிற்பச் சிறப்பு

 

தமிழ்நாட்டுக் கோயில்களிலும் காணக் கிடைக்காத பல புதுமையான கலைசிற்பங்கள் தெண்டாயுத ஆலயத்தின் காணலாம்.சன்னதியில் உள்ள மண்டபத்தூண்களில் முருகனின் ஆறு சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.இவைகள் முருகனின் அறுபடை வீடுகளின் அமைப்பைச் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கோயிலின் விமானத்தைச் சுற்றியுள்ள 48 கண்ணாடி மாடங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் தெய்வச் சிற்பங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் அம்சங்கள்! விளக்கு ஒளியிலும் கதிரவன் ஒளியிலும் இந்தக் கண்ணாடிச் சிற்பங்கள் மின்னும் அழகே தனியானது.அலங்கார மண்டபச் சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்த வண்ண மயில் வடிவம் ஒன்றிருக்கிறது. திருவாச்சியுடன் கூடிய ஏழு உயரத்தில் ஆனந்தத் தாண்டவ நடராஜரும்,  வலப்பக்கம் மாணிக்கவாசகரும் இடபுறம் சிவகாமி அம்மையும் சுதை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

 

முக்கிய விழாக்கள்

 

 


சிங்கப்பூரின் முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக இருக்கிறது தைப்பூசம். இக்கோயிலின் முக்கிய விழாக்களில் தைப்பூசம் ஒன்றாகும்.மற்றும் நவராத்திரி,கந்தர் சஷ்டி லெட்சார்ச்சனை ஆகிய விழாக்களும் நடைபெறுகின்றன. தைப்பூச முதல் நாள் காலையில் சுவாமி வெள்ளி இரதத்தில் டேங் ரோட்டிலிருந்து புறப்பட்டு லைன் சிட்டி பிள்ளையார் கோயிலுக்குப் போய் சேர்ந்து,மாலை அங்கிருந்து நகரத்தார் காவடியுடன் புறப்பட்டு மீண்டும் தெண்டாயுதபாணி கோயிலை வந்தடையும்.

 

 

தமிழ்ப்பணி

 

கோயில் நிறுவாகத்தினர் சைவத்தையும்,தமிழையும் போற்றும் இயல்புடையவர்.ஆகையால் தமிழறிஞர்கள்,சமயச் சான்றோர்கள்,புலவர் ஆகியோரைக் கோயிலுக்கு அழைத்து சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடுகள் செய்கிறார்கள். திருமுறை வகுப்புகளும்,தேவார வகுப்புகளும் நடப்படுகின்றன.

 

                   பொருள் ஈட்டி அறம்பேணி, புகழ் வளர்த்து
                      நெறிநின்று பொருவில் ஈசன்
                   அருள் ஈட்டி வாழ்ந்துவரும் தனவணிகர்       


முகவரி:
Arulmigu Sri Thendayuthapani Temple
15, Tank Road,
Singapore 238065
Phone: +65 - 6737 9393
Fax: +65 - 6735 0804
e-Mail for Admin Related: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
e-Mail for Web Feedback: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
 

Last Updated on Saturday, 20 June 2009 19:29
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2012  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728293031 

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved