Wednesday 21st of February 2018

Home வரலாறு சிங்கை ஆலயங்கள் ஸ்ரீ மகா மாரியம்மன் [ஈ சூன்]
ஸ்ரீ மகா மாரியம்மன் [ஈ சூன்] PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 28 June 2009 10:51

 

ஸ்ரீ மகா மாரியம்மன்   [ஈ சூன்]
கிருஷ்ணன், சிங்கை

 

சிங்கப்பூர்த் தீவு ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்துவக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பார்வையில் இருந்த காலம் .'திரை கடலோடியும்  திரவியம் தேடு' எனும் முதுமொழிக்கிணங்க, இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வர்த்தகம் செய்யவும், வேறு பிழைப்பை நாடியும் தென்கிழக்காசிய நாடுகளில், குறிப்பாகச் சிங்கை, மலேசியாவில் குடியேறிய காலம்.

 

’கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இந்துக்களின் வாழ்வியலோடு ஒன்றிய எழுத்தில் இல்லாத சட்டம். தாய் நாட்டை விட்டு வெளிநாடு வந்தபோதிலும், இறை வழிபாட்டை மறவாத இந்துக்கள் கோவில் கட்டி, தங்கள் மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றைப் பேணுவதில் முனைந்தனர்; தத்தம் சக்திக்கேற்ப ஆங்காங்கு சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழி்பட்ட காலம் அது.

 

அந்தச் சூழ்நிலையில்தான்  சுமார் 75 ஆண்டுகள் முன்  பழைமையான [ஈ சூன்] ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலயம் தோன்றியது. இது சிங்கப்பூரின் வட பகுதியிலமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக இங்கு வாழ்ந்த தமிழர்கள் மகா மாரியம்மனை வழிபடு கடவுளாகக் கொண்டனர்.

 

 

 

எழுத்து வடிவத்தில் எந்த வரலாறும் இல்லாத நிலையில்,செவிவழிச் செய்திகளே இங்கு வரலாற்று ஆவணமாகப் பதிவாகின்றன.

 

மாரி எனும் சொல்லுக்கு மழை என்பது பொருள். நிலத்தை நிலமகள் என்றும், கல்வியைக் கலைமகள் என்றும், செல்வத்தைத் திருமகள் என்றும், ஆற்றலை சக்தி-மலைமகள் என்றும் அழைக்கிறோம். அதே போல் மழை தருபவள் மாரியம்மன்.  வெம்மையைத் தணிவித்து நமக்கும் இந்த பூமிக்கும் குளிர்ச்சியைத் தருபவள் மாரியம்மன்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற் பெருங்காவியம்.  அதில் இளங்கோவடிகள்
மழையை வணங்கி,வாழ்த்திப் போற்றும் பாடல் - 
               
”மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும்!!
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்.”

 

மாமழையைப் போற்றி வழிபடும் மரபின் நீட்சியே மாரியம்மன். வழிபாடு.மாரியம்மனும் தன்னை வழிபடுவோர்க்குத் தண்கருணை பொழிகிறாள். உலகைக் காக்கும் சக்தி மழைக்குண்டு. அது போன்று உலகைக் காப்பாற்றும் மாரி அன்னையே தாயாக, வானிலிருந்து நெகிழ்ந்துருகும் நீராக, உயிரினங்களை வாழவைக்கும் ஒப்பில்லா மழையாக, கருணை மழை பொழியும் காரிகையாக இருப்பதால் தமிழர்கள் எங்கு வாழ நேரினும் மாரியம்மனை வழிபடத் தவறுவதில்லை.

 

கோயில் வரலாறு

முற்காலத்தில் ஒரு   சிறுகுடிலினுள் மரத்தினால் செய்த மாரியம்மன் சிலையைச் செம்பவாங் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் வழிபட்டு வந்தாகச் சொல்லப்படுகிறது. பிறகு அந்த அம்மனின் திருவுருவம் சுதையினால் செய்யப்பட்டுச் செம்பவாங் இரப்பர் தோட்டத்தில் ஒரு சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாலயம் அப்பகுதியில் வசித்த மக்களுக்கு ஒரு முக்கிய சந்திப்பு இடமாக அமைந்தது.

 

 

இரண்டாம் உலகப் போர்  மேகம் சூழ்ந்திருந்த காலத்தில் (1941-1945) உயிருக்கே உத்திரவாதம் இல்லாத நிலையில் ஜப்பானியரின் கொடுமையான ஆட்சியில் ஆலயத்தை முறையாகப் பராமரிக்க இயலாமற்போனது. ஜப்பானியர் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்த் தொழிலாளர்களின் மக்கள்தொகை குறைந்து விட்டது. ஆகையால் செம்பவாங் 12-வது மைலில் இருந்து வந்த ஆலயம் 7-வது மைலிருந்த செம்பவாங் ஹில்ஸ் (Sembawnag Hill) எஸ்டேட்டிற்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


ஆலயத்தைப் பராமரிப்பதில் தொடர்ந்து இடர்களும், சிரமமும் ஏற்பட்டதால், 1948- ம் ஆண்டு சில தொண்டர்களின் முயற்சியால், நீ சூன் பகுதியில் [மண்டாய் ரோடு] 10-வது மைலில் ஆலயம் அமைக்கப்பட்டது. 1950 -களில் சுதையிலான தெய்வச் சிலைகள், மகாபலிபுரத்திலிருந்து தருவிக்கப்பட்ட கருங்கல் விக்ரஹங்களாக, ஸ்தாபனம் செய்து குடமுழுக்கு நிகழ்ந்தது.


1971-ம்  ஆண்டிலும்  ஒரு புனரமைப்பும், திருக்குட நன்னீராட்டும் நடந்தேறின.மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், கிருஷ்ணர் ஆகிய விக்ரஹங்களுடன் சனீஸ்வரன், நாகர் ஆகிய விக்ரஹங்களும் நிறுவப்பட்டன. அப்போது ஆலயத்தின் கூரையில் கலசம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

 

1981ல் நகர விரிவாக்கமும், சீரமைப்பும் விரைவாக நிகழ்ந்ததால் சிங்கப்பூர் அரசாங்கம் ஆலயத்திற்கான புதிய இடத்தினைத்  தேர்ந்தெடுக்கும்படி கோரியது. பக்தர்கள் எளிதில் வந்து செல்லும்படிப் போக்குவரத்து வசதி மிக்க ஒரு புதிய இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆலய நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது .

 

1993- ஆம்  ஆண்டு ஈ சூன் வீடமைப்புப் பேட்டையில் 2000 ச.மீட்டர் பரப்பளவில் 30 வருட காலக் குத்தகைக்கு 5 இலட்சம் வெள்ளிக்கு நில ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

 

1994 ம் ஆண்டு தொடங்கிய ஆலயக் கட்டுமானப்பணி 1996-ம்  நிறைவு பெற்று, செப்டம்பர் மாதம் 8-ம் நாள் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

 

மாரியம்மன் கோவிலின் மூலவர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன். கருவறை, முகமண்டபம் இவைகளுடன், கருவறைக்கு மேலே இரண்டு தளங்களுடன் எண்கோண வடிவத்தில் விமானம் அமைந்துள்ளது. விமானத்தின் இரண்டு தளத்திலும், பராசக்தியின் வெவ்வேறு அவதாரச் சிலைகள்  அமைக்கப்பட்டுள்ளன. பதினான்கு வடிவங்களில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.
தென் புறத்தில் விநாயகப் பெருமானும், வட புறத்தில் பாலமுருகன் சன்னிதியும், மாரியம்மன் சன்னிதியின் தெற்குப்புறம் சரஸ்வதி, துர்கை, பெரியாச்சி ஆகிய மூர்த்தங்களும் உள்ளன. வடக்குப் பக்கம் கிருஷ்ணர், மகா லட்சுமி, சிவபெருமான், வேங்கடேசப் பெருமாள் மூர்த்தங்களும், கோவிலின் வடகிழக்கு மூலையில் நவக்ரஹ மண்டபமும் அமைந்துள்ளன.

உலக நாயகியாக விளங்கும் அம்பாளின் அவதாரம் பலப்பல. அவை 108 சக்தி பீடமாக பாரதம், பங்களா தேஷ், பாகிஸ்தான் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த 108 வடிவங்களையும் அவற்றுக்கான அங்க லட்சணங்களுடன், ஆயுத அமைப்புடனும் இவ்வாலயத்தின் திருச்சுற்றில் சுதை வடிவில் அமைத்துள்ளனர். இவ்வரிய அமைப்பு சிங்கப்பூரின் மற்ற ஆலயங்களில் காணக் கிடைக்காதது என்பது குறிப்பிடத்தக்கது. கொடி மரத்துடன் தங்க முலாம் பூசிய 108 கலசம்  ஆலயத்தை அலங்கரிக்கிறது.

 

விழாக்கள்
 

 ஆடிமாதம் அம்மனுக்குரிய மாதமாகையால் இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
 மற்ற விழாக்களான நவராத்திரி, சிவராத்திரி, தமிழ் வருடப் பிறப்பு, பிரதோஷம், திருவிளக்கு பூஜை ஆகியவையும், இன்னும் முக்கிய சமய திருவிழாக்களும் நடைபெறுகின்றன.

 

அம்மையே! ஆத்தாள் உண்மையே!
உமையே! ஒப்பற்றவள் நீயே!
அகிலம் முழுவதும் நிறைந்தே அழகினைப் பொழிபவளே! மாயே!
இம்மை உலகில் எல்லா நலன்களும் பெற்றிடவே ஏற்றருள்
புரிவாய் என் தாயே !
நன்மை எதுவென நானறியச் செய்தருள்வாய் அன்னையே!
நாடியும் பாடியும் நயந்தே உன்னடி பற்றிடச் செய்வாயே!
புன்மைகள் தீர்ந்து புலன்கள் அடங்க இன்னருள் செய்வாயே!
பொல்லா வினையேன் எனக்கும் புத்தி தந்து ஆள்வாயம்மா!


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே !

 
Sree Maha Mariamman Temple, 
251 Yishun Avenus.
Singapore. 769061
Tel : 6756 6374 - 6756 1208. Fax.6756 6084

Last Updated on Sunday, 28 June 2009 10:55
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved