
| ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Tuesday, 30 June 2009 20:10 |
|
Sri Muneeswaran Temple (Queens Town)
சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாகவும், முனீஸ்வரராகவும் இருந்து நம்முள் இருக்கும் அறியாமையை அகற்றுகிறார்.
ஆலய வழிபாடு என்பது தமிழரின் உணர்வோடு ஒன்றியது. தமிழர்கள் எங்கு குடியேறினாலும் தம் வசதிக்கேற்பக் கோயிலை நிறுவி வழிபடுவது வழக்கம். அதற்கு இங்கு வசித்த தமிழர்களும் விதிவிக்கல்லர். ஒரு கல்லையும், சூலாயுதம் ஒன்றையும் ஒரு சிறு குடிலில் நிறுவி அதையே ஆலயமாக வழிபட்டனர்.
ஆலய வரலாறு
தினமும் பணிக்குச் செல்லும் முன் அவர்கள் அந்த எளிய குடிசைக் கோயிலில் பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டனர். அவர்கள் அந்த சூலத்தையும் கல்லையும் ’முனியாண்டி’, ’முனீஸ்வரன்’ என்ற பெயர்களில் வழிபட்டனர்; அவரை சிவபெருமானின் மாற்றுரு என்று நம்பினர்.
முதலில் குடிலுக்கும் குவீன்ஸ்வே சாலைக்கும் இடையே இருந்த செடி,கொடிகளையும், ஐந்து அடி உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களையும் அழித்து சுத்தம் செய்து ஒற்றையடிப் பாதை அமைத்தனர்.
1962-ல் குவீன்ஸ் டவுனில் வசித்த அன்பர்கள், பக்தர்களைக் கொண்டு ஒரு இடைக்கால நிர்வாகம் அமைத்து அரசாங்கத்தில் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வரன் கோயில் அதிகார பூர்வமாக 1967 மார்ச் முதல் தேதி பதிவு செய்யப்பட்டது.
முனீஸ்வரர்,விநாயகர், மாரியம்மன், முருகன் ஆகிய சிலைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன. இடைக்காலத்தில் சில தற்காலிகப் பிரச்சனைகள் தோன்றினாலும் நிர்வாகக் குழுவினரும் தொண்டர்களும் அவற்றை எதிர்கொண்டு விரைவாகத் தீர்வு கண்டனர்.
முனீஸ்வரன் கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 18 தேதி, ஜனவரி, 1970 -ல் நடந்தேறியது. புதிய ஆலய பூஜைகளை நடத்தும் பொறுப்பினை கதிகாய பண்டாரம் ஏற்றார்.
மீண்டும் ஒரு புதிய அத்தியாயம்
இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. குவின்ஸ்வேயில் இருந்த பழைய இடம் இரயில்வே அலுவல்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அன்றைய மேலாண்மைக் குழு கட்டடச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. பக்தர்கள் வேறோர் இடத்தில் புதிய கோயிலைக் கட்ட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயினர். அத் தீர்மானத்தின் காரணமாகப் புதிய இடம் கோரிப் பல முறையீடுகள் செய்யப்பட்டன.
பொறுப்பு மிக்க பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்து அறக்கட்டளை வாரியமும் தகுந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தனர். ஆனால் அவ்விடம் 1993 வரை ஆலயம் அமைந்திடவில்லை.
மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லாக் குடிசைகளையும் அப்புறப் படுத்துவது மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும் மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்த காரணத்தால், மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இக்கோயில், மற்றக் கோயில்களுடன் இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
நான்கு கோயில்களுடன் சேர்ந்து அமைப்பதற்கு வீடமைப்பு வளர்ச்சி கழகம் மாற்று இடம் வழங்கியது.
ரைஃபிள் ரேஞ்ஜ் (Rifle Range) மாரியம்மன் கோயிலைத் தவிர ஏனைய கோயில்கள் இத்திட்டத்தை ஏற்று இணைவதில் ஆர்வம் காட்டவில்லை. முடிவில் ரைஃபிள் ரேஞ்ஜ் அம்மன் கோவில், புலோ புக்கம் தீவிலிருந்த விநாயகர் கோவில், எண்டர்சன் சாலையிலிருந்த சித்தி விநாயகர் கோவில், முனீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் ’முனீஸ்வரன் கோயில்’ என்ற பெயரில் ஒரு குடைக் கீழ் இணைந்தன.
இறுதியில் காமன்வெல்த் டிரைவில் (Commonwealth drive) 2500 சதுர மீட்டர் நிலத்தில் முனீஸ்வரன் கோயில் இயங்க வீடமைப்புக் கழகம் அனுமதி அளித்தது. இந்நிலத்திற்காகக் கோயில் நிர்வாகம் வீடமைப்புக் கழகத்திற்கு 550,000 வெள்ளி வழங்கியது. 20-ம் தேதி, நவம்பர், 1994 ஆண்டு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா முனீஸ்வரர் ஆலய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
இந்து சமூகத்தினரின் சமயத் தேவைகளையும், இந்து சமூகத்தினரின் சமுதாய, கலாச்சார, கல்வி, பொழுதுபோக்கு, சமூக சேவை போன்ற பல்நோக்குத் தேவைகளையும் மனத்தில் கொண்டு ஆலயப் புனரமைப்பு நடைபெற்றது.
இந்த முனீஸ்வரர் சன்னிதி தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் சிறப்பானது; மிகப் பெரியது எனலாம். இது இந்தியாவின் தலை சிறந்த கட்டடக் கலைஞர்கள், சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டது. இந்து சமயத்தின் மிக நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது இச்சன்னிதி. முனீஸ்வரப் பெருமானை எங்கிருந்து வழிபட்டாலும் பக்தர்களின் பார்வையைத் தூண்கள் மறைக்காதிருப்பது சன்னிதியின் தனிச்சிறப்பு. இவ்வாலயம் மிக அபூர்வமான வேலைப்படுகளுடன் மிளிர்கிறது.
சிற்பத் திறனும், ஆலய அமைப்பும் அடியார்களுக்கு அமைதியையும்,அருளையும் வாரி வழங்குகின்றன.
சன்னிதிகள்
சமய விழாக்கள்
சமூக சேவைத் திட்டங்கள்
பக்தர்கள் நாள்தோறும் பணிக்குச் செல்லுமுன் இங்கு வந்து வணங்கிச் செல்வர். அன்று ஒரு காலத்தில் கல்லும், சூலமும் நிறுவி வழிபட்டவர்கள் பிற்காலத்தில் முனீஸ்வரருக்கு இத்தகைய அழகிய கோயில் அமைந்திடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
Sri Muneeswaran Temple (Queens Town) Tel 64735037/ Fax. 64757967 |
| Last Updated on Tuesday, 30 June 2009 20:17 |
பிற வளங்கள்





