Friday 20th of October 2017

Home வரலாறு சிங்கை ஆலயங்கள் ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்
ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Tuesday, 30 June 2009 20:17

 

ஸ்ரீ  அரச கேசரி சிவன் ஆலயம்

SRI ARASA KESARI  SIVAN KOVIL
கிருஷ்ணன், சிங்கை.அரச கேசரி சிவன் என்னும் தொடர் அரச்கேசரி சிவன் என்றாகியது. ’அரசு’ என்பது அரசன், அரச மரம் என்னும் இரு பொருளையும் குறிக்கும். ’கேசரி’ என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன் என்னும் சொல்லுக்கு  அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெறுகிறது.

 


நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாக கருதும் மரபு நம்மிடம் இருந்தது. "திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று நம்மாழ்வார் அரசனை விஷ்ணுவாகப் பார்க்கிறார்.அதேபோல் சிவபெருமானையும் மாணிக்கவாசகர் "உத்தரகோச மங்கைக்கு அரசே" என்றும், "ஆடக மதுரை அரசே போற்றி "என்றும், "திருப்பெருந்துறை மன்னா" என்றும் அழைக்கிறார். மேலும் திருத்தசாங்கம் என்னும் தலைப்பில் சிவபெருமானை அரசனாகக் கருதி அவருக்குரிய பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, மாலை, கொடி ஆகிய பத்துச் சின்னங்களையும் பாடுகிறார்.


திருவிளையாடல் புராணம் சிவபெருமான் அரசனாக வந்த வரலாற்றை மீனாட்சி திருமணப் படலத்தில் நன்கு விளக்குகிறது -


   ’அத்ரிவிடைக் கொடி அங் கயற்கொடி யாக
       அராக்கலன் பொற்கலன் ஆக
    பொதியவிழ் கடுக்கை வேம்பலர் ஆகப்
       புலியதள் பொலந்துகில் ஆக
    மதிமுடி வைர மணிமுடி ஆக
       மறைகிடந்து அலம்புமா மதுரைப்
    பதியுறை சோம சுந்தரக் கடவுள்
         பாண்டியனாகி  வீற்றிருந்தான்’

                          
அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரசு எல்லா மரங்களுக்கும் தலையாயது.அதுபோல் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமையானவர் சிவன். அரசு தல விருட்சமாகப் பல திருக்கோயில்களில் இடம் பெற்றிருப்பதை நாம் காண்கிறோம்.அரசு மரத்துக்குப் போதிமரம் என்றொரு பெயரும் உண்டு. புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொருபம்.

 


சிவபெருமானைச் சிங்கமாக அதாவது கேசரியாகத் திருநாவுக்கரசர் ‘எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ’ எனும் தம் திருப்புகலூர்த் தேவாரப் பதிகத்தில் அழைக்கிறார். ’சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன்,திருப்புகலூர் மேவிய தேவே’ எனும் அடிகள் இப்பதிகத்தின் இரண்டாம் பாடலில் இடம் பெறுகின்றன. இப்பதிகம் திருநாவுக்கரசர் முக்தி அடைந்தபோது பாடியது; அவர் பாடிய கடைசிப் பதிகம். எனவே திருப்புகலூரில் இவ்விழாவின் போது சிவலிங்கத்திற்குச் சிங்க வடிவில் அலங்காரம் செய்வார்களாம்.
விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று நரசிம்மாவதாரம். அப்போது இரண்யணைக் கொன்ற நரசிம்ம மூர்த்தி தருக்கி அட்டகாசம் செய்யக் கண்ட பிரமன் சிவபெருமானைத் துதிக்கச் சிவன் சரப மூர்த்தி உருக்கொண்டு நரசிங்கத்தின் தோலை உரித்து உடுத்திக் கொண்டதாக ஒரு புராணச் செய்தி உண்டு.

 

 


சரப மூர்த்தி உரு எட்டுக் கால்களையும், இரு தலைகளையும் கொண்ட மிருகப் பறவை உருவம் என்றும்,இதற்கு இரண்டு சிங்க முகங்களும் இரண்டு பக்கச் சிறகுகளும் உண்டு என்றும் கூறுவர். சிங்கத்தின்  உடலுடனும் எட்டுக் கால்களுடனும் கூடிய பறவை என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. சரப மூர்த்தி உருவும்  சிவனைச் சிங்கமாக காட்டுகிறது.


சிங்கப்பூர் வடக்கு வாசலில் உட்லண்ட்ஸ் சாலையில் அரச மரத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு காவல் அரண் போல திகழ்ந்த ஸ்ரீ  அரச்கேசரி சிவ ஆலயம் எண்பது ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். இக்கோவில் சிங்கப்பூரில் திருக்குளம் அமைந்துள்ள ஓரே ஆலயமெனப் பெருமை பெற்றது.


நம் முன்னோர் மக்கள் இறை நினைவுடன் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக  வழிபாட்டுத் தலங்களுக்கு  நிலங்களை தானமாக எழுதிவைத்தார்கள். அத்தகைய பெருமைக்குரிய கோவில்களில் ஸ்ரீ அரச்கேசரி சிவன் கோயிலும் ஒன்றாகும். மலேசியா - ஜோகூர்பாருவைச் சேர்ந்த பக்தர் திரு.கதிரேசு 76,000 சதுர அடியுள்ள தன் நிலத்தை எந்த நிபந்தைனையுமின்றி இவ்வாலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த இறையன்பர்கள் இவ்வாலயத்தைப் பராமரித்தும், பூஜித்தும் ஆதரவு நல்கினர்.


நாட்டின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழி விடுவதற்காக 1995-ஆம் ஆண்டில் புதிய இடத்திற்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்றுப்பட்டது. அப்போதிருந்த பொருளியல் வீழ்ச்சி நிலவிய சூழலில் புத்தம் புதிதாக ஒரு கோயிலை அறிமுகமில்லாத இடத்தில் உருவாக்க இயலுமா என்பது மற்றோர் அச்சம். ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் பழக்கமான இடத்தில் செயல்பட்டு வந்த ஓர் ஆலயத்திற்கு மாற்றிடமாக அதிகம் அறிமுகமில்லாத ’சுங்கை காடூட்’ என்ற தொழில் பேட்டையை அரசாங்கம் சுட்டிக்காட்டியது.


மலேசியாவை நோக்கிச் செல்லும் இரயில் பாதைக்கும், அகன்றதான நீரோடும் வடிகாலுக்கும் நடுவில் ஒரு குறுகிய இடத்தில் புதிய ஆலயத்திற்கான நிலம் ஒதுக்கப்பட்டது.இப்பகுதியை இணைப்பதற்கு ஒரு பாலம் மட்டுமே இருந்தது.
மேலும் புதிய இடமாகையால் பக்தர்கள் அங்கு வருவார்களா என்ற ஐயம் எழுந்தது.சொந்த  வாகன வசதி இல்லாதவர்கள் பேருந்து போன்ற பொது வாகனங்களையே  நாடுவார்கள்; புதிய இடத்திலோ பொதுவாகனப் போக்குவரத்து வசதி மிகவும் குறைவு.

 


இத்துணை தடைகள் இருந்த போதிலும் அன்பர்கள் தடைக்கற்களையே படிக்கற்களாக  மாற்றி ஒரு கலை நயமிகுந்த ஆலயமாக அப்பகுதியை மாற்றியமைத்தனர்.கோயிலுக்கு முன்புறமுள்ள வாய்க்காலை ஊர்தி நிறுத்துமிடமாக மாற்றி, கோயிலுக்குப் பின்புறமிருந்த மலேயன் இரயில்வேக்கு சொந்தமான 20 ஆயிரம் சதுர அடி நிலத்தில் ஓர் அழகிய  பூந்தோட்டத்தையும் அமைத்துள்ளார்கள். இயற்கைச் சூழ்நிலையில், இந்த அமைதியான வளாகத்தினுள் வரும் பக்தர்களுக்கு மன மகிழ்ச்சியை அளிக்கும் அற்புதமான பல கலைப்படைப்புகளைக் கொண்டதாக ஆலயம் தற்போது திகழ்ந்து வருகிறது.


     எழிலார் இராசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழிலேற்றைக்
     குழலார் கோதை வரை மார்பின் குற்றாலத்து எம் கூத்தனை
     நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,
     அழலார் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே


இராச சிங்கமாகிய அரச கேசரி சிவபெருமானை வணங்கி நாம் நம் பாவங்களைப் போக்கிக் கொள்வோம் !


SRI ARASAKESARI SIVAN KOVIL,
25, Sungei Kadut Av,
Singapore. 729679
Tel. 67699902,/Fax.63684283

Last Updated on Tuesday, 30 June 2009 20:23
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  October 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
3031     

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved