Sunday 20th of May 2018

Home வரலாறு சிங்கை ஆலயங்கள் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம்
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 04 July 2009 14:26

 

ஸ்ரீ  லாயான் சித்தி விநாயகர் ஆலயம்

Sri Layan Vinagar Temple

கிருஷ்ணன், சிங்கை.

 


விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர், பெருமையுடையவர், ஸச்சிதானந்த செரூபி, குணங் கடந்தவர், தேசங்கடந்தவர், காலங்கடந்தவர்,விக்கினங்களை விலக்குபவர், எக்காரியம் தொடங்கும் முன்பும் அவரது ஆசியும் வேண்டும் என்பது விநாயகரின் தனிச்சிறப்புகளாகும். காட்சிக்கு எளிமையானவரான அவருக்குத் தமிழ் நாட்டில் கோயில்  இல்லாத ஊர்  இல்லை. மூலை முடுக்குகளிலும்,சாலை சந்துகளிலும், ஆற்றங்கரை குளக்கரைகளிலும், ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் காட்சிக்கு எளியவராக விளங்குபவர் விநாயகப் பெருமான். அவர் மெய்யடியார்களுக்கு எளிதாக வந்து அருளும் இயல்புடையவர்.


விநாயகப் பெருமானுடைய உருவம் விசித்திரமானது; சிரசு யானையைப் போன்றும் கழுத்து முதல் இடைவரை தேவர், மனிதரைப் போன்றும் அதற்கு கீழ்ப்பகுதி பூதங்களைப் போன்றும் அமைந்துள்ளது. அவர் ஆணுமல்லர்; பெண்ணுமல்லர், அலியுமல்லர். அண்ட சராசங்களுமாக விளக்குபவர்; அவை அனைத்தும் தம்முள் அடக்கம் என்பதை அவரது பேழை வயிறு குறிக்கும். அடியார்க்கு வேண்டிய சித்திகளையும் அவற்றை அடைதற்கேற்ற புத்தியினையும் அருளுபவர். விநாயகருடைய  செவி, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து '' ஓம் '' என்னும் பிரணவத்தின் வடிவைக் காட்டும்.
அகரமாகிய எழுத்தைப் போன்று முதன்மை பெற்று விளங்குபவர் இவர்; அறிவின் திருவுருவம்; சர்வ வியாபி; படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் குறிக்கும் அகரம் - உகரம்-மகரம் என்னும் மூன்றும் சேர்ந்த பிரணவப் பொருள். தம்மைப் போற்றி வழிபடுபவர்க்கு அறம்,பொருள்,இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருளையும் அருள்பவர். போற்றி வழிபடாதோரைத் தடுத்தாட் கொண்டு பின் நலம் பலவும் அருளி மறக்கருணை புரியும் இயல்பினர்.

 

                  அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்து
                      அகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒரு
                  முதலாகி பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டு
                        புகலில் பொருள் நான்கினையும் இடர் தீர்ந்தெய்தல்
                  போற்றுநருக்கு அறக்கருனை புரிந்து அல்லார்க்கு
                        நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
                   திருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வோம்.

 

வரலாற்றுச் சிறப்பு


சிதம்பரத்தில் வாழ்ந்த சிவாநுபூதி பெற்ற திரு.பொன்னம்பல சுவாமிகளால் இங்குள்ள சித்தி விநாயகர் சிலை நிறுவப்பெற்றது. சுவாமிகள் இல்வாழ்க்கையில் இருந்தவர்.பட்டாளத்தைச் சேர்ந்தவர்.சிங்கப்பூருக்கு வந்த இந்தியப் பட்டாளத்தில் இவரும் ஒருவராக வந்தார்.அப்போது ஒரு விநாயகரை வைத்து வணங்கினார்.உத்தியோக மாறுதலில் இந்தியா செல்ல நேர்ந்தது. உடன் விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல விரும்பவில்லை.ஆகவே, தாம் வழிப்பட்ட விநாயகரை நகரத்தார்களிடம் ஒப்படைத்துச் செல்ல விரும்பினார். சுவாமிகளின் வேண்டுகோளை மறுக்க இயலாத நிலையில் நகரத்தார்கள் சிலையினை ஏற்று இக்கோயிலைக் கட்டினார்கள்.

 


இந்தக் கோயிலின் தோற்றத்தையும் வரலாற்றையும் பற்றித் திரு.ஆ.பழனியப்பன் அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிய கட்டுரையில், ''இக்கோயில் மரத்தடிப் பிள்ளையராக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அருகில் (உட்ரம் MRT ரயில் நிலையத்துக்கு எதிரில்) தொடங்கப்பட்டது. கோவிலை அடையச் சிப்பாய் லைனிலிருந்து ஒரு நடைபாதை உருவாக்கபட்டது. முதல் உலகப் போரின் இறுதியில் கூரையுடன் அமைந்திருந்த கோயிலில் விநாயகரின் திருவுருவச் சிலையும் நாகரும் இடம்பெற்றிருந்தன.  மருத்துவமனை ஊழியர்களும், அவுட்ராம் சாலையிலிருந்து சிறைச்சாலை ஊழியர்களும் இக்கோயிலுக்கு வந்து தொழுவது வழக்கம்.


மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் தேவைப் பட்டதால் அரசாங்கம் இக்கோயில் நிலத்தை எடுத்துக்கொண்டு ஒரு சிறு தொகை கொடுத்தது. நகரத்தார்கள் இப்போதைய இடத்தில் நிலத்தை வாங்கி கோயிலைப் பெரும்பொருட் செலவில் கட்டி முடித்தனர்.

 

 


மருத்துமனை நிலத்தில் இருந்த கோவிலில் உள்ள விநாயகரின் திருவுருவம் சுதை வேலைப்பாட்டுடன் அமைந்ததாகவும், உருவம் சிதைந்தும் காணப்பட்டது. குறையுள்ள சிலையைக் கருவறையில் வைப்பது ஆகமத்திற்கு ஏற்புடையதன்று என்பதால், முறையாகக் கருங்கல்லில் செய்த விநாயகர் சிலையை இந்தியாவிலிருந்து  தருவிக்க ஏற்பாடு செய்தனர்.குரோதன ஆண்டு வைகாசித் திங்கள் 19 ஆம் நாள் (1-6-1925) திருக்குட நீராட்டு நடந்தது.


கோவிலின் பழைய இடத்தில் இருந்த நாகமும் ''ராம நாமமும்'' கருவறைக்குள்ளேயே வைக்கப்பட்டன. முருகப்பெருமானைக் குறிக்கும் வகையில் ஒரு வேலும் அதனுடன் நிறுவப்பட்டது. சிப்பாய் லைனில் கோவில் அமைந்திருந்ததால் அதனை ’லைன் சித்தி விநாயகர்’ என்று அழைத்து வரலாயினர்.

 


1924 ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூருக்கு வந்த நகரத்தார்கள் தங்கள் வட்டித் தொழிலை நகரத்தின் நடுநாயகமாக விளங்கிய மார்கெட் தெருவில் நடத்தி வந்தார்கள்.


'கிட்டங்கிகள்' என்னும் அவ்வணிகத்தை நடத்திய செட்டியார்களில் சிலர் தாயகத்திலிருந்து கொண்டு வந்த உருவச் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதற்கேற்ப மார்க்கெட் தெரு 38 ஆம் எண் கிட்டங்கியில் விநாயகர் சிலை ஒன்று வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. மார்க்கெட் தெரு கிட்டங்கிகளை அரசாங்கம் கையகப் படுத்தியபோது (1979-80) அந்தச் சிலை தேங் ரோடு 15 ம் எண் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.அந்த வீடும் தண்டாயுதபாணி கோயில் திருப்பணிக்காகக் கையகப் படுத்தப்பட்டது.   பின்னர் அந்த விக்ரஹத்தை லயன் சித்தி விநாயகர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதென்று நகரத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப அச்சிலை மூன்றாவது பிள்ளையாராகக்  1980 ம் ஆண்டில் கருவறைக்குள் நிறுவப்பட்டது.


கோவிலின்  குடமுழுக்கு விழா முறையே 1975 ஆம் ஆண்டிலும்(14-11-1975-இராட்சச ஆண்டு ஐப்பசித் திங்கள் 28 ஆம் நாள்), 1989 ஆம் ஆண்டிலும் (10-11-1989 சுக்கிலா ஆண்டு ஐப்பசித் திங்கள் 25 ஆம் நாள்) நடைபெற்றன.

 


தலச் சிறப்பு


          சிங்கப்பூரில் சைனா டவுன் என்பது மிகப் பழமையான நகர்ப் பகுதியாகும். 1822ஆண்டின் நகரமைப்புத் திட்டத்திலேயே அப்பெயர் உள்ளது. அவ்வட்டாரம் முக்கோண வடிவம் உடையது. தெலுக்ஆயர் வீதி ஒரு பக்கம், சிங்கப்பூர் ஆறு ஒரு பக்கம், அன்சன் சர்க்கஸ் - ஊட்ரம் சாலை மற்றொரு பக்கம்.முக்கோண வடிவமைப்புக் கொண்ட சைனா டவுனில் மூன்று விநாயகர் திருவுருவக் கோயில் இருப்பது சிறப்புதானே! சீனர்கள் தம் கிளை மொழியான ஹொக்கியானில் பெருநகரம் எனப்படும் (TOA POR) என்னும் சொல்லால் செளத் பிரிட்ஜ் சாலைப் பகுதியையும், இக்கோயில் இருக்கும் கிரேத்தா ஆயர் பகுதியைத் தண்ணீர் வண்டி எனப் பொருள்படும் Gu Chia Chui எனவும் அழைத்தனர். இப்பொருள் படும் நிலையில் உள்ள மலாய் மொழிச் சொல்தான் கிரேத்தா ஆயர் ரோடு என்னும் பெயரில் இடம் பெற்றுள்ளது. 1920 க்கு முன் அன்செங் ஹில்லுக்கு அருகிலுள்ள ஒரு கிணற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் தண்ணீர் கொண்டு வந்து இப்பகுதிக்கு வழங்கப்பட்டது. இதன் நினைவாகவே இப்பெயர் எற்பட்டது. இப்பகுதியில்தான் சிங்கப்பூர் ஆற்றோரப் பகுதியும் தஞ்சோங் பஹார் துறைமுகப் பகுதியும் உள்ளன. ஆற்றோரத்தில் இருந்து கொண்டு ஆற்றுப்படுவத்துபவராகவும் , கடற்கரைப் பகுதியிலிருந்து கலங்கரை விளக்காகவும் பக்தர்களைக் காத்து நல்வழிப்படுத்துகிறார் ஆனைமுகன்.


செளத் பிரிட்ஜ் சாலையில் சிங்கப்பூரின் மிகப் பழமையான மாரியம்மன் கோயில் ஒரு பக்கம் -முன்பு தஞ்சோங் பஹார் தெரு முனையில் இருந்து இப்போது இடம் மாறிய மன்மத காருணீசுவரன் கோயில் - சிவன் கோயில் ஒரு பக்கம் -இடையில் இந்த விநாயகர் கோயில் இருந்ததும் ஒரு சிறப்புத்தான். மேலும் இந்த விநாயகர் கோயிலைச் சுற்றி சீனக் கோயில்கலும், பள்ளிவாசல்களும், கிறித்தவ தேவாலங்களும் இருப்பதும் சிங்கப்பூரின் பல சமயச் சூழலையும், சமய நல்லிணக்கச் சிறப்பையும் எடுத்துக்காட்டும். கியோங் சியாக் சாலை, கிரேத்தா ஆயர் சாலைகளின் சந்திப்பில் இக்கோயில் அமைந்து சிந்திப்பவர் துயர் நீக்கும் சிறப்புடையதாக விளங்குகிறது.


மூர்த்திச் சிறப்பு

இக்கோயிலில் விநாயகர் திருவுருவம் மூன்று, முருகப்பெருமான் திருக்கை வேல் ஒன்று, நாகர் ஒன்று, ராம நாமம் ஒன்று ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.மேலும் விநாயகர் திருமுன்னர் மூஷிக (மூஞ்சூறு) உருவமும் பலிபீடமும் உள்ளன. அனுமன் கற்சிலை ஒன்று(சிறியது) பிரதிஷ்டை செய்யப் பெறாது ராமநாமம் அருகில் உள்ளது. விநாயகர் திருவுருவம் மூன்றில் பெரியதாகவும் சுவரோரமாவும் இருக்கும் கருங்கல் திருவுருவம் நகரத்தார்கள் இக்கோயில் எழுப்பிய காலத்தில் நிறுவப்பட்ட ஒன்றாகும். அடுத்து நடுவில் இருக்கும் விநாயகர் உருவம் (படம்)பழைய கோயிலில் இருந்து கொணரப்பட்ட உருவமாகும். அதனை அடுத்து இருக்கும் சிறிய விநாயகர் உருவம்தான் மார்க்கெட் தெரு 38 ஆம் எண் கிட்டங்கியில் இருந்த ஒன்று.தற்போது இந்தக் கோயிலில் வழிபடுவோர் மூன்று விநாயகப் பெருமான்களை ஒரே நேரத்தில் வழிபடும் பெரும் பேற்றினைப் பெறமுடியும்.


கோபுரச் சிறப்பு

சிறிய கோயிலாக இருப்பினும் சிற்பங்கள் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. இராஜகோபுரம் ஐந்து நிலை அடுக்குக் கொண்டதாகும். நுழைவாயிலின் உயரம் 40 அடி. இராஜகோபுரத்தை ஸ்தூல லிங்கம் என்பர். இராஜகோபுரத்தின் மேல் ஏழு கலசங்கள் உள்ளன.இதில் உள்ள ஐந்து நிலைகளும்- அடுக்குகள் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் ஐம்பொறிகளையும் குறிக்கும்.ஐம்பொறிகளும் இணைந்து இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த அமைப்புள்ளது. திருநாவுக்கரசர் பெருமான் ''தலையே நீ வணங்காய்'' என்று தொடங்கும் திரு அங்க மாலையில் இக்கருத்துப் பற்றி பேசுகிறார். கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் விநாயகர் திருவுருவங்களும்,மேற்குப் பகுதியில் விஷ்ணு தொடர்பான உருவங்களும்,தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி முதலிய சிவன் தொடர்பான திருவுருவங்களும், வடக்குப் பகுதியில் முருகன் தொடர்பான உருவங்களும் வண்ணம் தீட்டப்பட்டு அற்புதமாக விளங்குகின்றன.


நான்கு மதில் கொண்ட திருச்சுற்றுகள், அதனை ஒட்டி ஒரு வெளிப்பிரகாரம், நடுப்பகுதியில் கோயில் கட்டடம்,கருவறை, முகமண்டபம்,மகாமண்டபம் என்ற அமைப்பில் கோயில் திகழ்கிறது.கோயில் கருவறைக்குரிய விமானம்,நான்கு மதில் மூலைகளிலும் இடபத்துடன் கூடிய சிவ கணம், ஈரடுக்கு கோபுரம், கருவறைக்கு எதிரே கோபுரவாயில் என்னும் அமைப்பில் கோயில் திகழ்கிறது. கருவறைக்கு முன் அழகிய வேலைப்பாடு அமைந்த துவாரபாலகர் இருவர்,கருவறைச் சுவர்களில் நின்ற கோல விநாயகர் திருவுருவங்கள் ஆகியவை உள்ளன. உட்புறம் ஒரு திருச்சுற்றும் உள்ளது.
முக்கிய விழாக்களாக விநாயக சதுர்த்தி, வேல் அபிஷேகம், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற விழாக்களும், மற்ற சமய விழாக்களும் நடைபெறுகின்றன.


வள்ளலார் பெருமான் இராமலிங்க சுவாமிகளின் மனத்தை உருக்கும் பாட்டு இங்கு கருதத்தக்கது -


                         திருவும், கல்வியும், சீரும், சிறப்பும், உன்
                                திருவடிப் புகழ்பாடும் திறமும், நல்
                          உருவும், சீலமும், ஊக்கமும், தாழ்வுறா
                                உணர்வும், தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
                          குருவும் தெய்வமும் ஆகி, அன்பாளர்தம்
                                குறை தவிர்க்கும் குணப் பெருங் குன்றமே !
                          வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
                                விளங்கும் சித்தி விநாயக வள்ளலே !

Last Updated on Wednesday, 08 July 2009 20:08
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved