Saturday 24th of February 2018

Home வரலாறு சிங்கை ஆலயங்கள் ஸ்ரீ இராமர் ஆலயம் (சாங்கி)
ஸ்ரீ இராமர் ஆலயம் (சாங்கி) PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 10 August 2009 21:03

 

ஸ்ரீ இராமர் ஆலயம்  (சாங்கி)

கிருஷ்ணன், சிங்கை

 

பழந்தமிழர் கண்ட சமயங்கள் இரண்டு. ஒன்று சைவம்; மற்றொன்று வைணவம். சைவம் சிவபெருமானை முதற் முழு தெய்வமாக வழிபடுவது. வைணவமோ திருமால் எனப்படும் விஷ்ணுவை வழிபடுவது. இந்து மத நெறி முறைகளையும், நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் உபதேசத்தின் மூலம் நமக்கு வழிகாட்டி எடுத்தியம்புவது இராமாயணமும், மகாபாரதமும். அடியார்கள் வழிபடும் இந்து சமயத்தின் இரு கண்கள் இவ்விரு பிரிவுகள்.
                         

ஸ்ரீமன் நாராயணன் இவ்வுலகைக் காப்பதற்காகப் பற்பல அவதாரங்களை எடுத்துள்ளார். பத்து அவதாரங்களில்  மானிடர் அவதாரம் தாங்கி இவ்வுலகில் அவதரித்தார். கிரேத யுகத்தில் வெண்ணிறம் கொண்டவனாகவும்; திரேதாயுகத்தில் பவள நிறம் உடையவனாகவும்; துவாபர யுகத்தில் பச்சை நிறத்தவனாகவும்; கலியுகத்தில் சியாமள வண்ண -னாகவும் அருள்பாலிப்பதாக புராணங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். ‏இராமபிரா‎ன் பச்சை நிறத்தில் ‏இருந்தாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். கண்ணனும் கார்மேக வண்ணனாக வர்ணிக்கப்பட்டுள்ளா‎ன். ஆழ்வார்களும் அவனை ‘பச்சை மாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்' என அவ‎ன் வண்ணங்களைப் புனைந்திருக்கி‎றனர். நீலமேகச் சியாமள‎ என்றும் மகாவிஷ்ணுவை அணி புனைந்துள்ளனர்.

 

 

இராமருக்குப் பாரதத்தில் மட்டுமி‎ன்றி பார்முழுவதுமே புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டி‎ன் அரசர்கள் தங்களை ‘'ராமா'' எ‎‎ன்று அழைத்துக் கொள்கிறார்கள். தற்போதுள்ள ம‎‎ன்னரின் பெயர்  பூமிபால் அதுல்யதேஜ் 9 - வது ராமா ஆவார். கி.பி. 17-ம் நூற்றாண்டில் ‘தாய்' மொழியில் ‏ இயற்றப்பட்ட ‘‏ராமகீர்த்தி' எனப்படும் ராமகாவியம் பள்ளிகளில் பாடமாகப் போதிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டுக்கு குத்துச் சண்டை விளையாட்டு, அனும‎ன், வாலி, சுக்ரீவன் போன்ற வீரர்களி‎ன் சண்டை முறைகளை அடிப்படையாகக் கொண்டது எ‎ன்பர். அவர்களது அரசியல் சட்டத்தில் ‘சியாம் தேசம்' எனப்படும். சியாம் தேசம் என்றால் ‘விஷ்ணு நாடு' எ‎ன்று பொருளாகும்.அங்குள்ள சில ஊர்களி‎ன் பெயர் அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி.

 

பினாங்கிலுள்ள (மலேசியா) ஒரு மசூதியி‎ன்  பெயர்ப் பலகையில் ‘'இந்த மசூதி  1974-ல் ‏ஸ்ரீராம பாதுகையி‎ன் ஆணைப்படி கட்டப்பட்டது எ‎ன்று காணப்படுவதைக் காணலாம். மலேசிய அதிபர் பதவிப் பிரமாணம் செய்யும் போது ‘ஸ்ரீராம பாதுகாதுளி ஆணையாக' எ‎ன்று சொல்லித்தான் பதவி ஏற்பார். மலேசியப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில்  இயற்றப்பட்ட ‘ஹிகாய்த் செரிராமா' எ‎ன்ற மலாய் மொழி ராமாயணம் பாடமாக ‏ இருக்கிறது. மலேசிய சுல்தானை ‘ராஜபரமேஸ்வர எ‎ன்றும், ராணியை ‘ராஜ பரமேஸ்வரி'எனவும், அவர்களது மகனை ‘ல்க்ஷ்மண' எனவும் மலேசிய மக்கள் மரியாதையுடன்‎ அழைக்கிறார்கள்.

 

சிங்கை மாநகரில் கடற்கரையை ஒட்டிய இடம் சாங்கி. இவ்விடத்தில்தான் அமைந்துள்ள
ஆலயம்தான்  ஸ்ரீ இராமர் ஆலயம்.

 

 


இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில்,சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், மரத்தடியின் கீழ் ஒரு சிறு வழிபாட்டு இடமாக ஸ்ரீ இராமர் ஆலயம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்க்கு அது வழிபாட்டுத் தலமாகத் திகழ்ந்தது.

 

இந்திய இராணுவத்தில் பாலம் அமைக்கும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு.ராம் நாயுடு என்பார் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, 1945 - ஆம் ஆண்டில் தற்போது ஸ்ரீ இராமர் ஆலயம் அமைந்துள்ள நிலப்பகுதிகளைப் பிரிட்டீஸாரிடமிருந்து பெற்று ஆலயம் அமைத்தார். ஆலயம் எழுப்புவதற்கு வேண்டிய ஆள் பலத்தையும், கட்டுமான தளவாடங்களையும் பிரிட்டீஸ் ஆயுதப் படையிடமிருந்து பெற்றார். மேலும் சாங்கி கிராமத்தில் வாழ்ந்த இந்திய மக்களின் ஆதரவையும் கொண்டு ஆலயம் எழுப்பினார். திரு. ராம் நாயுடுவுக்குப் பின்னர் இந்த வட்டாரத்தில் வாழ்ந்த மக்களே ஆலயத்தின் நிர்வாகம் ஏற்றனர்.

 

 

காலம் மாற்றத்திற்குரியது. காலத்திற்கேற்ப மனிதன், இயற்கை, சுற்றுபுற சூழ்நிலை மாறினாலும் காலம் காலமாய் மாறாமல் நிலைத்திருப்பது சான்றோர்களின், முன்னோர்களின் கருத்துக்கள், இதிகாசங்கள், தெய்வ வழிபாடுகள்.

 

ஆலயத்தை மேலும் மேம்படுத்த விரும்பிய நிர்வாகத்தினர்  மதுரையிலிருந்து ஆலய சாஸ்திரமும், கட்டடக் கலையில் நிபுணத்துவம் பெற்ற மூவரை வருவித்துக் கோயில் பணியைப் தொடங்கினார்கள். ஆலயம் கடற்கரையை நோக்கி கிழக்கு முகமாக அமைந்திருப்பது இந்திய கோயிலமைப்புக்கு முக்கிய சிறப்பாக அமைந்தது.

 

 

வைணவக் கோயிலாக இருந்தாலும், சைவ சமயத்தினரும் வழிபட வேண்டும் என்ற பரந்த நோக்கில் அமைந்தது ஆலயம். கடற்கரைக்கு அருகிலிருப்பதால், ஈமச் சடங்கிற்குப் பிறகு, கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக சிவலிங்கம் பிரஷ்டை செய்யப்பட்டது.

 

நகர விரிவாக்கம், புதிய வீடமைப்பு பேட்டை எனப் புத்தாக்கம் பெறும்போது பழையன் கழிதலும், புதியன தோற்றுவதும் இயல்பு. புதிய சாலை வசதிகளும், மேம்பாடும் வரவிருந்த காரணத்தால், ஆலயம் புதிய இடத்திற்க்கு பெயர சூழ்நிலை உருவாகியது. இப்பகுதியை ஒட்டிய லோயாங் அவென்யுவில் புதிய சாலை உருவான போது கோயில் தொடர்ந்து இருக்குமா என்ற ஐயம் தலைதூக்கியது. அச்சமயம் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. தியோ சொங் தீ தலையிட்டு உதவியிருக்காவிட்டால் கோயில் இப்போதிருக்கும் இடத்தில் இருந்திருக்காது.
 
1993 - ஆம் ஆண்டு கோவில் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.


நகர சீரமைப்பு காரணத்தால் சிங்கப்பூரின் மற்ற பகுதியிலிருந்த கோயில்கள் பாதிக்கப்பட்டன.
சிறு கோவிலாகவும், பொருளாதாரத்தில், நிதி நிலையில் நிறைவாக இல்லா கோயில்களை ஒற்றிணைத்து ஒரே இடத்தில் வழிபாட்டுத் தலம் அமைக்க அரசாங்கம் ஒரு யோசனையை முன் வைத்தது. அதன்படி மூன்று கோவில்கள் இணைந்த‎‎ன.

 

1. காண்டோன்மெண்ட சாலையில் அமைந்திருந்த மன்மத காரூணீஸ்வரர் ஆலயம்.
2. புக்கிட் தீமா குதிரைப் பந்தய வளாகத்தில் அமைந்திருந்த முத்து மாரியம்மன் ஆலயம்.
3. கிராஞ்சி கடற்கரையில் அமைந்திருந்த பழனி ஆண்டவர் ஆலயம்.

 

மேற்கண்ட மூன்று சிறு கோயில்களும் இராமர் ஆலயத்துட‎ன் ஒன்றிணைந்து ஒரே ஆலயமாகியன. 2004 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆலய நிர்வாகம் ஒரு ஆஞ்சநேயர் சிலையை அமைக்க எண்ணியது. அதன்படி 21அடி உயர ஆஞ்சநேயரைத் தமிழ் நாடு ஸ்தபதி திரு.கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் சிலை வடித்து 2005 -ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

 

காலப்போக்கில்  பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பாசிர் ரிஸ், சீமேய், ஈஸ்ட் கோஸ்ட் பகுதிகளில் வீடமைப்பு பேட்டைகள் தோன்றத் தொடங்கியதால் அங்குள்ள மக்கள் இராமர் கோயிலை நாடி வரத் தொடங்கினர். அதற்கு ஏற்பச் சமய நிகழ்ச்சிகளும், விழாக்களும் மக்களின் தேவையை மனதில் கொண்டு ஆலய நிர்வாகம் பூர்த்திச் செய்தது.

 

இராம நவமி, ஹனுமன் ஜெய்ந்தி,கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி விழா, ஆடி பெருக்கு திருவிழா, திருவிளக்குப் பூஜை, சுதர்சன, சண்டிஹோமங்கள் எனச் சமய விழாக்களும், சமூக, மற்றும் கல்வித் தேவைகளையும் கோயில் நிறைவு செய்தது. இவ்வட்டாரத்தில் ஏற்பட்டு வரும் சமுதாய மேம்பாடுக்குத் தேவைக்கு ஏற்ப, கோயிலின் சிற்ப வேலைகள், வர்ண பூச்சு, புதிய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்தல், சீரமைப்பு போன்ற பணி செய்யப்பட்டது.

 

பல இன மக்கள் சேர்ந்து வாழும் சிங்கப்பூர் சூழ்நிலைக்கு ஏற்ப, புத்த பிரான் மற்றும் சீன தெய்வமான குவான் இன் ஆகிய தெய்வங்களின் சிலைகளும் இடம் பெற்றனர்.

 

சில சிங்கப்பூர் இந்து ஆலயங்களில் புத்த பெருமானும் இடம் பெற்றுள்ளார். புத்தரின் போதனைகள் நமது இந்திய மக்களையும் கவர்ந்துள்ளதால் பலர் புத்தரையும் வணங்குவதுண்டு. புத்தபிரான் நமது இந்திய தெய்வங்களின் அவதாரங்களில் ஒன்று என்று கருதும் இந்துக்களும் உண்டு. புத்தபிரானின் அருளையும் மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கில் புத்தரின் திருவுருவமும் இங்கு இடம் பெற்றுள்ளது.

 

மற்றும் ஒரு சமய நல்லிணக்கமாகச்  சாங்கி இராமர் கோயில்  குவான் யின் எனும் சீன தேவதைக்கும் இடமளித்துள்ளது. புத்த பாரம்பரியத்திலிருந்து வந்த கருணைத் தெய்வம்தான் குவான் யின். சீனா, வியட்னாம், ஜப்பான், பாலி ஆகிய நாடுகளில் இந்தக் கருணைத் தெய்வம் பல பெயர்களால் வழிபடப்படுகிறது. பல பெயர்களைப் பெற்றிருப்பினும் இத்தெய்வம் கருணை, அன்பு, பரிவு ஆகியவற்றின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. மக்களின், பக்தர்களின் மனக் குறைகளை இத்தெய்வம் கேட்கப்படுவதாக நம்பபடுகிறது. ஒளிவீசும் முத்துக்களும், குடத்திலிருந்து ஊற்றும் நீரும் குணமளிக்கும் என்றும், இந்த நீர் மூலம் எல்லா உயிரினங்களும் நன்மையும், சுபிட்சமும், ஆன்மீக அமைதியைப் பெறுகின்றன என்றும், கைகளில் ஏந்திருக்கும் நெற்கதிர் அல்லது அரிசிக் குவளை வளப்பமான வாழ்வைக் குறிப்பதாகவும், பெண்களைக் காக்கும் கன்னித் தெய்வமாகும் எனவும் நம்பப்படுகிறது.

 

 திருமணம் செய்ய விரும்பாத பெண்களுக்கு ஆன்மீக, சமய வாழ்க்கையை மேற்கொள்ளவும், இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு நிறைவான வாழ்க்கையையும், மழலை செல்வமும் குறைவற அளிக்கும் தெய்வமாக குவான் யின் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

 

சிங்கப்பூர் கிழக்குப் பகுதியில் வாழும் சிங்கப்பூரர்களின் ஆன்மீக தேவைகளை சாங்கி ஸ்ரீ இராமர் ஆலயம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது.

 

ஆலய முகவரி,
51 Changi Village Road,
Changi Road,
Singapore. 509908.
Tel. 65431463

Last Updated on Monday, 10 August 2009 21:09
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved