Thursday 23rd of November 2017

Home வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 11 - பாஞ்சாலங்குறிச்சி
11 - பாஞ்சாலங்குறிச்சி PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Wednesday, 26 May 2010 21:20

May 27, 2010

 

பகுதி 11
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள்
 
நெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா.  அமைதியான மனிதர். எங்களிடம் அன்பாகப் பழகி 'பேச நேரம் இருக்கின்றதா' என்று கேட்டுக் கொண்டு தனது கதையைக் கூறினார்.
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது வாழ்கின்றனராம். அவர்களுக்கு வசிப்பதெற்கென்று எந்த கோட்டையுமில்லை. குறிப்பாக இவரது தொழில் ஊர் ஊராகச் சென்று ஜோதிடம் பார்ப்பது. ஆனால் எங்கு சென்றாலும் மீண்டும் பாஞ்சாலங்க்குறிச்சிக்கு வந்து விடுவாராம்.
 
சுதந்திர போராட்டத்தின் போது வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெரிதும் உதவிய பாளைய பகுதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவதை இன்றளவும் அவர்களது வாரிசுகள் பின்பற்றி வருகின்றனராம்.  நினைவு நாட்கள், சிறப்பு நாட்களில் அவரகளை சந்திக்கச் சென்று சிறப்பு நினைவு நாள் பூஜையில் கலந்து கொண்டு வருவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கின்றார் இவர்.
 
 
 
 
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின் போது கட்டபொம்மனுக்கு ஆதரவாக செயல்பட்ட பாளையங்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தளி பாளையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த உடுமலை அருகிலுள்ள தளி பாளையத்தை ஆட்சி செய்த எத்தலப்பன் சிலை திருமூர்த்தி அணை பகுதியில் உள்ளதாம். போராட்டத்தில் உயிர் நீத்த தளி பாளையக்காரர் சிலைகளுக்கு கட்டபொம்மன் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்துவதை கடமையாக இவர் வைத்திருக்கின்றார்.
 
 
 
 
 
சரி. இவர் எந்த வகையில் வீர பாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு என்று கூறிக் கொள்கின்றார் என்பதை அறிய அவரிடம் இதனைக் கேட்டபோது ஒரு விளக்கம் கூறினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அவரது மனைவி ஜக்கம்மாள் என்ற மல்லம்மாள் நிபந்தனை கைதியாக திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றார். அப்போது சிறையிலிலேயே கர்ப்பிணியாக இருந்த மல்லம்மாளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களின் ஒருவரின் பரம்பரையில் வந்தவர் தான் இந்த ஜெகவீரபாண்டிய பீமராஜா என்று தன்னைப் பற்றிய தகவலை வழங்கினார். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து ஐந்தாவது தலைமுறையாம்.
 
 
 
 
 
 
கட்டபொம்மனின் ராஜ்யம் பிற பாளையக்காரர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டதால் 1872ம் ஆண்டுக்குப் பிறகு மாதந்தோறும் 52.50 ரூபாய் பென்ஷனாக கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்திய ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் ஜமீன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் தடை செய்யப்பட்ட போது இவர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது.
 
பின்னர் தி.மு.க கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் ஜமீன் வாரிசுகளுக்கு 50 ரூபாய் பென்ஷன் தொகை மீண்டும் வழங்க ஆரம்பிக்கப்பட்டதாம். அந்த உதவித்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 1000 ரூபாய் வழங்கப்படுகின்றதாம்.  இந்த உதவித் தொகை போதாததால் வருமையில் வாழ்வதாககவும் வருனமானத்திற்கு ஜோதிடம் பார்த்து பொருளீட்டுவதைத் தொழிலாக செய்து வருவதாகவும் வீமராஜா குறிப்பிட்டார்.
 
நினைவு மண்டபம் கட்டப்பட்ட பின்னர் இந்த வாரிசுகளுக்கு அங்கேயே பக்கத்திலேயே குடியிருக்கவும் வசதியும் செய்து கொடுத்திருக்கின்றது தமிழக அரசு. ஆனால் தற்போது இந்தக் குடியிருப்பு போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதால் வாரிசுகள் சிலர் வேறு இடங்களுக்கு குடியிருப்பை காலி செய்து விட்டு சென்று விட்டனராம்.  ஆனால் வீமராஜாவும் அவரது குடும்பமும் இங்கேயே இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வருகின்றார்களாம்.
 
வீமராஜாவின் மகன் தற்போது ஒரு தனியார் கம்பெனியில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிகின்றாராம். நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே கட்ட பொம்மனின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தால் அங்கேயே இருந்து வாழ முடியும். கட்ட பொம்மனின் கோட்டை அமைந்திருந்த 30 ஏக்கர் நிலத்தில் தற்போது  6 ஏக்கர் பரப்பில் மட்டுமே மேம்பாட்டு பணிக,ள் நினைவு மண்டபம் ஆகியவை நிர்மானிக்கபப்ட்டிருக்கின்றன. பிற பகுதிகள் குப்பை கிடங்காக உள்ளன.அப்பகுதியிலும் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அப்பகுதியையும் ஆய்வு செய்யவேண்டும்  என்றும்  கூறினார்.
 
சுதந்திர போராட்டத்தின் போது தனது மூதாதையரான வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியவர்களையும் மறக்காமல் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அப்போது உதவிய  கோவை மாவட்டத்தின் தளி பாளையம், திண்டுக்கல் மாவட்டத்தின்  விருப்பாச்சி பாளையம்  ஆகிய பாளையக்காரர்களின் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தானும் தனது குடும்பத்தினரும் பாஞ்சாலங்குறிச்சியை விட்டு போகமாட்டோம் என்று உறுதியுடன் எங்களிடம் பேசினார்.
 
சில நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்ட படங்களையும் அவர் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு செய்யப்படும் சில படங்களையும் எங்களுக்குக் காட்டினார். ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. காலம் மாறிக் கொண்டிருக்கின்றது. இனிமேலும் ஜமீன், அரச பரம்பரை என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பொருளாதார சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது தற்கால நிலைக்கு ஒத்துவராத ஒன்று. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக் கொண்டு கல்வி, தொழில் மேம்பாடு, சுய காலில் நின்று தனது குடும்பத்தை பேணுதல் என்ற நிலையில் அரச ஜமீன் வாரிசுகளும் எல்லா சாதாரண குடிமகனைப் போல வாழ பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திர்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்த நினைவு மண்டபத்தில் நடந்த அனைத்துமே அளவில்லா பிரமிப்பு உணர்ச்சியையே கொடுத்திருந்ததால் மதியம் 4 மணியை நெருங்கிக் கொண்டிருந்தாலும் பசி மறந்து  நிகழ்வுகளில் ஒன்றிப் போயிருந்தோம்.
 
வீமராஜாவிடம் நன்றி சொல்லி விடை பெறும் போது எங்களிடம் ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கின்றதா என்று கேட்டார். ஆமாம் என்றோம். உடனே கையைக் காட்டுங்கள் என்று கூறி எங்கள் ஐந்து பேருக்கும் கைரேகை ஜோதிடம் பார்த்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பலன் கூறினார்.  அவருக்கு நன்றி கூறி ஜோதிடத்திற்கு பணம் கொடுத்து விட்டு புறப்படும் போது எங்களிடம் வந்து தூரத்தில் எங்கள் வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒருவரைக் காட்டி "அவர் ஏதும் சொன்னால் நம்ப வேண்டாம். அவரும் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு புதிதாக இங்கு வந்திருக்கின்றார்." என்று எச்சரித்தார். இது என்ன ஆச்சரியம்? எத்தனை வாரிசுகள் உண்மையில் இருக்கின்றார்கள் என்று ஓரளவு திகைப்பு தோன்றத்தான் செய்தது.
 
 
அவர் சொன்னது போலவே நாங்கள் வாகனத்திற்கு அருகில் வரவும் எங்களிடம் வந்து தன்னை தானும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று கூறிக் கொண்டு பேச வந்தார். இவரிடமும் பேசியிருக்கலாம். ஆனால் நாங்கள் உடன் ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டிய நிலை. மாலை 4:30 மணிக்குள் அங்கு சென்று சேர வேண்டும். ஆக அவரிடம் வணக்கம் சொல்லி அவசரமாக கிளம்பும் நிலையை சொல்லி வாகனத்தில் ஏறி ஒட்டப்பிடாரம் நோக்கி புறப்பட்டோம்.
 
அன்புடன்
சுபா
 
 
Last Updated on Friday, 11 June 2010 16:57
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved