Sunday 20th of May 2018

2 - பயண ஏற்பாடு PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 17 May 2010 21:18

May 10, 2010

 

பயண ஏற்பாடு
 
பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக பயணம் செய்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் புதிய இடங்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய மனிதர்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியை இந்த ஏற்பாட்டில் உள்ள சிரமங்கள் தளர்த்தி விடுகின்றன. ஆக எனது எட்டயபுரத்துக்கானப் பயணமும் பல புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியது.  அந்த வகையில் நான் புதிதாக சந்தித்து நண்பர்கள் ஆகிப் போனவர்கள் திருமதி.ஜெயந்தி, திருமதி.கீதா, திருமதி பகவதி, திரு.விஷ்வநாதன், திரு.ரிஷான், திரு.இளசை மணியன், டாக்டர்.கருணாகரப் பாண்டியன், திருமதி.கிருஷ்ணவேணி ஆகியோர். இவர்களில் திருமதி ஜெயந்தி, திரு.மாலனின் சகோதரர் திரு.ஜெயேந்திரனின் துணைவியார்.

 

திருமதி ஜெயந்தி

 

இவர்கள் இருவரும் திருநெல்வேலியிலேயே ஒரு தனியார் பள்ளியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். திருமதி.கீதா, திருமதி பகவதி, திரு.விஷ்வநாதன் ஆகிய மூவரும் இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள்.  எனக்கு கயத்தார் பயணத்துக்குத் துணையாக வந்து பின்னர் பாஞ்சாலங்குறிச்சியும் சென்று ஒரு நாள் முழுவதும் பயணம் செய்து வர துணையாக இருந்தவர்கள். அதில் திரு.விஷ்வநாதன் தமிழாசிரியர். ஆக உள்ளூர் சரித்திர விஷயங்களைப் பற்றி சில தகவல்களையும் வழங்கினார். திரு.ரிஷான் திருநெல்வேலியில் நான் வாடகைக்கு அமர்த்திய வாகன கம்பெனி அனுப்பியிருந்த வாகனமோட்டி. இவர்களோடு பயணித்தது ஒரு இனிமையான அனுபவம்.
 
எட்டயபுரத்தில் நான் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்று சீதாம்மா எனக்கு ஒரு பட்டியல் அனுப்பியிருந்தார்கள் என்று முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்தப் பட்டியலைப் பார்ப்போமா!
 

 1. பாரதி நினைவு மண்டபம்
 2. பஸ் ஸ்டாண்டுக்கு முன் இருக்கும் சிதிலமடைந்த கட்டடம்
 3. முத்துசாமிதீட்சதர் சமாதி
 4. ராஜா உயர்நிலைப் பள்ளி
 5. பாரதமாதா டாக்கீஸ்
 6. சிவானந்தர் இல்லம்
 7. பாரதியார் பிறந்த வீடு
 8. பெருமாள் கோயில்
 9. சிவன் கோயில் (எட்டிஸ்வரர் கோயில்)
 10. அரண்மனை
 11. சோம சுந்திர பாரதியாரின் வீடு
 12. உமறுப்புலவர் சமாதி
 13. கீரைமஸ்தான் சாகிபு சமாதி
 14. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்

திருமதி.சாவித்திரி இல்லம் அமைந்திருக்கும் சாலை. இதில் இரண்டாவது பச்சை நிற இல்லம் தான்  பாரதியார் பிறந்த இல்லம். இதற்கு அடுத்து இரண்டு இல்லங்கள்  தாண்டி அமைந்திருப்பது சிவானந்தர் இல்லம். எதிர்புறம் இருக்கும் சுவர் பெருமாள் கோயில் சுவர்

 

இத்தனை இடங்களையும் இரண்டு நாட்களில் பார்த்து முடிக்க ஏற்பாடு செய்தேன். இந்த பட்டியலில் உள்ள இடங்களுடன் திரு.மாலன் கொடுத்திருந்த பாஞ்சாலங்குறிச்சி, ஒட்டப்பிடாரமும் சென்று வர வேண்டும். ஆக முதலில் பாஞ்சாலங்குறிச்சி, கயத்தார், ஒட்டப்பிடாரம் முடித்து பின்னர் எட்டயபுரம் செல்வது என திட்டமானது.
 
அதன் அடிப்படையில் எனது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கான பயணம் 13ம் தேதி தொடங்கியது. எழும்பூரிலிருந்து செல்லும் நெல்லை எக்ஸ்ப்ரஸில் இரவு 9:30 மணி வாக்கில் என்னை ஆண்டோ இரயிலேற்றி அனுப்பி வைத்தார்.  தமிழக இரயில் பயணம் இப்போது எனக்கு கொஞ்சம் பழகி விட்டது. இரயில் பயணம் பல புதிய விஷயங்களையும் அறிமுகப்படுத்தத் தவறுவதில்லை.அதில் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது திருநெல்வேலியிலிருந்து நான் திருச்சி திரும்பிய பயணம். அதனைப் பிறகு விவரிக்கின்றேன்.  14ம் தேதி திருநெல்வேலியில் திரு.ஜெயேந்திரன் காலை 6:00 மணிக்கு வந்து விடுவதாக எனக்கு தெரிவித்திருந்தார்.   
 
சென்னையில் திரு.மாலனைப் பார்த்தபோது எனது பயணத்துக்குத் தயாரிப்பாக இருக்கும் என்று வம்சமணி தீபிகை நூலை எனக்கு வழங்கினார். அத்தோடு Etaiyapuram Past and Present  , திரு.கணபதி பிள்ளை அவர்கள் தொகுத்த இந்த நூலையும் வழங்கினார். இவற்றை எனது இரயில் பயணத்தின் முதல் சில மணி நேரங்கள் வாசித்து அரணமணை மட்டுமல்லாது ஜமீன் பரம்பரை பற்றியும் அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். இந்த வம்சமணிதீபிகை நூலில் மிகச் சுவாரசியமான மற்றொரு செய்தியும் அடங்கியிருக்கின்றது.
 
இது பாரதி பதிப்பிக்க நினைத்த புத்தகம்.
 
6.ஆகஸ்டு 1919 அன்று சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுர மஹாராஜா  வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்களுக்கு வம்சமணி தீபிகை நூலை பதிப்பிக்க தான் விரும்புவதாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தி எழுதிய ஒரு கடிதம் இந்த நூலில் இடம் பெறுகின்றது. அந்தக் கடிதம் அடுத்த பகுதியில்!
 
அன்புடன்
சுபா
 
 

Last Updated on Friday, 11 June 2010 17:00
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved