Tuesday 23rd of January 2018

Home வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 7 - பாஞ்சாலங்குறிச்சி
7 - பாஞ்சாலங்குறிச்சி PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Thursday, 20 May 2010 17:15

 May 18, 2010

பாஞ்சாலங்குறிச்சி: பாஞ்சாலங்குறிச்சி கோட்டை


 
வீரபாண்டிய கட்டபொம்மனின்  நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து  வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.

 

 

 

இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில்.  

 

 

இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில்.

 

 

இதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில்

 

 

 

இதனைக் கடந்து மேலும் பயணித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில்
 


இந்த ஐந்து தோரண  நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது.

 

 

இவ்வளவு அழகாக ஒரு சிறு கோட்டை போல இந்த மண்டபம் இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

 

 

என்னுடன் வந்திருந்த மூன்று ஆசிரியர்களுக்கும் கூட இது ஒரு புது செய்தி தான். பக்கத்திலேயே இருந்தும் கூட அவர்களும் இது வரை இங்கு வந்து பார்த்ததில்லை. விரைவில் மாணவர்களையும் அழைத்துக் கொண்டு இங்கு பள்ளிச் சுற்றுலா வரவேண்டும் என்று பேசிக் கொண்டனர். நல்ல அறிகுறி தானே!
 

 
நான் திருநெல்வேலி புறப்படுவதற்கு முன் சென்னையில் இருந்த நாட்களில் இருமுறை தொல்லியல் ஆய்வு நிபுணர் முனைவர்.நாகசாமி அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முனைவர்.நாகசாமி அவர்கள் என்னிடம் தனது ஆய்வு விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை அகழ்வாரய்ச்சிப் பணிகள் பற்றியது. அவரது பதிவிலிருந்து நமக்குத் தெரிய வருவது இதுதான்.

 

 


 
வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் அந்த சண்டையின் போது இறந்து போன பன்னிரண்டு ஆங்கிலேய வீரர்களுக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கல்லறை கட்டப்பட்டது. அதில் அந்த ஆங்கிலேய வீரர்களின் பெயர்கள் குறிப்புக்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்பகுதி ஆங்கிலேயர்கள் காலத்திலேயே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
 
முனைவர்.நாகசாமி அவர்கள் தொல்லியில் துறை இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் முதன் முதலாக அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஆய்வுப் பகுதி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த இந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இருந்த இடம் தான்.  முனைவர் நாகசாமி அவர்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுக்க அவருக்குக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வைப் பற்றியும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
 
அதாவது,  சிறு வயதில் அவரது பள்ளிக் காலத்திலே அவர் ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர் ஒன்றினை தொடர்ந்து வாசித்து வந்ததன் தாக்கம் தனது ஆகழ்வாராய்ச்சிப் பணிக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது என்று அவர் கூறுகின்றார். சிறு வயதில் படித்த இந்தச் செய்திகள் அவர் மனதிலே ஆழமாகப் பதிந்து விட தொல்லியில் துறை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட உடன் அவருக்கு இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சியினைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
கட்டபொம்மன் கட்டிய கோட்டை இருந்த இடத்தை பார்க்கச் சென்றிருக்கின்றார். பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்ற போது அங்குள்ள மக்கள் அந்தக் கோட்டையுடன் அந்த 12 ஆங்கிலேய வீரர்களின் நினைவிடத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இந்தக் கல்லறையை விட வீரபாண்டிய கட்டமபொம்மன் வாழ்ந்த இடம் இப்போது தரைமட்டமாகி கிடக்கின்றது. அந்தக் கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்து மேலும் தகவல்களை வெளிக்கொணர வேண்டும்.  அதை முதலில் செய்து பின்னர் அந்த வீரர்களின் கல்லறை மண்டபத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறேன் என்று அவர்களிடம் கூறிவிட்டு தனது குழுவினருடன் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் துவக்கியிருக்கின்றார் முனைர்.நாகசாமி அவர்கள்.
 
கட்டபொம்மன் கட்டிய கோட்டை செங்கல்லால் கட்டப்பட்ட கோட்டை. அவன் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை பகுதிகளெல்லாம் அந்த மாளிகைப் பகுதிகளிலேயே இருந்திருந்ததையும் இவரது ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அமைச்சர்களும் அறிஞர்களும் அமர்ந்து ஆலோசனை செய்யும் இடங்களெல்லாம் இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அந்த இடிபாடுகளுக்கிடையில் கிடைத்த பானை ஓடுகள், கண்ணாடி சீசாக்கள் முதலியனவற்றை சேகரித்து பாதுகாத்திருக்கின்றது இந்த ஆய்வுக் குழு.
 
டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக முதன் மந்திரியாக பதவியேற்ற சமயத்தில் அவர் திருநெல்வேலிக்கு அருகில் 3 இடங்கள் மிக முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று முயன்றிருக்கின்றார். அவை  வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி புரிந்து வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரத்திலுள்ள சுப்பிரமணிய பாரதி பிறந்த இல்லம் , ஒட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி. அவர்கள் இல்லம்.  வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி புரிந்து வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையின் பகுதிகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்  என்று தொல்லியல் அறிஞர் குழு கேட்டுக் கொள்ள உடனே ஒரு சிறப்புப் பயணத்தை ஏற்பாடு செய்து பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தந்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி .
 
அங்கு முனைவர் நாகசுவாமி அவர்கள் முதல்வருக்கு இந்தப் பகுதி தொல்லியல் குழுவின் ஆய்வுகள் அனைத்தையும் விவரித்து ஆய்வுத் தகவல்களையும் சேர்த்து விளக்கியிருக்கின்றார். புதைந்து கிடந்த மாளிகையின் பகுதிகளை ஆய்வின் வழி மீட்ட தொல்லியல் வல்லுனர்களைப் பாராட்டியிருக்கின்றார் தமிழக முதலமைச்சர். உடனே அந்த ஊர்க்காரர்கள்  தங்களுக்கு அதே இடத்தில் ஒரு நினைவு மாளிகையை கட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதனை முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் தொல்லியல் ஆய்வு அடிப்படையில் அதே இடத்தில் கட்டுவது முறையாகாது. இவ்வாறு இந்த இடத்தில் ஒரு மாளிகை இருந்தது என்பதற்கு அடையாளம் தேவை. இந்த இடிபாடுகளுக்குக்கிடையே கிடக்கும் தடயங்களை அகற்றாமல்  இதற்குப் பக்கத்திலேயே ஒரு நினைவு மண்டபம் அமைத்துத் தருகிறேன் என்று கூறி சென்றிருக்கின்றார். அடுத்த ஒரே ஆண்டுக்குள் இந்த மாளிகையயும் கட்டப்பட்டுள்ளது. 

 


 
வெறும் மாளிகையாக மட்டுமல்லாது கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் படங்களையும் சேர்த்து சரித்திர மண்டபமாக அமைத்துக் கொடுத்ததில் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பங்கு மிக அதிகம் என்று கூறி மகிழ்கிறார் முனைவர் நாகசுவாமி.

 

பேட்டியின் ஒலிப்பதிவைக் கேட்க:

பாகம் 1 :

 

இந்த புதிய மண்டபம் கட்டப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியைச் செய்யுள் வடிவில் வடித்திருக்கின்றார் முனைவர் நாகசுவாமி அவர்கள்.

 

அந்த செய்யுள் இந்த இடிந்த மண்டபத்தின் முற்பகுதியில் பெரிய கல்லில் அழகாகச் செதுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
அன்புடன்
சுபா

 

 

 

 

Last Updated on Friday, 11 June 2010 16:58
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2012  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728293031 

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved