Sunday 20th of May 2018

Home வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 23.அரசவையிலிருந்து அந்தப்புரம் வரை
23.அரசவையிலிருந்து அந்தப்புரம் வரை PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 13 September 2010 22:14
13.09.2010
 
23.அரசவையிலிருந்து அந்தப்புரம் வரை
 
இந்த அரண்மனையின் உள்ளே நுழையும் போது நாம் எதிர்கொள்ளும் படங்களைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பலரது படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  ஜமீன் குடும்பத்தார் படங்களோடு, சில ஆங்கிலேய அதிகாரிகள், அவர் தம் குடும்பத்தாருடன் எட்டயபுர ஜமீன் குடும்பத்தினர் சேர்ந்து இருப்பதாக உள்ள படங்கள் சிலவும் இவற்றில் அடங்கும்.
 
 
 
இவை மட்டுமல்லாது  சித்திரங்கள் சிலவும் ஆங்கங்கே மாட்டப்பட்டும் தரையில் வைக்கப்பட்டும் மூலையில் குவிக்கப்பட்டும் காட்சியளித்தன.  கலைகளில் நாட்டம் மிகக் கொண்ட காசி மஹாராஜா அவர்களால் வரையப்பட்ட ஓவியங்களில் சிலவும் இவற்றில்  இருக்கலாம். முன்னர் திருவேந்திரத்திலிருந்து சுப்ரமணிய பிள்ளை என்ற ஓவியர் ஒருவரை இங்கு அரண்மனையை அழகு படுத்தும் ஓவியங்களைத் தீட்டித் தருவதற்காக அழைத்து வந்திருந்தார்களாம். அவரது கைவண்ணத்தினாலான ஓவியங்கள் சிலவும் நிச்சயம் நான் பார்த்தவற்றில் இருந்திருக்கக் கூடும்.
 
 
 
அங்கிருந்து உள்ளே நுழையும் போது நேராக கண்ணில் தென்படுவது மன்னர்களுக்கு முடி சூட்டப்படும் அரண்மணை தர்பார்.
 
 
 
கடைசியாக 1985 ஆண்டு வாக்கில் இங்கு முடிசூட்டிக் கொண்டவர் திரு.துரைபாண்டியன் அவர்கள். அதற்குப் பின்னர் இங்கு அப்படி ஒரு வைபவம் நடக்கவில்லை என தெரிந்து கொண்டேன்.
 
 
 
 
இந்த தர்பார் அளவில் சற்றே சிறியது. இதன் மண்டபப்பகுதி மாத்திரம் மிக நேர்த்தியான மரத் தூண்களைக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கின்றது. நுணுக்கமான மலர் வடிவங்கள், சரஸ்வதி வீணை மீட்டுவது போன்ற வடிவம், யாழி ஆகியவற்றை பிரதான சின்னமாக இந்த தூண்களில் செதுக்கியிருக்கும் பாங்கு வியப்பளிக்கின்றது. வாசலை பார்த்தவாறு அமைக்கப்பட்டிருக்கும் இந்த தர்பாரின் நேர் பகுதியில் தான் அரசர் அமர்ந்திருப்பாராம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
அந்த மணடபத்திலிருந்து நேர் இடது புறத்தில் அரண்மனை வாத்தியக் கருவிகள் வைக்கபப்ட்டிருக்கின்றன. தூசி நிறைந்து காணப்பட்டாலும் இக்கலைப் பொருட்களின் அழகு சிதைந்து விடவில்லை.
 
பெரிய மேளம் ஒன்று, அதன் பக்கத்திலேயே ஜமீன் குடும்பத்தினர் உபயோகப்படுத்திய உடற்பயிற்சிக் கருவிகளான கரலாகட்டை, இளவட்டக்கல் போன்றவையும் கீழேயே  வைக்கப்பட்டிருந்தன.  
 
 
 
 
அதன் பகக்த்திலேயே சுவற்றில் முருகன், இராமர், கஜலக்ஷ்மி போன்ற தெய்வங்களின் படங்கள் இங்கு தொடர்ந்து பூஜை செய்யப்பட்டு வந்ததை கட்டுவனவாக இருந்தது. இந்த அரண்மனை மண்டபத்தை ஒட்டி வாசலிலேயே ஒரு சிறிய கோவில் ஒன்றும் இருக்கின்றது. இருந்த போதும் உள்ளே சுவற்றில் மாட்டப்பட்டு தெய்வ வடிவங்களின் படங்கள் பூஜை செய்யப்பட்டதன் அறிகுறியும் தெரிகின்றன.
 
 
 
 
 
 
 
 
இந்த பகுதிக்கு நேர் எதிராக சுவற்றில் அரண்மனை போர் கருவிகள் ஒவ்வொன்றாக வரிசையாக அடுக்கி வைத்திருக்கின்றார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
தற்போது இங்கு இருப்பவை ஒரு சில மட்டுமே. போருக்கு முன்னர் பயன்படுத்திய பெரிய வாள், மற்றும்  ஏனைய முக்கிய போர் கருவிகள் தற்போது இங்கு இல்லை. ஈட்டி போன்ற சில கருவிகள், சூரி என அழைக்கப்படும் ஒரு வகை போர் கருவி, இரும்பு வாள் ஆகியவை ஒரு சில வரிசையாக அடுக்கி வைக்கபப்ட்டிருக்கின்றன. இவை பாதுக்காக்கப்பட வேண்டியவை. ஒரு சில ஈட்டிகள் ஏறக்குறைய 3 மீட்டர் நீளம் கொண்டவை. அங்கு இருந்த ஒரு வாளினைத் தூக்கிப் பார்த்து அதன் கணத்தை கண்டு அதிசயித்துப் போனேன்.
 
 
இவற்றைப் பார்த்து  புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம். மிகப்பெரிய ஒரு மரக்கதவு ஒன்று; அதனைத் திறந்து உள்ளே நுழைந்தோம்.
 
 
 
 
 
முன்னர் இங்கு வெள்ளியினாலான கதவு வைக்கப்பட்டிருந்ததாம். அந்த வெள்ளிக் கதவு இப்போது இல்லை. இந்த மரக் கதவைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைந்தோம்,  அரண்மனையின் அந்தப்புரத்தை நோக்கி!
 
 
 
 
நீண்ட பாதை.  இப்பாதையை கடந்து உள்ளே செல்லும் போது விசாலமான மண்டபம் ஒன்றினை அடைந்தோம்.  அந்தப்புரத்தின் உள் நுழையும் போது அங்கும்  மரத்தாலான ஒரு கதவு இருக்கின்றது. இந்தக் கதவின் மேல் பகுதியில் ஜன்னல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். இந்த கதவுக்குப் பின்னால் வெளியில் நடக்கும் கலை, நாட்டிய நிகழ்ச்சிகளை முன்னர் அரச குடும்பத்து பெண்கள் இந்த ஜன்னல் வழியாகத்தான் பார்ப்பார்களாம். இந்த வழக்கம் சென்ற நூற்றாண்டிலோ அல்லது 19ம் நூற்றாண்டிலே இருந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு முன்னர் இப்படி இருந்திருக்கலாம் என நாங்கள் அப்போது பேசிக் கொண்டோம்.
 
இந்த அந்தப்புர பகுதியில் பல சிறிய அறைகள் இருக்கின்றன. நீண்டு பருத்த தூண்கள் இந்த அந்தப்புரப் பகுதியைச் சற்று பெரிதாக்கிக் காட்டுவதாகவே  எனக்குத் தோன்றியது.
 
 
 
இந்த அந்தப்புரத்திற்குச் சிறப்பு சேர்ப்பது இங்குள்ள சுவரோவியங்கள். மூலிகையினால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் கொண்டே இந்த சுவரோவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சுவரோவியங்கள் தயாரிப்பு முறை சற்றே நுணுக்கமானது என்றும் அறிந்து கொண்டேன். அதாவது, முதலில் சுவற்றை சுத்தமாக கழுவி தூய்மை செய்த பின்னர் அச்சுவற்றின் மீது எலுமிச்சை பழத்தின் களிம்பு பூசப்படுமாம். பின்னர் அரிசியின் உமியோடு களிமண் கலந்து சுவற்றின் மேல் பூசி விடுவார்களாம். அதற்குப் பின்னரே சுவற்றில் மூலிகை வர்ணம் கொண்டு  ஓவியம் தீட்டப்படுமாம்.  இப்படி தீட்டப்பட்ட ஓவியங்கள் அந்தப்புரம் முழுதும் சுவற்றின் மேல் பகுதியை அலங்கரித்து இருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் கூட இந்த ஓவியங்கள் ஓரளவு நல்ல நிலையிலேயே இருப்பது ஓரளவு மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.
 
 
 
அரண்மனையின் பிற பகுதியிலிருந்து வேறு பட்டு இப்பகுதியில் மட்டும் இத்தாலி நாட்டு பளிங்கு கற்கள் தரையை அலங்கரிக்கின்ற வகையில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இவை இன்னமும் சீரான நிலையிலேயே இருக்கின்றன. 
 
 
ஒலிப்பதிவைக் கேட்க:
 
தொடரும்..
  
அன்புடன்
சுபா

  
துரைப்பாண்டியனுக்குப் பிறகு யாரும் முடிசூட்டிக் கொள்ளவில்லை. முடிசூட்டப்பட்டவர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் மன்னர். ஓர் மன்னர் மறைந்த பின் அவருக்கு மகன் இருந்தால் அவர் மூடிசூட்டிக் கொள்வார். துரைப்பாண்டியன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடன் சின்ன ராணிக்குப் பிறந்த இரு ஆண்மகன்கள் உண்டு. அவர்களிலும் ஒருவருக்குத்தான் மணம் ஆகியிருக்கின்றது. அவருக்குக் குழந்தைகள் இருக்கின்றார்கள். மன்னர் ஆட்சி முடிந்தாலும் இது குடும்ப சம்பிரதாயம். எனவே இந்த முடிசூடும் மரபு தொடர்ந்து இருக்கும்
 
அடுத்து அரண்மனைப் பெண்கள் அந்தப்புரத்தில் இருந்து கொண்டுதான் பார்ப்பார்கள். என் காலத்திலும் மூடு பல்லக்கில் மூடிய காரில் போவார்கள். இப்பொழுதும் அரண்மனைப்பெண்கள் நகர்ப்புரம் மாறினாலும் எட்டயபுரம் வருதால் வெளிப்படையாக வர மாட்டார்கள். இதுவும் அவர்கள் மரபு
 
துரைப்பாணிடியனுக்கு மூத்தவர் தங்கப்பாண்டியன் அவர்கள் என் தோழி.
பள்ளிக்கு வந்துகொண்டிருந்தவர்கள் தாவணி போடும் பருவம் வரவும் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it 16-09-2010

 

Last Updated on Saturday, 09 October 2010 21:19
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved