Monday 19th of March 2018

Home வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2
25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2 PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 09 October 2010 21:23

25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2
 

வம்சமணிதீபிகை நூலின் சில பகுதிகள் மேலும் இப்பகுதியில் தொடர்கின்றன.
 
"கட்டபொம்மு நாயக்கர் அவர் சகோதரர் ஊமைக்குமாரசாமி நாயக்கர் மந்திரி சிவசுப்பிரமணியபிள்ளை இவர்களுடைய துற்போதனையினாலே சிவசுப்பிரமணிய பிள்ளை மகன் கலியாணச் சிலவுக்காக திருநெல்வேலியில் கும்பியனியாருடைய களஞ்சியத்துக்குக் காவலாயிருந்த சங்குத் தேவனைக் கொன்று களஞ்சியத்திலிருந்து 1500 கோட்டை நெல்லையும் கொள்ளையிட்டதுமில்லாமல், தூத்துக்குடியிற் பிற்கட்டு மேஜர் துரையவர்கள் களஞ்சியத்து நெல்லையும் கொள்ளையிட்டார்.
 
இவ்விஷயங்களைப் பற்றியும் பாளையக்காரர் இரண்டு மாதகாலமாய் உத்தரவுகளுக்கு ஆஜராகாமலும் யாதொரு பதிலும் தெரிவிக்காமலும் இருந்ததைப் பற்றி பாளையக்காரர் பேரிற் குற்றஞ்சாட்டி இனிமேலாவது சீக்கிரத்தில் இராமநாதபுரத்தில் ஆஜராகிரதாயிருந்தாற்றான் உம்முடைய காகிதத்தினால் முந்தெரியப்படுத்தப்பட்ட வணக்கமும் விஸ்வாசமும் வாஸ்தவமாய் நம்பக்கூடும் என்றும் விவரங்கண்டு பாளையக்காரருக்கு மேற்படி மே மாதம் 14ம் தேதி கலைக்கட்டர் லஷிங்டன் துரையவர்களால் உத்தரவு அனுப்பப்பட்டது". (பக்கம் 62)

 
 
"அநேக லெட்டர்கள் கலைக்டர் துரையவர்களாலே பாளையக்காரரை பேட்டிக்கு வரும்படி அனுப்பப் பட்டிருந்ததில்  பாளையக்காரர்பேரில் அசற்கிராமங்களைக் கொள்ளயடிப்பதாக பிரியாதுகள் வந்ததேயன்றி பாளையக்காரர்கள் வரவில்லை". (பக்கம் 63)
 

"..பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வீரபாண்டிய நாயக்கர் சிவத்தய்யா சிவசுப்பிரமணியப் பிள்ளை தம்பி வீரபத்திரப்பிள்ளை இம்மூன்று பெயர்களும் 2000 ஜனங்களுடன் ஏழாயிரம் பண்ணைமாப்பிள்ளை வன்னியனாருடனே சேர்ந்து சர்க்கார் கிராமமாகிய இளையரசநேந்தலில் வந்திருந்தார்கள். பாஞ்சாலங்குறிச்சியாருக்கு உதவியாக வந்த கோலவார்பட்டி ஏழாயிரம் பண்ணை நாகலாபுரம் காடல்குடி குளத்தூர் மேல்மாந்தை இது முதலான் சில பாளையக்காரர் ஜனங்களுஞ் சிவகிரி பாளையக்காரர் காவல்கிராமமாகிய அம்மையார்பட்டியில் வந்திரங்கி விசையரங்கபுரங்கோட்டைக்குச் சூழ்ந்து கொண்டு சிவகிரி கிராமங்களில் சர்க்கார்கிராமங்களில் கொள்ளை முதலாக செய்து அவர்களில் பாஞ்சாலங்குறிச்சி ஜனங்கள் 500, 600 மாடுகளையும் ஆடுகளையும் பிடித்து கோலவார்பட்டிமார்க்கமாய் பாஞ்சாலங்குறிச்சிக்கணுப்பிவிட்டார்கள். இவ்விருவகை ஜனங்களும் ஏகோபித்து ஆகஸ்டு 6ம் தேதி சிவகிரிபாளையக்காரர் பேரில் படையெடுத்துச் சண்டைச் செய்து பாளையக்காரரையும் கொலை செய்து பாளையத்தைக் கட்டிக் கொள்ள ஊர்ச்சிதமாயிருந்ததில் மேற்படி பாளையக்காரர் மிகவும் திகிலடந்து மேற்படி மாதம் ஐந்தாம் தேதி கலைக்டர் லஷிங்டன்  துரையவர்களுக்கு இந்த சமையத்திற்றன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதற்காக நாலு கும்பினி சிபாயிகளும் ஒரு வகுப்புச் பீரங்கிப் பட்டாளமும் வரும்படியுத்தரவு செய்ய வேண்டுமென்றும் அவருடைய இஷ்டர்களாயிருக்கிற எட்டயபுரம் ஊத்துமலை சொக்கன்பட்டி முதலான இடத்தார்களை வந்து உதவி செய்யும் படிக்கு உத்தரவு செய்ய பவேண்டுமென்றும் லெட்டர் அனுப்பினார். அவர்களும் அப்படியேயுதவி செய்து காப்பாற்றினார்கள்."  (பக்கம் 65)
 

"இவ்விதமாகவே பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரும் அவருடன் சேர்ந்த பாளையக்காரர்களுங் கெவர்மெண்டாருடைய ஆக்கினையை மீறி நடந்து ஜனங்களுக்கு அனேக விதமான துன்பங்களையுண்டு பண்ணிக் கொண்டிருந்ததிலிருந்த சங்கதியைப் பற்றி மேஜர் பானர்மேன் துரையவர்கள் 1799ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கெவர்னர் ஜெனரலுடன் தகவலுக்காக திருநெல்வேலி சீமையின் கீழ்நாட்டு பாளையகாரராகிய பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்முநாயக்கர் தான் முன் செய்த அக்கிரமங்களுக்கு கெவர்மெண்டார் மன்னிப்பு  செய்ததற்கு பதிலுபகாரமாக கெவர்மெண்டார் அதிகாரத்தை தர்ணமாயென்னியிவ்விதமான கலகங்கள் செய்து வருகிறதாகவும் மற்றப் பாளையக்காரருடைய கலகத்திற்கு வாஸ்தவமாய் இவரே ஆஸ்பதமாயிருக்கிறாரென்றும் இவரையும் இவரைச் சேர்ந்தவர்களையும் பாளையத்தை விட்டு நீக்கி கொள்ளிடமென்ற நதிக்கு வடக்கே இருக்கிற சிறைச்சாலைகளில் கைதிகளாக வைக்க வேண்டுமென்றும், இவர்களுக்குத் துர்போதனை செய்த மானேஜர்களையும் முக்கியமாக கட்டபொம்முநாயக்கருடைய ஹெட் மானேஜராகிய சுப்பிரமணிய பிள்ளையை தகுந்தபடி தண்டிக்க வேண்டுமென்றும் இப்படி செய்தால் மற்ற பாளையக்காரர்கள் வருத்தப்பாடாமலேயே நல்ல ஸ்திதியை அடைவார்களென்றும்..... " (பக்கம் 66)

 
"எட்டயபுரம் ஜெகவீரராமகுமார எட்டப்பநாயக்கர் அய்யனவர்கள் பானர்மான் துரையவர்கள் உத்தரவுப்படிப்படிக்குக் கட்டபொம்முநாயக்கரைப் பிடிக்கிறதற்குத் தீவிரவயிராக்கத்துடன் பிரவேசித்திருப்பதை நாகலாபுரத்துக்கு வந்து பானர்மான் துரையவர்க்ளுடன் கலந்து கொண்ட கலைக்டர் மேஸ்தர் லஷிங்டன் துரையவர்கள் தெரிந்து கொண்டு நிரம்பவுஞ் சந்தோஷித்தார்களிந்த விஷயத்தைப் பற்றி சம்டம்பர் மாதம் 15ம் தேதி லஷிங்டன் துரையவர்களால் ரிவினியூபோரட்டுமெம்பர் மேஸ்தர் டப்பிள்யூ பீடர் துரையவர்களுக்குக் கெழுதப்பட்ட தென்னவென்றால்...." (பக்கம் 77)


"அப்பால் ஓடிப்போன பொம்மு நாயக்கரைத் தொடர்ந்து போயிருந்த எட்டயபுரத்தாருக்குச் சகாயமாம் அனுப்பப்பட்ட துருப்புக்கள் கட்டபொம்மு நாயக்கர் சேனை கலைந்து போனதன் பின்பு நாகலாபுரத்திலிருந்த பானர்மான் துரையவர்கள் சந்நியத்துடன் 9ம் தேதி இராத்திரி சேர்ந்து கொண்டார்கள். "(பக்கம் 78).

 
அடுத்து முக்கியமாகக் கருதப்பட வேண்டிய ஒரு பகுதி வம்சமணிதீபிகையில் உள்ள 24வது பிரகரணம். இந்தப் பகுதி விரிவாக கட்டபொம்மு நாயக்கரையும் அவர் மானேஜரையும் பிடித்துக் கொடுத்தவர்களுக்குப் பிரிட்டிச் கம்பெனியார் அளித்த வெகுமானம் பற்றி குறிப்பிடுகின்றது.


"அப்பொழுது கவர்ன்மெண்டாரவர்கள் கட்டபொம்மு நாயக்கரைப் பிடித்துக் கொடுத்த இராஜா விஜயரகுநாத தொண்டமான் பகதரவர்கள் பேரில் அதிகமான தயவு செய்து பேஷ்கிஸ்தியைத் தள்ளி அவர்களிராச்சிய முழுமையுஞ் சர்வமானிபமாக விட்டுக் கொடுத்தார்கள்.
தீவிரவைராக்கியத் துடனோடிப்போன கட்டபொம்மு நாயக்கரைத் தொடர்ந்து சகாயத்துக்காக வனுப்பப்பட்ட கும்பினித் துருப்புகள் வருகிறதற்கு முன்னமே யெதிர்த்துத் தன் பக்கத்தில் அநேக ஜனச்சேதத்துடன் அவர் சேவகர்களெல்லாரையும் முறிபடத் துரத்தியவரைக் குதிரையை விட்டுக் குதித்து காட்டிலொழிக்கிறவரையிலுந் துரத்தினதற்காகவும் அவரைச் சேர்ந்த மந்திரி சிவ சுப்பிரமணிய பிள்ளை வகையறா முப்பத்தி நாலு கைதிகளையும் பிடித்துக் கொண்டு வந்ததற்காகவுங் கவர்ன்மெண்டாரவர்களாலே எட்டயபுர, ஜெகவீரராம குமார எட்டப்பநாயக்கர் அய்யனவர்களுக்கு சிவஞானபுரமென்னும் ஒரு கிராமம் வெகுமானமாகக் கொடுக்கப்பட்டது. இதற்காக கவர்ன்மெண்டாரவர்களுத்தரவுப்படி 1800ம் வருடம் ஜனவரி மாதம் 22ம் தேதி கலைக்கட்டர் லஷிங்டன் துரையவர்களாலேயனுப்பப்பட்ட சன்னது என்னவென்றால்..... (பக்கம் 86)

 
ஆக வம்சமணித்தீபிகை எனும் இந்த நூல் கால வரிசைப்படி நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கின்றது என்பதுவும் இந்த நூலில் இணைக்கபப்ட்டுள்ள சான்று கடிதங்கள் இவற்றிற்கு வலு சேர்ப்பனவனவாக உள்ளதுவும் தெளிவாகத் தெரிகின்றது.   அதன்படி பாஞ்சாலங்குறிச்சிப் போரின் போது அவரைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெறும் முயற்சியினை எட்டயபுர மஹாராஜா மேற்கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது.  ஆனாலும் கட்டபொம்முவை பிடித்து கைது செய்து கொடுத்தது புதுக்கோட்டை மஹாராஜா விஜயரகுநாத தொண்டமான் பகதரவர்கள் என்பதும் தெளிவாகக் காட்டப்படுகின்றது. 


குறிப்பு: இங்கு சான்றுக்குப் பயன்படுத்தப்பட்ட வம்சமணிதீபிகை நூலின் பகுதிகள் எழுத்தில் மாற்றமில்லாமல் அப்படியே இங்கு வழங்கப்பட்டுள்ளன.
 
(தொடரும்)
 
அன்புடன்
சுபா


 

ராஜா முகம்மது என்ற புதுக்கோட்டை ஆராய்ச்சியாளர் விஜயரகுநாத தொண்டைமான்
பெயரில் பழி வந்ததை மறுக்கிறார் அவர் புத்தகத்தில். வம்சமணிதீபிகை மாலை
நூலில் உள்ள அத்தனை செய்திகளும் உண்மை என்றாலும் கடைசி நேரத்தில்
வீரபாண்டிய கட்டபொம்மன் பிடிபடும் விஷயத்தில் ரகுநாத தொண்டமான் பங்கு
இல்லை.. கட்டபொம்மன் சேது நாட்டில் ஒளிந்திருந்தபோது பிடிபட்டதால் சேது
மன்னருக்கு அடாத பெயரை பிற்காலத்தில் ஏற்படுத்திவிட்டார்கள் என்று ராஜா
முகம்மது எழுதி இருக்கிறார். இவர் புத்தகத்திலும் வீரபாண்டியன் ஒரு
கொள்ளைக்காரனாகவே, ஆங்கிலேய துரைகளுக்கு முதலில் அடி பணிந்து கிஸ்தி
கொடுத்து, பிறகு இன்ஸ்டால்மெண்ட் கேட்டு, கெஞ்சி, பலிக்காமல்தான்
வெள்ளையரை எதிர்த்ததாகவும் அரசாங்க தஸ்தாவேஜு ஆதாரங்களுடன்
எழுதியிருக்கிறார். ராஜா முகம்மதுவின் இது பற்றிய தொடர் கட்டுரைகள்
‘புதுகை தென்றல்’ சஞ்சிகையில் வெளிவந்து பின்பு புத்தகமாக
வெளியிடப்பட்டது.

சுபா!

நீங்கள் எழுதி வருவது பயணக்கட்டுரையாக இருந்தாலும் சில உண்மைகளை
வெளிக்கொணர்ந்து வருகிறீர்கள். காலத்தால் காப்பாற்றப்பட வேண்டிய
பொக்கிஷம் இது.

 

அன்புடன்
திவாகர் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  22-09-2010

 

வம்சதீபிகைமணியின்  நடை நன்றாக  இருக்கிறது.

*ஏழாயிரம் பண்ணை *    :    இது  தற்போது  விருதுநகர்  மாவட்டத்திலுள்ளது

* இளையரசநேந்தலில் * :   இதன் பெயர்  இளவரசனேந்தல்

நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது  பாளையம் என்ற பகுப்புமுறை
ஏற்பட்டது.  அவற்றை  ஆண்டவர்  பாளையக்காரர்கள் . வடகரை, ஆவுடையாள்புரம்,
ஊத்துமலை,சிவகிரி, சிங்கம்பட்டி, அளகாபுரி, ஊர்க்காடு, சுரண்டை,
கடம்பூர்,  *இளவரசனேந்தல்*, மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்சி முதலியன
நெல்லை  மாவட்டத்தின் பாளையப்பட்டிகள்


தேவ் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  22-09-2010

 

சிலப்பதிகாரம் ‘உரையிடையிட்ட  பாட்டுடைச் செய்யுளாக’  இருக்கிறது.
வெள்ளையர்களின்  மதம் பரப்பும் பணிக்கு  உரைநடை உதவியது. பழைய
கல்விமுறையே  பா வடிவில்  கருத்தைத் தெரிவிக்கும் தேர்ச்சியில்
உதவுவதற்காக  அமைந்ததுதான்.  அதில்  தேர்ச்சி  பெறாதவருக்கும்  உரைநடை
கருத்துப் பரிமாற்றத்தில் உதவியது. அச்சகம்  தோன்றிய  வுடன்  உரைநடையும்
வளர்ச்சி  கண்டது.

 

1554ல்   லிஸ்பனில்  "லூசோ தமிழ் சமய வினா-விடை"   (38 பக்கம்) என்ற
கிறிஸ்தவ நூல் அச்சேறியது. இந்தியாவிலேயே அச்சான  முதல்   தமிழ்நூல்
"தம்பிரான் வணக்கம்",  1557ல் கொல்லத்தில் அச்சிடப் பட்டது. பின்னர்
ஆறுமுக நாவலர் விவிலியத்தைத் தமிழாக்கம் செய்தார்.

 

பழைய  உரைநடையில்  சொற்களைப் பிரிக்காமல்  சேர்த்தெழுதும்  வழக்கமே
நிலவியது. நிறுத்தக் குறிகள் ஆங்கில  உரைநடையைப் பின்பற்றித் தமிழிலும்
புகுந்தன.  சில முதுபெரும் தமிழறிஞர்களின் உரைநடை  கடினமானது. உ வே சா,
பாரதியார் போன்றோர்  எளிய நடையையே கையாண்டனர்.

 

தமிழில் உரைநடை  குறித்து ஆராய்வோர் கட்டாயம்  வம்சமணி தீபிகையையும்
பார்வையிட  வேண்டும் . தொகுப்பு ‘பிரகரணம்’ என்னும் தலைப்பில்
பகுக்கப்பட்டுள்ளது.

 

கெவர்மெண்டார்,  ரிவினியூபோரட்டுமெம்பர் , கும்பினி ,  சம்டம்பர்,
கலைக்கட்டர், சன்னது, வகையறா , ஆக்கினை,  கிஸ்தி, ஆஜர் போன்ற
சொற்புழக்கத்தையும் இதில் காணமுடிகிறது.  இந்நூல் பற்றி மேலும்
தெரிந்துகொள்ள ஆவல். சுபா அவர்களுக்கு  விரிவாக  எழுத நேரம் வாய்க்க
வேண்டும்


தேவ் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  23-09-2010

 

Last Updated on Saturday, 09 October 2010 21:28
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728293031 

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved