Sunday 17th of December 2017

41. கீரை மஸ்தான் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 31 January 2011 14:09

22 Jan 2011

 

41. கீரை மஸ்தான்

 

பெருமாள் கோயில் மற்றும் எட்டீஸ்வரன் கோயில் பற்றிய செய்திகளை சொல்வதற்கு முன் கீரை மஸ்தான் சமாதி பற்றி முதலில் சொல்கிறேன்.
 
எட்டீஸ்வரன் கோயில் குருக்கள் தான் எங்களை கீரை மஸ்தான் சமாதிக்கு அழைத்துச் செல்வது என ஏற்பாடாகியிருந்தது. ஆக எட்டீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று, அங்கு சுவாமி தரிசனம் முடித்து பின்னர் குருக்களையும் அழைத்துக் கொண்டு கீரை மஸ்தான் சமாதிக்குப் புறப்பட்டோம்.

 


 
எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கேள்வி மனதில் எழுந்தவாறிருந்தது. கீரை மஸ்தான் என்ற பெயர் வித்தியாசமாக இருக்கின்றதே.. இதன் பின்னனி என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று. குருக்களை கேட்ட போது  அவர் அதற்கு விளக்கம் அளித்தார். கீரை மஸ்தான் என்பது ஒரு சித்தரின் பெயர். இந்தச் சித்தர் இப்பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பிரபலாகத் திகழ்ந்திருக்கின்றார். இவரது இயற் பெயர் தெரியாது. இவர் கீரையை மசித்து  தினம் தினம் சாப்பிட்டுவருவாராம்.  இதனால் கீரை மசித்தான் என்று வழக்கிலிருந்து பின்னர் இப்பெயர் கீரை மஸ்தான் என மாறி விட்டதாம்.  (இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்று தெரியவில்லை. )
 
நாங்கள் வந்த வாகனத்தை வாசலில் நிறுத்தி விட்டு கீழிறங்கி நடக்க ஆரம்பித்தோம். சமாதி இருக்கும் இடத்தினைச் சேர்த்தார் போல ஒரு சமூக அமைப்பு ஒன்று இயங்கி வருகின்றது. கிராம சிறுபான்மையினர் முன்னேற்ற அமைப்பு, பெண்கள் முன்னேற்ற அமைப்பு, முதியோர் இல்லம், மன நலம் குன்றியோர் காப்பகம் என நான்கு அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து இயங்குகின்றது போலும்.  இது ஒரு காப்பகம் என்பது பெயர் பலகையில் மட்டும் உள்ளதே தவிர வேறு எந்த வகையிலும் ஒரு மண்டபமோ கட்டிடமோ இல்லை.
 
 

 
உள்ளே நுழைந்தால் திறந்த வெளிவில் பஸ் நிறுத்துமிடம் போல நீளமாக கூரை மட்டும் கட்டியுள்ளனர். அறைகள் கிடையாது. ஆங்காங்கே  சில இன்றோ நாளையோ உடையப்போகும் நிலையில் இருக்கும் கட்டில்களில் சில நொந்து வாடிப் போன மனிதர்கள் படுத்துக் கிடந்தனர். சிலர் வானத்தைப் பார்த்தவாறு மணல் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். 
 
 

 
ஏறக்குறையை 20 பேர் இருக்கும். இவர்களைக் கவனிக்க சிறு நிர்வாகம் இருக்கின்றது என்பதை என் பின்னாலேயே காசு கேட்டு சுற்றி வந்து கொண்டிருந்த ஒருவரின் வழியாக தெரிந்து கொண்டேன். மிக மோசமான நிலையில் இருக்கும் இவ்வகை முதியோர் காப்பகம், மன நல காப்பகங்களை அரசாங்கம் கவனிக்க வேண்டியது அவசியம்.
 
இந்த இடத்தைக் கடந்து கீரை மஸ்தான் சமாதி இருக்கும் இடத்தைக் காணச் சென்றோம். எங்களைப் பார்த்ததும் இரண்டு முதியவர்கள் எங்கள் பின்னால் ஆர்வத்துடன் சேர்ந்து வந்தனர். தினம் குருக்கள் இங்கு வருகின்றார்.  கீரை மஸ்தான் சமாதியில் நடக்கும் பூஜை இவர்களுக்கு தினம் ஒரு சிறப்பு நிகழ்வு என்பதை இந்த இரண்டு  முதியவர்களின் கண்களில் தெரிந்த மலர்ச்சியின் வழியே தெரிந்து கொள்ள முடிந்தது. 

 


 
கீரை மஸ்தானைப் பற்றி மேலும் கூறிக் கொண்டே வந்தார் குருக்கள். அன்றாடத் தேவைக்குள்ள தங்கத்தை உருவாக்கி அதனை வைத்து வாழ்ந்து வந்தாராம் கீரை மஸ்தான் .எட்டயபுரத்தில் தெய்வீகத் தன்மை வாய்ந்த மகான்களின் சமாதிகள் இருப்பதாகவும் இது ஒரு சக்தி பூமி என்றும்  கூறி மகிழ்ந்தார்.  இங்கு தவசி தம்பிரான், மௌன குருசாமி, கீரை மஸ்தான், உமறுப் புலவர், முத்துசாமி தீஷிதர், போன்றோர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். 
 
 

 

 
 
ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் தவசி தம்பிரான். அவரது சமாதியில் அவருக்குத் தினம் காலை 7:30க்கும் மாலை 4:30க்கு பூஜை நடக்கின்றது. காலையில் அபிஷேகம் முடித்து சாதம் பால் பழம் வைத்து பூஜை செய்யப்படுகின்றது. அதே போல மாலை ரொட்டி, பால், பழம் வைத்து பூஜை செய்யப்படுகின்றது. அவரைப் பற்றி பல கதைகள் உண்டாம். அதில் ஒன்று - தவசி தம்பிரான் குருமலையில் இருந்த போது அவரைத் தேடி பசு மாடு ஒன்று போய் நிற்குமாம். அவர் பால் கறந்து குடித்தவுடன் பசுமாடு சென்று விடுமாம். ஒருவர் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மிகச் சிறிய குகையில் தான் தவசி தம்பிரான் வாழ்ந்திருக்கின்றார்.  இங்குள்ள சமாதிக்குக் கூட மிகச் சிறிய வாசல்தான் அமைத்திருக்கின்றார்கள். கீரை மஸ்தான் சமாதியைவிட மிகச் சிறிய அளவிலான சமாதி அது. 
 


 
 
கீரை மஸ்தான் சமாதி மஞ்சள் நிறத்தில் அமைந்த ஒரு கோயில். சிறிய பூந்தோட்டம் போன்ற ஒரு அமைப்பு. அதற்கு நடுவே  சமாதி அமைக்கபப்ட்டுள்ளது. சமாதிக்கு மேலே சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
 
 

 
நான் இருந்த சமயத்திலேயே குருக்கள், கோயிலைத் திறந்து வழிபாடு செய்து பின் தேவாரப் பாடல் ஒன்றும் பாடி பின்னர் அனைவருக்கும் தீர்த்தம் வழங்கினார். கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள முதியோர் காப்பகம், மன நோய் மருத்துவ நிலையத்தில் இருப்போரில் ஒரு சிலரும் இந்த பூஜையில் வந்து கலந்து கொண்டனர்.  பூஜைக்குப் பின்னர் கோயிலை விட்டு கோயிலின் பின் புறம் நோக்கிச் சென்றோம். அங்கு தான் குளங்கள் இருக்கின்றன. பாதை நடக்க முடியாதவாறு முள் புதற்கள் மண்டிக் கிடக்கின்றன.
 
இந்தக் குளத்தில் தான் கீரை மஸ்தான் குதித்து விழுவாராம். அவர் அப்படி விழும் போது அவர் உடல் 9 துண்டுகளாக தனித்தனியே பிரிந்து விழுமாம். இதனால் அவருக்கு நவயோகி என்ற  ஒரு பெயர் உண்டாம். குளத்திலிருந்து மேலே எழும்பி வரும் போது 9 பாகங்களும் இனைந்து முழுமையாகி வருவாராம். கீரை மஸ்தானுக்கென்றே பிரத்தியேகமாக இந்தக் கிணற்றினை எட்டயபுரத்து மன்னர் வழங்கியிருக்கின்றார். 

 


 
கீரை மஸ்தான்  பாடல்களோ நூல்களோ எழுதிய ஒரு சித்தரல்ல. அவர் வாழ்ந்த கால கட்டத்தில் பல அதிசயங்களைச் செய்து மக்களை ஆச்சிரியப்படுத்தியிருக்கின்றார்.   தினமும் சிவ பூஜை செய்து தங்கத்தை உருவாக்கி மக்களுக்கு காண்பித்து அவர்களை ஈர்த்திருக்கின்றார். இவர் எட்டயபுர மக்களுக்கு ஒரு அதிசயமான மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.
 
 
தொடரும்...
 
அன்புடன்
சுபா

Last Updated on Monday, 31 January 2011 14:25
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  December 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
      1  2  3
  4  5  6  7  8  910
11121314151617
18192021222324
25262728293031

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved